குடி, இருத்தல் மற்றும் எழுதுதல் பற்றி இரு கவிதைகள்

ஏன் இப்படிக் குடிக்கிறாய்
என்றான்
நல்ல வேளை
ஏன் இப்படி இருக்கிறாய்
எனக் கேட்கவில்லை

*

குழம்பி
யோசித்து
தடுமாறி
எழுதி
பழகி
ஆரம்பித்தேன்
யோசித்து
தடுமாறி
குழம்பி
கைவிட்டேன்

வார்த்தை பூதம்

(மூன்றாவது விலா எலும்பும் விழுதுகளற்ற ஆலமரமும்; தேவி பாரதி, காலம் பதிப்பகம், 29, ஜீவா தெரு, சிவகிரி 638 109. முதற் பதிப்பு : ஆகஸ்ட் 1996, 124 பக்கங்கள், விலை ரூ 25/-)

தேவி பாரதியின் இத்தொகுப்பு ஒரு கட்டுரையையும், ஒரு நாடகத்தையும், இரண்டு சிறுகதைகளையும் கொண்டது. பின் அட்டை பறை சாற்றுவது போல, தீர்ப்பு முக்கியச் சிறுகதை.

சமீப காலத்தில் ஃபேண்டஸி தளத்தில் கதை எழுதுபவர்களில் முக்கியமானவர்கள் என கோணங்கி, ஜெயமோகன், கௌதம சித்தார்த்தன் போன்றவர்களைச் சொல்லலாம். எதார்த்தத்தை முற்றாகத் தவிர்த்த உள் - மன மொழி கோணங்கியினுடையது. வாசிக்க சுவாரஸ்யமானவர்கள் ஜெயமோகனும் கௌதம சித்தார்த்தனும். இவர்களுடன் இப்போது தேவிபாரதியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

வெளிப்பாட்டின் தீவிரத் தன்மையால் ‘தீர்ப்பு' முக்கியமாகிறது. மொக்கையான யதார்த்தத்தை இரு கதைகளும் புறக்கணிக்கின்றன. முதலில் ‘தீர்ப்பு'.

இறுக்கமான மொழியாலும் நெகிழ்ச்சியான உணர்ச்சிகளின் ஊடாகவும் கட்டப்பட்டிருக்கிறது தீர்ப்பு. பலவிதங்களில் காஃப்காவின் தீர்ப்பை நினைவுபடுத்துவதைத் தவிர்க்க இயலவில்லை. மிக லாவகமான மொழி நடையும் ஃபேண்டஸி தன்மையுமான கதைப் போக்கும் நல்ல வாசிப்பனுபத்தைத் தருகின்றன. மிஸ்டிக்-புதிர்த்தன்மை கதையின் கனத்தைக் கூட்டுகிறது.

"நாங்கள் சல்லாபித்திருந்த ரகசியமான இரவு நேரம் அது. அலறி கூச்சலிட்டான் சேது. பதறி எழுந்து அம்மணமாக ஓடி விளக்கைப் போட்டேன் நான். கடவுளே... என்ன கொடுமை.! சேதுவின் கழுத்தைப் பின்னி இறுக்கி உஷ்ஷென வன்மத்துடன் சீறிக் கொத்தத் தயாரானது பாம்பு... என் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்தது போல பிடியைத் தளர்த்திக் துவண்டது நாகம். சுதாகரதித்துத் துள்ளி உதறினான் சேது. சொத்தென என் காலடியில் விழுந்தது மதுவினுடைய ரப்பர் பாம்பு."

புனைவு தருக்கத்தை மீறி வார்த்தைகள் சீறிப் பாய்கின்றன. தனியறையில் அமர்ந்து இக்கதையை வாசிப்பவனை நாலாபுறத்திலிருந்தும் அவை சுற்றி வளைத்துத் தாக்குகின்றன. வார்த்தைகளின் தீவிரம் - சற்றே நீள் வாக்கில் எழுதப்பட்டிருக்கும் இக்கதையின் முடிந்தவுடன் - வாசகனையும் தொற்றிக் கொள்கிறது.

