ஞாநி ஏன் இப்படி ஆனார்

ஞாநி மேல் எனக்கு மதிப்புண்டு. அதற்குப் பல காரணங்கள்.

பாதல் சார்க்காரின் நாடகத்தை மொழிபெயர்த்து 'பாலு ஏன் தற்கொலை செய்து கொண்டான்' என்ற நாடகத்தை பரிக்‌ஷா குழுவின் மூலம் ஞாநி அரங்கேற்றினார். இதைப் படித்ததன் மூலமே இவரை முதலில் தெரிந்து கொண்டேன். தன்-சாதி மறுப்பாளர் என அறிய வந்ததும் மதிப்பு மேலும் கூடிற்று. 1990களிலிருந்து தொடர்ந்து இவரை வாசித்து வருகிறேன். இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு எதிராக இவர் வழக்கு தொடுத்து ஜெயித்தது, தீம்தரிகிட இதழ்களில் இவரது எழுத்துகள், ஒரு முறை தொலைக்காட்சி சீரியலின்போது மொட்டை போட்டுக் கொண்டு வந்தது... இப்படிப் பல...

இவரது சமீபத்திய குமுதம் கட்டுரை படித்தபோது, வெகுஜன ஊடகங்களுக்குச் செல்லும் பலர் ஏன் இப்படி ஆகிறார்கள் என வருத்தமேற்பட்டது. பெட்ரோல் / டீசல் விலை ஏற்றத்திற்கு மாற்றாக இவர் முன் வைக்கும் சில முக்கிய தீர்வுகள் :

1. கார், டூவீலருக்கு லிட்டர் விலை : ரூ 100. ஆட்டோ, சரக்கு லாரிகள், ரயில் என்ஜின் முதலியவற்றுக்கான பெட்ரோல், டீசலுக்கு மட்டுமே சலுகை விலை.

2. பள்ளி, கல்லூரி மாணவர்கள் யாரும் டூவீலர் ஓட்ட அனுமதியில்லை. சைக்கிளை மட்டுமே பயன்படுத்தலாம். உடலுக்கும் நல்லது. பர்ஸூக்கும் நல்லது.

3. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அன்றாடம் பஸ், ரயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

4. எந்த நகரிலும் எந்தச் சாலையுலும் புதிய மேம்பாலங்கள் அடுத்த பத்தாண்டுகள் கட்டக் கூடாது.

5. ஒரு காரில் ஒருவர் / இருவர் மட்டுமே பயணம் செய்வதைக் கண்டால், ஸ்பாட் ஃபைன் போடப்படும்.

எண்ணை நிறுவனங்கள் கூட லிட்டர் விலை நூறு ரூபாய்க்கு விற்க வேண்டுமெனச் சொல்லாதபோது இவர், அதைப் பரிந்துரைக்கிறார். என்ன காரணத்தினாலோ ஆட்டோக்களை இந்த அதிக விலையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்கிறார்.

தசாவதாரம் பட விமர்சனத்தை எடுத்து மீள் பிரசுரம் செய்யும் யாரும் இந்தக் கட்டுரையிலுள்ள ஆபத்தை உணர்ந்தார்களா எனத் தெரியவில்லை. ஏற்கனவே மாணவர்களை ஒடுக்கும் பெற்றோர்கள் இருக்கும் நாட்டில் இனி வேறொருவர் சைக்கிள் உதிரிப்பாகங்களின் விலை உயர்ந்து விட்டது, நடந்து செல்வதே உடலுக்கு அதிக வலுவூட்டக் கூடியது எனச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

ஜனநாயகம் குறித்து தங்கள் கவனத்தைக் குவிப்பவர்கள் இப்படியெல்லாம்கூட அராஜகமாக எழுத முடியுமா என ஆச்சரியமாக இருக்கிறது ! ஸ்பாட் ஃபைன் போடச் சொல்லும் இவரைப் போன்றவர்களிடம் ஆட்சியிருந்தால், சிறையில்கூட அடைக்கச் சொல்வார்கள்!

நல்லவேளை இவர் ஆட்சியிலில்லை :)

ஸ்மைலி போட்டிருக்கிறேனே ஒழிய, அறியப்பட்ட ஓரிரு அறிவுஜீவிகளும் இப்படி ஆகிப்போவது சோகமானதுதான்.

21 comments:

rapp said...

நீங்கள் சொல்வதை முழுமையாக ஆமோதிக்கிறேன். நேரடியாக சர்வாதிகாரத்தை ஆதரிப்போரைக் கூட நாம் நம்பலாம்.இவரைப் போன்ற போலி ஜனநாயகவாதிகளை கொஞ்சமும் நம்பக் கூடாது. இவர்கள் தான் நிஜ சர்வாதிகாரிகள்.
இவரது முந்தய கருத்துக்களை குறித்த என் பதிவுகள் இங்கே.http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_10.html

http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_5058.html

Jackiesekar said...

