Thursday, August 27, 2009

கௌதம சித்தார்த்தனின் பார்வையில் தமிழ்ச் சிறுகதைகள்

கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக உன்னதம் பத்திரிகையைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார் கௌதம சித்தார்த்தன். சில வருடங்களுக்கு முன்பு காத்திரமான சிறுபத்திரிகையாக வெளி வந்த இதழ்தான் உன்னதம். இப்போது இடை நிலை இதழ்களின் கை ஓங்கிவிட்ட காலத்தில் சிறுபத்திரிகைகள் வருவது இன்னும் சிரமமாகிவிட்டது. இப்படிப்பட்ட காலகட்டத்திலும் தொடர்ந்து பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன். புதுவித எழுத்து முறையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர். சிறுகதைகள் குறித்து கறாரான பார்வைகள் உடையவர். ஆகஸ்ட் மாத உன்னதம் இதழில் அவர் தமிழ்ச் சிறுகதைகள் குறித்து எழுதிய குறிப்புகளிலிருந்து சில பகுதிகளைக் கீழே தருகிறேன் :

சிறுகதைகளின் நவீன காலகட்டம் 1

... தனித்துவமான பாணியை உருவாக்கியவர்களும் அந்தச் சூழலில் இயங்கியவர்களும்தான் சிறுகதைத் துறையில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக மாறமுடியும். மற்றவர்கள் அந்தக் கட்டத்தில் மட்டுமே பிரகாசித்து மங்கிப் போய்விடுகிறார்கள்.

அதாவது, புதுமைப் பித்தன் காலத்தை சிறுகதைத் துறையின் பொற்காலம் என்று கொள்ளலாம். அந்த அபரிதமான வளர்ச்சிக்குக் காரணம், அதுவரை உரைநடையிலும், வடிவ நேர்த்தியிலும் மரபார்ந்த பாணியில் இயங்கி வந்த கதையாடலை முற்றிலும் புதிய வடிவிலான நவீனதளத்திற்குத் தள்ளினார் பித்தன். அவர் ஒரு புதிய பாணியை (trend setting) உருவாக்கியவர். அவரது சுவடொற்றி வந்த மற்ற ஆளுமைகளும் தங்களது எழுத்து வன்மைகேற்ப இயங்கினர். இதை நவீன காலகட்டை 1 என்று குறிக்கலாம்.

இதற்குப் பின்னால் வந்த பி எஸ் ராமையா இந்த இலக்கிய மனப்பான்மையை (mood) கெடுத்துக் குட்டிச் சுவராக்குகிறார் (அவரது இலக்கிய லாபி கொஞ்ச காலம் மட்டுமே கை கொடுத்தது). அதன் பின்னால் வந்த ஒரு வரிசை (வ.ரா., சிட்டி, மீ.ப.சோமு, கி.ரா. சங்கு சுப்ரமணியன், றாலி, கரிச்சான் குஞ்சு...) கானல் நீராக மங்கிப் போய்விடுகிறது.

சிறுகதைகளின் நவீன காலகட்டம் 2

அடுத்து வந்த வரிசை பித்தன் காலத்து நவீனத்துவப் போக்கை அப்படியே பின்பற்றாது வாழ்வியலின் அகம் சார்ந்த தரிசனத்தோடு முற்றிலும் நவீனத்துவமாகிறது. மௌனி சார்ந்து பிரமிளிடமிருந்து கவித்துவமாகத் துவங்கும் இவ்வரிசை கசடதபற நா கிருஷ்ணமூர்த்தி, க்ரியா ராமகிருஷ்ணன், ம ராஜாராம் போன்றவர்களின் தீவிரத்தில் ஆரம்பித்து சா கந்தசாமி, ந முத்துசாமி, அம்பை.. என ஒரு புதிய பாணி உருவாகிறது. இந்த வரிசை தமிழ்ச்சூழலில் நிராகரிக்க முடியாத கதைகாரர்களாகப் பதிவாகியிருக்கிறார்கள்.

இங்கும் இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன் போன்ற பி எஸ் ராமையாக்கள் இருந்தார்கள். இதை நவீன காலகட்டம் 2 என்று குறிக்கலாம்.

