தற்காப்பு

என் அறை எனக்கு முக்கியமானதாய் இருக்கிறது
யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொள்ள வாகானது
வெளியில் பொழியும் பனியிலிருந்தும் மழையிலிருந்தும் காத்து
நான் விரைத்துவிடாமல் வைத்திருக்கிறது இந்த அறை
நண்பர்களே கிடையாது எனக்கு -
அதனால் அவர்களின் வருகை பற்றிய பிரச்சனையில்லை
கடிகாரத்தை உடைத்துப் போட்டு விட்டதால்
நேரம் பற்றிய போதமின்றி
குடித்துக் கொண்டிருக்கலாம்
என்னுடைய உளறல்களை
யாரும் கேட்டுவிடாதபடி
எப்போதும் மூடியிருக்கும் தடித்த கதவு
வசதியான செவ்வக மேஜை
அதன் மேல் சாம்பல் கிண்ணம்
கலைந்து கிடக்கும் படுக்கை விரிப்பில் எப்போது
வேண்டுமானாலும் உறக்கம் பற்றிய கவலையற்று
சுருண்டு கிடக்கலாம்
தூசி படிந்த புத்தகங்கள்
அடுக்கப் பட்டும் கலைந்தும் இருக்கும் அலமாரி
என் அழகையோ அழகின்மையையோ காட்ட
சிறு கண்ணாடிகூட இல்லாத அறையிது
சூரியனைப் பார்க்காத என் உடம்பு
இப்போது வெளிறிப் போகத் துவங்கிவிட்டாலும்
உலகத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள
தேவையாயிருக்கிறது இந்த அறை

என்னுடைய பதில்கள் 5:1

அபாண்டமாகப் பொய் சொல்லியிருக்கிறேன், கயமைத்தனமாக எழுதியிருக்கிறேன் எனத் திரும்பத் திரும்பச் சொல்கிறார் ரோசா. அப்படிச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை ஆனாலும் சொல்லியிருக்கிறேன் என்கிறார்.

விஷயம் வேறு திசைக்குத் திரும்பிவிடாமல் இருக்க, நான் பொய் சொன்னதாக அவர் சொல்லியிருப்பதற்கு (அவரது எழுதியிருக்கும் முதல் ஐந்து பதிவுகளுக்கான) என் பதில் இது. பிரதானமாக பொய் குறித்தும் சமயத்தில் மற்றவை குறித்தும் விளக்குகிறேன் :

இடுகை 1 (கொலைகார கும்பல்கள்) :

இதில் நான் சொன்ன பொய்யாகச் சொல்லியிருப்பது /̀திட்டமிட்டு இருட்டு சந்துக்கு அழைத்து சென்று, கூப்பிட்டு திரும்பியவன்' முகத்தில் விழுந்தது/
இதைப் பொய்யென்று சொல்கிறார். என்னுடைய விளக்கங்கள் :

1. இருட்டு சந்திற்கு அழைத்துச் சென்று என்று நான் சொல்லவேயில்லை. நான் சொல்லாததைச் சொல்லி, நான் அபாண்டமாகப் புளுகுகிறேன் என்றால் என்ன பதில் சொல்ல. என் பதிவில் சொல்லியிருந்தது அவர் என்னை அடித்தது இருட்டான இடத்தில் என்று. பிக்னிக் ஹோட்டலில் இருந்து பூங்கா ரயில்நிலையம் செல்லும் சப் வேவிற்கு முன் ஒரு சின்ன பஸ் நிறுத்துமிடம் இருக்கும். அதை ஒட்டிய இடம் இரவு 9.45 மணி வாக்கில் இருட்டாகத்தான் இருக்கும். இதை யார் வேண்டுமானாலும் உறுதி செய்துகொள்ளலாம். இன்னும் இரண்டு நிமிடங்கள் நடந்திருந்தால் சப் வேயில் அவரும் செண்ட்ரலை நோக்கி நானும் பிரிந்து சென்றிருப்போம்.

2. தோளைத் தொட்டுக் கூப்பிடவில்லை என்கிறார். என் தோளில் ஒரு கை விழுந்த உணர்வு எனக்கிருந்தது. அருகில் அவர் மட்டும்தான் இருந்ததால் அவர்தான் தொட்டிருப்பார் என்று நினைத்தேன். அவர் இல்லை என்கிறார். சரி, அவர் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன் - ஆனால், பிரச்சனையின் மையம் இதுவல்ல. நான் எதிர்பாராத கணத்தில் என்னைத் தாக்கியதுதான். இதை மறுக்கிறாரா என்ன!

