Friday, May 29, 2009

செல்வேந்திரனும் முத்து உதிர்ப்புகளும்

இந்தப் பதிவு சாருவின் கடிதமும் பின் நவீனத்துவமும் என்ற செல்வேந்திரன் பதிவைப் படித்ததும் எழுதியது. பிறகு எதற்கு வேண்டாமென்று பதிவிடவில்லை. ஆனால் இன்றைய அவரது இன்னொரு பதிவைப் படித்ததும் - அடக்க மாட்டாமல் இதை வெளியிடுகிறேன்.

செல்வேந்திரன் உதிர்த்துக் கொண்டேயிருக்கிறார் பல முத்துகளை. அவற்றைப் படிக்கும்போது வரும் எரிச்சலைச் சொல்லி மாளாது. இவை சாம்பிளுக்கு மட்டும் :

சாருவின் எழுத்துகளைக் காப்பி அடிக்கிறார் லக்கி. சாருவின் ஸ்டைல் இருக்கிறது லக்கியின் எழுத்துகளில்.

அட கிரகமே. இவர் சாரு நிவேதிதாவின் எழுத்துகளைப் படித்திருக்கிறாரா என்பதே எனக்கு சம்சயமாக இருக்கிறது. சுவாரசியம் என்பது ஒன்றே இருவரின் எழுத்துகளில் இருக்கும் பொது அம்சம். அப்படிப் பார்த்தால் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுத்துகள் கூடத்தான் படிக்க சுவாரசியமாயிருக்கும். அதற்கென்ன செய்வதாம்?

பாலியல் / செக்ஸ் எழுத்துகளை எல்லாம் இங்கே இணையத்தில் சாருவின் எழுத்துகள் என்று தடாலடியாகச் சொல்லிவிடுகிறார்கள் (என்னுடைய கதைகளுக்கும் அப்படிப்பட்ட விமர்சனத் திட்டுகள் வந்திருக்கின்றன). காரணம் என்ன - சிம்பிள் - இவர்கள் படித்தது சாரு நிவேதிதா மட்டும்தான் - அதுவும் இணையத்தில் அவர் எழுதியதை மட்டுமே. குபரா, திஜாவின் அம்மா வந்தாள், ஜெயகாந்தனின் ரிஷி மூலம், கரிச்சான் குஞ்சின் பசித்த மானிடம் தொடங்கி சமீபத்திய ஜேபி சாணக்யா, வா மு கோமு வரை எழுதுவது என்னவாம்?

ரமேஷ் வைத்யாவின் கவிதைத் தொகுப்பு தமிழில் வந்த பத்து சிறந்த கவிதைத் தொகுப்புகளுள் ஒன்று.

இதைப் படித்ததும் தோன்றுவது, இவருக்குக் கவிதையும் தெரியவில்லை ஒரு கண்றாவியும் தெரியவில்லை என்பதுதான். (ங்கொய்யால கொடுத்த காசுக்கு மேல கூவுறானே எனச் சிலர் சொல்லக்கூடும்!).

செல்வேந்திரனுக்கு கோயமுத்தூர் வட்டார இலக்கியத்தை முதலில் ஆரம்பித்தது லதானந்த், நாசரேத்தோ நாங்குனேரியோ அல்லது என்ன எழவோ என்றால் ஒரே இலக்கியவாதி ஆசிஃப் அண்ணாச்சி, அவ்வளவுதான் (நாங்க எங்கய்யா இலக்கியம் எழுதினோம் என்று அவர்கள் சண்டைக்கு வருவார்களோ என பயமாயிருக்கிறது!). திருப்பூருக்குப் பரிசலையும், ஈரோட்டிற்கு வால்பையனையும், ஹைதராபாத்திற்கு கார்க்கியையும் ஏன் வாட்டார மொழி இலக்கியவாதிகளாக அறிவிக்கவில்லை என்று தெரியவில்லை. அவர்களும் இவரது நண்பர்கள்தானே!

(இங்கே இடைவெட்டாக கார்க்கியைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவர் சாரு நிவேதிதா எழுதுவதை உல்ட்டா செய்து நக்கல் அடிக்கிறார். அப்படிச் செய்வது மிகச் சுலபாமனது, யாருடைய எழுத்துகளை வேண்டுமானாலும் - இவரது எழுதுவதும் சேர்த்தி - அப்படி எளிதாகச் செய்துவிடலாம். அதற்கு இங்கு வேறு பெயர்கூடச் சொல்கிறார்கள் : எதிர் - கவுஜ. கார்க்கியின் எழுத்துகளின் மதிப்பு அவ்வளவுதான்!).

