Wednesday, January 14, 2009

விப்ரோ சத்யம் மற்றும் பங்குச் சந்தை

விப்ரோ

உலகவங்கி விப்ரோவை 2011 வரை தடைசெய்திருக்கிறது. முதலில் விப்ரோ conflict of interest என சால்ஜாப்பு சொன்னது. உலக வங்கி தெளிவாக தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு லஞ்சம் (இதையே வேறு வார்த்தைகளில் சொல்லியிருந்தார்கள்) கொடுத்ததால்தான் விப்ரோவைத் தடைசெய்ததாய் அறிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து விப்ரோ டெக்னாலஜிஸின் Co - Chief Executive கிரிஷ் பரஞ்சபே சொல்லியது :

"நிறுவனத்தின் 2% பங்குகளை எங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கும் சில வாடிக்கையாளர்களுக்கும் கொடுத்தோம். அப்படி issue priceல் 72,000 டாலர்களுக்கு உலக வங்கியில் பணிபுரிபவர்களுக்கு தந்தோம். அந்த வங்கியிடம் எங்களுக்குப் பெரிதாக ஒன்றும் வர்த்தகமில்லை, அதிகபட்சம் மொத்தமாக 10 லட்சம் டாலர்கள்கூட இல்லை."

இதில் முக்கியமான சிக்கல் என்னவென்றால் வேலை செய்பவர்களுக்குச் ஊக்கத்தொகை, போனஸ் தரலாம். ஆனால், அதையே வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்தால்...??

விப்ரோவே வெளிப்படையாகச் சொல்லியபடி மொத்த வியாபாரத்தில் 7.2% மதிப்பிற்கு பங்குகளைக் கொடுத்திருக்கிறார்கள் (issue priceற்கும் சந்தை விலைக்குமான வித்தியாசத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!).

விப்ரோ கொடுத்திருப்பது அப்பட்டமான லஞ்சம். இதன் மூலமே பெரிய வணிக நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கின்றன என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும், இப்படி வெட்ட வெளிச்சமாகி, விப்ரோ போன்ற நிறுவனங்களின் புனித பிம்பங்கள் கட்டவிழத் துவங்கியது ஒருவிதத்தில் நல்லதுதான்.

அரசியல்வாதிகளை sting oprationaகளிலிருந்து பலவற்றையும் செய்து தோலுரிப்பதுபோல் வணிக நிறுவனங்களைச் செய்வதில்லை ஊடகங்கள். அதற்கு விளம்பரம் மட்டுமல்ல, என்ன இருந்தாலும் அவர்கள் நம்மைபோன்ற முதலாளிகள் என்ற பாச உணர்வுதான் காரணமாயிருக்கமுடியும். தொலைக்காட்சி ஊடகங்களின் புனிதபிம்பங்கள் எப்போது உடையுமோ தெரியவில்லை.

சத்யம்

சத்யம் பிரச்சனையில் ராமலிங்க ராஜூவையும் அவரது தம்பி ராம ராஜூவையும் (காலதாமதமாகக்) கைது செய்தது செபி விசாரணையை ஒத்திப் போடத்தான் எனச் சிலர் சொல்கிறார்கள். ஹைதராபாத்தில் உள்ள அரசு - இயந்திரத்திற்கும் ராஜூக்களுக்குமுள்ள நெருங்கிய உறவு வெள்ளிடைமலை. உபரி தகவலாக 25 வழக்கறிஞர்கள் கொண்ட ஒரு பெரிய குழு ராஜூவிற்காக வாதாடப் போகிறதாம். இவ்வளவு பெரிய குழுவிற்கு எவ்வளவு செலாவுகுமோ என விசனப்பட்ட என்னிடம், யார் வீட்டுக் காசு என்கிறான் என் நண்பன்!

இப்போதாவது சில கேள்விகள் கேட்கப்பட்டேயாக வேண்டும்!

1. ஊடகங்கள் ஏன் சத்யத்தில் உழைப்பவர்களின் (யூகமாக இல்லாமல் போகப்போகும்) வேலையைப் பற்றி இவ்வளவு அதிகமாக கவலைப்படுகின்றன. டன்லப் போன்ற தனியார் நிறுவனங்களிலும், தமிழக அரசின் சாலைப் பணியாளர்களும் வேலையிழந்தபோது இந்த அக்கறை வந்ததா?

