புகைத்தடைச் சட்டம் பற்றி இன்னும் சில விஷயங்கள்

போதையின் பாற்பட்டதாகவே
கழிகிறது நம் காலம்

மாற்றுக் கருத்துகளை முன்வைப்பவர்களைச் சிலர் எப்படியெல்லாம் அணுகுகிறார்கள் என்பது போன பதிவை எழுதியதும்தான் தெரிந்தது. உண்மையில், போலீஸ் / அரசுகளைவிட சில சக பதிவாளர்கள் வன்முறையாளர்கள் என்பது புரிகிறது - இப்படி எழுதுவதற்காகவும் கொதித்தெழுவார்கள் என்பதும்..

ஒருவர் (இவர் வக்கீல் என நம்புகிறேன்), போலிஸுக்குப் பயந்தால் வீட்டில் (அதுவும் கதவைச் சாத்திக் கொண்டு!) சிகரெட் பிடியுங்கள் என்கிறார். (பேருந்துகளில் ஏன் இடிக்கறீங்க என்றால், இடிக்கக்கூடாதுன்னா ஆட்டோல போகவேண்டியதுதானே எனச் சில இடிமன்னன்கள் சொல்வது ஏனோ நினைவில் வந்து தொலைக்கிறது!). இன்னொருவர், உன் மகன் முகத்தில் நான் புகையை ஊதட்டுமா எனப் பின்னூட்டுகிறார். இன்னொருவர், வேண்டுமானால் உங்கள் மகன் முகத்தில் புகையை ஊதுங்கள் (என் மகன் முகத்தில் புகையை ஊதுவது என் சுதந்திரமாம்!), அவன் கஷ்டப்படட்டும்; பள்ளிகளருகில் புகைபிடித்தால் என் மகனுக்குத் தீங்கு நேரும்; அதனால் வேண்டாம் என்கிறார். வேறொருவர் அமெரிக்காவில் சுற்றுச் சூழலை மக்கள் மாசுபடுத்துவதில்லை என்கிறார். இன்னுமொருவர், தற்கொலை, கொலை, விஷம், தூக்கு என உதாரணங்கள் தருகிறார். இன்னும் சிலர் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டுமென்கிறார்கள்!!

கொஞ்சம் விட்டால், என்னைக் கழுவிலேற்றிவிடுவார்கள் போல!

மக்களே, நான் சொல்வதெல்லாம் இதுதான் :

புகையிலைக்கு முற்றாகத் தடையென்றால், முடிந்தால், நடத்திக் கொள்ளுங்கள். அது இந்தியா என்றில்லை, உலகில் எங்குமே நடக்க முடியதாது. ஆனால் இப்படி மதுக்கூடங்களில், பேருந்து நிலையங்களில் தடை, விமான நிலையங்களில், நட்சத்திர விடுதிகளில் அனுமதி எனக் காமெடி செய்யாதீர்கள்.

சிலர் லாஜிக்கலாக மடக்குகிறார்கள். எலிவேட்டர்கள் பேருந்து நிலையங்களில் இருக்கிறதா என்று. ஐயா, பேருந்து நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் முதலில் புகைக்க அனுமதியிருந்தது, இப்போது விமான நிலையங்களில் மட்டும் இருக்கிறது. இதுதான் என்னுடைய கேள்வி.

யோசித்துப் பார்த்தால், எல்லா மனிதருக்கும் ஏதாவது ஒருவித போதை தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சிலருக்குக் குடி, சிலருக்கு சிகரெட், சிலருக்குக் குடும்பம், சிலருக்குப் படிப்பு, சிலருக்கு வேலை.

புகைக்காதவர்கள், குடிக்காதவர்கள் ஏதோ ஒரு மனஇயல்பில் தங்களை மேல்ஸ்தானத்தில் வைத்துக் கொண்டு அறிவுரை வழங்குகிறார்கள் :( இன்னும் சிலர் அரிய கண்டுபிடுப்புகளைச் சொல்கிறார்கள் : புகைப் பிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானதாம்!!

புகைபிடிப்பவர்கள் எல்லாரும் ஏதோ அடுத்தவர்கள் முகத்தில் புகையை ஊதுவதற்காகவே காத்துக் கொண்டிருப்பவர்கள் போன்ற தோற்றம் வருகிறது பின்னூட்டங்களைப் பார்த்தால். நிஜத்தில் அப்படியில்லை.. புகைப்பிடிப்பவர்கள் கொலைகாரர்கள் அல்ல.

