பீடி / சிகரெட் பிடிப்பது தொடர்பாக சில விஷயங்கள்

சிங்மங்களூர் பீடியை
இண்டியன் ஃபில்டர் கிங்ஸென
எப்போதும் கேட்பான் பட்டக்கல்
காஜா பீடியைப் பிடிக்கவே ஆசைப்படுவான் உமாபதி
கணேஷ் பீடி பிடிப்பதற்குச் சும்மா இருக்கலாம்
செய்யது பீடி இழுக்கவே கடினமாயிருக்கும்
(அடிக்கடி அணைந்தும் தொலையும்)
வாசுவும் சீனியும் பிடிப்பது கோல்ட் பிளேக்தான்
கோல்ட் பிளேக் கிங்ஸே பலவருடங்களாக நான்பிடிப்பது
அக்கா வீட்டுக்காரர் கொடுத்துச் சென்ற ஃபாரின் சிகரெட்
அப்படியே தூங்குகிறது அலமாரியில்
கடற்கரை காற்றிலும் அனாயசமாக சிகரெட்
பற்ற வைக்கும் செந்தில்
சட்டம் போட்டதால் தயங்குகிறான்
சிகரெட்டுக்குள் கஞ்சா வைத்து இழுப்பான் சங்கர்
சுவர்க்கோழிகளும் தவளைகளும்
இரைச்சலிடுகின்றன மழைநாட்களில்

பாம்பும் தவளையும்

அலறல் சத்தம் கேட்டு
திடுக்கிட்டு எழுந்தவன்
தேடத் துவங்கினேன்
மழைக்கால இரவில்
அறையில் படுத்திருந்தவன் பார்த்திருந்த
மொழ மொழவென
தரையில் வழுக்கிச் செல்லும் பாம்பை

அதைப் பார்க்கும் ஆவலில்
கதைவைத் திறந்தவன்
பார்வையில் படும்

ஈர மணலில்
தாவிச் செல்லும்
தவளையின் கால்பாதம்

புணர்ச்சி சலித்து ஒதுங்கியவன்

பலநாட்கள் கழித்து சந்தித்தேன்
பழைய காதலியை
இடுப்பசைத்து நடனமாடி அவள்
சூடேற்றினாள்
கன்னக் கதுப்பை தொட்டுத் தடவி

குதூகலமாகவே கழிந்த இரவில்
சரியாகச் செய்தோமோ என
மனம் அல்லாடிக் கொண்டிருக்க
புரண்டு படுத்து
உறங்கத் துவங்கியவள்

கைகொட்டிச் சிரிக்கிறாள்
கனவில்

பழக்கம்

பேனா பிடிக்கக் கற்றுக் கொண்ட
நாள் முதலாய் வரைந்து கொண்டிருக்கிறேன்
பெட்டிகள்
மையெடுக்காமல்
கோடுகளை இணைத்து
சதுரமாய்
நீள் சதுரமாய்
செவ்வகமாயும்கூட
வண்ணம் நிரப்பியும் நிரப்பாமலும்
நிரப்பியதாய் நினைத்துக் கொண்டும்
நிரப்ப மறந்து போயும்

சில சமயம் வெறுங்கையில் காற்றில்

போதையில்
ஆங்காரத்தில்
பெட்டிகளை உடைத்துவிடுவதும்