பயம்

குமார் (எ) கலெக்டர் குமார்
இன்று காலை 4.00 மணியளிவில் இயற்கை எய்தினார்
அறிவிக்கிறது ஃபிளெக்ஸ் பேனர் தெருமுனையில்
டிரைவர் குமார் என்ற பெயரும் உண்டு
என்பது ஞாபகம் வந்தது
மதுச்சாலையில் வைத்து
15 வருடப் பழக்கம் இருவருக்கும்
இவனைப் போலவே தொடர்ச்சியாய்ப் புகை பிடிப்பவரும்கூட
சமீபத்தில் சந்தித்துக் கொள்ள வாய்க்கவில்லை இருவருக்கும்
விசாரித்தபோது
மாரடைப்பாம்
உறங்கும்போது நடந்த மரணமாம்
இளமையாகத் தோன்றினாலும்
குமாருக்கு இவனைவிட 10 வயது கூடுதல்
என்ற விவரம் தெரிந்தபோது ஆசுவாசமாயிருக்கிறது

கவிதை புரியும் கணம் - எம்.யுவன்

சமீபத்தில் 'உயிர்மை' பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் எம்.யுவனின் 'தோற்றப் பிழை' கவிதைத் தொகுப்புக்கு ஒரு முன்னுரையை அவரே எழுதியிருக்கிறார். உரையாடலுக்கு வழிவகுக்கும் அந்த முன்னுரை, எம்.யுவனின் அனுமதியுடன் இங்கே...

--------

சிறு வயதில், பிரம்மாண்டமான மீன் பண்ணை ஒன்றுக்குச் சென்றிருந்தது ஞாபகம் இருக்கிறது. அரைக் கிணறு போன்ற ஆழமான காங்க்ரீட் தொட்டிகள். அவற்றுக்கிடையே அமைந்த சிமென்ட் நடைபாதையில் யாரோ ஒருத்தரின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்துபோனேன். எந்த ஊர், யாருடைய கை என்பதெல்லாம் நினைவில் தங்காத அளவு சிறுவயதாக இருக்கவேண்டும். ஆனால், ஒவ்வொரு தொட்டியிலும் வேறுவேறு வகையான மீன்கள் துடிப்பாகப் போய்வந்துகொண்டிருந்த காட்சி அழுத்தமாக நினைவில் பதிந்திருக்கிறது.

மீன்தொட்டியை மனம் என்று உருவகித்துக்கொள்கிறேன். சொற்கள் குட்டியிட்டுச் சொற்கள் உருவாகி நசநசவென்று சொற்கள் புழங்கும் மாயத்தொட்டி. சொற்கள் தம் இயல்பான சலனத்தில் இணைந்தும் விலகியும் அடர்ந்து திரியும் தொட்டியில், எல்லா நேரத்திலும் எல்லாச் சொற்களிலும் கவனம் குவிந்திருப்பதில்லை. கூட்டத்திலிருந்து விலகி வந்து கவனம் பெறும் மீன்கள் கொத்தாகத் திரளும் ஒரு சந்தர்ப்பம் கவிதையின் வரிகளாக உருக்கொள்கிறது.

எழுதும் மனத்தில் கவிதை வரி உருவாகும் இதே விதமாகத்தான் வாசக மனத்தில் கவிதை புரிவதும் நிகழ்கிறது என்று சொல்லலாம்.

வீடு மாற்றுவதற்காகப் புத்தக அலமாரியைக் காலிசெய்து அட்டைப் பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்தேன். மிகப் பழைய சிறுபத்திரிகைத் தொகுப்பு ஒன்றைக் கையில் எடுத்தபோது, அதைப் பிரித்து மேலோட்டமாக மேயத் தோன்றியது. தன்னிச்சையாகப் பார்வையில் பட்டது அந்தக் கவிதை. பல காலம் முன்பு வாசித்து, புரியாமல் போனதால், மனத்தில் உறுத்தலாகத் தங்கியிருந்த கவிதை.

அன்று படித்தபோது, சடாரென்று திறந்துகொண்டது. உண்மையில், அதுதான் அந்தக் கவிதை உணர்த்த முனைந்த அனுபவமா என்று தெரியாது. அவ்வளவு நாள் மூடிக் கிடந்த ஒரு சொல்லோட்டத்தை, அந்தத் தருணத்தில் என்வயமாகத் திறக்கக் கிடைத்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். மூடியிருந்த வரை மகோன்னதமான எதையோ தனக்குள் பொதிந்து மறைத்திருப்பதாகத் தோன்றிய வரிகள் உடனடியாக வெளிறிவிட்டன என்பது வேறொரு விஷயம்.

கவிதை எழுதப்பட்டும் சந்தர்ப்பத்திற்குச் சமமான மாயத்தன்மையும், பரவசமும் வாசிக்கும் தருணத்தையும் சூழ்கிறது என்பதை நான் உணர்ந்துகொண்ட சந்தர்ப்பம் அது. எனவே, கவிஞன் குறித்துச் சொல்லப்படும் சிறப்புக் குணநலன்கள் அத்தனையும், மிகச் சமமான விதத்தில் வாசகனுக்கும் உரித்தானவைதாம். நுட்பமான வாசக மனம் அன்றி, வேறெங்கு பொருள்கொள்ளும் கவிதை?

---------

இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வியை எதிர்கொள்கிறோம். கவிதையைப் புரிந்துகொள்வது என்றால் என்ன?

அ. கவிஞனின் உத்தேசம் என்பனவாகத் தென்படும் எல்லைகளை அறிந்துகொள்வதா?

ஆ. கவிதையின் வரிகளுக்கு அப்பால், தன்னுடைய திராணியும் சுதந்திர இச்சையும் சார்ந்து வாசகன் மேற்கொள்ளும் பயணத்தின் துவக்கமா?

உண்மையில், தர்க்கபூர்வமாகத் தான் புரிவதற்குச் சற்று முன்னமேயே கவிதை புரிந்துவிடுகிறது. சொல்லற்ற ஒரு தளத்தில் கவிதையின் வெளிச்சம் பாய்கிறது. மொழியமைப்பில் உள்ள வசீகரம் காரணமாக, முதல் வரியிலிருந்தே மேலெழும் வாஞ்சை காரணமாக, சொற்றொடர்களின் பிரயோகத்தில் உள்ள நூதனம் காரணமாக, கருத்துப் புலத்தில் உள்ள வலுவின் காரணமாக, இவையனைத்துக்கும் மேலே, அந்தக் கவிதை உணர்த்த முனையும் அனுபவத்தை ஏற்பதற்கான பதநிலையில் வாசக மனம் இருப்பதன் காரணமாக, என்று பல்வேறு காரணிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு மொழிக்கொத்தாக மனத்தில் தொற்றுவதற்குச் சில நுண்கணங்கள் முன்பே கவிதை வாசக மனத்தில் தன்னை ஊன்றிக்கொள்கிறது, இன்னதென்று தெரியாத விதை போல. இனி அது வளர்ந்து பூமிக்கு வெளியில் தலைகாட்டும்போதுதான் தெரியும் எந்தவிதமான தாவரம் என்று.

எளிமையான வரிகளில் எழுதப்பட்ட கவிதையின் பட்சம் இருக்கும் புரியாத்தன்மை, சிடுக்கான வரிகளில் எழுதப்பட்ட கவிதையை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் எழும் சிக்கல், அந்தக் கவிதையின் அர்த்தப் புலம் பற்றியது அல்ல. அது எதனால் கவிதையாக இருக்கிறது, கவிதை என்ற கோரிக்கையோடு, கவிதையின் அறியவந்த உருவத்தில் எதற்காக முன்நிறுத்தப்படுகிறது என்ற குழப்பம்தான்.

கவிதை புரிந்துவிடும் தருணத்தில் நடப்பது என்ன?

அந்தத் தருணம்வரை வாசகத் தனிமனம் தன்போக்கில் சேகரித்து வந்திருக்கும் அர்த்தத் தொகுப்பின்மீது கனமான அதிர்வலைகள் மோதி சமநிலையைக் குலைக்கின்றன.