ஒரு குத்துதான் என்கிறார். ஒன்றா பத்தா என்பதல்ல பிரச்சனை. கொலைவெறித் தாக்குதலா இல்லையா என்பதுதான். கொலைவெறியோடு தாக்க வேண்டுமென்று தீர்மானித்திருக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் அது கொலைவெறியான தாக்குதலா இல்லையா (ரோசா பதிவைப் படித்ததின் விளைவு இப்படியெல்லாம் எழுதச் சொல்கிறது!) என்பதை அவர் சொல்ல வேண்டும்.

இடுகை 2 (நடந்தவை 1) :

இந்த இடுகையில் நான் பொய் சொன்னாதான ஒரு விவரமும் அவர் தரவில்லை. அதனால் என்னுடைய பதில்கள் எதுவும் இல்லை

இடுகை 3 (பின்னணி) :

1. இதில் நான் பொய் சொன்னதாக எந்த விவரமும் இல்லை. ஆனால் சாரு - கென் - எஸ் எம் எஸ் விஷயம் குறித்து. சாரு என்னைப் பற்றிச் சொல்லவில்லை என்று ஒரு முறைக்கு மேல் அவர் சொன்ன போது அதை மறுக்க, (அப்போதிருந்த) நட்பின் நம்பிக்கையின் அடிப்படையில் நான் சொன்ன விஷயம் இது. நான் பொய் சொல்லவில்லை என்றாலும், இந்த விஷயத்தை இவரிடம் சொன்னதற்கு நிச்சயம் கென் கோபப்படுவார். என்னுடைய பதிவிலேயே தனிப்பட்ட முறையில் இருவர் பேசிக் கொள்வதை அடுத்தவரின் அனுமதியின்றி பொதுவெளியில் வைக்கக்கூடாது என்று சொன்னவர் ரோசா! அந்த நம்பிக்கையில், பிற்காலத்தில் இதை இவர் உபயோகிப்பார் என்று தெரியாமல் நான் சொன்னது இது.

2. சாரு சொல்வது போல் நான் RSS என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேட்டபோது நான் நிச்சயம் இல்லையென்று மறுத்தேன்.

3. டிவிட்டில் இவர் எழுதியதற்குக் காரணம் வாசித்த கடுப்பு. நான் எழுதினால் வசைப்பதிவு. அப்படித்தான் தோன்றும் போல :(

இடுகை 4 (நடந்தவை 2 ) :

அவரும் நானும் தொலைபேசியில் பேசிய விவரங்களை எழுதியிருக்கிறார். பெரிதாக எனக்கு மாற்றுக் கருத்துகளில்லை. ஆனால் புதன்கிழமை அவர் பேசியதாக எழுதியிருக்கும்

/நான் முழுவதும் அதை கேட்காமலேயே, ̀அதனால் பிரச்சனையில்லை' என்றேன். ̀நாளை (வியாழன்) சந்திக்க முடியும்' என்று ஜ்யோவராம் சொன்னார்./

முதலில் நான் விளக்கத் துவங்கியதும் அவர் இடைமறித்து பரவாயில்லை நாளைக்குச் சந்திக்கலாமா என்றுதான் கேட்டார். அவர் மறுக்க மாட்டார் என நம்புகிறேன். புதன்கிழமை அவர் என்னைச் சந்திக்கக் காத்திருந்ததாக அவரே எழுதியிருப்பதால் அவர் மறுத்தாலும், இதைப் படிப்பவர்கள் உணரலாம்.

நான்காவது நாளாக வியாழனன்றும் மாலை 5.45 மணிவாக்கில் தொலைபேசி இன்னும் 1 மணிநேரத்தில் ஹோட்டலுக்கு வந்துவிடுவதாகச் சொன்னார். இது விடுபட்டிருப்பதால் சொல்கிறேன் - மற்றபடி இதற்குப் பெரிய அழுத்தங்களில்லை.

ஆனால் ’விஷயம்’ ரோசா சொல்லியிருக்கும் மிஸ்ட் கால், 20 நிமிடங்களில் அழைத்தல் போன்ற விவரங்களில் இல்லை. மாறாக இதில் முக்கியமானது தொடர்ந்து மூன்று நாட்கள் பேசும்போதும் ரோசாதான் என்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தார் என்பதுதான். சாதாரணமாக எழுதும்போது விருப்பம் தெரிவித்தார் என்று எழுதலாம். ஆனால் அடிபட்டவன் எழுதும்போது சுத்திப் போட்டு அழைத்தார் என்றுதான் எழுதுவான்.

