Tuesday, December 18, 2007

இசை மற்றும் சமையல் குறிப்புகளூடான ஒரு கதை

இந்தக் கதையின் முதல் பாகத்தை எழுதிய போது தொடர்ந்து எழுதும் உத்தேசமில்லை. ஆனாலும் படித்த வாசகர்கள் எல்லாரும் மீண்டும் அடுத்த பாகத்தை எழுத வேண்டும் என நச்சரித்ததால் எழுதுகிறேன். மற்றபடி எனக்கு இதை எழுதியே ஆகவேண்டிய கட்டாயம் ஒன்றும் இல்லை என்பதை இதைப் படிக்கும் வாசகிகள் புரிந்து கொள்வார்கள்.


இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும் : போன பாகம் எழுதிய போது 10,080 ஹிட்ஸ். இம்முறை இன்னமும் பொதுமக்களுக்குத் தேவையான விஷயங்களைச் சேர்ப்பதால் அது இன்னமும் கூடும் என்று எதிர்பார்க்கிறேன். விகடனில் இந்தப் பதிவைப் பற்றி வந்தால் கிடைக்கப் போகும் ஹிட்ஸ் கூடுதல் கணக்கு.

போன வாரம் செய்தித் தாள்களில் வந்த ஒரு முக்கியமான செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. லண்டனில் இருக்கும் ஒரு பெண்மணி தன்னுடைய முழுச் சொத்தையும் (கிட்டத்தட்ட 54 கோடி ரூபாய்) வளர்ப்பு பிராணியான நாய்க்கு எழுதி வைத்து விட்டாள். அந்த நாய்க்கு கொலை மிரட்டல்கள் வர அதன் பாதுகாப்பிற்காக ஆகும் வருடச் செலவு 1.80 கோடி ரூபாய். இது போலத் தானே ஒவ்வொரு நாடும் தன்னுடைய பாதுகாப்பிற்காக செலவிடும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கான காரணமும் இருக்க முடியும்...?? ஏன் அனைவரும் குறை சொல்கிறார்களோ தெரியவில்லை. இதையே விரித்துக் கதையாக எழுதலாமென்று விரல்கள் அரித்தாலும், சொல்ல வந்த விஷயத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லாத காரணத்தினால், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் (கதை எழுதுதல் என்ற செயலை / வினையைத் தொடங்கிவிட்டால், ஏதோ ஒரு இடத்தில் நிறுத்தித்தானே ஆகவேண்டும்).

இசை குறிப்புகள்

சுத்த தன்யாசி ராகம். இது ஒரு ஜன்ய ராகம். இருபதாவது மேளமாகிய நடன பைரவியில் ஜன்யம்.

ஆரோகணம் : ஸகமபநிஸ

அவரோகணம் : ஸநிபமகஸ

இந்த ராகத்தில் பேசும் ஸ்வரங்கள் : ஷட்ஜம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம், கைசிகி நிஷாதம்.


இது ஒரு ஔடவ ராகம். மிகப் புராதனமானது. சங்கீத மும்மூர்த்திகளால் பாடப் பெற்ற ராகம். பண்டைக் காலத்தில் இந்த ராகத்தை உதயரவி சந்திரிகா என்று அழைத்தனர். ஸக - கம - மப - பநி - நிஸ போன்ற ஜண்டப் பிரயோகங்கள் இந்த ராகத்திற்கு அழகூட்டுபவை.


இந்த ராகம் எல்லாக் காலத்திலும் பாடத் தகுந்த ராகம். இதில் அதிகமான உருப்படிகள் உள்ளன. தியாகராஜரின் 'எந்த நேர்ச்சின', தீக்ஷிதரின் 'சுப்ரமண்யேன' என்ற கீர்த்தனமும் இன்னும் பல கீர்த்தனங்களுக் இந்த ராகத்தில் பிரபலமாக உள்ளன. ஆரம்பப் பயிற்சி செய்யும் மாணவர்களும் கூட கையாள்வதற்கு எளிமையான ராகம்.


