காதல்

மொட்டை மாடி
வெட்ட வெளியில்
மெல்லிய காற்று
அரவணைத்திருக்க
குழல் விளக்கொளியில்
எதிரெதிரில் அமர்ந்து
எழுதிக் கொண்டுருந்தோம்
உனக்கான நாடகத்தை
நீயும்
நமக்கானவற்றை
நானும்

(கவிதா சரண் அக்டோபர் 1994ல் வெளியானது)

திலீப் குமார் - வித்தியாசமான கதைசொல்லி

1975லிருந்து எழுதி வருபவர் திலீப் குமார். பரவலாக அதிகம் அறியப் படாதவர். மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும் தமிழ்ச் சிறுகதையுலகில் ஒரு முக்கிய இடம் அவருக்குண்டு. இவரின் தாய் மொழி குஜாராத்தி என்றாலும் எழுதுவது தமிழில். சென்னை மயிலாப்பூரில் புத்தகக் கடை நடத்திக் கொண்டிருந்தார் (இப்பொழுது இருக்கிறதா எனத் தெரியவில்லை). அவர் எழுத்துக்களை அறிமுகப் படுத்துவதே இந்தச் சிறு கட்டுரையின் நோக்கம்.

திலீப் குமாரின் புத்தகங்கள் :

1. மூங்கில் குருத்து
2. கடவு (மேலே உள்ள தொகுப்பிலிருந்து சில கதைகளும் + சில கதைகளும் கொண்டது)
3. மௌனியுடன் கொஞ்ச தூரம் (வானதி பதிப்பகம்)
4. 'வாக்' சிறுகதைகள் (1997 கதா அறக்கட்டளை)

முதலிரண்டும் க்ரியா வெளியீடு.

தினமணியில் எழுதியிருந்தாலும் பெரும்பாலும் மீட்சி, காலச்சுவடு, 1/4 போன்ற சிறுபத்திரிகைகளே அவரின் வெளியீட்டுக் களனாயிருந்துள்ளது.
குறைவாகவே எழுதியிருந்தாலும் விதம் விதமான கதைகளை எழுதிப் பார்த்தவர் திலீப்குமார்.

'அக்ரகாரத்தில் பூனை' கதை சுவாரஸ்ய நடை கொண்டது. பப்லிப் பாட்டி கோயில் பூஜை என இருப்பவள். புஷ்டி மார்க்கத்தின் authority. பூஜைக்கு வைத்திருக்கும் பாலைக் குடிப்பது போன்ற தொல்லைகளைச் செய்யும் பூனையை விரட்டச் சொல்லி தன் மகன் நட்டூவை ஆணையிடுவாள். அவன் சூரியிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பான் ('போயும் போயும் அந்தத் துஷ்டப் பயலிடமா, அவன் பூனையைக் கொன்றாலும் கொன்று விடுவான்' என்பாள் பாட்டி). பத்து நாட்களில் அவன் பூனையுடன் வருவான்; அது அவனிடம் குழையும். கொண்டு போய் விடுவதற்கு முன் அவளிடம் காட்ட எடுத்து வந்திருப்பான். பாட்டி அவனிடம் பூனையை தன்னிடம் எடுப்பாகக் காட்டச் சொல்வாள். தன் கையில் மறைத்து வைத்திருந்த மூக்குப் பொடியை அதன் மூக்கில் திடீரென்று தேய்த்து விடுவாள். பொறி கலங்க அலறி அடித்துக் கொண்டு ஓடும் பூனை. எல்லோரையும் வைது விட்டு பூனையைத் தேடிப் போவான் சூரி. அன்று மாலை பாட்டியைப் பார்க்க வந்தவர்களிடம் பாட்டி ஆரம்பிப்பாள்: 'புஷ்டி மார்க்கம் என்ன சொல்கிறதென்றால்...'

இப்படி எளிதாக கதைச் சுருக்கம் சொல்ல முடிகிற 'அக்கிரகாரத்தில் பூனை', 'கடவு', கதையம்சமே அற்ற 'நிகழ மறுத்த அற்புதம்', எதார்த்த பாணியிலான 'கண்ணாடி', 'கடிதம்', குடும்பத்திற்கு வெளியேயான உடலுறவைச் சொல்லும் 'கானல்' வன்முறையின் வீச்சைச் சொல்லும் 'தடம்'.

'ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக் காரரும்' கதையில் வரும் பாத்திரம் ஜி.நாகராஜனை நினைவு படுத்துவதாலேயே எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது.

இவர் கதையில் பெரும்பாலும் கதைமாந்தர்கள் குஜராத்திகள்; நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். கதைக் களன் சென்னையில் உள்ள அதிகமும் குஜராத்திகள் வாழும் தங்கசாலை (மிண்ட்). ஆயினும் ஒவ்வொரு கதையும் வேவ்வேறு தொனியில் இருக்கும்.

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவர். அவரைப் படித்தவர்கள் பின்னூட்டமிட்டால் மகிழ்வேன்.

அ-கவிதை (2)

நீர்வீழ்ச்சியின் ஓசையோடு
அடித்துச் செல்லப் படுபவன்
அலறுகிறான் கேட்டுக் கொள்
ஒதுங்கிய ரயில் பெட்டியின்
திறந்த வான் நோக்கிய
புணரல் ஒலி
காம்போதி ராகம்
ஓர் இடம் விட்டு
மறு இடம் பிடிக்கும்
கண்ணே கலைமானே வானொலியில்
தவழும் காலை ஒடித்துக் கொண்டு
இடிந்து போன கனவுகள்
தலையில் வீழ்ந்து
தூக்கத்தில் கதறும்
கண்ணாளா உனக்கென உண்டு
ஒலி பெருக்கிகளின் அலறல்
பிரத்யேகமாக
மண்டைக்குள் கேட்கும்
ஊழித் தாண்டவ கூத்து இரைச்சல்கள்

ஊசலாட்டம்

காற்சட்டைப் பையில்
கால் குப்பி ரம்முடன்
சட்டைப் பையில்
கோலாவுக்கான பணத்துடன்
மூடியிருக்கிறது வீடு
பல்லிடுக்கில் சிக்கிய துகளாய்
கடினப் பட்டு துழாவிக் கொண்டிருந்த
மதியக் கவிதை
நினைவில் வர
அகலத் திறந்தது கதவு
போதைக்கும் கவிதைக்கும் இடையில்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது மனது

நண்பனும் தனிமையும்

எப்போதாவது வரும் நண்பன்
இப்போதும் வந்து விட்டான்
திரைச்சீலை ஆடுவதிலிருந்து
காற்றை உணர முடிகிறது என்றான்
ஒளிக் கற்றைகள் விழமுடியாத
பிரதேசத்தில் வசிக்கிறாய்
வெளிச்சத்தின் முக்கியத்துவத்தை
உணரவில்லை நீ
எனக் குற்றம் சாட்டினான்
கவிதை எழுத முயலாதே
காற்றைப் படி என்று
அவன் கிழித்தெறிந்த தாள்கள்
காற்றில் அசைந்தசைந்து
வெளியில் கலக்கின்றன
நண்பர்களில்லாத நான்
கவிதைகளோடு வசித்துக் கொண்டிருக்கிறேன்

(கவிதா சரன் செப்டம்பர் 1996ல் வெளியானது)

இசை மற்றும் சமையல் குறிப்புகளூடான ஒரு கதை

இந்தக் கதையின் முதல் பாகத்தை எழுதிய போது தொடர்ந்து எழுதும் உத்தேசமில்லை. ஆனாலும் படித்த வாசகர்கள் எல்லாரும் மீண்டும் அடுத்த பாகத்தை எழுத வேண்டும் என நச்சரித்ததால் எழுதுகிறேன். மற்றபடி எனக்கு இதை எழுதியே ஆகவேண்டிய கட்டாயம் ஒன்றும் இல்லை என்பதை இதைப் படிக்கும் வாசகிகள் புரிந்து கொள்வார்கள்.


இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும் : போன பாகம் எழுதிய போது 10,080 ஹிட்ஸ். இம்முறை இன்னமும் பொதுமக்களுக்குத் தேவையான விஷயங்களைச் சேர்ப்பதால் அது இன்னமும் கூடும் என்று எதிர்பார்க்கிறேன். விகடனில் இந்தப் பதிவைப் பற்றி வந்தால் கிடைக்கப் போகும் ஹிட்ஸ் கூடுதல் கணக்கு.

