Saturday, October 31, 2009

தற்காப்பு

என் அறை எனக்கு முக்கியமானதாய் இருக்கிறது
யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொள்ள வாகானது
வெளியில் பொழியும் பனியிலிருந்தும் மழையிலிருந்தும் காத்து
நான் விரைத்துவிடாமல் வைத்திருக்கிறது இந்த அறை
நண்பர்களே கிடையாது எனக்கு -
அதனால் அவர்களின் வருகை பற்றிய பிரச்சனையில்லை
கடிகாரத்தை உடைத்துப் போட்டு விட்டதால்
நேரம் பற்றிய போதமின்றி
குடித்துக் கொண்டிருக்கலாம்
என்னுடைய உளறல்களை
யாரும் கேட்டுவிடாதபடி
எப்போதும் மூடியிருக்கும் தடித்த கதவு
வசதியான செவ்வக மேஜை
அதன் மேல் சாம்பல் கிண்ணம்
கலைந்து கிடக்கும் படுக்கை விரிப்பில் எப்போது
வேண்டுமானாலும் உறக்கம் பற்றிய கவலையற்று
சுருண்டு கிடக்கலாம்
தூசி படிந்த புத்தகங்கள்
அடுக்கப் பட்டும் கலைந்தும் இருக்கும் அலமாரி
என் அழகையோ அழகின்மையையோ காட்ட
சிறு கண்ணாடிகூட இல்லாத அறையிது
சூரியனைப் பார்க்காத என் உடம்பு
இப்போது வெளிறிப் போகத் துவங்கிவிட்டாலும்
உலகத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள
தேவையாயிருக்கிறது இந்த அறை

26 comments:

  1. அறைகளிலிருந்தும் பாதுகாத்து கொள்ள வேண்டியிருக்கிறது குரு

    ReplyDelete
  2. உள்ளுக்குள் உள்ளே? :)
    //
    கலைந்து கிடக்கும் படுக்கை விரிப்பில் எப்போது
    வேண்டுமானாலும் உறக்கம் பற்றிய கவலையற்று
    சுருண்டு கிடக்கலாம்
    //
    இந்த அருமையான வரிகளில் அப்படியே கொஞ்ச நேரம் சுருண்டு கிடந்தேன்

    ReplyDelete
  3. // உலகத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள
    தேவையாயிருக்கிறது இந்த அறை//

    இது... சுந்தர் டச்..

    ReplyDelete
  4. கவிதை அருமை.

    இந்த ஒரு வாழ்க்கை க்குத்தான் எல்லாரும் ஏங்குகிறோம்.

    ஆனால் பசி என்ற ஒன்றை படைத்தது, பணம் தேடலுக்காக மற்ற இன்பங்களை இழந்து கொண்டு இருக்கிறோம்.

    ReplyDelete
  5. தற்காத்துக்கொள்ளளின் பின்னணியில் இருக்கும் அந்த “பய மனநிலையை”
    (insecurity or defeatist attitude)
    இன்னும் கூட வீர்ய்யமாக கவிதையில் கொண்டு வந்திருக்கலாம்.அது மிஸ்ஸிங்.

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா இருக்கு. நந்தா சுட்டிக்காட்டிய வரிகளின் வசீகரம் என்னையும் பற்றிக் கொண்டது.

    And welcome back.

    அனுஜன்யா

    ReplyDelete
  7. நமக்கு dust allergyங்கன்னா.அதனால அறையை சுத்தம்படுத்த தலைவலிச்சா ஒரு ஃபில்டர் காபி போட ஒரு ஆள்(!) வேனுங்கனா..

    //என்னுடைய உளறல்களை
    யாரும் கேட்டுவிடாதபடி
    எப்போதும் மூடியிருக்கும் தடித்த கதவு//
    நமக்கு புட்ச்ச வரிங்கண்ணா...

