இரண்டு

(1)


கல்பனா இளவரசி மாதிரியே இருப்பாடா
என்றான் சினிமாவில் இளவரசியைப் பார்த்த இவன்
பல வருடங்களுக்கு முன் தொலைத்த
கல்பனா பற்றிய தகவல்களுக்குப் பதில்
இளவரசியைப் பற்றிய தகவல்களை
இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன் இப்போது

(2)

ஆனந்த குமார் மகேஷ் என்ற பெயரை
ஆனந்த் எனலாம்
மகேஷ் எனலாம்
குமார் எனலாம்
ஆனால்
நான்கு பெக்குகளுக்குப் பிறகு
மழுமழுவென்ற இவன் கன்னம் தடவி
ஆனந்தி
என நண்பன் உளறலாய்க் கூப்பிடும்போது
சிலிர்க்கிறது இவனுக்கு

தமிழக மீனவர்களைக் காக்க கையெழுத்திடுங்கள்

Dear Friends,

I have just read and signed the online petition:

"Save Tamilnadu Fishermen"

hosted on the web by PetitionOnline.com, the free online petition
service, at:

http://www.PetitionOnline.com/TNfisher/

I personally agree with what this petition says, and I think you might
agree, too. If you can spare a moment, please take a look, and consider
signing yourself.

Best wishes,

Jyovram Sundar


ஒரு நண்பர் 1 லட்சம் கையெழுத்திருந்தால் இந்தப் பிரச்சனையைக் கொண்டு போய்ச் சேர்க்க  வேண்டியவர்களிடம் சேர்ப்பேன் என்றிருக்கிறார்.  எதாவது நடக்காதா என்ற நப்பாசைதான்.  இந்த இடுகையைப் படிக்கும் அனைவரையும் கையெழுத்திடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மயிரு

நண்பர் யாத்ராவின் இந்த நூலைப் பற்றி முதலில் சொல்ல வேண்டியது நூலாக்கம்.  மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.  நான் இதுவரை பார்த்த அகநாழிகை வெளியீடுகளிலேயே இதுதான் சிறந்தது என்பேன்.  அட்டைப்படம், அச்சாகியிருக்கும் முறை, கவிதைகளின் வரிசைக் கிரமம் என நிறையச் சொல்லலாம்.  பதிப்பாளர் ஒரு கவிஞராகவும் இருப்பதால் இது சாத்தியமாகியுள்ளது போல. + வாசுவுக்கும் யாத்ராமீதும், அவரது கவிதைகள் மீதும் மிகுந்த பிரியமுண்டு என்று தோன்றுகிறது.  வாசுதேவனுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

பதிப்பாளர் கவிஞராய் இருப்பதில் சில சிக்கல்களும் இருக்கின்றன.  பின்னட்டை வாசகங்களைப் பாருங்கள் : காற்றை எட்டி உதைத்து விளையாடும் குழந்தையின் அறியாமையோடு, பித்தேறிய மனதோடு, பிராயத்தின் பிரியங்களோடு, வாழ்க்கையின் முரண்களோடு என எல்லா நிகழ்வுகளையும் ஆதார மையமாக்கி இணையிணை காட்சிகளாக நிகழ்த்திச் செல்கின்றன யாத்ராவின் கவிதைகள்.  ஸ்ஸ்ஸ்யப்பா! இந்த மாதிரி வரிகள் எனக்கு அலர்ஜி. அது இருக்கட்டும், ஆனால் இந்த இணையிணை காட்சிகள் அப்படிங்கற வார்த்தை நம்மை எப்படி மயக்குகிறது பாருங்கள். நல்ல பின்னட்டை வாசகங்கள். முடித்துவிட்டு, புத்தகத்தைத் திறந்தால், முதல் கவிதையே பின்னால் வரப் போவதற்கான கட்டியம் சொல்லிவிடுகிறது :

தண்ணீரில்
தன் பிம்பம்
தழுவுதல்
தற்கொலையா

அழைக்கும் பிம்பம்னு தலைப்பு வைத்திருக்கிறார்.  முதல் கவிதைலயே ஒரு அதிர்ச்சி கொடுத்துவிடுகிறார்.  இதை வாசிக்கும்போது எனக்கு கிணற்று நீர், ஆத்மாநாம் எல்லாம் ஞாபகம் வந்தது. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்த கவிதை இது.