அடிப்படையில், நாம்செய்யும் பலசெயல்கள் அடுத்தவர்களைப் பாதிப்பவையே. குறைந்தபட்ச நேர்மை / அறம் என்ற அளவிலேயே இந்தப் பிரச்சனையை அணுக முடியும் என நினைக்கிறேன்.

இன்னும் சிலர் நிஜமாகவே இச்சட்டம் புகைப்பழக்கத்தைக் குறைக்கும் என நம்புகிறார்கள். நல்லது. ஆனால் பாருங்கள், நிதர்சனம் வேறுமாதிரியாக இருக்கிறது. பான்பராக் தடைச்சட்டத்தினால் அதன் உபயோகம் குறையவில்லை. காவல்துறை ஊழியர்களிடம், கடைக்காரர்கள், அவர்களிடம் வாங்கிய பொருளுக்குக் காசுகேட்டால் மிரட்டப் படுகிறார்கள் வழக்கு வருமென்று. உடனே அவன் ஏன் தடைசெய்யப்பட்ட பொருளை விற்கிறான், அதனால்தான் இலவசமாகத் தரவேண்டி இருக்கிறது எனச் சொல்லாதீர்கள். சட்டங்களை மதித்து பேணி ஒழுகுவதையே ஆயுட்கால லட்சியமாக வைத்திருப்பதாக நம்பும் சிலர் அப்படியும் சொல்லலாம்.

எனக்கு நிச்சயமாகத் தெரியும் இச்சட்டத்தை அமுல்படுத்த முடியாதென்று. they want to leave a legacy. அவ்வளவே.. ஆனால் இதற்குப் பின்னால் இருக்கும் மற்றும் வரப்போகும் அபாயகரமான விஷயங்கள்தான் என்னைப் பயமுறுத்துகின்றன.

சிலர் எல்லாவற்றையும் நல்லது / கெட்டது என்ற இருமைகளுக்குள்ளேயே பார்க்கப் பழகிவிட்டார்கள். ஒருவிதத்தில் அவர்கள் பாக்கியவான்கள்.

41 comments:

நாமக்கல் சிபி said...

வேற வழியில்லை!

பேசாம வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டியதுதான்!

சட்டம் வழக்கம் போல முதலில் கடுமையாகவும்(தினமும்) பின்பு மாதக் கடைசிகளிலும்(டார்கெட் !?) மற்றும் விசேஷ தினங்கள்(போலீஸ் காரர்கள் பாக்கெட்டில் பைஸா குறையும் தினங்கள்) மட்டுமே அமலாக்கப் படும் என்பதே எனது கருத்து!

வளர்மதி said...

//எனக்கு நிச்சயமாகத் தெரியும் இச்சட்டத்தை அமுல்படுத்த முடியாதென்று. they want to leave a legacy. அவ்வளவே.. ஆனால் இதற்குப் பின்னால் இருக்கும் மற்றும் வரப்போகும் அபாயகரமான விஷயங்கள்தான் என்னைப் பயமுறுத்துகின்றன.

சிலர் எல்லாவற்றையும் நல்லது / கெட்டது என்ற இருமைகளுக்குளேயே பார்க்கப் பழகிவிட்டார்கள். ஒருவிதத்தில் அவர்கள் பாக்கியவான்கள்.//


:)))

உண்மை. என்றாலும் அது ‘சிலர்' அல்ல. மந்தைக் கலாச்சார நோய்க்குறி :)

கணேஷ் said...

காவல்துறை பணம் பண்ண இது ஒரு புதிய வழி அவ்வளவுதான்... எனது தாழ்மையான கருத்து இது தான் "முதலில் உங்கள் law enforcement agencyய சரி படித்திட்டு என்ன சட்டம் வேன்னா போடுங்க"

இங்க jharkhandல ஒரு பிரச்சனையும் இல்லை...

முரளிகண்ணன் said...

\\சிலர் எல்லாவற்றையும் நல்லது / கெட்டது என்ற இருமைகளுக்குளேயே பார்க்கப் பழகிவிட்டார்கள். ஒருவிதத்தில் அவர்கள் பாக்கியவான்கள்.\\

:-)))))))))))))))

வளர்மதி said...