இந்தக் கதையைக் கட்டுடைத்து, தாக்கலாம். சார்ந்தோ எதிர்த்தோ எல்லாக் கதைகளையும் விமர்சிக்கலாம் தானே. ஆயின், அது விமர்சனமல்ல. கழைக் கூத்தாட்டம்.

சிறுகதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த / இது போன்ற எழுத்துகள் உதவும் எனச் சொல்கின்ற நேரத்தில், ‘தாஸ் என்பவனும், தாஸ் என்பவும்' சிறுகதை ‘போலச்' செய்ய முயன்ற தோல்விக் கதை என்றே தோன்றுகிறது. புதிர்த் தன்மையும் தேவதைக் கதைப் பாணியும் கைகூடாத கதை. (அப்படிச் சரியாகக் கைகூடாத கதையைக் கூடத் தன் கவித்துவ நடையால் ஈடு செய்து விடுவார் கோணங்கி). வெற்று வார்த்தைக் கூட்டங்கள் தரும் ஆயாசத்தையே இந்தக் கதை ஏற்படுத்துகிறது. சொல்லப்படும் விஷயத்தின் கனம், வியாபரக் கதைகளையே தூக்கி நிறுத்தக் கூடும்.

சடார் சடாரென்று மாறும் காட்சிப் பிம்பங்கள், நடனம், திரும்பத் திரும்ப உபயோகிக்கப்படும் ஒலிகள், வார்த்தைகள் என இருக்கிறது ‘மூன்றாவது விலா எலும்பும், விழுதுகளற்ற ஆலமரமும்' நாடகம். இது பிரதானமாய் நடனத்தையும், உடல் அசைவு மற்றும் ஒலிகளை முதன்மைப் படுத்தும் காட்சி ரூப நாடகம். அதனாலேயே எழுத்துப் பிரதி திருப்தி தராத தோற்றம் ஏற்படுகிறது. நிகழ்த்துதலில் நிச்சயம் பார்வையாளர்களைக் கவரும் என நம்புகிறேன்.

இத்தொகுப்பில் முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டியது ‘வாழ்வு சார்ந்த கலையும், கலை சார்ந்த வாழ்வும்' கட்டுரை. இது சேர்க்கப் பட்டதற்கான காரணம் விளங்கவேயில்லை. மிகக் குறைந்தபட்சம், இது கட்டுரையாகக் கூட இல்லை. இரண்டு மூன்று இடங்களில் முன் தயாரிப்பின்றி பேசப்பட்ட பேச்சுகளும், அதற்கான எதிர்வினைகளும், எதிர்வினைகளுக்கான பதில்களும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை தாண்டி, ஒரு வாசகன், திறந்த மனத்துடன் மற்ற படைப்புகளை அணுகுவதைச் சாத்தியமற்றதாக்குகிறது, இது ரிப்போர்ட் செய்யப் பட்டிருக்கும் விதம்.

இப்புத்தகம் முக்கியமானது. ‘பலி' சிறுகதைத் தொகுதியின் மூலம் அறிமுகமான தேவிபாரதி தற்கால எழுத்தாள இளைஞர்களில் வலிமையுள்ள ஒருவராக வெளிவருகிறார். பலவித சலனங்களையும், சர்ச்சைகளையும், பாதிப்புகளையும் எற்படுத்த வல்லது இவரது எழுத்து. இதை அவர் தன் வரையில் நேர்மையாக வெளிப்படுத்துகிறார். இதுவே பெரிய விஷயம்தானே.

