வித்தியாசமான பதிவர் சந்திப்பு

சாதாரணமாக வலைப்பதிவர் சந்திப்பென்பது நண்பர்களைச் சந்தித்துப் பேசும் ஓர் இடம். புதிய பதிவர்கள், வெளிநாட்டிலிருந்து வரும் பதிவர்கள் என அறிமுகப்படலமும் அளவளாவுதலும் நடக்கும். சந்திப்பு முடிந்தபின், டீ குடிக்கச் செல்பவர்கள் டீக்கடைக்கும், மதுஅருந்த விரும்புபவர்கள் மன்ஹாட்டனோ அல்லது டாஸ்மாக்கோ செல்வதும் வழக்கம். சுபம்.

இம்முறை பாரி அரசு வருகிறார். அதன்பொருட்டு ஒரு பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடாகியிருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே பாலபாரதி, அதிஷா பதிவிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இன்று லக்கி லுக் எழுதியிருக்கும் பதிவையும் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நேற்று முன் தினம் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் நடந்த - தொலைக்காட்சி ஊடகங்களால் திரும்பத் திரும்பக் காட்டப்பட்ட- சம்பவங்கள் பலரை உணர்ச்சிவசப் படுத்தியிருக்கிறது. இது எதிர்பார்க்கக்கூடியதே.

இந்தப் பிரச்சனையின் உள்விபரங்கள் தெரிந்தவர்கள் நாளைய சந்திப்பிற்கு வந்து பேச இருக்கிறார்கள். ரோசா வசந்த் லக்கி லுக் பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியது மாதிரி வெற்று மனிதாபிமானக் கூச்சலாக இல்லாமல் இச்சந்திப்பு சில புரிதல்களைக் கொடுக்கலாம். குறைந்த பட்சம் மாற்றுப் பார்வைகளை முன்வைக்குமென எதிர்பார்க்கிறேன்.

அதனால், வலைப்பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் அழைக்கின்றோம்.

இடம் : சென்னைக் கடற்கரை காந்தி சிலையின் பின்புறம்.
நேரம் : மாலை 5.30 மணிமுதல்
தேதி : 15.11.2008

பிகு :

(1) வழக்கமான விஷயங்களும் இருக்கும் :)

(2) பரவலாகத் தெரியவேண்டியதன் பொருட்டு தனிப்பதிவாக நானும் இதை இடுகிறேன்.

தெளிவு

அடிக்கடிக் கோபம் வரும்போது
அறைய யார்கிடைப்பார் எனக்கு
இன்றும் அப்படித்தான்
தேடிக்கொண்டிருந்தேன் வெகுநேரமாய்
மயங்கும் மாலைவேளையில்
தொடையில் உட்கார்ந்தது ஒரு கொசு
ஓங்கி அறைந்தேன்
கொசு இறந்தது நசுங்கிப் போய்
தொடையில் இருந்தது
என் ரத்தமா கொசுவின் ரத்தமா
இன்னொரு கொசு அகப்படாமலா போய்விடும்

(கவிதா சரன் அக்டோபர் 1992ல் வெளியானது)

சாரு நிவேதிதாவும் ஆபாசமும்

ரசம் சாதமும் அதற்குத் தொட்டுக் கொள்ள வழவழா வெண்டைக்காய் பொரியலும் சாப்பிடுபவர்களுக்கு, மிளகாய்க் காரமான (அதுவும் சாராயத்திற்குக் கடித்துக் கொள்ளும் மிளகாய்) சாரு நிவேதிதாவின் எழுத்துகள் ஆபாசமாய்த் தெரிவதில் வியப்பில்லை.

55 வயதானவன் காதலிக்கலாமா, சின்னப் பெண்களைக் காதலிக்கலாமா, திருமணமானவன் பிறபெண்களைக் காதலிக்கலாமா... இதுகூடப் பரவாயில்லை, அவற்றை அப்படியே எழுதலாமா... (சிலருக்கு அப்படிச் செய்வதுகூடப் பிரச்சனையில்லை, ஆனால் எழுதக் கூடாதாம்!). I would like to eat your pussy என்ற வரி ஆபாசமானதாம். நல்லது; அவர்களது வாய் உணவருந்த மட்டுமே பயன்படுவதாயிருக்கும் :)

தன்மேல் வீசப்படும் வன்மத்தைக்கூட இலக்கியமாக்கக்கூடிய சாமர்த்தியம் வெகு சிலருக்கே உண்டு. இவருக்கு பாலியல் பிரச்சனைகள் இருக்கலாம், அதனால்தான் இப்படியெல்லாம் எழுதித் தன் ஆசையைத் தீர்த்துக்கொள்கிறார் எனச் சிலர் 'அபிப்ராயப்பட்டதற்கு', சாரு ஒரு கதையில் சொன்னது : நான் ஆண்மையுள்ளவனா எனச் சோதிக்க, என் கதைகளைப் படித்தால் போதாது; அதற்கு உங்கள் மனைவிகளை ஓரு இரவு என்னுடன் அனுப்ப வேண்டும்!

