கற்றது தமிழின் வன்முறை அரசியல்

(1. இந்தக் குறிப்புகளை எழுதிவிட்டு, பிறகு சில பத்திகளை மாற்றிப் போட்டிருக்கிறேன். படிப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்து முடிக்கலாம் அல்லது நிறுத்தலாம். 2. இப்படம் முன்வைக்கும் காட்சிப் பிம்பங்களின் வன்முறை வேறொரு சமயம் மடக்கிப் பிடிக்க வேண்டும்).
காற்றின் கிளையேறி
திகுதிகுவென பரவின
எரியும் பிரச்சனைகள்
நாடி ஒடுங்கிற்று
வார்த்தை பூதம்
(தேவதச்சன்)
இந்தப் படத்தில் பிரதானமாய் இரண்டு விஷயங்கள் இருப்பதாய் அவதானிக்கப் படுகிறது. ஒன்று கவித்துவம் மற்றது வன்முறை. எப்படிக் கவித்துமான வசனங்கள் வன்முறைக்கு உதவுகின்றன என்பதைப் பார்ப்போம்.

படம் ஆரம்பிக்கும்போது மேட்டுக்குடி நடனத்தில் கேட்கும் 'தா தித்தோம் தா' என்பது திரும்பத் திரும்ப வருகிறது.


பிரச்சனைகளை ஒற்றைப் பரிமாணமாக ஆக்க முயற்சிக்கிறது பிரதி. உதா :
'தமிழ் நாட்டில் தமிழ் படித்தவன் எப்படி உயிர் வாழ முடியும்.?'
'தமிழ் நாட்டில் தமிழ் படித்தவன் சாவதற்கு காரணமா பஞ்சம்.?'

கதாநாயகன் பெயர் பிரபாகர் (கவனிக்கவும் பிரபாகரன் இல்லை) - பெயர் பற்றி வரும் வசனங்கள் :

'பெயரே வில்லங்கமா இருக்கே'
'எனக்குத் தெரிஞ்சு ஒரு பிரபாகர் தான்; அவர் லங்காவில இருக்கார்'

(நாயகனின் பெயர் பிரபாகராய் இருப்பதால் விடுதலைப் புலிகளின் தலைவர் பெயரை மாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது இங்கு.!).

பிரபாகர் சிவனாகிவிடுகிறான். அதனால் யார் வாழலாம் யார் சாகலாம் என முடிவெடுக்கும் 'அதிகாரம்' அவனுக்கு வருகிறது (அந்நியனில் கருட புராணம் இதில் சிவன்).

அவன் செய்யும் சில கொலைகள் :

1. ரயில் பயணச் சீட்டு கொடுப்பவர். ஐந்து ரூபாய் மாற்றி எடுத்து வரச் சொல்வார்.
2. ரயிலில் RPF (போலிருக்கும்) ஒருவர். அவர் தூங்கிகொண்டிருக்கும் ஒருவரின் பையிலிருந்து பணம் எடுத்து விட்டு பிரபாகரிடம் வந்து பணம் கேட்பார்.
3. வைரம் பிடித்துப் போக பணம் இல்லாததால் வைர வியாபாரியைக் கொலை செய்வான் (இது பாடல் வரிகளில் வருவது)
4. 26 வயதாகியும் ஒரு பெண்ணும் கிடைக்காததால் கடற்கரையில் உள்ள காதல் ஜோடிகள்.
5. முதலில் இவனைத் துன்புறுத்திய போலீஸ் அதிகாரி (பழிக்குப் பழி.!).

கொலைகளை புணர்ச்சி இன்பத்துடன் இணைப்பது; அதை கவிதை வரிகளாகச் சொல்வதன் மூலம் திரும்பத் திரும்ப பிரதியின் ஆசிரியர் வன்முறையை கவித்துவத்துவத்தின் மூலம் நியாயப் படுத்த முயற்சித்திருப்பார்.

தந்தையை மறத்தல் : அப்பா தட்டாமாலை சுற்றுவது பிடிகாது என வசனம் வரும். அதையே தமிழ் ஆசிரியர் செய்யும்போது அந்தக் குரல் மவுனமாகிவிடும். இங்கு தந்தையை மறப்பதின் மூலமே (தன் வரலாற்றை அழிப்பதன் மூலமே) ஆசிரியர் பட்டையாக விபூதிப் பூச்சுடனும் பிரபாகர் விபூதிக் கீற்றுடனும் வரமுடிகிறது...