திரை இசையிலும் இந்த ராகம் கையாளப் படுகிறது. 'பெண்ணின் மனதைத் தொட்டு' என்ற படத்தில் 'தியாகராஜனின் தெய்வகீர்த்தனம்' என்ற பாடல் இந்த ராகத்தில் அமையப் பெற்றது. இசைஞானி இளையராஜா மிக அழகாக இந்த ராகத்தை உபயோகித்து இசையமைத்த 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து' என்ற பாடலை இப்போது கேட்போமா...?


சமையல் குறிப்புகள்

பிசிபேளாபாத்


தேவையான பொருட்கள் : அரிசி 1-1/2 ஆழாக்கு, து. பருப்பு 3/4 ஆழாக்கு, சாம்பார் வெங்காயம் 1 கப், பீன்ஸ், பட்டாணி, கேரட், உருளைக் கிழங்கு (நறுக்கியது) 1 கப், புளி நெல்லிக்காயளவு, உப்பு தேவையான அளவு.

வறுத்து பொடி செய்ய :

தனியா 1 டீஸ்பூன், க. பருப்பு 1 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 10, பூண்டு 4 பல், கிராம்பு 3, கசகசா சிறிது, பொட்டுக்கடலை சிறிது, கொப்பரைத் துருவல் 3 டீஸ்பூன்.

செய்முறை :

அரிசியும், பருப்பையும் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சாம்பார் வெங்காயம் வதங்கிய பின் காய்கறிகளைப் போட்டு வதக்கி வேக வைக்கவும். பிறகு புளியைக் கரைத்து ஊற்றி உப்பு போடவும். பச்சை வாசனை நீங்கியபின் அரைத்து வைத்த பொடியை போட்டு கொதிக்க விடவும்.

வேகவைத்த சோறு, பருப்புடன் இந்தக் கலவையை ஊற்றி நன்கு கலந்து குக்கரில் ஒரு விசில் விடவும். பின் கொத்தமல்லி தழையைத் தூவலாம். வெங்காய பச்சடியுடன் பரிமாற சுவையுடன் இருக்கும்.


இதுபோலவே பல மசாலாக்களைக் கலந்து எடுக்கப் பட்ட படமான பொல்லதாவனில் இருந்து சில காட்சிகளை இப்போது பார்ப்போமா...?

பின் அமைப்பியல் மற்றும் சில :


அரசியல் இயங்கிகளின் வன்முறை அல்லது வன்முறை என்று ஒன்றுமில்லை: இதைப் பற்றிச் சொன்னால் என்னை அடிக்க வருவார்கள் என்பதால் பயமாயிருக்கிறது.

நாடு அதை நாடு, அதை நாடாவிட்டால்...... போடா பாடு. போடா போடா புண்ணாக்கு : இதை எழுதியிருப்பது வெகுஜனப் பாடல்களைக் கட்டவிழ்ப்பதற்காகத்தான் என நினைத்துக் கொள்ளாதீர்கள். அடுத்த பத்தியைப் படியுங்கள்.

விலங்குகளுக்கு ஏற்ற உணவு : ஒவ்வொரு விலங்கிற்கும் ஒவ்வொரு உணவு. உதா : மாடு ஆடுக்கு (ஆடு மாடுக்கு அல்ல) புல், தழை; புண்ணாக்கு (கடலைப் புண்ணாக்கு கூடுதல் பால் தரும்; எள்ளுப் புண்ணாக்கு சக்தி தரும்). இதையே புலி சிங்கத்திற்கு (சிங்கம் புலிக்கு அல்ல) சொல்ல முடியாது அல்லவா.?

மனிதர்களுக்கு ஏற்ற குடி: என்னுடைய சாய்ஸ் old monk தான். உங்களுடைய சாய்ஸ் :


1. Old monk

2. Any other rum

3. MC Brandy

4. BP Whiskey

5. Any other brandy / any other whiskey.

குறிப்புகள் : (i) Imported stuffகளுக்கு ஓட்டுப் போட விரும்புபவர்கள் என்னுடைய அடுத்த பதிவிற்குக் காத்திருக்கவும். (ii) ஜின் குடித்தால் ஆண்மை குறைந்து விடும் என்பதால் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை.