இணையத்தில் பொருட்படுத்தக்கூடிய கவிஞர்கள் நிறைய பேர் ஒரே மாதிரியான விஷயங்களைத்தான் எழுதுகிறார்கள்.  தனிமை, பிரிவு, சோகம் இத்தியாதிகள்.  யாத்ராவும் இதற்கு விதிவிலக்கில்லை. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதில் எனக்கு முக்கியமாகிறார்.

அப்படியும் ஒரேயடியாக ஒரே மாதிரிக் கவிதைகள் என்றும் சொல்லிவிட முடியாது. உதாரணத்திற்கு அதீத கற்பனையாக வரும் ஒரு பொழுதில் கவிதை (http://yathrigan-yathra.blogspot.com/2009/08/blog-post.html).

பட்டியல் போடும் கவிதைகள் கிட்டத்தட்ட எல்லாக் கவிஞர்களும் எழுதியிருப்பார்கள்.  நகுலனோட உண்ணூனிப் பிள்ளைக்குக் கண்வலி, கேசவ மாதவன் ஊரில் இல்லை, சிவனைப் பற்றித் தகவல் கிடைக்கவில்லை என்பது மாதிரி வரிசையாக அடுக்கிக்கொண்டே போகும் கவிதைகளை ஒரு வசதிக்காகப் பட்டியல் கவிதைகள் என்கிறேன். நம் யாத்ராவும் அதை முயற்சி செய்திருக்கிறார். இந்தப் பட்டியல் கவிதையில் முக்கியமான அம்சம் என்பது கடைசி வரிகளில் வரும் திருப்பம். அது சரியா வந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு இந்த நகுலனோட கவிதையை கடைசி வரி, வெயிலில் வண்ணாத்திப் பூச்சிகள் பறந்து கொண்டிருக்கின்றன அப்படின்னு முடிப்பார். மனுஷ்யபுத்திரனோட பிரபலமான கால்களின் ஆல்பம் இன்னொரு சிறந்த உதாரணம். நடனம் ஆடுபவரின் கால்கள், கால்பந்து ஆடுபவரின் கால்கள் அப்படின்னு வரிசையா சொல்லிகிட்டே போய்க் கடைசில ‘யாருக்கும் தெரியாமல் மறைத்துவிடுவேன் என் போலியோ கால்களை’ன்னு முடிச்சிருப்பார்.

யாத்ரோவோட அந்த மாதிரியான கவிதைகளில் வெற்றியடைந்ததாகத் தோன்றுவது : மயிர் கவிதை. வரிசையா விதம் விதமான மயிர்களை, கூந்தல்களை விவரித்துக் கொண்டே போகும் கவிதை கடைசியில் போடா மயிரு செருப்பு பிஞ்சிடும்னு முடிஞ்சிருக்கும். நல்ல திருப்பம்.  அதனாலேயே இது வெற்றியாகிறது. ஆனால், இவருடைய இன்னொரு பட்டியல் கவிதையான எங்கெங்கோ தோல்வி முயற்சியாத்தான் தெரிகிறது.   ஒவ்வொருத்தி பெயரா சொல்லி, அவ அங்க இருக்கா, இவ இங்க இருக்கா எனச் சொல்லிச் செல்லும்போதே கடைசியில் தன்னோட காதலியைப் பத்திதான் சொல்லப் போகிறாரெனத் தெரிந்து விடுகிறது.  இவரும் அதே மாதிரி பார்கவி எங்க இருப்பாளோன்னு முடித்திருக்கிறார்.