உணர்ச்சிமயமான கவிதை வாசக மனத்தில் துயரத்தையும் ஒருவித கையறுநிலையையும் உருவாக்குகிறது. மறுபுறம், அறிவார்த்தக் கவிதைகள் பரவசத்தையோ சிந்தனாபோதத்தையோ கிளர்த்துகின்றன.

தன்னுடைய ஆழ்மனத்தில் கவிதைக்கான வேட்கை இல்லாத தனிமனங்களுக்கு நவீன கவிதை சுலபத்தில் திறப்பதில்லை. காரணம், கவிதையின் நிறைவு காட்சியில் இல்லை. வார்த்தைகளில் இல்லை. அழகுணர்ச்சியில் இல்லை. என்றோ எங்கோ எழுதப்பட்ட வரிகளைத் தன் மனத்தின் தரையில் புனர்நிர்மாணம் செய்துகொள்ளும் வாசகனின் அந்தரத்தில் மாத்திரமே முழுமை பெறக் காத்திருக்கும் அரைச் சந்திர வடிவம் அது.

புழங்கிய பாட்டையில் மலரும் கவிதை, பரிச்சயமான, பலமுறை அவிழ்க்கப்பட்டு ஏற்கனவே விடை தெரியவந்த புதிரையே முன்நிறுத்துகிறது. மாறாக, புதிய கவிதை, புதிய சவாலை விடுப்பது. தீர்க்கமான கவிதைச் செயல்பாட்டை வாசக மனத்தில் துவக்கிவைக்க கவிதையின் வெளிப்பாட்டில் கொஞ்சம் ரகசியமும் புதிர்த்தன்மையும் அவசியமாகின்றன.

---------

கவிதை என்ற சொல்லுக்கும் அனுபவம் என்ற சொல்லுக்கும் உள்ள உறவு சாமானியமானதல்ல. பிற புனைவு வடிவங்கள் ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி அதில் அனுபவத்தின் சாரத்தை இறக்க முயல்கின்றன என்றால், அனுபவத்தையே நேரடியாக முன்நிறுத்த முயல்கிறது கவிதை. ஆனால், இதில் பிரதானமான இரண்டு தரப்புகள் உள்ளன.

முதல் தரப்பு, அனுபவத்தைப் பதிவு செய்வதே கவிதை என்று வாதாடுகிறது. அதாவது, கவிஞனின் அகப்பரப்பில் ஏற்கனவே நிகழ்ந்து முடிந்துவிட்ட அனுபவத்தின் பதிவுதான் கவிதை என்கிற தரப்பு. இதிலும் சொல்முறையின் காரணமாக இரண்டாகப் பிளவுபடும் இரட்டைத் தடம் உண்டு. அனுபவத்தை நேர்த்தியாகவும் அலங்காரமாகவும் மிகைத் தழுதழுப்புடனும் சொல்வது என்பது ஒரு மார்க்கம். அனுபவத்தை நேரடியாகச் சொல்வது, சொல்லும்போதே அவ்வனுபவத்தின் தோற்றுவாயையும் விளைவையும் சேர்த்தே ஆராய்வது என்பது மற்றது.

இரண்டாவது தரப்பு, அனுபவத்தைப் பதிவுசெய்வது அல்ல, அனுபவத்தை உருவாக்குவதுதான் கவிதை என்று வாதிக்கிறது. அதாவது, கவிஞனின் அகத்தளம் உட்பட, வேறெங்குமே இன்னமும் நிகழாத ஒன்றைக் கவிதையின் புலத்தில் நிகழ்த்த முயல்வது என்பது. இதில், மொழியின் பரிமாணங்களுக்குள் அடங்காத பேரனுபவத்திலிருந்து, வெறும் சர்க்கஸ் வித்தைகளான கோமாளித்தனங்கள்வரை ஏகப்பட்ட தினுசுகள் இருக்கின்றன.

இவை இரண்டுமே அறுதியானவை அல்ல. மூன்றாவது தரப்பு ஒன்றும் இருக்கிறது. கவிதையின் தோற்றுவாய்க்கு மிக அருகில் நெருங்கிச் செல்லும் தரப்பு.

கவிதை என்ற பெயரில் வாசகன் கைக்கு கிடைப்பது அனுபவத்தின் ஒரு சாயை மட்டுமே. அது ஏற்கனவே கவிஞனின் அகப்பரப்பில் நிகழ்ந்து முடிந்துவிட்டதன் பதிவா, அல்லது இதுவரை எங்குமே நிகழாத முதல் நிகழ்வா என்பது அல்ல கேள்வி. என் கைக்குக் கிடைப்பது அனுபவத்தின் முழுமையா என்பதுதான்.

அனுபவம் பற்றிய சிறு குறிப்பு மாத்திரமே என்னிடம் வழங்கப்படுகிறது. அதன் நீள அகல ஆழங்களை வாசகனாகிய நான்தான் உருவாக்குகிறேன். உணர்ச்சி சார்ந்தும் அறிவார்த்தம் சார்ந்தும் என் கைவசம் உள்ள தாதுக்களைக் கொண்டு நான் வனைவதுதான் முழுமை பெற்ற கவிதானுபவமாகத் திரள்கிறது. அதாவது, கவிஞனின் வார்த்தைகளும் கவிதை உபகரணங்களும் ஒரு சாக்கு மாத்திரமே. அவற்றில் காலையூன்றி நான் சாடும் அந்தரத்தில் எனக்கான கவிதை அனுபவம் கட்டப்படுகிறது. விக்கிரமாதித்தன் கதையில் ஒரு ஓவியன் வருவான். தற்செயலாகக் கிடைத்த கட்டைவிரல் நகத்தை வைத்து அந்த நகத்துக்குரிய பெண்ணின் முழுவடிவத்தை, அவளுடைய தொடையில் இருந்த மச்சம் உள்பட, வரைந்து முடிப்பான். அவனுடையதே போன்ற தீவிரமான தியானநிலைக்குள் நான் இறங்குகிறேன்.

-----------

கவிதையின் உலகம் தனித்துவமானது. அணுவுக்குள் செயல்படும் நுண்ணிய சலனங்கள் போல, கவிதைக்குள்ளும் பரபரப்பான இயக்கம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நுண்ணோக்கியின் தீவிரத்துடன் சொற்கோவைகளைத் துளைத்து, காட்சியையோ, கருத்தையோ தேடிச் செல்லும் வாசக மனத்துடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளும் இயக்கம் அது.

இலக்கணத்தின் பிடியிலிருந்து முற்றாக வெளியேறிக் கவிதாம்சத்தின் தாழ்வாரத்தில் தமிழ் நவீன கவிதை நடைபயில ஆரம்பித்துக் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு ஆகியும் கவிதையைப் புரிந்துகொள்வதில் ஒரு சமச்சீரான பாதை உருவாகிவிடவில்லை. தொடர்ந்து புழங்கி நிலைபெற்றுவிட்ட மார்க்கத்தில் எதிர்ப்படும் ஒவ்வொரு புதிய விதக் கவிதையும், தன் இயக்கத்தில் நூதனம் கொண்ட ஒவ்வொரு புதிய கவிஞனும் வாசக மனத்தை நோக்கி விடுக்கப்படும் மாபெரும் சவால்கள்தாம்.

இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்லத் தோன்றுகிறது. கவிதை விமர்சனம் என்பது வேறு; எழுதப்பட்ட கவிதையின் விளிம்புகளுக்குள் மாத்திரம் சுழன்று திரிவது அது. கவிதையியல் நோக்கில் கோட்பாடுகளை முன்நிறுத்தி உரையாடுவது வேறு; எழுதப்படாத, அல்லது எழுதப்பட வேண்டிய ஆதரிசக் கவிதையை நோக்கி ஒட்டுமொத்தக் கவிதைச் சூழலையும் உந்திச் செலுத்த முயல்வது இது.

வாசிக்கும் மனத்தில் கேள்விகளின் சரவரிசையைக் கிளர்த்தி விடுவதன் மூலம் தன் இயக்கத்தை நிறுவிக்கொள்கிறது கவிதை. கவிதையின் உள் தர்க்கமும், கவிதைக்கு வெளியில் செயல்படும் பொதுத் தர்க்கமும் ஒத்துப்போகிற/முரண்படுகிற முனைகளில் உருவாகும் கேள்விகள், பல நேரங்களில் கேள்விகளாகவே நின்றுவிடும் இயல்புடையவை. அதன் காரணமாகவே நிரந்தரத் தன்மை கொண்டவை.