தமிழ் உயர் வகுப்பில் சேரும் காட்சி மிக மோசமான அரசியலை முன் வைக்கிறது. மாணவனொருவன் பேர் ஸார்ஜ் என, ஆசிரியர் திருத்துவார் ஜார்ஜ் என்று. வகுப்பில் இருக்கும் மாணவர்கள் எல்லோரும் கறுப்பு நிறத்திலிருக்க (அவர்கள் சரியாகப் படிக்காதவர்கள், கடன் கிடைக்குமென்பதால் படிக்க வந்தவர்கள்) பிரபாகர் சிகப்பாக இருக்கிறான். அதனாலேயே அவன் அதிக மதிப்பெண் வாங்கியிருக்க வேண்டிய கட்டாயமேற்படுகிறது பிரதிக்கு.

பிரபாகர் படம் முழுவதும் designer shirt, pant, உயர்தர shoe, மினரல் வாட்டர் சகிதமாகவே வருகிறான்.

அறையில் படுத்திருக்கையில் ஷு போட்டிருப்பவன் உறங்கி எழுந்து நண்பனின் அலுவலகத்திற்குச் செல்லும்போது செருப்பு போட்டிருப்பது உதவி இயக்குனர் கோட்டை விட்டதால் அல்ல; அப்போதுதானே நாயகனுக்கும் நண்பனுக்குமான வித்தியாசத்தைப் பெரிதுபடுத்திக் 'காண்பிக்க' முடியும்.?

தமிழ் படித்திருந்தாலும் நாயகன் அழகான் ஆங்கிலம் பேசத் தெரிந்தாக வேண்டிய கட்டாயம் அவனது நண்பனுக்கு அந்த அளவிற்கு ஆங்கிலம் தெரியாது எனக் காட்டும்போது ஏற்படுகிறது.

ஒரு பெண்ணின் டீ சட்டையில் எழுதியிருப்பதைப் பார்த்து (touch me if you can), அவள் மார்பகங்களைத் தொடுகிறான். மற்ற குற்றங்கள் செய்கையில் கலங்காத நாயகன் இந்தச் செய்கைக்கு வருந்தி கைகளில் சூடு வைத்துக் கொள்வதன் மூலம் ஒரு politically correct stand எடுப்பது ஏனோ.?

குடித்து விட்டு போதையில் ஒரு வாகனம் சேறடித்துவிட்டுப் போக அடுத்த வண்டியின் கண்ணாடியை உடைப்பான் நாயகன். ஒட்டி வந்தவனை அடிப்பான் (முதலில் போலீஸ் செய்வதையே இந்த இடத்தில் நாயகன் செய்கிறான்).

9 comments:

TBCD said...

நன்றாக கவணித்து இருக்கின்றீர்கள்...

புரட்ச்சி தமிழன் said...

இதுக்குத்தான் நான் இத எல்லாம் பாக்கரதே இல்லை அந்த கெட்டப் எல்லாம் பார்த்தாலே ஏதும் உருப்படியா சொல்ல வரலைனு தெறியுது

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி tbcd, புரட்ச்சி தமிழன்...

வளர்மதி said...

வலையுலகிற்கு வருக வருக என்று வாழ்த்து சொல்லும் அளவுக்கு நான் இங்கு 'சீனியர்' இல்லை என்பதால் எனது வணக்கங்கள் சுந்தர் :)

உங்களுடன் தொடர்பு உண்டான பின்னரே நீங்கள் ஜீவராம் சுந்தர் என்ற பெயரில் கவிதைகள் எழுதியவர் என்பது நினைவுக்கு வந்தது. இங்கு வாசித்த கவிதைகள் - குறிப்பாக "ராதிகா" ஏற்கனவே வாசித்த நினைவைக் கிளறியது.

இவ்விமர்சனத்தை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. சில புள்ளிகளை விரிவாக்கியிருக்கலாம் என்றும். சொல்ல வந்த விஷயத்தில் சற்று தெளிவு குறைவாக இருப்பதாகவும் படுகிறது.

