Tuesday, January 12, 2010

கிட்டத்தட்ட செய்யப்பட்ட கவிதை

நீரூற்றின் அருகில் உன் நீல நிறக் குட்டிக் கைகளால்
மதுவருந்துவதைப் பார்த்தேன்.
உன் கைகள் குட்டியில்லை, ஆனால் சிறியது.
அந்த நீரூற்று ஃபிரான்ஸில் இருக்கிறது
அங்கிருந்துதான் நீ உன்னுடைய கடைசிக் கடிதத்தை எழுதினாய்
அதற்கு என்னுடைய மறுமொழிக் கடிதத்திற்கு
உன்னிடமிருந்து பதில் இல்லை
நீ கடவுளைப் பற்றியும் தேவதைகளைப் பற்றியும் பெரிய எழுத்துகளில் பைத்தியக்காரக் கவிதைகளை
எழுதிக் கொண்டிருந்தாய்.
உனக்குப் பிரபலமான கலைஞர்களைத் தெரிந்திருந்தது
அவர்கள் எல்லாரும் உன்னுடைய காதலர்களாய் இருந்தார்கள்
நான் உனக்கு எழுதியிருந்தேன் : பரவாயில்லை அவர்கள்
வாழ்க்கையில் புகுந்து கொள், எனக்குப் பொறாமையில்லை,
ஏனெனில் நாம் சந்தித்ததேயில்லை. நாம்
ஒருமுறை நெருங்க இருந்தோம், ஆனால் சந்திக்கவோ
அல்லது இருவரும் தொட்டுக் கொள்ளக்கூட இல்லை.
நீ பிரபமானவர்களிடம் சென்றாய்,
பிரபலமானவர்களைப் பற்றி எழுதினாய்.
பிரபலமானவர்களுக்குத் தங்கள் புகழைப் பற்றித்தான்
கவலை என்பதைப் புரிந்து கொண்டாய்.
தங்களுக்குப் புகழைத் தரும்,
தங்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும்
இளம் பெண்ணைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.
காலையில் எழுந்து பெரிய எழுத்துகளில்
கடவுளைப் பற்றியும் தேவதைகளைப் பற்றியும்
கவிதை எழுதினாய். கடவுள் இறந்துவிட்டார் என்பது
நமக்குத் தெரியும். அவர்கள் சொன்னார்கள்,
ஆனால் உன்னைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது
என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை -
பெரிய எழுத்துகள் காரணமாயிருந்திருக்கலாம்.
பல ஆசிரியர்களிடமும் பதிப்பகங்களிடமும்
நீ மிகச் சிறந்த பெண் கவிஞர் என்று சொல்லியிருக்கிறேன்.
பிரசுரிக்கச் சொல்லியிருக்கிறேன். நீ
பித்துதான் ஆனால் நீ மந்திரவாதியும்கூட
உன்னிடம் பொய் இல்லை 
சின்னச் சின்னப் புகைப்படங்கள் மட்டும் வைத்துக் கொள்ளும்,
தொட்டுக்கொண்டேயிராத,
கடிதத் தொடர்பு மட்டுமே உள்ள
ஒரு ஆண் பெண்ணை எப்படிக் காதலிப்பானோ
அப்படிக் காதலித்தேன் உன்னை.
சிறிய அறையில் சிகரெட்டை உருட்டியபடி
நான் அமர்ந்திருக்க, பாத்ரூமில் நீ சிறுநீர் கழிக்கும்
ஓசையைக் கேட்டிருந்தால் உன்னை இன்னும் காதலித்திருப்பேன்.
ஆனால் அது நடக்கவேயில்லை. உன்
கடிதங்கள் சோகமாக ஆகிக் கொண்டிருந்தன. உன்
காதலர்கள் உன்னை ஏமாற்றினர்.
எல்லாக் காதலர்களும் ஏமாற்றுக்காரர்கள்தான்
என்று பதில் எழுதினேன்.
அந்தப் பதில் உன்னைச் சமாதானப்படுத்தவில்லை.
உன்னிடம் ஒரு அழும் மேஜை இருப்பதாகவும்,
அதை நதி ஓடும் பாலத்தின் மேல் போட்டு,
தினமும் இரவுகளில் அதன் மீது அமர்ந்து,
உன்னைக் காயப்படுத்திய, உன்னை மறந்த
காதலர்களை நினைத்து அழுவதாக எழுதியிருந்தாய்.
நான் உனக்குப் பதில் எழுதினேன் -
ஆனால் அதன் பிறகு உன்னிடமிருந்து கடிதமேயில்லை.
நீ தற்கொலை செய்து கொண்டதாக
3-4 மாதங்கள் கழித்து
என்னுடைய நண்பன் தெரியப்படுத்தினான்.
நாம் சந்தித்திருந்தால்,
உன்னிடம் நானோ அல்லது என்னிடம் நீயோ
உண்மையாக இருந்திருக்க மாட்டோம்
என்பதற்கான சாத்தியம் உள்ளது.
இப்படி முடிந்துபோனதே நல்லது.