சிறுகதைகளின் யதார்த்தவாதக் காலகட்டம்

... யதார்த்தவாதம் என்னும் அழகியலை தமிழின் மண்ணோடு இணைத்து அதன் செழுமை மிக்க கதையாடலை உருவாக்கத் தொடங்கியவர்களில், கி. ரா சார்ந்து பா செ., பூமணி, வண்ணநிலவன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர்களுக்கு நவீன தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

இதற்கடுத்த வரிசை (பொன்னீலன், மேலாண்மை பொன்னுசாமி, தனுஷ்கோடி வகையறாக்கள்) இந்தப் பிரபலமான யதார்த்தப் பாணியை அப்படியே பின்பற்றி தாங்களும் நீர்த்துப் போய் சிறுகதைத் துறையையும் நீர்த்துப் போக வைத்தது...

சிறுகதைகளின் பின்நவீனத்துவ காலகட்டம்

ஆக, புதிதாக ஒரு பாணியை உருவாக்காமல் லாபியை வைத்தே குதிரை ஏறிக் கொண்டிருந்தால், காணாமல் போய்விடுவார்கள் என்பதை உணர்ந்து கொண்டதால்தானோ என்னவோ, அடுத்த வந்த வரிசை (கௌதம சித்தார்த்தன், கோணங்கி, எம் டி முத்துக்குமாரசாமி, சாரு நிவேதிதா, ரமேஷ் பிரேம், எஸ் ராமகிருஷ்ணன்...) அப்பொழுது உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த பின்நவீனத்துவம் என்னும் பாணியை உருவாக்கியது...

... இந்தக் கட்டத்தில் உருவான பி எஸ் ராமையாக்களாக பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், கார்த்திகா ராஜ்குமார் போன்றவர்களைச் சொல்லலாம். இவர்களிடமிருந்து மேலெழுந்து வந்தவர்தான் ஜெயமோகன்.

ஜெயமோகனின் வருகைக்குப் பிறகு இந்தக் கதையாடலின் தீவிரம் சரிய ஆரம்பித்திருக்கிறது. புதுமைப் பித்தன் காலத்துக் கதையாடல்களின் தீவிரத்தன்மையை கல்கி மடை மாற்றி விட்டாற் போன்றதொரு சூழல் உருவானது. பத்திரிகைகளில் காலச்சுவடு கண்ணனின் பிரவேசம், சிறுபத்திரிகைகளின் தீவிரத்தன்மை மங்கி இடைநிலைப் பத்திரிகைகளின் தோற்றம், ஜெயமோகனின் கத்தடாய்கள் (ஜெயமோகனின் கதைகளைப் பற்றிய பிரமிளின் விமர்சனச் சொற்றொடர்) பற்றிப் பாராட்டும் வாசகர் கடிதங்கள்.

இந்தச் சரிவு இத்தோடு நிற்காமல், ஜெயமோகனின் கத்தடாய்களில் ராமகிருஷ்ணனும் சேர்ந்து கொள்ள, ரமேஷ் பிரேம் மெதுவாக அவர்களை நோக்கிப் பின் நகர...

எனச் செல்கிறது கட்டுரை. சிறுகதைகளின் தலித் இலக்கியக் காலகட்டம், நவீன இலக்கியக் காலகட்டம் என அலசுகிறார். இறுதில் தன்னுடைய பார்வையாக தமிழ்ச் சிறுகதைகளின் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது அரசியல் மொழியாகத்தானிருக்கும் என்கிறார்.

உன்னதம் இதழைப் படிக்க விரும்புபவர்களுக்காக :

உன்னதம் - தனி இதழ் ரூ 20, ஆண்டுச் சந்தா ரூ 200. தொடர்புக்கு :
உன்னதம், ஆலந்தூர் அஞ்சல், கவுந்தப்பாடி 638 455, ஈரோடு மாவட்டம். அலைபேசி : 99407 86278

18 comments:

  1. மிக பயனுள்ள அறிமுகம் குருவே.அற்புதமான கட்டுரை.நன்றி.

    ReplyDelete
  2. நல்லதொரு அறிமுகம் சுந்தர். கெளதம சித்தார்த்தனோடு பழகியிருந்தும், அவரது பிரதிகளை வாசித்திருந்தும், இதுவரை அவரை சரியானபடி பதிவுலகில் நான் அறிமுகப்படுத்தியதில்லை. அந்த நிகழ்வை உடனே நிகழ்த்தும்படி உங்கள் இடுகை நிர்பந்திக்கிறது.

