பதிவுலக அரசியல்

இதை எழுத வேண்டாமென்றுதான் முதலில் நினைத்தேன். வெறும் சண்டைப் பதிவுகளாக எழுதிக் கொண்டிருக்கிறென் என்று மணிகண்டன் போன்றவர்கள் நினைக்கலாம். அதனால்தான். ஆனால் ஒரு அளவுக்கு மேல் பொறுமை இருந்து தொலைய மாட்டேன் என்கிறது. கூட்டு சேர்கிறார்கள் என்ற பழியும் நம்மீது விழலாம் என்றாலும் இதை எழுதாமல் இருக்க முடியவில்லை. எல்லாருக்கும் நல்லவனாகவே இருக்க பிரியப்பட்டாலும் நிஜத்தில் அது சாத்தியமானதாய் இருப்பதில்லை.

தீபா என்ற பெயரில் ஒருவர் பதிவெழுதுகிறார் என்பது சமீபமாகத்தான் தெரியும் எனக்கு (யாத்ராவின் கவிதை வரியொன்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து எழுதியிருந்த பதிவது). பிறகு, அவரது மாண்டோ சிறுகதை மொழிபெயர்ப்பைப் படித்தேன். எனக்கது பிடித்திருந்தது. அவரது மற்ற எழுத்துகளையும் படித்துப் பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்தேன்.

இப்போது ஆரம்பித்திருக்கிறது கோணல்கள். நர்சிம் தனக்கு வந்த ஒரு கடிதத்தை வெளியிட அதற்கு எதிர் பதிவாக இவர் ஒரு வராத கடிதத்தை வெளியிட்டிருந்தார். சாதாரணமாக இது வலையுலகில் நடப்பதுதான் என்று முதலில் நினைத்தேன். அப்படியில்லை போல :(

முரளிகண்ணன் ஒரு பதிவெழுத, தீபா பதில் பதிவெழுத, நர்சிம் இன்னொரு பதிவெழுதியிருக்கிறார். அதற்கு தீபா மறுபடியும் இன்று ஒரு பதிவெழுதியிருக்கிறார். அவரவர் தளம் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். கட்டற்ற சுதந்திர வெளி.

ஆனால், தீபாவின் கடைசிப் பதிவில் தெரிவது அப்பட்டமான ஆணவத் தெறிப்புகள். இது தன்னுடைய வலைப்பதிவு, என்ன வேண்டுமானாலும் எழுதுவேன் போன்று என்னென்னவோ உளறல்கள். தன் நிலைப்பாட்டுக்கு எதிராகப் பேசுபவர்கள் சேற்றை வாரி இறைப்பவர்கள், பக்க வாத்தியக்காரர்கள் என்று பல பட்டங்கள்! நல்ல வேளை இவரிடம் அரசியல் - அதிகாரம் இல்லை - இருந்தால் கசையடி கொடுப்பார் போல.

மாற்றுக் கருத்து வந்தால் அதை வெளியிடாதது வலைப்பதிவர்களின் உரிமை சம்பந்தப்பட்ட விஷயமல்ல, அடிப்படை நேர்மையுடன் தொடர்புடைய விஷயம்.

தமிழ்மண வாக்குகள் எல்லாம் ஒரு விஷயமா என்ன. இதையெல்லாமா அடிப்படையாக வைத்து ஒரு விஷயத்தின் நம்பகத்தன்மையைத் தீர்மானிப்பது?

நர்சிம்மின் பதிவில் வித்யா என்பவர் மறுமொழியில் சொல்லியிருப்பதைப் பார்த்தால், தீபா intentionalஆக நர்சிம்மைக் காயப்படுத்த வேண்டுமென்றே பிரச்சனையை ஆரம்பித்திருக்கிறார். இம்மாதிரியான சீண்டல்கள் யாரையும் சினப்படுத்தவே செய்யும். இது lime lightக்கு வரச் செய்யும் ஒரு உத்தி - ஆனால் மிகப் பழைய உத்தி. இதைவிடுத்து உருப்படியாக ஏதாவது எழுதிப் புகழோ அல்லது சிறுமையோ படலாம்.

