Friday, June 26, 2009

நகுலன்

எவ்வளவு முறை வாசித்தாலும் இன்னும் இன்னும் என வாசிக்கத் தூண்டும் ஒரு கவிஞர் நகுலன் (மற்றும் பிரமிள் & விக்ரமாதித்யன்). இன்னும் யோசித்துப் பார்த்தால், கொஞ்சம் தடாலடிக்காகவே பிரமிளைப் பிடித்திருக்கிறது. எழுத்து / கவிதை சார்ந்து மட்டுமே எனக்குப் பிடித்தவர்களாக நகுலனையும் விக்ரமாதித்யனையுமே சொல்ல முடியுமென்று தோன்றுகிறது.

கவிதை பற்றிப் பேச்சு வந்தால் நகுலன் வராமல் இருக்க மாட்டார். அரட்டைப் பெட்டியிலோ மின்னஞ்சலிலோ நகுலனை நான் பரிந்துரைக்காத நண்பர்கள் மிகக் குறைவு!

என்னுடைய மனம் மொழியாலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காட்சியைப் பார்த்தாலும் அதுவும் எனக்கு வார்த்தைகளாகவே நினைவில் படிந்திருக்கும். பல கவிஞர்களின் எண்ணற்ற கவிதைகளைப் படித்திருந்தாலும், நகுலன் நினைவிலிருப்பதுபோல் மற்ற கவிதைகள் இல்லை. நகுலனும் என்னுள்ளே வார்த்தைகளாகவே இருக்கிறார்.

வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்
நாலாபுறமும் வார்த்தைகள்
சொல்லில் சிக்காது
சொல்லாமல் தீராது

என்ற வரிகளை எழுதியது நிச்சயமாக நகுலனாகவோ அல்லது விக்ரமாதித்யனாகவோதான் இருக்க வேண்டுமல்லவா. வார்த்தைகள் எனும் அடர்ந்த காட்டில் திக்குத் தெரியாமல் சிக்கித் தவிக்கும் பாலகன் நான்.

பல விஷயங்களை நகுலனுடன் சேர்த்தே என் மனம் நினைவில் வைத்திருக்கிறது. கல்குதிரை - நகுலன் சிறப்பிதழ், விருட்சம் - திருக்குறளை அடியொற்றிய நகுலன் கவிதைகள், கணையாழி - நகுலனின் சாயைகள் மற்றும் இன்னொரு கதை (சிமி, குமி, உமிக்கரி / நஞ்சு, குஞ்சு, மத்தங்காய் / மணிக்குட்டன், குணிக்குட்டன், கொழுவாளை என்ற அற்புதத்திற்கும் அப்பாற்பட்ட {ஆத்மாநாம்} கவிதை கொண்ட கதை), திருவனந்தபுரம் - நகுலனின் பாழடைந்த வீடு, என் வீட்டு பூனைக்குட்டி - நகுலனின் மஞ்சள் நிறப் பூனை, என்னுடைய சில கதைகள் - இப்படியாக, இப்படியாக... இந்த வலைப்பக்கத்தில் இடப்பக்கம் இருக்கும் 'வந்த வழி சென்ற காக்ஷி' கூட நகுலனின் பாதிப்பினால் எழுதப்பட்டதுதான்.

கடந்த 20 வருடங்களாக நகுலனை வாசித்து வருகிறேன். ஆனால் சட்டென்று நகுலன் என்றவுடன் நினைவிற்கு வருவது மிஸ்டிக்தன்மை மற்றும் சாதாரண வார்த்தைகளில் பல தளச் சிக்கல் (இந்தச் சொற்களை மந்திரம் போல் எவ்வளவு முறை சொல்லியிருப்பேன்!).

யார் தலையையோ சீவுவது போல பென்சிலைச் சீவிக்கொண்டிருந்தான் என ஒரு வரியில் வரும். மூச்சு நின்றால் பேச்சும் அடங்கும் என்று சொல்லும் இன்னொரு வரி. தாடி ஏன் வளர்க்கிறார் என ஒருவர் விளக்கும்போது தாடி ஏன் வளர்கிறது என்பதுதான் சுவையானது எனச் சொல்லிச் செல்லும் வேறொரு வரி. கடல் இருக்கும் வரை அலைகளைக் குற்றம் சொல்லி என்ன பயன் எனக் கேட்கும் பிறிதொரு கவிதை. எல்லாம் நடந்து கொண்டிருக்கும் யாருமில்லா பிரதேசத்தில் நகுலன் என்ன செய்து கொண்டிருப்பார்...?

