Tuesday, January 29, 2008

ஒத்திப் போடுதல்

ஒவ்வொரு அறையாகக்
கீழே செல்லச் செல்ல
இருளும் புகையும் சூழ்கிறது
நடுவில் திடீரென எரிந்தணையும்
விளக்குகள்
இருளை அதிகப் படுத்துகின்றன
காதலென்ற பெயரில்
கடித்துக் குதறிக் கொண்டோம்
வயிற்றுக்குள் இருக்கும்
வைன் ஷாப்களின்
போதைத் தள்ளாட்டம்
இறந்தபின் வாழும் ஆசையை
தினந்தோறும் ஒத்திப் போடுகிறது

Friday, January 25, 2008

அ-கவிதை (3)

உனக்குச் சொல்ல
வளர்ந்தது உணர்ந்தபோது
யார் அதையெல்லாம் செய்வார்கள்
collage கவிதை
சாதாரண வாசக மனம்
assemblage கவிதை
கேள்வி எழுப்பும்
Reader Reception Theory
என்று
வெட்டி ஒட்டப் படுவது
கவிதை
நாகார்ஜூனன் சொன்னால்
கவிதை வந்தது
ஒன்றுமில்லை

Wednesday, January 23, 2008

இலக்கு

இருளால் மூடப் பட்டிருக்கிறது சாலை
தவளைகளின் இரைச்சல்
நரம்புகளை ஊடுருவுகிறது
குடைகளை மீறி மனிதர்களைச்
சில்லென்று ஸ்பரிசிக்கிறது மழை
செடிகளும் மரங்களும் பேயாட்டம் போடுகின்றன
மின்னல் வழிகாட்டுகிறது உற்ற தோழனாய்
குறுக்கே மல்லாந்த மரங்களை
அப்புறப் படுத்தி
இலக்கை நோக்கிச் சக பயணிகள்
வேகமாக முன்னேறிச் செல்கின்றனர்
மழையையும்
இருட் சாலை அழகையும்
பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறேன்

(கவிதா சரண் ஃபிப்ரவரி 1995ல் வெளியானது)

Saturday, January 19, 2008

அக்காவும் நானும்

'எப்படி இருப்பே
தெரியுமாடா...'
அக்கா ஆரம்பித்த விதமே
அலாதியாயிருந்தது
‘நாந்தான் தூக்கிப்பேன்
நாந்தான் தூக்கிப்பேன்னு
நானும் பவானியும் சண்டை போடுவோம்...'
கண்கள் விரிய
கடந்த காலத்தில் வசிக்க ஆரம்பித்தாள்
சற்றுத் தள்ளி நின்று கொண்ட
என்னைப் பார்த்தபடி
‘ஏண்டா இப்படி ஆயிட்டே...'
கேள்வியை முடிக்காமலேயே
நகர்ந்து போனாள்
எனக்கு இரண்டிரண்டாக
எல்லாம் தெரிய

(கவிதா சரண் ஃபிப்ரவரி 1995ல் வெளியானது)

Thursday, January 17, 2008

நாய்கள்

தெருவோர நாய்
நரகல் தின்று ஓடும்
சிறுவன் ஒருவன்
துரத்துவான்
கையில் கல்லிருக்கும்
துணிச்சலில்
இடையில்
நழுவும் நிஜாரைச்
சரி செய்ய நிற்பான்
நாய் ஓடிவிடும்
நாய்களை
(அதிலும் நரகல் தின்னும்
நாய்களை)
ஒழிக்க வழி தெரியாமல்
வீடு திரும்புவேன்
அந்தச் சிறுவன் மேல்
பரிதாபப் பட்டபடி

(மாலைக் கதிர் டிசம்பர் 1995ல் வெளியானது)

Thursday, January 10, 2008

தொடர்புகள்

இரண்டாய் இருந்த புறாக்களின் எண்ணிக்கை
பல்கிப் பெருக
அணில்களின் வருகையும் அதிகமாயிற்று
சதா சர்வ காலமும்
சங்கீதமாய்ச் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும்
மொட்டை மாடி ஓலைக் கூரையின் மேல்
வரிசையாய் ஓடும்
ஒருமுறை தொட்டுக் கூடப் பார்த்திருக்கிறேன்
அதன் மென்மையை
தீனியென்று தனியாக எதுவும் போட்டதில்லை
புறாக்களுக்கென இறைத்த மீதியை
பின்னங்கால்களில் அமர்ந்து
முன் கால்களால் கொறிக்கும் அழகே தனி
புறாக்களுக்கும் அணில்களுக்கும்
சிநேகம் இருந்ததாய்த் தெரியவில்லை
ஆனால்
புறாக்களோடு சேர்ந்து தொலைந்து போயின
அணில்களும்