இவர் பின்னூட்டத்தை வெளியிடுவாராம், பதில் எழுதுவாராம், பிறகு இல்லவே இல்லை என்பாராம். மின்னஞ்சல் back up இருக்கிறது என்றால், நீயேன் அதையெல்லாம் வைத்திருக்கிறாய், என்னை மிரட்டுகிறாயா என்று தெருச் சண்டையில் இறங்குகிறார். இதற்கு கும்மியடிக்கவும் நான்கு பேர். கொடுமைடா சாமி!

இந்தப் பிரச்சனையை ஆரம்பித்த தீபா இப்போது அரை உண்மைகளையும் முழுப் பொய்களையும் வீசியிறித்துச் செல்கிறார். குறுஞ்செய்தி அனுப்பியதும் நீக்கிவிட்டார் என நர்சிம் எழுதினால், நான் பயந்து போய் நீக்கியதாகச் சொல்கிறார் நர்சிம் எனத் திரிக்கிறார். பதட்டத்தில் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்துதான் செய்கிறாரா என்ன.. இப்படி வெளிப்படையாக தெரியும் விஷயத்திலேயே இந்தத் திரித்தல் என்றால்...???

தன் பதிவில் 'எனது நோக்கத்தை கறைப்படுத்தப் பார்த்து உங்கள் கீழ்த்தரமான கோபத்தை வெளிப்படுத்தினீர்கள்' எனச் சொல்லும் தீபாவின் உண்மையான நோக்கம் என்ன என்பது வித்யாவின் மறுமொழியில் தெளிவாகத் தெரிகிறது. இப்போது யார்மீது சேறு என்பதை தீபாவே தீர்மானித்துக் கொள்ளட்டும். ஆனால் அந்தப் பின்னூட்டத்தையும் வெளியிடாமல் அதற்கு தீபா சொல்லியிருக்கும் பதில் கேவலத்தின் உச்சம்! மிகக் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கத்தக்கது.

நண்பர் பா ராஜாராம்

நேற்று இரவு 12 மணி வாக்கில் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது பா ராஜாராமின் கவிதையொன்று தமிழ்மணத்தில் இருந்தது. ஏற்கனவே வாசித்தது போன்ற நினைவு.

என்னுடைய 20 வயதில் குமார்ஜியின் நட்பு கிடைத்தது. அவர் மூலமாக தெய்வாவும் பா ராஜாராமும் பழக்கமானார்கள். வாரத்திற்கு இரண்டு முறை குமார்ஜிக்கும் பா ராஜாராமுக்கும் நீளமான கடிதங்களை எழுதுவது என் வழக்கம். பெரும்பாலும் படித்த புத்தகங்கள், கவிதைகள் தொடர்பாகத்தான் இருக்கும் கடிதங்கள். என்னிலும் 6 வயது மூத்தவர்கள் மூவரும் என்றாலும், அது துளியும் தெரியாமல் நட்புடன் பழகுவார்கள்.

1994ல் நான் ஒரு மன அழுத்தத்தில் இருந்தபோது (வேறு என்ன, எல்லாம் எழவெடுத்த காதல் தோல்விதான்), கிளம்பி வாடா சிவகங்கைக்கு என்றார். சிவகங்கைக்குப் போய் ஒரு நான்கு நாட்கள் தங்கியிருந்தேன்.

டிவிஎஸ் 50 வைத்திருந்தார். அதில்தான் ஊர் சுற்றுவது. அப்போது அந்த ஊரில் பார் வசதி கிடையாது என்பதால் அவரும் சில நண்பர்களும் சேர்ந்து ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருந்தனர். ஆஹா, தனி அறையெல்லாம் எடுத்திருக்கிறார்களே, சரியான செட்தான் என்று சந்தோஷப்பட்டால்... எல்லாருமே 60 எம் எல் அல்லது 90 எம் எல் பார்ட்டிகள்! (நுரைகளற்ற 90 மில்லிக்கான காசு இருந்தது பாக்கெட்டில் என்ற ராஜாராமின் கவிதை வரி இப்போது ஞாபகம் வருகிறது).

