விமலாதித்த மாமல்லன்

மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும், நிறைவான கதைகளை எழுதியவர் விமலாதித்த மாமல்லன். மாதத்திற்கு இரண்டு நாவல்கள் இறக்குபவர்களின் pulp எழுத்துகளின் மத்தியில் இவர் பெயர் தெரியாது போனதில் ஆச்சரியமில்லை.

இந்தக் குறிப்புகளை ஓர் அறிமுகம் என்ற அளவில் அணுக வேண்டுகிறேன். இதன் மூலம் யாராவது விமலாதித்த மாமல்லனைத் தேடிப் படிக்க வேண்டுமென்பதே என் அவா.

பெரும்பாலும் சிறு பத்திரிகை சார்ந்த்தே இவரது வெளியீடுகள் இருந்தாலும் எல்லா விதப் பத்திரிகைகளிலும் வெளியாகக் கூடிய எழுத்து நடை இவருடையது. சிக்கலில்லாத தெளிவான மொழியில் கதைகள் இருக்கும்.

முதலில் சு.ரா.வின் காலச்சுவடு சிறப்பு மலரில் இவரது ‘நிழல்' கதையைப் படித்தேன். நாயகனின் பெயர் தகுடு லோம்டே. இந்தப் பெயரே என்னை அக்கதையின்பால் இழுத்தது. சாவகாசமாய் ஆரம்பித்து வேகம் கொள்ளும் கதை. விடிகாலைக் கனவில் கண்டதைப் போல் அன்றிரவு யாரோ முகம் தெரியாத ஒருவன் கத்தியால் குத்த மாண்டு போவான் லோம்டே.

பிறகு புதிய பார்வை, சுபமங்களா என அவர் பெயர் பார்த்து கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். தொகுப்புகளைத் தேடியதில், மூன்று வந்திருப்பதாகத் தெரிந்தது : முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள், அறியாத முகம் & உயிர்த்தெழுதல். இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள் கிடைத்தன. இப்போது புத்தக அலமாரியில் எவ்வளவு தேடியும் அறியாத முகம் கிடைக்கவில்லை. :)

உயிர்த்தெழுதல் தொகுதியில் மொத்தம் ஏழு கதைகள் உள்ளன. நீள் கதையான நிழலில் துவங்கி ஒளியில் முடிகிறது தொகுப்பு.

இவர் கதைகளில் வரும் சில பெயர்கள் தகுடு லோம்டே, லச்சு, டம்போ, கஸ்ஸு, சூர்ய நாரயண ராவ், சி.ஆர்.சலபதி ராவ் (நிறைய ராவ்கள் வருகிறார்கள்).

குல்லா ஒரு வித்தியாசமான கதை. சூர்ய நாராயண ராவ் பெரிய பதவியில் (உதவி அதி உயர் அதிகாரி) இருப்பவர். பதவியின் முன் இருக்கும் உதவி என்பது அவருக்கு உறுத்துகிறது. மேல் பதவியை அடைய மந்திரவாதியிடம் சென்று குட்டிச் சாத்தானை வசியப் படுத்தும் உபாயத்தைக் கற்றுக் கொள்கிறார்.

தலைநகருக்கு மாற்றலாகிறது. குட்டிச் சாத்தானுக்காக ஒரு கொழுத்த தேவாங்கை ஒருவனிடம் வாங்கி வீட்டிற்கு வருகிறார். அதைப் பார்த்து குதூகலிக்கும் மனைவியிடம் விபரம் சொல்லாமல் அலமாரியில் தேவாங்கை வைக்கிறார்.

நல்ல நாள் பார்த்து, பொரி, பானை என அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். மாட்டு மந்தையின் முதல் மாட்டின் கொம்புகளுக்கு இடையில் குல்லா; அதன் கீழ் குட்டிச் சாத்தான். குல்லாவில் எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார். குட்டிச் சாத்தான் கீழே குதிக்கிறது. பொரியை விசிறியபடி ஓடத் துவங்குகிறார். பொரிக்கும் ஆசை, குல்லாவிற்கும் ஆசை - பொரியைப் பொறுக்கித் தின்றபடி அவரைத் துறத்துகிறது குட்டிச் சாத்தான். வீட்டை அடைந்து, அலமாரியில் இருந்து கண்ணிமைக்கும் நேரம் தேவாங்கை அதனிடம் காட்டி பின்புறம் மறைத்துக் கொள்கிறார். தேவாங்கைத் தரச் சொல்லிக் குட்டிச் சாத்தான் கெஞ்சுகிறது. தனக்கு அடிமையாய் இருக்க சத்தியம் வாங்கிக் கொண்டு தேவாங்கைக் கொடுக்கிறார். தேவாங்கை வாங்கிய குட்டிச் சாத்தான் அவரை ஓங்கி அறைகிறது; ஏனெனில் வெறும் தேவாங்கின் தோல் மட்டுமே இருக்கிறது - உள்ளே வெறும் வைக்கோல். கறியன்பு கொண்ட மனைவியால் வந்தது வினை. அது அவருக்குச் சாபமிடுகிறது.