Tuesday, January 8, 2008

no title

கண்களை மூடிக் கொண்டு
கிறுக்குகையில்
ஆழ்கனச் சகதியிலிருந்து
மேலே வருகிறது
புதைக்கப்பட்டு வெகுநாளாகிவிட்ட உருவம்
மெதுவாகச் சுருக்கங்கள் அகற்றி
தெளிவாகிறது முகம்
பாய்ச்சலாக இல்லாது
ஓடிப் போய்த் தேங்குகின்றன நினைவுகள்
அணையை உடைத்துக் கொள்ள முடியாமல்
அறுந்து ஒரு மூலையில் தொங்குகிறது
கிழிபட்ட நான்

(இந்தக் கவிதை மவ்னம் அக்டோபர் 1993ல் வெளியானது)

முதல் முயற்சி

அகண்ட வெளியை
நோக்கிப் பயணப்பட்ட
மகிழ்ச்சி
இடையில் உடையும்
சுக்கு நூறாய்
தலையணையில் முகம் புதைத்த
கேவல்கள்
அழுகையாய் வெடிக்கும்
ஆதரவுக் கரங்கள்
அதிகப் படுத்தும் வேதனையை
ரயிலின் முன் விழுவதற்குத்
தயாராய்
உயிர் தாங்கிய உடல்

மனச் சலனங்களில்
சோர்வுறும் உடல்
உடற் சலனங்களில்
சோர்வுறும் மனம்

Saturday, January 5, 2008

முகமூடி

எனக்குக் கிடைக்கும்
நேரமே கொஞ்சம்
அதிலுன்
தழும்பேறிய கோரமான
முகத்தைக் காட்டாதே
நான்
படிக்கவேண்டிய புத்தகங்கள்
கிழிக்க வேண்டிய கவிதைகள்
ஏராளமிருக்கின்றன
பிரபஞ்சத்தின் பேருண்மைகளை
யோசித்துக் கொண்டிருக்கையில்
உன்னுடைய விகாரமான
கற்பனைகளை நீட்டாதே
போ போய்விடு
இல்லையா
இந்தா முகமூடி
அணிந்து கொண்டு
ஓர் ஓரமாக உட்கார்

(கவிதா சரண் மார்ச் 1993ல் வெளியானது)

Thursday, January 3, 2008

இரை

அசையாதிருக்கும் இரவின் வெளிச்சத்தில்
ஊர்ந்து கொண்டிருக்கிறது
ஓலைக் கூரையின் நடுவில்
இரை தேடும் பாம்பு
இப்புறம் திரும்புமா
அப்புறம் செல்லுமா
என்பதில் இருக்கிறது
வாழ்வு

பிரார்த்தனையின் இரைச்சலில்
திரும்பிய பாம்பு
விழுங்கிச் செல்லும்

Tuesday, January 1, 2008

வாழ்தல்

பயமுறுத்தியபடி நின்றிருக்கிறது
கேள்விக் குறியான எதிர்காலம்
கழுவி விடப்பட்ட தரையைப் போல்
கிடக்கிறது மனம் சலனமற்று
வேலை செய்ய மறுக்கிறது மூளை
உதறுகின்றன கால்கள்
எதிரிகளின் கெக்கலிப்பு
ஒலிக்கிறது காதுகளில்
பெற்ற மற்றும் பெறப் போகும்
அவமானங்களை நினைத்து
தற்கொலைக்கும் வாழ்விற்கும்
இடையில்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது உயிர்

சோடியம் வேப்பர் வெளிச்சம்
தொட முடியாத தூரம்
பௌர்ணமி நிலா ஒளி
தடவிக் கொடுக்க
ஆர்பரிக்கும் கடல் அலைகளின்
வெள்ளை நுரை
படுதா விரிப்பு
பார்வைக்கெட்டிய வரையில்