(குறிப்பு : இந்தப் புத்தக விமர்சனம் கவிதா சரண் ஃபிப்ரவரி 1998 இதழில் வெளியானது. இதில் நான் முன் வைத்திருக்கும் சில கருத்துகளோடு இப்போது எனக்கு உடன்பாடில்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்)

கை போனபடி எழுதுதல் பற்றி ஒரு கவிதை

சாதாரண வார்த்தைகளில்
பல தளச் சிக்கல்
அதனாலென்ன
அவனுக்கும் எனக்கும்
உவனுக்கும் உனக்கும்
எவனுக்கும் எவனுக்கும்
மின்விசிறி போல்
பலப்பல பப்பல
சிலச்சில இல்லை ஆனால் சிற்சில
பாட்டு போடு டேன்ஸ் ஆடு
இல்லையா ஸர்ரியலிஸ்டுகள் போல்
கை போனபடி எழுது படிமத்துக்குக்
காத்திராதேயென எவன் சொன்னாலும்
தலையாட்டாதே தெகார்தே என்ன

(மவ்னம் - பிப்ரவரி 1994ல் வெளியானது)

அப்பாவும் அம்மாவும் காணாமல் போக்கியவை

காணாமல் போக்கியவை பற்றிய
நீண்ட பட்டியலே அப்பாவிடமிருந்தது
சின்ன வயதில் அட்லஸ் சைக்கிள்
அக்காவை விட்டு வரப் போனபோது
எடுத்துச் சென்ற ஃபாரின் குடை
கோயிலில் எப்போதோ செருப்பு
வேலையிலிருந்து திரும்பும் போது
இருநூறு ரூபாய் பணம்
என ஆரம்பித்து சென்று கொண்டேயிருந்தது
அம்மாவும் சிலவற்றை தொலைத்திருந்தாள்
வெளித் திண்ணையில்
மறந்து வைத்த டிரான்ஸிஸ்டர்
ஒரு காதுத் தோடு
மற்றும்
பதினேழு வயதுப் பையன்

உங்களுக்கு நடந்த கதை

இல்லைக்கிடைக்குறை இலையாகுமெனில்
முல்லைக்கிடைக்குறை முலையாகும்மே
- விக்ரமாதித்யன் -

இன்றைக்குச் சனிக் கிழமை. நீங்கள் மதுவருந்தும் நாள்.
இது உங்களுக்கு நடந்த விஷயம் என்பதால் உங்கள் பார்வையிலேயே எழுதுகிறேன். வசதிக்கென ஒரு விஷயத்தை முதலிலேயே சொல்லிவிடுகிறேன் : இந்தக் கதையில் அடைப்புக் குறிக்குள் () வருவது உங்கள் மனம் நினைப்பது.

கதையைத் துவங்குமுன், உங்களைப் பற்றிய சில குறிப்புகள் :
வயது 26. பெயர் அவ்வளவு முக்கியமில்லை; உயரம் 5'8”. சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்கிறீர்கள். இரண்டு முறை காதலித்து, தோற்றிருக்கிறீர்கள். தற்சமயம் காதலி இல்லை; அது பற்றி சிறு வருத்தமுண்டு. நிற்க. இந்தக் கதை உங்கள் காதலைப் பற்றியதல்ல.

வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் அருகிலுள்ள sea farers club பாருக்குச் சென்று தனியாக அமர்ந்து யோசித்தபடி மதுவைப் பருகுவது உங்களுக்குப் பிடித்தமானது. நான்கு அல்லது ஐந்து பெக்குகள் ஓல்ட் மாங்க் ரம், கலந்து கொள்ள பெப்ஸி அல்லது கோகோ கோலா. தொட்டுக் கொள்ள அவர்கள் இலவசமாகக் கொடுக்கும் மிக்சர், சுண்டல், வெள்ளரிப் பிஞ்சு வகையறா.
இன்றைக்கு அலுவலகத்தில் அதிக வேலை; உடனடியாய் அனுப்பியாக வேண்டிய manifest, மற்றும், தலைமயக மாத இறுதி ரிப்போர்ட்களால் தாமதமாகிறது. முடித்து விட்டுக் கிளம்பும் போது மணி மதியம் 3.
20 நிமிடங்கள் நடக்க சோம்பேறித்தனப் பட்டுக் கொண்டு, ஆட்டோ பிடிக்கிறீர்கள் (20 ரூபாய் தண்டம்). மொத்தமே நான்கு பேர்களே இருந்தார்கள் பாரில். வெற்றி சப்ளை செய்யும் மேசை காலியாக இருக்க அங்கு அமர்கிறீர்கள். அலைபேசி, சிகரெட் பாக்கெட் மற்றும் தீப்பெட்டியை மேசை மேல் வைத்து, கால் நீட்டி அமர்ந்து மூச்சை இழுத்து விடுகிறீர்கள். ரம்மிற்கு உங்கள் தொண்டை பரபரக்கிறது.