2. மக்களின் வரிப் பணத்தை எதற்காக சத்யம் போன்ற ஒரு தனிப்பட்ட (அதுவும் ஆரம்பித்தவர்கள் செய்த திருட்டு காரணத்தால் கவிழப்போகும்) நிறுவனத்தைத் தூக்கி நிறுத்த செலவு செய்ய வேண்டும்?

3. இப்போது ஆடிட்டர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகச் சொல்லும் ICAI, இதே ஆடிட்டர்கள்மீது GTB Bank தொடர்பாகப் பலவருடங்கள்முன் ஆரம்பித்த விசாரணை என்ன ஆனது? இம்மாதிரியாகத் தவறு செய்த பல உள்ளூர் ஆடிட்டர்கள் தடைசெய்யப்பட்டிருக்கிறார்கள் எனச் சொல்லித் தப்பிக்க முடியாது; கேள்வி, பன்னாட்டு முதலாளிகள் என்றால் மட்டும் ஏன் உங்கள் நடவடிக்கைகள் நொண்டியடிக்கின்றன என்பதுதான்.

4. SBI மேதாஸ் இன்ஃபிராவிற்கு 500 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. அதை வராக் கடனாக அறிவிக்க நேரலாம் என இப்போது சொல்லியிருக்கிறது. ஏன் இவ்விஷயத்தில் இத்தனை நாட்கள் மௌனம்?

5. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலங்களை 4 மடங்குகள் குறைந்த விலையில் மேதாஸ் இன்ஃபிராவிற்குக் கொடுத்திருக்கும் ஆந்திர அரசு மேலும் முன் பணமாக 600 கோடி ரூபாய் பல்வேறு திட்டங்களுக்காகக் கொடுத்திருக்கிறது. இந்தத் திட்டத்தை ஒரு scam waiting to happen என dmrc ஸ்ரீதரன் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் (ஸ்ரீதரனுக்குப் பரிவட்டம் கட்டுவது என் நோக்கமல்ல). ஆனாலும் அந்தத் திட்டத்தைத் தொடர்ந்தது ஏன்?

பங்குச் சந்தை

சுழியம் போன்ற நண்பர்கள் பங்குச் சந்தையில் நிறுவனங்களின் நிலைபார்த்து முதலீடு செய்ய வேண்டுமென்றும், எவ்வளவுக்கெவ்வளவு அபாயம் கூடுதலோ அவ்வளவுக்கவ்வளவு லாபமும் கூடுதல் போன்ற வாதங்களை முன்வைக்கிறார்கள்.

உண்மையில் என்ன நடக்கிறது? அவர்கள் கொடுக்கும் நிதிநிலை அறிக்கையே பொய்யானது எனும்போது எதன் அடிப்படையில் நீங்கள் முடிவு செய்யமுடியும்? போக, அவர்கள் தொழில் செய்ய நீங்கள் எதற்காகப் பணம் தர வேண்டும்? அவர்களுக்கு வேண்டுமானால் கடன் பத்திரங்களை வெளியிட்டு பணம் திரட்டிக் கொள்ளட்டுமே. உதாரணத்திற்கு இப்போது சத்யம் பங்குகளையே எடுத்துக் கொள்வோம்... எவ்வளவு பேர் அதை 550 ரூபாய்க்கு ஒரு பங்கு என்ற வீதத்தில் வாங்கியிருப்பார்கள். ஆனால் சத்யம் 20% டிவிடெண்ட் என்றாலும் அதன் அடக்க விலையான 2 ரூபாய்க்குத்தானே தருகிறார்கள் (அதாவது ஒரு பங்கிற்கு நீங்கள் 550 ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தாலும் அம்முதலீட்டிற்கு வருடத்திற்கு 80 பைசா டிவிடெண்டாகப் பெறுகிறீர்கள்!).

அபாயம் கூடுதலாக இருந்தால் லாபம் கூடுதலாக இருக்கும் என்பது அவர்கள் கிளப்பிவிட்ட மாயை!