ராஜாராமின் வீடும், பின்னாலிருந்த அவரது அறையும், தெருக்களும், ரயில்வே ஸ்டேஷனும் இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அந்தக் குடி அறையின் வாசலில் இருந்த பெட்டிக் கடையில் வாங்கிய கோலி சோடாவும் கலரும்கூட. இன்னொரு முறை கோலி கலர் கலந்து ரம் குடித்தால் அந்தப் பழைய வாசனையைக்கூட கண்டுகொள்வேன் என நினைக்கிறேன்.

நிறைய கடிதங்களும் எப்போதாவது தொலைபேசி அழைப்புகளுமாக எங்கள் நட்பு இருந்தது. ராஜாராம் பழகுவதற்கு மிகப் பிரியமானவர்.

அவ்வப்போது அவரது கவிதைகள் சிறுபத்திரிகைகளில் வந்து கொண்டிருந்தன. கணையாழியில் சில கவிதைகள் வந்திருக்கின்றன. சுபமங்களாவின் கடைசி இதழில் (கோமல் இறந்த பிறகு ஒரு இதழ் வந்தது - வண்ண நிலவனை ஆசிரியராகக் கொண்டு) நடுப்பக்கத்தில் இவரது கவிதை வந்த நினைவு.

நாங்கள் எழுதும் கவிதைகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வோம். அதிகமும் இவரது கவிதைகளைப் பாராட்டியதில்லை நான். அது சரியில்லை, இது சரியில்லை என்று நொள்ளை நொட்டை சொல்லிக் கொண்டே இருப்பேன். அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார்.

அவ்வளவு அன்பான மனிதருடன் 1996க்குப் பிறகு திடீரென்று தொடர்பு அறுந்து போய்விட்டது. எவ்வளவு முயன்றும் அவரைப் பிடிக்க முடியவில்லை. அவர் வெளிநாடு சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்தது.

எப்போதாவது குமார்ஜியிடமோ தெய்வாவிடமோ பேச நேர்கையில் ராஜாராம் பற்றிய பேச்சு வராமல் இருக்காது!

நடுவில்தான் நேற்று வலைப்பதிவில் அவரது கவிதையைப் படித்தது, அவர்தான் என்று பின்னூட்டத்தில் உறுதி செய்து கொண்டது, பிறகு அலைபேசியில் வெகுநேரம் பேசி, கடிதம் எழுதி என....

குமார்ஜி எழுதுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. வாசிப்பதுகூட அதிகபட்சம் ஆனந்த விகடன்தான். தெய்வா எப்போதுமே எழுதுவதில்லை - படிப்பதோடு சரி. இப்போது சவுதியில் இருக்கும் ராஜாராம் திரும்ப எழுத வந்திருக்கிறார். வலைப்பதிவில் தன்னுடைய கவிதைகளைப் பதிய ஆரம்பித்திருக்கிறார்.

மாதிரிக்கு ஒரு கவிதை :

குழந்தைகள் தூங்கியபின்பு
விளக்கணைத்துவிட்டு
பேசிக்கொண்டிருக்கிறாள்
இவள்.
திறக்கப்படாத கோயிலின்
கதவில்,
சுவற்றில்,
விட்டத்தில்,
பட்டுக்கொள்ளாமல்
அனுமதிக்கப்பட்ட
எல்கைக்குள்
பறந்துகொண்டிருக்கிறது
வவ்வால்.

அவரது வலைப்பதிவு முகவரி : www.karuvelanizhal.blogspot.com. நீங்கள் படித்துப் பாருங்கள், உங்களுக்குப் பிடிக்கலாம்.