வெற்றி சிரித்தபடி வழமையாக நீங்கள் சாப்பிடுபவற்றை உங்கள் மேசையில் வைக்கிறான். கலந்து ஒரு மிடறு விழுங்குகிறீர்கள். தொண்டையில் இறங்குகையில் ஏற்படும் லேசான எரிச்சலில் கண்களை மூடிக் கொள்கிறீர்கள். வெள்ளரிப் பிஞ்சொன்றை எடுத்துக் கடிக்கிறீர்கள்.

நீங்கள் இரண்டாவது ரவுண்டில் இருக்கும் போது பாருக்குள் ஒரு 45 வயது மதிக்கத்தக்க கனவான் ஒருவர் நுழைகிறார். வரும் போதே போதையில் தள்ளாடியபடி வருகிறார். (கடவுளே என் மேசையில் அமர்ந்து விடக் கூடாதே). உயர்தர வெள்ளை வேட்டி, சட்டையில் கையில் தங்க வாட்ச், கழுத்தில் செயின் சகிதம் உங்கள் எதிரில் அமர்கிறார். அமரும் போது, மேசை ஆடுகிறது. நீங்கள் நிமிர்ந்து அவரை அசூயையுடன் பார்க்கிறீர்கள். முணகலாக மன்னிப்பு கேட்கிறார்.

(எழுந்து வேறு மேஜைக்குப் போயிடலாமா... முகத்துல அடிச்சது போல இருக்குமோ... சரி, பாப்போம்.)

வெற்றியிடம் இரண்டு லார்ஜ் சிக்னேச்சர் விஸ்கி கொண்டு வரச் சொல்கிறார். இரண்டையும் ஒரே தம்ளரில் விட்டு மேலாகக் கொஞ்சம் தண்ணிரை ஊற்றி, ஒரே மடக்கில் குடிக்கிறார். தண்ணீர் அவர் சட்டையில் வழிகிறது. துடைத்தபடி ‘பொறுமையில்லை, பொறுமையில்லை' எனச் சொல்லிக் கொள்கிறார்.

அவரை ஓரக் கண்களால் பார்க்கிறீர்கள். அழகான ஓவல் வடிவ முகத்தில், தங்க ஃபிரேம் போட்ட கண்ணாடி காதுகளில் சேருமிடங்களில் நரை. அவர் தலையைக் கோதியபடி இன்னும் இரண்டு என்கிறார். நீங்கள் தலை கவிழ்ந்து உங்கள் தம்ளரில் கவனத்தைக் குவிக்கிறீர்கள். ஒரு லார்ஜை தம்ளரில் ஊற்றிய வெற்றி, மற்றொன்றை அதன் அருகில் வைத்து அகல்கிறான்.

சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்தியபடி, ‘ஐயா, கொஞ்சம் தீப்பெட்டி தர முடியுமா' என ஆங்கிலத்தில் வினவுகிறார். நீங்கள் லேசாக அவர் பால் நகர்த்துகிறீர்கள்.

(போச்சு, முதல்ல இப்படித்தான் ஆரம்பிப்பானுங்க; அப்புறம் போட்டு அறுத்துத் தள்ளிடுவானுங்க).

வலக்கையில் கோப்பையை எடுத்தபடி, உங்களிடம், “உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா.?” என்கிறார். நீங்கள் ‘இது என்ன கேள்வி' என்ற பாவனையில் அவர் முகத்தைப் பார்க்கிறீர்கள்.

