சத்தங்களால் ஆன உலகு

நீர்வீழ்ச்சியின் ஓசையோடு
அடித்துச் செல்லப் படுபவன்
அலறுகிறான் கேட்டுக் கொள்
ஒதுங்கிய ரயில் பெட்டியின்
திறந்த வான் நோக்கிய
புணரல் ஒலி
காம்போதி ராகம்
ஓர் இடம் விட்டு
மறு இடம் பிடிக்கும்
கண்ணே கலைமானே வானொலியில்
தவழும் காலை ஒடித்துக் கொண்டு
இடிந்து போன கனவுகள்
தலையில் வீழ்ந்து
தூக்கத்தில் கதறும்
கண்ணாளா உனக்கென உண்டு
ஒலி பெருக்கிகளின் அலறல்
பிரத்யேகமாக
மண்டைக்குள் கேட்கும்
ஊழித் தாண்டவ கூத்து இரைச்சல்கள்

நடைப் பயிற்சி

என் குறியை அறுத்துவிட்டு
நடந்து கொண்டிருக்கிறேன்
நடைபாதையின் ஓரத்தில்
ஆடைகளற்ற
தனி மனிதனின்
சுதந்திர நடை

ஏதோ ஒன்றை எதிர்த்தோ
அல்லது எல்லாவற்றையும்
எதிர்த்தோ இருக்கிறது
என்னுடைய நடை பயணம்

கிரிக்கெட் ஸ்கோர்கள்
மற்றும்
சினிமாப் பாடல்களின்
நடுவே
யாரும் கண்டுகொள்ளாத தனிப்பயணம்

(மூன்று நான்கு மாதங்களுக்கு முன் ஏதோ ஒரு ஆங்கிலக் கவிதையைப் படித்ததன் தாக்கத்தில் எழுதியது - மொழிபெயர்ப்பல்ல - இப்போது தேடியும் மூலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை).