ஆனால், சமீபமாக படிமமே கவிதை என்று பெருவாரியாக நம்பப்படும் ஒரு சூழல் உருவாகிவிட்டது போலிருக்கிறதே?
ஆமாம். ஆனால், நவீனக் கவிதை படிமங்களை விட்டும் விலகவேண்டிய கட்டாயத்தைச் சந்தித்திருக்கிறது. படிமப் பிரயோகம் தேய்ந்து வருகிறது. ஆனால், கவிதை என்ற வடிவமே ஒரு மாபெரும் படிமம்தான். எதிர்க்கவிதை (anti poetry) சகஜ கவிதை (plain poetry) போன்ற, படிமங்களே இல்லாத, கவிதை வடிவங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கவிதைக்கு வெளியே உள்ள பொருட்கள், கவிதைக்குள் காலடி எடுத்து வைத்ததுமே குறியீடாக மாறிவிடுவதைத் தவிர்க்க முடியாது. இன்றைய கவிஞனுக்கு உள்ள மிகப்பெரிய சவால் இது, குறியீடாக மாறாத வண்ணம் பருப்பொருட்களைக் கவிதைக்குள் கொண்டுவர முடியுமா என்பது.
நகுலனின் ராமச்சந்திரன் கவிதை?
ராமச்சந்திரன் ஒரு குறியீடுதானே!
அப்படி ஆகவேண்டிய அவசியமில்லை. எந்த ராமசந்திரன் என்பதை தத்துவார்த்தமாக எடுத்துக் கொள்ளும்போது வரும் பிரச்சினை அது. சுந்தர ராமசாமி இப்படி அதை வாசித்தார். அந்த ராமசந்திரனைத்தவிர வேறு எவருமே வர வாய்ப்பே இல்லை. எனவே, கவிதைகளில் உள்ள பிரம்மாண்டமான தனிமையை நோக்கி இந்த வாசல் திறக்கிறது. இதுவே, இதைக் கவிதையாக ஆக்குகிறது.
ஆமாம். அப்படி ஒரு சாத்தியம் உள்ளது. வியப்பாக உள்ளது. பத்து வருஷத்துக்கு முன்பு, நானும் தண்டபாணியும் ஒரு குற்றாலம் கவிதைப் பட்டறைக்கு வரும் வழியில் இதைப் படித்தோம். ‘இது என்ன கவிதை? இதெல்லாம் வெறும் பம்மாத்து’ என்று பேசிக் கொண்டாம்! இப்போது கவிதைக் கோட்பாடு விவாதங்களில் இந்தக் கவிதை வந்தபடியே இருக்கிறது.
படிமங்களைக் கவிதையில் பயன்படுத்தும்போது இப்போது நீங்கள் காணும் பிரச்சினை என்ன?
இப்போது முக்கிய சவாலாக இருப்பது, ஒரே படிமத்தை வளர்த்தெடுப்பது, அதைச்சுற்றி வாசக விசாரணையை முன்னெடுத்துச் செல்வது என்ற நடைமுறையை மீறவேண்டிய அவசியத்தைத்தான். இம்மாதிரி கவிதைகளில் தவிர்க்க முடியாமல் ஓர் ஒற்றைக்குவிமையம் உருவாகிவிடுகிறது. இந்தக் குவிமையத்தைச் சிதறடிக்க முடியுமா என்பதும் இன்றைய அவசியமான பரிசோதனைப் பிரதேசங்களில் ஒன்று. ஒன்றுக்கு மேற்பட்ட படிமங்களை, ஒன்றுக்கொன்று எதிரான படிமங்களை ஒரே கவிதைக்குள் இணைத்தும், இணைப்பின்றியும் பொருத்திப் பார்க்க முடியுமா என்பது. இதைப் பிரக்ஞைபூர்வமாகச் செய்ய முடியாது. செய்தால், தயாரிக்கப்பட்ட கவிதை என்பது பச்சையாகத் தெரிந்துவிடும். கவிதை தன் அகப்பெறுமானத்தை இழந்துவிடும். ஒன்றுக்கு மேற்பட்ட குவிமையங்களை, கவிதைக்குள் கொண்டு வரவேண்டும் என்ற உத்தேசத்துக்கு கவிமனம் விழித்துக் கொண்டுவிட்டால் போதும். இயல்பாகவே இது கவிதையில் நிகழ்ந்தேறிவிடும்.