இன்னொன்று அலுவலகத்தில் சந்திக்கத் தயாராயிருந்தேன், வீட்டில் சந்திக்கத் தயாராயிருந்தேன் என்பதெல்லாம் மோசடி. ஏதாவதொரு இடத்தில் சந்திக்கலாம் என்பதில் அலுவலகமும் வீடும் அடக்கம் என்றாலும், அலுவலகத்தில் சந்திக்க விரும்புபவர்கள், அலுவலகத்தில் சந்திக்கலாமா என்றுதான் கேட்பார்களே தவிர எங்காவது சந்திக்கலாமா என்று கேட்க மாட்டார்கள். பல நண்பர்களை அலுவலகத்தில் சந்தித்திருக்கிறேன் -- அப்போதெல்லாம் இப்படித்தான் கேட்டார்கள் :) இன்னொன்று, பிக்னிக் என்று சொன்னதும், அங்கே பார் இருக்கிறதா என்றும் கேட்டுக் கொண்டார் ரோசா. அதை இங்கே கவனமாகத் தவிர்த்திருக்கிறார்.

ஏதாவது ஒரு கட்டத்தில் மறுத்தோ தட்டியோ கழிக்கவில்லை என்கிறார். இதெல்லாம் என்ன மாதிரி வாதம் என்று தெரியவில்லை. அப்போது அவர் என் நண்பராக இருந்தார். நண்பர்கள் தொலைபேசியில் அழைக்கும்போது பேசாமல் இருப்பார்களா என்ன! ஆனால் அதே ரோசாவின் வெள்ளிக் கிழமை காலை அழைப்பை நான் எடுக்கவில்லை. நண்பர்கள் அழைத்தால் பேசுவதும் கூப்பிட்டால் சென்று சந்திப்பதும்தான் எல்லாரும் செய்வது.

இன்னொரு விஷயம் இந்த நயவஞ்சகம் வார்த்தை. ரோசாவே எழுதியது போல் அவர் கோபப் பட்டிருக்கிறார் என்னுடைய பதிவைப் பார்த்ததும். என்னுடன் தொலைபேசியில் பேசும்போது ஒருமுறையாவது அதைக் காட்டினாரா... அல்லது குறைந்த பட்சம் தன்னுடைய எதிர்ப்பையாவது தெரிவித்தாரா. (அதே அவரது டிவிட் குறித்து நான் என்னுடைய எதிர்ப்பைக் காட்டியதை அவரே பதிவு செய்திருக்கிறார் - இதுதான் என்னுடைய நேர்மை). என்னுடைய பதிவைப் பற்றிப் பேசத்தான் அழைக்கிறேன் என்பதைக் கூட அவர் சொல்லவில்லை (பேசக்கூடாது என்பதில்லை, ஆனால் அதற்குத்தான் அழைக்கிறார் என்றுகூடச் சொல்லவில்லை). சாதாரணமான நட்பின் நிமித்தமான அழைப்பு என்றுதான் நான் நினைத்திருந்தேன் (நான் பதிவெழுதி அதற்கு அவர் பதிலும் எழுதிவிட்டார் எனும்போது அவர் பதிவைப் பற்றிப் பேசத்தான் கூப்பிடுகிறார் என்று எனக்குத் தோன்றவேயில்லை). பிறகு நடந்தவற்றைப் பார்த்து எழுதியதுதான் அந்த நயவஞ்சகம் என்ற வார்த்தை.

இப்போது ரோசா சொல்லக்கூடும் : ’ஜ்யோவ் கேட்டிருந்தால் நான் சொல்லியிருப்பேன் இது குறித்துதான் பேசப் போகிறேன் என்று’. ஆனால் நண்பர்கள் ஏதாவது அஜெண்டா இருந்தால் அது குறித்துப் பேசலாம் என்பார்கள். சாதாரணமாக அழைத்தால் அது நட்பின் நிமித்தமான சந்திப்பு என்றுதான் புரிந்து கொள்வார்கள்.

ஏன் எழுதினேன் என்று அந்தப் பதிவிலேயே தெளிவாக விளக்கியிருக்கிறேன். எழுதத் துவங்கியதும் வந்த ஆற்றாமையில் ஒரே மூச்சில் எழுதி ஸ்பெல்லிங் பிழை திருத்தம் கூடச் செய்யப் பிடிக்காமல் பதிவேற்றியது அந்த இடுகை. இதோ இந்த இடுகைகூட நேற்று வரை அவர் எழுதியதைப் படித்து ஒரே மூச்சில் எழுதியதுதான். பத்து நாட்கள் ஆற அமர யோசித்து எழுதப் பட்டதல்ல என்னுடைய அந்த இடுகை. அதனால் ஏதாவது ஒற்றை வார்த்தையைப் பிடித்துக் கொண்டு தொங்குவது சரியாக இருக்காது :)

இடுகை 5 (தண்ணீ) :