அன்று முதல் சாவு ஊர்வலம் வந்தால் இடம் பொருள் பார்க்காமல் கோட் சூட் சகிதம் ரோட்டில் இறைந்து கிடைக்கும் பொரியைப் பொறுக்கித் தின்னத் துவங்குகிறார்...

புள்ளிகள் மிக நெகிழ்ச்சியான கதை.

உயிர்த்தெழுதல் மிக முக்கியமான கதை. இதை விமலாதித்த மாமல்லனின் மாஸ்டர் பீஸ் என்று கூடச் சொல்லலாம். பறவை ஒன்றை எடுத்து வளர்க்கிறான் நரசிம்மன். அது சிறிது காலம் பறக்காததால், அது இறந்து விட்டது என வீடு தீர்மானிக்கும். அவனுக்கு அழுகையாய் வரும். அது நிச்சயம் ஒரு நாள் பறக்கும் எனத் திடமாய் நம்புவான். வெளியூரில் இருந்து வந்த உறவுக் காரப் பையன் சோதிட ரீதியாக அலசி, அதன் ஆயுட் காலம் முடிந்து விட்டது; பறப்பதல்ல, இன்னும் அது அழுகாமல் இருப்பதே பெரிய அதிசயம் என்பான். நரசிம்மன் பறவையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டகல்வான்.

மனநல மருத்துவரைப் (டாக்டர் ருத்ரன்.?) பார்ப்பான். அவர் ஆதுரமாகப் பேசி, அதற்கு மருந்து போட்டு, நிச்சயம் பறக்கும் எனச் சொல்வார். பக்கத்து வீட்டிற்கு வரும் பாவாவிடம் வணங்கி அவரிடம் பறவையைக் கொடுப்பான். அவர் மந்திரம் ஓதி ஆண்டவன் விருப்பம் இருந்தால் அது பறக்கும் எனச் சொல்வார்.

வீட்டிற்குத் திரும்பினால் ஏன் அதை மீண்டும் எடுத்து வந்தாயென கத்துவார்கள். அவனிடமிருந்து அந்தப் பறவையைப் பிடுங்கி ரோட்டில் வீசுவார்கள். அவன் அலறியபடி வெளியில் பாய்வான்.

சரியாகத் தரைக்கு அரை ஜான் இருக்கையில் அது மேலெழும்பும். அவன் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு மேல் நோக்கிப் பறக்கத் துவங்கும் பறவை. கதையின் கடைசி வரிகளைக் கீழே தருகிறேன்.

கண்களில் ஊற்றெடுத்த கண்ணீர் நரசிம்மனின் கன்னங்களில் நன்றி கூறிக் கொண்டு வழிந்த படி இருந்தது மருத்துவருக்கும் பாவாவுக்கும்.

பிஸ்மில்லா ஹிர்ரம்ஹான் நிர்ரஹீம்.

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அவனே அல்லாவாகிய ஆண்டவன்.

எல்லையற்ற வெளியில் எழுதிக் காட்டுவதைப் போல, இரண்டாய் இருபதாய் இருநூறாய்த் தோற்றம் கட்டியபடி கட்டற்ற வானத்தில் பறந்து கொண்டு இருக்கிறது பறவை.

லேசான சுயசரிதைத் தன்மை கொண்டது மேலே உள்ள கதை. எழுதத் துவங்கிய பின் சில காலம் எழுதாமல் இருந்தார் விமலாதித்த மாமல்லன். அப்போதைய அவரது தவிப்பை வெளிப் படுத்தும் கதையாக இதை வாசிக்கலாம்.

இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதாமல் இருப்பது ஒரு வகையில் தமிழ்ப் புனைவுலகிற்கு நஷ்டமே. சுந்தர ராமசாமி ஓர் இடத்தில் சொன்னதைப் போல் முதல் தர எழுத்தாளர்கள் சோம்பேறிகளாகவும், மூன்றாந்தர எழுத்தாளர்கல் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கிம் சூழலில் இருக்கிறோம். (முதல் தரம் மூன்றாம் தரம் என்பதில் சில மாறுபாடுகள் இருந்த போதும் அவரது இக்கருத்தை ஏற்றுக் கொள்ளவே வேண்டியிருக்கிறது).

விமலாதித்த மாமல்லனைப் பற்றியோ அல்லது அவரது எழுத்துகளைப் பற்றியோ மேலதிகத் தகவல் தெரிந்தவர்கள் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.