சென்செக்ஸிலிள்ள 30 கம்பெனிகளின் (மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின்) மொத்த சந்தை மதிப்பீடென்ன, இந்தியாவின் gdp என்ன போன்ற சிக்கலான விஷயங்களுக்குப் போகாமலேயே பங்குச் சந்தை என்பது ஒரு ஏமாற்றுவேலை என்பது புரியும்.

யோசித்துப் பாருங்கள். கடந்த இருபது வருடங்களில் நடந்த மிகப் பெரிய பொருளாதார ஊழல்கள் பங்குச் சந்தையோடு நேரடித் தொடர்புடையவை (ஹர்ஷத் மேத்தா & பாரேக்). இப்போது சத்யம். நேரடித் தொடர்பில்லாவிட்டாலும், இது பங்குச் சந்தை மதிப்பிடலை (stock market valuation) அதிகப்படுத்த தொடர்ந்து ஓடுவதால் ஏற்படும் பிரச்சனையாகச் சொல்லலாம். இதில் உள்ள பண சுருட்டல்கள் தனிக் கதை!.

இது தொடர்பாக முன்னர் எழுதிய இடுகைகளின் சுட்டிகள் :

http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_1051.html

http://jyovramsundar.blogspot.com/2008/12/blog-post_19.html

17 comments:

  1. சுந்தர்!

    யோசிப்பதற்கான நிறைய விஷயங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.

    // ஊடகங்கள் ஏன் சத்யத்தில் உழைப்பவர்களின் (யூகமாக இல்லாமல் போகப்போகும்) வேலையைப் பற்றி இவ்வளவு அதிகமாக கவலைப்படுகின்றன. டன்லப் போன்ற தனியார் நிறுவனங்களிலும், தமிழக அரசின் சாலைப் பணியாளர்களும் வேலையிழந்தபோது இந்த அக்கறை வந்ததா?//

    மிக முக்கியமான கேள்வி இது.

    கோளாறு நிரம்பிய அமைப்பின் வேரில் இருக்கிறது இதற்கான விடைகள். சத்யம் நிறுவன ஊழியர்கள் வேலையற்று நின்றால், அது ஐ.டி துறையில் கடுமையான அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதும், இவர்கள் ஊதி ஊதி வளர்த்துக் கொண்டிருக்கிற கனவு தேசம் அமபலப்பட்டுப் போகும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

    ReplyDelete
  2. //விப்ரோ கொடுத்திருப்பது அப்பட்டமான லஞ்சம். இதன் மூலமே பெரிய வணிக நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கின்றன என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும், இப்படி வெட்ட வெளிச்சமாகி, விப்ரோ போன்ற நிறுவனங்களின் புனித பிம்பங்கள் கட்டவிழத் துவங்கியது ஒருவிதத்தில் நல்லதுதான்.
    /////
    விப்ரோ வெளிப்படையாக அறிவித்தப்படி,2000ம் ஆண்டு,அமெரிக்கப்பங்கு சந்தையின் ஒப்புதலோடுதான் பங்குகள் வெளிப்படையாக அளிக்கப்பட்டுள்ளன.வோர்ல்ட் பாங்க் மட்டும் அல்ல.அப்போது விப்ரோவின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலோனோருக்கு higher management வழியாக வழங்கியுள்ளனர்.அது ஒரு வியாபாரயுக்தி.வாடிக்கையாளர்கள், அவர்கள் வேலை செய்யும் கம்பெனியின் சட்டவிதிகளுக்கு உட்பட்டே வாங்கியுள்ளனர்.

