தொடர்புகள்

இரண்டாய் இருந்த புறாக்களின் எண்ணிக்கை
பல்கிப் பெருக
அணில்களின் வருகையும் அதிகமாயிற்று
சதா சர்வ காலமும்
சங்கீதமாய்ச் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும்
மொட்டை மாடி ஓலைக் கூரையின் மேல்
வரிசையாய் ஓடும்
ஒருமுறை தொட்டுக் கூடப் பார்த்திருக்கிறேன்
அதன் மென்மையை
தீனியென்று தனியாக எதுவும் போட்டதில்லை
புறாக்களுக்கென இறைத்த மீதியை
பின்னங்கால்களில் அமர்ந்து
முன் கால்களால் கொறிக்கும் அழகே தனி
புறாக்களுக்கும் அணில்களுக்கும்
சிநேகம் இருந்ததாய்த் தெரியவில்லை
ஆனால்
புறாக்களோடு சேர்ந்து தொலைந்து போயின
அணில்களும்

5 comments:

தங்ஸ் said...

அய்யோ..கலக்குறீங்க போங்க..மற்ற கவிதைகளை விட,இதன் சொல்லாடல் எளிமையாகவும் ஆனால் அதே ஆழத்துடனும் இருப்பதாகப்படுகிறது..

முபாரக் said...

நல்லா இருக்கு.

இதத்தவிர வேறென்ன சொல்றதுன்னு தெரியல. என்னமோ சொல்லனும்னு தோணுது, ஆனா சொல்லத்த்தெரியல ல:-(

முபாரக் said...

//புறாக்களுக்கும் அணில்களுக்கும்
சிநேகம் இருந்ததாய்த் தெரியவில்லை
ஆனால்
புறாக்களோடு சேர்ந்து தொலைந்து போயின
அணில்களும்//

மனசு கெடந்து அடிச்சிக்கிது...

ஜமாலன் said...

எளிமையான சொற்களால் ஒரு காட்சியை உருவாக்கி அதனடியாக உணர்வைத் தூண்டும் கவிதை.

'தொலைந்துபோயின அணில்களும்' என்கிற அந்த ம் ஏற்படுத்தம் வலியும் சோகமும்...

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

மனிதர்களின் சினேகிதம் மனிதர்களை விட அதிகம் ஏற்படுவது குருவிகளிடமும் அணில்களிடமும் புறாக்களிடமும்தான்.. நகரத்தின் பசிக்கு இரையாகும் தனித்த காலங்களின் நிகழ்வுகளை பெறும்பாலும் நான் என் ஜன்னல் ஓர அணில்களிடம் பகிர்ந்து கொண்டு இருந்திருக்கிறேன். ஒரு புள்ளியின் நிகழ்வுக்கு அப்பால் மறந்து போன நண்பர்களை போல அணில்களும் குருவிகளும் வாழ்வின் எல்லைக்களில் இருந்து மரணத்து போயின .. உங்கள் கவிதையை சுற்றுசூழல் சார்ந்த கவிதையாகவும் நான் கொள்கிறேன்.