கவிதையில் (அல்லது இலக்கியப் படைப்பில்) உள்ள வடிவப்பிரக்ஞையும் மொழிப் பிரக்ஞையும் ‘விரல் நுனியில்’ குடியேறிவிட வேண்டும் என்ற கருத்து எனக்கு உண்டு. வேண்டுமென்றே உத்திப்பரிசோதனை செய்யக்கூடாது என்று நினைப்பவன் நான். இது பற்றிய உங்கள் தரப்பு என்ன?
நான் ஒரு கனவு கண்டேன். ஒரு பழைய மீட்சி இதழைப் படிக்கிறேன். கடைசிப் பக்கத்தில் ஒரு சீனக்கவிதையின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பாளர் பெயரும் கரிய பக்கங்களில் வெள்ளை எழுத்துகளில் அச்சிடப்பட்ட வரிகளும் துல்லியமாகத் தெரிந்தன. கவிதையில் வரும் நதியின் பெயர் இதெமிட்சு. பிறகு விழித்துக் கொண்டேன். அப்படியே வரிவரியாக எழுதினேன். அது எனது முக்கியமான கவிதைகளில் ஒன்று (பெயர்: வீரப்பிரயாணம்). அந்த இதெமிட்சு என்ற பெயர் எங்கிருந்து வந்தது என்று வெகுநாள் யோசித்த பிறகு, ஒரு நாள் மின்சார ரயிலில் போகும்போது கண்டுபிடித்தேன். தினமும் உதாசீனமாகப் பார்த்தபடி போகக்கூடிய ஒரு பெரிய விளம்பரப்பலகையில் அப்பெயர் இருந்தது. ஏதோ ஜப்பானிய கம்பெனியின் பெயர்.
இங்கே கவிதையின் படிமம் மட்டுமல்ல; வரிவடிவம், அரைப்புள்ளி காற்புள்ளிகளுடன் அப்படியே ஆழ்மனதிலிருந்து நேரடியாக வந்திருக்கிறது. இது என் சொந்த அனுபவம்.
ஆம். இது எனக்கும் அனுபவம்தான். விஷ்ணுபுரத்தின் அத்தியாயத்தை விஷ்ணுபுரத்தின் தெருக்களில் வைத்து எழுதியது உண்டு. விஷ்ணுபுரத்தைப் பிரசுரிக்க ஆள்தேடி விஷ்ணுபுரத்து கோயிலுக்குப் போனதுகூட உண்டு...
இது எப்படி நடைபெறுகிறது. வடிவத்தை நாம் வாசித்து யோசித்து உள்ளே தள்ளுகிறோம். அது அங்கே உருமாறி நம்முடையதாக மாறிக் காத்திருக்கிறது. தேவைப்படும்போது தானாகவே வந்துவிடுகிறது.
படிமங்களைப் பற்றி மேலும் ஒரு கேள்வி. படிமம் என்பது, தத்துவம் அல்லது சிந்தனை அமைப்பின் தேவைக்கு ஏற்ப நமது அக ஓட்டத்தின் ஒரு கணம் அல்லது புறமாக நாம் காணும் காட்சியோட்டத்தின் ஒரு சட்டகம் பிரித்தெடுக்கப்பட்டு முன்னிறுத்தப்படுவதுதான் என்று நம்பக்கூடிய பின் நவீனத்துவக் கவிஞர்கள் உண்டு. படிமம் என்பது, தத்துவார்த்தமாக விரிக்கப்பட்டு அர்த்தப்படுத்தினால் மட்டுமே உயிர்பெறக்கூடியது என்றும் இவர்கள் கூறுவார்கள். பின் - நவீன இலக்கிய மரபு பொதுவாக, தத்துவச் சிந்தனைப் போக்குகள், கட்டுமானங்கள் எல்லாவற்றையும் மறுப்பது என்று நீங்கள் அறிவீர்கள். எனவே இப்படித் துண்டித்து எடுக்காமல் இயல்பான படிமப் பிரவாகமாக உள்ள அகநிகழ்வையே கவிதையாக ஆக்க முயல்கிறார்கள். உதாரணமாக, பிரேதா பிரேதன் கவிதைகளைத் தமிழிலிருந்து எடுத்துக் கூறலாம்...