போன வாரம் செய்தித் தாள்களில் வந்த ஒரு முக்கியமான செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. லண்டனில் இருக்கும் ஒரு பெண்மணி தன்னுடைய முழுச் சொத்தையும் (கிட்டத்தட்ட 54 கோடி ரூபாய்) வளர்ப்பு பிராணியான நாய்க்கு எழுதி வைத்து விட்டாள். அந்த நாய்க்கு கொலை மிரட்டல்கள் வர அதன் பாதுகாப்பிற்காக ஆகும் வருடச் செலவு 1.80 கோடி ரூபாய். இது போலத் தானே ஒவ்வொரு நாடும் தன்னுடைய பாதுகாப்பிற்காக செலவிடும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கான காரணமும் இருக்க முடியும்...?? ஏன் அனைவரும் குறை சொல்கிறார்களோ தெரியவில்லை. இதையே விரித்துக் கதையாக எழுதலாமென்று விரல்கள் அரித்தாலும், சொல்ல வந்த விஷயத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லாத காரணத்தினால், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் (கதை எழுதுதல் என்ற செயலை / வினையைத் தொடங்கிவிட்டால், ஏதோ ஒரு இடத்தில் நிறுத்தித்தானே ஆகவேண்டும்).

இசை குறிப்புகள்

சுத்த தன்யாசி ராகம். இது ஒரு ஜன்ய ராகம். இருபதாவது மேளமாகிய நடன பைரவியில் ஜன்யம்.

ஆரோகணம் : ஸகமபநிஸ

அவரோகணம் : ஸநிபமகஸ

இந்த ராகத்தில் பேசும் ஸ்வரங்கள் : ஷட்ஜம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம், கைசிகி நிஷாதம்.


இது ஒரு ஔடவ ராகம். மிகப் புராதனமானது. சங்கீத மும்மூர்த்திகளால் பாடப் பெற்ற ராகம். பண்டைக் காலத்தில் இந்த ராகத்தை உதயரவி சந்திரிகா என்று அழைத்தனர். ஸக - கம - மப - பநி - நிஸ போன்ற ஜண்டப் பிரயோகங்கள் இந்த ராகத்திற்கு அழகூட்டுபவை.


இந்த ராகம் எல்லாக் காலத்திலும் பாடத் தகுந்த ராகம். இதில் அதிகமான உருப்படிகள் உள்ளன. தியாகராஜரின் 'எந்த நேர்ச்சின', தீக்ஷிதரின் 'சுப்ரமண்யேன' என்ற கீர்த்தனமும் இன்னும் பல கீர்த்தனங்களுக் இந்த ராகத்தில் பிரபலமாக உள்ளன. ஆரம்பப் பயிற்சி செய்யும் மாணவர்களும் கூட கையாள்வதற்கு எளிமையான ராகம்.


திரை இசையிலும் இந்த ராகம் கையாளப் படுகிறது. 'பெண்ணின் மனதைத் தொட்டு' என்ற படத்தில் 'தியாகராஜனின் தெய்வகீர்த்தனம்' என்ற பாடல் இந்த ராகத்தில் அமையப் பெற்றது. இசைஞானி இளையராஜா மிக அழகாக இந்த ராகத்தை உபயோகித்து இசையமைத்த 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து' என்ற பாடலை இப்போது கேட்போமா...?


சமையல் குறிப்புகள்

பிசிபேளாபாத்


தேவையான பொருட்கள் : அரிசி 1-1/2 ஆழாக்கு, து. பருப்பு 3/4 ஆழாக்கு, சாம்பார் வெங்காயம் 1 கப், பீன்ஸ், பட்டாணி, கேரட், உருளைக் கிழங்கு (நறுக்கியது) 1 கப், புளி நெல்லிக்காயளவு, உப்பு தேவையான அளவு.

வறுத்து பொடி செய்ய :

தனியா 1 டீஸ்பூன், க. பருப்பு 1 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 10, பூண்டு 4 பல், கிராம்பு 3, கசகசா சிறிது, பொட்டுக்கடலை சிறிது, கொப்பரைத் துருவல் 3 டீஸ்பூன்.

செய்முறை :

அரிசியும், பருப்பையும் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சாம்பார் வெங்காயம் வதங்கிய பின் காய்கறிகளைப் போட்டு வதக்கி வேக வைக்கவும். பிறகு புளியைக் கரைத்து ஊற்றி உப்பு போடவும். பச்சை வாசனை நீங்கியபின் அரைத்து வைத்த பொடியை போட்டு கொதிக்க விடவும்.

