இணைய வாசகர்கள், நேரம் கிடைக்கும்போது வாசிப்பதற்காக அவ்வப்போது லத்தீன் அமெரிக்க சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பை, சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியுடன் 'சிதைவுகளிலும்', 'மொழி விளையாட்டிலும்' மாறி மாறி வெளியிடலாம் என நினைக்கிறோம். அந்தவகையில் முதல் சிறுகதையாக, மெக்சிகோவை சேர்ந்த ஆல்பெர்தோ சிம்மல், எழுதிய சிறுகதையை 'சிதைவுகளில்' (http://naayakan.blogspot.com/2009/07/1_16.html ) வெளியிட்டோம். இப்போது இரண்டாவதாக ஹுலியோ கொர்த்தஸார் எழுதிய பூங்காக்களின் தொடர்ச்சி' சிறுகதையை 'மொழி விளையாட்டில்' வெளியிடுகிறோம். இந்தச் சிறுகதையை தமிழில் மொழிபெயர்த்தவர் நண்பர் ராஜகோபால்.
பூங்காக்களின் தொடர்ச்சி
சிலநாட்களுக்கு முன்புதான் அவன் அந்த நாவலைப் படிக்கத் தொடங்கினான். அவசர வியாபாரச் சந்திப்புகளின் நிமித்தம் அதை அவன் பாதியில் நிறுத்த வேண்டியிருந்தது. அவனுடைய எஸ்டேட்டிற்குத் திரும்பும் வழியில் ரயிலில், அதை அவன் மீண்டும் திறந்தான். கதை நிகழ்வில், கதாபாத்திரங்களின் சித்தரிப்பில் மெதுவாக ஆர்வம் வளார்வதற்குத் தன்னை அனுமதித்துக் கொண்டான். பிற்பகலில், அவன் சார்பாகச் செயலாற்றும் அதிகாரத்தை வழங்கும் ஒரு கடிதத்தை எழுதினான். கூட்டு உரிமை பற்றி எஸ்டேட் மேனேஜரோடு விவாதித்த பிறகு, ஓக் மரங்கள் நிறைந்த பூங்காவைப் பார்த்தவாறிருந்த படிப்பறையின் அமைதியில் புத்தக வாசிப்பிற்குத் திரும்பினான்.
அவனுக்கு விருப்பமான, கைகளை வாகாக வைத்துக் கொள்ளும் வசதி கொண்ட நாற்காலியில் - அதன் முதுகு கதவை நோக்கி இருந்தது - சிறிய குறுக்கீட்டின் சாத்தியம் கூட அவனுக்கு எரிச்சல் ஊட்டிவிடும், அதை அவன் முன்பே யோசித்திருந்தான் - பச்சை நிற வெல்வெட் துணியை இடது கையால் அலட்சியமாக வருடியபடி நாவலின் இறுதி அத்தியாயத்தைப் படிக்க முனைந்தான். பாத்திரங்களின் பெயர்களையும், அவை பற்றிய அவனுடைய மனச் சித்திரத்தையும் எளிதாக நினைவு கூர்ந்தான். நாவலின் வசீகரம் சட்டென்று அவனைப் பற்றியது. ஒவ்வொரு வரியாகப் படிக்கத் தொடங்கும்போது அவனைச் சுற்றியிருந்த விஷயங்களிலிருந்து அவன் விலகுவதை உணர்ந்ததோடு விபரீத இன்பத்தையும் சுவைத்தான். அதேசமயம் உயரமான நாற்காலியின் பச்சை நிற வெல்வெட்டில் அவனுடைய தலை செளகரியமாகச் சாய்ந்திருப்பதையும் உணர்ந்தான். கைக்கு எட்டும் தூரத்தில் சிகரெட்டுகள் இருக்க, பெரிய சாளரங்களுக்கு அப்பால், பூங்காவில் ஓக் மரங்களுக்கிடையில் மதிய நேரக் காற்று நடமாடிக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு வார்த்தையாக, கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் இழிவான இரண்டக நிலையை ரசித்தவன், கற்பனை முடிவடைந்த நிகழ்வும் நிறமும் எங்கு தொடங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள முயன்றான்.
