செக்ஸ் வறட்சி (அ) மீண்டும் மீண்டும்

இருளாக இருந்தது. சோடியம் வேப்பர் விளக்குகள் வெளிச்சத்தை முடிந்தவரை விசிறியடித்துக் கொண்டிருந்தது. மர நிழல்களில் பதுங்கிப் பதுங்கி வருவது போல் நடந்து கொண்டிருந்தான். நடையில் லேசான தள்ளாட்டம் தெரிந்தது. உடல் இனம் புரியாத தினவெடுத்தது.

சிகரெட் ஒன்றை வாயில் பொருத்திக் கொண்டு தீப்பெட்டி திறந்தான். விரல்கள் லேசாகக் கூட நடுங்கக் கூடாது எனப் பிரயத்தனப் பட்டதில் முதல் குச்சி வீணானது.

இன்று குடித்திருக்கவே வேண்டாம். ராஜூ இழுத்துக் கொண்டு போய் விட்டான். இழுத்துச் சென்ற அவன் மூன்றாவது பெக்கோடு நிறுத்திக் கொள்ள இவன் தான் இப்படிக் குடித்திருக்கிறான். ஆரம்பித்த பிறகு எதையும் நிறுத்த முடிவதில்லை. ராஜூ இல்லாவிட்டால் ஹரி. ஏதோ ஒரு காரணம். வாரத்தில் மூன்று நாட்கள் தவறுவதில்லை.!

ஏன் இன்று உடம்பு இப்படிப் படுத்துகிறது என யோசித்துப் பார்த்தான். செக்ஸை அனுபவிக்காமல் இருந்திருந்தால் பரவாயில்லை. இரண்டு மூன்று முறை அனுபவித்து விட்டு இப்போது சும்மா இருப்பது கஷ்டமாக இருக்கிறது. நின்று மணி பார்த்தன். 10.30 ஆகியிருந்தது. 10.50 விட்டால் 11.55க்கு ரயில் இருக்கிறது. அதையும் விட்டால் 1.30க்கு கடற்கரையிலிருந்து போய்க் கொள்ளலாம். வழியா இல்லை இந்தச் சென்னையில்.

ரயில் நிலையத்தின் காம்பவுண்டிற்குள் வந்து விட்டிருந்தான். நிலையத்தில் மக்கள் நடமாட்டம் தெர்நிதது. மெதுவாக நடந்து கொண்டிருந்தவனின் பக்கவாட்டில் ஒரு சைக்கிள் ரிக்‌ஷா வந்தது. ஓட்டியவன் நிதானமாக்கினான்.
"இன்னா சார், மால் வேணுமா...?"

ஒரு நிமிடம் எதைச் சொல்கிறான் என்பது புரியவில்லை. ஒரு வேளை போதைப் பொருள் ஏதாவது சொல்கிறானோ என நினைத்தான்.

"இங்க தான் சார் பக்கத்துல. நானே கூட்டிக்கிட்டுப் போய் திருப்பி இட்டாந்து வுட்டுர்ரேன். சின்ன வயசுப் பொண்ணு சார்.!"

திரும்பி ரிக்‌ஷாக்காரனின் முதத்தைப் பார்த்தான்.

"எவ்வளவுப்பா ஆகும்...?"

"ஐநூறு ரூபா ஆவும். நீங்களா பாத்து எனக்கு எதினாச்சும் கொடுங்க. நீங்க கொடுக்கற 500 ரூபாயை அப்படியே பொண்ணுகிட்ட கொடுத்துருவேன்..."

இவன் ரிக்‌ஷாவில் ஏறி அமர்ந்து கொண்டான்.

முதல் முறை. இதுவரை சென்றதில்லை. ஏன் இப்படியெல்லாம் செய்கிறோம் என்ற குற்றவுணர்வு ஏற்பட்டது. நம் தரம் தாழ்ந்து போகிறோமோ எனத் தோன்றியது. சரி, இந்த அனுபவம் தான் எப்படியிருக்கிறதென்று பார்ப்போமே எனச் சமாதனப் படுத்திக் கொண்டான்.