ஞாநி சமீபமாய்தான் இப்படி மாறிப்போனார் , அவர் கட்டுரை மேல் அளவு கடந்த மதிப்பு உண்டு மரியாதை உண்டு, ஒருவேளை நேர்மையாய் இருந்து போடா அடித்து வட்டதோ என்னவோ??

எண்ணச்சிதறல்கள் said...

நானும் இதைப்படித்து மனம் நொந்தேன். அதிலும் கடைசியாக அவர் சொல்வது "காரில் இரண்டு பேர் மட்டும் போனால் ஸ்பாட் பைன்" - வீட்டில் இரண்டு பேர் மட்டும் இருந்தால் தெருவில் போகும் சிலரை கூட்டிப்போகச் சொல்கிறாரா?

Voice on Wings said...

அத்தியாவசிய பண்டங்களின் விலைகளெல்லாம் சாமானியனுக்கு எட்டாத அளவுக்கு ஏறிக்கிட்டிருக்கும்போது, பொருளாதார மேம்பாடடைந்த சிலர் மட்டும் 'மகிழுந்து'ல மகிழ்ச்சியா போயிகிட்டிருக்கிற முரண்பாட்டை களையும் நோக்கம்தான். கொஞ்சம் அதிகப்படியான தோற்றம் தருகிறது, ஆனால் அப்படிப்பட்ட சிந்தனையே தவறுன்னு சொல்லமாட்டேன்.

இப்னு ஹம்துன் said...

ரிலையன்ஸ் போன்ற எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் கட்ட வேண்டிய வரிபாக்கியே பல ஆயிரக்கணக்கான கோடிகளில் இருக்கின்றனவாம். எந்த அரசும் அதை வசூலிக்க முன்பின் முயற்சிகள் எடுப்பதில்லை. பெட்றோல் விலை குறையாமல் இருப்பதற்கு இவையும் காரணம். ஏனென்றால்...கட்சிக்கான தேர்தல்நிதி குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது பாருங்கள். இதையெல்லாம் ஏன் ஞாநி குறிப்பிடவில்லை?

முரளிகண்ணன் said...

\\ கார், டூவீலருக்கு லிட்டர் விலை : ரூ 100. ஆட்டோ, சரக்கு லாரிகள், ரயில் என்ஜின் முதலியவற்றுக்கான பெட்ரோல், டீசலுக்கு மட்டுமே சலுகை விலை\\
அதற்குப்பதில் கார் டூ வீலர்க்கு ரேஷன் குடுக்கலாம்

மோகன் கந்தசாமி said...

ஞானியின் சமீப காலங்கால அபத்தங்களின் தொடர்ச்சிதான் இவ்வுலறளும். இனி அவர் சம்பத்தப் பட்ட எதையும் பார்த்து சிரித்துவிட்டு விட்டுவிட வேண்டியதுதான்.

லக்கிலுக் said...

ஞாநி திடீரென்று இப்படி மாறிவிடவில்லை. சில காலமாகவே இப்படித்தான் இருக்கிறார். கருத்துரிமை, ஜனநாயக உரிமை பற்றி வாய்கிழிய பேசும் ஞாநி கடந்த தேர்தலில் “ஓ” போட சொன்னது உச்சக்கட்ட காமெடி. கேட்டால் “ஓ” போடுவதும் ஜனநாயக உரிமையின் ஓர் அங்கம் என்கிறார்!

முகவை மைந்தன் said...

இப்பொழுது தான் அந்த கட்டுரையையும் படித்து வந்தேன். அவர் பரிந்துரைகள் ஏற்கத்தக்கதாகவே இருக்கின்றன.

1. மகிழுந்து வைத்திருப்பவரால் கூடுதலாகப் பணம் தர முடியும். அதை வைத்து பொதுவான பயன்பாட்டுக்கான எரிபொருளை மலிவாக விற்க முடியும். விதி விலக்குப் பெரும் பொதுப் போக்குவரத்து வண்டிகள் அடித்தட்டு மக்களுக்கு நேரடியாகப் பயன் தரும்.

1. நல்ல யோசனை. மேற்கண்ட விலை உயர்வு நடைமுறைக்கு வந்தால் இது தானே நிகழும். மிதி வண்டி உதிரிப் பகுதிகள் விலை உயர்ந்தால் நாமே உற்பத்தி செய்ய முடியும். அவற்றிற்கு மானியம் அளித்தாலும் (இதெல்லாம் அளவு கடந்த கற்பனை) பயன் சரியானவர்களையே சென்று சேரும்.