முதலில் ஒரு விஷயம். மனதின் படிம மழையை எவராவது அப்படியே பதிவு செய்யமுடியுமா என்ன?
அதன் மாதிரி வடிவமாகக் கவிதையை ஆக்கலாமே.
அப்படியானால் அதில் தேர்வு உள்ளது; தொகுப்பு உள்ளது. அந்தத் தேர்வையும் தொகுப்பையும் செய்வது எது? தத்துவார்த்தமான பார்வையன்றி வேறு என்ன? நான் கவிதைக்குப் பின்னால் தத்துவார்த்தப் பார்வை உண்டு என்று கூறமாட்டேன். அனுபவம் மீதான ஒரு பார்வை உண்டு என்று மட்டும்தான் சொல்வேன். அதுதான் இங்கும் உள்ளது. அதைத் தத்துவார்த்தமாக விளக்க முடியும் அவ்வளவுதான்.
அத்துடன் பிரேதா - பிரேதன் கவிதைகளைப் பார்க்கும்போது அவை மிகுந்த தொழில்நுட்ப பிரக்ஞையுடன் ஆக்கப்பட்டுள்ளன என்றுதான் தோன்றுகிறது. படிமங்களைப் பெருக்கெடுக்க விடவேண்டும் என்று திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை போல அவை உள்ளன.
சமீபகாலமாக ‘யூமா வாசுகி’ எழுதும் கவிதைகள்?
அவற்றில் தடையற்ற பெருக்கு உள்ளது. நல்ல வரிகள் பல உள்ளன. ஆனால், நான் இம்மாதிரி வெளிப்பாட்டு ரீதிகள் வழியாக அந்தக் கவிதை உள்வாங்கப்படும் தருணத்தை சென்றடைய முயல்வேன். அந்த மூலம்தான் கவிதையின் கணம். Original Perception அது. அதைத்தான் ‘கவிதையைத் தரித்தல்’ என்றேன். இந்தக் கவிதையில் அப்படித் தரிக்கப்படுவது என்ன? வெறும் தாபம்தானே? தாபத்துக்கு அப்பால் என்ன என்ற தேடல் இல்லையே. அந்தத் தாபத்திற்கான காரணம் என்ன? அதன் ஊற்றுக்கண் என்ன? என்பது பற்றிய போதம் இவற்றில் இல்லை. ஆகவேதான் உக்கிரமாக தாபத்தை வெளிப்படுத்துவதில் ஈடுபட்டு திருப்தி அடைகின்றன. எனக்கு இது மேலோட்டமான ஒரு தளம் என்றுதான் படுகிறது.
எல்லாக் காலத்திலும் கவிதையில், ‘நாடகத்தன்மை’ ஒரு முக்கிய அம்சமாக இருந்து வந்துள்ளது. நவீனக் கவிதையின் விலகிய தொனி, அந்தரங்கக் குறிப்புத்தன்மை ஆகியவை காரணமாக அது நாடகத்தன்மையை இழந்துவிட்டது என்று தோன்றுகிறதே?
என் கவிதைகளில் அரங்கத்தன்மை (Theatrical element) இல்லை என்பது உண்மைதான். ஆனால், நாடகத்தன்மை இல்லாதது கவிதையாக இருக்கமுடியாது என்றே படுகிறது. கவிதையின் இயல்பிலேயே, காட்சிகளை மொழியில் நிகழ்த்திக்காட்டும் அம்சம் இருக்கிறது. ‘நிகழ்த்துதல்’ என்பதே நாடக அம்சம்தானே? மிகையுணர்வுக் கவிதைகளில் நாடகத்தன்மை சற்றுக் கூடுதலாக இருக்கும். மற்றபடி என் கவிதைகளில் அறிவார்த்தத்திற்கான அழுத்தம் சற்றுக் கூடுதலாகவும் உணர்ச்சித் ததும்பல்கள் அடக்கி வாசிக்கப்பட்டும் இருப்பதனால் நாடகத்தன்மை உடனடியாகத் தெரியவில்லை; அவ்வளவுதான். கவிதையில் அறிவார்த்தம் திகைப்புறும் கணங்களில் ஒரு நாடகத்தன்மை பிறக்கிறது. என் படிமம் ஒன்றை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
காய்களுக்குப் பதிலாக
கட்டங்கள் நகரும்
வினோத சதுரங்கத்தில்
நகராத காயாக
உணர்வுற்ற
போது...