“ஆகவில்லையெனில், தயவு செய்து, செய்து கொள்ளாதீர்கள்... “ வாயில் கவிழ்த்துக் கொள்கிறார். மறுபடியும் சட்டையை மது நனைக்கிறது. காகித நேப்கினால் துடைத்துக் கொள்கிறார்.

பாக்கெட்டைத் தடவி தன்னுடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதிவியிலிருந்ததைப் பறை சாற்றியது அது. (பெரிய புண்ணாக்கு). அவர் அறியாமல் அதைக் கசக்கி எறிகிறீர்கள். நேரம் கிடைக்கையில் உங்களை வீட்டிற்கு அழைக்கிறார். அவர் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்க நினைக்கிறீர்கள்.

“பெண்கள் எல்லாரும் ஏமாற்றுப் பேர்வழிகள்..”
(போச்சு, மற கழண்ட கேஸ் கிட்ட மாட்டிக்கிட்டேன்)

‘அனுபவத்தில் சொல்கிறேன் நண்பரே... All women are bitches, fuckin' bitches"
(என்ன வுட்டுடேன்).

சிறிது நேரம் மௌனமாய்க் கழிகிறது. சிகரெட்டை ஆழ்ந்து புகைக்கிறார். முகம் லேசாகக் கோணுகிறது. தனக்குள் சொல்லிக் கொள்பவரைப் போல் “வேசி, அவள் ஒரு வேசி” என்கிறார்.

இடைவெளி விட்டு, “ஆம், அவள் வேசி தான்”

(யாரைச் சொல்றான் லூசு)

“எனக்குத் தெரியாதெனெ நினைத்தாளா அவள். எல்லாரும் என் முதுகுக்குப் பின் பேசுவது என் காதில் விழுகிறதே... என் கேட்கும் திறனை நிறுத்த வழி தெரியவில்லையே... ”

உங்களுக்கு எப்படி எதிர் வினை ஆற்றுவது எனத் தெரியாமல் அவர் முகத்தையே பார்த்தபடி இருக்கிறீர்கள்.

“எனதருமை மனைவி” மனைவியில் அழுத்தம் கொடுக்கிறார். உங்களுக்கு விளங்குவது போல் இருக்கிறது.
(பெண்டாட்டி காரி சரியில்ல; புருஷன் குடிகாரன்)

“அவளால் தான் நான் இவ்வாறு குடிகாரனானேன்...” நீண்ட இடைவெளியில் நீங்கள் உங்கள் கோப்பையை நிரப்பிக் கொள்கிறீர்கள்.

“இப்படிப் பட்ட ஒரு மனைவி இருந்தால் புருஷன் என்னாவது... குறைந்தது ஐந்து பேருடனாவது அவளுக்குக் கள்ள உறவிருக்கும்.. இவள் தொல்லை தாளாமலேயே கோயமத்தூரிலிருந்துச் சென்னைக்கு வந்தேன். இங்கேயும் இதே பிரச்சனை தான்”

“பிரச்சனை இடத்திலல்ல; அவளிடம் தான்..”

இடைவெட்டு : இது உங்களுக்கு நடந்த விஷயம் தான் என்றாலும், எழுதுவது நானல்லவா. அதனால் சிலவற்றைச் சேர்த்து, சிலவற்றை விலக்கியிருப்பேன். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் தயங்காமல் நிறுத்தி என்னைக் கேட்கலாம்.

“இதோ வெளியில் இருக்கிறானே டிரைவர்; அவனுடன் கூட அவளுக்கு உறவிருக்கிறது...”

(என்ன மனுஷன் இவன் பிரதம மந்திரிலேர்ந்து வீட்டு வேலைக்காரன் வரைக்கும் தொடுப்பு இருக்குன்னு சொல்வான் போல).

“உங்களை வீட்டிற்கு அழைத்திருந்தேன் அல்லவா.. ” நீங்கள் தலையாட்ட, தொடர்கிறார் “வேண்டாம்; வர வேண்டாம். வந்தால் நீங்களும் அவளுடன் படுப்பீர்கள்...”