2. இது ஏற்கெனவே பாதி செயல்பாட்டில் உள்ளது. எழும்பூரில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பேருந்தை பார்த்திருக்கிறேன். பாதுகாப்பு, அவர்களின் மதிப்பு மிக்க நேரம் முதலியவற்றை கருத்தில் கொண்டால் தேவையில்லை என்றே படுகிறது.

3. வரவேற்கிறேன். பாலம் கட்டுவதாக அரசுகள் அடிக்கும் கூத்திற்கு பாலத்தின் தேவை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது எவ்வளவோ மேல்.

4. ஒருவர் மட்டுமே பயணிக்க எதற்குத் தனி வண்டி? பேருந்து, தொடர்வண்டிகளைப் பயன்படுத்தலாமே? குறைவான எரிபொருள் பயன்பாட்டால் நிறைவான அந்நியச் செலாவனி சேமிப்பு.

//வீட்டில் இரண்டு பேர் மட்டும் இருந்தால் தெருவில் போகும் சிலரை கூட்டிப்போகச் சொல்கிறாரா?//

அவர்களுக்கு தனியாக்க மகிழுந்து தேவையில்லை என்றே கருத வேண்டும். தேவை எனில் தானி (auto), வாடகை வண்டிகளை எடுத்துக் கொள்ளலாமே!

//இந்தக் கட்டுரையிலுள்ள ஆபத்தை உணர்ந்தார்களா எனத் தெரியவில்லை//

இந்த கருத்துக்களில் நிறை, குறை இருக்கலாம். மேலும் இவை முன்பே பிறரால் பரிந்துரைக்கப் பட்ட வழிகள் தான். எதற்காக இப்படி அவலை யானை அளவு ஊதுகிறீர்கள் என்று தான் புரியவில்லை.

சதுக்க பூதம் said...

// அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அன்றாடம் பஸ், ரயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
//

Why restriction to Government staff alone. What is the speciality with private staffs?
Is it due to ?????

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஏன் இதை மற்றொரு கோணத்தில் பார்க்கக்கூடாது... கரண்ட் பில் அதிகம் வந்தால் ஒரு சராசரி குடும்பி என்ன செய்வான் அடுத்த நாளில் இருந்து தேவையற்ற மின்சார பயன்பாட்டை கண்காணித்து கட்டுப்படுத்த முயல்வான், பின் இரவு முழுவதும் ஏசி, என்ற நிலையில் இருப்பவனாய் இருந்தால் பாதி இரவில் ஏசியை துண்டிக்க நினைப்பான, ஒரே வீட்டில் இரண்டு அறைகளில் இரவு மின்விசிறியோ ஏசியோ ஒடுகின்ற நிலமை இருந்தால் அதை ஒரே அறைகளில் பயன்படுத்துமாறு வீட்டின் நடைமுறையை மாற்ற முயற்சிப்பான்.. இதெல்லாம் தன்னளவில் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கை, ஞானியின் கட்டுரையைக்கூட இந்த கோணத்தில் நாம் பார்க்கமுடியும். அவர் எதையும் புதியதாய் சொல்லவில்லை ஏற்கனவே ஒரு சில ஊர்களில் நடைமுறையில் இருக்கும் (car pooling method) விசயங்களையே குறிப்பிடுகிறார், பப்ளிக் டிரான்ஸ்போர்ட் முறைக்கு ஆதரவு அளிக்கும் பொருட்டு அது போன்ற வாகனங்களுக்கு சலுகை விலை என்றும் தனியார் (luxuary usage) பயன்பாட்டிற்கு அதிக விலை என்று வைத்தால் (நடைமுறைக்கு வரும் சாத்தியக்கூறுகள் நம் நாட்டில் இல்லை என்றாலும்) மக்கள் பப்ளிக் டிரான்ஸ்போர்டிக்கு மாறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஒரு காரணமாயிருக்கலாம். ஏன் சுந்தர், இப்போது அடிக்கடி சந்திக்கும் வாகன நெரிசலைத்தாண்டும்போதெல்லாம் நம்மில் எத்தனை பேர் இது போன்று சிந்ததில்லை... எனவே இப்படியும் ஒரு கோணம் உண்டென்று யோசியுங்கள்.

மிதக்கும்வெளி said...

பலசமயங்களில் ஞாநி தனது கருத்துக்களின் மூலம் விஜயகாந்தின் 'தரத்தை' எட்டிவிடுகிறார். மதுவிலக்கு குறித்த அவரது தொடர் வற்புறுத்தல்களையும் பாருங்கள்.

Athisha said...

ஞாநிக்கு என்ன ஆச்சு??

கலைஞர திட்ட எதும் மேட்டர் கிடைக்கலியா..

ஜெயா டிவில பேட்டி எதும் இல்லியா?

இத பத்திலாம் கூட எழுதுறாரா(வாரா)


ஆமா தசாவதாரம் சீசன்ல இப்படி பதிவு போட்டா யாரு பார்ப்பாங்க?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ராப். உங்கள் பதிவுகளையும் படிக்கிறேன்.