இந்த வரிகளில் நாடகம் இருப்பதாகவே கருதுகிறேன்.
நான் ‘நாடகீயம்’ என்று கூறப்படுகிற உணர்வுச்சம நிலையையோ, அல்லது உணர்வுத் திருப்ப நிலையையோ இங்கு கூறவில்லை. நாடகத்தன்மை என்பது ‘மோதல்.’ கதாபாத்திரங்கள் அல்லது படிமங்கள் மோதலினூடாக வளர்ந்து நகர்ந்து முடிவுக்கு வரும் இயல்பு.
நவீனக் கவிதையில் தற்குரல் தன்மை (Soliloque) (அல்லது சுய உரையாடல் தன்மை) மோலோங்கியுள்ளது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. முன்பே குறிப்பிட்டதுபோல ஒற்றைப் படிமத்தன்மையும் இதே காரணங்களினால் உருவாவதாக இருக்கலாம். எப்படியானாலும் இந்தச் சுய உரையாடல்தன்மை எல்லா மோதல்களும் தனக்குள்ளேயே நிகழ்ந்துவிடும்படிச் செய்கிறது என்று படுகிறது.
ஆனால், இந்தச் சுயமோதல்களிலேயே நிறைய நாடகத்திற்கான வாய்ப்பு இருக்கிறது. முழுமையிலிருந்து பிரிந்த தனிக்காட்சிகளின் முடிவில்லாத தத்தளிப்பு ஒருவகை நாடகத்தன்மை உடையதுதான். அதன் மோதல் பிற அத்தனை காட்சிகளுடனும்கூட புலன்களுக்கு இடையேயான தடுமாற்றம் உருவாக்கும் நாடகம் இருக்கிறது.
முறிந்த கனலின் நீட்டியமுனையில்
சிராய்த்துக் கொண்டேன்...
என்ற என் வரி ஒரு நாடகத்தன்மையுடன்தான் உள்ளது.
இல்லை யுவன். மோதல்மூலம் உக்கிரப்படுத்தப்பட்டு நகர்ந்து ஒரு கண்டடைதலை எட்டும் நாடகத்தையே நான் குறிப்பிட்டேன். தத்தளிப்பு, மோதல், பரிணாமம் முதலிய எல்லாவற்றிலும் நாடகத்துக்கான சாத்தியம் உள்ளது. நான் அதைச் சொல்லவில்லை.
சரி, ‘மொழி’ என்றால், ஒலியும்கூடத்தானே? கவிதையின் ஒலியசைவு அல்லது இசைத்தன்மை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
மொழியில் இசைத்தன்மை கூடவேண்டுமானால் சந்தம், தாளம் சார்ந்த சொற்கட்கு, எதுகைகள் போன்ற பல்வேறு விஷயங்களை நாம் நாட வேண்டியிருக்கிறது. இவை ஒருவிதமான அழகியல் தோற்றத்தைத் தரக்கூடும்தான். ஆனாலும், கவிதையின் செயல்பாட்டு சுதந்திரத்துக்கு, சொல்லலின் இயல்புத் தன்மைக்கு, அது நிபந்தனைகளை விதித்துவிடும். நவீனக் கவிதை தன் இசைத் தன்மையை இழந்து கிட்டத்தட்ட 100 வருடங்கள் ஆகிவிட்டன. பாரதியின் வசன கவிதைகளையோ ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளையோ பாடலாகப் பாட முடியாது.