(சார்லஸ் ப்யுகோவ்ஸ்கி எழுதியது. சில இடங்களில் மட்டும் வசதி கருதி மாற்றியிருக்கிறேன்)

25 comments:

  1. முதல் வாசிப்பில் தாவூ தீருது. அடுத்தடுத்து வாசித்துப் பார்க்கிறேன் :-)

    ReplyDelete
  2. குருஜி,

    நடுவுல அந்த எண்கள் என்ன சொல்லுதுன்னு மாத்திரம் சொல்லீருங்க.

    அப்ப மத்ததெல்லாம் புரிஞ்சுதானு கேக்காதீங்க.

    ReplyDelete
  3. அருமை.

    //சின்னச் சின்னப் புகைப்படங்கள் மட்டும் வைத்துக் கொள்ளும்,
    தொட்டுக்கொண்டேயிராத,
    கடிதத் தொடர்பு மட்டுமே உள்ள
    ஒரு ஆண் பெண்ணை எப்படிக் காதலிப்பானோ
    அப்படிக் காதலித்தேன் உன்னை.//

    இந்த வரிகளுக்குள் பொதிந்திருக்கும் அர்த்தங்கள்.கொள்ளை அழகு...:-)

    ReplyDelete
  4. நுணுக்கம் வந்திருக்கிறது

    ReplyDelete
  5. திருப்பி திருப்பி வாசித்த பிறகு என்னவோ பண்ணுதுடா சுந்தரா.அது என்னன்னு கண்டு பிடிக்காமல் இருக்க பிடிக்குது.எதுக்கு போயி எல்லாத்தையும் நோண்டிக்கிட்டு. இல்லையா?

    :-)

    ReplyDelete
  6. திருப்பியும் வந்து வாசித்து போறேன்..

    atractive!

    ReplyDelete
  7. ஒண்ணுமே புரியல...

    ReplyDelete
  8. //பிரபலமானவர்களுக்குத் தங்கள் புகழைப் பற்றித்தான்
    கவலை//

    பிரபலம் ஆயிட்டதா நினைச்சிகிறவங்களுக்கும் இதே கவலை உண்டு!

    ReplyDelete
  9. இதுக்கு கோனார் நோட்ஸ் எழுதறவங்களுக்கு பீச்சுல சிலை வைக்கலாம்..!!!

    ReplyDelete
  10. ஒரு மாதிரி வலி குடுக்கும் கவிதைய இல்லை கடிதமான்னு தெரியலை. ரொம்ப நல்ல இருக்கு

    ReplyDelete
  11. அப்பாடா நமக்கு முன்னாடியே சொல்லிருக்காங்க.. அதனால நானும் சொல்றேன் அட சத்தியமா சொல்றேங்க..
    ”நர்சிம் said...ஒண்ணுமே புரியல...”
    எனக்கும்தான்..?!!!

    ReplyDelete
  12. //
    நாம் சந்தித்திருந்தால்,
    உன்னிடம் நானோ அல்லது என்னிடம் நீயோ
    உண்மையாக இருந்திருக்க மாட்டோம்
    என்பதற்கான சாத்தியம் உள்ளது.
    இப்படி முடிந்துபோனதே நல்லது.
    //

    ம்...

    ReplyDelete
  13. சுந்தர் சார், கவிதை நல்லா இருக்கு.

    //சில இடங்களில் மட்டும் வசதி கருதி மாற்றியிருக்கிறேன்//
    யாருடைய வசதி கருதி? :-)

    ReplyDelete
  14. ஆஹா மிகவும் அருமை! .. பிரமித்து விட்டேன்...!

    // சார்லஸ் ப்யுகோவ்ஸ்கி எழுதியது. சில இடங்களில் மட்டும் வசதி கருதி மாற்றியிருக்கிறேன் //

    யாரோ ரஷ்யாக்கார பதிவர் எழுதுனது போலிருக்கு, நமக்கெதுக்கு வம்பு ... ;)

    ReplyDelete
  15. Nice jyovram. I suppose i understood it ! title unga choiceaa ?

    ReplyDelete
  16. லேகா அளவுக்கு புரியாவிட்டாலும் லேசாக புரிகிறது.இந்த கவிதை படித்தால் போதை இலவசமா!

    ReplyDelete
  17. குப்பைகளுக்கு (உ.தா நான் நேற்று எழுதியது) நடுவே ஒரு சில நல்ல கவிதைகள் (அது மொழிபெயர்ப்பாயினும்) வருவது தமிழ்சூழலுக்கு நல்லது என்று தோன்றுகிறது.

    மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், அதிகமான குப்பைகளை பார்த்து மெர்சலாகி, எல்லாமே குப்பைகள் தான் என்று நினைத்து சலிப்படைந்திருக்கிறேன்.