மற்றது என்ன ... :) தொடர்ந்து எழுதுங்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, வளர்.

கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து எழுதிப் பார்த்தது, அதனால் எனக்கே சந்தேகமாகத் தான் இருந்தது சரியாக வந்திருக்கிறதோ என்று. புள்ளிகளை விரிவாக்கினால் பெரிய பதிவாகிவிடுமோ என்ற அச்சம் வேறு.

சரி, I will try to improve...

DJ said...

சுந்தர், உரையாடல் என்பது ஒருகட்டத்தில் நாம் முன்வைக்கும் புள்ளிகளே மட்டும் சரியென உடும்புப்பிடியாக இறுக்கிப்பிடித்துக்கொண்டிருக்கும் விவாதமாகி சுருங்கிவிடும் ஆபத்துக்கள் இருப்பதால் அதிகமான வேளையில் சொல்லவேண்டிய தனிப்பட்ட கருத்துக்களை சொல்லியபடி அநேக பதிவுகளில் இருந்து விலகியிருக்கின்றேன். எனினும் விடாது நீங்கள் துரத்துவதாலும், நானும் உங்கள் கருத்தை அறிய ஆவல் என்ற சொல்லியபடியாலும் சிலவற்றையாவது இங்கே எழுதிவிட முயல்கின்றேன்.

எப்போதோ பார்த்த கற்றது தமிழை மறந்துபோனதால் உங்களுக்குப் பதில் எழுதுவதற்காய் மீண்டும் இன்னொருமுறை, 'கல்லூரி'யைத் திரையஙகில் பார்த்துவந்த கையோடு மீண்டும் கற்றது தமிழை பார்த்துவிட்டு எழுதுகின்றேன் இரண்டாவது முறை பார்க்கும்போதும் கற்றது தமிழை இன்னும் அலுப்பில்லாது என்னால் பார்க்கமுடிகின்றது :-).

கற்றது தமிழ் முன்வைக்கும் நுண்ணரசியல் மற்றும் அதன் அபத்தம் தமிழ்நாட்டுச்சூழல் பரீட்சமில்லாத என்னைவிட உங்களுக்கு நன்கு தெரியுமென்பதால் இயன்றளவு அதன் அரசியலை ஒதுக்கிவிட்டே எழுதுகின்றேன்.

படம் ஆரம்பிக்கும் புள்ளியைப் பார்த்தீர்கள் என்றால் அது அதிகாரத்தின் எதிர்க்குறியீடாகவே ஆரம்பிக்கின்றது. ஒருவித தனிமையுடன்,தனது இழப்புக்களுடன் இருப்பவன் அரச அமைப்பின் அதிகாரத்தின் முன்னால் பலியாக்கப்படுகின்றான். தற்கொலையைச் செய்யத் துணிவனுக்கு கொலைகள் செய்வது பெரிய விடயமல்ல என்ற முக்கிய புள்ளியை நீங்கள் தவறவிடுகின்றீர்களென நினைக்கின்றேன். அதிகாரத்திற்கு எதிரான புள்ளிகளையும் சிதைந்த ஒருவனைன் ப்லவிதமான நான்களையும், படத்தில் நான் அதிகம் பின் தொடர்ந்தபடியிருந்ததால் எனக்கு அது தமிழை முன்வைத்துப் பேசும் அரசியலோடு பின் தொடரமுடியாமற்பொய்விட்டது (ஒருவிதத்தில் பலவீனமும் கூட). ஆனால் அதன் நெறியாள்கையாளர் ஒரு நேர்காணலில், தெலுங்கில் எடுத்திருந்தால் கற்றது தெலுங்கு என்று எடுத்திருப்பேன் என நேரடியாகவே சொல்லியிருக்கின்றார். எனவே கற்றது தமிழதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்ற புள்ளியை நானும் விடுத்தே பார்த்தேன். இது இளவயதில் இழப்புக்களால் உடைந்த ஒரு மனதை அதிகாரம் இன்னும் ஒடுக்கும்போது எப்படி அது எதிர் வன்முறையாக உருவெடுக்கின்றதென்ற குறியீடாகவே பார்க்கின்றேன். அதற்குள் கற்றது தமிழை ஒரு பின்புலமாய் எடுத்திருக்கின்றார். அவ்வளவே.

