Wednesday, September 17, 2008

ரொம்ப அழகு

சீறிப் பாயும் மழை அழகு
கழுவி விடப்பட்ட சாலை அழகு
இருளாய் இருக்கும் வானழகு
வெளிச்சங்களைச் சிதறும்
சோடியம் விளக்குகள் அழகு
விளம்பரப் பலகைகளின்
நீல மஞ்சள் பச்சை
பிம்ப பிரதிபலிப்புகள் அழகு
எதிர்ச் சாரியில் விரையும்
ரெயின் கோட் கணவன் அழகு
இடுப்பை அணைத்து
முதுகில் முகம் சாய்த்த மனைவி அழகு
சுருண்டு அபத்தமாய் விழுந்திருக்கும்
கறுப்பு யமாஹா அழகு
ரத்தத்தை உறைய விடாமல்
அடித்துச் செல்லும் நீரழகு
கவிழ்ந்து விழுந்திருப்பவனின்
சிறு கட்டமிட்ட சிகப்புச் சட்டை அழகு
வேகத்தைக் குறைத்து ஒதுங்கி விரையும்
வாகனங்களின் டயர் ஒலி அழகு
அழகு அழகு அழகு

(நண்பர் மோகன் கந்தசாமியின் வலைப்பூவில் வெளியானது)

6 comments:

  1. //கவிழ்ந்து விழுந்திருப்பவனின்
    சிறு கட்டமிட்ட சிகப்புச் சட்டை அழகு
    வேகத்தைக் குறைத்து ஒதுங்கி விரையும்
    வாகனங்களின் டயர் ஒலி அழகு//

    எதார்த்தம் முகத்தில் அடிக்கிறது..

    //மோகன் கந்தசாமியின் வலைப்பூவில் வெளியானது//

    உங்க அடுத்த‌ கவிதை எப்போ குருவே??

    நர்சிம்

    ReplyDelete
  2. நர்சிம், நன்றி.

    இது நான் எழுதியதுதான். நண்பர் மோகன் கந்தசாமியின் வலைப்பூவில் இரண்டு கவிதைகள் எழுதியிருந்தேன் (அவரது 50வது பதிவிற்காக).

    ReplyDelete
  3. அபந்தங்களை கூட அழகாய் விவரித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. சுந்தர்,

    நன்றாக இருக்கிறது. ஆனால் நீங்கள் எழுதியதா என்று ஆச்சரியமாக இருக்கிறது. என்னைப் போன்ற மிடில்கிளாஸ்களுக்கு கூட புரிகிற / பிடிக்கிற கவிதைகள் எழுதுவீர்களா என்ன? :-p

    ReplyDelete
  5. அருமை! (எனக்கே புரியுதுன்னா பார்த்துக்குங்களேன்)

    ReplyDelete