ராஜாராம் நேற்று சொன்னது போல தேடித் தேடியும் தொலைந்த நட்பு பிறகு சடாரென்று எதேச்சையாகக் கிடைப்பது உன்னதமான கணம்தான். மிக மிக மகிழ்ச்சியாய் உணர்கிறேன்.

எழுதிக் கொண்டிருக்கும் நாவலிலிருந்து திருத்தப்படாத சில பகுதிகள்

அதிகாரம், அதிகாரமழிப்பு, மாற்று அதிகாரம் என விரியப் போகும் இந்தக் கதையை ஒதுக்கத் தேவையானவை : (1) கொஞ்சம் பெயர்கள் (2) கொஞ்சம் சிந்தனை (3) கொஞ்சம் கவிதை (4) நிறைய பாலியல் ஆசைகள் (5) ..... (... ல் பிறகு உங்களுக்கு விருப்பமானதை நிரப்பிக் கொள்ளலாம், இப்போது கதைக்குச் செல்ல நேரமாகிவிட்டது).

அதிகாரம் என்பதை நல்ல அதிகாரம், கெட்ட அதிகாரம் என இருமைகளுக்குள் வைத்துப் பார்க்க முடியாது. அதிகாரத்தில் வேண்டுமென்றால் சில நல்ல கூறுகள் இருக்கலாம். உரையாடலையும் அதிகாரமாகச் சொல்வது அதன் வீச்சை குறுக்குவதே ஆகும். தன்னினும் பெரிய வேதாளத்தைச் சுமந்தபடி முருங்கை மரம் ஏற விழைகிறான் விக்ரமாதித்யன். பிசின்களில் ஊறும் பூச்சிகளும் அவனுடன் சேர்ந்து கொள்கின்றன. இக்னேஷியசின் தட்டையான மார்பைத் தடவி குறி விரைக்கிறாள் பூங்கோதை.

மயிர்களடர்ந்த வலிய கைகளை இறுக்கிப் பிடித்து உச்சமடைகிறாள் மன்மோகனின் திசை தவறிய விந்து சிதறிக் கிடக்கிறது தெற்கே (மிக மிகத் தெற்கே). டெல்லி என்பது நகரம், நகரமானதன் நினைவுகளில் உறுபசி மிரட்ட ஓடி ஒளிகிறது - potency கேள்விக் குறியான காலம். ஒருவர் காட்டிக் கொடுக்கிறார், ஒருவர் கைதாகிறார், ஒருவர் சரணடைகிறார், ஒருவர் வன்புணரப்படுகிறார், ஒருவர், ஒருவர், ஒருவர், ஒருவரென எழுதிப் போகும் விரல்களுக்கு மோதிரம் வாங்கிப் போடுகிறார் இன்னொருவர். இப்போது எழுதும் விரல்களும், மோதிரம் போட்டும் விரல்களும் ஒரே படித்தானவைதானா?

ஆண் காமம் குறி விறைக்கத் துவங்குகையில் ஆரம்பித்து விந்து சிந்தியவுடன் சுருங்கி முடிகிறது - ஆண் காமம் லீனியர் வகையென்றால் படர்ந்து விரியும் பெண் காமம் பல உச்சங்களை உடைய நான் லீனியரா?

முட்டி வலிக்குதும்மா, கொஞ்சம் நகரேன்

தலைவலியென்று ஒதுங்கும் பெண்ணை அதிகாரத்தை நிராகரிப்பவள் என்றும், கால் அகட்டிப் படுப்பவளை அதிகாரத்திற்குத் துணை போகிறவள் என்றும், மேலேறிச் செய்யச் சொல்பவளை அதிகாரத்தை நிலைநாட்டுபவள் என்றும், மேலேறிச் செய்பவளை அதிகாரத்தைத் தலைகீழாகக் கவிழ்ப்பவள் என்றும், அதிகாரத்தை, அதிகாரப் படிநிலைகளை, நுண் அதிகாரத்தை, மாற்று அதிகாரியை, அதை இதை மற்றதை

நண்பா பாரதியைப் படித்தாயா படித்தாயா நண்பா பாரதியை பாரதியை படித்தாயா நண்பா என்ற வரிகளைப் படிக்கையில் நண்பன் கள்ளிச் செடிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். இவன் நின்றுவிட்டான். நண்பன் கடற்கரை மணலில் பாதம் புதையப் புதைய நடந்து கொண்டிருந்தான். குள்ளமாகியபடி அலைகளில் விழுந்து மறைந்தான்.