அளவாகத்தான் குடித்தார் என்று பதிவில் அல்ல - பின்னூட்டத்தில் சொன்னது. குடிவெறியில் நடந்திருக்கக் கூடும் என்றதற்குச் சொன்ன பதில் அது. ரோசா முதலில் ஒரு பியரும் பிறகு சில விஸ்கிகளும் அருந்தினார் என்று தெரியும். எதிரிலோ அல்லது அருகிலோ அமர்ந்து மது அருந்துபவர்கள் எவ்வளவு குடிக்கிறார்கள் என்பதை நான் பொதுவாகக் கவனிப்பதில்லை - அதனால் ரோசா குடித்த அளவு தெரியாது. தொடர்ந்து மது அருந்தும் பழக்கமுள்ளவர்கள் தாங்கள் குடிக்கும் அளவில் கவனமாக இருப்பார்கள் (போதையின் அளவு கைமீறிப் போய்விடக்கூடாதென்பதற்காக). அதனால் நான் குடித்தது ஆறு பெக் என்பது நினைவில் இருக்கிறது. ரோசாவுடைய நடவடிக்கை (அதாவது பேச்சு, நடை போன்றவை) அவர் குறைவாகக் குடித்திருக்கலாம் என்று தோன்றியது. கலக்கும் குச்சிகள், பெக்கின் விலை போன்றவை எனக்குச் சத்தியமாக நினைவிலில்லை. அதைக்கூட ரோசா தெளிவாகவே நினைவில் வைத்திருக்கிறார் எனும்போது இது குடிவெறியில் நடந்த தாக்குதல் இல்லைதானே.

யாராவது குடித்த அளவையெல்லாமா குறைத்தோ அதிகப் படுத்தியோ சொல்வார்கள். இதற்கெல்லாம் அடுத்தவரை சாட்சியாக அழைக்கத் தேவையில்லை.

இப்போது ரோசா டாக்டர் ப்ரூனோவைச் சாட்சிக்கு அழைக்கிறார். ஒரு வாதத்திற்கு சொல்கிறேன் - சப்போஸ் டாக்டர் ப்ரூனோ ரோசாவைப் பற்றி என்னிடம் ஏதாவது சொல்லியிருந்தால், அது என் தரப்பிற்கு ஆதரவாகவே இருந்தால்கூட நான் அதைப் பொது வெளியில் வைக்க மாட்டேன். இது எனக்கான அறம்.

இப்போதைக்கு அவ்வளவுதான். இன்னும் அஞ்சா! அடப் போங்கப்பா, நான் இந்த ஆட்டத்துக்கு வரலை என மனம் சுணங்கினாலும் பதில் சொல்லிவிடுகிறேன் :)

முதல் ஐந்து இடுகைகளுக்கான என் பதிலை இவ்வாறு தொகுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன் :

1. தொடர்ந்து என்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தது ரோசாதான்

2. நடந்தது கொலைவெறித் தாக்குதல்தான்

3. நான் எதிர்பாராத கணத்தில் என்னைத் தாக்கினார்

4. என்னுடைய இடுகையில் எந்தப் பொய்யும் இல்லை

(இதை வாசிப்பவர்களின் பின்னூட்டங்களைச் சேமித்து வைத்துப் பிறகு வெளியிடுகிறேன்)

எனக்கான அழைப்பு

அதிகாலையில்
ஒலிக்கிறது தொலைபேசி
இழுத்துக் கொண்டிருந்த பெரியப்பாவின் சாவு
நின்று போன வண்டி
மாமா பெண்ணிற்குக் குழந்தை
கலால்துறையின் ரெய்டு
உத்திராபதிக்கு ஹார்ட் அட்டாக்
(சே, எவ்வளவு கேவலமானவண்டா நீ!)
குலுக்கலில் பரிசு
ப்ரீதாவின் கொஞ்சல்
எதுவாகவும் இருக்கலாம்
முக்கியமானது
நிற்பதற்குள் எடுத்துவிட வேண்டும்
தொலைபேசி அழைப்பை
நிற்பதற்குள் நிற்பதற்குள்

இலக்கடைதல்

எப்படி நடப்பது என்பது தெரிவதேயில்லை
ஓவ்வொரு இடமும் ஒவ்வொரு விதம்
குறுகிய தெருவில் எதிர்ப்படுபவருக்கு
விலகி வழிவிட்டால்
வேறொருவர் இடிக்கிறார்
அகன்ற சாலையில் விரையும் வாகனங்களின்
நடுவில் நடப்பது பயமாய் இருக்கிறது
மேடு பள்ளங்களைக் கையாள்வது
சாதாரணமாகவே கடினம் -
மழை நாட்களில் கேட்கவே வேண்டாம்
ஊர்வலத்திற்கெனவும் பேரணிக்கெனவும் வேறு
நடக்க வேண்டும் - வேறு மாதிரியாக
தூரங்களுக்கேற்ற நடை வேகம்
முக்கியமென நண்பர் சொல்கிறார்
எப்படி நடந்து
எப்படி வீடடைவேனோ தெரியவில்லை

(மீள் பதிவு. பழைய பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிக்க : http://jyovramsundar.blogspot.com/2008/05/blog-post_30.html)