அப்போது ஆர் ஷண்முகசுந்தரம், வண்ணநிலவன், நாஞ்சில் நாடன், அசோகமித்திரன் எல்லாம் என்ன ஆனார்கள்? காரணம் அவர்களை இவர் படித்ததில்லை, அல்லது இவரது எழுத்துகளைப் படிப்பவர்கள் அவர்களைப் படித்திருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை!

எல்லாம் போக, வட்டார மொழிநடை என்று சொல்லும்போது, யாருடைய வட்டார மொழி என்ற கேள்வியும் கேட்கப்பட்டாக வேண்டும். கோயமுத்தூரின் வட்டார வழக்கு என்பது கவுண்டர்களின் வட்டார வழக்காகவும், திருநெல்வேலியின் வட்டார வழக்கு என்பது பிள்ளைமார்களின் வட்டார வழக்காகவும்தான் இருந்து வருகிறதேயன்றி, அங்கிருக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் மொழியாக இருப்பதில்லை. இதற்கு முன்பே சிலர் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பியும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடித்து ஆடுகிறார் செல்வேந்திரன்.

ஆனந்த விகடனின் வந்த கவிதைகளை வேறு காரணங்களுக்காகச் சிலர் பாராட்டலாம். ஆனால் என்னுடைய கேள்வி, சுகுமாரன் போன்றவர்களின் பெயர்களை நேம் டிராப்பிங் செய்பவர் எப்படி அம்மாதிரியான கவிதைகளை எழுதி வெளியிட்டு, பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்?

தெருப் பொறுக்கி எழுத்தாளன் எனச் சொல்வது அல்லது தூ என்று காரி உமிழ்வதெல்லாம் அயோக்கியத்தனம்.

பின் நவீனத்துவம், புதுமைப் பித்தன், ரமேஷ் பிரேம், சில சிறு பத்திரிகைப் பெயர்கள் என அங்கங்கே பொன் தூவலாய்த் தூவிச் செல்லும் செல்வேந்திரன் அடுத்து பிரபலமாக ரஜினிகாந்த்தை வம்புக்கு இழுக்கலாம். இல்லை, இலக்கிய தாக்கத்தோடு கூடிய பிராபல்யம் வேண்டுமென்றால் ஜெயமோகனையோ (அவர்தான் இணையத்தில் எழுதுகிறார் என்பதால் ஈசி!) வா மு கோமுவையோ ஒண்டிக்கு ஒண்டி கூப்பிடலாம். வேறு என்ன செய்யலாம்!

Thursday, May 21, 2009

சாட்சிகளைக் காப்பாற்ற உடனே கையெழுத்து போடுங்கள்

இனப்படுகொலையின் கோர முகத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகளாக இருப்பவர்கள் இந்த மூன்று மருத்துவர்களும். பயங்கரவாதச் சட்டத்தில் அவர்களைத் தடுத்து வைத்திருக்கிறது சிறீலங்கா அரசு. அவர்களது பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களை விடுவிக்குமாறு அம்னெஸ்டி இண்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. கீழுள்ள பக்கத்திற்குச் சென்று "Take Action Now" என்ற பொத்தானை அழுத்தி இந்த மனுவை அனுப்புங்கள். உங்கள் விபரங்களைப் பதிவு செய்தால் போதும், குறிப்பிட்ட அலுவலர்களுக்கு அந்த இணையத் தளமே அனுப்பிவிடும். மிக்க நன்றி!

PEARL ACTION : http://www.pearlaction.org/action-alerts/2009/aa81.php

தொடர்புடைய திரு சுந்தரவடிவேலின் பதிவுகள் : http://sundaravadivel.blogspot.com/2009/05/blog-post_21.html
http://sundaravadivel.blogspot.com/2009/05/blog-post_19.

அனைவரையும் கையெழுத்திடும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

Thursday, May 7, 2009

கோபிகிருஷ்ணனின் நூல்கள் : ஒரு விளக்கம்

பதிவுலக நண்பர்களுக்கு,

கோபி கிருஷ்ணனின் நேர்காணலைத் தொடர்ந்து அவரது 'டேபிள் டென்னிஸ்', 'தூயோன்' தொகுப்புகளை இலவசமாக அனுப்பி வைப்பதாகக் குறிப்பிட்டிருந்தோம். பதிவுலக நண்பர்கள் இதற்குத் தந்த ஆதரவு உண்மையில் எங்களை மலைக்க வைத்துவிட்டது.