    ReplyDelete
  8. //கலைந்து கிடக்கும் படுக்கை விரிப்பில் எப்போது
    வேண்டுமானாலும் உறக்கம் பற்றிய கவலையற்று
    சுருண்டு கிடக்கலாம்//

    welcome back..... well come back

    ReplyDelete
  9. கவிதை அருமை சுந்தர்.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  10. சுந்தர்!
    எனக்கும் அறைக்குள்ள இருக்கிறது நெம்பப் புடிக்குமுங்க. ஆனா என்ன! கொஞ்சம் சுத்த பத்தமா இருக்கோணும். அப்பறம் இண்டெலக்ச்சுவல் கம்பெனி. கொஞ்சம் தூத்தம்.
    சோரச்சோர வறுத்த தலக்கறி
    அப்பறம் தரமான டிவிடி.அவ்வளவுதானுங்கோ!

    ReplyDelete
  11. நல்லாயிருக்கு குரு...

    ReplyDelete
  12. அருமையாய் இருக்கு சுந்தரா.நந்தா,அனு,குறிப்பிட்டு விட்டார்கள்.

    ReplyDelete
  13. சீவிய பென்சில் துகள்களில் ஒட்டி இருக்கிறது உதிரத்துளி

    ஜியொமெட்ரி பாக்சில் ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புக்கு போதுமானதாய் இருக்கிறது உதிர சர்க்கரையும் காற்றும்

    திறக்கும் விரல் யாருடயதாய் இருக்கும் ?

    ReplyDelete
  14. கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது, நம்மோடு நாமிருக்கும் தருணங்கள் ரம்யமானவை.

    ReplyDelete
  15. கவிதை அருமை.

    -பிரவின்ஸ்கா

    ReplyDelete
  16. D.R.Ashok said...
    //நமக்கு dust allergyங்கன்னா.அதனால அறையை சுத்தம்படுத்த தலைவலிச்சா ஒரு ஃபில்டர் காபி போட ஒரு ஆள்(!) வேனுங்கனா..//

    அட்ராசக்கை அட்ராசக்கை !! என்ன அழ்கா காமெடி செஞ்சு இருக்கீங்க !!!.

    கடவுள் சில பேருக்கு தான் இந்த வரம் கொடுக்கிறான் இல்ல.

    நகைச்சுவை பேரரசே!! அசோக் அண்ணா !!!!!!!!!
    உங்களுக்கு மட்டும் எப்படி தான் இப்படி நகைச்சுவை பொங்குதோ !!

    படிக்கும் போதே சிரிப்பு சிரிப்பா வருது.

    குப்புக் குட்டி

    ReplyDelete
  17. Nice one.
    Please correct the below:


    கொள்ளா to கொள்ள

    அழகின்மையோ to அழகின்மையையோ

    ReplyDelete
  18. ரூம் போட்டு யோசிக்கறீங்க போல

    ReplyDelete
  19. தண்டோரா, மண்குதிரை, இராஜ ப்ரியன், நந்தா, ராகவன் நைஜீரியா, குப்பன் யாஹூ, ரவிஷங்கர், அனுஜன்யா, அஷோக், நர்சிம், வாசுதேவன், லதானந்த், ரௌத்ரன், ராஜாராம், நேசமித்ரன், ராதாகிருஷ்ணன், யாத்ரா, பிரவின்ஸ்கா, குப்புக் குட்டி, செல்வராஜ் ஜெகதீசன், ராஜன் ராதாமணாளன், மணிப்பக்கம்... நன்றி.

    ReplyDelete
  20. மிகவும் ரசித்தேன்.

    நீங்க சொல்றது எல்லாம் சவப்பெட்டியைக் குறித்து சொல்வது போல் எனக்கு பொருள்படுகிறது.

    என் சிந்தனை ஓட்டம் சரியா ஸார்?

    ReplyDelete
  21. கணேஷ், பிரச்சனை என்னன்னா இந்த மாதிரி கேள்விக்கு "நன்றி கணேஷ்" ன்னு பதில் சொல்லுவாரு. அதைத்தவிர ஒழுங்கா பதில் சொல்றவங்கள வேற கெடுத்து வச்சி இருக்காரு ! கேக்காதீங்க இனிமே ! கடுப்பு தான் வரும் :)-

    ReplyDelete
  22. கணேஷ், மணிகண்டன்... நன்றி.

    ReplyDelete