நீங்கள் ஒரு தொழில் நடத்துகிறீர்கள். அதற்குப் பணம் தேவைப் படுகிறது. கடனாக வாங்கினால் முழுப் பணத்திற்கும் வட்டி தரவேண்டும். அசலையும் திருப்பித் தந்து தொலைக்கவேண்டும்.
அதற்குப் பதிலாக பத்து ரூபாய் அடக்க விலையில் பங்குகளைவிட்டால், அதற்கு ப்ரீமியமாக 490 வைத்து 500 ரூபாய் ஒரு பங்கு என விற்கலாம். அதன்மூலம் கிடைக்கும் ஆயிரக்கணக்கான கோடிகள் கொண்டு தொழில் செய்யலாம். மொத்த 500 ரூபாய்க்குமென இல்லாது அடக்கவிலையான 10 ரூபாய்க்கு மட்டும் டிவிடெண்ட் கொடுத்தால் போதும்.
அப்படி மக்களிடமிருந்து வாங்கிய பணத்தை தன்னுடைய மகன்களின் நிறுவனங்களை வாங்குகிறேன் எனச் சொல்லி சுருட்டிக் கொள்ளலாம்.
அடுத்தவன் பையிலிருந்து பணத்தை எடுத்தால் அதற்குப் பெயர் திருட்டு. மாட்டினால் தர்ம அடியும் சிறை தண்டனையும் உண்டு.
அதையே பெரிய அளவில் செய்தால்...
சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு முடிவெடுக்கிறது. சுமார் 8000 கோடி ரூபாய்க்கு மேதாஸ் ப்ராபர்டீஸ் மற்றும் மேதாஸ் இன்ஃபிராவை வாங்குவாதாக. ப்ராபர்டீஸிற்கு 1.3 பில்லியன் டாலரும் இன்ஃபிராவிற்கு 0.3 பில்லியன் டாலரும் மதிப்பிடப்பட்டு அந்த விலையில் வாங்க முடிவெடுக்கிறார்கள். இதில் இன்ஃபிரா மட்டுமே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம். ப்ராபர்டீஸ் தனியார் சொந்தம். (Satyamஐ தலைகீழாக எழுதினால் வருவதுதான் Maytas!).
மேதாஸ் ப்ராபர்டீஸும் மேதாஸ் இன்ஃபிராவும் சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் மகன்களின் கம்பெனிகள். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ராஜூக்களின் பங்கு மதிப்பு 300 மில்லியன் டாலர்கள். 300 மில்லியன் முதலீட்டில் 1.6 பில்லியன் பணத்தை தன் மகன்களுக்குத் தர முடிவெடுக்கிறார் ராமலிங்க ராஜூ. இதற்கு பங்குதாரர்களின் ஒப்புதல் தேவையில்லை எனவும் முடிவெடுக்கிறார்.
இம்முடிவு செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை மூடும் நேரத்திற்குப் பிறகு எடுக்கப்படுகிறது. New York Exchangeல் சத்யம் பங்குகள் ரணகளப் படுகிறது. முதலீட்டாளர்கள் நெருக்குகிறார்கள். அடுத்த நாள் காலை மகன்களின் நிறுவனங்களை வாங்கும் முடிவை கைவிடுகிறார்கள். ஆனாலும் பங்குச் சந்தையில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 30% வீழ்கின்றன.
இதில் இன்னமும் சில உள்குத்துகள் இருக்கின்றன.
மேதாஸ் ப்ராபர்டீஸ் நிறுவனத்தில் மதிப்பு 1.3 பில்லியன் டாலராக இருக்க முடியாதென்றும் அது தன் வசமிருக்கும் விவசாய நிலங்களை வணிக நிலங்களாகக் காட்டி அதன்மூலம் தங்கள் நிறுவன மதிப்பை 90% ஊதிப் பெரிதாக்கியிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். அதாவது விற்பது மகனென்றால், பத்து ரூபாய்ப் பொருளை 100 ரூபாய்க்கு வாங்குவது, அதுவும் அடுத்தவர் பணத்தில்!.
வேறு சிலர் இப்படி அறிவித்ததன்மூலம் சந்தையில் சத்யம் பங்குகளின் மதிப்பு விழும், அப்போது தன்னுடைய பினாமிகளின்மூலம் பங்குகளைக் குறைந்த விலையில் வாங்கலாம் என்பது ராமலிங்க ராஜூவின் கணக்காக இருக்கலாம் என்கிறார்கள்.
அதாவது, யாரும் எதிர்க்கவில்லையென்றால், தன் மகன்களுக்கு 8000 கோடி ரூபாய் லாபம். எதிர்த்தால், பங்குகளைக் குறைந்த விலையில் வாங்கி பிறகு விற்றுக் கொள்ளை லாபம் அடையலாம்.
இதுதான் தலை விழுந்தால் நான் ஜெயித்தேன், பூ விழுந்தால் நீ தோற்றாய் என்பதோ??
பிற்சேர்க்கை : இது தொடர்ப்பான அடுத்த இடுகைகள் :
http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_1051.html
http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_14.html