---------

எழுத ஆரம்பித்த நாட்களில் கவிதை தொடர்பாக ஏகப்பட்ட கோட்பாடுகள் வைத்திருந்தேன். மிகவும் கறாரானவை. அவற்றிலிருந்து வழுவும் ஒரு வரியைக்கூட நான் எழுதமாட்டேன். அது மட்டுமல்ல, என்னுடைய கோட்பாடுகளுக்கு விசுவாசமாக இல்லாத கவிதைகளைப் படிப்பேனே தவிர, சிலாகிக்க மாட்டேன்.

இருபது வருடங்கள் ஓடிய பிறகு, என்னுடைய ஐந்தாவது கவிதைத் தொகுப்பு வெளியாகும் இத் தருணத்தில், இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளை முன்வைத்து, சில விஷயங்களைக் கவனிக்க முடிகிறது.

முன்னர் நான் பேணிய கோட்பாடுகளில் பலவற்றை என்னையும் அறியாமல் மறுபரிசீலனை செய்து வந்திருக்கிறேன்.

புதிர்த்தன்மையையும் கச்சிதத்தையும் தக்கவைத்துக்கொண்டு, இறுக்கத்தை மட்டும் கழற்றிவிடவேண்டும் என்ற விழைவு எனக்குள் செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

ஆனால், ஒரே இரவில் மாற்றிக்கொண்டுவிடும் அளவு இலகுவானவை அல்ல, கவிதை தொடர்பான நம்பிக்கைகளும் செயல்பாடும். முந்தைய தொகுப்புகள் போலின்றி, இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளுக்கிடையில் ஒருவிதமான சமச்சீரின்மை நிலவுவதற்கு இதுவே காரணம் என்று நினைக்கிறேன். கனத்த, இறுக்கமான கவிதைகளும், மெல்லிய உணர்வுகளை மென்மையாகவே சொல்ல யத்தனிக்கும் கவிதைகளும் கலந்து கிடக்கின்றன இந்தத் தொகுப்பில்.

புனைகதைப் பரப்பில் யதேச்சையாக நுழைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கும், கவிதைகள் பற்றி எனக்குள் இருந்துவந்த கோட்பாடுகள் நெகிழ்ந்ததற்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது என்றே நம்புகிறேன்.

----------

ஆரம்ப நாட்களில் எழுதிய அளவு அதிக எண்ணிக்கையில் எழுதுவதில்லை இப்போதெல்லாம். கவிதையின் கருப்புள்ளி தானாக - கனவு உதிப்பதைப்போல அவ்வளவு ரகசியமாகவும், இயல்பாகவும் - உருவாக வேண்டும்; தயார் செய்யப்படும் கவிதைகளை வாசிக்கப் பிடிப்பதில்லை என்பது மாதிரியே எழுதவும் பிடிக்காது; என்றாலும், கவிதையுடனான தொடர்பு அழுத்தம் குன்றாமலே இருந்து வந்திருக்கிறது. முந்தைய தொகுப்பான கைமறதியாய் வைத்த நாள் வெளியான பிறகு, கடந்த நான்கு வருடங்களில் நான் எழுதிய கவிதைகள் இவை. மிகச் சிலவற்றைத் தவிர மற்றவை இப்போதுதான் முதன்முறையாகப் பிரசுரமாகின்றன.

கவிதைகளைப் பத்திரிகைகளில் பிரசுரிப்பது பற்றி ஏனோ தயக்கம் தொற்றிவிட்டது. கவிதை என்பது கருப்பொருள் மட்டுமே, உருவத்தைப் பற்றிய கவலை தேவையில்லை என்ற இடத்துக்கு நவீன தமிழ்க்கவிதை நகர்ந்து வந்திருக்கிறது. இது வளர்ச்சியா தேய்மானமா என்பதையெல்லாம் இன்றே முடிவு கட்டிவிட முடியாது. பொதுவான ஒரு பார்வைக்கு, சோர்வளிப்பதாக இருக்கிறது என்பதை மட்டும் உணர முடிகிறது. கவிதை வாசிப்பவர்களின் எண்ணிக்கை, கவிதைகள் வாசிக்கப்படும் விதம் இவை பற்றியும் நுட்பமான அவநம்பிக்கை படிந்திருக்கிறது.

பிரசுரிப்பதில் ஆர்வம் குறைந்துவிட்டாலும், எழுதுவதில் ஊக்கம் குன்றவில்லை. கைப் பிரதியில் என் கவிதைகளை வாசித்துக் கறாரான விமர்சனங்கள் வைக்கும் நண்பர்களை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

---------

கவிதைகள் எழுதுவதில் மட்டுமே கவனம் கொண்டிருந்த என்னை, கவிதை குறித்துப் பேச வைத்தவை பிரம்மராஜன் கூட்டிய கவிதைப் பட்டறைகள் மற்றும் குற்றாலம் ஹொகேனக்கல், உதகமண்டலம் ஆகிய இடங்களில் ஜெயமோகன் கூட்டிய நித்யா ஆய்வரங்குகள். அவை எனக்கு வழங்கிய உத்வேகம் அளப்பரியது.

முதன்முறையாகக் குற்றாலத்தில் நடந்த இரு மொழி ஆய்வரங்கத்துக்கு வந்திருந்த மலையாளக் கவிஞர்களில் பலரில், சிலரை மட்டுமே திரும்பத் திரும்பச் சந்திக்கவும், சம பாவத்துடன் உரையாடவும் வாய்த்தது. அவர்களில், திரு கல்பற்றா நாராயணன், திரு டி பி ராஜீவன் இருவரும் முக்கியமானவர்கள். அவர்களுடன் கவிதைப்பற்றிப் பேசும்போது, தமிழ்க் கவிதை மலையாளக் கவிதை என்ற இரண்டும் தனித்தனி வகைகளுக்கு அப்பால் கவிதை என்ற பொதுத்தளம் ஒன்று இருக்கிறது - அது விடுக்கும் சவால்களை எதிர்நோக்குவதுதான் தலையாய பணி என்று உணரக் கிடைக்கிறது.

மலையாள நவீன கவிதையின் இந்தத் தலைமுறைப் பிரதிநிதிகளும், என் நண்பர்களுமாகிய கல்பற்றா நாராயணனுக்கும், டி பி ராஜீவனுக்கும் இந்தத் தொகுப்பைச் சமர்ப்பணம் செய்வதில் பெரும் திருப்தி எனக்கு.

- எம்.யுவன்

சென்னை
23.10.2009.

நன்றி:

'தோற்றப் பிழை'

உயிர்மை பதிப்பகம்
11/29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை 600 018.

தொலைபேசி: 91 44 2499 3448
மின்னஞ்சல் : uyirmmai@gmail.com

விலை: ரூ.60

பெயர்கள்

ஒவ்வொரு பெயர் வைத்து ஒவ்வொருவர் கூப்பிடுகின்றனர்
ஆங்கிலம் தெரிந்த ஜாதகமும்
முருக பக்தரான அப்பாவும்
நியூமராலஜி பிரியரான பெரியப்பாவுமாய் சேர்ந்து
ஆனந்த் குமார் மகேஷ் என்றது பிறப்புச் சான்றிதழ்
மகேஷ் என்றார்கள் சிலர்
குமரா என்பார்கள் பள்ளி நண்பர்கள்
அம்மாவுக்கு மட்டும் இவன் எப்போதும் சிட்டிதான்
எழுதுவதற்காக இவனே வைத்துக் கொண்ட புனைபெயர் தனி
’கேசவ மாதவன்’ இருபெயர் கொண்ட
நகுலனின் நாயகன்வேறு தொந்தரவு செய்கிறான்
பெயரில் என்ன இருக்கிறது
அல்லது பெயரில் என்னதான் இல்லை
எழுதிப் பார்த்தாலும் தீரவில்லை குழப்பம்
போதையில் நண்பனொருவன்
அவித்த முட்டையை நினைவுபடுத்தும்
மழுமழுவென்ற கன்னம் தடவி
’ஆனந்தி...’
விளிக்கும்போது மட்டும் உடல் சிலிர்க்கிறது இவனுக்கு

சூசிப் பெண்ணே ரோசாப் பூவே

நகுலன் எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர் - கவிஞர். அவரைப் பற்றிய பேச்சுவந்தால் நாளெல்லாம் பேசி / கேட்டுக் கொண்டிருப்பேன். அவருடைய சில கவிதைகளை என்னுடைய குறிப்புகளுடன் பதிவிடவேண்டுமென்பது நெடுநாளைய விருப்பம். அதற்கு முன்னோட்டமாக இது.