மலை மீதிருந்த வீட்டில் நடக்கும் இறுதிப்போராட்டத்திற்கு அவனே சாட்சி. முதலில் அச்சத்தோடு அந்தப் பெண் வந்து சேர்ந்தாள். ஒரு கிளை வளைந்து தாக்கியதாய் முகத்தில் வெட்டுப்பட்ட அவளுடைய காதலனும் இப்போது வந்து சேர்ந்தான். வழியும் குருதியை அவள் முத்தத்தால் நிறுத்த முயன்றாள். அவன் அதை அலட்சியப்படுத்தினான். உலர்ந்த இலைகளாலும், வனத்தின் இரகசிய வழிகளாலும், திமிறும் இச்சைகளாலும் ஆன சடங்கை நிகழ்த்துவதற்கு அவன் திரும்ப வரவில்லை. இதயத்திற்கு எதிரே இருந்த குறுவாள் வெதுவெதுப்பை அளித்தது. அடியூடாக இருந்த சுதந்திர உணர்வு நொறுக்கியது. வேட்கை மிகுந்த திணறலான வசனங்கள் பாம்புகளின் சிற்றாறு போல் அப்பக்கங்களில் ஓடியது. இவையெல்லாம் முடிவின்மையிலிருந்து தீர்மானிக்கப்பட்டவையாக இருக்கலாம். வேதனையில் அல்லலுறும் காதலனின் உடலை அன்பால் அமர்த்தவோ அல்லது அதிலிருந்து அவன் மனதை திசை திருப்பவோ அவளால் முடியவில்லை. வெறுப்புக்குரிய மற்றொரு உடம்பை அழித்தொழிப்பதற்கான தேவை அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அதன் சட்டகத்தை வரைந்தார்கள். எதுவும் மறக்கப்படவில்லை. அத்தாட்சி, எதிர்பாராத இடர்கள், தவறுகளின் சாத்தியம். எல்லாம் கணக்கிடப்பட்டாயிற்று. அந்நேரத்திலிருந்து ஒவ்வொரு கணமும் அத்திட்டத்திற்கு என்றே ஒதுக்கப்பட்டது. விவரங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டன. அநேகமாக ஒன்றும் மீறப்படவில்லை. ஒரு கரம் கன்னத்தை வருடியது. அப்போது இருட்டத் தொடங்கியது.
இப்போது அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. அவர்களை எதிர்நோக்கி இருந்த வேலையில் கவனத்தைச் சிதறாமல் பொருத்தி வீட்டின் வாயிலில் பிரிந்தார்கள். வடக்கில் இட்டுச் சென்ற பாதையை அவள் தொடர வேண்டியிருந்தது. எதிர்ப்பக்கம் ஓடிய பாதையில், அவள் ஓடுவதைப் பார்க்க அவன் ஒரு கணம் திரும்பினான். அவளுடைய கூந்தல் கட்டவிழ்ந்து பறந்தது. அரையிருட்டில் மரங்களுக்கு இடையிலும் புதர்களுக்கு இடையிலும் பதுங்கியபடி அவன் ஓடினான். மரங்கள் அடர்ந்த வீட்டுக்கு இட்டுச் செல்லும் பாதையை அவனால் அடையாளம் கண்டுக் கொள்ள முடிந்தது. நாய்கள் குரைத்துவிடக் கூடாது என்று நினைத்தான். குரைக்கவில்லை. அந்தநேரம் எஸ்டேட் மேனேஜர் அங்கிருக்கமாட்டார். அவரும் அங்கில்லை. மூன்றே எட்டில் வாசலை அடைந்தான். உள்ளே நுழைந்தான். குருதி ஒழுகுவது போல் அப்பெண்ணின் வார்த்தைகள் அவன் காதில் ஒலித்தன. முதலில் நீலநிறக் கூடம். பிறகொரு பெரிய அறை. அதன் பிறகு தரைவிரிப்புகளோடு கூடிய படிக்கட்டு. மேலே இரண்டு கதவுகள். முதல் அறையில் யாரும் இல்லை. இரண்டாவது அறையிலும் ஆட்கள் இல்லை. வரவேற்பறையின் கதவு, கையில் கத்தி, பெரிய ஜன்னல்களிலிருந்து வரும் வெளிச்சம், கையை வாகாக வைத்துக் கொள்ளும் வசதி கொண்ட பச்சை நிற வெல்வெட் உறையிட்ட நாற்காலியின் உயர்ந்த பின்புறம், நாவலைப் படித்துக்கொண்டிருக்கும் அம்மனிதனின் தலை.
நன்றி: இந்த நகரத்தில் திருடர்களே இல்லை (லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்), தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: ராஜகோபால், நிழல் வெளியீடு, 31/48, ராணி அண்ணா நகர், கே. கே. நகர், சென்னை - 78, விலை: ரூ. 80.
குறிப்பு : ஹுலியோ கொர்த்தஸாரின் 'இரவு முகம் மேலே' என்ற சிறுகதையை நண்பர் நாகார்ஜுனன், 4 பகுதிகளாக தன் வலைத்தளத்தில் தமிழாக்கம் செய்திருக்கிறார். ஆர்வமுள்ள நண்பர்கள் அந்தச் சிறுகதையையும் வாசிக்கலாம் :
http://nagarjunan.blogspot.com/2009/07/1.html
சுந்தர்
ReplyDeleteஜூலியோ அல்ல ஹூலியோ.