    பொதுவாக அவரை, 'பாவம்யா... கை காசை செலவு செஞ்சு பத்திரிகைய நடத்தறாரு...' என்பதான ஒரு பொதுப்பார்வை இருக்கிறது. இது எவ்வளவு அபத்தமானது?

    'உன்னதம்' பதிப்பகம் சார்பில் இதுவரை இவர் வெளியிட்டிருக்கும் ஒவ்வொரு புத்தகமும் தமிழ் வாசகத் தளத்தை ஒரு படி நகர்த்துவதாகவே அமைந்திருக்கிறது.

    லதா ராமகிருஷ்ணனின் தமிழாக்கத்தில், யசுவானி கவபட்டாவின் 'தூங்கும் அழகிகளின் இல்லம்' புதினம் முதற்கொண்டு சமீபத்தில் வெளியான நவ்வலின் தமிழாக்க நாவல் வரை இது தொடர்கிறது.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  3. pakirvukku nanri

    mankuthiray

    ReplyDelete
  4. அறிமுகத்திற்கு நன்றி சுந்தர்.

    இந்த மாத்ரி சிற்றிதழ்கள் இணைய வடிவில் வெளியிடலாம். (வோர்ட் வடிவம் கூட போதும், சந்தா செலுத்தி படிக்கவும் நான் தயார்). Net edition may reach more audience than print edition.

    முடிந்தால் அவரிடம் சொல்லவும் சுந்தர்ஜி.

    ReplyDelete
  5. பகிர்வு உன்னதம்.

    ReplyDelete
  6. நர்சிம், பைத்தியக்காரன், மண்குதிரை, ராம்ஜி யாஹூ, அஷோக்... நன்றி.

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி சுந்தர்.

    ReplyDelete
  8. முக்கியமான பகிர்வு. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  9. திரு. ராம்ஜி அவர்களின் கருத்தினை நானும் வழிமொழிகின்றேன். வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு தபால் மூலம் சிற்றிலக்கியங்கள் பெறுதல் அத்தனை உசிதமானதாக இல்லாதிருக்கும் நிலையில் இணையத்தில் ஏற்றி அனுப்பி வைக்க இயலுமா என்று கருத்து சொல்லவும்.

    ReplyDelete
  10. /sujatha???/

    அனானி, ஸாரி, சுஜாதாவிற்கு இடமில்லை போல :)

    ReplyDelete
  11. சுந்தர்,
    சரியானபடி இதழை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். உன்னதம் ஆகஸட் இதழின் உள்ளடக்கங்களை www.unnadham.blogspot.com என்ற முகவரியில் நான் வலையேற்றம் செய்துள்ளேன். கௌதம சித்தார்த்தன் விருப்பப்படி தொடர்ந்து வரும் இதழ்களின் சுருக்கமான உள்ளடக்கத்தை பதிவிட உள்ளேன்.

    கௌதம சித்தார்த்தனின் படைப்புகளைப் பற்றிய அறிமுகப்பதிவையும் வலையுலக வாசகர்களுக்கு அறியப்படுத்துங்கள்.
    ஒளிச்சிற்பம், வேனிற்கால வீடு பற்றிய குறிப்புகள், பச்சை பறவை குறிப்பிடத்குந்த தொகுப்புகள் உள்ளன.

    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  12. மாதவராஜ், யாத்ரா, சென்ஷி, பொன் வாசுதேவன்... நன்றி.

    ReplyDelete
  13. பகிர்வுக்கு நன்றி ஜ்யோவ்

    ReplyDelete
  14. ஆமாம் சுந்தரா,சென்ஷி சொல்வது போல் எங்களுக்கும் கிடைக்குமா என பாரேன்.நல்ல பகிர்வுடா இது.

    ReplyDelete
  15. எல்லோருக்கும் ஒப்பீனியன்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை ஃபேக்ட் ஆக்கும் போது தான் சிக்கலாகிவிடுகிறது. To each his own.

    நல்ல பதிவு குருவே.

    ReplyDelete
  16. சாரி.. ராங் நம்பர்.. :)

    ReplyDelete
  17. நந்தா, ராஜாராம், வெங்கிராஜா, சஞ்சய்... நன்றி.

    ReplyDelete