இனி, உங்களின் குறிப்புகளுக்கு வருவோம்...
/அவன் செய்யும் சில கொலைகள் :

1. ரயில் பயணச் சீட்டு கொடுப்பவர். ஐந்து ரூபாய் மாற்றி எடுத்து வரச் சொல்வார்.
2. ரயிலில் RPF (போலிருக்கும்) ஒருவர். அவர் தூங்கிகொண்டிருக்கும் ஒருவரின் பையிலிருந்து பணம் எடுத்து விட்டு பிரபாகரிடம் வந்து பணம் கேட்பார்.
3. வைரம் பிடித்துப் போக பணம் இல்லாததால் வைர வியாபாரியைக் கொலை செய்வான் (இது பாடல் வரிகளில் வருவது)
4. 26 வயதாகியும் ஒரு பெண்ணும் கிடைக்காததால் கடற்கரையில் உள்ள காதல் ஜோடிகள்.
5. முதலில் இவனைத் துன்புறுத்திய போலீஸ் அதிகாரி (பழிக்குப் பழி.!).
/
கொலைகளுக்கு லொஜிக் வேண்டுமென்று நினைக்கின்றீர்களா? முதலாவது கொலையைச் செய்யும்போது நாயகன் சொல்கின்றார். இரத்தம் என்னைக் கடவுளாக்கிவிட்டதென்று). இதுவரை எதைக்கண்டும் பயப்பிடாதவர்களை இரத்தத்தால் பயப்பிடுத்த முடியுமென அவன் நினைக்கின்றான். தன்னைப் பழிவாங்கியவர்களையும் (பொலிசையும்), கெட்டவர்களையும் மட்டுந்தான் பழிவாங்கவேண்டும் என்றால் இதொரு சாதாரண மசாலா படமாகவே போயிருக்கும் (இத்தகைய அதிர்வுகளை எழுப்பியிருக்கவே மாட்டாது). இப்படியொருவன் சில நிமிடங்களில் தடுமாறிப்போகச் சம்பவங்கள் நடந்தால், எப்படி விளைவுகள் இருக்குமென்று பார்ப்பவரை பிரதியிற்கு அப்பால் யோசிக்கவைக்கின்றது/பதட்டமடையச் செய்வது என்பதில்தான் இப்பிரதியின் வெற்றி தங்கியிருக்கின்றது. மேலும் இப்பிரதி ஒற்றைப்படையான காரணங்களைச் சொல்லிக்கொண்டிருக்காது அங்கும் இங்குமாய் அலைவுறுவதால் இன்னும் பலவிதமான வாசிப்புக்களை செய்ய பார்ப்பவருக்கு வெளியைத் தருகின்றது. இப்போது பார்த்தீர்கள் என்றால் நீங்கள் கற்றது தமிழ் என்று கதாநாயகன் கூறுகின்ற புள்ளிகளைப் பின் தொடர்ந்து கருத்துக்களை வைக்கின்றீர்கள். நான் அதிகாரத்தின் வன்முறைக்கு எதிராய்ப்போகின்றவனின் தடங்களைப் படத்தில் பின் தொடர்ந்தபடி இருந்திருக்கின்றேன்.

நீங்கள் கூறுவதுபோல,
/பிரச்சனைகளை ஒற்றைப் பரிமாணமாக ஆக்க முயற்சிக்கிறது பிரதி. உதா :
'தமிழ் நாட்டில் தமிழ் படித்தவன் எப்படி உயிர் வாழ முடியும்.?'
'தமிழ் நாட்டில் தமிழ் படித்தவன் சாவதற்கு காரணமா பஞ்சம்.?'/
எனப் பார்க்கவும் முடியும்தான். ஆனால தமிழ் படித்தால் அல்ல, அவன் எதைப் படித்திருந்தால் என்ன, அரச அதிகாரத்தில் -ஆரம்பக்கட்டத்தில் காட்டியதுபோல- ஒடுக்கப்பட்டேயிருப்பான். ஆனால் பொலிஸ் ஸ்ரேசனில் நடப்பதைப் பார்ப்பீர்கள் என்றால் அவன் தமிழ் ஆசிரியனாக இருப்பதற்காகவே இன்னும் வஞ்சிக்கப்படுகின்றான். ' தமிழ் ஆசிரியனாய் இருந்தால் நீ ஏன் மற்றவர்களைப் போல சிகரெட் பிடிக்கின்றாய்....ஒரமாய் இருந்து பீடி பிடிக்கலாமே என்ற வசனங்கள் வருகின்றது. மேலும் தமிழ் படிப்பவனாய் இருப்பதனாலேயே அவன் சட்டத்தின் நுணுக்கத்தைப் பற்றிப்பேசும்போதும் இன்னும் வன்மத்துடன் தண்டிக்கப்படுகின்றான் (இங்கே நீங்கள் சாதியை முன்வைப்பதாய் கூறும் வெள்ளை நிறம்கூட அவனைக்காப்பாற்றவிலலை)