ராஜகோபாலின் தமிழாக்கம் நன்றாகத்தான் இருக்கிறது. சுமார் பதினைந்து ஆண்டுகள் முன்பு இதே கதையை குதிரைவீரன் பயணம் என்ற யூமா வாசுகி கொணர்ந்த இதழில் தமிழாக்கியிருந்தேன். கோணங்கி தேடிக் கண்டடைந்த அதையும் என் தளத்தில் தேடி வாசிக்கலாம்.
மொழிபெயர்ப்பு என்ற சொல்லை நான் பிரயோகிப்பதில்லை. தமிழாக்கம்தான்.
நாகார்ஜுனன்
நாகார்ஜூனன், நன்றி. மாற்றி விட்டேன்.
ReplyDeleteஹூலியோ கொர்த்தஸாரின் இதே சிறுகதையை (பூங்காக்களின் தொடர்ச்சி) நாகார்ஜுனனின் தமிழாக்கத்திலும் வாசிக்கலாம்.
ReplyDeletehttp://nagarjunan.blogspot.com/2008/03/blog-post_29.html
நாகார்ஜுனனுடைய மொழியாக்கத்தோடு ஒப்பிடும்போது ராஜகோபாலுடையது கொஞ்சம் தட்டையான மொழியாக்கமாகத் தோன்றுகிறது. எனக்கு ஒப்பீடுகள் பிடிக்காதென்றாலும் இரண்டு மொழியாக்கங்களையும் ஒரே நேரத்தில் படிக்கும்போது மனதில் அந்த ஒப்பீடு தானாகவே வந்துவிடுகிறது.
ReplyDeleteஇது போன்ற கதைகளை பதிவிடும்போது கதைகளின் ஆங்கில மொழியாக்கத்தின் சுட்டி கிடைத்தாலும் உள்ளிடுங்களேன்.
நன்றி, பைத்தியக்காரன். இரண்டு மொழியாக்கங்களையும் அருகருகில் வைத்துப் படிப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்தான்!
ReplyDeleteநன்றி, ராஜா. இந்தக் கதைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்புகள் இருக்குமென்று நினைக்கிறேன். புத்தகங்கள் வழியாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை - அதனால் சுட்டி கிடைக்குமா தெரியவில்லை.
keep going and thank you
ReplyDeleteஇரண்டு தமிழாக்கங்களையும் வாசித்தேன், பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteசுந்தர்,
ReplyDeleteஇந்த கதையை நாகர்ஜூனன் ஏற்கனவே தமிழாக்கம் செய்துள்ளார். மேலும் the night face up கதையை பிரம்மராஜன் கொண்டுவரும் நான்காம் பாதை என்ற சிற்றிழதழில் தேஜு கிருஷ்ணா என்பவர் சமீபத்தில் தமிழாக்கம் செய்துள்ளதாக கேள்விப்பட்டேன்.நான் இன்னும் இந்த மொழியாக்கத்தை படிக்கவில்லை. The night face up கதையின் ஆங்கில மூலம் கீழ்க்காணும் சுட்டியில்...
http://www.birmingham.k12.mi.us/NR/rdonlyres/A0644D2D-E656-474C-858E-1F84046B4671/0/TheNightFaceUp.pdf
suzanne jill levine and gregory rabassa போன்றவர்கள் செய்த ஆங்கில மொழியாக்கம் மிக சிறப்பானது.
வாசு
பயன் உள்ள பதிவு.
ReplyDeleteதமிழை வளர்ப்போம் என்று வெறும் வாய் பேச்சோடு நின்று விடாமல், செயலில் செய்து காட்டுகிறீர்கள், நன்றிகள் பல.
மருத்துவர் ருத்ரன் சொல்வது போல தொடரட்டும் இந்த நற் பனி.
நன்றிகளுடன்
குப்பன்_யாஹூ
special thanks for those other blog links.
மிக்க நன்றி .
ReplyDelete- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
இந்த முயற்சிகள் முக்கியமானதாக பதிவுலகத்தில் கருதப்படும். பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள்.
ReplyDeleteநன்றி, டாக்டர் ருத்ரன்.
ReplyDeleteநன்றி, யாத்ரா.
நன்றி, வாசு. The Night Face Up தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டேன். இனிதான் வாசிக்கணும்.
நன்றி, குப்பன் யாஹூ.
நன்றி, பிரவின்ஸ்கா.
நன்றி, மாதவராஜ்.