நகுலன் எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர் - கவிஞர். அவரைப் பற்றிய பேச்சுவந்தால் நாளெல்லாம் பேசி / கேட்டுக் கொண்டிருப்பேன். அவருடைய சில கவிதைகளை என்னுடைய குறிப்புகளுடன் பதிவிடவேண்டுமென்பது நெடுநாளைய விருப்பம். அதற்கு முன்னோட்டமாக இது.
நகுலனின் பேட்டியொன்று 1991ல் கல்குதிரை (நகுலன் சிறப்பிதழ்?) வந்திருந்தது. அப்பேட்டியில் அவரது கவிதையொன்றின் வரிகளைக் கொடுத்து விளக்கச் சொல்லியிருப்பார்கள். அது பற்றி அப்போது நண்பர்களிடம் பேசியது நினைவிருக்கிறது.
இப்போது நகுலன் இலக்கியத்தடம் புத்தகத்தில் அதை மீண்டும் படித்தபோது அந்த ஞாபகங்கள் துளிர்விட்டன. பேட்டியின் அப்பகுதியை மட்டும் கீழே தருகிறேன்.
கவிதை வரிகள் :
1. காகிதம் கிறுக்கிக் கவியானேன்
2. இருந்தாலும்
3. கவிஞர்கள் என்பவர்கள் பெண்கள் மாதிரி ஈஸ்வர சிருஷ்டி என்று நினைவு
4. மனம் நினைவு கூறும் அந்த முள்பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது.
5. சூசிப் பெண்ணே ரோசாப் பூவே
6. சாதாரண பறவைகளும் பூச்சிகளும் மறைந்து விடுமானால் உலகம் வெறிச்சென்று விடும்.
7. என்னையே அழித்துக் கொள்வதில்தான் ஆனந்தத்தை எய்துகிறேன்
8. நான் நானாக நாலுவிதம்
9. மனிதன் சாவிற்கு உள்ள அர்த்தத்தை கற்பிக்குமாறு போல
10. வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்
11. நாய் - விட்டுப் பிரியாத அனுபூதிநிலை
இனி அவரின் 'விளக்கங்கள்'. இது கவிதை மற்றும் கவிதையாக்கம் குறித்த அவரது thought processஐ புரிந்து கொள்ள உதவியாயிருக்குமென நினைக்கிறேன். :
1. காகிதம் கிறுக்கிக் கவியானேன் :
நான் முன்பு சொன்னமாதிரி முறையான படிப்பு படித்ததை படித்தபடியே சொல்வது என்பது - நமது சிந்தனை வளர்ச்சியை தடுக்கிறது. மாணவன் என்ற நிலையிலும் விரிவுரையாளன் என்ற நிலையிலும் எனக்குத் தெரிந்த வரையில் நான் அதிகமாக யாரையும் என்னைக் கவனிக்கும்படி ஒன்றும் செய்யவில்லை. என்னமோ படிக்கிறேன் அது எங்கேயோ போகிறது. அது எப்பொழுதோ மேல் விளிம்பில் வருகிறது. அப்பொழுது எழுத்து உருவாகிறது. ஒரு வழியில் சொல்லப்போனால் நாவிலிருந்துதான் நாதம் முளைக்கிறது என்று தோன்றுகிறது. பிளேட்டோ சொன்னமாதிரி நம் மனதில் இருப்பதைத்தான் நாம் எந்தப் புஸ்தகத்திலும் பார்க்கிறோம். இங்கு சொல்லப்பட்ட வரிகளில் முதல்வரி என் நினைவு சரியென்றால் தி சோ வேணுகோபலின் கவிதை ஒன்றிலிருந்து வந்தது என்று நினைக்கிறேன்.
2. இருந்தாலும் :
இருந்தாலும் என் புத்தி பின்னர் எந்த ஒரு கருத்தையோ அனுபவத்தையோ சோதனை செய்யும் ஒரு திருப்பம்.
3. கவிஞர்கள் என்பவர்கள் பெண்கள் மாதிரி ஈஸ்வர சிருஷ்டி என்று நினைவு :
இது வர்ஜீனியா உல்ஃப் என்ற ஆசிரியையின் ஒரு புஸ்தகத்திலிருந்து என் மனதில் புகுந்ததென்று நினைக்கிறேன். நமது பரிபாஷையில் சொல்வதென்றால் சிருஷ்டி என்பதுகூட அர்த்த நாரீஸ்வர வடிவந்தாங்கியது, அது தொழில் படுகையில்.