மேலும், நீங்கள் தமிழ் வகுப்பில் இருக்கும் கறுப்பின் அரசியல் குறித்து பேசுகின்றீர்கள். தமிழ்நாட்டில் தமிழ் வகுப்பில் அப்படித்தான் யதார்த்தம் இருக்கின்றது. இங்கே பிரபாகர் வெள்ளையாயிருப்பது என்ன பிரச்சினை என்று உண்மையில் விளங்கவில்லை. அவர் பிராமணராய் இருப்பதாய் ஒரு வாசிப்பு உங்களுக்கு வருகின்றது என நினைக்கின்றேன். அவர் பிராமணராய் இருந்தால் என்ன திருநீறு பூசிக்கொண்டிருந்தால் என்ன, அவர் தான் விருப்பித்தான் தமிழ் படிக்க வருகின்றார் எனச்சொல்கின்றார். எனக்கு இடஒதுக்கீட்டால் நான் விரும்பிய துறை கிடைக்கவில்லை ஆகவேதான் தமிழ் படிக்கின்றேன் எனச்சொல்லவில்லையே. (திருநீறு பூசுவது குறித்து நீங்கள் கூறும்போதுதான், தமிழ்நாட்டில் அரசவேலை செய்பவர்கள் அப்படியே இன்னுமேன் மத அடையாளங்களுடன் (நான் பார்த்தவளாவில் வக்கீல்மார்கள்/தாசில்தார்கள்) இருக்கின்றார்கள் என்ற கேள்வி வருகின்றது. அதேபோன்று ஏனின்னும் தமிழ்நாட்டு அரச இலட்சினையில் கோபுரம் பொலிவாய் இருக்கின்றதென்ற நீண்டநாட்கேள்வியையும் கூடவே கேட்டுவிடுகின்றேன்).

எனவே நீங்கள் குறிப்பிடும், /...ஆசிரியர் பட்டையாக விபூதிப் பூச்சுடனும் பிரபாகர் விபூதிக் கீற்றுடனும் வரமுடிகிறது.../ என்பது பற்றிக்கேட்கமுன்னர் அரச அலுவலகங்களில் மதச்சின்னங்கள் இல்லாதாவது ஒழிக்க முடிகின்றதா என்று யோசிக்கவேண்டுகின்றேன். மேலும் 'தீவிரவாதிகள்' = முஸ்லிம்கள் என்ற எங்கள் 'கேப்டன்', இந்திய தேசிய வீரர், அகசன் கிங், 'அர்ஜூன் சொல்வதைவிட இது என்ன மக்களைப் போய் பாதிக்கவா போகின்றது?

/அப்பா தட்டாமாலை சுற்றுவது பிடிகாது என வசனம் வரும். அதையே தமிழ் ஆசிரியர் செய்யும்போது அந்தக் குரல் மவுனமாகிவிடும். இங்கு தந்தையை மறப்பதின் மூலமே (தன் வரலாற்றை அழிப்பதன் மூலமே) ஆசிரியர் பட்டையாக விபூதிப் பூச்சுடனும் பிரபாகர் விபூதிக் கீற்றுடனும் வரமுடிகிறது.../
மீண்டும் உங்களின் இந்தக்கருத்து விளங்கவேயில்லை. தனது தகப்பனைப் பிடிக்காதவனுக்கு (நெருக்கமில்லாது அவர் ஆமியில் இருக்கின்றார்) நெருக்கமாய்ப் பழகும் ஆசிரியர் பிடிக்கச் செய்கின்றது. எனவே நாயகனுக்கு ஆசிரியர் தட்டாமலை செய்வது பிடிக்கின்றது. இதிலென்ன லொஜிக்கோ..? 'தன் வரலாற்றை அழிப்பதோ?' இருக்கின்றது...?