    இங்கு அமெரிக்க அரசியலை புரிந்துக்கொள்ளவேண்டும்.ஒபாமா 'அவுட்சோர்சிங்கு எதிரானவர்.அவர் இன்னும் சில தினங்களில் பதவியேற்க்க உள்ளார்.வோர்ல்ட் பேங்க் சரியாக இந்த நேரத்தில் நாங்கள் 'வெளிப்படையாக' இருக்கப்போகிறோம் என்ற போர்வையில் இந்திய சாப்ட்வேர் கம்பெனிகளை டார்கெட் செய்துள்ளனர்.முதலில் 4'வது இடத்தில் உள்ள சத்யம்,3ம் இடத்தில் உள்ள விப்ரோ...அடுத்து இன்போசிஸ்,டிசிஎஸ் பற்றியும் ஏதாவதொரு விதத்தில் பிரச்சனையைக் கிளப்பி, ஒபாமா பதவிக்கு வந்தவுடன்,அவருடைய வேலையை சுலபமாக்கி எந்த வேலையும் இந்தியாவிற்கு வராமல் தடுப்பார்கள்.
    இன்று IT துறை பாதிப்புள்ளாக தொடங்கியுள்ளது.இதன் தாக்கம் அனைத்து துறைகளிலும் எதிரொலித்து,பெரும்பாலோனோரை சிக்கலில் ஆழ்த்த்ப்போகிறது..இதிலிருந்து மீண்டு வருவதென்பது ஒரு மாபெரும் சவால்....

    ReplyDelete
  3. மிக நல்லதொரு கட்டுரை.

    கடன் பத்திரங்கள் வழங்குவதிலும் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. நிறுவனங்களின் கடன் நிலவரத்தை (Credit Rating) சரியாக வரிசைபடுத்தி உங்கள் முதலீட்டின் பாதுகாப்பைப் பற்றி சரியாக தெரியபடுத்துவதும் முக்கியம். PWC போன்றவர்களின் தணிக்கையே நம்பகத்தன்மை இழந்து வரும்போது, கிரெடிட் ரேட்டிங்கின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறிதான்.

    சமீபத்தில் Fannie May, Freddie Mac-ன் கிரெடிட் ரேட்டிங் தாமதமாக குறைக்கப்பட்டது என்ற குற்றசாட்டு எழுந்தது.

    ReplyDelete
  4. ********
    1. ஊடகங்கள் ஏன் சத்யத்தில் உழைப்பவர்களின் (யூகமாக இல்லாமல் போகப்போகும்) வேலையைப் பற்றி இவ்வளவு அதிகமாக கவலைப்படுகின்றன. டன்லப் போன்ற தனியார் நிறுவனங்களிலும், தமிழக அரசின் சாலைப் பணியாளர்களும் வேலையிழந்தபோது இந்த அக்கறை வந்ததா?
    *********

    இதுவரைக்கும் சத்யம்ல வேல பாக்கற மக்களுக்கு பரிவா ஊடகங்கள் எழுதினதா தெரியலயே ! என்ன அரசாங்கம் கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்றாங்க. அது எதிர்பார்த்தது தான் !

    தமிழக அரசு சாலை பணியாளர்கள் வேலை இழந்தபோது ஊடகங்கள் அதப்பத்தி நிறையவே எழுதினா மாதிரி தான் என் நினைவு.

    தினமலரில் ஒருமுறை IT இறங்குமுகம் ஆக தொடங்கியபோது (6 மாதங்களுக்கு முன்) எழுதப்பட்ட தலையங்கம் "வச்சாண்ட ஆப்பு". ஊடகங்களுக்கு மிதமிஞ்சிய மகிழ்ச்சியே !

    அரசாங்கம் சத்யம் பணியாளர்களுக்கும் / சாலை பணியாலர்களுக்கும் ஒன்றும் செய்யபோவது இல்லை. ஆனால் சத்யமில் வேலை பார்ப்பவர்களுக்கு வேறு வேலை கிடைப்பது எளிது. சாலை பணியாளர்கள் வேறு வேலைக்கு வழியின்றி அரசாங்கத்தை எதிர்பார்க்க வேண்டி இருக்கிறது.

    ReplyDelete
  5. //அடுத்து இன்போசிஸ்,டிசிஎஸ் பற்றியும் ஏதாவதொரு விதத்தில் பிரச்சனையைக் கிளப்பி//

    சத்யம் உலக வங்கியுடன் செய்து கொண்ட பல ஒப்பந்தங்கள் தற்பொழுது டிசிஎஸ் வசம்.

    இப்படியெல்லாம் அமெரிக்க அரசியலை 'எளிமை'படுத்தி புரிந்து கொள்ளுதல் தவறு.

