போதையின் பாற்பட்டதாகவே
கழிகிறது நம் காலம்
மாற்றுக் கருத்துகளை முன்வைப்பவர்களைச் சிலர் எப்படியெல்லாம் அணுகுகிறார்கள் என்பது போன பதிவை எழுதியதும்தான் தெரிந்தது. உண்மையில், போலீஸ் / அரசுகளைவிட சில சக பதிவாளர்கள் வன்முறையாளர்கள் என்பது புரிகிறது - இப்படி எழுதுவதற்காகவும் கொதித்தெழுவார்கள் என்பதும்..
ஒருவர் (இவர் வக்கீல் என நம்புகிறேன்), போலிஸுக்குப் பயந்தால் வீட்டில் (அதுவும் கதவைச் சாத்திக் கொண்டு!) சிகரெட் பிடியுங்கள் என்கிறார். (பேருந்துகளில் ஏன் இடிக்கறீங்க என்றால், இடிக்கக்கூடாதுன்னா ஆட்டோல போகவேண்டியதுதானே எனச் சில இடிமன்னன்கள் சொல்வது ஏனோ நினைவில் வந்து தொலைக்கிறது!). இன்னொருவர், உன் மகன் முகத்தில் நான் புகையை ஊதட்டுமா எனப் பின்னூட்டுகிறார். இன்னொருவர், வேண்டுமானால் உங்கள் மகன் முகத்தில் புகையை ஊதுங்கள் (என் மகன் முகத்தில் புகையை ஊதுவது என் சுதந்திரமாம்!), அவன் கஷ்டப்படட்டும்; பள்ளிகளருகில் புகைபிடித்தால் என் மகனுக்குத் தீங்கு நேரும்; அதனால் வேண்டாம் என்கிறார். வேறொருவர் அமெரிக்காவில் சுற்றுச் சூழலை மக்கள் மாசுபடுத்துவதில்லை என்கிறார். இன்னுமொருவர், தற்கொலை, கொலை, விஷம், தூக்கு என உதாரணங்கள் தருகிறார். இன்னும் சிலர் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டுமென்கிறார்கள்!!
கொஞ்சம் விட்டால், என்னைக் கழுவிலேற்றிவிடுவார்கள் போல!
மக்களே, நான் சொல்வதெல்லாம் இதுதான் :
புகையிலைக்கு முற்றாகத் தடையென்றால், முடிந்தால், நடத்திக் கொள்ளுங்கள். அது இந்தியா என்றில்லை, உலகில் எங்குமே நடக்க முடியதாது. ஆனால் இப்படி மதுக்கூடங்களில், பேருந்து நிலையங்களில் தடை, விமான நிலையங்களில், நட்சத்திர விடுதிகளில் அனுமதி எனக் காமெடி செய்யாதீர்கள்.
சிலர் லாஜிக்கலாக மடக்குகிறார்கள். எலிவேட்டர்கள் பேருந்து நிலையங்களில் இருக்கிறதா என்று. ஐயா, பேருந்து நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் முதலில் புகைக்க அனுமதியிருந்தது, இப்போது விமான நிலையங்களில் மட்டும் இருக்கிறது. இதுதான் என்னுடைய கேள்வி.
யோசித்துப் பார்த்தால், எல்லா மனிதருக்கும் ஏதாவது ஒருவித போதை தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சிலருக்குக் குடி, சிலருக்கு சிகரெட், சிலருக்குக் குடும்பம், சிலருக்குப் படிப்பு, சிலருக்கு வேலை.
புகைக்காதவர்கள், குடிக்காதவர்கள் ஏதோ ஒரு மனஇயல்பில் தங்களை மேல்ஸ்தானத்தில் வைத்துக் கொண்டு அறிவுரை வழங்குகிறார்கள் :( இன்னும் சிலர் அரிய கண்டுபிடுப்புகளைச் சொல்கிறார்கள் : புகைப் பிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானதாம்!!
புகைபிடிப்பவர்கள் எல்லாரும் ஏதோ அடுத்தவர்கள் முகத்தில் புகையை ஊதுவதற்காகவே காத்துக் கொண்டிருப்பவர்கள் போன்ற தோற்றம் வருகிறது பின்னூட்டங்களைப் பார்த்தால். நிஜத்தில் அப்படியில்லை.. புகைப்பிடிப்பவர்கள் கொலைகாரர்கள் அல்ல.
அடிப்படையில், நாம்செய்யும் பலசெயல்கள் அடுத்தவர்களைப் பாதிப்பவையே. குறைந்தபட்ச நேர்மை / அறம் என்ற அளவிலேயே இந்தப் பிரச்சனையை அணுக முடியும் என நினைக்கிறேன்.
இன்னும் சிலர் நிஜமாகவே இச்சட்டம் புகைப்பழக்கத்தைக் குறைக்கும் என நம்புகிறார்கள். நல்லது. ஆனால் பாருங்கள், நிதர்சனம் வேறுமாதிரியாக இருக்கிறது. பான்பராக் தடைச்சட்டத்தினால் அதன் உபயோகம் குறையவில்லை. காவல்துறை ஊழியர்களிடம், கடைக்காரர்கள், அவர்களிடம் வாங்கிய பொருளுக்குக் காசுகேட்டால் மிரட்டப் படுகிறார்கள் வழக்கு வருமென்று. உடனே அவன் ஏன் தடைசெய்யப்பட்ட பொருளை விற்கிறான், அதனால்தான் இலவசமாகத் தரவேண்டி இருக்கிறது எனச் சொல்லாதீர்கள். சட்டங்களை மதித்து பேணி ஒழுகுவதையே ஆயுட்கால லட்சியமாக வைத்திருப்பதாக நம்பும் சிலர் அப்படியும் சொல்லலாம்.
எனக்கு நிச்சயமாகத் தெரியும் இச்சட்டத்தை அமுல்படுத்த முடியாதென்று. they want to leave a legacy. அவ்வளவே.. ஆனால் இதற்குப் பின்னால் இருக்கும் மற்றும் வரப்போகும் அபாயகரமான விஷயங்கள்தான் என்னைப் பயமுறுத்துகின்றன.
சிலர் எல்லாவற்றையும் நல்லது / கெட்டது என்ற இருமைகளுக்குள்ளேயே பார்க்கப் பழகிவிட்டார்கள். ஒருவிதத்தில் அவர்கள் பாக்கியவான்கள்.
கார்காலக் குறிப்புகள் - 111
3 days ago