(எழுந்து ஓடிடலாமா).

சிறிது இடைவெளி விட்டு, “உங்களுக்கு எது சொந்த ஊர்.?” என வினவுகிறார். அப்பாடா வேறு விஷயத்திற்கு வருகிறாரே என்ற நிம்மதியுடன் நீங்கள் “தஞ்சாவூர்” என்கிறீர்கள்.

“தஞ்சாவூர்... தஞ்சாவூர்... அங்கு கூட அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான்”

(வேதாளம் முருங்க மரம் ஏறி விட்டது).

அவளுடைய காதல் கதைகளை முழுமையாய் விவரிக்கிறார். Graphical Descriptionsஐத் தவிர்க்கும் பொருட்டு அவற்றை நீக்கிவிட்டேன். அவர் விவரித்ததின் சாராம்சம் : அவர் மனைவி வேசை. உங்களுக்குச் சங்கடமாயிருக்கிறது. அவர் குரல் குழற ஆரம்பிக்கிறது. அவர் முகத்தையும் உங்கள் கோப்பையையும் மாறி, மாறிப் பார்த்தபடி இருக்கிறீர்கள். அவர் உச்ச போதைக்குச் சென்று கொண்டிருக்கிறார். வெற்றியை அழைத்து பணம் கொடுக்கிறார்.

“சரி, நான் கிளம்புகிறேன்” என்றவாறு எழுந்திருக்கிறார். உடல் ஆடுகிறது. இரண்டடி சென்றவர் சாயப் போகிறார். வெற்றி அவரைத் தாங்கிப் பிடிக்கிறான். முடியாமல் தடுமாறுகிறான். நீங்கள் எழுந்து ஒரு பக்கம் அவரைத் தாங்குகிறீர்கள்.

“கொண்டு போய் கார்ல விட்டுறலாம் சார்” என்கிறான் வெற்றி. அவனுக்குப் பழக்கம் போல.

நீங்கள் அவரை அழைத்து வருவதைப் பார்த்ததும் டிரைவர் சிகரெட்டை அணைத்து, வண்டியில் அமர்ந்து ஸ்டார்ட் செய்கிறார். அவரைப் பின் இருக்கையில் அமர வைத்ததும், வெற்றி அகல்கிறான்.

இடைவெட்டு : இன்னும் இரண்டு பத்திகளில் கதை முடியப் போகிறது. நீங்கள் எனக்குச் சொல்லிய படி தான் கதையின் முடிவை எழுதியிருக்கிறேன். ஆனால் அடிப்படையில் இது உங்களுக்கு நடந்த கதை; எனவே உண்மையில் என்ன நடந்ததோ அதைப் போலவோ அல்லது வேறு விதமாக மாற்றியோ நீங்கள் இந்தக் கதையை எழுதிக் கொள்ளலாம்.

முகம் கோணி, உங்களைப் பார்த்து இளிக்கிறார். உங்களை அருகில் அழைக்கிறார். உங்கள் காதருகில் “I am an impotent, yes, I am an impotent" என்கிறார் உணர்ச்சியற்ற குரலில். நீங்கள் மின்சாரம் தாக்கியதைப் போல் நிற்கிறீர்கள். கண்ணாடி ஏற, கார் நகர்கிறது.

திரும்பவும் பாருக்குள் நுழைகையில் நீங்கள் அவரிடம் ஒரே ஒரு வார்த்தை தான் பேசினீர்கள் என்பது ஞாபகம் வருகிறது. தொண்டையில் பாறாங்கல்லை அடைத்ததைப் போல் உணர்கிறீர்கள்.