சமீபத்தில் ஒரு கூட்டத்தில் என்னுடைய கவிதை ஒன்றை திரு. என்.டி.ராஜ்குமார் இசையமைத்துப் பாடினார். ஆனால், அது தாளக்கட்டோடு கூடிய பாடல் அல்ல. நீண்ட விருத்தம், அல்லது தொகையறா, தாளப் பின்னணியற்ற இசைத்தல் என்று கூறலாம். அதைக் கேட்டபோது என்னுடைய கவிதை, என்னுடைய கவிதை போலவே இல்லை. சில இடங்களில் எனக்குக் கண்ணில் நீர் ஊறியது. ஆனால், அந்தத் தழுதழுப்பு அவர் அமைத்த மெட்டுக்கான எதிர்வினை என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் அந்தத் தழுதழுப்பு அல்ல என் உத்தேசம். அந்தக் கவிதையில் இருந்தது இனி ஒரு போதும் திரும்பிச் செல்ல இயலாத காலவெளி ஒன்றைப் பற்றிய ஏக்கக் கனவு. தனிமனித பாலியத்தின் பழைய ஞாபகம் (nostalgia) சார்ந்த நெகிழ்ச்சி அல்ல. மெட்டமைத்துப் பாடியபோது அந்தத் துக்கத்தின் தன்மை மாறிவிட்டது.
என்னுடைய கவிதைகள் என்றில்லை, இன்றைய நவீனத் தமிழ்க்கவிதையின் பெரும்பகுதி மன வாசிப்புக்கானவை; வாய்விட்டு வாசிக்க முடியாதவை. காரணம், வாய்விட்டு வாசிக்கும்போது உள்ள நிறுத்தங்களுக்கும், மனவாசிப்பில் உண்டாகும் நிறுத்தங்களுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. கவிதை ஒரு காகிதப்பிரதியாக தன் வரிகளுக்கு இடையே விடுத்துச் செல்லும் இடைவெளிகளில், வாசிக்கும் மனம் வேறுவிதமான மானசீக சாத்தியங்களை அனுபவிக்கிறது. இவற்றுக்கு மெட்டமைப்பது வேறு ஒருவிதமான செயல்பாடு. கவிதைகளின் கருமையத்திலிருந்து கவனத்தை அகற்றிவிடவும் கூடும் இது.
கவிதையில் இசைச் சாத்தியங்கள் வேறு; இசைமை (Musicality) என்பது வேறு. இது கவிதையின் உட்புலம், சொல்லல், சொல்வதற்குப் பயன்படும் படிமம், உருவகம் போன்ற உபகரணங்கள், வார்த்தைகளின் தேர்வு இவற்றுக்கு இடையேயான ஒத்திசைவாகும். நவீனக் கவிதை தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட இலக்கணங்களில் இதுவும் ஒன்றாகும்.
’ஜ்வாலையின் நாட்டியம்
அழைக்கிறது என்னை’
என்பது உங்கள் கவிதையின் ஒரு வரி. இவ்வரியை வேறுவிதமாக அமைத்தால் கவிதை தவறிவிடுகிறது. இந்த ஒலியமைவு குறித்துக் கேட்டேன்.
என் கவிதைகளில் பல இடங்களில் எதுகை போன்ற இசைக்குத் தகுந்த பிரயோகங்களும், பல கவிதைகளில் வார்த்தையடுக்குகளும், சந்த முறைகளும் உள்ளன. ‘ருசிகரம்’ என்ற கவிதையின் கடைசிப் பத்தியை வாய்விட்டு உச்சாடனம் போலப் படிக்க முடியும். ஆனால், இவை அக்கவிதையின் தேவைக்கும் இயல்புக்கும் ஏற்ப உருவாகிவரும் ஒலியமைப்புகள். இவற்றுக்கு ஒரு பங்களிப்பு உள்ளது அவ்வளவுதான்.
தமிழ் மரபுடன் இந்தக் கவிதைக் கொள்கைகளைப் பொருத்திப் பார்ப்பது உண்டா?