பத்தி எழுதுறதுக்கே உங்களுக்கு (முந்தைய பதிவில்) அறிவுஜீவி பட்டம் கொடுத்துவிட்டிருக்கிறார்களே! :)))

நீங்களும் non - fiction ஆசாமி ஆயிடுவீங்க போலிருக்கே ;-)

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

சுந்தர்,

புகை பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது, இதை மீறி நீங்கள் புகை பிடிப்பீர்கள் என்றால் அட்லீஸ்ட் அடுத்தவர்களுக்கு அது தீங்கு இழைக்காமல் பிடியுங்கள் சொல்கிறோம்....இதை சொன்னால் நாங்கள் வன்முறையாளர்கள் என்றால்...வேண்டாம் விடுங்கள்...நான் ஏதாவது சொல்லபோய் மீண்டும் வேறு நல்ல பல பட்டங்களை கொடுப்பீர்கள்....

புருனோ Bruno said...

//யோசித்துப் பார்த்தால், எல்லா மனிதருக்கும் ஏதாவது ஒருவித போதை தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சிலருக்குக் குடி, சிலருக்கு சிகரெட், சிலருக்குக் குடும்பம், சிலருக்குப் படிப்பு, சிலருக்கு வேலை//

சிலருக்கு ஐஸ்க்ரீம், சிலருக்கு முக்கு குடைவது, சிலருக்கு சொறிவது, சிலருக்கு வலைப்பதிவு எழுதுவது.......


ஆனால் உங்கள் போதை அடுத்தவரை கொல்லக்கூடாது

அவ்வளவு தான்

Anonymous said...

The ban on smoking in public places was introduced in Kerala
some eight years ago as the Kerala High Court gave an order acting on
a Public Interest Litigation. It was implemented and smoking in
public places came down drastically. So the ban can be implemented and is good. It should be made more stringent by including places like parks
under public places where smoking
is banned. No airport in India has
a room where once can smoke. As far as I know it is the same in USA. In Europe many airports have a small room where one can smoke
but not in other places. But there
also in many countries there are
restrictions in smoking in public places. All this indicates that
in many countries smoking in public places is either banned or restricted. So try to adjust to this reality in the interest of all.Be a good boy :).

Anonymous said...

கொஞ்சம் விட்டால், என்னைக் கழுவிலேற்றிவிடுவார்கள் போல!

Noway, you are not that all important to be killed so :).

Anonymous said...

சுந்தர்,
நான் புகைப் பழக்கம் உடையவன். இந்த சட்டத்தை குறித்து யோசித்துப் பார்த்தால்... இப்படி ஒரு சட்டம் நான் கல்லூரியில் படித்து புகைக்க ஆரம்பித்த நாட்களில் இருந்திருந்தால் நான் புகைக்க ஆரம்பித்திருக்கவே மாட்டேன் எனத்தான் தோன்றுகிறது.
இனி வரும் காலத்து இளையவர்கள் இந்தப் பழக்கத்தில் விழாமல் இருப்பதற்கு இந்தச் சட்டம் மிகவும் உதவும்.

எல்லோருக்க்கும் ஒரு போதை தேவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். சிகரெட் பிடிப்பது கடினமாகப் பட்டால் வேறு ஒரு போதைக்கு அவர்கள் திரும்பக் கூடுமல்லவா... வலைப்பதிவது, புத்தகம் படிப்பது, என பல போதை ஆப்ஷனையும் அவர்கள் நாடக் கூடும்.

நம் பிள்ளைகள் இந்தப் பழக்கங்களில் விழாமல் இருக்க நாம் இந்த தியாகத்தை செய்யலாம்.

புகை பிடிப்பது நல்ல பழக்கம்தான் என நீங்கள் நினைப்பதாக நான் கருதவில்லை.

Anonymous said...

Thirudanai paarthu thirunthaavitaal thiruttai olikka mudiyaathu.

athu pola thaan pugaippavargal.

Sridhar Narayanan said...