நான் நகுலனின் ஆராதகன். அதற்காக, அவர் எழுதிய மூன்று, ஐந்தென்ற பழந்தமிழ் இலக்கியத்தைச் சார்ந்த கவிதைகளெல்லாம் எனக்குப் பிடிக்குமென்று நினைத்துவிடாதீர்கள். சாதாரணமாக எனக்கு மரபுக் கவிதைகள் என்றாலே அலர்ஜி. அதுவும் நகுலன் மாதிரியானவர்கள் செய்தால் இன்னும் அலர்ஜி. விலங்குச் சங்கிலி எனத் தெரிந்தும், அதை மாட்டிக் கொண்டும் நடக்கத் தெரியும் என்பதில் என்ன மகிழ்ச்சியோ.

சாலையில் ஒரு பார வண்டி நக்ஷத்ர ஒளியில் மெல்லச் செல்லும் என்ற வரிகளைப் படிக்கையில் மனதில் விரியும் ஓவியம்... இப்படிப்பட்ட கவிதைகளுக்காக நகுலன்மேல் காதலில் கசிந்துருகி அவர் படத்திற்கு முத்தம் கொடுத்திருக்கிறேன். சில வரிகளைப் படிக்கையில் செல்லமாகத் திட்டியுமிருக்கிறேன்.

அவர் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் என்னை ஈர்க்கின்றன. தட்டச்சுகூட சுகம்தரக்கூடியதுதான் என்பது நகுலனின் வரிகளைத் தட்டச்சும்போதே எனக்குத் தெரிகின்றது.

நான் ஒரு மிகப் பெரிய வாயாடி - அதுவும் நகுலனைப் பற்றிப் பேச ஆரம்பித்தால். நகுலனைப் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம், அல்லது அவரது சில கவிதைகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். நான் இரண்டாவதைத் தேர்வு செய்கிறேன்

மதத்தின் குரலாக இருந்த தமிழ்க் கவிதையை மனதின் குரலாக மாற்ற வேண்டுமென்று விரும்பிய நகுலனின் சில கவிதைகள் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

(நகுலனைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவு : http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_26.html)

22 comments:

  1. //நகுலன் என்றவுடன் நினைவிற்கு வருவது மிஸ்டிக்தன்மை //

    மிகச் சரி. அதிகம் அறிமுகம் கிடையாது என்றாலும் நகுலனைப் பற்றிய சில பதிவுகள் ஒரு புதிர்தனமையை எனக்குத் தோற்றுவித்திருக்கிறது. அவருடைய ‘நீ வா போ’ பற்றி அவரே எழுதிய கடிதத்தை எங்கோ படித்த நினைவு.

    நகுலனின் கவிதைகளை மொழி விளையாட்டில் காண ஆவல்.

    ReplyDelete
  2. நாங்களும் நகுலன் ரசிகர் தாங்க..


    no மாற்று கருத்து
    He is a mystic poet
    Deeperly quiet

    ReplyDelete
  3. //மதத்தின் குரலாக இருந்த தமிழ்க் கவிதையை மனதின் குரலாக மாற்ற வேண்டுமென்று விரும்பிய நகுலனின் சில கவிதைகள் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்/

    காத்திருக்கிறோம்....!

    ReplyDelete
  4. நகுலன் பற்றிய உங்கள் பதிவுகள் அருமை...

    ReplyDelete
  5. அடுத்த பதிவில் வரும் கவிதைகளுக்காக காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  6. thanks for rekindling memories and making me re-read

    ReplyDelete
  7. எஸ் ரா நகுலன் பற்றி (மறைவு பற்றி என நினைக்கிறேன்) உயிர்மையில் மிக அற்புதமாக எழுதி இருந்தார். நகுலன் வீடு பற்றி எல்லாம்.

    அதை படித்துதான் திருவனந்தபுரம் சென்று நகுலன் வீடை பார்த்து விட்டு வந்தேன்.