மார்க்யூஸ் தொலைபேசினான். எவ்வளவு சொல்லியும் புரிந்துகொள்வதில்லை அவன். என்னுடைய தொலைபேசி அழைப்புகள் இப்போது கண்காணிக்கப்படுகின்றன. எனது அசைவுகள் அத்தனையும் மேலிடத்திற்குத் தெரியப்படுத்த என்றே நவீன கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சொன்னால் பலர் சிரிக்கிறார்கள்.

இப்போதெல்லாம் நான் தொலைக்காட்சிகூடப் பார்ப்பதில்லை. எந்தெந்த நிகழ்ச்சிகள் பார்க்கிறேனென்பதும் கண்காணிக்கப்படலாம். அதன்மூலம் என்னுடைய மனநிலையை அவர்கள் கட்டமைக்க முயலலாம். அதில் சிறிதளவு வெற்றிபெற்றால்கூடப் போதும், என் கதை முடிந்துவிடும்.

பங்கர் மாதிரியான ஒன்றைச் செய்து அதற்குள் வசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.

இதற்குமுன்னால் பெயர்தெரியா ஊர் ஒன்றில் என்னைச் சிறைபிடித்துவிட்டார்கள். விவரங்கள் சொல்லவேண்டிய கட்டாயங்கள் அந்த நாட்டில் இல்லைபோலும். புரியாமல் பேசினாலே சிறையடைக்கப் போதுமானதாயிருக்கலாம். எப்படியிருந்தபோதும், எனது குற்றப்பட்டியலை நீதிபதி வாசிக்கும்போது அடக்கமுடியாமல் தும்மல் வந்தது. தும்மிக் கொண்டே என்மொழியில் பேசினேன், குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவது புரியாமல். நீதிபதி தீர்ப்பை வழங்க ஆரம்பிக்கையில் அடக்க இயலாமல் எனக்கு வந்தது குசு. அதை அவர்கள் அதிகாரத்திற்கு எதிரானதாகப் புரிந்து கொண்டார்கள்.

இப்போதெல்லாம் இருமல் - அதுவும் கோழைகளுடன்கூடிய இருமல் - அதிகரித்துவிட்டட்து. இதைக்கூட இருமிக் கொண்டேதான் எழுதுகிறேன். வாயைமூடிக் கொண்டு இருமுகிறேன். சத்தம் வெளியில் கேட்டுவிடக் கூடாது. மற்றவர்களுக்கு என்னுடைய வியாதி தொற்றிவிடக் கூடாது.

புரியாமல் பேசுவதற்கே சிறையென்றால் இங்கு புரியும்படி பேசுவது அதைவிடவும் பெரிய தண்டனை கிடைக்கும்போலும். சைபர் கிரைம் போலீஸிடம் யாராவது புகார் கொடுத்துவிடப் போகிறார்களே என இதை எழுதிச் செல்லும் என் கைகள் நடுங்குகின்றன.

இப்போது கதை இங்கே மாறி, வேறொரு தலைப்பில் சொல்லப்படப் போகிறது. அந்தக் கதையின் தலைப்பு : விஜி என்கிற புறாவும் பாலு என்கிற சிறுவனும்

ஜெயனுக்குப் பறவைகள் என்றால் உயிர்; பாலுவுக்கும்.

அவனுடைய அப்பா சடசடவென மழை பெய்யும் ஒரு நாளில் வயர் கூடையில் மேல் துண்டு போர்த்தி எடுத்து வந்திருந்த இரண்டு புறாக் குஞ்சுகள் நடுங்கியபடி இருந்தன. அறைக்குள் எடுத்து வந்து மின்விசிறியைப் போட்டு கதகதப்பான போர்வையால் அவற்றை தலை மட்டும் வெளியே தெரியும்படி மூடினான். அப்பா மின்விசிறியையும் அணைக்கச் சொன்னார்.