    அவுட்-சோர்ஸிங்-ல் நிறைய நிறுவனங்களுக்கு இலாபமே. அது இந்திய நிறுவனமா, அர்ஜெண்டினாவா, பிலிப்பைண்ஸா என்பதை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.

    உலக வங்கி ஏதோ இன்று நேற்று இந்த முடிவுகளை எடுக்கவில்லை. விப்ரோ-வை தடை செய்தது 2007ல். சத்யம் 2008-ல். இது ஏதோ இந்திய நிறுவனங்களுக்கு மட்டும் எதிரானது அல்ல என்பதுதான் உண்மை.

    வாடிக்கையாளர்கள் / ஒப்பந்தக்காரர்கள் பற்றிய சென்ஸிடிவான விசயங்களை வெளியிடுவது மரபல்ல. உங்கள் மளிகை கடைக்காரர் 500 ரூபாய்க்கு மேல் நீங்கள் மளிகை சாமான் வாங்கினால் ஒரு பாக்கெட் முந்திரி பருப்பு அளிப்பது போன்ற மார்க்கெட்டிங் ஸ்ட்ராடிஜி.

    உலக வங்கி தனது நடைமுறைகளை மாற்றிக் கொண்டது போல, அதனுடைய ஒப்பந்தக்காரர்களும் மாற்றிக் கொண்டு தொடர்ந்து ஒப்பந்தம் போடத்தான் போகிறார்கள்.

    ReplyDelete
  6. பெயில் அவுட் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. கரும்புக்கு 1000 ரூபாய் (மிக நியாயமான ஒன்று) கேட்கப்பட்ட போது, அரிசி கொள்முதல் விலையை உயர்த்த கேட்ட போது(தண்ணீர் இல்லாமல் எலிக்கறி சாப்பிட்ட போது), நெசவாளர் பிரச்சினையின் போது (சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டபோது)பெயில் அவுட் தர யோசிக்காத அரசாங்கம் இதற்க்கு மட்டும் எப்படி தரலாம்?

    ReplyDelete
  7. \\அப்போது விப்ரோவின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலோனோருக்கு higher management வழியாக வழங்கியுள்ளனர்.அது ஒரு வியாபாரயுக்தி.\\

    மோகன்,

    வியாபார யுக்தி என்றால் சர்வைவல் ஆவதற்க்கு கொடுத்ததாக தானே அர்த்தம் வருகிறது.

    கமாண்டிங் நிலையில் இருக்கும் நிறுவனம் ஏன் அப்படி செய்ய வேண்டும்?

    அப்படியானால் இப்படி ஆர்டர் கிடைத்தால் தான் உண்டு என்ற நிலையில்தான் பெரும்பாலான ஐ டி நிறுவனங்கள் உள்ளனவா?

    இதை நம்பி செலவுகள் (பெற்றோர் தரும் கல்வி முதல் பங்கு சந்தை வரை)
    செய்பவர்களின் கதி என்ன?

    ReplyDelete
  8. //இங்கு அமெரிக்க அரசியலை புரிந்துக்கொள்ளவேண்டும்.ஒபாமா 'அவுட்சோர்சிங்கு எதிரானவர்.அவர் இன்னும் சில தினங்களில் பதவியேற்க்க உள்ளார்.வோர்ல்ட் பேங்க் சரியாக இந்த நேரத்தில் நாங்கள் 'வெளிப்படையாக' இருக்கப்போகிறோம் என்ற போர்வையில் இந்திய சாப்ட்வேர் கம்பெனிகளை டார்கெட் செய்துள்ளனர்.முதலில் 4'வது இடத்தில் உள்ள சத்யம்,3ம் இடத்தில் உள்ள விப்ரோ...அடுத்து இன்போசிஸ்,டிசிஎஸ் பற்றியும் ஏதாவதொரு விதத்தில் பிரச்சனையைக் கிளப்பி, ஒபாமா பதவிக்கு வந்தவுடன்,அவருடைய வேலையை சுலபமாக்கி எந்த வேலையும் இந்தியாவிற்கு வராமல் தடுப்பார்கள்.
    இன்று IT துறை பாதிப்புள்ளாக தொடங்கியுள்ளது.இதன் தாக்கம் அனைத்து துறைகளிலும் எதிரொலித்து,பெரும்பாலோனோரை சிக்கலில் ஆழ்த்த்ப்போகிறது..இதிலிருந்து மீண்டு வருவதென்பது ஒரு மாபெரும் சவால்....
    ///

    விப்ரோவை தடை செய்தது 2007ல் நீங்கள் சொல்லுகிறபடி 2007லேயே ஒபாமா வருவது உறுதியாகிவிட்டது போல தெரிகிறது :-)

    ReplyDelete
  9. எனக்கு புரிவது போலக் கூடத்தோண்றவில்லை.

