நாய்களைப் பற்றி

கிறுக்குத் தனங்கள் எதுவும் செய்யாமல் நேரடிக் கதை எழுத முடிவு செய்து கொண்டு ஆரம்பிக்கிறேன். பார்ப்போம், முடிகிறதா என்று.

குடிபோதையில் இரவில் வரும்போது இந்த நாய்களின் தொல்லை தாள முடியவில்லை. குடியையும் விடமுடியாது, நாய்களையும் ஒன்றும் செய்ய இயலாது (சூர்ணம் திங்காது பூர்ணனாக ஏலாது - விக்ரமாதித்யன்).

இருபது வருடமாக ஒரே மாதிரியான ரயில் பயணம். இரவு 10.50க்கு ரயிலேறினால் கொரட்டூரில் இறங்க 11.20 ஆகிவிடும். நிலையத்தை ஒட்டி இருக்கும் மூத்திரச் சந்தைக் கடந்து, அடுத்த தெருவில் ஓடும் சாக்கடையைத் தாண்டிக் குதிப்பதற்குத் தனித் திறமை வேண்டும். இத்தனையும் போதாதென்று நாய்கள் வேறு. சொறி பிடித்த நாய்கள்.!

என்னுடைய தம்பி நாய் வளர்க்க ஆசைப் பட்டபோது அதை நிராகரித்தேன். அம்மாவிற்கு நாய் வளர்ப்பதில் உவப்பில்லை. நாய்க் குட்டிகள் வீட்டில் அசிங்கம் செய்தால் யார் சுத்தப் படுத்துவது என்பது அவர் கவலை. தம்பி அடம்பிடிக்க, அப்பாவும் என்னிடம் பேசிப் பார்த்தார். வீட்டை விட்டே ஓடி விடுவேன் எனப் பயமுறுத்தி நாய் வளர்ப்பதை நிறுத்தியிருந்தேன்.

சிறு வயதில் கையில் பன்னுடன் வரும் போது நாய் ஒன்று துரத்தி, நான் தெரு நடுவில் ஓடிய சாக்கடையில் விழுந்தது இன்னும் நினைவடுக்குகளில் இருக்கிறது. அப்போது வெளியூருக்குச் செல்ல நல்ல ஆடை வேறு உடுத்தியிருந்தேன். அப்போதிருந்தே நாய்கள் மேல் வெறுப்பு.

சரி, நாய்களைப் பற்றிக் கதை சொல்ல ஆரம்பித்து என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நகுலனின் நாய்கள் நாவலைச் சமீபத்தில் படித்து முடித்திருக்கிறான் கதிரவன். அவன் வீட்டில் வளர்பது ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய். தெரு நாய்களின் தொல்லை பற்றி அவனுக்குத் தெரியாது. இது தெரியாமல் என்ன பெரிய எலக்கியம், நகுலன் லவ்டாவெல்லாம்.? உன்னைத் தெருநாய் கடித்திருக்கிறதா, அரசு 24 மணிநேர மருத்துவமனையில் தொப்புளைச் சுற்றி ஊசி போட்டிருக்கிறாயா.?

ஐயோ, ஐயோ, சரியான போர் அந்த நாவல். நீங்கள் மனம் பிறழ்ந்தவராகவோ அல்லது தனக்குள் பேசிக் கொள்பவராகவோ இருந்தால் நகுலனின் உலகில் நுழைவது எளிதாம். அடேய் என்னடா பம்மாத்து பண்றீங்க.? எந்த விதத்துல வைரமுத்து நகுலனுக்கு குறைந்து விட்டார் என கேட்க நினைத்தேன். ஆனால் தொலைக் காட்சியில் ஐபிஎல் 20/20 மேட்ச் பார்க்க அவசரமாகக் கிளம்ப வேண்டியிருந்தது.