4. மனம் நினைவுகூறும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது :
இதுகூட மிகவும் நைந்து போன விஷயம். இதன் அடிப்படை படைப்புத் தொழிலை நாம் முன்கூட்டிக் கருதிச் செய்யமுடியாது என்பதுதான். இந்த அடிப்படை தற்காலத்தில் கேள்விக்குறியாக இருக்கிறது. என் வகையில் இதைச் சொல்வதென்றால் என்னை அறியாத ஒரு வேகத்திற்கு ஆட்பட்டு நான் செயல்படுகிறேன்.
5. சூசிப் பெண்ணே ரோசாப் பூவே :
இதுவும் ஓசை இன்பத்திற்காக எழுதப்பட்டது. இதற்குப் பின்னால் சுசீலா என்று கூறப்படும் ஒரு பெண்ணின் உருவம். இதைக் கூறுகையில் இந்த சுசீலாவைப் பற்றி ஒரு நண்பர் கூறியது ஞாபகம் வருகிறது. சுசீலாவின் சிறப்பு சுசீலாவில் இல்லை என்று.
6. சாதாரணப் பறவைகளும் பூச்சிகளும் மறைந்து விடுமானால் உலகம் வெறிச்சென்று விடும் :
இது H G வெல்ஸ் எழுதிய நாவலில் வாசித்த வாக்கியத்தின் மனதில் பதிந்த வரி.
7. என்னையே அழித்துக் கொள்வதில்தான் நான் ஆனந்தத்தை எய்துகிறேன் :
இதற்குச் சூழ்நிலை ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு வேளை ஒரு பைத்தியநிலையாகவும் இருக்கலாம். தற்கொலை என்பதற்கு ஒரு கவர்ச்சி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நான் தற்கொலை செய்ய முயற்சித்ததுண்டு. ஆனால், நான் அதில் செயல்படவில்லை. இன்றுகூட சில நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு. இனியும் வாழ்ந்து என்ன பயன். தற்கொலை செய்துகொண்டால் என்ன என்று, அவர் சொன்னார் : 69 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு இதை ஏன் சொல்ல வேண்டும் முன்னாடியே செய்திருக்க வேண்டும் என்றார். இதன் அடிப்படை எந்த ஒரு குறிக்கோளையும் அடைவதற்கு - அடைவதென்பதே நம்மை நாமே சித்ரவதை செய்வது போன்ற ஒரு அனுபவம். ஒரு வகையில் தோன்றுகிறது. திருப்தியான வாழ்க்கை உடையவர்கள் படைப்பிலக்கியம் படைக்க முடியாதென்று.
8. நான் நானாக நாலுவிதம் :
இதற்குக்கூட மூலம் D H லாரன்ஸ் எழுதிய ஒரு வாக்கியம் என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட உருவம் உண்டு, என்ற நிலையை இன்று நாம் காண்பதற்கில்லை என்று அவர் சொல்லியிருந்தார். பல உணர்ச்சிகள் பல சிந்தனைகள் தன்னோடு வாழ்வதற்கு தான் ஒரு வடிகால் என்ற அளவுக்கு மனிதத் தனித்துவம் மாறுபட்டு விட்டதென்று.
9. மனிதன் சாவதற்கு உள்ள அர்த்தத்தைக் கற்பிக்குமாறு போல :
இதற்குப்பின் பலமனிதர்கள் - வள்ளுவர் வேறொரு நிலையில் வேறொரு பொருளில் கூறிய மாதிரி, சிலரைக் காணும்போது செத்தவர்களும் உயிருடன் இருக்கிறார்களே! என்ற ஒரு வியப்புணர்ச்சி.
10. வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள் :
இவையெல்லாம் கேள்விமூலம் படித்த புத்தகங்கள் பிரக்ஞையில் விட்டுச் சென்ற பகுதிகள். Grdrudestin ஒரு இடத்தில் ஒரு வார்த்தையைத் திருப்பித் திருப்பி எழுதினால் அதற்கு பல்வேறு அர்த்தங்கள் வேண்டுமென்றில்லை என்று சொல்லியிருக்கிறான். அவருடைய புஸ்தகங்களை முழுவதும் புரிந்துகொண்டு படித்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. ஆனால் மொழி மூலம் படைப்புத் தொழிலை நடத்தும் எந்த எழுத்தாளனுக்கும் மொழியைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் எல்லைமீறிச் செல்கிறது. இந்த வாக்கியத்தின் அடித்தளம் இதுதான்.
11. நாய் - விட்டுப் பிரியாத அனுபூதிநிலை :
இதுவும் பாரதத்தில் இருந்து வந்த ஒரு தகவல்.
நகுலனின் பார்வையை ஓரளவிற்குப் புரிந்துகொள்வது அவருடைய கவிதைகளை அணுக உபயோகமாயிருக்கும். எனவே...
(ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட வேலையைச் சரியாகச் செய்யவில்லை. விரிவாக எழுதவேண்டும் என்று ஆசை. அதனாலேயே இம்மீள்பதிவு)
நேற்றிரவு உங்களது இந்த பதிவை வாசித்து கொண்டிருந்தேன்..தொடர்ந்து நகுலன் கவிதைகளை வாசிக்க தொடங்கியிருந்தேன் நள்ளிரவு வரை...
ReplyDeleteஇப்பொழுது இதே பதிவு மீளவும் :)
//மனம் நினைவு கூறும் அந்த முள்பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது.//
என்ன செய்வது குரு...இன்னும் பிடிபடவில்லை..இந்த ரகசிய உலகம் :))
/உலகச் சந்தயில்
ஒரு மனிதன் போனால்
இன்னொருவன்
உனக்கென்று
ஒரு லாபநஷ்டக்
கணக்கிருந்தால்
விஷயம் வேறு./
/"காதல்,மச்சான்,காதல்"/
மோதி மோதி மீள மட்டுமே முடிகிறது இப்பொழுது...
நல்ல பதிவு சுந்தர். நகுலன் கவிதைகளைப் படித்த போது, ஜெமோவின் விமர்சனக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.
ReplyDeleteசமநிலையான விமர்சனமாகவே இருந்ததென நினைக்கிறேன்.அதைப் பற்றி உங்கள் கருத்துக்களைப் பதிவிட முடியுமா?
//அவரைப் பற்றிய பேச்சுவந்தால் நாளெல்லாம் பேசி / கேட்டுக் கொண்டிருப்பேன்.//
ReplyDeleteஅவரைப் பற்றி பேசும்போதும் ஒரு முகம் வைத்திருப்பாய்.அதை இன்று பார்த்தது போல் இருந்தது.
அருமை மக்கா.
நல்ல பகிர்வு சுந்தர்.
ReplyDeleteகவிதையை வாசித்து முழுமையாக உள்வாங்கிக் கொள்வது என்பதில் பலரும் தெளிவில்லாமல்தான் இருக்கிறார்கள். அகநாழிகை அடுத்த இதழிற்கு இலங்கை பேராசிரியர் நுஃமான் அளித்துள்ள நேர்காணலில் கவிதையை அணுகும் முறை மற்றும் படிமங்கள், உத்தி பற்றி விரிவாக பகிர்ந்துள்ளார்.
கவிதை என்பது ஒரு தறி நெய்வது போலவும், ஒரு கீற்றை முடைவது போலவும், சிலசமயத்தில் காற்றில் அசையும் காதலியின் முந்தானை நம் முகத்தை உரசுவதும் போன்றதுதான் கவிதை. அதற்கான தருணம் நம் கையில் இல்லை.
ReplyDeleteஅது எந்தவைகையில் பிறக்கும் என்பதையும் நம்மால் குறைந்த அளவே அனுமாநிக்கமுடியும்.
மொத்தத்தில் நிறைவான பதிவு.
நல்ல பகிர்வு
ReplyDeleteபகிர்விற்கு மிக்க நன்றி.
ReplyDeleteதொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள். மிக்க நன்றி.
மிக நல்ல பகிர்வு.
ReplyDeleteஇம்மாதிரி பதிவுகள் நகுலனை சரியானபடி அணுகுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.
மிக்க நன்றி.
அற்புதமான பதிவு. தலைப்பு அருமை.
ReplyDeleteஜியோராம் சுந்தர் சார்!
ReplyDeleteஉங்களுடைய அஞ்சல் முகவரி கிடைக்குமா? வெள்ளிநிலா பற்றி அறிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன், நம்பிக்கை பொய்க்கையில் இந்த சுட்டியை படிக்கவும் ! நன்றி !
http://vellinila.blogspot.com/2009/12/blog-post.html
ராமசந்திரன் கவிதையில் சொக்கிப்போய் நிற்கிறேன். உங்கள் வலைப்பூவில் படித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
ReplyDeleteயாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!
இதுபற்றி சொல்லுங்களேன்
ரௌத்ரன், ரா கிரிதரன், பா ராஜாராம், பொன் வாசுதேவன், தமிழன் வீதி, T V ராதாகிருஷ்ணன், ஸ்ரீதர் V, ஸ்ரீதர் நாராயணன், நிலா ரசிகன், வெள்ளிநிலா ஷர்புதீன், என் விநாயக முருகன்... பின்னூட்டங்களுக்கு நன்றி. விரிவாக நகுலன் கவிதைகள் குறித்து எழுதவேண்டுமென்று ஆசைதான். எப்போது முடிகிறதென்று பார்ப்போம்.
ReplyDelete//Grdrudestin//
ReplyDeleteGertrude Stein
//Gertrude Stein//
ReplyDeleteNo it should be "Golti Sonti" an apt description for this cutlet called jyovram.
Hey - I am really delighted to find this. Good job!
ReplyDelete