ரோசா, விஷம், வன்மம் மற்றும் திடீர்த் தாக்குதல்

திங்கட் கிழமை மாலை ரோசா வசந்த் தொலைபேசியில் அழைத்து ஒரு மாலையில் என்னைச் சந்திக்க வேண்டுமென்றார். அவரை இதற்குமுன் இரண்டு மூன்று முறை - மற்றவர்களுடன் - சந்தித்திருக்கிறேன். சரி என்றேன். ஆனால் சந்திக்க வாய்க்கவில்லை. தொடர்ந்து செவ்வாய்க் கிழமையும் பேசினார். புதன் கிழமை சந்திப்பதாய்ச் சொன்னேன். புதன் கிழமை வேறு வேலையிருந்ததால் முடியவில்லை. மறுபடி புதன் கிழமை இரவு தொலைபேசி அடுத்த நாள் சந்திக்க முடியுமா என்றார். இவ்வளவு தூரம் நம்மைச் சந்திக்க ஒருவர் பிரியப் படும்போது எவ்வளவுதான் தள்ளுவது என்று அடுத்த நாள் - அதாவது நேற்று - செண்ட்ரல் அருகிலிருக்கும் பிக்னிக் ஹோட்டலில் சந்திக்க ஒப்புக் கொண்டேன்.

அவர் தொடர்ந்து இப்படிக் கேட்டது என்னை திட்டமிட்டு கொலைவெறியோடு தாக்கத்தான் என்பது தெரியாது எனக்கு.

நேற்று மாலை 6.45 மணியளவில் சந்தித்தோம். சுமார் 2-1/2 மணிநேரம் பல விஷயங்கள் (தனிப்பட்ட விஷயங்கள் உள்பட) பேசிக் கொண்டிருந்தோம். 9.30 மணிக்கு பில் வரும்போது நான் தான் கொடுப்பேன் என இருவரும் நட்புத் தகராறு செய்ய கடைசியில் ஆளுக்குப் பாதி தருவது என்று முடிவானது. வெளியில் வந்து ஒரு சிகரெட் புகைத்து விட்டுப் பிறகு சந்திக்கலாம் எனச் சொல்லி ஒன்றாக நடக்க ஆரம்பித்தோம். பூங்கா செல்ல அவரும் செண்ட்ரல் செல்ல நானும் திரும்ப வேண்டும்.

ஒரு இருட்டான இடத்தில் என் தோளைத் தொட்டுக் கூப்பிட்டார் ரோசா. லூசு மாதிரி வாகாக முகத்தைத் திருப்பினேன். வலது முஷ்டியை மடக்கித் தயாராக வைத்து இருந்திருப்பார் போல. fraction of a secondல் என் முகத்தில் ஓங்கி விழுந்தது ஒரு குத்து. மூக்கின் மேல் பாகத்தில் பட்டு உடைந்து ரத்தம் கொட்டத் துவங்கியது (நான் ஆஸ்ப்ரின் மாத்திரை தினமும் எடுத்துக் கொள்வதால் அதிக ரத்தப் போக்கு இருந்தது). சில நிமிடங்களுக்கு என்ன ஏது என்று புரியவில்லை. குனிந்து அமர்ந்து விட்டேன். ரத்தம் அது பாட்டிற்கு கொட்டிக் கொண்டே இருந்தது. நான் பயந்து போனேன். அருகிலிருந்த கடையிலிருந்து சிலர் ஓடி வந்து சத்தமாக யார் அடித்தது என்பதைப் போன்று விசாரித்தனர். ரோசாவும் கொட்டிக் கொண்டிருந்த ரத்தத்தைப் பார்த்து பயந்து போனார் (என்று நினைக்கிறேன்).

ஒன்றிரண்டு ஆட்டோ நிற்காமல் செல்ல கிடைத்த ஆட்டோவை நிறுத்தி என்னை ஏற்றினார். எதிரிலிருந்த அரசுப் பொது மருத்துவமனைக்கு வந்தோம். அங்கே கீழே விழுந்ததாகச் சொல்லி அனுமதி கேட்டோம்.

இதற்கு நடுவில் நான் என்னுடைய மனைவியைத் தொலைபேசியில் கூப்பிட்டு அலுவலக நண்பர்களை வரச் சொல்லியிருந்தேன். அவரும் இரண்டு மூன்று நண்பர்களுடன் என்னைப் பார்க்க கிளம்பியிருந்தார்.

ரோசா வளர்மதியைக் கூப்பிட்டார். வளர்மதி பைத்தியக்காரனுக்கு தகவல் தந்தார். பைத்தியக்காரன் டாக்டர் ப்ரூனோவை அழைத்து விவரம் சொல்லியிருக்கிறார். நடுவில் ரோசா சுகுணாவையும் கூப்பிட்டிருக்கிறார்.