கிரிக்கெட் என்றாலே பிடிக்காது மோகனுக்கு. மேட்டுக் குடி ஆட்டம் என்பான். காலனியாதிக்கப் பாதிப்பு என்பான். அவன் சொல்வதில் பாதி புரியாது. ஏன் இவ்வளவு சிக்கலாக்கிக் கொள்ள வேண்டும் வாழ்க்கையை என்பது புரியவில்லை. தொலைக்காட்சி பார், கிரிக்கெட்டை ரசி. நடுவில் வரும் விளம்பரங்களுக்குக் கை தட்டு, சந்துஷ்டியாகக் கழியட்டும் பொழுது. சில அதி புத்திசாலிகள் சொல்லுகிறார்கள், சியர் லீடர்ஸ் கூடாதாம். அடப் பாவிகளா.! செக்ஸ் வறட்சியால் வாடும் என் போன்றவர்களுக்கு இது வரை இருந்த ஒரே விளையாட்டு மகளிர் டென்னிஸ் தான் என்ற நிலையை மாற்றி வாராது போல் வந்த மாமணியாய் வந்திருக்கிறது 20/20. அதிலும் மண்ணள்ளிப் போடப் பார்க்கிறீர்களே...!

கோபண்ணன் வீட்டில் ப்ரௌனி என்ற பெயரில் நாய் வளர்த்தார்கள். என்னைப் பார்த்தாலே ஏதோ முன் ஜன்ம விரோதியைப் பார்த்தது போல் கத்த ஆரம்பித்து விடும். கோபண்ணன் மிக அன்பானவர் - அதை நன்றாக குரைக்க விட்டு விட்டு, பிறகு, 'டோண்ட் ஷவுட்' என்பார் (நாய்களிடம் பலர் ஏன் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள் என்பது புரியாத புதிர்). அது பாய்ந்து என் குரல் வளையைப் பிடித்து விடுமோ என அஞ்சிக் கொண்டே இருப்பேன். அவர் வீட்டிற்குப் போகாமல் இருக்க முடியாது - அவரிடமிருந்து தான் 100, 200 என்று அவ்வப்போது பணம் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

பணத்தை உடனே கொடுத்து அனுப்பி விட மாட்டார். பிரௌனி புகழ் பாடுவார் சிறிது நேரம். கறி சோற்றை வைத்து விட்டு, அவர் அனுமதித்த பின் தான் வாய் வைக்குமாம். அவ்வளவு கட்டுப் பாடாம்! இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரௌனியை அருகில் இழுத்துப் பாசமாகத் தடிவித் தருவார். அது என்னையே முறைத்த படி, அவருக்கு வாகாக கழுத்தை நீட்டிக் காண்பிக்கும். நானும் ஈ என்று இளித்துக் கொண்டிருப்பேன். பிரௌனி கூட ஒரு காரணமாயிருக்கலாம் நாய்கள் மேல் வெறுப்பு வருவதற்கு.

இங்கே ஒரு போட்டி வைக்க ஆசையாக இருக்கிறது. ஆனால் முதலில் எடுத்த சங்கல்பம் என் கைகளைக் கட்டிப் போடுகிறது.

நாய்கள் பற்றிய பல அதீதக் கதைகள் உலவுகின்றன மக்கள் மத்தியில். அவற்றில் ஒன்று பேய் நடமாட்டத்தை நாய்கள் உணரும் தன்மை பற்றியது. இதைப் பற்றி விரிவாக எழுதும் ஆசையை அடக்கிக் கொள்கிறேன்.

நாய்கள் என்று சூசகமாகக் சில கவிஞர்கள் 70களில் மாற்றி மாற்றித் திட்டிக் கொண்டதை கதிரவன் சிரித்துக் கொண்டே சொன்னான். நவீனக் கவிதைகளின் முன்னோடிகளாம்! ஆக்ரோஷமாய் நாய்கள் நான்கைந்து பாய்ந்து சண்டை போடும் காட்சி மனதில் வந்து போகும். அவர்களையும் நாய்கள் கடித்திருக்குமா எனத் தெரியவில்லை. எதற்குக் கவிதைகளில் திட்டிக் கொள்ள வேண்டும் என்றால் அப்போது இந்த அளவிற்கு தொலைத் தொடர்பு வசதி இல்லையாம். நல்லதாய்ப் போயிற்று.