நகுலனின் பேட்டியொன்று 1991ல் கல்குதிரை (நகுலன் சிறப்பிதழ்?) வந்திருந்தது. அப்பேட்டியில் அவரது கவிதையொன்றின் வரிகளைக் கொடுத்து விளக்கச் சொல்லியிருப்பார்கள். அது பற்றி அப்போது நண்பர்களிடம் பேசியது நினைவிருக்கிறது.

இப்போது நகுலன் இலக்கியத்தடம் புத்தகத்தில் அதை மீண்டும் படித்தபோது அந்த ஞாபகங்கள் துளிர்விட்டன. பேட்டியின் அப்பகுதியை மட்டும் கீழே தருகிறேன்.

கவிதை வரிகள் :

1. காகிதம் கிறுக்கிக் கவியானேன்
2. இருந்தாலும்
3. கவிஞர்கள் என்பவர்கள் பெண்கள் மாதிரி ஈஸ்வர சிருஷ்டி என்று நினைவு
4. மனம் நினைவு கூறும் அந்த முள்பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது.
5. சூசிப் பெண்ணே ரோசாப் பூவே
6. சாதாரண பறவைகளும் பூச்சிகளும் மறைந்து விடுமானால் உலகம் வெறிச்சென்று விடும்.
7. என்னையே அழித்துக் கொள்வதில்தான் ஆனந்தத்தை எய்துகிறேன்
8. நான் நானாக நாலுவிதம்
9. மனிதன் சாவிற்கு உள்ள அர்த்தத்தை கற்பிக்குமாறு போல
10. வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்
11. நாய் - விட்டுப் பிரியாத அனுபூதிநிலை

இனி அவரின் 'விளக்கங்கள்'. இது கவிதை மற்றும் கவிதையாக்கம் குறித்த அவரது thought processஐ புரிந்து கொள்ள உதவியாயிருக்குமென நினைக்கிறேன். :

1. காகிதம் கிறுக்கிக் கவியானேன் :

நான் முன்பு சொன்னமாதிரி முறையான படிப்பு படித்ததை படித்தபடியே சொல்வது என்பது - நமது சிந்தனை வளர்ச்சியை தடுக்கிறது. மாணவன் என்ற நிலையிலும் விரிவுரையாளன் என்ற நிலையிலும் எனக்குத் தெரிந்த வரையில் நான் அதிகமாக யாரையும் என்னைக் கவனிக்கும்படி ஒன்றும் செய்யவில்லை. என்னமோ படிக்கிறேன் அது எங்கேயோ போகிறது. அது எப்பொழுதோ மேல் விளிம்பில் வருகிறது. அப்பொழுது எழுத்து உருவாகிறது. ஒரு வழியில் சொல்லப்போனால் நாவிலிருந்துதான் நாதம் முளைக்கிறது என்று தோன்றுகிறது. பிளேட்டோ சொன்னமாதிரி நம் மனதில் இருப்பதைத்தான் நாம் எந்தப் புஸ்தகத்திலும் பார்க்கிறோம். இங்கு சொல்லப்பட்ட வரிகளில் முதல்வரி என் நினைவு சரியென்றால் தி சோ வேணுகோபலின் கவிதை ஒன்றிலிருந்து வந்தது என்று நினைக்கிறேன்.

2. இருந்தாலும் :

இருந்தாலும் என் புத்தி பின்னர் எந்த ஒரு கருத்தையோ அனுபவத்தையோ சோதனை செய்யும் ஒரு திருப்பம்.

3. கவிஞர்கள் என்பவர்கள் பெண்கள் மாதிரி ஈஸ்வர சிருஷ்டி என்று நினைவு :

இது வர்ஜீனியா உல்ஃப் என்ற ஆசிரியையின் ஒரு புஸ்தகத்திலிருந்து என் மனதில் புகுந்ததென்று நினைக்கிறேன். நமது பரிபாஷையில் சொல்வதென்றால் சிருஷ்டி என்பதுகூட அர்த்த நாரீஸ்வர வடிவந்தாங்கியது, அது தொழில் படுகையில்.

4. மனம் நினைவுகூறும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது :

இதுகூட மிகவும் நைந்து போன விஷயம். இதன் அடிப்படை படைப்புத் தொழிலை நாம் முன்கூட்டிக் கருதிச் செய்யமுடியாது என்பதுதான். இந்த அடிப்படை தற்காலத்தில் கேள்விக்குறியாக இருக்கிறது. என் வகையில் இதைச் சொல்வதென்றால் என்னை அறியாத ஒரு வேகத்திற்கு ஆட்பட்டு நான் செயல்படுகிறேன்.

5. சூசிப் பெண்ணே ரோசாப் பூவே :

இதுவும் ஓசை இன்பத்திற்காக எழுதப்பட்டது. இதற்குப் பின்னால் சுசீலா என்று கூறப்படும் ஒரு பெண்ணின் உருவம். இதைக் கூறுகையில் இந்த சுசீலாவைப் பற்றி ஒரு நண்பர் கூறியது ஞாபகம் வருகிறது. சுசீலாவின் சிறப்பு சுசீலாவில் இல்லை என்று.

6. சாதாரணப் பறவைகளும் பூச்சிகளும் மறைந்து விடுமானால் உலகம் வெறிச்சென்று விடும் :

இது H G வெல்ஸ் எழுதிய நாவலில் வாசித்த வாக்கியத்தின் மனதில் பதிந்த வரி.

7. என்னையே அழித்துக் கொள்வதில்தான் நான் ஆனந்தத்தை எய்துகிறேன் :

இதற்குச் சூழ்நிலை ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு வேளை ஒரு பைத்தியநிலையாகவும் இருக்கலாம். தற்கொலை என்பதற்கு ஒரு கவர்ச்சி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நான் தற்கொலை செய்ய முயற்சித்ததுண்டு. ஆனால், நான் அதில் செயல்படவில்லை. இன்றுகூட சில நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு. இனியும் வாழ்ந்து என்ன பயன். தற்கொலை செய்துகொண்டால் என்ன என்று, அவர் சொன்னார் : 69 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு இதை ஏன் சொல்ல வேண்டும் முன்னாடியே செய்திருக்க வேண்டும் என்றார். இதன் அடிப்படை எந்த ஒரு குறிக்கோளையும் அடைவதற்கு - அடைவதென்பதே நம்மை நாமே சித்ரவதை செய்வது போன்ற ஒரு அனுபவம். ஒரு வகையில் தோன்றுகிறது. திருப்தியான வாழ்க்கை உடையவர்கள் படைப்பிலக்கியம் படைக்க முடியாதென்று.

8. நான் நானாக நாலுவிதம் :

இதற்குக்கூட மூலம் D H லாரன்ஸ் எழுதிய ஒரு வாக்கியம் என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட உருவம் உண்டு, என்ற நிலையை இன்று நாம் காண்பதற்கில்லை என்று அவர் சொல்லியிருந்தார். பல உணர்ச்சிகள் பல சிந்தனைகள் தன்னோடு வாழ்வதற்கு தான் ஒரு வடிகால் என்ற அளவுக்கு மனிதத் தனித்துவம் மாறுபட்டு விட்டதென்று.

9. மனிதன் சாவதற்கு உள்ள அர்த்தத்தைக் கற்பிக்குமாறு போல :

இதற்குப்பின் பலமனிதர்கள் - வள்ளுவர் வேறொரு நிலையில் வேறொரு பொருளில் கூறிய மாதிரி, சிலரைக் காணும்போது செத்தவர்களும் உயிருடன் இருக்கிறார்களே! என்ற ஒரு வியப்புணர்ச்சி.

10. வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள் :

இவையெல்லாம் கேள்விமூலம் படித்த புத்தகங்கள் பிரக்ஞையில் விட்டுச் சென்ற பகுதிகள். Grdrudestin ஒரு இடத்தில் ஒரு வார்த்தையைத் திருப்பித் திருப்பி எழுதினால் அதற்கு பல்வேறு அர்த்தங்கள் வேண்டுமென்றில்லை என்று சொல்லியிருக்கிறான். அவருடைய புஸ்தகங்களை முழுவதும் புரிந்துகொண்டு படித்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. ஆனால் மொழி மூலம் படைப்புத் தொழிலை நடத்தும் எந்த எழுத்தாளனுக்கும் மொழியைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் எல்லைமீறிச் செல்கிறது. இந்த வாக்கியத்தின் அடித்தளம் இதுதான்.

11. நாய் - விட்டுப் பிரியாத அனுபூதிநிலை :

இதுவும் பாரதத்தில் இருந்து வந்த ஒரு தகவல்.

நகுலனின் பார்வையை ஓரளவிற்குப் புரிந்துகொள்வது அவருடைய கவிதைகளை அணுக உபயோகமாயிருக்கும். எனவே...

(ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட வேலையைச் சரியாகச் செய்யவில்லை. விரிவாக எழுதவேண்டும் என்று ஆசை. அதனாலேயே இம்மீள்பதிவு)

எனது நேர்காணல்

1. உங்கள் முழுப்பெயர், புனைப்பெயர்(காரணம்), சொந்த ஊர், வாழிடம், படிப்பு, முக்கிய பணி ஏனையவை பற்றி கூறுங்கள்.

பெயர் சுந்தர். புனைபெயர் ஜ்யோவ்ராம் சுந்தர். முதலில் ஜீவராம் சுந்தர் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தேன். அதற்கும் முன் எழுத ஆரம்பித்த சில மாதங்கள் அனாமிகன் என்ற பெயரிலும் எழுதியிருக்கிறேன்.

பிரமிளின் பல புனைபெயர்களில் ஒன்றின் ஒரு பகுதி ஜியோவ்ராம். அவரது எழுத்துகளின் மேல் உள்ள ஈர்ப்பினால் அப்பெயர் வைத்துக் கொண்டேன்.

சொந்த ஊர், வாழிடம் எல்லாம் சென்னைதான். படிப்பு இளங்கலை (கடைசி வருடம் முடிக்கவில்லை). 1990லிருந்து லாஜிஸ்டிக்ஸ் துறையில் பணி.

2. நீங்கள் எழுதத்தொடங்கியது எப்போது? உங்களை எழுதச்செய்தது அல்லது முன்னோடி யார்?

1990லிருந்து எழுதிவருகிறேன். 1998ல் எழுதுவதை நிறுத்திவிட்டேன். மறுபடியும் இப்போது இணையத்தில் 2007 நவம்பரிலிருந்து. வாசிப்பு தீவிரமடைய தானாகவே எழுதத் துவங்குவது பலருக்கு வாடிக்கை. நானும் அப்படியே.

3. பதிவுத்துறை மற்றும் அச்சு ஊடகத்துறை போன்றவற்றில் வெளிவந்துள்ள உங்கள் ஆக்கங்களை பற்றி குறிப்பிட முடியுமா?

அச்சு ஊடகத்தில் பெரும்பாலும் சிறுபத்திரிகைகளிலேயே எழுதியிருக்கிறேன். பிரதானமாகக் கவிதைகளும், சில சிறுகதைகளும், ஒன்றிரண்டு விமர்சனக் குறிப்புகளும். கவிதாசரண், மவ்னம், நடுகல், செந்தூரம் போன்ற பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றன.

4. உங்கள் ஆரம்பகால எழுத்துக்கள் பற்றி சொல்லுங்கள். கூடவே எவ்வகை எழுத்தை விரும்பினீர்கள், இப்போது எவ்வகை எழுத்தை மேற்கொள்கிறீர்கள் எனவும் விளக்குவீர்களா?

புனைவு சார்ந்த எழுத்துகளே என்னை அதிகமும் (எழுத) வசீகரித்தவை. அவ்வகை எழுத்துகளையே எழுதிக்கொண்டிருக்கிறேன்.

'கவித்துவம்' என்று நம்பப்படும் வார்த்தைகளைப் போட்டு அதைக் கவிதையாக நம்புவது என்னளவில் உடன்பாடில்லை.

புனிதம், உன்னதம் என்றில்லாமல் இலக்கியத்தை ஒரு மொழி விளையாட்டாக ஆடிப்பார்க்கவே விருப்பம். வெற்றிமேல் வெறி ஏற்றாத, அதற்காக தோற்பதற்கான ஆட்டமாகவும் ஆகிவிடாத ஒரு விளையாட்டு - இதைச் செய்வது சுலபமில்லை என்றபோதும்.

5. ஞான பீட விருதை குறிவைத்து ஜெயமோகனின் எழுத்து நடவடிக்கைகள் இருப்பதாக கூறப்படுவதைப் பற்றி?

புனைவிலக்கியம் என்ற வகையில் ஜெயமோகனின் பல சிறுகதைகள், நாவல்களின்மேல் எனக்கு ஈடுபாடுண்டு. அவருடைய ரப்பர், காடு, ஏழாம் உலகம் போன்ற நாவல்கள் எனக்குப் பிடித்தமானவை. அவரது கதைகளில் சில அரசியல் சிக்கல்கள் இருந்தாலும், தமிழ் இலக்கியத்தில் அவருக்கென ஓர் இடம் நிச்சயமுண்டு. (அவரது பல்டிகளையும் கோணங்கித்தனங்களையும் நியாயப் படுத்துவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்!)

அவருக்கு ஞானபீட விருது கிடைத்தால் மகிழ்ச்சியே. ஆனால் அதைக் குறிவைத்து அவர் இயங்குவதாக எனக்குத் தோன்றவில்லை.

6. இலக்கிய பரிச்சயம் இல்லாதவர்க்கு சாரு நிவேதிதாவினுடைய படைப்புகள் மனம் பிறழ்ந்த எழுத்துக்கள் போல்தான் இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எழுத்துக்கு வெளியேயும் அவரது நடவடிக்கைகளுக்கும் மரை கழண்டவர் போலவே இருப்பது ஏன்?

ஒருவரின் செயல்பாடுகள் புரியாதபோது, அதைக் காரணமாகக் கொண்டே அவரை மரை கழண்டவர் எனச் சொல்வதெல்லாம் மிகமிக அதிகப்படியான வார்த்தைகள். எதிர்-கலாச்சாரக்கூறுகள் கொண்ட பல விஷயங்களை அவர் செய்திருக்கிறார். அதனாலேயே பொதுப்புத்தி கட்டியமைத்த ஒரு பிம்பம் அது.


7. சமூகக்கேட்டை பற்றி ஒருவர் எழுதினால் அவரை கட்சி எழுத்தாளர் என்றும் சமூக விழுமியங்களை கேள்வி கேட்டால் அவரை கலக எழுத்தாளர் என்றும் எழுத்துலகில் முத்திரை இடுவார்கள் என்பது உண்மையா? கொள்கை எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் இல்லையா?

இல்லை. அப்படி எனக்குத் தோன்றவில்லை.

எந்தக் கொள்கையையும் முழுவதுமாக ஏற்றுக் கொள்வது நம்பிக்கையாளர்கள் என்ற இடத்தை அடையத்தான் உதவும். முடிந்தவரையில் அனைத்தையும் கேள்விக்குட்படுத்துபவனே கலைஞன். கேள்விகள் எதுவும் எழுப்பாத சரணாகதி நிலையில் தன்னை வைத்துக் கொள்வதை எழுத்தாளன் ஏற்கமுடியாதில்லையா?

கொள்கைகளில் தீவிர ஈடுபாடுடையவர்களும் பல இலக்கியங்களைத் தந்திருக்கிறார்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நம் தமிழிலேயே பல உதாரணங்கள் உண்டு. (இங்கே கொள்கை என்பதைக் கட்சிக் கொள்கை எனப் புரிந்து கொள்ளவும்)

இன்னும் கொஞ்சம் தீவிரமாகச் சிந்தித்தால் கொள்கை அல்லது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட எழுத்தென ஏதாவது உண்டா என்ன? சமூக விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்துவதும் ஒரு எழுத்தாளனின் வேலைதான்.