கடைசிக் கவிதையான எப்படி இருக்கீங்க? (http://yathrigan-yathra.blogspot.com/2010/07/blog-post.html) கவிதையையெல்லாம் நான் கொண்டாடுவேன்.  அந்தக் கவிதை பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.  அந்த அளவுக்குப் பிடித்து விட்டது.  அவருடைய  பதிவில்  அந்தக் கவிதை வந்தபோது கூட நான் எதுவும் பின்னூட்டம் போடவில்லை மிகப் பெரிய பாதிப்பை அது எனக்கு ஏற்படுத்தியது. போலவே சாவைப் பற்றிப் பேசும் இவருடைய கவிதையான சாசனம் http://yathrigan-yathra.blogspot.com/2009/04/blog-post_21.html).

பாராட்ட, மகிழ, கொண்டாட நிறைய கவிதைகள் இருக்கின்றன இந்தத் தொகுப்பில். T Shirtற்கு தேனீர்ச்சட்டை,  கவிதை தர்க்கத்திற்குள் அடங்க மறுக்கும் ‘இவள்’ கவிதை மாதிரியான ஒன்றிரண்டு தடுமாற்றங்களும் உண்டு.  ஆனால் பெரும்பாலும், மன நிறைவைத் தரும் கவிதைகள்தான்.

இந்தக் கவிதைகள் அவை எழுதப் பட்ட காலத்திலேயே வலைப்பதிவில் வாசித்திருக்கிறேன்.  ஆனால் அதற்கும், முழுத் தொகுப்பாக இப்போது படிப்பதற்குமான மனப் பதிவு வேறு மாதிரியா இருக்கு.

மிகப் பிரியமான மனுஷன் யாத்ரா. அவருடைய கவிதைகள் தொகுப்பாக வருவது மன மகிழ்ச்சியைத் தருகிறது.  80 பக்கங்கள் கொண்ட, நேர்த்தியான அச்சமைப்பு, அழகான அட்டை உடைய புத்தகத்திற்கு வெறும் 60 ரூபாய்தான் விலை வைத்திருக்கிறார்கள்.  நண்பர்களை இவரது கவிதைத் தொகுதியை வாங்கிப் படிக்கும்படி பரிந்துரைக்கிறேன்.

நன்றி.

(29/12/2010 அன்று யாத்ராவின் ’மயிரு’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசியது).

தற்காப்பு

என் அறை எனக்கு முக்கியமானதாய் இருக்கிறது
யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொள்ள வாகானது
வெளியில் பொழியும் பனியிலிருந்தும் மழையிலிருந்தும் காத்து
நான் விரைத்துவிடாமல் வைத்திருக்கிறது இந்த அறை
நண்பர்களே கிடையாது எனக்கு -
அதனால் அவர்களின் வருகை பற்றிய பிரச்சனையில்லை
கடிகாரத்தை உடைத்துப் போட்டு விட்டதால்
நேரம் பற்றிய போதமின்றி
குடித்துக் கொண்டிருக்கலாம்
என்னுடைய உளறல்களை
யாரும் கேட்டுவிடாதபடி
எப்போதும் மூடியிருக்கும் தடித்த கதவு
வசதியான செவ்வக மேஜை
அதன் மேல் சாம்பல் கிண்ணம்
கலைந்து கிடக்கும் படுக்கை விரிப்பில் எப்போது
வேண்டுமானாலும் உறக்கம் பற்றிய கவலையற்று
சுருண்டு கிடக்கலாம்
தூசி படிந்த புத்தகங்கள்
அடுக்கப் பட்டும் கலைந்தும் இருக்கும் அலமாரி
என் அழகையோ அழகின்மையையோ காட்ட
சிறு கண்ணாடிகூட இல்லாத அறையிது
சூரியனைப் பார்க்காத என் உடம்பு
இப்போது வெளிறிப் போகத் துவங்கிவிட்டாலும்
உலகத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள
தேவையாயிருக்கிறது இந்த அறை

(இது மீள் பதிவு. பழைய இடுகை : http://jyovramsundar.blogspot.com/2009/10/blog-post_31.html)