தினசரியில் படித்த ஒரு செய்தி தூக்கி வாரிப் போட்டது. கல்பாக்கம் அருகில் உள்ள கிராமத்தில் ஒரு கைக்குழந்தையை நாயொன்று கடித்தே கொன்றிருக்கிறது. அப்போது வீட்டில் எல்லாரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் வேறொரு அறையில். நாயைச் சொல்வதா அல்லது தொலைக் காட்சி சீரியலைச் சொல்வதா.?

இதற்காகவே நாய் இனத்தை அழித்தொழிக்கலாம்.

யோசித்துப் பார்க்கும் போது நான் கூட ஒன்றிரண்டு நாய்களைப் பற்றி எழுதியிருப்பது நினைவிற்கு வருகிறது. அத்தனையும் எதிர் மறை எழுத்துகளே என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் இந்தக் கதை அப்படியிருக்கக் கூடாது என்பதால் நாய்களைப் பற்றிய சில நல்ல விஷயங்களையும் கூறிவிடுகிறேன்.

22 comments:

லக்கிலுக் said...

வாசிப்பதற்கு மிக சுவாரஸ்யமாக இருந்தது. ஆனாலும் இதில் கதை எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டேயிருக்கிறேன் :-)

கதிர் said...

என்னை வெச்சு காமெடி கீமெடி....
அதான பார்த்தேன்.

தினத்தந்தி கூட படிக்காத மிகவும் பூஞ்சையான மனதுடையவரா நீங்கள்?

கிருத்திகா ஸ்ரீதர் said...

"கிறுக்குத் தனங்கள் எதுவும் செய்யாமல் நேரடிக் கதை எழுத முடிவு செய்து கொண்டு ஆரம்பிக்கிறேன். பார்ப்போம், முடிகிறதா என்று." சங்கல்பம் பாதிதானே நிறைவேறியிருக்கிறது.. மீதி வழியையும் அடுத்த கதையில் கடந்துவிடுங்கள். நன்றாக வந்துள்ளது கதை?????

ஜமாலன் said...

//கிரிக்கெட் என்றாலே பிடிக்காது மோகனுக்கு. மேட்டுக் குடி ஆட்டம் என்பான். காலனியாதிக்கப் பாதிப்பு என்பான். அவன் சொல்வதில் பாதி புரியாது. ஏன் இவ்வளவு சிக்கலாக்கிக் கொள்ள வேண்டும் வாழ்க்கையை என்பது புரியவில்லை. தொலைக்காட்சி பார், கிரிக்கெட்டை ரசி. நடுவில் வரும் விளம்பரங்களுக்குக் கை தட்டு, சந்துஷ்டியாகக் கழியட்டும் பொழுது. சில அதி புத்திசாலிகள் சொல்லுகிறார்கள், சியர் லீடர்ஸ் கூடாதாம். அடப் பாவிகளா.! செக்ஸ் வறட்சியால் வாடும் என் போன்றவர்களுக்கு இது வரை இருந்த ஒரே விளையாட்டு மகளிர் டென்னிஸ் தான் என்ற நிலையை மாற்றி வாராது போல் வந்த மாமணியாய் வந்திருக்கிறது 20/20. அதிலும் மண்ணள்ளிப் போடப் பார்க்கிறீர்களே...!//

இதை என்னை மனசுலவச்சி எழுதுலேல.. ஏன்னா? இப்பத்தான் காலனி-கிரிக்கெட் என்கிற வரலாற்றுக் கட்டுரை ஒன்று எழுதி முடித்தேன். அதான்.

அப்புறம் லக்கி சொன்னதுபோல.. கதை எங்க?

இருந்தாலும் கடைசியில் நாய்கள் எல்லாம் நான்கு காலால்தான் நடக்கும் என்பதில் நமக்கு உடன்பாடில்லை என்று முடித்திருக்கலாம்.

கையேடு said...

//இதற்காகவே நாய் இனத்தை அழித்தொழிக்கலாம்.//

அப்படி என்னங்க கோபம்?

இப்பரிதாபத்திற்கு முழுக்கவும் குடும்பத்தினரின் கவனக்குறைவே காரணம்.

