சினிமா பற்றி எதுவுமே எழுதியதில்லை இதுவரை. சினிமாக்களை எப்போதாவது பார்ப்பதுடன் சரி. உலக சினிமாக்களில் அதிகப் பரிச்சயம் இல்லாதவன். சினிமா என்ற கலையின்மேல் பெரிய ஈடுபாடோ ஆர்வமோ இல்லாதவன்.
நந்தலாலாவை போன ஞாயிறன்று மாலைக் காட்சியில் பார்த்ததும், ஆடிப் போனேன். ஆடிப் போனேனுக்கு மேல் ஏதும் சொல்லத் தோன்றாததால் இப்படி எழுதுகிறேன். இந்தப் படத்தைப் பற்றிச் சில வரிகளை டுவிட்டரிலும் பஸ்ஸிலும் பகிர்ந்து கொண்டேன்.
கிகுஜிரோவின் கதையை ஒட்டி எடுக்கப் பட்ட படம் நந்தலாலா என முதலிலேயே கேள்விப்பட்டிருந்தேன். இவ்வளவு தூரம் நம்மைக் கவர்ந்த படம் ஒரு தழுவலாக இருந்துவிடக் கூடாதே என்று மனம் ஆசைப்பட்டது. கிகுஜிரோவின் குறுந்தகடை நண்பரிடமிருந்து பெற்று, இந்த வாரத்தில் இரண்டு முறை பார்த்தேன். மறுபடியும் நந்தலாலாவை நேற்று மதியம் திரையரங்கில் பார்த்தேன்.
கிகுஜிரோவின் தழுவல் இல்லை நந்தலாலா என்று தெளிவாக உணர்கிறேன். ஆனால், கிகுஜிரோவின் பாதிப்பில் உருவான படமே நந்தலாலா என்பதும் தெரிகிறது.
கிகுஜிரோவில் ஒரு சிறுவன் தன் தாயைத் தேடிச் செல்கிறான். உதவிக்கு வருபவன் கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொள்பவன். சிறுவனின் தாய், வேறொருவருடன் செட்டிலாகிவிட்டது தெரிகிறது. பையனைச் சமாதானப்படுத்த, அவனது அம்மா வேறு இடத்திற்கு மாறிச் சென்றிருக்கலாம் என்கிறான் உடன் வந்தவன். சிறுவனைக் குஷிப்படுத்த சில விளையாட்டுகள் காட்டுகிறார்கள். விளையாடுகிறார்கள். பயணிக்கிறார்கள். ஊருக்குத் திரும்ப வந்ததும், மறுபடி இன்னொருமுறை இதே போன்று செய்யலாமென உடன் வந்தவன் சொல்ல, சிறுவன் மகிழ்ச்சியாகச் செல்வதுடன் படம் முடிகிறது.
நந்தலாலாவின் அடிப்படைக் கதையே வேறு மாதிரியானது. இங்கே சிறுவன் மட்டும் தாயைத் தேடிச் செல்வதில்லை. மனநலம் குன்றிய பாஸ்கர் மணியும் அதையேதான் செய்கிறான். சிறுவன், தாயின் மேல் கொண்ட பாசத்தால். பாஸ்கர் மணி, கோபத்தால். சிறுவனின் தாயார், வேறு ஒருவருடன் இருப்பது தெரிந்ததும், இவனைக் கூட்டிக் கொண்டு தன்னுடைய கிராமத்திற்கு வருகிறான். தன்னுடைய தாயின் பைத்திய நிலையைப் பார்த்ததும், இவனது பைத்தியம் சொஸ்தமாகிறது. சிறுவனுக்கு வேறொரு தாய் கிடைத்து, பாஸ்கர் மணிக்கு பைத்தியம் குணமாவதுடன் படம் முடிகிறது.
சில காட்சிகள் கிகுஜிரோவில் இருப்பதைப் போலவே வந்தாலும் வேறு மாதிரியான அழுத்தங்களைக் கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, ஜப்பான் படத்தில் லாரிக்காரன் அடிப்பது எக்ஸ்ட்ரீம் லாங் ஷாட்டில் காட்டப்படுகிறது. தமிழில் அருகாமைக் காட்சியில் அடி விழுந்து பார்வையாளர்களின் உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது. ஒருவிதத்தில் நந்தலாலா கொஞ்சம் மெலோடிராமாவும்கூடத்தான்.
பயணம் என்றால், கார், பஸ், வேன் என்றுதான் இருக்க முடியும். அதனால் அதையெல்லாம் காப்பி என்றால் என்ன சொல்ல முடியும்? ஒருவர், அந்தப் படத்திலும் இயக்குனரே நடித்திருக்கிறார். அதையுமா மிஷ்கினும் காப்பியடிக்க வேண்டுமென்றிருந்தார்! (இணையத்தில்தான் படித்தேன், யார் சொல்லியிருந்தது என்று நினைவில்லை). விட்டால் அதையும் காமெராவில் எடுத்திருக்கிறார்கள், இதிலும் காமெராவில் எடுத்திருக்கிறார்கள் என்றுகூடச் சொல்வார்கள் போலும்.
படத்தின் சிறப்புகளைப் பற்றிப் பலர் விரிவாக எழுதிவிட்டார்கள். நானும் திரும்பவும் அதையே சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் அதற்குள் போக விருப்பமில்லை.