ரயில் நிலைய வெளிக் காம்பவுண்டைத் தாண்டியது ரிக்‌ஷா. வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்து கம்பீரமாகக் கால் மேல் கால் போட்டுக் கைகளைப் பரத்தி வைத்துக் கொண்டான்.

"நல்ல மால் சார். மாலைப் பார்த்துட்டுப் பைசா கொடுத்தா போதும்..."

இவன் பதில் சொல்லாமல் சாலையைப் பார்த்தான். விளக்கொளியும் இருளுமாகக் கலந்திருந்தது தெரு. பெட்டிக் கடை வாசலில் ஒரு பையனை அடித்துக் கொண்டிருந்தார் ஒருவர். அப்பாவாக இருக்குமோ...? அப்பா என்றாலே பிள்ளைகளை ஒடுக்குவார்கள் போலும்.

தடக் லடக்கென்று ஆடியபடி சென்றது ரிக்‌ஷா.

இப்படிப் போய் வந்த அனுபவங்களைக் கதை கதையாகச் சொல்லுவான் முரளி. சேகர், நரேஷ், மாணிக்கம் எல்லாரும் சுற்றி உட்கார்ந்திருக்க, தன் பிரதாபங்களை அவிழ்த்து விடுவான். இவனும் கவனிக்காதது போல் கவனித்துக் கொண்டுதான் இருப்பான். முரளியிடம் அதெல்லாம் தவறென அறிவுரை செய்திருக்கிறான். உள்ளீடு அற்ற வெறுமையானவர்கள் தான் அப்படியெல்லாம் செய்வார்கள் என்பது இவனது பார்வை. ‘போடா புண்ணக்கு' என்று விட்டு முரளி தொடர்வான். என்றாலும் தொடர்ந்து பேசிப் பேசி, முரளியை மாற்றியிருக்கிறான். இப்போது இவனே போய்க் கொண்டிருக்கிறான்.

"ரிஸ்க்கெல்லாம் ஒண்ணுமில்லையேப்பா..."

"அதெல்லாம் ஒண்ணுமிருக்காது சார். வீடு தான். நீங்க கவலையே படாதீங்க. உங்கள பத்திரமா கொண்டு வந்து சேக்கறது எம் பொறுப்பு..."

இவனிடம் எதற்காகக் கேட்டோம் என நொந்து கொண்டான். இப்படிக் கேட்டதன் மூலம் தன்னை ஒரு பயந்தாங் கொள்ளி என நினைத்துக் கொண்டால்...? ரிக்‌ஷா சென்று கொண்டேயிருப்பது போல் தோன்றியது.

"என்னப்பா இன்னும் எவ்வளவு தூரம் போகணும்..."

"இதோ வந்துடுச்சி சார். ரெண்டே நிமிசம்..." என்றவன் தொடர்ந்து ஏதோ பேசிக் கொண்டே வந்தான்.

இவனிடம் இனிமேல் பேசக் கூடாதென்று தீர்மானித்துக் கொண்டான். அவன் பேசியது எரிச்சலூட்டியது. தன்னையும் ஒரு ரெகுலர் கஸ்டமர் போல் நடத்துவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தான் இப்படிச் செய்வது நண்பர்களுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பார்கள்..? தன்னுடைய படிமம் உடைந்து போகுமே... முக்கியமாக முரளியின் மனதில்.

பேசாமல் ரயில் ஏறி வீட்டிற்குச் சென்றிருக்கலாம். போதையின் சுகத்தையாவது முழுவதுமாக அனுபவித்திருக்கலாம். இப்படி வந்து, இதையும் அனுபவிக்க முடியாமல், இப்படிச் செய்வதிலும் குற்றவுணர்வேற்பட்டு, தவித்துக் கொண்டிருக்க வேண்டாம். எல்லாம் அவளால்தான். அவள் மட்டும் செய்ய வில்லையா என்ன.? அது அவனுடைய ஈகோவிற்கு மிகப் பெரிய அடியாக இருந்தது. ஒரு விதத்தில் அவளைப் பழி தீர்த்துக் கொள்ளும் நிறைவிற்காகத்தான் இதைச் செய்கிறானோ என்னவோ...

ரிக்‌ஷா பிரதான சாலை விட்டுத் திரும்பியது. வரிசையாக நிறுத்தப் பட்டிருந்த ரிக்‌ஷாக்களின் பின்னால் நிறுத்தினான்.