உங்களுக்கு அவகாசமிருந்தால்..
http://kaiyedu.blogspot.com/2007/11/blog-post_23.html

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, லக்கி. கரை(தை) தேடினாலும் கிடைக்காது.! :)

சிறுகதைக்கு கதை நிச்சயமான தேவையில்லை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, தம்பி,

உங்க 'நாய்கள்' பதிவு படிச்சுட்டு, அதில் உள்ள சில சம்பவங்களை மாற்றிக் கதையாக எழுதலாம் என்று தான் ஆரம்பித்தேன். பிறகு, அது இப்படி வந்து விட்டது.

இதில் வரும் கதிரவன், நீங்க இல்லை :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கிருத்திகா.

நன்றி, ஜமாலன். 'நாய்கள் என்று சொல்வது நாய்கள் மட்டுமல்ல' என முதலில் எழுதியிருந்தேன். அது கதை நடைக்கு ஒவ்வாத ஒரு சீரியஸ் தன்மையைக் கொடுக்குமோ என நினைத்து நீக்கி விட்டேன். இப்போது உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகு, இருந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது :)

TBCD said...

கதையற்ற கதை என்றால் ஏன் சிறுகதை என்று சொல்லனும். சம்பவக் கோர்வை என்று ஏதாவது புதிதாக சொல்லலாமே... :P

கதை என்றால் எங்களுக்கு ராஜா ராணி, பாட்டி வடை, நாயகன் நாயகி, நாய் ஜோடி நாய் என்று பழகிவிட்டோம்.. :P

manjoorraja said...

நாய்கள் மீது எனக்கு வெறுப்பா, விருப்பமா என்று இன்றுவரை சொல்ல முடியவில்லை. சிறு வயதில் தெரு நாய்கள் போடும் அழகான குட்டிகளைபார்க்கையில் நாமே வளர்க்கலாம் என ஆசை வரும். வீட்டிற்கு கொண்டு வந்து இரண்டு நாள் வைப்பேன், அது பின் ஓடிவிடும். ஒரு வருடத்திற்கு முன் குழந்தைகளின் தொல்லை தாங்காமல் ஒரு பெமெரேனியன் நாயை வீட்டிற்கு கொண்டுவந்தேன். குழந்தைகளுக்கு மிகவும் மகிழ்ச்சி. நன்றாக நாயுடன் விளையாடிக்கொண்டு இருந்தன. ஆனால் எப்படி பழக்கவைக்கவேண்டும் என்ற விவரம் தெரியாததால் சில நாட்கள் வைத்துவிட்டு வேறு ஒரு நண்பருக்கு கொடுத்துவிட்டோம்.

உங்களின்:
//(நாய்களிடம் பலர் ஏன் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள் என்பது புரியாத புதிர்).//

இதை பலமுறை நானும் யோசித்திருக்கிறேன். நாய்களுக்கு ஆங்கிலம் மட்டும் தான் தெரியுமாவென்று.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கையேடு. உங்க கட்டுரையைப் படித்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

எனக்குக் கோபமெல்லாம் ஒன்றுமில்லை. இதை ஒரு புனைவென்ற வகையிலேயே அணுக வேண்டுகிறேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, உமாபதி.

நன்றி, டிபிசிடி.

நன்றி, மஞ்சூர் ராசா.

தமிழ்நதி said...

பூனைகளைப் பற்றி எழுதவேண்டுமென்று இரண்டு நாட்களாகவே யோசித்துக்கொண்டிருக்கிறேன். காரணம், ஊரிலே எங்கள் வீட்டிலே இருந்த கடைசிப் பூனைக்குட்டியும் நோய் வந்து சாகக் கிடக்கிறது. பூனைகளைப் பற்றிய கட்டுக்கதைகள் எல்லாம் (விசுவாசமற்றவை இன்னபிற) பொய்யென உணர்த்தியவை அவை. நாங்களெல்லாம் மனிதர்களைப் பற்றி எழுதுவதை விட்டுவிட்டு பூனைகளையும் நாய்களையும் பற்றி ஏன் எழுதவாரம்பித்திருக்கிறோம் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? சரி இன்றைக்கு யோசியுங்கள்:)

பரிசல்காரன் said...