ஜெயன் அருகிலிருந்த கான்வெண்ட் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். பாலு கவர்மெண்ட் பள்ளியில் ஆறாம் வகுப்பு - ஆனால் இருவருக்கும் வயது வித்தியாசம் இரண்டு. அவர்கள் இருவருக்கும் அடிப்படையில் ஒத்த விருப்பங்கள் இருந்தன. நாய்க்குட்டி வளர்ப்பதும் (அதனுடன் தப்புத் தப்பாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருப்பார்கள்).

புறாக் குஞ்சுகளுக்கு ஸ்பூனால்தான் பாலூட்ட வேண்டியிருந்தது. அறை மூலையில் கோணியை விரித்து அதில் புறாக் குஞ்சுகளை விட்டு, தடுப்பு அரணாக இரண்டு அட்டைகளை வைத்தான். ஜன்னல் கதவுகளை அடைத்துவிட வேண்டும், இல்லாவிட்டால் பூனை வந்து புறாக் குஞ்சுகளை தின்றுவிடும் எனச் சொல்லியிருந்தார் அப்பா.

இரவு முழுவதும் அவை மெலிதாக சப்தம் எழுப்பியபடியே இருந்தன.

சாம்பல் நிறத்தில் இருந்தது புறாக்கள். கழுத்து மற்றும் உடலின் அடிப்பாகங்கள் வெள்ளையோடு கூடிய சாம்பல் நிறம் கொண்ட ஹோமர் வகைப் புறாக்கள் அவை. பெரிய புறாவுக்கு சுப்ரமணி என்றும் சின்ன புறாவுக்கு விஜி என்றும் பெயர் வைத்திருந்தார்கள்.

புறாக்கள் பறக்கத் துவங்கிய ஒரு நாள் இரவில் வீடு திரும்பவில்லை விஜி. கண்கள் கலங்க அவற்றை அண்டை வீடுகளிலும், தெருமுனைகளிலும் தேடினார்கள் ஜெயனும் பாலுவும்.

அடுத்த நாள் மதியம் சடாரென்று தோன்ற பக்கத்து வீட்டு மாடியில் தண்ணீர் தொட்டியை எட்டிப் பார்த்தான் ஜெயன். முன்னோக்கிப் பாய்வதைப் போல் இரண்டு சிறகுகளும் விரிந்து கிடக்க, தண்ணீரில் ஊறிப் போய் மிதந்து கொண்டிருந்தது. கடவுளே எனக் குதித்து அதைக் கைகளில் எடுத்தான். அடிவயிற்றின் துடிப்பு உயிர் இருந்ததைப் பறை சாற்றியது.

வீட்டிற்கு எடுத்துக் கொண்டு ஓடி வந்தான். டர்க்கி டவலில் உடலைத் துவட்டி, கம்பிளிப் போர்வையால் மூடி நெஞ்சருகே வைத்துக் கொண்டான். விஜி லேசாக கண்களை மூடி மூடித் திறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அன்று முழுவதும் அதனுடயே இருந்தான் ஜெயன்.

இரண்டாக இருந்த புறாக்கள் பல்கிப் பெருக ஆரம்பித்த பிறகுதான் சுப்ரமணி பெண் புறா என்றும் விஜி ஆண் புறா என்றும் தெரிய வந்தது அவனுக்கு. கூப்பிட்டுப் பழகியதை மாற்றவும் முடியவில்லை.

மாடியில் இருந்த ஓலைக் கொட்டாயில் புறாக் கூண்டுகள் அடித்துக் கொடுத்திருந்தார் அப்பா.