அடுத்தப் பதிவுமா? ஒன்றே ஒன்றை மட்டும் பகிர்ந்துவிட்டு எனது விவாதத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

சுற்று சூழல் பாதுகாப்புக்காக சட்டம் இயற்றுவது ஒரு பகுதிதான். அதை உள்ளபடியே அமலாக்குவதும், பின்பற்றுவதும் அதன் தொடர்ச்சிகள். சிக்கல்கள் இருக்கிறது என்பதற்காக சட்டத்தையே கேள்விக்குறியாக்குவது எந்த மாதிரியான நிலை என்று தெரியவில்லை.

1. பொது இடங்களில் சிறுநீர் கழிக்ககூடாது. அது சுற்று சூழல் கேடு. நாகரீகமற்றது.

2. பொது இடங்களில் குப்பையை கண்டபடி வீசக் கூடாது. அதற்குண்டான குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும்.

இவற்றை எப்படி நடைமுறை படுத்துவது? பெரிய ஹோட்டல்களில் தனியாக பாத்ரூம், குப்பை தொட்டிகள் வைத்து விடுகிறார்கள். ஆனால் பொது இடங்களில் கழிப்பறைகள் குப்பை தொட்டிகள் இருக்கின்றனவா? மௌண்ட் ரோடு நடைபாதை சைக்கிள் கடைக்காரர் பாவம் நாள் பூராவும் தெருவோரம் பஞ்சர் போடுகிறார். அவர் இருக்கும் இடத்திலேயே சிறுநீர் கழிக்க வேண்டும். பக்கத்திலேயே குப்பை போட்டுக் கொள்ளவும் சுதந்திரம் இல்லையா? இப்படிக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.

சரி விடுங்கள். நமக்கு நமது சுதந்திரம் முக்கியம். சுற்று சூழல் மாசுபடுத்துதலை வலியுறுத்த வேண்டுமென்றால் இருக்கவே இருக்கிறது கோக் நிறுவனம். நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது என்று காரச்சாரமாக ஒரு கவிதையை தட்டிவிட்டால் கடமை ஆச்சு.

போதை தேவைதான். அதனால் புகையிலையை தடை செய்யவில்லை. வெற்றிலை மென்று வாஷ் பேசினில் துப்புங்களேன். ஏன் அடுத்தவர் மூஞ்சியில்தான் துப்புவேன் என்று அடம்பிடிக்கிறீர்கள்?

நடைமுறை சிக்கல்களினால் இந்த சட்டம் வலிமையற்றுப் போகுமாயின் இழப்பாளிகள் நாம்தானே.

சிகரெட் புகையை விட வாகனப் புகை ஆயிரம் மடங்கு கொடியது என்று சொல்கிறீர்கள். எப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஏதாவது ஆராய்ச்சி, தரவு என்று இருக்கிறதா?

வேறு என்ன சொல்ல?

செல்வன் said...

//புகையிலைக்கு முற்றாகத் தடையென்றால், முடிந்தால், நடத்திக் கொள்ளுங்கள். அது இந்தியா என்றில்லை, உலகில் எங்குமே நடக்க முடியதாது. ஆனால் இப்படி மதுக்கூடங்களில், பேருந்து நிலையங்களில் தடை, விமான நிலையங்களில், நட்சத்திர விடுதிகளில் அனுமதி எனக் காமெடி செய்யாதீர்கள்.//

இதில் என்ன காமடி? "உலகில் எங்குமே நடக்க முடியாதது" என நீங்களே கூறும் புகையிலை தடை அல்லது "எல்லா இடத்திலும் புகைபிடிக்க அனுமதி" என்ற இரு வாய்ப்புகளை மட்டுமே நீங்கள் அரசுக்கு வழங்குகிறீர்கள்.Hobsons choice என்றால் இதுதான் போல:-)

//சிலர் லாஜிக்கலாக மடக்குகிறார்கள். எலிவேட்டர்கள் பேருந்து நிலையங்களில் இருக்கிறதா என்று. ஐயா, பேருந்து நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் முதலில் புகைக்க அனுமதியிருந்தது, இப்போது விமான நிலையங்களில் மட்டும் இருக்கிறது. இதுதான் என்னுடைய கேள்வி.//

அப்படி இருந்தால் அது பேருந்து பயணிகளுக்கு தான் நல்லது.அவர்கள் ஆரோக்கியம் மேலோங்கும்.விமான பாணிகளின் ஆரோக்கியம் அழியும்:-)