நாய்கள் எப்போதுமே நட்பானவை. தனக்கு ஆபத்தென உணரும்போது மட்டுமே எதிர்க்கக்கூடியவை. ஒருமுறை அதற்கு உணவிட்டால், எப்போது உங்களைப் பார்த்தாலும் வாலாட்டும் நன்றிகொண்டவை!

என் வீட்டுமுன் இருக்கும் சில தெருநாய்களுக்கு உணவிட்டு, உணவிட்டு அவை இப்போது என் வீட்டைச் சுற்றியே வருகின்றன. இதில் கொடுமையான விஷயம் அந்தப் பெண் நாய்கள் ஒவ்வொரு முறை குட்டிகள் ஈனும்போதும், அந்தக் குட்டிகளில் ஆண் நாய்க்குட்டிகளை மட்டும் ஏதாவது முடிச்சவுக்கி வந்து எடுத்துக் கொண்உ போகிறார்கள்! (பெண் நாய்களை அவன் எடுப்பதில்லை என்ற கோபமேயன்றி, எனக்கு ஆண் நாய் தேவையென்று வந்த கோவமல்ல!) இதனால் என் வீட்டு முன் இப்போது மூன்று பெரிய நாய்களும், 4 குட்டிகளும் எப்போதும் சுற்றிக்கொண்டிருக்கும்!

நல்ல பதிவு!

மங்களூர் சிவா said...

/
சிறுகதைக்கு கதை நிச்சயமான தேவையில்லை.
/

அப்பிடியா??

டிபிசிடி சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு

:)

Voice on Wings said...

//இருபது வருடமாக ஒரே மாதிரியான ரயில் பயணம். இரவு 10.50க்கு ரயிலேறினால் கொரட்டூரில் இறங்க 11.20 ஆகிவிடும்.//

இது சொந்தக் கதை, சோகக்கதை வகையறாவா, அல்லது வெறும் புனைவுதானா? ஏன்னா எனது நிரந்தர முகவரியும் (மனிதனுக்கு அப்படியென்று ஒன்று இருக்க முடியுமென்றால் அது) கொரட்டூர்தான். நீங்கள் குறிப்பிட்ட 'மூத்திரச் சந்து' எனக்கும் நினைவிருக்கிறது. :) (ரயில் நிலையத்திற்கும் பேருந்து நிலையத்திற்கும் இடையே இருக்குமே, அதுதானே?) ஆனால் சுற்று வழியில் வேறு நல்ல பாதை உள்ளதே? ஒரு கல்யாண மண்டபமெல்லாம் கூட இருந்ததாக நினைவு.

Voice on Wings said...

//நாய்களிடம் பலர் ஏன் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள் என்பது புரியாத புதிர்//

இதற்கு இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறேன் :)

Athisha said...

:-((

இதுல எதோ ஒரு நுண்ணரசியலின் உள்குத்து இருக்கிறது .

மண்டையலிருக்கும் 40 மயிரில் 4 ஐ பிடிங்கி யோசித்து விட்டேன் ம்ம் புரியவில்லை .

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, தமிழ்நதி.

நன்றி, பரிசல்காரன்.

நன்றி, மங்களூர் சிவா.

நன்றி, VoW. நான் இருப்பது கொரட்டூரை அடுத்துள்ள அம்பத்தூரில். ஆனால் இதில் எழுதியுள்ளது முழுக்கவே புனைவுதான்.

நன்றி, அதிஷா. பார்த்து. இப்போ கொஞ்சம் பரவாயில்லை. அப்புறம் என்னை மாதிரி ஆகிடப் போறீங்க :)

vall paiyen said...

படித்து முடித்ததும் "நாய் படாத பாடு பட்டேன்" . இப்படியெல்லாம் எங்களை படுத்துவதில் அப்படியென்ன ஒரு சந்தோஷம் சுந்தர் உங்களுக்கு

vall paiyen said...

படித்து முடித்ததும் "நாய் படாத பாடு பட்டேன்" . இப்படியெல்லாம் எங்களை படுத்துவதில் அப்படியென்ன ஒரு சந்தோஷம் சுந்தர் உங்களுக்கு

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, வால்பையன்.