என் உடல் முழுவதும் ரத்தமாக இருந்தது. உள்ளங்கைகளில் ரத்தம் காய்ந்து போய் விரல்களைச் சுருக்கி நீட்டவே ஒரு மாதிரியாக இருந்தது. மருத்துவமனையில் அனுமதி கிடைக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது மருத்துவர் ப்ரூனோ வந்து அனுமதி பெற்றுத் தந்தார். நிறைய ரத்தம் வெளியேறியிருந்ததால் கையில் க்ளூக்கோஸும் ஏறிக் கொண்டிருந்தது. ரத்தம் நிற்க என்று நினைக்கிறேன் - ஒரு ஊசி போடப் பட்டது. பிறகு இன்னொரு ஊசியும் போடப்பட்டது.

ரோசாவும் அழுது புலம்பிக் கொண்டிருந்தார் (அல்லது அதுவும் அவரது திட்டத்தின் ஒரு பகுதியா என்று தெரியவில்லை). அலுவலக நண்பர்கள் வருமுன் அசம்பாவிதம் ஏதும் நடக்காமலிருக்க ரோசாவைக் கிளம்பச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன். நண்பர்கள் வரத் துவங்கியதும் அவரும் கிளம்பிச் சென்றுவிட்டார் என நினைக்கிறேன் - அவரைக் காணவில்லை.

மருத்துவரிடம் மறைக்கக் கூடாதே... ப்ரூனோவிடம் நடந்ததைச் சொன்னேன். அப்போது நண்பர்களும் மனைவியும் அருகிலிருந்தனர். வலியாலும் ஏமாற்றப்பட்ட உணர்வாலும் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. நண்பர்கள் கொஞ்சம் கொதித்தாலும், விஷயம் கைமீறிச் செல்லாமல் பார்த்துக் கொண்டேன்.

இரவே டிஸ்சார்ஜ் செய்யச் சொல்லிக் கேட்டேன். மருத்துவர் ப்ரூனோ ஒரு ஸி டி ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்யலாம் என்றார். அதற்குள் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வந்து விசாரிக்கத் துவங்கினார். அவரிடமும் நானேதான் கீழே விழுந்தேன் என்று சொன்னேன். அடியைப் பார்த்தால் கீழே விழுந்த மாதிரி தெரியவில்லை, யார் தாக்கினார்கள் எனச் சொல்லச் சொல்லிக் கேட்டார். நான் சொல்வது உண்மைதானென்று உறுதியாகச் சொன்னேன். நடுவில் ஸ்கேன் செய்யச் சென்றபோது மருத்துவர் ப்ரூனோவிடம் இதைச் சொன்னேன். வெளியில் வந்தால் சிவராமன் ஸ்டேட்மெண்ட் எழுதி ஒரு வழியாக இந்த விஷயம் முடிந்தது.

இரவு 1 மணி வாக்கில் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப் பட்டேன். இன்று ENT மருத்தவரிடம் கலந்தாலோசிக்கச் சொல்லி ப்ரூனோ அறிவுரை சொல்லியிருந்தார். இன்று காலை ENT மருத்துவரைப் பார்த்தேன். வீக்கம் குறைய மாத்திரையும் மூக்கிற்கு dropsம் கொடுத்திருக்கிறார். X Ray மாலையில் எடுக்க வேண்டும். இப்போது மூக்கில் தொட்டால் வலியும் இடது கண்ணின் கீழ் வீக்கமும் இருக்கின்றன. இரண்டு மூன்று நாட்களில் முழுக்கச் சரியாகிவிடுமென்று நம்புகிறேன்.

தொடர்ந்து மூன்று நாட்களாக என்னைச் சுத்திப் போட்டு அழைத்தார். மூன்றாம் நாள் நான் வருவேனோ மாட்டேனோ என்ற சந்தேகம் வந்திருக்கும் போல. நீங்கள் சொல்லும் இடத்திற்கே வருகிறேன் என்றார். இவ்வளவு சொல்லியும் சந்திக்காமலிருந்தால் எப்படி என்று கேணத்தனமாக ரோசா வசந்த் விரித்திருந்த வலையில் விழுந்துவிட்டேன். இதுவரை இப்படி நயவஞ்சகமாக யாரும் என்னிடம் நடந்து கொண்டிராததால் நம்பிவிட்டேன்.

ஒருவனைத் தாக்க வேண்டுமென்றால், அவனை மதுச்சாலைக்குக் கூட்டிச் சென்று போதையேற்றி அடிப்பார்கள் என்று பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். அறிவுஜீவுகள் எனச் சொல்லிக் கொள்பவர்களும் அதைத்தான் செய்கிறார்கள் போலும்.