    உண்மையில் தமிழ் கவிதையுலகம் மிகப்பெரிய குப்பைத்தொட்டியாக, நேரவிரயமாக எனக்கு தோன்றுவது ஏன் ?

    பதில் கிடைக்குமா ஜ்யோவ் ?

    ReplyDelete
  18. //ஆனால் அதன் பிறகு உன்னிடமிருந்து கடிதமேயில்லை.
    நீ தற்கொலை செய்து கொண்டதாக
    3-4 மாதங்கள் கழித்து
    என்னுடைய நண்பன் தெரியப்படுத்தினான். //


    கவிதை ரொம்ப பாதிக்கிறது.

    ReplyDelete
  19. ராஜூ, யுவகிருஷ்ணா, தராசு, லேகா, டாக்டர் ருத்ரன், பா ராஜாராம், நர்சிம், வால்பையன், உண்மைத் தமிழன், தோழி, அண்ணாமலையான், குப்பன் யாஹு, அது சரி, கார்த்திகேயன் ஜி, மணிப்பக்கம், மணிகண்டன், அதிஷா, செந்தழல் ரவி, யாத்ரா... நன்றி.

    @ குப்பன் யாஹு, I love you too வெல்லாம் இல்லை.

    @ கார்த்திகேயன், கவிதையின் வசதி கருதி :)

    @ மணிகண்டன், கவிதையின் தலைப்பு An almost made up poem

    @ செந்தழல் ரவி, உங்களுக்கு ஏன் அப்படித் தோன்றுகிறது என்று என்னைக் கேட்டால் எப்படி? குப்பத்தொட்டி என்று நீங்கள் எழுதியிருப்பதில் ஏதோ உள்குத்து இருப்பது போல் தெரிகிறது :)

    ReplyDelete
  20. கவிதை ‍ புரியுது.... லைட்டா!...

    @#146 ‍- 10 முறை
    @#150 ‍- 2 முறை
    @#147 ‍- 1 முறை
    @#148 ‍- 1 முறை

    வருகிறது.. என்னவாக இருக்கும் என்று யோசித்து குழம்பியதுதான் மிச்சம்.

    ReplyDelete
  21. ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    இதுக்கு கோனார் நோட்ஸ் எழுதறவங்களுக்கு பீச்சுல சிலை வைக்கலாம்..!!!
    ///

    ReplyDelete
  22. //சிறிய அறையில் சிகரெட்டை உருட்டியபடி
    நான் அமர்ந்திருக்க, பாத்ரூமில் நீ சிறுநீர் கழிக்கும்
    ஓசையைக் கேட்டிருந்தால் உன்னை இன்னும் காதலித்திருப்பேன்,
    ஆனால் அது நடக்கவேயில்லை.// என்னும் வரிகளை வாசித்த போது, 'ஆகா!' என்று வியந்தேன். ஆனால் இது ஒரு மேகாட்டான் கவிதை என்று அறியவந்த போது தளர்ந்தேன்.

    'கிட்டத்தட்ட...' என்ன ஒரு தலைப்பு பாருங்கள்! படைப்பவர்களுக்குத் தெரியும் அந்த அவஸ்தை; முழுக்கக் கைகூடியும், புகழ்மயக்கத்தால் அவர்கள் கிழடுதட்டிப் போகையில் நதிப்பாலத்து அழுகை-இருக்கையில் உட்கார்ந்து கண்ணீர் விடுகிற அவளது அவலம்.

    'நீலம்' தொலைவின் நிறம். அது முதல் வரியிலேயே நிறுவப்பட்டுவிடுகிறது. 'சிகரெட்', சிறுநீர்' அளவுக்கு நெருக்கம் கூடி வந்தால் ஒருவேளை பிடித்துப்போட ஏலலாம். ஆனால் அப்படி நடந்திருந்தால்...? இப்படி முடிந்து போவதே நல்லது.

    'கிட்டத்தட்ட...' என்று ஆவதே நல்லது.

    ஒரு நல்ல கவிதையை வாசிக்கத் தந்ததுக்கு நன்றி. இதின் வழியாகவும் அறிகிறோம், தோல்விகள் பொருட்டல்ல.

    ('பெரிய எழுத்து' என்றுதான் புழங்கி வந்திருக்கிறோம். ஆனால் 'கடவுள் இறந்துவிட்டார்' என்னும் நீட்ஷேயின் தத்துவக் கூற்றுக்கு juxtaposed-ஆக வைக்கப் படுவதால், 'upper case' என்கிற ஆங்கிலப் பெய்வுக்கு higher truth என்கிற உள்ளுறை உள்ளதாகவும் கிட்டத்தட்ட ஒரு தோற்றம்).

    - ராஜசுந்தரராஜன்

    ReplyDelete
  23. பிள்ளையாண்டான், விதூஷ், ராஜ சுந்தர்ராஜன்... நன்றி.

    ReplyDelete