ஐயா..தமிழ்நாட்டில் இருப்பது நாலைந்து விமான நிலையம்.அதே சமயம் லட்சக்கணகான பஸ்ஸ்டாப்புகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.விமான நிலையத்தில் இருக்கும் எல்லா வசதியும் பஸ் ஸ்டாப்பில் ஏற்படுத்த முடியாது.சோஷலிசம் பேசும் தேசங்கள் கூட அப்படிப்பட்ட சமத்துவத்தை ஏற்படுத்தியதில்லை."விமான நிலையத்தில் ஒரு வசதி இருக்கிறது,பஸ் நிலையத்தில் இல்லை" என்பது அடிப்படையிலேயே பிழையான வாதம்.பஸ்ஸ்டாப்,பஸ்ஸ்டாப்பாக புகைபிடிக்கும் நிலையங்களை கட்டிக்கொண்டிருக்க மாநகராட்சிகளிடம் நிதி வசதி கிடையாது.இது ஏழை தேசம் சாமி.

//அடிப்படையில், நாம்செய்யும் பலசெயல்கள் அடுத்தவர்களைப் பாதிப்பவையே. குறைந்தபட்ச நேர்மை / அறம் என்ற அளவிலேயே இந்தப் பிரச்சனையை அணுக முடியும் என நினைக்கிறேன்.
!!//

பொது இடங்களில் நமது ஐந்து நிமிட இன்பத்துக்கு ஊதுவதால் அடுத்தவனுக்கு கேன்சர் வருவது குறைந்தபட்ச அறப்படி தவறாகாதா?

//சிலர் எல்லாவற்றையும் நல்லது / கெட்டது என்ற இருமைகளுக்குளேயே பார்க்கப் பழகிவிட்டார்கள். ஒருவிதத்தில் அவர்கள் பாக்கியவான்கள்.//

"கர்ப்பமா இல்லையா" என்ற கேள்விக்கு 'ஆம்,இல்லை' என்ற எதோ ஒரு பதிலைத்தான் சொல்லமுடியும்.நடுநிலை வகிக்க முடியாது.

'பேஸிவ் ஸ்மோக்கிங் தடுக்கப்படவேண்டுமா,அனுமதிக்கப்படவேண்டுமா' என்பதற்கும் 'ஆம்,இல்லை' என்று ஏதோ ஒரு பதிலைத்தான் சொல்ல முடியும்.,நடுநிலை வகிக்க முடியாது:-)

செல்வன் said...

//ஒருவர் (இவர் வக்கீல் என நம்புகிறேன்), போலிஸுக்குப் பயந்தால் வீட்டில் (அதுவும் கதவைச் சாத்திக் கொண்டு!) சிகரெட் பிடியுங்கள் என்கிறார். (பேருந்துகளில் ஏன் இடிக்கறீங்க என்றால், இடிக்கக்கூடாதுன்னா ஆட்டோல போகவேண்டியதுதானே எனச் சில இடிமன்னன்கள் சொல்வது ஏனோ நினைவில் வந்து தொலைக்கிறது!). //

"பொது இடங்களில் அப்படித்தான் சிகரெட் குடிப்பேன்.உனக்கு கான்சர் வந்து நீ செத்தா எனக்கு கவலை இல்லை" என்று கூறுபவர்கள் தான் எனக்கு இடிமன்னர்களை நினைவுபடுத்துகிறார்கள்:-)

இடிமன்னர்களை போலிஸ் பிடிப்பது யதேச்சதிகாரம் இல்லை என்றால்,இடிப்பது 'சரி,தவறு' என்ற இரு கண்ணோடங்களில் மட்டுமே பார்க்ககூடிய குற்றம் இல்லையென்றால் புகைபிடிப்பதையும் அதே அளவுகோளில் பார்க்கலாம்.

ஒப்பீட்டளவில் இடிராஜக்களால் மானம் போகிறது.பேஸிவ் ஸ்மோக்கிங்கால் உயிர் போகிறது .பஸ்ஸ்டாண்டுகளுக்கு வரும் பயணிகளின் உயிரையும்,மானத்தையுஜ்ம் இரண்டையுமே காப்பது அரசின் கடமையாகிறது அல்லவா?:-)

D.R.Ashok said...