அரசியல் அறம் தெருப்புழுதி என்று பேசுபவர் ரோசா. ஒருவனை ஏமாற்றி வரவழைத்து, அவனுக்கு போதையேற்றி, அவன் எதிர்பார்க்காமல் இருக்கும் சமயம் அவனை கொலைவெறியோடு அடித்து வீழ்த்துவது எந்த விதத்தில் நேர்மை என்பது எவ்வளவு யோசித்தும் எனக்குப் புரியவில்லை.

இப்போதுதான் இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. நிகழ்ச்சியொன்றை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன் என்னை அவர் வீட்டிற்கு வரச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார் ரோசா. நல்ல வேளையாக அந்த நிகழ்ச்சி வெவ்வேறு காரணங்களால் தள்ளிப் போடப்பட்டு பிறகு நடக்கவேயில்லை. சென்றிருந்தால் எனக்கு உணவில் விஷம் வைத்து கொடுத்தாலும் கொடுத்திருப்பார்.

முடியாத இரவு

முன்பின் தெரியாத ஊரில்
கட்டிங் கட்டிங்காக அரை போத்தல் குடித்துவிட்டேன்
வழக்கம் போல்
போதையில் என் அறை
இருக்குமிடம் மறந்துவிட்டது
சரியாகக் காயாத ஜட்டிகளும் பனியன்களும்
அலங்கோலமாகக் கிடக்கும் அறையது
அருகிலிருக்கும் வைன் ஷாப்பில் நுழைந்து
கட்டிங் ரம் வாங்கினேன்
தண்ணீர் கலந்திருப்பான் போல ராஸ்கல்
இன்னொரு கட்டிங் வோட்கா வாங்கினேன்
பாழாய்ப்போன கடையில் லிம்கா இல்லை
200 மில்லி செவன் அப் ஊற்றிக்
குடித்துக் கொண்டிருக்கையில்
வருகிறாள் என் ஆதர்சக் காதலி
வாயில் எடுத்துக் கொள்ள
200 ரூபாய் கேட்கிறாள்
அவள் அணிந்திருந்த
நைட்டி போன்ற ஆடையிலிருந்து
துர்நாற்றம் வீசுகிறது
தொட்டுக் கொள்ள இருந்த வேர்க்கடலையை
அவளுக்குக் கொடுக்கிறேன்
பைத்தியக்காரனோ அல்லது கொலைகாரனோ
என என்னைப் பயமுடன் பார்க்கிறான் கடைப் பையன்
கடை அடைக்கும் நேரம் வேறு
இப்போது என் அறை ஞாபகம் வர
கடைப் பையனையும்
அவளையும் அங்கேயே விட்டுவிட்டு
தள்ளாடியபடி
என் அறைக்குத் திரும்புகிறேன்
வெளிநாட்டு நண்பன் கொடுத்திருந்த
ஃபிரெஞ்ச் வைன் இருக்கிறது மேசையில்
கொலைகாரக் காதலியுடன் நடனம் ஆடியபடி
மெல்லப் பருகுகிறேன்
சிரித்துக் கொண்டே காதல்
இறந்து போனது

(ப்யூகோவ்ஸ்கியின் கவிதையொன்றை ஒட்டி - மொழிபெயர்ப்பில்லை -எப்போதோ எழுதிவைத்தது; இப்போது பதிவிடுகிறேன்)

நான் வளர்கிறேனே மம்மி - பார்ட் 2

மறுபடியும் ட்விட்டர். மறுபடியும் ரோசா. எனக்கே கொஞ்சம் அலுக்கத்தான் செய்கிறது. ஆனாலும் என்ன செய்ய. கொழுப்பெடுத்த திண்ணை அரட்டைகளை ரோசா நிறுத்துவதாகத் தெரியவில்லை.

ரோசா சமீபத்தில் முன்பின் reference எதுவும் இல்லாமல் கக்கியிருக்கும் வசைகள் :

/(பைத்தியக்காரன்)சிவராமனுக்கு பலரிடம் இருந்த பிரச்சனைதான் என்று நினைத்தேன். 10 வருடத்தில் இப்படி முற்றிப்போகும் என்று எதிர்பார்க்கவில்லை./

/பைத்தியம், பித்துநிலை (கிறுக்குத்தனம் கூட) etc மரியாதைக்குரிய நிலையாக பார்க்கிறேன். இந்த கோட்டிக்காரத்தனம் அதில் சேர்த்தி இல்லை./

நேற்று மாலைதான் இதைப் படித்தேன். எழுந்த கோபத்திற்கு அளவில்லை. கொஞ்சம் சமநிலை வந்தபிறகு இன்று எழுதுகிறேன்.