8. திராவிட இயக்கத்தின் அரசியல் வெற்றி (தமிழ்ச்)சமூகத்தில் அதிகாரத்தை பரவலாக்காமல் வெறும் மடைமாற்றிவிட்டது என்பது பற்றி உங்கள் கருத்தை கூற முடியுமா?

திராவிட இயக்கம் என்றில்லை - எல்லாவித அரசுகளும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க அல்ல, மாறாக குவித்துக்கொள்ளவே விரும்பும். அதிகாரம் செயல்படும் விதம் அப்படி!


9. பார்ப்பனிய கொட்டம் திராவிட எழுச்சியால் அடங்கியது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும் பிராமணரல்லாத உயர்சாதியினரின் கொட்டம் யாரால் அடங்கக்கூடும்? இதில் திருமாவின் பங்களிப்பு வருங்காலத்தில் எப்படி இருக்கும்?

படிநிலைகளில் கொஞ்சம் உயர்ந்ததும் பிற உயர்சாதியினர் பார்ப்பனர்களாக ஆக முயற்சிக்கின்றனர் என்பது எனது பார்வை. உதாரணத்திற்குப் பெயர் வைப்பதை எடுத்துக் கொள்வோம். குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் ஸ ஷ ஜ போன்ற எழுத்துகள் இல்லாமல் யாருமே பெயர் வைப்பதில்லை! ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே இம்மாதிரியான பெயர்களை வைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். போலவே ‘சுத்தம்' பற்றிய கருத்தியலும். அதாவது மொத்த உயர்சாதியினரும் இப்போது பார்ப்பனர்கள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்!

திருமாவின் பங்களிப்பு சிலவருடங்களாக ஏமாற்றத்தையே அளிப்பதாயுள்ளது. ஆனால் நடைமுறை அரசியல்சார்ந்து அவர்தான் ஓரளவிற்கு நம்பிக்கையளிக்கிறார் என்பதையும் சேர்த்துக் கொள்கிறேன்.


10. வடஇந்திய நகரங்களில் நிலவிவரும் பாதுகாப்பற்ற சூழலுக்கு காஷ்மீர் காரணமா அல்லது இந்து அடிப்படைவாதிகள் காரணமா? அல்லது இரண்டுமா?

வட இந்திய நகரங்கள் என்றில்லை. இப்போது மும்பை போன்ற மேற்கிந்தியாவிலும், முன்னர் கோயமத்தூர், பெங்களூர், ஹைதராபாத் குண்டுவெடிப்புகள் போன்ற காரணங்களினால் தென்னிந்தியாவும் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது.

இது ஒரு சமூக ஆய்வாளனுக்குரிய கேள்வி. என்னிடம் பதிலில்லை. நீங்கள் குறிப்பிட்டது தவிர வேறு காரணங்களும் இருக்கலாம்.

என்னளவில், யார் காரணம் என்பது முக்கியமில்லை. வன்முறை என்பதை யார் எந்தக் காரணம் கொண்டு முன்வைத்தாலும் எதிர்க்கப்படவேண்டியதே.


11. மும்பை சம்பவத்திலும் ஈழம் மற்றும் தமிழக மீனவர் விஷயத்திலும் வட இந்திய ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் குறித்து உங்கள் கருத்தை கூறமுடியுமா?

மும்பை வன்முறையை அவர்கள் அழகான தொடர்-காட்சி மயப்படுத்தலின்மூலம் மக்கள் தங்கள் நினைவிலி மனங்களில் இன்னும் துப்பாக்கி வெடிச் சத்தங்கள் வேண்டும் என ஆவலாய் கேட்கக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். இது ஆபத்தானது.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் நடந்த கோரத்தில் 48 பேர் பலியாகியிருக்கிறார்கள். அதைப்பற்றி யாரும் பெரிதாகப் பேசக்காணோம். இவர்களுக்கு தாஜ் மகால் / ஓபராய் ஓட்டல்களின் தாக்குதலே பெரிதாகப் போய்விட்டது.

ஈழம், தமிழக மீனவர் குறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படுகிறார்களா என்ன? ஒளிபரப்ப வேறு விஷயங்கள் கிடைக்காவிட்டால், அதைத் தொட்டுச் செல்கிறார்கள், அவ்வளவே.


12. சமீப காலங்களில் திமுக -வினர் கூட விமர்சனங்களை பொறுக்க மாட்டாதவர்களாக உள்ளனர். அவர்கள் (ஒருவேளை)நினைப்பதுபோல் திமுக இல்லாவிட்டால் திராவிட சிந்தனையாளர்களும் நடுநிலையாளர்களும் அரசியல் அகதிகளா என்ன?

நீங்கள் சொல்லியிருப்பதுபோல் நான் உணரவில்லை. விமர்சனங்களுக்கு அவர்கள் பதில் சொல்கிறார்கள்; அவ்வளவே. ஒரு உதாரணத்திற்கு இப்படிப் பார்ப்போம் : அதிமுக ஆட்சியிலிருந்தால் இப்போது கலைஞரைச் செய்வதைப்போல் ஜெயலலித்தாவை கண்டமேனிக்கு விமர்சிக்க முடியுமா?

நடுநிலை என்றெல்லாம் ஒன்றுமேயில்லை. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட நடுநிலையான கருத்து என எதுவுமே இருக்க முடியாதென்று திடமாக நம்புகிறேன்.

கட்சி சாராதவர்கள் என வேண்டுமானால் சொல்லலாம்.

13. வலைப்பூ உலகம் வழங்கும் சுதந்திரம் அனைத்தையும் தமிழ்மணத்தால் வழங்க முடியாததற்கு என்ன காரணம்? தமிழ்மண பயனர்களா? தமிழ்ச்சமூகமா? நண்பர் பைத்தியக்காரன் சொன்னதுபோல், இலவச சேவை தரும் தமிழ்மண நிர்வாகிகளின் புரவல மனப்பான்மையா?

சிம்பிள் : பாண்டிச்சேரிப் பெண் பதிவர்கள் :))

நம்முடையது ஒருமாதிரியான கட்டுப்பெட்டித்தனமான, அதே சமயம் அதை மீறவும் உள்ளுக்குள் விரும்பும் ஒரு சமூகம் என்பதாய் நான் கணித்திருக்கிறேன்.

இன்னொன்று, இணையத்தில் சில இடங்களில் பொறுப்பற்ற முறையில் சுதந்திரம் (கட்டற்ற சுதந்திரம்!) பாவிக்கப்படுகிறது. இதுவும் ஆபத்தானதே.

14. உலகெங்கும் பெண்டாட்டி என்பது இன்றும் வேலைக்கார வர்க்கம் தானே?

துரதிர்ஷ்டவசமாக, ஆம்!

15. துணைக்கண்ட அரசியலில் அதிகார உச்சிக்கு சென்றதும் பெண்கள் கிடைத்தற்கரியது கிடைத்தது போல் அதிகாரத்தை கையாள்வதேன்?

இது மிகப் பெரிய உளவியல் ஆய்விற்குரியது.

துணைக்கண்ட அரசியலில், ஒப்பீட்டளவில் ஆண்களைவிட, அரசியல் பதவியடையும் பெண்கள் சர்வாதிகாரிகளாகவே மாறிவிடுகிறார்கள். பெனாசீர் புட்டோ, மாயாவதி, இந்திரா காந்தியிலிருந்து நம்மூர் ஜெயலலிதாவரை நிறைய உதாரணங்கள். ஷீலா தீட்சித், வசுந்தரா ராஜே சிந்தியா போன்றவர்கள் தேசிய கட்சியின் மாநிலத் தலைவர்களாக இருப்பதால் தப்பிப்போனார்களோ என்னவோ!

இத்தனைகாலம் அடக்கிவைக்கப் பட்டிருந்ததால் எழுந்த உணர்ச்சிக் கொந்தளிப்பாகக்கூட இது இருக்கலாமோ?