நேற்று மாலை 6 மணி வரையில் 254 நண்பர்கள் தங்களது முகவரிகளை கொடுத்திருக்கிறார்கள். இதில் 26 நண்பர்கள்தான் வலைத்தளத்தில் எழுதுபவர்கள். மற்ற அனைவருமே பதிவுலகை தொடர்ந்து படிப்பவர்கள். குறிப்பாக பின்னூட்டம் கூட போடாதவர்கள்தான் அதிகம். இதிலிருந்து ஒரு விஷயம் நன்றாகப் புரிகிறது. அதாவது பதிவுலகை வாசிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. பின்னூட்டங்களை மட்டுமே கொண்டு படிப்பவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியாது.

இந்த 254 நண்பர்களில் 68 பேர், 'மொழி விளையாட்டு' மூலமாக வந்தவர்கள். 12 நண்பர்கள், நண்பர் லக்கிலுக், 'டேபிள் டென்னிஸ்' குறித்து எழுதிய பதிவை வாசித்துவிட்டு முகவரி கொடுத்தவர்கள். மீதமுள்ள 174 நண்பர்களும் சாருவின் இணையதளம் வழியாக பதிவு செய்தவர்கள்.

கோபி கிருஷ்ணனின் படைப்புகள் பரவலாகப் போய்ச் சேர வேண்டும் என தங்களால் இயன்ற அளவுக்கு உதவிய நண்பர்கள் சாரு, லக்கிலுக் ஆகியோருக்கு நன்றி.

பதிவில் குறிப்பிடாமல், ஆனால் நூல்களை பெறுபவர்கள் ஆச்சர்யமடைய வேண்டும் என்பதற்காக 'தமிழினி' வசந்தகுமாருடன் இணைந்து ஒரு ஏற்பாடு செய்திருந்தோம். அதாவது கோபி கிருஷ்ணனின் 'டேபிள் டென்னிஸ்', 'தூயோன்' நூல்களைத் தவிர, அவரது 'இடாங்கினிப் பேய்கள்...' நூலையும் நண்பர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் இந்தளவுக்கு நாங்கள் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. அதனாலேயே மிகுந்த தயக்கத்துடன் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கிறது.

நேற்று மாலை 6 மணி வரை - அதாவது மே 6ம் தேதி வரை - முகவரி கொடுத்த நண்பர்களுக்கு மட்டுமே நூல்களை அனுப்ப முடியும் என்ற இக்கட்டான நிலையில் நாங்கள் இருக்கிறோம். காரணம், பிரதிகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. இதிலும் ஒரு சிக்கல். நேற்று வரை பதிவு செய்தவர்களில் 7 நண்பர்களுக்கு 'டேபிள் டென்னிஸ்' தவிர மற்ற இரு நூல்கள் மட்டுமே அனுப்ப இயலும். தவிர்க்க இயலாமல் நிகழ்ந்துவிட்ட இந்த ஏமாற்றத்துக்காக நண்பர்கள் எங்களை மன்னிக்க வேண்டும்.

இன்று முதல் மெயில் மூலமாக முகவரியை கொடுக்க ஆரம்பித்திருக்கும் நண்பர்களுக்கு தனிப்பட்ட மடல் அனுப்பி வருகிறோம். கோபி கிருஷ்ணனின் மேலே குறிப்பிட்டுள்ள 3 நூல்களின் பிரதிகளுமே தற்சமயம் கைவசமில்லை. எனவே இனி யாரும் பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

நேற்று வரை பதிவு செய்துள்ள நண்பர்களுக்கு அதிகபட்சம் இன்னும் ஒரு வார காலத்துக்குள் கோபியின் 3 நூல்களும் கிடைத்துவிடும். தபால் துறையினரின் சுறுசுறுப்பை பொறுத்து ஒரு வாரம் என்பது 10 நாட்களாகவும் உயரலாம்.

பதிவுலக நண்பர்களுக்கு இப்படியொரு வாய்ப்பை வழங்கிய 'தமிழினி' வசந்தகுமாருக்கு ஸ்பெஷல் நன்றி.

கோபி கிருஷ்ணனுக்கு நீங்கள் அளித்துள்ள ஆதரவு, எங்களை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது. இதுபோல் தொடர்ந்து செய்யலாம் என்ற எண்ணம் இருக்கிறது.

பார்ப்போம்.