நன்றி, ஜேக்கிசேகர்.

நன்றி, செல்வா. தெருவில் போவோரை அழைத்துச் செல்வது சரியாகத்தான் இருக்கும். ஆனால், யாருமில்லையென்றால், ஸ்பாட் ஃபைன் என்பது அராஜகமில்லையா.?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

பொதுப்போக்குவரத்து நன்றாக செயல்படும் நாடுகளில் ஞானி குறிப்பிட்ட பெருமளவு விதயங்கள் நடக்க சாத்தியமே.

நமது அரசுகளின் அறிவற்ற தன்மையினால்தான் நாம் இப்படிப்பட்ட ஆயில் க்ரைஸிஸ்'ல் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.

மாற்றிவிதயங்களையே யோசிக்க விரும்பாத அரசின் முட்டாள்தனத்தைத்தான் ஞாநி விமர்சிக்கிறார்.

உங்கள் பதிவு மூடிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருப்பதான உணர்வையே தருகிறது.

Anonymous said...

ஞானி சொன்னதில் எந்த தவறும் இல்லைதான்..

எதற்க்கு எடுத்தாலும் சீனாவை உதாரணம் காட்டும் விசில் அடிச்சான் குஞ்சே
சீனாவில் இன்னமும் பெரும்பாலான் பெரு நகரங்களில் சைக்கிள் தான் பயன்படுத்தபடுகிறது.. கார் வாங்க வேண்டுமானால் அதற்க்காக பதிந்து விட்டு ஒரு வருடமோ அல்லது பல வருடமோ காத்து கிடக்க வேண்டும்.

ஓஸி மடிக்கண்ணியில் செக்ஸ் கதை எழுதும் ஆளுக்கு இதேல்ல்லாம் எங்க புரியபோவுது??

Anonymous said...

ஞானி சொன்னவை பல வேறிடங்களில் ஏற்கனவே நடைமுறையிலுள்ளவைதாம்.
இங்கே ஞானி Fine என்றதுதான் பிரச்சினையா? இதையே வேறு நாடுகளில் கட்டணமாக வசூலிக்கிறார்கள். மகிழுந்தில் நால்வர் சென்றால் கட்டும் கட்டணத்தை விட, அதே மகிழுந்தில் இருவர் சென்றால் கட்ட வேண்டிய சாலைக்கட்டணம் இரு மடங்கு. சிங்கப்பூரிலும் இம்முறை உள்ளதென நினைக்கிறேன்.

பொதுப்போக்குவரத்துக்கு மானியம் வழங்கும் யோசனையும் சரியாகவே படுகிறது.

ரவி said...

:)))

நான் மெய்யாலுமே இனிமே சைக்கிள்ல தான் போவப்போறேன்...

ஜானிக்கும் எனக்கு ஜம்பந்தம் இல்லை :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, வாய்ஸ் ஆன் விங்ஸ்.

நன்றி, இப்னு ஹம்துன்.

நன்றி, முரளி கண்ணன்.

நன்றி, மோகன் கந்தசாமி.

நன்றி, லக்கிலுக்.

முகவை மைந்தன், நன்றி.
‘நல்ல' யோசனையா என்பது அல்ல பிரச்சனை. அவரது ஆலோசனைகளில் தெரியும் வன்முறையே என்னை ஆதங்கப்படுத்தியது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, சதுக்கப் பூதம்.

நன்றி, கிருத்திகா. முகவை மைந்தனுக்குச் சொல்லியதே :)

நன்றி, சுகுணா திவாகர்.

நன்றி, அதிஷா.

நன்றி, அறிவன்.

முதல் அனானி... என்னிடம் இருப்பது ஓஸிக் கணிணி இல்லை. முயற்சித்தாலும் யாரும் தரத் தயாராயில்லை :)

கருத்துகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, இரண்டாவது அனானி.

மூன்றாவது அனானி, கூல். இனி இது போன்ற பின்னூட்டங்கள் வெளியிடப்படாது. நீங்கள் வேறு ஏதாவது வேலை செய்யலாம் :)

நன்றி, செந்தழல் ரவி.

Anonymous said...

//மகிழுந்தில் நால்வர் சென்றால் கட்டும் கட்டணத்தை விட, அதே மகிழுந்தில் இருவர் சென்றால் கட்ட வேண்டிய சாலைக்கட்டணம் இரு மடங்கு. சிங்கப்பூரிலும் இம்முறை உள்ளதென நினைக்கிறேன்.//

சிங்கப்பூரில் ஆள் இல்லாம கார் மட்டும் போனாக் கூட கட்ட வேண்டிய சாலைக்கட்டணம் இரு மடங்குதான்