    ReplyDelete
  10. மிக ஆழமான அலசல் சுந்தர்ஜி.. நிறைய யோசிக்க வைக்கிறது.. அதைவிட நிறைய கவலையும் தான்..

    ReplyDelete
  11. //SBI மேதாஸ் இன்ஃபிராவிற்கு 500 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. அதை வராக் கடனாக அறிவிக்க நேரலாம் என இப்போது சொல்லியிருக்கிறது. ஏன் இவ்விஷயத்தில் இத்தனை நாட்கள் மௌனம்?//

    என்ன அநியாயமா இருக்கு..? யார் வீட்டுக் காசை எடுத்து யாருக்கு கொடுக்குறாங்க..

    வங்கி வைத்துள்ள பணம் முழுவதும் பொதுமக்களின் பணம். அதிலிருந்து கடனை கொடுத்துவிட்டு திருப்பி வாங்க முடியவில்லை என்று சொல்லி வேண்டாம் என்றால் இதுவும் ஒரு ஊழல்தான்.. அவனவன் சொந்தப் பணம் என்றால் விட்டுவிடுவார்களா..? கேட்க ஆளில்லை..

    //மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலங்களை 4 மடங்குகள் குறைந்த விலையில் மேதாஸ் இன்ஃபிராவிற்குக் கொடுத்திருக்கும் ஆந்திர அரசு மேலும் முன் பணமாக 600 கோடி ரூபாய் பல்வேறு திட்டங்களுக்காகக் கொடுத்திருக்கிறது. இந்தத் திட்டத்தை ஒரு scam waiting to happen என dmrc ஸ்ரீதரன் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் (ஸ்ரீதரனுக்குப் பரிவட்டம் கட்டுவது என் நோக்கமல்ல). ஆனாலும் அந்தத் திட்டத்தைத் தொடர்ந்தது ஏன்?//

    நிச்சயம் உள்ளடி வேலைகள் இருந்திருக்கும். எதுவும் இல்லாமல் அரசியல்வியாதிகள் இவ்வளவு தொகையை அள்ளித் தந்திருக்க மாட்டார்கள்.

    விப்ரோ உலக வங்கி ஊழியர்களுக்கு பங்குகளை விற்பனை செய்தது ஒருவகையில் லஞ்சம்தான்.. தங்களை கவனித்தால் தாங்களும் அவர்களைக் கவனிப்பதாக நம்மூர் பாஷையில் நடந்திருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையிலா அரசுகள் இருக்கின்றன..?

    ReplyDelete
  12. சமீபகாலமாக நீங்கள் சமூக அக்கறை பதிவுகள் அதிகமாக எழுதுவதே குமுததில் டாப் டென்னில் இஅடம் பிடிக்க காரணமாக இருக்கும்,

    இது மாதிரியான நல்ல பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  13. விப்ரோ செய்ததை மோசடி/ஊழல் என்று சொல்ல முடியாது.விப்ரோ,சத்யம்,இன்போசிஸ்
    உட்பட ஐடிதுறை லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கி, பில்லியனில் நாட்டிற்கு வருவாய் தேடித்தந்தது.மாதவராஜ் போன்ற
    தொழிற்சங்கவாதிகள் கம்யுட்டரை
    பயன்படுத்தாதே என்று கோஷம்
    போட்டு பொதுத்துறை வங்கிகள்
    வளர்ச்சியுறுவதை தடுத்தார்கள்.
    விளைவு தொழில்னுட்பத்தைக்
    கொண்டு வளர்ந்தன தனியார்
    வங்கிகள்.சத்யம் ராமலிங்க ராஜு
    செய்தது மோசடி.அதற்காக அவர்
    தண்டிக்கப்பட வேண்டும்.அதற்காக
    ஒட்டுமொத்த ஐடி தொழிற்துறையை
    குறை சொல்ல வேண்டாம்.
    ‘சத்யம் நிறுவன ஊழியர்கள் வேலையற்று நின்றால், அது ஐ.டி துறையில் கடுமையான அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதும், இவர்கள் ஊதி ஊதி வளர்த்துக் கொண்டிருக்கிற கனவு தேசம் அமபலப்பட்டுப் போகும் என்பது அவர்களுக்குத் தெரியும்.'