சிறு வயதுப் பேனா

காணாமல் போக்கியாகிவிட்டது
சிறு வயதுப் பேனாவை
அற்புதமான பேனா அது
விரல்களுக்கேற்ற கனபரிமாணம் உடையது
தாளில் வழுக்கிக் கொண்டு ஓடும் அழகே தனி
என் முக்கிய கணங்களில் உடனிருந்திருக்கிறது
பத்தாவது பரிட்சைகூட அதில்தான் எழுதிய ஞாபகம்
இலக்கியத்தின் வீச்சை
நட்பின் வகசிப்பை
ப்ரியமானவர்களின் ஆதுரத்தை
என எல்லாவற்றையும் அதில் கண்டிருக்கிறேன்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
இப்போது வேறு பேனா வந்து விட்டபோதும்
சிறுவயதுப் பேனாவை ஏனோ மறக்க முடியவில்லை

காணாமல் போன மொழி

உனக்கும் எனக்குமான
இடைவெளி
அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது
மௌனத்தை
உடைத்து கொண்டு
வெளிக் கிளம்பிய
வார்த்தைகள் வஞ்சித்து விட்டன
அலுவலகக் கடித மொழி
சூழ்ந்து கொண்டு
என் மொழியை
விரட்டி விட்டது
வார்த்தைகளற்ற வனாந்தரத்தில்
வசித்துக் கொண்டிருக்கிறேன்
உனக்கான
மொழியின்மையோடு
கணக்குப் போட்டு
காய் நகர்த்துகிறாய்
போதும் போதுமென்றாலும்
போதுமே போதுமா
எல்லாவற்றிலிருந்தும்
வெளிவர முடியுமென்றிருந்த
இறுமாப்பு சிதைந்து விட்டது
இருளோடு செய்யும்
யுத்தம் போல் இருக்கிறது
இப்போதென் வாழ்வு
குடிகாரனின் புலம்பல்களாய்ச்
சிறுத்துப் போன
என் மொழியை
மீட்டெடுப்பேன்
இப்போதைக்கு வணக்கம்

நகுலனும் நானும்

எல்லாம் நடந்து கொண்டிருந்த
யாருமில்லா பிரதேசத்தில்
அமர்ந்திருந்தவன் புத்தகத்தில்
சுசீலாவையும் ராமச்சந்திரனையும்
பார்த்தவாறிருந்தான்
முன் பின்னிருந்த
பக்கங்களில்
மறைந்து போன நவீனன்
பென்சிலைச் சீவிக் கொண்டிருந்தான்
யார் தலையையோ சீவுவது மாதிரி
கையில் பிஜாய்ஸ் பிராந்திக் குப்பியை
ஆட்டிக் கொண்டிருந்தான்
காலக் கிழவனொருவன்
வந்த வழியும்
கேட்ட செய்தியும்
நான் திரும்பிப் பார்க்க
அந்த மஞ்சள் நிறப் பூனை
என்னையே பார்த்துக் கொண்டிருந்தது
சாக மட்டுமே தெரிந்த
நகுலன் எழுதிக் கொண்டிருக்கிறான்
எல்லாவற்றையும்
நான் சரி
நான் மாத்திரம்
சரியே சரி

விரும்பியதும் வாய்த்ததும்

பெயர்களற்ற பெருவெளியில்
பயணம் செய்ய விரும்பியவன்
திரிந்து கொண்டிருக்கிறான்
பாலைவன மணலில் பாதம் புதையப் புதைய
உலகின் ஆகப்பெரிய நாவலை
எழுதத் துவங்கியவன்
பத்திரிகைகளின் தீனிக்குப் போட்டுக் கொண்டிருக்கிறான்
விகடத் துணுக்குகளையும் ஒரு பக்கக் கதைகளையும்
இசையின் உன்னதத்தைத் தேடிப் புறப்பட்டவனின்
காதுகளை அடைத்துக் கொண்டிருக்கிறது
ஆபாச சினிமாப் பாடல்களின் இரைச்சல்
மகிழ்ச்சிக்காகவே வேலை என நினைத்தவன்
அடிமையாய்க் கிடக்கிறான் குமாஸ்தாவாக
சும்மா இருக்க விரும்பியவன்
செய்து கொண்டிருக்கிறான்
அதையும் இதையும் எல்லாவற்றையும்