"இறங்கிக்குங்க சார்"

இறங்கி அவனுடன் நடந்தான். சாக்கடையைத் தாண்டிக் குதித்தான். சீப்பெடுத்து தலை வாரிக் கொண்டான். செக்ஸ் அனுபவத்தை அசை போடப் போட மகிழ்ச்சியாக இருந்தது.

ரிக்‌ஷாக்கரன் சிகரெட் கேட்டு வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டான் இவனிடமிருந்து.

"சார் பணம் கொடுங்க; போய் இட்டாரேன்..." இவனை ஒரு டீக்கடையின் முன் நிற்கச் சொன்னான். இவன் சட்டைப் பையிலிருந்து ஐந்து நூறு ரூபாய்த் தாள்களை எடுத்துக் கொடுத்தான்.

"இதோ அஞ்சு நிமிசத்துல வந்துடறேன் சார்..." என்றுவிட்டு சரசரவென்று நடந்தான். சந்து திரும்புவது தெரிந்தது.

டீக்கடையின் முன்னால் உட்கார்ந்து கொண்டான். இன்னொரு கோல்ட் ஃபிளேக் கிங்கை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான்.

எப்படியிருப்பாள்.? கருப்பாக, மாநிறமாக, நல்ல உடற்கட்டுடன், 25-30 வயதுக்காரியாக.. இதில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. கற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படியெல்லாம் யோசிப்பதற்காகத் தன்னையே திட்டிக் கொண்டான். ஆங்கிலத்தில் முணுமுணுத்தான்.

வேலையை முடித்தது, சுமார் ஒரு மணி நேரத்தில் முடிந்து விடும் - மறுபடியும் கொண்டு போய் விட்டுவிடுகிறேன் என்றிருக்கிறான். கடைசி ரயில் போயிருந்தால், கடற்கரை செல்ல வேண்டும். ஒரு வண்டியிருந்தால் தேவலாம். இது போன்ற சமயங்களில் உதவியாக இருக்கும். ஆனால் இருக்கும் பணமெல்லாம் வேறு ஏதேதோ வழிகளில் செலவாகி விடுகிறது...

இப்படி டீக்கடையின் முன் அகால வேளையில் அமர்ந்திருப்பது அவமானமாக இருந்தது. சீக்கிரம் கூட்டிக் கொண்டு வந்தால் பரவாயில்லை. தேநீர்க் கடைக்கு வந்த இரண்டு இளைஞர்கள் இவனை ஒரு மாதிரியாகப் பார்ப்பது போலிருந்தது. அவமானம் பிடுங்கித் தின்றது.

‘குற்றமும் செய்து கொண்டு, குற்றவுணர்விலும் வதை பட்டுக் கொண்டு' என்ற விக்ரமாதித்யனின் கவிதை ஞாபகம் வந்தது, சே !

கைக்கடிகாரத்தைப் பார்த்தான். ரிக்‌ஷாக்காரன் சென்று இருபது நிமிடங்களாகிவிட்டது. சந்தேகம் தோன்றியது. பெண்ணைப் பார்த்துவிட்டுப் பணம் கொடுத்தால் போதுமென்றவன் ஏன் முதலிலேயே பணத்தை வாங்கியிருக்க வேண்டும்.? கோட்டை விட்டோமே..! அல்வா கொடுத்துவிட்டுப் போயிட்டானா ராஸ்கல்.! எழுந்து ரிக்‌ஷா நிறுத்தியிருந்த இடத்திற்குச் சென்றான். அது இரண்டு சந்து தள்ளியிருந்தது. வரிசையாக நிறுத்தப் பட்டிருந்ததில் எந்த ரிக்‌ஷா எனத் தெரியவில்லை.

மறுபடியும் தேநீர்க் கடைக்கு வந்தான். ரிக்‌ஷாக்காரன் நன்றாக ஏமாற்றிவிட்டான் என்பது உரைத்தது. முட்டாளடிக்கப்பட்ட உணர்ச்சியில் குன்றினான். என்ன நினைத்துக் கொண்டான் என்னைப் பற்றி...? நாளைக்கே வரதனிடம் சொல்லி யாரென விசாரிக்கச் சொல்கிறேன். ஊருக்குப் புதுசு என நினைத்து விட்டான் போல.