நீங்கள் 1089 ரூபாய் சம்பாத்திதால் இரண்டு பேருக்குச் சோறு போட முடியுமென்றால், 2007 ரூபாய் சம்பாதித்தால் எத்துனை பேருக்குச் சிற்றுண்டி போட முடியும்.? இதில் இருக்கும் பொருளாதாரக் காரணிகளை யார் கணக்கில் எடுத்துக் கொள்வது.? நெட்டில் சுட்டு ஒரு கட்டுரை போடலாமென்றால், வாசகி, நீ மிகவும் கவனமாயிருக்கிறாயே.

(பின்னூட்டமிட்டுத் தெரிவித்தால் இந்தக் கதையைத் தொடரும் வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் ஒரு சிறப்புப் பரிசு உண்டு).

கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க அடுத்த முறை என்ன செய்யலாம் :

1. இன்னும் கொஞ்சம் அரசியல் நையாண்டி

2. இன்னும் சில உருப்படியான சமையல் குறிப்புகள்

3. யதுகுல காம்போதி ராகம் பற்றிய விரிவான விளக்கம்

4. சினிமாப் பாடல்களைக் கட்டவிழ்ப்பது

5. கெட்ட வார்த்தைகள் அல்லது பாலியல் கதைகள் (அல்லது இரண்டிற்கும் உள்ள தொடர்புகள்)

நண்பா படித்தாயா பாரதியை, படித்தாயா நண்பா பாரதியை, பாரதியை நண்பா படித்தாயா என்ற வரிகளைப் படித்துக் கொண்டிருக்கும் போது மழை தூற ஆரம்பித்தது. சாலையைக் கடந்த சிறுமியை, ஹோண்டா சிடி கார் ஒன்று மோதிச் சென்றது. ரத்த வெள்ளத்தில் கிடந்தவளைச் சுற்றிக் கொண்டு வாகனங்கள் விரைந்தன.

இனி, குறிப்புகள் என்பதைச் சுருக்கி, குறிகள் என்றே எழுதப் படும்.

5 comments:

  1. சாரு வோட ஜீரோ டிகிரி படிச்சிட்டிருந்தப்ப வந்த எரிச்சல் இத படிக்கும்போதும் வருது :)

    கலக்குங்க வாத்யாரே

    ReplyDelete
  2. //உதா : மாடு ஆடுக்கு (ஆடு மாடுக்கு அல்ல)//

    நன்றி. உங்க பாசத்துக்கு அளவே இல்லையாஜி.

    அப்புறம் இது ஒரு வகை சார்ந்த கதை என்றே நினைத்திருந்தேன். அந்த வகையின் பெயர் நினைவில் இல்லை. தமிழவனின்(அவர்தான் என்று நினைக்கிறேன்) நாவலோ, சிறு கதையோ இதே அமைப்பை... அதாவது முரணாக, சம்பந்தமில்லாத ஒன்றை எழுவதாக இருந்தது.

    புதுமையாக இருக்கிறது. இம் மாதிரியான புது வகைகளை அறிமுகப்படுத்துங்கள். நன்றி.

    ReplyDelete
  3. பகிர்வுகளுக்கு நன்றி அய்யனார் & ஆடுமாடு.

    ஆடு மாடுக்கு அல்ல என்ற வார்த்தைகளை எழுதும் போது உங்களைத்தான் நினைத்தும் கொண்டேன்...

    முதலில் தமிழவன், எம்.டி.எம், நாகார்ஜூனன் போன்றவர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். இப்போது பத்து வருடங்களாக எதையும் படிக்கக் கிடைக்கவில்லை.

    ReplyDelete
  4. நீண்ட நாட்களுக்கு பிறகு படிடித்த அ-நேர்க்கோட்டு கதை. (non-leanear story).

    ஊடிழைப்பிரதி (inter-text) என்கிற உத்தியும் அருமை. இன்றைய பிரபல தொ.கா. (TV) களையும் பதிவுகளையும் உள்ளடக்கி கதையாக்கீயுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. நன்றி, ஜமாலன்.

    இது போன்ற‌ நிறைய‌ அ‍ க‌தைக‌ளை எழுத‌ எண்ண‌முண்டு. பார்ப்போம்.

    ReplyDelete