தமிழ் மரபுடன் முறையான பரிச்சயமும் பயிற்சியும் எனக்கில்லை. படிக்கும் செய்யுள்களையும் இன்றைய கவிதைகளின் பின்னணியில் வைத்தே பார்க்கிறேன். பழம்பாடல்கள்மீது இப்போதுள்ள தேவதா விசுவாசம் சரிதானா என்ற கேள்வி எழுந்து கொண்டேதான் இருக்கிறது. உதாரணமாக, கணியன் பூங்குன்றன் கவிதையான, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” - இல் கவிதையனுபவம் என்ற ஒன்று இல்லை. அது ஒரு தரிசனம். தத்துவத்தின் சாயை கொண்டது. மருத்துவம், வான சாஸ்திரம், ஜோசியம் எல்லாமே பாக்களாக எழுதப்பட்ட காலகட்டத்தில், எழுதப்பட்ட ஒரு தத்துவப்பார்வை அது. “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்பது ஓர் உபதேசம் மட்டுமே. இது எழுதப்பட்ட காலகட்டத்தில் வசனநடை இருந்திருக்குமானால், கணியன் பூங்குன்றனார் இதை ஒரு கட்டுரையாகவே எழுதியிருப்பார். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற கண்டுபிடிப்பு கவிதை அல்ல. அது கண்டுபிடிக்கப்பட உந்துதலாக இருந்த தோற்றுவாய், வாழ்வியல் அனுபவத்தளம் மட்டுமே கவிதை என்ற ஸ்தானத்தை அடையும். யாவற்றுக்கும் சுயமே அடிப்படை என்று கூறும் ஒரு மெய்யியல் கட்டுரையக் கவிதை என்று ஏற்றுக் கொள்வோமா?
சுந்தர ராமசாமி, “திருக்குறள் கவிதை இல்லை” என்று முன்பு சொன்னார். அதே பார்வையின் தொடர்ச்சியே இது என்று படுகிறது. அதாவது, இன்றைய கவிதையின் வடிவ இலக்கணமொன்றை மாறாத அளவுகோலாக வைத்து நேற்றை நிராகரிப்பது. இது நாளையையும் நிராகரிக்கும் என்பது ஓர் எச்சரிக்கை.
இந்த “கணியன் பூங்குன்றன் கவிதையையே ஒரு மகத்தான கவிதை” என்று கூறி, நான் மலையாளத்தில் எழுதி வரும் தொடரான சங்கச் சித்திரங்களில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.
அந்த வரிகளில் இணைப்பிரதியோ, வாசகப் பயணத்துக்கு இடமோ உண்டா?
கண்டிப்பாக, அதன் பின்பகுதியை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
... மின்னொடு வானம்
தந்துளி தங்கி ஆனாது
கல்பொழுது இரண்டும் மல்லற் பேரியாற்று
நீர்வழிப்படுஉம் புணைபோல...
என்று வாழ்வுக்கு, கணியன் தரும் படிமச்சித்திரம் ஒரு மகத்தான கவிதை. “மின்னல், வானம், குளிர்ந்து - துளியாகி - இறங்கி - கல்மோதி - நுரைத்தொலித்து - ஒன்றுகூடி - மெல்ல நகர்ந்து - கடல்சேரும் ஆறு” என்பது ஒரு முடிவில்லாத படிமம்தான். ஒரு நவீன வாசகன் அதன் வழியாகப் போகச் சாத்தியமான தூரம் எல்லையற்றது.
ஆனால், அது ஓர் உவமைதான். முதலில் கூறப்பட்ட தரிசனங்களுக்குத் தரப்பட்ட உதாரண ஆதாரம் மட்டுமே.
நேற்றுவரை பண்டிதர்கள் அப்படிக் கற்பித்திருக்கலாம். ஒரு நவீன வாசகன் பிரதியை - வரிகளை - மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். முதலில் கூறப்பட்ட தரிசனங்களை உறுதிப்படுத்துவதற்கு உரிய நகர்வற்ற உதாரணம் அல்ல இது. தன்னளவில் வளரும் படிமம். அது முதலில் கூறப்பட்ட வரிகளை விரிவுபடுத்தலாம்; உடைத்தும் வளரலாம். வானும், மின்னலும், குளுமையும், துளியும், அருவியும், மகாநதியும் ஒன்றே எனக் காட்டப்படுகிற இச்சித்திரத்தை எப்படி வெறும் உவமை என்று கூறமுடியும்?
ஆனால், கவிதையிலேயே அது உதாரணமாகத்தான் கூறப்படுகிறது.
