மரணத்தை அஞ்சுபவன்

சரவணன் இறந்து போய் ஆறு நாட்கள் கழித்துதான்
செய்தி கிடைத்தது எனக்கு
மனைவி அவனைப் பொருட்டாகவே மதிக்கவில்லை
அருகில் நெருங்கக்கூட விடவில்லை
அதுவே தற்கொலைக்குக் காரணமென்றான் செந்தில்
இல்லையில்லை
கடன்காரர்களின் தொல்லை என்றான் ஃபிரெடரிக்
மூன்றாவதாய் நுழைந்த சங்கர்
இருவரையும் மறுத்தான்
லட்சோப லட்சம் மக்கள் தற்கொலைக்குக் காரணமான
தீராத வயிற்று வலியே சரவணனைத்
தற்கொலைக்குத் தள்ளியது என்றான்
நல்ல வேளை
இயற்கையாகச் செத்தான் என யாரும் சொல்லவில்லை
அந்த வரையில் நிம்மதிதான் எனக்கு

சின்னத்துவம்

'பெரிதினும் பெரிது கேள்
என்றானே பாரதி...'
ஆர்ப்பாட்டமாய் ஆரம்பித்த
பேராசிரியரை
இடைவெட்டினான்
சி மணியின்
மினி யுகத்து மனிதன்
காணி நிலம் வேண்டாம்
10க்கு 12 அறை போதும் என்றான்
முக்கியத்துவம் வேண்டாம்
சின்னத்துவம் போதாதா?
என வினவினான்
'ஸின்னத்துவம் என்றால்...'
இழுத்த பேராசிரியரிடம்
சின்னதாய்க் கோபப் பட்டான்
சின்ன விஷயங்கள் குறித்து
சின்னதாய் விளக்கினான்
சின்னத்துவத்தைச்
சின்ன தத்துவம்
என முணுமுணுக்கலானார்
சின்ன விரக்தியில்
பெரிதாய்ச் சிரித்து
கைகுலுக்கி விடை கொடுத்தான்
மினி ஆசிரியன்

ஒரு காதல் கவிதை

என் சிறிய உருவம் காட்டி
ஆதாம் காலத்தில் மறுத்தாள் ஒருத்தி
தன் அழகைச் சொல்லி மறுத்தாள் இடையில் வந்தவள்
தாலி கட்டிய பாவத்திற்காய்
காதலிக்க வேண்டியவளுக்கோ
எல்லாமே சோர்வு
கண்முன் தெரியும்
வானம் தாண்டியும்
பல வானங்கள் இருக்கின்றனதாம்
நிராகரிப்பின் வலி தாங்காமல்
ஒளிந்து கொள்கின்றன
எல்லா வான்மேகங்களும்
வழுக்கைத் தலையே
பிரதான பிரச்சனையாய்
இருக்கிறது
இப்போதைய சீமாட்டிக்கு

சிவாஜி
வாயிலே
ஜிலேபி

சதுரத்தை ஆங்காரமாய்
உடைத்தெறிந்தால்
சச்சதுரம் சச்சச்சதுரம்

குடிகாரனின் வார்த்தைகளாய்ச்
சிறுத்துப் போன என் காதலை
மீட்டெடுப்பேன்
அதுவரை
நமஸ்காரம்

முன்திட்டமிடப்படாத பின்மாலைப் பொழுதொன்றில்

அருகிப் போன நண்பர்களில்
எவரையேனும்
அலைபேசியில் அழைக்கலாம்
மனைவி மகளுடன்
ஊர் சுற்றப் போகலாம்
கறுப்பு வில்லையைத்
தனியாக ருசிக்கலாம்
பழைய காதலிக்குக் கடிதமெழுதலாம்
பிரபல கவிஞர்களைப் போல்
பட்டியல் கவிதை எழுதி
கடைசி வரியில் திருப்பம் வைக்கலாம்
மிட்டாய் நசுக்கியை
மகழ்ச்சியாய் விளையாடலாம்
இப்பெரு அருவியை
என் சிறு வாய்
கொண்டு அருந்தலாம்