/தமிழ் படித்திருந்தாலும் நாயகன் அழகான் ஆங்கிலம் பேசத் தெரிந்தாக வேண்டிய கட்டாயம் அவனது நண்பனுக்கு அந்த அளவிற்கு ஆங்கிலம் தெரியாது எனக் காட்டும்போது ஏற்படுகிறது./
இங்கே மீண்டும் உங்கள் லொஜிக் உதைக்கின்றது. நீங்கள் உட்பட பலரும் தவறவிட்ட முக்கிய புள்ளியும் இதுதான். அவனுக்கு ஆங்கிலம் தெரியும் என்பது அவன் செய்த பாவமா என்ன? ஆங்கிலம் பேசக்கூடியவன், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆகக்குறைந்தது customer service வேலையெடுத்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க முடியும் (நாங்கள் இங்கேயிருந்து எந்த பெரிய நிறுவனத்தின் customer serviceற்கு call எடுத்தாலும் அது இந்தியாவிற்குதான் ஓடுகின்றது) ஆனால் அவன் அவ்வாறு ஒரு தொழிலைச் செய்யாதது அவனுக்கு தமிழ் மீதிருக்கும் பற்றும்...தன்னை வைத்து அவன் தமிழ் 'மட்டும்' கற்றவர்களுக்காய் தனது குரலை முன்வைக்கவும் விரும்புகின்றானென இயக்குநனர் காட்டமுயன்றிருக்கின்றான் எனவே நான் நினைக்கின்றேன்.

/ஒரு பெண்ணின் டீ சட்டையில் எழுதியிருப்பதைப் பார்த்து (touch me if you can), அவள் மார்பகங்களைத் தொடுகிறான். மற்ற குற்றங்கள் செய்கையில் கலங்காத நாயகன் இந்தச் செய்கைக்கு வருந்தி கைகளில் சூடு வைத்துக் கொள்வதன் மூலம் ஒரு politically correct stand எடுப்பது ஏனோ.?/
இது politically correctness ஆகவும் இருக்கலாம். இல்லாதுவிட்டால் ஆனந்தியிற்காய் ஏங்கிக்கொண்டிருக்கின்ற உள்மனதுக்கு குற்றமிழைத்தாகவும் இருக்கலாம். ஆனால் இந்த ஆணிய உளவியலை படத்தின் முடிவில் இயக்குநர் போட்டுடைக்கின்றார். இறுதிக்காட்சியில் ஒரு பெண்ணை பேட்டியெடுக்கும்போது, என்ன சார், இவங்கள் நாங்கள் ரீசேர்ட்டில் எழுதினால் என்ன எழுதாவிட்டால் என்ன, அங்கேதான் பார்க்கப்போகின்றான்கள் என்று....பிரபாகர் மட்டுமில்லை, பஸ்சில் இன்னபிற இடங்களில் பெண்ணின் மார்பகங்களைத் தடவத்தான் அநேகமானவர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்....இங்கேதான் பிரபாகருக்கு touch me if you dare ஒரு சாட்டு. தன் வடிகாலை இப்படியாக பயன்படுத்திக்கொண்டார் அவ்வளவுதான். பிரபாகர் தன்னைப் புனிதமானவன் என்றோ, ஒழுங்குகளின் விதி நடப்பவன் எனக்கொண்டால்தான் எல்லாவற்றையும் நமது ஒழுக்க விதிகளின்படி பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்.

/குடித்து விட்டு போதையில் ஒரு வாகனம் சேறடித்துவிட்டுப் போக அடுத்த வண்டியின் கண்ணாடியை உடைப்பான் நாயகன். ஒட்டி வந்தவனை அடிப்பான் (முதலில் போலீஸ் செய்வதையே இந்த இடத்தில் நாயகன் செய்கிறான்). /
மீண்டும் நீங்கள் ஒழுங்குகளைப் பற்றியே உரையாடிக்கொண்டிருக்கின்றீர்கள். நான் ஒழுங்குகளின் சிதைவை இவற்றில் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.

