நண்பர் யாத்ராவின் இந்த நூலைப் பற்றி முதலில் சொல்ல வேண்டியது நூலாக்கம். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. நான் இதுவரை பார்த்த அகநாழிகை வெளியீடுகளிலேயே இதுதான் சிறந்தது என்பேன். அட்டைப்படம், அச்சாகியிருக்கும் முறை, கவிதைகளின் வரிசைக் கிரமம் என நிறையச் சொல்லலாம். பதிப்பாளர் ஒரு கவிஞராகவும் இருப்பதால் இது சாத்தியமாகியுள்ளது போல. + வாசுவுக்கும் யாத்ராமீதும், அவரது கவிதைகள் மீதும் மிகுந்த பிரியமுண்டு என்று தோன்றுகிறது. வாசுதேவனுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.
பதிப்பாளர் கவிஞராய் இருப்பதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. பின்னட்டை வாசகங்களைப் பாருங்கள் : காற்றை எட்டி உதைத்து விளையாடும் குழந்தையின் அறியாமையோடு, பித்தேறிய மனதோடு, பிராயத்தின் பிரியங்களோடு, வாழ்க்கையின் முரண்களோடு என எல்லா நிகழ்வுகளையும் ஆதார மையமாக்கி இணையிணை காட்சிகளாக நிகழ்த்திச் செல்கின்றன யாத்ராவின் கவிதைகள். ஸ்ஸ்ஸ்யப்பா! இந்த மாதிரி வரிகள் எனக்கு அலர்ஜி. அது இருக்கட்டும், ஆனால் இந்த இணையிணை காட்சிகள் அப்படிங்கற வார்த்தை நம்மை எப்படி மயக்குகிறது பாருங்கள். நல்ல பின்னட்டை வாசகங்கள். முடித்துவிட்டு, புத்தகத்தைத் திறந்தால், முதல் கவிதையே பின்னால் வரப் போவதற்கான கட்டியம் சொல்லிவிடுகிறது :
தண்ணீரில்
தன் பிம்பம்
தழுவுதல்
தற்கொலையா
அழைக்கும் பிம்பம்னு தலைப்பு வைத்திருக்கிறார். முதல் கவிதைலயே ஒரு அதிர்ச்சி கொடுத்துவிடுகிறார். இதை வாசிக்கும்போது எனக்கு கிணற்று நீர், ஆத்மாநாம் எல்லாம் ஞாபகம் வந்தது. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்த கவிதை இது.
இணையத்தில் பொருட்படுத்தக்கூடிய கவிஞர்கள் நிறைய பேர் ஒரே மாதிரியான விஷயங்களைத்தான் எழுதுகிறார்கள். தனிமை, பிரிவு, சோகம் இத்தியாதிகள். யாத்ராவும் இதற்கு விதிவிலக்கில்லை. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதில் எனக்கு முக்கியமாகிறார்.
அப்படியும் ஒரேயடியாக ஒரே மாதிரிக் கவிதைகள் என்றும் சொல்லிவிட முடியாது. உதாரணத்திற்கு அதீத கற்பனையாக வரும் ஒரு பொழுதில் கவிதை (http://yathrigan-yathra.blogspot.com/2009/08/blog-post.html).
பட்டியல் போடும் கவிதைகள் கிட்டத்தட்ட எல்லாக் கவிஞர்களும் எழுதியிருப்பார்கள். நகுலனோட உண்ணூனிப் பிள்ளைக்குக் கண்வலி, கேசவ மாதவன் ஊரில் இல்லை, சிவனைப் பற்றித் தகவல் கிடைக்கவில்லை என்பது மாதிரி வரிசையாக அடுக்கிக்கொண்டே போகும் கவிதைகளை ஒரு வசதிக்காகப் பட்டியல் கவிதைகள் என்கிறேன். நம் யாத்ராவும் அதை முயற்சி செய்திருக்கிறார். இந்தப் பட்டியல் கவிதையில் முக்கியமான அம்சம் என்பது கடைசி வரிகளில் வரும் திருப்பம். அது சரியா வந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு இந்த நகுலனோட கவிதையை கடைசி வரி, வெயிலில் வண்ணாத்திப் பூச்சிகள் பறந்து கொண்டிருக்கின்றன அப்படின்னு முடிப்பார். மனுஷ்யபுத்திரனோட பிரபலமான கால்களின் ஆல்பம் இன்னொரு சிறந்த உதாரணம். நடனம் ஆடுபவரின் கால்கள், கால்பந்து ஆடுபவரின் கால்கள் அப்படின்னு வரிசையா சொல்லிகிட்டே போய்க் கடைசில ‘யாருக்கும் தெரியாமல் மறைத்துவிடுவேன் என் போலியோ கால்களை’ன்னு முடிச்சிருப்பார்.
யாத்ரோவோட அந்த மாதிரியான கவிதைகளில் வெற்றியடைந்ததாகத் தோன்றுவது : மயிர் கவிதை. வரிசையா விதம் விதமான மயிர்களை, கூந்தல்களை விவரித்துக் கொண்டே போகும் கவிதை கடைசியில் போடா மயிரு செருப்பு பிஞ்சிடும்னு முடிஞ்சிருக்கும். நல்ல திருப்பம். அதனாலேயே இது வெற்றியாகிறது. ஆனால், இவருடைய இன்னொரு பட்டியல் கவிதையான எங்கெங்கோ தோல்வி முயற்சியாத்தான் தெரிகிறது. ஒவ்வொருத்தி பெயரா சொல்லி, அவ அங்க இருக்கா, இவ இங்க இருக்கா எனச் சொல்லிச் செல்லும்போதே கடைசியில் தன்னோட காதலியைப் பத்திதான் சொல்லப் போகிறாரெனத் தெரிந்து விடுகிறது. இவரும் அதே மாதிரி பார்கவி எங்க இருப்பாளோன்னு முடித்திருக்கிறார்.
