வார்த்தை பூதம்

(மூன்றாவது விலா எலும்பும் விழுதுகளற்ற ஆலமரமும்; தேவி பாரதி, காலம் பதிப்பகம், 29, ஜீவா தெரு, சிவகிரி 638 109. முதற் பதிப்பு : ஆகஸ்ட் 1996, 124 பக்கங்கள், விலை ரூ 25/-)

தேவி பாரதியின் இத்தொகுப்பு ஒரு கட்டுரையையும், ஒரு நாடகத்தையும், இரண்டு சிறுகதைகளையும் கொண்டது. பின் அட்டை பறை சாற்றுவது போல, தீர்ப்பு முக்கியச் சிறுகதை.

சமீப காலத்தில் ஃபேண்டஸி தளத்தில் கதை எழுதுபவர்களில் முக்கியமானவர்கள் என கோணங்கி, ஜெயமோகன், கௌதம சித்தார்த்தன் போன்றவர்களைச் சொல்லலாம். எதார்த்தத்தை முற்றாகத் தவிர்த்த உள் - மன மொழி கோணங்கியினுடையது. வாசிக்க சுவாரஸ்யமானவர்கள் ஜெயமோகனும் கௌதம சித்தார்த்தனும். இவர்களுடன் இப்போது தேவிபாரதியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

வெளிப்பாட்டின் தீவிரத் தன்மையால் ‘தீர்ப்பு' முக்கியமாகிறது. மொக்கையான யதார்த்தத்தை இரு கதைகளும் புறக்கணிக்கின்றன. முதலில் ‘தீர்ப்பு'.

இறுக்கமான மொழியாலும் நெகிழ்ச்சியான உணர்ச்சிகளின் ஊடாகவும் கட்டப்பட்டிருக்கிறது தீர்ப்பு. பலவிதங்களில் காஃப்காவின் தீர்ப்பை நினைவுபடுத்துவதைத் தவிர்க்க இயலவில்லை. மிக லாவகமான மொழி நடையும் ஃபேண்டஸி தன்மையுமான கதைப் போக்கும் நல்ல வாசிப்பனுபத்தைத் தருகின்றன. மிஸ்டிக்-புதிர்த்தன்மை கதையின் கனத்தைக் கூட்டுகிறது.

"நாங்கள் சல்லாபித்திருந்த ரகசியமான இரவு நேரம் அது. அலறி கூச்சலிட்டான் சேது. பதறி எழுந்து அம்மணமாக ஓடி விளக்கைப் போட்டேன் நான். கடவுளே... என்ன கொடுமை.! சேதுவின் கழுத்தைப் பின்னி இறுக்கி உஷ்ஷென வன்மத்துடன் சீறிக் கொத்தத் தயாரானது பாம்பு... என் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்தது போல பிடியைத் தளர்த்திக் துவண்டது நாகம். சுதாகரதித்துத் துள்ளி உதறினான் சேது. சொத்தென என் காலடியில் விழுந்தது மதுவினுடைய ரப்பர் பாம்பு."

புனைவு தருக்கத்தை மீறி வார்த்தைகள் சீறிப் பாய்கின்றன. தனியறையில் அமர்ந்து இக்கதையை வாசிப்பவனை நாலாபுறத்திலிருந்தும் அவை சுற்றி வளைத்துத் தாக்குகின்றன. வார்த்தைகளின் தீவிரம் - சற்றே நீள் வாக்கில் எழுதப்பட்டிருக்கும் இக்கதையின் முடிந்தவுடன் - வாசகனையும் தொற்றிக் கொள்கிறது.

இந்தக் கதையைக் கட்டுடைத்து, தாக்கலாம். சார்ந்தோ எதிர்த்தோ எல்லாக் கதைகளையும் விமர்சிக்கலாம் தானே. ஆயின், அது விமர்சனமல்ல. கழைக் கூத்தாட்டம்.

சிறுகதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த / இது போன்ற எழுத்துகள் உதவும் எனச் சொல்கின்ற நேரத்தில், ‘தாஸ் என்பவனும், தாஸ் என்பவும்' சிறுகதை ‘போலச்' செய்ய முயன்ற தோல்விக் கதை என்றே தோன்றுகிறது. புதிர்த் தன்மையும் தேவதைக் கதைப் பாணியும் கைகூடாத கதை. (அப்படிச் சரியாகக் கைகூடாத கதையைக் கூடத் தன் கவித்துவ நடையால் ஈடு செய்து விடுவார் கோணங்கி). வெற்று வார்த்தைக் கூட்டங்கள் தரும் ஆயாசத்தையே இந்தக் கதை ஏற்படுத்துகிறது. சொல்லப்படும் விஷயத்தின் கனம், வியாபரக் கதைகளையே தூக்கி நிறுத்தக் கூடும்.

சடார் சடாரென்று மாறும் காட்சிப் பிம்பங்கள், நடனம், திரும்பத் திரும்ப உபயோகிக்கப்படும் ஒலிகள், வார்த்தைகள் என இருக்கிறது ‘மூன்றாவது விலா எலும்பும், விழுதுகளற்ற ஆலமரமும்' நாடகம். இது பிரதானமாய் நடனத்தையும், உடல் அசைவு மற்றும் ஒலிகளை முதன்மைப் படுத்தும் காட்சி ரூப நாடகம். அதனாலேயே எழுத்துப் பிரதி திருப்தி தராத தோற்றம் ஏற்படுகிறது. நிகழ்த்துதலில் நிச்சயம் பார்வையாளர்களைக் கவரும் என நம்புகிறேன்.

இத்தொகுப்பில் முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டியது ‘வாழ்வு சார்ந்த கலையும், கலை சார்ந்த வாழ்வும்' கட்டுரை. இது சேர்க்கப் பட்டதற்கான காரணம் விளங்கவேயில்லை. மிகக் குறைந்தபட்சம், இது கட்டுரையாகக் கூட இல்லை. இரண்டு மூன்று இடங்களில் முன் தயாரிப்பின்றி பேசப்பட்ட பேச்சுகளும், அதற்கான எதிர்வினைகளும், எதிர்வினைகளுக்கான பதில்களும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை தாண்டி, ஒரு வாசகன், திறந்த மனத்துடன் மற்ற படைப்புகளை அணுகுவதைச் சாத்தியமற்றதாக்குகிறது, இது ரிப்போர்ட் செய்யப் பட்டிருக்கும் விதம்.

இப்புத்தகம் முக்கியமானது. ‘பலி' சிறுகதைத் தொகுதியின் மூலம் அறிமுகமான தேவிபாரதி தற்கால எழுத்தாள இளைஞர்களில் வலிமையுள்ள ஒருவராக வெளிவருகிறார். பலவித சலனங்களையும், சர்ச்சைகளையும், பாதிப்புகளையும் எற்படுத்த வல்லது இவரது எழுத்து. இதை அவர் தன் வரையில் நேர்மையாக வெளிப்படுத்துகிறார். இதுவே பெரிய விஷயம்தானே.

(குறிப்பு : இந்தப் புத்தக விமர்சனம் கவிதா சரண் ஃபிப்ரவரி 1998 இதழில் வெளியானது. இதில் நான் முன் வைத்திருக்கும் சில கருத்துகளோடு இப்போது எனக்கு உடன்பாடில்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்)

2 comments:

முபாரக் said...

//தனியறையில் அமர்ந்து இக்கதையை வாசிப்பவனை நாலாபுறத்திலிருந்தும் அவை சுற்றி வளைத்துத் தாக்குகின்றன//

இந்த ஒரு வாக்கியம் தரும் உக்கிரத்திற்காகவேனும் அக்கதையை வாசிக்கவேண்டும்போல் உள்ளது. நன்றி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, முபாரக். படித்துப் பாருங்கள், சுவாரஸ்யமாகவே இருக்கும்.