    எஸ் ரா கூடவே தென்காசி மணி அன்னாசி பற்றியும் எழுதி இருந்தார் என நினைக்கிரேன்.

    பதிவு அருமை, நன்றிகள் சுந்தர்.

    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  8. ஏற்கெனவே 'கவிதை புரியவில்லை' என்ற நண்பர்கள், நீங்க சொல்லி நான் படிக்கத் தொடங்கிய 'நவீனன் டைரி'க்குப் பின் பேசுவதை நிறுத்தி விட்டார்கள் :)

    He is awesome. அவர் கவிதைகளைப் போடுங்க ஜ்யோவ்.

    அனுஜன்யா

    ReplyDelete
  9. கவிதைக்கு வெயிட்டிங்

    ReplyDelete
  10. பண்பலை வானொலியில் கேட்ட ஒரு வசனம். "டாக்டர் நைனா, ஒன்னியிம் பிரில நைனா"...

    நகுலனின் புத்தகங்களை வாங்கி படிக்கப் போகிறேன், ஜி.நாகராஜனின் ஆக்கங்கள் படித்து முடித்தவுடன்.

    ReplyDelete
  11. Dhool!

    Eagerly waiting to read more articles abt his writings!

    ReplyDelete
  12. நகுலனை வாசித்துக்கொண்டே இருக்கலாம். பகிர்வு அருமை சுந்தர்ஜி.

    ReplyDelete
  13. //விரும்பிய நகுலனின் சில கவிதைகள் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்//

    காத்துக்கொண்டிருக்கிறேன் .

    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  14. சுந்தர்ஜி மஸ்கட் கிளம்புகையில் கையோடு கொண்டு வந்தது நவீனன் டைரி நீங்கள் கூட சொன்னீர்கள் தனிமையில் அதை வாசிக்க வேண்டாம் என்று

    எத்தனை முறை வாசித்திருக்கிறேன் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்று கணக்கிட விருப்பமில்லை.

    நகுலன் வார்த்தைகள், வார்த்தைகள் நகுலன்

    நன்றி இந்த பதிவுக்கு

    ReplyDelete
  15. நகுலனை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி திரு ஜ்யோவ்ராம் சுந்தர் !

    ReplyDelete
  16. நன்றி பகிர்வுக்கு,
    நவீனன் டைரி கையில் கிடைத்திருக்கிறது இனிமேல்தான் வாசிக்க வேண்டும்.

    ReplyDelete
  17. பகிர்தலுக்கு நன்றி ஜ்யோவ், நகுலன் எனக்கு பிடித்தமான படைப்பாளிகளுள் ஒருவர், and yes you are right - his writings have a full flow of mysticism ... மறுவாசிப்பிற்கு தயாராகிறேன் ... அடுத்த பதிவை விரைவில் வெளியிடவும்

    ReplyDelete
  18. நகுலன், பிரமிள், விக்ரமாதித்யன் இவர்கள் வாழ்வின் இயல்பையும், தங்களது யதார்த்தத்தையும் தீவிரமாக வெளிப்படுத்தியவர்கள்.
    எனக்கும் மிகவும் பிடித்தவர்கள். நகுலனை பற்றிய எனது முந்தைய பதிவிற்கான தளம் :
    http://kuttysuvaru.blogspot.com/2009/05/nagulan-kavithaigal.html

    ReplyDelete
  19. உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது

    என்னுடையதும் தான்

    - என்றெல்லாம் எழுதிப் பார்க்க வைக்கிறவர் நகுலன்

    நல்ல பதிவு .. தொடர்ச்சியை எதிர் நோக்கி....

    ReplyDelete
  20. சார், நகுலனின் சில கவிதைகள் அற்புதமாகவும், ஒரு சில கவிதைகள் மிக சாதாரணமாகவும் இருக்கின்றதே.. அந்த ஒரு சில கவிதைகளை புதியதாய் ஒருவர் எழுதி இருந்தால் கவிதையாக ஏற்றுக்கொள்ளபட்டிருக்குமா..

    ReplyDelete
  21. பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  22. வாசிக்க வாசிக்க அலுக்காத அல்லது ஒரு புதுமையை உறுவாக்கு நகுலனை தவிர வேறு யாராலும் முடியாது சுந்தர் அண்ணே அருமையான பதிவிற்க்கு நன்றி

    ReplyDelete