கடைசிக் கவிதையான எப்படி இருக்கீங்க? (http://yathrigan-yathra.blogspot.com/2010/07/blog-post.html) கவிதையையெல்லாம் நான் கொண்டாடுவேன். அந்தக் கவிதை பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த அளவுக்குப் பிடித்து விட்டது. அவருடைய பதிவில் அந்தக் கவிதை வந்தபோது கூட நான் எதுவும் பின்னூட்டம் போடவில்லை மிகப் பெரிய பாதிப்பை அது எனக்கு ஏற்படுத்தியது. போலவே சாவைப் பற்றிப் பேசும் இவருடைய கவிதையான சாசனம் http://yathrigan-yathra.blogspot.com/2009/04/blog-post_21.html).
பாராட்ட, மகிழ, கொண்டாட நிறைய கவிதைகள் இருக்கின்றன இந்தத் தொகுப்பில். T Shirtற்கு தேனீர்ச்சட்டை, கவிதை தர்க்கத்திற்குள் அடங்க மறுக்கும் ‘இவள்’ கவிதை மாதிரியான ஒன்றிரண்டு தடுமாற்றங்களும் உண்டு. ஆனால் பெரும்பாலும், மன நிறைவைத் தரும் கவிதைகள்தான்.
இந்தக் கவிதைகள் அவை எழுதப் பட்ட காலத்திலேயே வலைப்பதிவில் வாசித்திருக்கிறேன். ஆனால் அதற்கும், முழுத் தொகுப்பாக இப்போது படிப்பதற்குமான மனப் பதிவு வேறு மாதிரியா இருக்கு.
மிகப் பிரியமான மனுஷன் யாத்ரா. அவருடைய கவிதைகள் தொகுப்பாக வருவது மன மகிழ்ச்சியைத் தருகிறது. 80 பக்கங்கள் கொண்ட, நேர்த்தியான அச்சமைப்பு, அழகான அட்டை உடைய புத்தகத்திற்கு வெறும் 60 ரூபாய்தான் விலை வைத்திருக்கிறார்கள். நண்பர்களை இவரது கவிதைத் தொகுதியை வாங்கிப் படிக்கும்படி பரிந்துரைக்கிறேன்.
நன்றி.
(29/12/2010 அன்று யாத்ராவின் ’மயிரு’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசியது).
கார்காலக் குறிப்புகள் - 52
1 week ago
17 comments:
அருமையான விமர்சனம்/ பார்வை/ பகிர்வு!
வாழ்த்துகள் செந்தில்! நன்றி சுந்தரா!
யாத்ராவை பதிவுலகில் நிறைய பேருக்கு அறிமுகம் செய்து வைத்ததிலிருந்து இன்று தொகுப்பு வெளியீட்டில் பேசும் வரை அவர் வளர்ச்சியில் உங்கள் பங்கும் இருக்கு ஜ்யோவ். யாத்ராவைப் பார்த்தால் நிறைய பெருமையாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கு. வாழ்த்துகள் யாத்ரா.
அனுஜன்யா
மகிழ்ச்சி.
வாழ்த்துகள் யாத்ரா.
அட்டைப்படம் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.
யாத்ராவுக்கு வாழ்த்துக்கள்!
என்ன! புக்குக்கு நமக்கு சம்மந்தமில்லாத பேரை வெச்சி நம்மை டீஸ்ஸ்ஸ் செய்யிறாங்க:))) இருந்துட்டு போகட்டும்:)))
புத்தகத்தின் முதல் பிரதியை வாங்கிக்கொண்டது நீங்கள் தான் போல...வாங்கிய பிறகு...
"உங்கள் மயிரு" என் கையில் என்று ஒரு பஞ்ச் டயலாக் சொல்லியிருந்தா எப்படியிருந்திருக்கும்:)))
:)
சிறப்பான விமர்சனம்.
நல்லதொரு அறிமுக உரை.
நன்றி சுந்தர்.
வாங்கி வாசிக்கத் தூண்டும் பகிர்வு
வாழ்த்துகள் யாத்ரா.
ரொம்ப நன்றி சார், நேற்றைய பொழுது மிகுந்த மகிழ்வுடனும் நெகிழ்வுடனும் இருந்தது, வாழ்த்தும் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி
சிறப்பான அறிமுக உரைக்கும், அன்பிற்கும் நன்றி சுந்தர்.
- பொன். வாசுதேவன்
274தானே? வாங்கிட்றேன்! :)
ராஜாராம், அனுஜன்யா, நர்சிம், குசும்பன், அஷோக், டாக்டர் முருகானந்தன், செல்வராஜ் ஜெகதீசன், செல்வேந்திரன், மோகன்குமார், யாத்ரா, வாசுதேவன், லதாமகன்... நன்றி.
மேலே எழுதிய விமர்சன கட்டுரையை நீங்கள் மேடையில் பூர்ணம்விஸ்வநாதன் மாதிரி இல்லாமல் தெளிவாக பேசியிருந்தால் நீங்கள் ஒரு சிறந்த மேடை பேச்சாளரும் கூட....
நல்லா இருக்கு விமர்சனம்..
அன்புடன்
அபிஅப்பா
அபி அப்பா, நன்றி. ஆனால் பேசும்போது பயங்கரமாகச் சொதப்பினேன். இதுதான் முதல் முறையாகக் கூட்டத்தில் பேசுவது.
migasariyana vimarsanam.
hari
Post a Comment