கலை உன்னதம் எனச் சிலர் கும்மியடித்தபோது சாரு ஆய்வு பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தலைப்பு : Art is Fart. (இத்துடன் ஆஸ்கார் வைல்டின் பிரசித்திபெற்ற வாசகமான Life is imitating Artஐ இணைத்துப் பார்க்கலாம்). சிலர் அமைப்பியல் என்ற பெயரில் புரியாத ஆட்டம் போடுவதாக விமர்சித்து சாரு கவிதா சரணில் எழுதிய கட்டுரை ‘பூம் பூம் ஷக்கலக்க அமைப்பியல்வாதம்'. ஷங்கன்னா என்ற புனைபெயரில் எஸ் ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு மறுப்புக் கட்டுரை எழுதிய சாரு வைத்துக் கொண்ட புனைபெயர் ஃபக்கன்னா. இப்படிக் கலை, அமைப்பியல் எனச் சகலத்தையும் பகடி செய்யும் எழுத்து சாருவினுடையது.

ரெண்டாம் ஆட்டம் என்ற நாடகத்தை சாருவும் அவரது சில நண்பர்களும் ஒருங்கிணைத்தார்கள். அதில் ஒரு காட்சி : இரண்டு ஆண்கள் பத்தடி இடைவெளியில் ஓரினப் புணர்ச்சி செய்வதுபோல் மைமாக நடித்தார்கள். பின்னணியில் சுப்ரபாதம். அந்நாடகக் குழுவில் பலர் இருந்தபோதும் சாருவின்மீது குறிவைத்து உடல்ரீதியான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. (பின்னணியில் சுப்ரபாதம் இசைக்கப்பட்டதையே பெரிதாக அப்போது தினமலரிலிருந்து இடது சாரிப் பத்திரிகைகள் வரை எழுதியது இன்னொரு நகைச்சுவை). வேறுமாதிரியான வன்மம் சாருவின்மேல் இணையப் பக்கங்களில் விசிறியடிக்கப்படுகின்றது.

ஒன்றரையணா கருத்துகளை உதிர்ப்பவர்கள் குறைந்த பட்சம் சாரு இதுவரை என்ன செய்திருக்கிறார், இப்போது என்ன செய்ய முயன்று கொண்டிருக்கிறார் என்பதையாவது தெரிந்துகொண்டு கருத்துகளை உதிர்க்கலாம். ஒன்றுமே செய்யாமல் இணையத்தில் கொஞ்சம் மேய்ந்துவிட்டு கண்டபடி திட்டி / மிரட்டி எழுதுவது அயோக்கியத்தனம்!

அ.மார்க்ஸ்தான் சொன்னாரென்று நினைக்கிறேன் : இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கதை சொல்லி சாரு நிவேதிதா.

(தற்போது இடுகைகள் நீக்கப்பட்டுவிட்ட பதிவொன்றையும், ஒரு இணைய விவாதக் களத்தில் வைக்கப்பட்ட சில வாதங்களையும் படித்ததும் எழுதியது. இணையத்தில் பல இடங்களில் சாருவின் மீது துவேஷம் கக்கும் பதிவுகளைப் பார்க்கிறேன். அதற்கான சிறு எதிர்வினையே இது).

இரு கவனக் குவிப்புகள்

சர்வதேச கச்சா எண்ணை விலை குறைப்பால் ATF எனப்படும் விமான எரிபொருள் விலையைக் குறைத்திருக்கிறார்கள். நல்லது. விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பத்துநாட்களுக்கு முன் எல்லா மாநில முதலமைச்சர்களையும் விமான எரிபொருளுக்கான விற்பனைவரியைக் குறைக்கச்சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார் (நம் தமிழகம் உட்பட). சில மாநிலங்கள் குறைத்தும் விட்டன.

இதற்கிடையில் போன வாரம் ATFற்கு சுங்க வரியான 5% லிருந்து முழு விலக்கு அளித்துள்ளார்கள். விமான நிறுவனங்களைக் காப்பாற்றாவாம். கோயல்களின் மல்லையாக்களின் நலன்தான் அரசின் கண்களுக்குத் தெரிகிறதுபோலும்.

போனமுறை பெட்ரோல் டீசல் விலை ஏற்றியபோது இருந்த கச்சா எண்ணையின் விலை இப்போது பாதியாகக் குறைந்துவிட்டது என்றாலும் உள்ளூரில் விலையைக் குறைக்கவில்லை என்பது ஒருபுறம். ஜெனரேட்டர்களுக்கு உபயோகிக்கப்படும் டீசல் விலை 50 ரூபாய் என்பது இன்னொரு புறம். இதெல்லாம் இருக்கட்டும்.

கச்சா எண்ணை விலை எவ்வளவு உயர்ந்தபோதும், எவ்வளவுதான் கேட்டும் சாமனியர்கள் உபயோகிக்கும் பெட்ரோல் டீசலுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு தரப்படவே இல்லை. ஆனால் விலை கணிசமாகக்குறைந்த பிறகும், விமான எரிபொருளுக்குத் தந்திருக்கிறார்கள்.

அடப் பாவிகளா!

***

உத்தபுரம் அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுரேஷ் என்ற தலித் வாலிபர் மரணம். சில நாட்களுக்கு முன்பு, புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் கார் தாக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. ஊர்மக்கள் அறவழியிலேயே போராடியதாகத் தெரிவித்துள்ளார்கள்.

சுரேஷ் அப்போதுதான் வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கிறார் - ஊரில் என்ன பிரச்சனை என்று பார்க்க. துப்பாக்கிக் குண்டு கழுத்தில் பாய்ந்திருக்கிறது.

இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் கோகுல் வண்ணன் எழுதும்போது, ‘தலித்களுக்கும் மற்ற சாதியினருக்கும் பிரச்சனை வந்தால், தாக்கப்படுவது எப்போதும் தலித்களாகவே இருக்கிறார்கள் என்பதற்கு இச்சம்பவம் இன்னுமொரு உதாரணம்' என்கிறார்.