வேண்டும்; நன்றாக வேண்டும். தினவெடுத்து அலைந்தால் இப்படித்தான் ஆகும். ஏன் எல்லாரும் தன்னை ஏமாற்றுகிறார்கள் என்ற சுய இரக்கம் வேறு வந்து இம்சித்தது.

திடீரென்று ரிக்‌ஷாக்காரன் மேலிருந்த கோபம் அகன்றது. ஏன் எனத் தெரியவில்லை. ஒரு விதத்தில் அவன் கூட்டி வராதது நிம்மதியாகக் கூட இருந்தது. எதிலிருந்தோ தப்பிவிட்ட உணர்வேற்பட்டது. நல்ல காலம். இதுவரை இந்தக் கேவலத்தைச் செய்ததில்லை; இன்று செய்ய இருந்தோம். போய்க் குப்புற அடித்துப் படுத்தால் சரியாகிவிடும். வேண்டுமானால் இன்னொரு பியர் சாப்பிட்டுவிட்டுப் போதையின் உச்சத்தில் தூங்கி விடலாம். அதற்குப் போய் என்ன காரியம் செய்ய இருந்தோம்.? நம்மைப் பற்றிப் பெருமையாக நினைத்துக் கொண்டதெல்லாம் பிரமையா.? தன்னைத் தானே ஊதிப் பார்த்துக் கொள்ளும் சுயமோக ஆராதனையின் வெளிப்பாடா.? இனி இது போன்ற தப்பைச் செய்யவே கூடாதெனச் சபதமெடுத்துக் கொண்டான்.

டீக்கடையின் வாசலில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறிக் கொண்டான். கடைசி ரயிலுக்கு நிறைய நேரமிருக்கிறது. பிடித்து விடலாம். அந்த நம்பிக்கையில்தான் இப்போது பிரயாணம் செய்து கொண்டிருக்கிறான். ரயில் போய்விடுவது கொடுமையானது. நல்ல காலமாகச் சரியான நேரத்தில் திரும்பி விட்டோம்.!

ஆட்டோக்காரன் மெதுவாகப் பேச ஆரம்பித்தான்.

"என்ன சார் விஷயம்.? ரொம்ப நேரமா டீக்கடை வசல்ல நின்னுக்கிட்டிருந்தீங்க..?"

ஒரு நண்பனுக்காகக் காத்திருந்தேன் எனப் பொய் சொல்லலாமா என யோசித்தான். சீ, வேண்டாம்.

"ம்.." என்றான் மய்யமாக.

"யார்கிட்டயாவது பணம் கொடுத்தீங்களா...?"

ஆட்டோக்காரன் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது. சுதாகரித்துக் கொண்டான்.

"ஆமாம்பா. ஒரு சைக்கில் ரிக்‌ஷாக்கரன்கிட்டக் கொடுத்தேன்..."

"எவ்வளவு நேரத்துல வரேன்னு சொன்னான்..?"

"அஞ்சு நிமிஷத்துல வரேன்னு சொன்னவன் தான். அரை மணி நேரமாகியும் காணல..."

"அவனுகளையெல்லாம் நம்பக் கூடாது சார். ஏமாத்துக்காரப் பசங்க. யாரைடா ஏமாத்தலாம்னு அலைவானுங்க... உழச்சு சம்பாதிக்க வலுவில்லாதவங்க.. ஆமாம் எவ்வளவு கொடுத்தீங்க... "

"ஐநூறு ரூபாய் கொடுத்தேன்..." சொல்லும்போது மறுபடியும் ஏமாற்றிவிட்டானே என்ற கோபம் வந்தது. ஸ்கௌண்ட்ரல்.!

ஆட்டோ ரயில் நிலையத்தில் நின்றது. பணத்தைக் கொடுத்து விட்டு சிகரெட் பெட்டி நீட்டினான். நன்றி சொல்லிப் பற்ற வைத்துக் கொண்ட ஆட்டோக்காரன் சிநேகமாகச் சிரித்தான்.