வேகவைத்த சோறு, பருப்புடன் இந்தக் கலவையை ஊற்றி நன்கு கலந்து குக்கரில் ஒரு விசில் விடவும். பின் கொத்தமல்லி தழையைத் தூவலாம். வெங்காய பச்சடியுடன் பரிமாற சுவையுடன் இருக்கும்.


இதுபோலவே பல மசாலாக்களைக் கலந்து எடுக்கப் பட்ட படமான பொல்லதாவனில் இருந்து சில காட்சிகளை இப்போது பார்ப்போமா...?

பின் அமைப்பியல் மற்றும் சில :


அரசியல் இயங்கிகளின் வன்முறை அல்லது வன்முறை என்று ஒன்றுமில்லை: இதைப் பற்றிச் சொன்னால் என்னை அடிக்க வருவார்கள் என்பதால் பயமாயிருக்கிறது.

நாடு அதை நாடு, அதை நாடாவிட்டால்...... போடா பாடு. போடா போடா புண்ணாக்கு : இதை எழுதியிருப்பது வெகுஜனப் பாடல்களைக் கட்டவிழ்ப்பதற்காகத்தான் என நினைத்துக் கொள்ளாதீர்கள். அடுத்த பத்தியைப் படியுங்கள்.

விலங்குகளுக்கு ஏற்ற உணவு : ஒவ்வொரு விலங்கிற்கும் ஒவ்வொரு உணவு. உதா : மாடு ஆடுக்கு (ஆடு மாடுக்கு அல்ல) புல், தழை; புண்ணாக்கு (கடலைப் புண்ணாக்கு கூடுதல் பால் தரும்; எள்ளுப் புண்ணாக்கு சக்தி தரும்). இதையே புலி சிங்கத்திற்கு (சிங்கம் புலிக்கு அல்ல) சொல்ல முடியாது அல்லவா.?

மனிதர்களுக்கு ஏற்ற குடி: என்னுடைய சாய்ஸ் old monk தான். உங்களுடைய சாய்ஸ் :


1. Old monk

2. Any other rum

3. MC Brandy

4. BP Whiskey

5. Any other brandy / any other whiskey.

குறிப்புகள் : (i) Imported stuffகளுக்கு ஓட்டுப் போட விரும்புபவர்கள் என்னுடைய அடுத்த பதிவிற்குக் காத்திருக்கவும். (ii) ஜின் குடித்தால் ஆண்மை குறைந்து விடும் என்பதால் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை.

நீங்கள் 1089 ரூபாய் சம்பாத்திதால் இரண்டு பேருக்குச் சோறு போட முடியுமென்றால், 2007 ரூபாய் சம்பாதித்தால் எத்துனை பேருக்குச் சிற்றுண்டி போட முடியும்.? இதில் இருக்கும் பொருளாதாரக் காரணிகளை யார் கணக்கில் எடுத்துக் கொள்வது.? நெட்டில் சுட்டு ஒரு கட்டுரை போடலாமென்றால், வாசகி, நீ மிகவும் கவனமாயிருக்கிறாயே.

(பின்னூட்டமிட்டுத் தெரிவித்தால் இந்தக் கதையைத் தொடரும் வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் ஒரு சிறப்புப் பரிசு உண்டு).

கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க அடுத்த முறை என்ன செய்யலாம் :

1. இன்னும் கொஞ்சம் அரசியல் நையாண்டி

2. இன்னும் சில உருப்படியான சமையல் குறிப்புகள்

3. யதுகுல காம்போதி ராகம் பற்றிய விரிவான விளக்கம்

4. சினிமாப் பாடல்களைக் கட்டவிழ்ப்பது

5. கெட்ட வார்த்தைகள் அல்லது பாலியல் கதைகள் (அல்லது இரண்டிற்கும் உள்ள தொடர்புகள்)

நண்பா படித்தாயா பாரதியை, படித்தாயா நண்பா பாரதியை, பாரதியை நண்பா படித்தாயா என்ற வரிகளைப் படித்துக் கொண்டிருக்கும் போது மழை தூற ஆரம்பித்தது. சாலையைக் கடந்த சிறுமியை, ஹோண்டா சிடி கார் ஒன்று மோதிச் சென்றது. ரத்த வெள்ளத்தில் கிடந்தவளைச் சுற்றிக் கொண்டு வாகனங்கள் விரைந்தன.

இனி, குறிப்புகள் என்பதைச் சுருக்கி, குறிகள் என்றே எழுதப் படும்.