எல்லாப் புறாக்களுக்கும் பெயர் வைக்கவும் முடியவில்லை. நடுவில் வாங்கி வந்திருந்த கருத்த கர்ணப் புறாவிற்கு கருப்பி என்றும் ப்ரவுண் நிறப் புறாவுக்கு ப்ரௌணி என்றும் பெயர் வைத்திருந்தார்கள். மற்ற புறாக்களை ‘தோ தோ' என்றுதான் கூப்பிடுவது.

காலையில் எழுததும் மாடிக்கு ஓடுவார்கள் ஜெயனும் பாலுவும். தரையில் பிளாஸ்டிக் உறையை விரிக்கும்போதே புறாக்கள் கழுத்து வீங்க உறும ஆரம்பித்துவிடும். கோதுமையும் கம்பும் கலந்த தீனியை உறையில் கொட்டி கூண்டுகளைத் திறந்ததும் எல்லாமாக வந்து அமரும். கவாங் கவாங் என்று தின்றதும், பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரைக் குடித்துவிட்டு ஒரு ரவுண்ட் பறக்க ஆரம்பிக்கும். விஜி காற்றில் சிறகை விரித்துப் பறக்க ஆரம்பிப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அறைக்குள் என்றால் விஜியும் கருப்பியும் பறந்து வந்து பாலு தோள் மீதுதான் அமர்வது. எவ்வளவுதான் ஜெயன் ஆசையாக அவற்றை எடுத்துத் தன் தோள்களின் மீது வைத்துக் கொண்டாலும், உடனே பறந்துவிடும். அதில் கொஞ்சம் வருத்தமிருந்தது ஜெயனுக்கு.

வயல்வெளியில் இருக்கும் பெரிய கிணறுகளில் மற்ற பையன்களுடன் குளிப்பதென்றால் கொள்ளைப் பிரியம் ஜெயனுக்கு. பாலு படிக்கட்டுகளில் அமர்ந்து கால்களை தண்ணீரில் உளப்பிக் கொண்டிருப்பான்.

முதல் முறை நீச்சல் கற்றுக் கொள்ள குதித்த போது மேலே வந்து படிக்கட்டைப் பிடிக்க முடியவில்லை. மூச்சு திணறிவிட்டது பாலுவுக்கு. அருகிலிருந்த சீனிதான் இழுத்து வந்து சேர்த்தான். அப்படி இழுத்து வந்தது மூன்று அடிகளுக்கு மேல் இருக்காது என்றாலும் பாலுவுக்குப் பிறகு நீச்சல் பழகவே பயம்.

வீட்டில் கூண்டுக் கிளிகளும் இருந்தன. இரண்டே இரண்டு கிளிகள். ஒன்று நோய் வந்து இறந்து போனது. இன்னொன்று, சிறகு முளைத்து பறந்து போனது. பிறகு அவர்கள் கிளி வளர்க்கவில்லை.

பந்தை எடுத்து கீழ்ப் படிக்கட்டின் அடியில் வைத்துவிட்டு வந்துவிட பிறகு வேறொருவன் சென்று தேடி எடுத்து வருவது ஒரு விளையாட்டு. ஒருமுறை அப்படிப் பந்தைத் தேடித் தண்ணீருக்கடியில் போகையில் பந்தைச் சுற்றி இருந்த பாம்பைக் கண்டு நடுங்கி மேலேறி, 'ஹோ' என பயத்தில் அலறினான் ஜெயன். பாலுவுக்குச் சிரிப்பு அடக்க முடியவில்லை.

மதியம் மொட்டை மாடியில் விஜியுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் அமளி ஏற்பட்டது. பாலு வயல் கிணற்றில் விழுந்து விட்டானாம்!

ஜெயன் ஓடினான். வயலில் இருந்த கிணற்றில், இரண்டு கைகளும் சிறகைப் போல விரிந்து கிடக்க, சற்றே முன்னோக்கி பாய்வதைப் போலத் தண்ணீரில் கிடந்தான் பாலு.

எல்லாப் புறாக்களையும் சைக்கிள் கடை முருகனுக்குக் கொடுத்து விட்டார் அப்பா.