"அவன் திரும்பியெல்லாம் வரமாட்டான் சார். நீங்க எவ்வளவு நேரம் நின்னிருந்தாலும் வேஸ்ட் தான்.. பணத்தை வாங்கிக்கிட்டு, சுத்திப் போய் ரிக்‌ஷாவை எடுத்துகிட்டுப் போயிடுவாங்க. அங்க யாரைக் கேட்டாலும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க; தெரியாதுண்ணுடுவாங்க..."

இவன் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தான். ரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கின்றன.

"உங்களுக்கு இப்போ வேணுமா சொல்லுங்க; நான் அரேஞ்ச் பண்றேன்..."

ஒருக்கணம் யோசித்தான். அவள் மனத்திரையில் வந்து போனாள். எகத்தாளமாகச் சிரித்தாள்; தூக்கியெறிந்தாள்.

"எவ்வளவு ஆகும்பா...?"

20 comments:

நித்யகுமாரன் said...

இனிய நண்பருக்கு...

கூட போவதென்றால்
ரிக்ஷா கூட போகக்கூடாதோ...

ரிக்ஷாவோடு கூடவே போன அனுபவம் கிடைத்தது.

அனுபவம் புதுமை

அன்பு நித்யகுமாரன்

பொய்யன் said...

unakku kavitha elutha theriyathunnu theriyum. ippo kathayum elutha theriyathunnu theriyudu. asadu

மங்களூர் சிவா said...

அருமையான கதை.

ஜமாலன் said...

//தன்னைத் தானே ஊதிப் பார்த்துக் கொள்ளும் சுயமுக ஆராதனையின் வெளிப்பாடா.?//

சுயமோக ஆராதனை தானே குறிப்பிடுகிறீர்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜமாலன், மாற்றி விட்டேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நித்யகுமாரன், நன்றி.

பொய்யன், வழக்கமான உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, உமா. உன்கிட்ட இந்தக் கதையையும் சொல்லிட்டனா :)

நன்றி, மங்களூர் சிவா.

தஞ்சாவூரான் said...

//"எவ்வளவு ஆகும்பா...?"//]

மனுசப் பய .... குரங்கு மனசு :)

நல்லா இருந்தது ..

G.Ragavan said...

இயல்பான முடிவு. நல்ல நடை. ஆசை எழும் பொழுது ஆவலுக்குத் தடையேது!

Sridhar Narayanan said...

நல்ல முயற்சி என்றுதான் சொல்லவேண்டும்.

பொதுவாக இப்படிப்பட்ட கதைகளுக்கு நல்ல காத்திரமான நடை வேண்டும் என்று தோன்றுகிறது. அசோகமித்திரன் போல.

இறுதிப் பகுதி எதிர்பார்த்தை போலவே...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அனானி.

நன்றி, தஞ்சாவூரான்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ராகவன்.

நன்றி, ஸ்ரீதர் நாராயணன். முடிவை வேறு மாதிரி எழுதியிருந்தாலும் (அவன் வேண்டாமென மறுத்திருந்தாலும்) எதிர்பார்த்த முடிவாகத் தான் இருந்திருக்கும். :)

கிருத்திகா said...

மீண்டும் சொல்கிறேன் சுந்தர், சிறுகதைகளில் உங்கள் ஆளுமை மிக நன்றாக உள்ளது. சுய மோகங்களின் மீள் பரிசீலனைகள் என்றுமே எதார்த்தத்தை மீற முடியாதுதான். வாழ்த்துக்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, முனி.

நன்றி, கிருத்திகா.

Anonymous said...

/////தன்னையும் ஒரு ரெகுலர் கஸ்டமர் போல் நடத்துவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை///

ரொம்ப ரசிச்சேன்
எனக்கும் இதே அனுபவம்
ஆனா வேற இடம் !
ஆனா வேற சூழல்

நெல்லைபிரகாஷ்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, நெல்லை பிரகாஷ்.

Cable Sankar said...

நல்ல கதை..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

...

வெண்பூ said...

அருமையான கரு, நடை, எக்ஸட்ரா எக்ஸட்ரா.. சிறுகதையைப் படித்த திருப்தி கிடைத்தது சுந்தர். நன்றி..

Wahe Guru said...

நல்ல கதை பொங்க!--வாஹே குரு