I accept your last 2 post..... 200%


Kalachara kavalarkalai marathunthu.... thodarthu ezhudhungal

D.R.Ashok said...

For third Anony- sundar solra . vishayam ... yarukkum purila....
(indha sattathinal varum sadhaga pathagangal)

Nam pillai dum adikka kudathu dhan....
Aanal naan pidithale meter podum...police...nam pillai meesai thulirkkkum vayadhil pidithal.... andha neeram maasa kadasiyai irundhal... avanidam karakkum police...appodu avanidam paisa (rupa dhan)ellai yendral...?

wat happen?

This is our nilamai....
US / Uk is different .... (just watch 'just for laughs') ... how they react in JFL... just compare how we(Indians) react??????

Hope u understand!!!
otherwise... sundar have to give another post elaborately...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பின்னூட்டங்களை இயன்றால் தமிழில் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

King... said...

நான் சிகரெட் பழக்கம் இருக்கிற ஒருவன் என்பதைத்தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை அண்ணன்...

King... said...

\\
சிலர் எல்லாவற்றையும் நல்லது / கெட்டது என்ற இருமைகளுக்குளேயே பார்க்கப் பழகிவிட்டார்கள். ஒருவிதத்தில் அவர்கள் பாக்கியவான்கள்.
\\

!!!
:))

மணிகண்டன் said...

சுந்தர்,

நான் இருக்கறது நேதேர்லாந்து. இங்க கடந்த 25 வருஷமா போதைமருந்துகள தடை செய்யனுமா வேணாமான்னு விவாதிச்சுக்கிட்டு இருக்காங்க. தனிமனித சுதந்திரத்த ரொம்பவே நம்பறவங்க. அரசாங்கத்தால போதை மருந்துகள தடை செஞ்சி ஒரு சட்டம் போட முடியல. ஏன்னா அது எதேச்சிகாரமா நினைச்சாங்க. (தனிமனித சுதந்திரத்துக்கு எதிரா). ப்ரோத்தல் ஹௌஸ் பக்கத்துல கிண்டர் கார்டன் வச்சி இருக்காங்க. அதுக்கும் தடை எல்லாம் போடல. prostitution legalize பண்ணி இருக்காங்க. prostitutesa மெடிக்கலா sexual diseasesukku செக் பண்றது இல்ல. ஏன்னா வரும் customer செக் பண்ண முடியாத போது இவங்கள மட்டும் செக் பண்ணினா அது அவங்களோட சுதந்திரத்துல தலையிடும் மாதிரி ஆகிடும்ன்னு.

இப்படி எல்லாம் இருந்தும் இந்த வருஷ ஆரம்பத்துலேந்து உணவகத்துல, பப்ஸ்ல புகை பிடிக்க தடை செஞ்சி இருக்காங்க. அத யாரும் எதேச்சிகாரமா நினைக்கல. ஏன்னா புகை பிடிக்காதவங்களோட சுதந்திரத்துல சிகரட் புகை தலையிடரதுனால ! அத ஏன் நீங்க புரிஞ்சிக்க மறுக்கறீங்க ?

ராவணன் said...

புகை ஊதுபவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லையா?புகைப்பவர்கள் கையில் ஒரு நாள் ஆட்சியும் அதிகாரமும் வரும்.அப்போது,அனைவரும் புகைக்க வேண்டும் என சட்டம் இயற்றவேண்டும்.

புருனோ Bruno said...

//சிலர் எல்லாவற்றையும் நல்லது / கெட்டது என்ற இருமைகளுக்குளேயே பார்க்கப் பழகிவிட்டார்கள். ஒருவிதத்தில் அவர்கள் பாக்கியவான்கள்.//

அனைவரின் உடல் நலனை காக்கும் சட்டத்தை விமான நிலையம் / பேரூந்து நிலையம் என்ற இருமைகளுக்குள்ளேயே பார்க்கும் பாக்கியவான்கள் பேறு பெற்றோர்

ச.சங்கர் said...

////செல்வன் said...

"கர்ப்பமா இல்லையா" என்ற கேள்விக்கு 'ஆம்,இல்லை' என்ற எதோ ஒரு பதிலைத்தான் சொல்லமுடியும்.நடுநிலை வகிக்க முடியாது./////

செல்வன்

முதலிரவு முடிந்த மறுநாளே கேட்டால் என்ன சொல்ல முடியும்?
ஆமென்றா அல்லது இல்லை என்றா :)டென்டேடிவ் ஆகத்தான் சொல்ல முடியும்.