அது கவிதையின் ஒரு கவித்துவத் தோரணை; நிபந்தனை அல்ல. பழைய கவிதைகளில் வெறும் அணியலங்காரங்கள் உள்ளன. அவை விளக்குவதையோ அழகுபடுத்துவைதையோ மட்டுமே நோக்கமாகக் கொண்டவை. அதே சமயம் அழகிய படிமங்களும் அதே அணியலங்காரங்களின் அமைப்பில் உள்ளன. அவற்றை வாசகன் விரித்து வாசிக்க வேண்டியுள்ளது.
ஆனால் இதில் ‘போல’ என்ற சொல் இருக்கிறது. அது இருக்கும்வரை அது உவமையணிதான்.
சரி, என் பிரதியில் அதை வெட்டிவிடுகிறேன். அப்புறம் என்ன? யுவன், அலங்காரங்கள்தான் மொழியில் உள்ள கட்டுமானங்கள். படிமங்களை மொழியில் புறவயமாக அடையாளம் காணமுடியாது. படிமங்கள் அக நிகழ்வுகள். இது படிமம். ஏனெனில், இது என்னில் படிமமாக நிகழ்கிறது. அந்தப் படிமம்தான் நீங்கள் குறிப்பிடும் அனுபவத்தளம்.
’மேகங்கள் வானில் பறக்கும் நதி’
என்று சொன்னால் கவிதையாகுமெனில் கணியன் வரியும் கவிதைதான். என் பார்வையில் மாபெரும் கவிதை.
பழைய பாடல்கள் ஒவ்வொன்று பற்றியும் இவ்விதமான சர்ச்சைகளுக்கு இடமிருக்கிறது. இதில் நமது கவிதையை மட்டுமல்ல கலாசாரத்தையே வரையறுக்க முயலும் அளவு முக்கியத்துவம் இருக்கிறது. என்னைப் பொருத்தவரை இந்தக் கவிதையில் உள்ள நீதியும், உபதேசமும் கவிதையாகாது. அப்படியே கவிதையாகுமென்றால் இன்றைய கவிதைகளில் காணப்படும் கோஷங்களும் பிரசாரங்களும் எல்லாமே கவிதையாகிவிடும்.
பழைய கவிதைகளைத் தேவதா விசுவாசத்துடன் அணுகக் கூடாது; அது கவிதை வாசகனின் இயல்பேயல்ல என்பது முற்றிலும் உண்மை. நவீனக் கவிதை பற்றிய பிரக்ஞையுடன்தான் அவன் அவற்றை வாசிக்க வேண்டும். ஆனால், அப்படி வாசிக்கும்போதுகூட சங்கக் கவிதைகள் மிகக் கணிசமானவை, நவீனக் கவிதைகளைவிட கூரிய கவிதையனுபவங்களாக உள்ளன என்பது என் அபிப்ராயம். ஏறத்தாழ 50 வாரங்களாக மலையாளத்தில் இது குறித்துத்தான் எழுதி வருகிறேன்.
நவீனக் கவிதையுடனும் கவிதைப் பார்வையுடனும் பழைய கவிதைகளுக்கான தொடர்பை அல்லது தொடர்பின்மையைக் கண்டறிவது ஒரு முழுநேர வேலை. யாராவது முன் கையெடுத்துச் செய்தால் மிகவும் பாராட்டப்பட வேண்டிய சேவையாக அது இருக்கும்
(இத்துடன் நேர்காணல் நிறைவுபெறுகிறது. நன்றி : எனி இந்தியன் பதிப்பகம் & சொல் புதிது).
million thanks sundar
ReplyDeletevaalga neer emmaan
நன்றி, ராம்ஜி யாஹு.
ReplyDeleteகவிதைபற்றி பழங்கதை பேசும் இருவரின் உரையாடல்
ReplyDeleteஅல்லது கவிதைபற்றிய இருவரின் சில உளறல்கள்.
உண்மையில் விவாதம் தேவை.
ஒருவரின் தனித்த கருத்தாக அமையும்
நேர்காணல் அவசியமல்ல.
நான் விவாதிக்கவே விரும்புகிறேன்.
மாற்றுப்பிரதி said...
ReplyDeleteஅட லூசுப்பிரதி , இதையாவது அவர்கள் செய்தார்கள் , நீங்கள் கிழித்தது என்னவோ ?