துரத்துதல்

சிறு வயது நண்பன் செழியன்
இப்போது பணத்தைத் துரத்துகிறான்
வித்தியாசமாக இருக்க நினைக்கும்
பல்லவன் துரத்தித் துரத்திப் படிக்கிறான்
காணக் கிடைக்காத புத்தகங்களை
வெண்திரை பிம்பங்களைத் துரத்திய குமார்
இப்போது பத்துக்கு எட்டு அறையில்
தொலைக்காட்சியின் வீச்சில் சிக்கிக் கிடக்கிறான்
இவ்வளவு வயதிற்கு இது தேவையா
எனும் அளவிற்குப் பெண்களைத்
துரத்துகிறான் குலோத்துங்கன்
போதையைத் துரத்தும் சங்கருக்கும்
புகழைத் துரத்தும் மாரியப்பனுக்கும்
இப்போது நேரமே இருப்பதில்லை
எதையாவது துரத்துவது போலவாவது
இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் போல

மின் விசிறி

என் அறை மின்விசிறி அழகானது
என் விரல் முனை ஆணைக்குக் கட்டுப்பட்டு
சுற்றிக் கொண்டிருக்கிறது
சுழலும் வேகத்தில்
இறக்கைகளின் எண்ணிக்கை
மூன்றல்ல ஒன்றுதானென்ற
பிரமை தருகிறது
பார்த்துக் கொண்டிருந்த நான்
மின்விசிறியானேன்
காற்றை அனுப்பிக் கொடுத்தேன்
படுத்திருந்த மின்விசிறிக்கு
அதன் குறட்டை ஒலி எரிச்சலூட்ட
சுழன்று சுழன்று சுழன்று
வெளியே வேகமாய் விசிறியடிக்கப்பட்டேன்
மின்விசிறி அதன் இடத்தில்
சுற்றிக் கொண்டிருக்கிறது

(கவிதா சரண் செப்டம்பர் 1996ல் வெளியானது)

பெரியவன்

தோளில் அமர்ந்து பின் பறக்கும்
புறா இறக்கைகளின் கதகதப்பு
இருந்து கொண்டேயிருக்கிறது
இருக்கிறாற் போல் இருந்து
திடீரென்று முட்டும் கன்றுக்குட்டியின்
மோதல் இன்னமும் இதமாய் வலிக்கிறது
உணவுக்காக தாவிய நாய்
மார்பில் கால் வைக்க
பயந்து தடுமாறி விழுந்த
சிறுவயதுக் காயத் தழும்பு
முதுகில் இருக்கிறதா தெரியவில்லை
டீவி பார்க்க அமரும்போதெல்லாம்
மடியில் வந்து படுத்துக் கொள்ளும்
பூனை எங்கே போயிற்றோ
எல்லாம் காணாமல் போக
நான் பெரியவனானேன்

காத்திருப்புகள்

மின்சாரம் தடைபட்டிருக்கும் அகால வேளை
மெழுகுவத்தியின் ஆடும் நிழல் வெளிச்சங்கள்
பேய் உருவங்களாய் பயமுறுத்தும்
வேட்டை நாயின் குரூரத்துடன்
நோக்கும் பார்வை, நீர் சொட்டும் நாக்கு
என்னைக் கொன்றவளுக்கான
காத்திருப்பில் கழிகிறது

அர்த்தங்களை இழந்த அபத்தக் கவிதையாய்
நின்று கொண்டிருக்கிறேன்
பயமூட்டும் பிரம்மாண்ட மைதானத்தில்
தனியனாய்
எனக்கென நீ கொடுத்துச் சென்றது
சில புலம்பல்கள்;
சில கவிதைகள்;
சில காத்திருப்புகள்

(கவிதா சரண் செப்டம்பர் 1994ல் வெளியானது)

அ-கவிதை (1)

ஆனால்
நாற்காலியின் எதிரில்
கால் கேள் போட்டு
வெடிக்கும் வேட்டுக்களின்
சத்தம் நித்தம்
யோசிக்கையில்
தூள் தூள்
தலை ஆனது
பிரச்சனைகளின் நெருக்கடி
வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றங்கள்
தினமும் பொழுது போக்கும்
கேபிள் டீவியே
போற்றி போற்றி