அதனால் உதாரணத்தை மாற்றி விடுங்கள் :)

Anonymous said...

உங்கள் போதைக்கு அடுத்தவர்களை ஊறுகாய் ஆக்காதீர்கள்

‍ நகுல்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, நாமக்கல் சிபி.

நன்றி, வளர்மதி. ஐயோ, நானும் நான் ஃபிக்ஷன் ஆசாமியா :)

நன்றி, கணேஷ்.

நன்றி, முரளி கண்ணன்.

நன்றி, ரமேஷ்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அருண் நிஷோர் பாஸ்கரன்.

நன்றி, டாக்டர். திரும்பத் திரும்பக் கொலை, கொலைகாரன் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இதன் நீட்சியாய்த் தூக்கிலடச் சொல்லி வேண்டுகோள் வரலாம். இதைத்தான் வன்முறை என்கிறேன்!

அனானி நண்பர்களுக்கு நன்றி.

Anonymous said...

ஒரே அபத்தத்தை இரண்டு முறை எழுதியிருக்கும் உங்கள் துணிச்சலைப் பாராட்டுகிறேன் ;-)

சட்டம் செயலாக்கப்படாமல் போகலாமென்பது உங்களுக்கு ஆறுதல் தருவது போல இப்படி ஒரு சட்டம் வந்திருப்பது மற்றவ்ரக்ளுக்கும் ஆறுதல் தருகிறது. அதையே யதேச்சதிகாரம் என்ற பெயரில் குறுக்க நினைக்கும் உங்களைத்தான் வன்முறையாளராகக் கருத வேண்டியிருக்கிறது.

மரியாதையாக சிகரெட்டை விட்டுத் தொலையுங்கள். (இது நிசம்மாகவே அன்பு மிரட்டல்;-)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஸ்ரீதர் நாராயணன், இதுதான் கடைசி :)

நன்றி, செல்வன். பேஸிவ் ஸ்மோகிங்கால் கேன்சர் வரும், மரணம் வரும் என்பதையே சொல்கிறார்கள். அந்த அளவிற்கு ஆபத்தான விஷயமென்றால் முற்றாகத் தடைசெய்ய வேண்டியதுதானே.. எனக்கென்னவோ அதிகப்படுத்திச் சொல்வதாகப் படுகிறது.

நீங்கள் கொடுத்த உதாரணம்.. :) சரி, பரவாயில்லை, உங்களுக்கு உங்கள் வழி, எனக்கு என் வழி. இதில் சரியான வழி, ஒரே வழி என்ற எந்தப் புண்ணாக்கும் கிடையாது :)

நன்றி, அசோக்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கிங்.

நன்றி, மணிகண்டன்.

நன்றி, ராவணன். செஞ்சுருவோம் :)

நன்றி, சங்கர்.

நன்றி, நகுல். இதே விஷயத்தை எவ்வளவு பேருய்யா சொல்வீங்க :(

நன்றி, அண்ணாச்சி.

ரோஜா காதலன் said...

முடிந்தால் விஞ்ஞானரீதியாக புகைப்பழக்கத்தைப் பற்றி தெரிந்து கொண்டு பதிவெழுதுங்கள்.

மாற்று கருத்து, தனிமனித சுதந்திரம், இவை அனைத்தையும் மதிக்கிறேன். எந்த சூழ்நிலையிலும், புகைப்பழக்கத்தை மனிதர்கள் மறக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. உங்களுக்கும் இதே கருத்து தான் இருக்கவேண்டும் என்றில்லை. ஆனால் விஞ்ஞானப்பூர்வமாக கேடு என்று நிருபிக்கப்பட்ட புகைப்பழக்கத்தை மட்டுப்படுத்தும் முயற்சிகளையும் தவறாக விமர்சிக்காதீர் !

வால்பையன் said...

இன்னும் முடியலையா!

வளர்மதி said...