தோழமையுடன்,
பைத்தியக்காரன் / ஜ்யோவ்ராம் சுந்தர்

Monday, May 4, 2009

ஆள் மாறாட்டம்

உங்கள் பெயரான கே என்பதை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று தீர்மானமாக இருக்கிறீர்கள். உங்கள் காதலிக்கு அந்தப் பெயர் பிடிக்கவில்லை. அதனால் பொல்லாதவன் படத்தில் தனுஷின் பெயரான எல் என்பதை வைத்துக் கொள்ள விழைகிறீர்கள்.

பெயர் மாற்றுவதில் உள்ள பல சிக்கல்களை நான் எவ்வளவு விளக்கியும் நீங்கள் கேட்பதாயில்லை. காதலே பிரதானமாயிருக்கிறது உங்களுக்கு. காதலி பெயரை மாற்றாவிட்டால் உங்களுக்குப் பதில் வேறொருவரைக் காதலிக்கத் துவங்கிவிடுவாளோ என்ற பயம் உங்களுக்கு. அதை வெளிப்படையாகச் சொல்லவும் தயக்கம்.

பொல்லாதவன் தனுஷ் பெயரை நீங்கள் சூட்டிக் கொண்டவுடன் உங்களுக்கு கில்லி விஜய்யின் சக்தி வந்ததாக நினைக்கிறீர்கள். உங்கள் மாளிகையின் அழகான இண்டெர்காமை எடுத்து உதவியாளரை வரச் சொல்கிறீர்கள். ஸ்விட்சர்லாந்திற்கு காதலிக்கும் உங்களுக்குமான பயண ஏற்பாடுகளைச் செய்யச் சொல்கிறீர்கள். பிறகு வேறு ஏதோகூடச் சொல்கிறீர்கள்; அதை என்னிடம் சொல்லாததால் இங்கு எழுத முடியவில்லை.

பிறகு உங்கள் காதலியுடன் டூயட் பாட ஸ்விட்சர்லாந்திற்கும் பாங்காக்கிற்கும் செல்கிறீர்கள். அகண்ட படகில் நீங்கள் இருவரும் பாடிக் கொண்டே பயணம் செய்கிறீர்கள். அப்போது உங்கள் காதலியின் உடலெங்கும் நீங்கள் முகர்ந்தபின் தொப்புளில் முத்தம் வைத்தபோது அவளின் முகபாவத்தை ஏறிட்டுப் பார்க்கிறீர்கள். அந்தக் காட்சியைக் கண்ட அக்கணமே எனக்கு ஆர்கசம் வந்தது.

உங்கள் நண்பனும் எனக்குப் பிடிக்காதவனுமான எம் என்பவனைப்பற்றி என்னிடம் அடிக்கடி பேசுகிறீர்கள். உணவு விடுதியொன்றில் நீங்களும் எம்மும் அமர்ந்திருக்கிறீர்கள். எம் பியர் அடித்துக் கொண்டிருக்க நீங்கள் கோக் அருந்தியபடி இருக்கிறீர்கள். அப்போது பக்கத்து இருக்கைப் பெண்ணை நான்கு தடியர்கள் கிண்டல் செய்ய நீங்கள் வெகுண்டெழுந்து ஆக்ரோஷமாகச் சண்டையிடுகிறீர்கள். அப்போது ஒருவன் கத்தியால் உங்களைக் குத்த வர, எம் பாய்ந்து உங்களைக் காப்பாற்றுகிறான். நட்பின் இலக்கணம் அவன் என்பதற்கு இது போன்று பல உதாரணங்களை நீங்கள் சொன்னாலும், அவனது காதலியை நீங்கள் தள்ளிக் கொண்டு போனதை என்னிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறீர்கள். காதல் என்பது வாழ்க்கையில் ஒருமுறை மலரும், அதுபோலவே ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் சிறந்தது என நீங்கள் திரையில் சொன்னதுதான் இதற்குக் காரணமாயிருக்கலாமென நினைக்கிறேன். சரியா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

உங்கள் நண்பனை எனக்கு ஏன் பிடிக்கவில்லை என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். ஆள் மாறாட்டம் என்ற இந்தக் கதையின் தலைப்பை அவன் பூல் மாறாட்டம் என்று படித்தால் எனக்குக் கோபம் வராதா என்ன? நான் மிகவும் சாந்தமானவன்; தன்மையானவன்; ஆனால் அதையே என் தலைமேல் ஏறி குதிரை ஓட்டுவதற்குச் சிலர் உபயோகித்துக் கொள்ளும்போது, என் இனிய நண்பா, நாம் அதை எப்படிச் சகித்துக் கொள்வது?