சரி, அடுத்தவரைப் பற்றி இப்படி 10 வருடங்களில் முற்றிப் போய்விட்டது, கோட்டிக்காரத்தனம் என்று சொல்லும் இவருக்கு கடந்த 10 வருடங்களில் என்ன ஆகியிருக்கலாம் என்று guess செய்து பார்த்தேன்.

1. சில பல முறை ஜப்பான் மற்றும் பிற நாடுகளுக்கு foreign trips
2. திருமணம் மற்றும் அதன் தொடர்ச்சியாக மழலைச் செல்வத்தின் பாபா பிளாக்‌ஷீப் கேட்டு ரசித்தல்
3. வங்கிக் கணக்கில் ஏறும் பூஜ்யங்கள்
4. மிடில் கிளாஸ்களின் ஆதர்சமான double bedroom apartment

(இந்த லிஸ்டில் ஐஐடி / ஐஐஎம், கோல்ட் மெடல் போன்ற விஷயங்களைச் சேர்க்கவில்லை - பிறகு அம்மா / அப்பா சந்தோஷப்படுவார்கள், அக்கா / மாமா கண்களைக் கசக்குவார்கள் என்று ஏதாவது சொல்வார்).

இம்மாதிரியான லௌகீக விஷயங்கள் கூடிவிட்டால் அடுத்தவனை முற்றிப் போய்விட்டது என்று திட்ட முடியும் போல. இதற்கு வேறு பெயரும் உண்டு. கொழுப்பு என்பார்கள். எங்களூரில் ஒரு சொலவடை உண்டு - மடியில் ரெண்டு காசிருந்தால் அசப்பில் நாலு வார்த்தை வரும் என்று. அது வேறு ஞாபகம் வந்து தொலைக்கிறது.

அப்புறம் இவர் பெரிய கலை உள்ளம் கொண்டவராம் -- அதற்காகத்தான் அந்த பைத்தியம், பித்துநிலை (கிறுக்குத்தனம்கூட) etc மரியாதைக்குரிய நிலையாகப் பார்ப்பதாகச் சொல்கிறார். my foot. பைத்தியக்காரத்தனம் என்பது எவ்வளவு பெரிய துன்பம் என்பது அப்படிப்பட்டவர்களோடு வாழ்பவர்களுக்குத்தான் தெரியும். சும்மா ட்விட்டரில் உட்கார்ந்து கொண்டு ஜல்லியடிப்பவர்களுக்கு அதெல்லாம் கொஞ்சம்கூட உணர முடியாது.

எழுத்தில் இருக்கும் பித்து நிலை வேறு - வாழ்க்கையில் அனுபவிக்கும் பைத்தியம் வேறு. இதைப் பற்றியெல்லாம் இவரிடம் பேசிப் பிரயோஜனமேயில்லை. இவர் பாட்டுக்கு மரியாதை செய்து கொண்டிருக்கட்டும்.

இப்படித்தான் சாருவை மூத்திர சந்து எழுத்தாளர் என்று சொல்லியிருந்தார். கூடவே அப்படிப்பட்ட மூத்திர சந்து எழுத்துகளிலும் சில எழுத்துகள் இலக்கியமாகிவிடும் என்ற உளறல் வேறு (இதைப் படித்ததும் எனக்கு ஜெமோ ’பிரம்மராஜன் கவிதை எழுதுவதென்பது குரங்கு டைப் அடிப்பதைப் போன்றது - ஏதாவது ஒரு வரி கவித்துவமாக வந்துவிட வாய்ப்புண்டு’ என்று சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது). சாருவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். வாலை கால்களுக்கிடையில் வைத்து பம்மிக் கொண்டு (வேறொன்றுமில்லை, பின்னால் புண்ணாகிவிட்டது) சென்றவர் இப்போது மறுபடியும் வந்திருக்கிறார். புண் ஆறிவிட்டது போல.

இப்படி எல்லாரைப் பற்றியும் அதிரடித் தீர்ப்பெழுதும் அதிகாரத்தை ரோசாவிற்குக் கொடுத்தது யார்? அவரின் பிரச்சனைதான் என்ன?

அடிப்படையில் ரோசா திருகலான மூளை கொண்டவர். எல்லாவற்றையும் திருகலாகவே புரிந்து கொள்வார். அப்படியிருப்பதால் ஒன்றுமில்லை - ஆனால் தன்னை பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டு அடுத்தவர் மேல் பாய்ந்து பிடுங்குகிறார். அப்போது நாமும் கல்லால் அடித்துத் தொலைய வேண்டியிருக்கிறது.

கொழுப்பு என்று வெறுமனே சொல்லிவிட்டேன். ஆனால் இந்தக் கொழுப்பிற்கு முன்னால் வேறொரு வார்த்தை உண்டு. அதை அவரை நேரில் பார்க்கும்போது சொல்ல வேண்டும் என்பதால் இங்கே தவிர்க்கப்படுகிறது.