16. எழுத்தாளர் எழுதினாலும் காமக்கதைகள் சரோஜாதேவிக்கதைகள் போலவே இருப்பது ஏன்? உங்கள் கதைகள் காமத்தை தூண்டவே இல்லையே!
உங்கள் கேள்வியில் முரண் உள்ளது :)

சரோஜாதேவிக் கதைகள் உணர்ச்சிகளைக் கிளறிவிடுவது. சுயமைதுனத்திற்கு மட்டுமே பயன்படுவது. அல்லது உடலுறவின்போது படித்ததை நினைவுக்கு கொண்டுவந்து உணர்ச்சிகளை ஏற்றிக் கொள்ளப் பயன்படுவது.

ஒரு வசதிக்காக மட்டுமே இப்படிச் சொல்கிறேன் : action based கதைகளை எழுதினால் உணர்ச்சிகள் தூண்டப்படலாம். ஆனால் என் நோக்கம் அதுவல்ல.

இன்னொன்று, குதப் புணர்ச்சி பற்றி ஒரு கதை எழுதிவைத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகப் பதிவிடவில்லை. அப்படியே எழுதினால் அடிக்க வருவார்கள்! மாற்றவும் கைஓடவில்லை :)

என்னுடைய கதைகளுக்கு வந்த சில அனானிப் பின்னூட்டங்களும் சில பதிவர்களின் எதிர்ப்பையும் பார்த்து எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது! என்னுடைய கதைகள் தோல்வி என விமர்சிப்பது வேறு, வெறும் ஆபாசம் எனப் புறந்தள்ளுவது வேறல்லவா?

எல்ஃபிரெட் ஜெலனிக்கின் Piano Teacher, ழார் பத்தேலின் Story of the Eye மாதிரியான ஒரு கதையை தமிழில் வெகுஜன ஊடகத்தில்கூட வேண்டாம், சிறுபத்திரிகை ஊடகத்திலோ அல்லது மாற்று ஊடகம் எனச் சொல்லிக்கொள்ளும் தமிழ் இணையப் பக்கங்களிலோ ஏன் எழுத முடிவதில்லை என யோசித்துப் பார்க்கலாம்.

17. உங்கள் காமக்கதைகளில் இருக்கும் இலக்கியச் சுவை உங்கள் ஏனைய படைப்புகளிலும் அப்படியே கிடைக்கிறது. இந்நிலையில் காமக்கதைகளை ஒரு வெரைட்டிக்காகத்தான் எழுதினீர்களா? வேறு என்ன காரணம்?

முன்பே ஒர் இடத்தில் சொல்லியது போல காமத்தை ஒரு மொழி விளையாட்டாக ஆடிப்பார்க்கும் திட்டமன்றி வேறில்லை. திரட்டிகளில் இணைந்து இயங்கும்போது அதற்கான விதிமுறைகள் இருக்குமல்லவா. அதற்கு உட்பட்டே எழுதவேண்டியிருக்கிறது. உதா :

ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்
ஜிக்கு ஜிகு ஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்
ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை
அந்தச் சண்டையில
கிழிஞ்சுதுடா
ஸ்ரீதேவி புண்டை
ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்

இந்தப் பாடலை ஆறாவது / ஏழாவது படிக்கும்போது பள்ளி மாணவர்கள் பாடிக் கேட்டிருக்கிறேன். இதை நீங்கள் நாயகன் என்றால் சண்டை போடும் வீரர்களாகவும் நடிகை / பெண் என்றால் அவள் யோனி மட்டுமே (அதாவது புணர்ச்சிக்கு மட்டுமே லாயக்கானவள்) உடையவள் என்பது எப்படி சிறுவயதிலேயே கட்டியமைக்கப்படுகின்றது என்றும் வாசிக்கலாம். இந்தப் பாட்டை விளக்கங்களுடன் எழுதினால் கட்டுரையாகிவிடும். என் வேலை அதுவல்ல. வெறும் பாட்டை மட்டுமே பதிவிட்டால் வரும் எதிர்ப்பு எத்தன்மையாய் இருக்கும் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இம்மாதிரியான சில சங்கடங்கள் :(


18. "அர்ப்பணிப்பு ஆசை இல்லாத பெண்காமமும் இரக்க உணர்வு இல்லாத ஆண் காமமும் வெறும் உடற்காரணிகளின் கைவரிசையே! அவை உங்களுக்கு விதிக்கப்பட்ட காமுறும் அளவை கூட்டவோ குறைக்கவோ முடியாது, அர்பணிப்பும் இரக்கமுமே காதலாக கொள்ளப்படும்" -என்கிறார் எங்கள் பேராசிரியர்(இந்தியாவில்). இவ்விரு உணர்வுகளும் உங்கள் காமக்கதைகளில் தென்படவில்லையே? (காலச்சுவடோ அல்லது தீராநதியிலோ நான் படித்த ஒரு சிறுகதை பேராசிரியரின் இவ்வரிகளை ஞாபகப்படுத்தியது!)

என்னங்க இப்படில்லாம் கேக்கறீங்க :( அர்ப்பணிப்பு வேணுமாம் பெண்களுக்கு, இரக்க உணர்வு வேணுமாம் ஆண்களுக்கு.. இதை உடைத்துப் பார்த்தால் வரும் அர்த்தம் பெண்கள் அடிபணிய வேண்டும், ஆண் பெண்களைக் கண்டு இரக்க உணர்வோடு கலவி செய்ய வேண்டும். காலம் காலமாக சொல்லப்பட்டு வருவதுதானே இதெல்லாம்... ஏன், பெண்ணோ ஆணோ காமத்திற்காக - உடல் தேவைகளுக்காக - மட்டுமே ஓக்கக் கூடாதா?

இம்மாதிரியான ஆணாதிக்க வெறி பிடித்த பேராசிரியர்கள் இருந்தால் விளங்கிடும் :(


19. ஜனரஞ்சக எழுத்து வாசகர்களை இலக்கிய வாசிப்புக்கு நகர்த்த எழுத்தாளர் என்ற வகையில் நீங்கள் மேற்கொண்ட முயற்சியாக உங்களது சிறுபத்திரிக்கைகள் பற்றிய அறிமுக பதிவுகளை கொள்ளலாமா? அவ்வகைப்பதிவுகள் தொடருமா?

இணையத்தில் புழங்குபவர்களுக்குக் கிட்டத்தட்ட எல்லாவிதமான எழுத்துகளும் தெரிந்திருப்பதைப் பார்க்கிறேன். அவர்களுக்குப் பிடித்த வகைமாதிரி எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கிறார்கள். அவ்வளவே.

எனவே இக்காரியம் வெகுஜனப் பத்திரிகைகள் (அல்லது அதில் எழுதும் எழுத்தாளர்கள்) செய்யவேண்டியது.

நான் எழுத நினைத்தது சிறுபத்திரிகை வாசகர்களும் பரவலாக அறியாத பத்திரிகைகளைப் பற்றிய குறிப்புகள்.

20. 'ச்சும்மா ட்டமாஷ்' -வலைப்பூ பற்றி உங்கள் கருத்து என்ன?

கோவியார், தமிழ் சசி, லக்கி பேட்டிகள் என்று வித்தியாசமான விஷயங்களுடன் இருக்கிறது. தள்போட்சுத்ரி படித்த ஞாபகமிருக்கிறது. ச்சும்மா ட்டமாஷூக்கென்றாலும், சீரியஸான விஷயங்களும் இருக்கின்றன :)



எதிர் கேள்வி 1:

எழுத்தாளர் நகுலனைப் பிடிக்கும் என ஒரு முறை கூறியிருக்கிறீர்கள். அவரைப்பற்றி வலைப்பூ வாசகர்களுக்கு சொல்ல முடியுமா?

எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர் நகுலன். அவரது எழுத்துகளை ஆராதிப்பவன் என்ற முறையில் நான் எழுதினால் அது மிக மிக ஒருதலைப் பட்சமாகவே இருக்கும். ஏற்கனவே இணையத்தில் அவரைப் பற்றி சில பதிவுகள் இருக்கின்றன.

