ரொம்ப அழகு

சீறிப் பாயும் மழை அழகு
கழுவி விடப்பட்ட சாலை அழகு
இருளாய் இருக்கும் வானழகு
வெளிச்சங்களைச் சிதறும்
சோடியம் விளக்குகள் அழகு
விளம்பரப் பலகைகளின்
நீல மஞ்சள் பச்சை
பிம்ப பிரதிபலிப்புகள் அழகு
எதிர்ச் சாரியில் விரையும்
ரெயின் கோட் கணவன் அழகு
இடுப்பை அணைத்து
முதுகில் முகம் சாய்த்த மனைவி அழகு
சுருண்டு அபத்தமாய் விழுந்திருக்கும்
கறுப்பு யமாஹா அழகு
ரத்தத்தை உறைய விடாமல்
அடித்துச் செல்லும் நீரழகு
கவிழ்ந்து விழுந்திருப்பவனின்
சிறு கட்டமிட்ட சிகப்புச் சட்டை அழகு
வேகத்தைக் குறைத்து ஒதுங்கி விரையும்
வாகனங்களின் டயர் ஒலி அழகு
அழகு அழகு அழகு

(நண்பர் மோகன் கந்தசாமியின் வலைப்பூவில் வெளியானது)

6 comments:

narsim said...

//கவிழ்ந்து விழுந்திருப்பவனின்
சிறு கட்டமிட்ட சிகப்புச் சட்டை அழகு
வேகத்தைக் குறைத்து ஒதுங்கி விரையும்
வாகனங்களின் டயர் ஒலி அழகு//

எதார்த்தம் முகத்தில் அடிக்கிறது..

//மோகன் கந்தசாமியின் வலைப்பூவில் வெளியானது//

உங்க அடுத்த‌ கவிதை எப்போ குருவே??

நர்சிம்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நர்சிம், நன்றி.

இது நான் எழுதியதுதான். நண்பர் மோகன் கந்தசாமியின் வலைப்பூவில் இரண்டு கவிதைகள் எழுதியிருந்தேன் (அவரது 50வது பதிவிற்காக).

வால்பையன் said...

அபந்தங்களை கூட அழகாய் விவரித்திருக்கிறீர்கள்.

Sridhar V said...

சுந்தர்,

நன்றாக இருக்கிறது. ஆனால் நீங்கள் எழுதியதா என்று ஆச்சரியமாக இருக்கிறது. என்னைப் போன்ற மிடில்கிளாஸ்களுக்கு கூட புரிகிற / பிடிக்கிற கவிதைகள் எழுதுவீர்களா என்ன? :-p

Anonymous said...

Excellent !

குசும்பன் said...

அருமை! (எனக்கே புரியுதுன்னா பார்த்துக்குங்களேன்)