கற்றது தமிழின் வன்முறை அரசியல்

(1. இந்தக் குறிப்புகளை எழுதிவிட்டு, பிறகு சில பத்திகளை மாற்றிப் போட்டிருக்கிறேன். படிப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்து முடிக்கலாம் அல்லது நிறுத்தலாம். 2. இப்படம் முன்வைக்கும் காட்சிப் பிம்பங்களின் வன்முறை வேறொரு சமயம் மடக்கிப் பிடிக்க வேண்டும்).
காற்றின் கிளையேறி
திகுதிகுவென பரவின
எரியும் பிரச்சனைகள்
நாடி ஒடுங்கிற்று
வார்த்தை பூதம்
(தேவதச்சன்)
இந்தப் படத்தில் பிரதானமாய் இரண்டு விஷயங்கள் இருப்பதாய் அவதானிக்கப் படுகிறது. ஒன்று கவித்துவம் மற்றது வன்முறை. எப்படிக் கவித்துமான வசனங்கள் வன்முறைக்கு உதவுகின்றன என்பதைப் பார்ப்போம்.

படம் ஆரம்பிக்கும்போது மேட்டுக்குடி நடனத்தில் கேட்கும் 'தா தித்தோம் தா' என்பது திரும்பத் திரும்ப வருகிறது.


பிரச்சனைகளை ஒற்றைப் பரிமாணமாக ஆக்க முயற்சிக்கிறது பிரதி. உதா :
'தமிழ் நாட்டில் தமிழ் படித்தவன் எப்படி உயிர் வாழ முடியும்.?'
'தமிழ் நாட்டில் தமிழ் படித்தவன் சாவதற்கு காரணமா பஞ்சம்.?'

கதாநாயகன் பெயர் பிரபாகர் (கவனிக்கவும் பிரபாகரன் இல்லை) - பெயர் பற்றி வரும் வசனங்கள் :

'பெயரே வில்லங்கமா இருக்கே'
'எனக்குத் தெரிஞ்சு ஒரு பிரபாகர் தான்; அவர் லங்காவில இருக்கார்'

(நாயகனின் பெயர் பிரபாகராய் இருப்பதால் விடுதலைப் புலிகளின் தலைவர் பெயரை மாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது இங்கு.!).

பிரபாகர் சிவனாகிவிடுகிறான். அதனால் யார் வாழலாம் யார் சாகலாம் என முடிவெடுக்கும் 'அதிகாரம்' அவனுக்கு வருகிறது (அந்நியனில் கருட புராணம் இதில் சிவன்).

அவன் செய்யும் சில கொலைகள் :

1. ரயில் பயணச் சீட்டு கொடுப்பவர். ஐந்து ரூபாய் மாற்றி எடுத்து வரச் சொல்வார்.
2. ரயிலில் RPF (போலிருக்கும்) ஒருவர். அவர் தூங்கிகொண்டிருக்கும் ஒருவரின் பையிலிருந்து பணம் எடுத்து விட்டு பிரபாகரிடம் வந்து பணம் கேட்பார்.
3. வைரம் பிடித்துப் போக பணம் இல்லாததால் வைர வியாபாரியைக் கொலை செய்வான் (இது பாடல் வரிகளில் வருவது)
4. 26 வயதாகியும் ஒரு பெண்ணும் கிடைக்காததால் கடற்கரையில் உள்ள காதல் ஜோடிகள்.
5. முதலில் இவனைத் துன்புறுத்திய போலீஸ் அதிகாரி (பழிக்குப் பழி.!).

கொலைகளை புணர்ச்சி இன்பத்துடன் இணைப்பது; அதை கவிதை வரிகளாகச் சொல்வதன் மூலம் திரும்பத் திரும்ப பிரதியின் ஆசிரியர் வன்முறையை கவித்துவத்துவத்தின் மூலம் நியாயப் படுத்த முயற்சித்திருப்பார்.

தந்தையை மறத்தல் : அப்பா தட்டாமாலை சுற்றுவது பிடிகாது என வசனம் வரும். அதையே தமிழ் ஆசிரியர் செய்யும்போது அந்தக் குரல் மவுனமாகிவிடும். இங்கு தந்தையை மறப்பதின் மூலமே (தன் வரலாற்றை அழிப்பதன் மூலமே) ஆசிரியர் பட்டையாக விபூதிப் பூச்சுடனும் பிரபாகர் விபூதிக் கீற்றுடனும் வரமுடிகிறது...