(ஜனவரி 2008ல் எழுதிய இடுகை - http://jyovramsundar.blogspot.com/2008/01/blog-post_21.html. இப்போது விமலாதித்த மாமல்லன் இணையத்தில் எழுதத் துவங்கியுள்ளார். அவரது வலைப்பதிவு முகவரி : http://madrasdada.blogspot.com)

14 comments:

Mohan said...

அறிமுகத்திற்கு மிக்க நன்றி!

கென் said...

தேவையான பதிவு சுந்தர் , நன்றிகள்

ராம்ஜி_யாஹூ said...

see this website when u get time-

http://www.lisindia.net/tamil/tamil_lite.html

VIMALADITA MAMALLAN

He explains to his readers what death is. It is natural and it is just like changing the dress of the soul. His story collections are Ariyatha Mugtrangal, Mudavan valartha vellai purakkal and Veirtheluthal. He is of the opinion that death should always be natural.

rajasundararajan said...

//விமலாதித்த மாமல்லனைப் பற்றியோ அல்லது அவரது எழுத்துகளைப் பற்றியோ மேலதிகத் தகவல் தெரிந்தவர்கள் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.//

ராஜசுந்தரராஜனிடம் இருந்து காஃப்காவின் 'Metamorphosis' புத்தகத்தை எடுத்துக்கொண்டு போனார்; திருப்பித் தரவில்லை.

வால்பையன் said...

சேமிச்சிடுறேன் தல!

மர்ம வீரன் said...

//பிஸ்மில்லா ஹிர்ரம்ஹான் நிர்ரஹீம்.//

இந்த வாக்கியத்திற்க்கு பதிலாக, அவர் பகவத் கீதையில் இருந்து ஒரு வாக்கியம் கூறியிருந்தால், அவர் ஒரு நல்ல எழுத்தாளனாக இருந்திருக்க மாட்டார் அல்லவா?

CS. Mohan Kumar said...

//சுந்தர ராமசாமி ஓர் இடத்தில் சொன்னதைப் போல் முதல் தர எழுத்தாளர்கள் சோம்பேறிகளாகவும், மூன்றாந்தர எழுத்தாளர்கல் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கிம் சூழலில் இருக்கிறோம்.//

:))

பா.ராஜாராம் said...

அறிமுகத்திற்கு நன்றி சுந்தரா!

rajasundararajan said...

//விமலாதித்த மாமல்லனைப் பற்றியோ அல்லது அவரது எழுத்துகளைப் பற்றியோ மேலதிகத் தகவல் தெரிந்தவர்கள் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.//

ராஜசுந்தரராஜனிடம் இருந்து காஃப்காவின் 'Metamorphosis' புத்தகத்தை எடுத்துக்கொண்டு போனார்; திருப்பித் தரவில்லை.//


:-))

sivaaa said...

// இலக்கிய உலகில் உச்சங்களை எட்டுவார்கள் என்று நான் பொறாமையுடன் நம்பிய நண்பர்கள் மூவர்: பாதசாரி, விமலாதித்த மாமல்லன், சேஷய்யா ரவி.அவர்கள் தொடர்ந்து இயங்காமற் போனதில் எனக்குள் விழுந்த ஏமாற்றப்பள்ளம் அப்படியே இருக்கிறது.//

மேற்க்கண்ட கூற்று கவிஞர் திரு.சுகுமாரன் ஒரு முறை தெரிவித்ததாகும்.

Ahamed irshad said...

தேவையான பதிவு..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மோகன், கென், ராம்ஜி யாஹு, ராஜசுந்தர்ராஜன், வால்பையன், மர்மவீரன், மோகன் குமார், பா ராஜாராம், சிவா, அஹமது இர்ஷாத்... நன்றி.

ambi said...

சுந்தர், பாருங்க நீங்களே ஒத்துக்கிட்டீங்க.

இப்ப சொல்லுங்க:

விமலாதித்த மாமல்லன் பெரிசா இல்ல... :)))

pichaikaaran said...

"முதல் தர எழுத்தாளர்கள் சோம்பேறிகளாகவும், மூன்றாந்தர எழுத்தாளர்கல் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கிம் சூழலில் இருக்கிறோம்"

இப்படி ஒட்டு மொத்தமாக சொல்வது தவறு.. சுறு சுறுப்பாக செயல்படும் முதல் தர எழுத்தாளர்களை இது அசிங்கப்படுத்துகிறது...

மற்றபடி நல்ல பதிவு,.,, நன்றி

Anonymous said...

3 ஆதார குணங்களும் எஸ்ரா ஜெமோ சுந்தரராமசாமி சாரு ஆகியோரும்

http://ramasamydemo.blogspot.com/2010/09/3.html