என்னளவில் இதுவரை இப்படியான ஒரு படத்தை நான் பார்த்ததேயில்லை. இரண்டாவது முறை பார்த்தபோதும் அதே மனநிறைவைத் தந்தது நந்தலாலா. நண்பர்களுக்கு இந்தப் படத்தைப் பார்க்க நிச்சயம் சிபாரிசு செய்வேன்; செய்கிறேன்.
கார்காலக் குறிப்புகள் - 58
4 days ago
10 comments:
ok ji
இந்த படம் மிஷ்கினின் கனவுப்படம்.அது தெரியாமல் ஒரு நிருபர் இந்த படத்திலும் வாலமீனும்,கத்தாளைகன்னாலே,போல பாட்டும் டான்சும் உண்டா என்று கேட்டபோது,மிஷ்கின் சிரித்துக்கொண்டே இல்லை அது போன்ற பாட்டு இல்லை,இந்த படம் மிகவும் பேசப்படும் என்றார்.படத்தை பார்த்த பிறகுதான் அப்படி இரண்டு படங்கள் எடுத்த ஒரு படைப்பாளி இப்படியும் படம் எடுக்கமுடியும் என்பதை உணர முடிந்தது.குடும்பத்துடன் ஒருமுறையும்,நண்பர்களுடன் மூன்றாவது தடவையாக பார்த்தேன்.இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தமிழ் படம்.மூலப்படமான ஜப்பானிய படத்தில் மனம் இளகவில்லை.
//என்னளவில் இதுவரை இப்படியான ஒரு படத்தை நான் பார்த்ததேயில்லை. இரண்டாவது முறை பார்த்தபோதும் அதே மனநிறைவைத் தந்தது நந்தலாலா. நண்பர்களுக்கு இந்தப் படத்தைப் பார்க்க நிச்சயம் சிபாரிசு செய்வேன்; செய்கிறேன்//
:)
ஒரு திரைப்படம் பார்க்கும் பூத்து சில உணர்வுகளை நம்முள் விதைத்து செல்கிறது . அவற்றிலிருந்து உருவாகும் மன உணர்வுகளில் சில சாயல்கள் இருப்பது பெரிய விசயமில்லை . மொத்தத்தில் நேர்மையான பகிர்வு .
அதாவது, இதுபோல் ஒரு ஜப்பானிய படம் வரவேயில்லைனு வச்சுக்குவோம், நந்தலாலா வந்திருக்க வாய்ப்பில்லைனு நான் சொன்னா நீங்க என்ன சொல்லப்போறீங்க?
இப்போலாம் தழுவுறவனும் திருடுறவனும் அதி புத்திசாலியாயிடுறான். எப்படித் தழுவி எப்படி அதில் மாற்றங்களைப் புகுத்தினால் அதை தன்னுடைய க்ரியேசன்னு நம்புற அளவுக்கு மாற்றியமைக்கிறான்.
அந்த ஜப்பானிய படம் வரவில்லையென்றால், நந்தாலாவை நான் உருவாக்கியிருக்க முடியாதுனு மிஷ்கின் சொல்வாறா? நீங்க என்ன சொல்றீங்க? சொல்லனுமா? தேவையில்லையா?
//உதாரணத்திற்கு, ஜப்பான் படத்தில் லாரிக்காரன் அடிப்பது எக்ஸ்ட்ரீம் லாங் ஷாட்டில் காட்டப்படுகிறது. தமிழில் அருகாமைக் காட்சியில் அடி விழுந்து பார்வையாளர்களின் உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது.//
சார், இது சீரியஸா இல்லை காமெடியா?
//விட்டால் அதையும் காமெராவில் எடுத்திருக்கிறார்கள், இதிலும் காமெராவில் எடுத்திருக்கிறார்கள் என்றுகூடச் சொல்வார்கள் போலும்.//
நல்ல நகைச்சுவை போங்க.
அருமையான பார்வை ஜி.. ஒரு சினிமா பார்க்கும் ரசிகனுக்கு ஒரு அனுபவத்தை கொடுத்தால் அது எங்கிருந்து வந்தாலும் அதை பற்றி கவலைபடத் தேவையில்லை என்றே தோன்றுகிறது.
"ஜப்பான் படத்தில் லாரிக்காரன் அடிப்பது எக்ஸ்ட்ரீம் லாங் ஷாட்டில் காட்டப்படுகிறது. தமிழில் அருகாமைக் காட்சியில் அடி விழுந்து பார்வையாளர்களின் உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது. "
அடடா.. என்ன ஒரு வித்தியாசம். தழுவலா இருந்தாலும் மிஸ்கின் நேர்மையுடன் எடுத்துள்ளார் என்பது உண்மைதான் இருந்தாலும் படம் பாக்ஸ் ஆபிஸில் ப்ளாப் என்பதே ரிப்போர்ட்!
ராம்ஜி யாஹு, தமிழன், அஷோக், தேவராஜ் விட்டலன், வருண், சரவணகுமரன், ராஜசுந்தர்ராஜன், கேபிள் சங்கர், ரஃபீக்... பின்னூட்டமிட்டதற்கு நன்றி.
Post a Comment