தமிழ் உயர் வகுப்பில் சேரும் காட்சி மிக மோசமான அரசியலை முன் வைக்கிறது. மாணவனொருவன் பேர் ஸார்ஜ் என, ஆசிரியர் திருத்துவார் ஜார்ஜ் என்று. வகுப்பில் இருக்கும் மாணவர்கள் எல்லோரும் கறுப்பு நிறத்திலிருக்க (அவர்கள் சரியாகப் படிக்காதவர்கள், கடன் கிடைக்குமென்பதால் படிக்க வந்தவர்கள்) பிரபாகர் சிகப்பாக இருக்கிறான். அதனாலேயே அவன் அதிக மதிப்பெண் வாங்கியிருக்க வேண்டிய கட்டாயமேற்படுகிறது பிரதிக்கு.

பிரபாகர் படம் முழுவதும் designer shirt, pant, உயர்தர shoe, மினரல் வாட்டர் சகிதமாகவே வருகிறான்.

அறையில் படுத்திருக்கையில் ஷு போட்டிருப்பவன் உறங்கி எழுந்து நண்பனின் அலுவலகத்திற்குச் செல்லும்போது செருப்பு போட்டிருப்பது உதவி இயக்குனர் கோட்டை விட்டதால் அல்ல; அப்போதுதானே நாயகனுக்கும் நண்பனுக்குமான வித்தியாசத்தைப் பெரிதுபடுத்திக் 'காண்பிக்க' முடியும்.?

தமிழ் படித்திருந்தாலும் நாயகன் அழகான் ஆங்கிலம் பேசத் தெரிந்தாக வேண்டிய கட்டாயம் அவனது நண்பனுக்கு அந்த அளவிற்கு ஆங்கிலம் தெரியாது எனக் காட்டும்போது ஏற்படுகிறது.

ஒரு பெண்ணின் டீ சட்டையில் எழுதியிருப்பதைப் பார்த்து (touch me if you can), அவள் மார்பகங்களைத் தொடுகிறான். மற்ற குற்றங்கள் செய்கையில் கலங்காத நாயகன் இந்தச் செய்கைக்கு வருந்தி கைகளில் சூடு வைத்துக் கொள்வதன் மூலம் ஒரு politically correct stand எடுப்பது ஏனோ.?

குடித்து விட்டு போதையில் ஒரு வாகனம் சேறடித்துவிட்டுப் போக அடுத்த வண்டியின் கண்ணாடியை உடைப்பான் நாயகன். ஒட்டி வந்தவனை அடிப்பான் (முதலில் போலீஸ் செய்வதையே இந்த இடத்தில் நாயகன் செய்கிறான்).

சில கவிதைகள்

வாழ்க்கையைப் போலவே
கவிதை

***

கவிதையில் தலைப்பெதற்கு -
நான்
அது கவிதையே இல்லை -
நீ

***

அந்தந்த நேரத்துப் பறவைகளை
அந்தந்த நேரத்திலேயே சிறைபிடிக்க வேண்டும்

***

பறத்தலின் சந்தோஷம்
பிரதியெடுப்பதில் இல்லை

***

நான் நாய் பூனை எதையும் தொடுவதில்லை
அவைகளும் அப்படித்தான்

(நடு கல் 1994 ஜனவரியில் வெளியானது)

போதை

போதையின் பாற்பட்டதாகவே
கழிகிறது நம் காலம்
நான் குடித்துக் கொண்டிருக்கிறேன்
நீ எழுதிக் கொண்டிருக்கிறாய்

(கவிதா சரண் - பிப்ரவரி 1995ல் வெளியானது)
ராதிகா
வண்ணத்துப் பூச்சியின்
இறக்கையைப் பிய்த்து
நான் விளையாடியதில்லை
அடுத்தவன் பம்பரம்
வட்டத்துள் இருக்க
அதை உடைக்க
வெறி கொண்டதில்லை
கோலி விளையாடும்போதும்
முட்டி காய்ச்சும் பையனின்
சதை காயப் படுமோவென
வருத்தப் படுவேன்
அடுத்தவர் எனக்கு
முட்டாளெனப் பட்டம் கட்ட
அதனாலென்ன என்று
பேசாமல் போய்விடுவேன்
யாராவது என் சட்டையயப் பிடித்தால்
கை அகற்றி மவுனமாய் நடப்பேன்

வெளியே காண்பிக்காத கோபமெல்லாம்
உள்ளே கனன்று
இப்போது உன்னைத் தேடுகிறேன்
கொல்வதற்கு
ஆசையாய்

(நடு கல் - மே 1992)