எதிர் கேள்வி 2: அப்படியென்றால், திராவிட இயக்கம் தான் யாரை பிரநிதித்துவம் செய்வதாக சொல்லிக்கொள்கிறதோ அவர்கள் அனைவருக்கும் அதிகாரத்தை குவித்திருக்க வேண்டும். தோன்றிய காரணியும் செயல்படும் விதமும் தொடர்பின்றி இருப்பது திராவிட இயக்கத்திலிருந்து தாழ்த்தப்பட்டவர்களை நிரந்தரமாக பிரித்துவிடுமா / பிரிக்க வேண்டுமா?


திராவிட இயக்கம் தோன்றியது அது represent செய்யும் மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டுமென்பதற்காக அல்ல, மாறாக தங்களது கொள்கைகளை அமலாக்க என்றே நினைக்கிறேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்த அமைப்பில் பெரிதாக ஒன்றும் கிடைத்துவிடாது என நினைக்கிறேன்.

இன்னும் விளக்க வேண்டுமானால் அதற்கு நாம் அரசு, அதிகாரம் செயல்படும் விதத்தைப் பற்றிப் பேசியாக வேண்டும். நீட்ஷே, ஃபூக்கோ எனச் செல்ல வேண்டும். எனக்கு அவ்வளவு தெளிவாக அவற்றை விளக்கத் தெரியாது என்பதுடன் அது நான் ஃபிக்ஷன் ஆட்கள் செய்ய வேண்டிய விஷயம் :) அதனால் வேறு கேள்வி கேட்க முடியுமா?

எதிர் கேள்வி - 3: கட்டற்ற சுதந்திரம் விளைவிக்க வாய்ப்புள்ள ஆபத்து ஒன்றை உதாரணம் கூறி விளக்க முடியுமா?

சிலருக்கு இணையம் தரும் முகமற்ற தன்மை மிரட்டல்களை விட முடிகிறது. என்னுடைய சாரு நிவேதிதாவும் ஆபாசமும் என்ற இடுகை அப்படிப்பட்ட ஒரு வலைப்பூவைப் பார்த்த எரிச்சலில் எழுதியதுதான். மேலும், பலரும் அறிந்திருக்கும் போலிப் பிரச்சனை கட்டற்ற சுதந்திரத்தினால் வந்ததே.

21. கவிஞன் சொல்லாத பொருளையும் வாசகன் கற்பித்துக்கொள்ளும் வகைக் கவிதை தமிழில் சாத்தியமா? உதாரணம் தரமுடியுமா?

நிச்சயம் சாத்தியம். இன்னும் சொல்லப்போனால், எழுதியபிறகு ஆசிரியனின் பங்கு முடிந்துவிடுகிறது.

தமிழ் வலைப்பக்கங்களில் Death of the Author என்பதை எவ்வளவு மலினப் படுத்த முடியுமோ அவ்வளவு மலினப்படுத்திவிட்டார்கள் (ஒருவர் பிறகு எதற்கு பணம் கேட்கிறார்கள், அவர்கள் பெயர்களில் ஏன் வெளியிடுகிறார்கள் என்றெல்லாம் கேள்வி கேட்டார்!)Death of the Intentions of the Author எனப் புரிந்து கொள்ளலாம் நாம். ஆசிரியப் பிரதியைவிட வாசகப் பிரதியே முக்கியம். அதற்கென வாசகன் இஷ்டத்திற்கு அர்த்தங்களைச் சொல்லிச் செல்லலாமென்பதில்லை.

ஒரு நல்ல கவிதை என்பது பல அர்த்தங்களைத் தரவல்லது! வலைப்பதிவுகளிலேயே அப்படிப்பட்ட பல கவிதைகளை நீங்கள் பார்க்கலாம். தனிமையைப் பற்றி ஆயிரமாயிரம் கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன. கென் எழுதிய கவிதையொன்றைப் பார்ப்போம் (http://www.thiruvilaiyattam.com/2008/11/blog-post.html).

தனித்த இரவு
எவருமற்ற அறையின் கதவுகள்
இருளோடு விரியத்திறக்கிறது
சுருண்டு கிடக்கும் பாய்கள்
தலையணையோடு புணர்ந்து முகிழ்கிறது
முந்தின தினம் தொலைத்த
மின்சாரம் எதிர் வீட்டுப்பூனையின்
கண்களில் ஒளிந்து மினுக்கிடுகிறது

ரத்தசோகை நோயென மெழுகின்
வெளிச்சம் அழுது வடிய
ஈரம் கசியும் சுவரில்
பேயாடுகிறது உருவம்

தீராத நாளின் சொச்ச
இரவை
விரல் உருவங்கள் படைத்துக்
கழிக்கிறேன்
கிழிந்த நிலா நகர்கிறது மெல்ல
மிக மெல்ல

வாசகனாக இது எனக்குச் சொல்வது என்ன... யோசித்துப் பார்க்கிறேன். இதில் பாய்கள் ஏன் பன்மையிலும் தலையணை ஒருமையிலும் வரவேண்டும். ஒருவேளை இன்னொருவர் இருந்திருந்து அவர் தலையணையை எடுத்துச் சென்றிருக்கலாம். அந்த இன்னொருவர் எதிர்-பாலினமாக இருப்பாரோ (பாய்கள் தலையணையோ புணர்ந்து...) அந்த இன்னொருவர் பிரிந்ததாலேயே தனிமை அதிக வாதையைத் தந்திருக்கலாம். இப்படியாக இதை நான் வாசிக்க வேறொருவர் வேறு மாதிரியான வாசிப்பைத் தருவதற்கான ஸ்பேஸ் இந்தக் கவிதையில் இருக்கிறது!

22. பெண்சீண்டலை ஆணாதிக்கமாகத்தான் கொள்ளமுடியுமா? வேறு பரிமாணங்கள் அதற்கு உண்டா?

நிச்சயமாக சீண்டல் காதலின், காமத்தின் ஓர் அங்கம்தான். ஆனால் யாரைச் சீண்டுகிறோம் என்பதில் இருக்கிறது விஷயம் :)

23. அடிப்படை ஆதாரம் ஏதும் தரமுடியாத ஒரு கேள்வி. தமிழிஷ் திரட்டியில் உங்களுக்கு பங்கு இருக்கிறதா?

தமிழ்மணம் போலவே அதிலும் இணைந்திருக்கிறேன் :)எனக்கு கணினி அறிவே மிகக்குறைவு. ஒரு படம் இணைக்கக்கூட இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. இதில் திரட்டியா.. கேட்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்றாலும், அதெல்லாம் ஒன்றுமில்லை.

(2008 இறுதி மாதங்களில் நண்பர் மோகன் கந்தசாமி பதிவில் வெளியான நேர்காணல் இது. அவரது பதிவு பொது வாசகர்களுக்கு மூடப்பட்டுள்ளதால் இங்கே சேமிக்கும் பொருட்டு வெளியிட்டிருக்கிறேன்).

எழுதப்படாத கவிதையின் இறுதி வரி

மதிலில் இருந்து தாவப்போகும்
பூனையைப் போல் மரணத்திற்குக் காத்திருக்கிறேன்
என் மரணமல்ல -
வெற்றிடத்தைக் காற்று நிரப்பும்
என்று தத்துவம் பேசி
மனைவிக்கு ஒன்றும் விட்டுச் செல்லாத
என்னுடைய கையாலாகாத்தனமே
அதிகம் துன்புறுத்துகிறது
அவளருகில் படுத்திருந்த இரவுகளில்
என்னை வெளிப்படுத்த ஆசைப்பட்டிருக்கிறேன்
அவளுடன் போட்ட பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத
சண்டைகளைக்கூட இப்போது நினைக்கையில்
சுகமாயிருக்கிறது
நாளைக் காலை
என்னுடைய வெளிறிய உடலைப் பார்ப்பாள்
உலுக்குவாள்
என் பெயர் சொல்லி அழைப்பாள்
ஆனால் நான் பதில் சொல்ல மாட்டேன்
எப்போதும் அவளிடம் சொல்லத் தயங்கிய
வார்த்தைகளை இப்போது சொல்ல நினைக்கிறேன் :
நான் உன்னைக் காதலிக்கிறேன் கண்ணே

(சார்லஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதையொன்றை ஒட்டி எழுதப்பட்டது)