உங்கள் காதலியின் தந்தை ஏற்பாடு செய்திருந்த அடியாட்கள் உங்களை வேனில் துரத்துகிறார்கள். நீங்கள் அனைவரையும் அடித்து நொறுக்குகிறீர்கள். பிறகு அவரை நேரில் சந்தித்து சொடுக்குப் போட்டு நீங்கள்தான் அவளைத் திருமணம் செய்வேன் எனச் சபதமிடுகிறீர்கள். குடும்பப் பகையை மறக்கும்படி உங்கள் காதலியும் தந்தையிடம் கண்ணீர் மல்கக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறாள்.

நான் உங்கள் நண்பன் என்பதால் இதையெல்லாம் ஒன்றுவிடாமல் எனக்கு அவ்வப்போது சொல்லி வருகிறீர்கள்.

திடீரென்று உங்கள் வாழ்வில் அம்மாவும் தங்கையும் வரவில்லையே என்ற ஏக்கம் உண்டாகிறது உங்களுக்கு. மாளிகையின் மாடியறையில் அம்மாவிடம் சிரித்து விளையாடி தங்கையுடன் குறும்பு செய்கிறீர்கள். உங்கள் தங்கையை தோளை அணைத்தபடி தட்டிக் கொடுக்கிறீர்கள்.

உங்கள் தாயார் ஃபிளேஷ்பேக்கை உங்களிடம் விலாவரியாகச் சொல்கிறார். இது புதுவகையான கதைஎழுத்து என்பதால் அவற்றை என்னிடமிருந்து மறைக்கிறீர்கள். உங்கள் தங்கையின் காதலனுடன் (அவன் உங்கள் நண்பனும்கூட!) அவளைச் சேர்த்து வைக்கிறீர்கள்.

காட்டமான கஞ்சாப் புகை அறையெங்கும் சூழ்ந்திருக்கிறது. நீங்கள் எழுந்து கண்ணாடியைப் பார்க்கிறீர்கள். அதில் நீங்களும் நானும் தெரிகிறோம். இப்போது நீங்களும் நானும் ஒருவராகிவிட்டோம்.

நீங்கள் / நான் இருவரும் நடந்து கொண்டிருக்கிறோம் தலைவர் எம்ஜியார் பாடல்களைப் பாடியபடி. முன் ஜென்மத்தில் எனக்கு ரஜினியைத்தான் பிடிக்கும் என்பது நினைவுக்கு வர, நம்மில் ஒரு குரல் 'ஒருவன் ஒருவன் முதலாளி' என்ற பாடலைப் பாடுகிறது. இன்னொரு குரல் ‘தூங்காதே தம்பி தூங்காதே' என்று பாடுகிறது.

கடற்கரை மணலில் பாதம் புதையப் புதைய நாம் நடந்து கொண்டிருக்கிறோம். நம் கையைப் பிடித்தபடி நம் காதலி வருகிறாள். நீலக் கடல் ஆர்பரிக்க பின்னணியில் நளினமான இசை வாத்தியங்கள் முழங்குகின்றன. நாம் அவளுடன் கடலலையை ஒத்த கடலை போடுகிறோம்.

எம் நம்முடனேயே இருந்து பல நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்லி நம்மைச் சிரிக்க வைக்கிறான் அவ்வப்போது. அவனது காதலுக்கு நாமும் துணை நிற்கிறோம். அவர்களைச் சேர்த்து வைத்ததும் நா தழுதழுக்கிறான். கதையின் முடிவில் அனுதாபத்தைத் தூண்ட தன்னைச் சாகடிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறான்.

காதலியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல் நிலையத்தில் நம்மைத் தலைகீழாகக் கட்டி வைத்து உருட்டுக் கட்டையால் அடிக்கிறார்கள். படுக்க வைத்து பாதங்களில் ஓங்கி ஓங்கி அடிக்கிறார்கள். நம் முகம் வீங்கி ரத்தத்தால் தோய்ந்திருக்கிறது. இடையில் எம் வந்து நம்மைப் பிணையில் எடுக்கிறான்.

நம் காதலிக்கு வேறொருவனுடம் திருமணம் நிச்சயமாகிறது. நாம் அழுதுகொண்டிருக்கும்போது எம் வந்து இன்னொரு கஞ்சா தருகிறான். அதைப் புகைத்தபடி இருக்கிறோம். அழகான இறக்கைகளுடைய வெள்ளைப் பறவை வந்து நம்மை அழைத்துச் செல்கிறது. இப்போது எம்மும் நம்முடன் இணைய மூவரும் ஒன்றாகிறோம். நம்முடன் நம் காதலியும் வருகிறாள். மேகப் பஞ்சுகளின் மேல் நம் பறவை பறந்து செல்கிறது.