சின்னத்துவம்

'பெரிதினும் பெரிது கேள்
என்றானே பாரதி...'
ஆர்ப்பாட்டமாய் ஆரம்பித்த
பேராசிரியரை
இடைவெட்டினான்
சி மணியின்
மினி யுகத்து மனிதன்
காணி நிலம் வேண்டாம்
10க்கு 12 அறை போதும் என்றான்
முக்கியத்துவம் வேண்டாம்
சின்னத்துவம் போதாதா?
என வினவினான்
'ஸின்னத்துவம் என்றால்...'
இழுத்த பேராசிரியரிடம்
சின்னதாய்க் கோபப் பட்டான்
சின்ன விஷயங்கள் குறித்து
சின்னதாய் விளக்கினான்
சின்னத்துவத்தைச்
சின்ன தத்துவம்
என முணுமுணுக்கலானார்
சின்ன விரக்தியில்
பெரிதாய்ச் சிரித்து
கைகுலுக்கி விடை கொடுத்தான்
மினி ஆசிரியன்

ஒரு காதல் கவிதை

என் சிறிய உருவம் காட்டி
ஆதாம் காலத்தில் மறுத்தாள் ஒருத்தி
தன் அழகைச் சொல்லி மறுத்தாள் இடையில் வந்தவள்
தாலி கட்டிய பாவத்திற்காய்
காதலிக்க வேண்டியவளுக்கோ
எல்லாமே சோர்வு
கண்முன் தெரியும்
வானம் தாண்டியும்
பல வானங்கள் இருக்கின்றனதாம்
நிராகரிப்பின் வலி தாங்காமல்
ஒளிந்து கொள்கின்றன
எல்லா வான்மேகங்களும்
வழுக்கைத் தலையே
பிரதான பிரச்சனையாய்
இருக்கிறது
இப்போதைய சீமாட்டிக்கு

சிவாஜி
வாயிலே
ஜிலேபி

சதுரத்தை ஆங்காரமாய்
உடைத்தெறிந்தால்
சச்சதுரம் சச்சச்சதுரம்

குடிகாரனின் வார்த்தைகளாய்ச்
சிறுத்துப் போன என் காதலை
மீட்டெடுப்பேன்
அதுவரை
நமஸ்காரம்

முன்திட்டமிடப்படாத பின்மாலைப் பொழுதொன்றில்

அருகிப் போன நண்பர்களில்
எவரையேனும்
அலைபேசியில் அழைக்கலாம்
மனைவி மகளுடன்
ஊர் சுற்றப் போகலாம்
கறுப்பு வில்லையைத்
தனியாக ருசிக்கலாம்
பழைய காதலிக்குக் கடிதமெழுதலாம்
பிரபல கவிஞர்களைப் போல்
பட்டியல் கவிதை எழுதி
கடைசி வரியில் திருப்பம் வைக்கலாம்
மிட்டாய் நசுக்கியை
மகழ்ச்சியாய் விளையாடலாம்
இப்பெரு அருவியை
என் சிறு வாய்
கொண்டு அருந்தலாம்

மகிழ்ச்சியான செய்தி. உரையாடல் போட்டி சிறுகதைகள் புத்தகமாகின்றன


உரையாடல் சார்பாக 2009 வருடம் சிறுகதைப் போட்டி நடத்தப்பட்டது.  அதில் 20 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும் வழங்கப்பட்டன.  அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைப் புத்தகமாக கொண்டு வரலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.  அதற்கான ஒப்புதல்களும் சிறுகதைகளை எழுதியவர்கள் தந்திருந்தார்கள்.

ஆனால், சில தவிர்க்க இயலாத காரணங்களால் புத்தகம் கொண்டு வர இயலவில்லை. 

இப்போது நண்பர் அகநாழிகை வாசுதேவன் அந்தச் சிறுகதைகளைப் புத்தகமாகக் கொண்டு வர இசைந்திருக்கிறார்.  சிறுகதைகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது :

1. பெண்கள் இல்லாத ஊரின் கதை - ரெஜோ வாசன்  ( http://www.rejovasan.com/2009/06/30/no-land-for-women/ )
2. பிரசன்னம் - யோசிப்பவர்  ( http://kathaiezuthukiren.blogspot.com/2009/06/blog-post.html )
3. அம்மாவுக்குப் புரியாது - RV  ( http://koottanchoru.wordpress.com/2009/06/30/ )
4. அம்மாவின் மோதிரம் - எம் ரிஷான் ஷெரீப்  ( http://rishanshareef.blogspot.com/2009/06/blog-post_19.html )
5. அப்பா வருவாரா - கவிதா   ( http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/06/blog-post_30.html )
6. நீர் வழிப்படுஊம் புணை - சேரல்  ( http://seralathan.blogspot.com/2009/06/blog-post_29.html )
7. அவளாக இருந்திருக்கலாம் - நந்தவேரன்  (  http://adtams.blog.com/2009/06/27/அவளாக-இருந்திருக்கலாம்/ )
8. மலைகள் காணாமல் போன தேவதைகள் - தமிழன் - கறுப்பி  ( http://enninavinveliyilnan.blogspot.com/2009/06/blog-post_26.html )
9. வாழையடி வாழை - வெட்டிப் பயல்  ( http://naanrasithavai.blogspot.com/2009/06/blog-post.html )
10. மனையியல் - இரா வசந்தகுமார் ( http://kaalapayani.blogspot.com/2009/06/blog-post.html )
11. அவள் பத்தினி ஆனாள் - ராமச்சந்திரன் உஷா ( http://nunippul.blogspot.com/2009/06/blog-post.html )
12. கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் - நிலா ரசிகன் ( http://nilaraseegansirukathaigal.blogspot.com/2009/06/blog-post.html )
13. காத்திருத்தல் - சரவணன்.P.  ( http://tamilwritersaravanan.blogspot.com/2009/06/blog-post.html )
14. நீரும் நெருப்பும் - வெண்ணிலா ( http://vennilapakkangal.blogspot.com/2009/06/blog-post_3928.html )
15. நான் அல்லது நான் - நந்தா குமாரன் ( http://nundhaa.blogspot.com/2009/05/blog-post_25.html )
16. வழியனுப்பிய ரயில் - உமாசக்தி ( http://umashakthi.blogspot.com/2009/05/blog-post_27.html )
17. வள்ளியம்மையின் பழுப்பு கண்கள் - புபட்டியன் ( http://ppattian.blogspot.com/2009/06/blog-post_17.html )
18. மைய விலக்கு - சத்யராஜ்குமார்  ( http://inru.wordpress.com/2009/06/08/twilight/ )
19. தற்செயலாகப் பறிக்கப்பட்ட ஒரு மலர் - அகநாழிகை வாசுதேவன் (  http://aganaazhigai.blogspot.com/2009/06/blog-post_03.html )
20. காதோரமாய் - ஸ்ரீதர் நாராயணன்  ( http://www.sridharblogs.com/2009/06/blog-post_17.html )


இதில் எங்களுக்கு லாப நோக்கு எதுவும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.  காப்புரிமை எழுதியவர்களுக்கே சொந்தம்.

சிறுகதை ஆசிரியர்கள் யாருக்காவது புத்தகமாவதில் ஆட்சேபணை இருக்குமானால், எங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அதைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 

அகநாழிகை வாசுதேவனுக்கு எங்களுடைய நன்றிகள்.

நன்றி,

பைத்தியக்காரன் / ஜ்யோவ்ராம் சுந்தர்.