    கனவோ, இல்லையோ,சத்யத்தில்
    53000 பேர் வேலை பார்க்கிறார்கள்.
    அவர்களில் பலர் வெளிநாடுகளில்
    வேலை செய்கிறார்கள்.எனவே சத்யம்
    மூடப்பட்டால் அதன் தாக்கம்
    மோசமானதாக இருக்கும்.
    சாலைப்பணியாளர்களும் நாட்டிற்கு
    வேண்டும்,சத்யத்தில் வேலை செய்யும்
    மென்பொருளாளர்களும் நாட்டிற்கு
    வேண்டும்.ஒருவருக்கு எதிராக
    இன்னொருவர் இல்லை,இதில்
    தொழில் போட்டியில்லை.இடதுசாரி
    மரமண்டைகளுக்கு இதெல்லாம்
    உரைக்காது.அவர்களுக்கு ஐடி
    துறை மீது எரிச்சல்.உண்டியல்
    குலுக்கி,செங்கொடி தூக்கி ஸ்டிரைக்
    செய்ய முடியாத துறை மீது அவர்களுக்கு எரிச்சல்தான் வரும்.


    வராக்கடன் என்றால் திரும்பி வசூலிக்க
    மாட்டோம் என்று சொல்லப்படும் கடன்
    அல்ல.கடன் திரும்பி வராவிட்டாலும்
    கடனுக்கு காட்டப்பட்டிருக்கும் சொத்தினை கையகப்படுத்த வங்கிக்கு
    அதிகாரம் உண்டு.

    ReplyDelete
  14. மாதவராஜ், மோகன், ஸ்ரீதர் நாராயணன், மணிகண்டன், முரளிகண்ணன், சுரேஷ், நர்சிம், உண்மைத் தமிழன், வால்பையன், அனானிகள்... நன்றி.

    ReplyDelete
  15. சுந்தர் தொடர்ச்சியாக இப்பிரச்சனைகள் குறித்து விளக்கமாகவும் எளிமையாகவும் எழுதிவருகிறீர்கள். அவசியமான பதிவுகள். நன்றி.

    ReplyDelete
  16. இந்தியர்களாகிய நாம் கடந்த 50 ஆண்டுகளில் நேர்மை, நாணயம் ஆகியவற்றை வெகுவாக இழந்து மிகுந்த சினிக்கல் ஆகிவிட்டோம். இதற்க்கான காரணிகள் பல. பார்க்க ஒரு பழைய பதிவு :

    நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது
    http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_2745.html

    இதன் விளைவுகள் தாம் இந்த பித்தலாட்டங்கள், ஊழல்கள் எல்லாம். பொதுமக்களும் 'லஞ்சம்' வாங்கிக்கொண்டு தம் ஓட்டுகளை 'விற்க்கும்' நாடு இது.

    தோழர் அசுரனிடம் இந்த அய்.டி ஊழல்கள் பற்றி ஒரு விரிவான, அருமையான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பார்க்க :

    வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே! உங்கள் பாரங்களை (முன்னாள்)சத்யம்-ன் பிராபாத்திடம் இறக்கி வையுங்கள்!!
    http://poar-parai.blogspot.com/2009/01/it.html

    (பல ஆண்டுகள் கழித்து ஒரு 'அசுரனை' மனிதனாக மாற்றிய திருப்பதி எமக்கு !!! :)) )

    ReplyDelete
  17. ஜமாலன், அதியமான்... நன்றி.

    ReplyDelete