நான் தொடக்கத்தில் எழுதிய பதிவில் கிட்டத்தட்ட இரண்டு பத்திகள் தனியே கற்றது தமிழின் அரசியலை விரிவாக எழுதிவிட்டு பதிவின் நீளமும், தமிழ்நாட்டில் கற்பது தமிழ் குறித்த பிரக்ஞை அவ்வளவு இல்லாததாலும் நீக்கியிருந்தேன்.

மீண்டும் சுந்தர், இங்கே நான் உங்கள் பார்வைகளை மறுதலிக்கின்றேன் என்று அர்த்தமில்லை. எனது பார்வை உங்கள் பார்வையிலிருந்து வேறுபடுகின்றது என்பதைக் குறிக்கவே இதை எழுதுகின்றேன். அவ்வளவே.

நிறைய எழுத விருப்பந்தான். எனினும் இதைவிட்டு நகரவே விரும்புகின்றேன். இனி மேலும் எழுதும் எண்ணம் எதுவுமில்லை. நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நீங்கள் சொல்வது புரிகிறது. டி.சே.. இது பற்றிய உரையாடலை நிறுத்திக் கொள்வோம் (தொடர்ந்து இதைப் பற்றிப் பேசி உங்களைத் தொந்தரவு செய்துவிட்டேனோ என்ற குற்ற உணர்வும்கூட...).

உங்கள் கருத்துக்களை விரிவாகப் பகிர்ந்தமைக்கு நன்றி. நான் உங்கள் பார்வையிலிருந்து வேறுபடுகிறேன் (ஆனால் அது ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை).

ஜமாலன் said...

நண்பர் சுந்தருக்கு..

இன்றுதான் உங்களது இப்பதிவை பார்க்கிறேன். கற்றது தமிழ் குறித்த எனது கருத்துக்களை எழுதிவிட்டேன். ஆனால் நீங்கள் சுட்டும் பல வசனங்கள நான் கேட்கவும் பார்கக்வும் முடியாத ஒரு மோசமான சீடியில் பார்த்தது. உங்கள் பதிவில்தான் அதனை கேட்கிறேன். இருப்பினும் உங்கள் தர்க்கம் ஒரு முக்கிய புள்ளியை தொடுகிறது. அது வன்மறை அழகியலாக்கப்பட்டுள்ள முறைமை பற்றியது. இருப்பினும் எனது வாசிப்பு வேறு. நண்பர் டிசேவின் வாசிப்பிலும் என்னால் உடன்படமுடிகிறது. ஏற்கனவே ஒரு நீண்ட பின்னொட்டம் சுகுணா திவாகரின் பதிவில் இட்டிருக்கிறேன். ஆக, பன்முக வாசிப்புகள் கொண்ட ஒரு படம் என்பதையாவது நீங்கள் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். இட ஒதுக்கீடு குறித்து வளர்மதி சுட்டிய கருத்தும்கூட ஏற்புடையதே. அது மையமான விஷயமாக இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அது பிரதியின் அல்லது ஆசிரியனின் ஒரு பலவீனம் என்பதிலும் எனக்கு உடன்பாடு உண்டு.

தர்க்கமற்ற கொலைகள் என்பது குற்றவியல் பற்றிய ஆதிக்க தர்க்கத்தை உடைப்பது என்பதே எனது நிலைப்பாடு.

பல கருத்துக்கள் ஒவ்வொருவரும் ஒன்றை முதன்மைப்படுத்துகிறோம் நமது அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப.

நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

'தர்க்கமற்ற கொலைகள்' பற்றிய உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன். ஆனால் பல கொலைகள் தர்க்கமற்று நடப்பதில்லை இந்த்ப் பிரதியில். உதா. RPF நாயகனிடம் நேரிடையாக வராமல் ஒரு தூங்கும் பயணியிடம் பணம் திருடிவிட்டு வருவதாகக் காட்டப் பட்டிருக்கும். அதாவது அவனுக்குத் தண்டனை தேவைதான் என நியாயப் படுத்தும் முயற்சியாக இதைப் பார்க்கிறேன்.

உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, ஜமாலன்.