வேறு வழியில்லை சுந்தர், எனக்கும் ஸ்டாம்ப் குத்த ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு, குத்திடறேன் ... நீங்க non - fiction ஆசாமிதான் ;)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ரோஜா காதலன். ஒன்னும் சொல்றதுகில்ல :)

நன்றி, வால்பையன். முடிஞ்சுருச்சு :)

நன்றி, வளர்மதி. நீங்களுமா :)

தம்பி said...

அடுத்து சரக்கு அடிக்க கூடாது என்ற சட்டம் போடுவார்களா? இல்ல அப்படி போடத்தான் முடியுமா...

புருனோ Bruno said...

//நான் புகைப் பழக்கம் உடையவன். இந்த சட்டத்தை குறித்து யோசித்துப் பார்த்தால்... இப்படி ஒரு சட்டம் நான் கல்லூரியில் படித்து புகைக்க ஆரம்பித்த நாட்களில் இருந்திருந்தால் நான் புகைக்க ஆரம்பித்திருக்கவே மாட்டேன் எனத்தான் தோன்றுகிறது.
இனி வரும் காலத்து இளையவர்கள் இந்தப் பழக்கத்தில் விழாமல் இருப்பதற்கு இந்தச் சட்டம் மிகவும் உதவும்.//

இதைத்தான் இந்த சட்டம் எதிர்ப்பார்க்கிறது

புருனோ Bruno said...

//பொது இடங்களில் நமது ஐந்து நிமிட இன்பத்துக்கு ஊதுவதால் அடுத்தவனுக்கு கேன்சர் வருவது குறைந்தபட்ச அறப்படி தவறாகாதா?
//

நச்

புருனோ Bruno said...

//இப்படி எல்லாம் இருந்தும் இந்த வருஷ ஆரம்பத்துலேந்து உணவகத்துல, பப்ஸ்ல புகை பிடிக்க தடை செஞ்சி இருக்காங்க. அத யாரும் எதேச்சிகாரமா நினைக்கல. ஏன்னா புகை பிடிக்காதவங்களோட சுதந்திரத்துல சிகரட் புகை தலையிடரதுனால ! அத ஏன் நீங்க புரிஞ்சிக்க மறுக்கறீங்க ? //

அப்படிப்போடுங்க :) :)

புருனோ Bruno said...

//முதலிரவு முடிந்த மறுநாளே கேட்டால் என்ன சொல்ல முடியும்?
ஆமென்றா அல்லது இல்லை என்றா டென்டேடிவ் ஆகத்தான் சொல்ல முடியும். //

அது முதலிரவு என்றால் கண்டிப்பாக இல்லை என்று கூறலாம். 8ஆம் நாள் தான் உறுதிபடுத்த முடியும்

புருனோ Bruno said...

//ஒரே அபத்தத்தை இரண்டு முறை எழுதியிருக்கும் உங்கள் துணிச்சலைப் பாராட்டுகிறேன் ;-) //

அண்ணாச்சி அசத்தி புட்டீங்க :)

புருனோ Bruno said...

//அடுத்து சரக்கு அடிக்க கூடாது என்ற சட்டம் போடுவார்களா? இல்ல அப்படி போடத்தான் முடியுமா...//

தம்பி,

ஏற்கனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று சட்டம் இருக்கிறது.

இங்கும் அதே உதாரணம் தான்

அளவிற்கு அதிகமாக மது அருந்துவது - பத்தாவது மாடியில் இருந்து குதிப்பது போல்

(கவனிக்கவும் - இரு மாற்றங்கள் 1. அளவிற்கு அதிகமாக 2. பத்தாவது)

மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டுவது - இருபதாம் மாடியில் இருந்து அனைவரயும் தள்ளிவிட்டு குதிப்பது.

மது அருந்தியபின் வீட்டில் தூங்குபவர்களால் சமூகத்திற்கு எந்த தீங்கும் கிடையாது

ஆனால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தவறுதானே

அதைத்தான் சட்டம் சொல்கிறது

அரை டிக்கெட்டு! said...

சுந்தர்,

நான் சட்டத்தைப் பற்றி வியாக்கியானம் செய்ய வரவில்லை. அது தேவையுமில்லை. எந்த ஒரு சட்டத்தையும் அது எந்த வர்க்கத்திர்கு சேவை செய்கிறது என ஆய்வது தவறில்லை. அதுதான் சரியானது. ஆனால் அதற்கு மாற்று என்ன என்று நாம் முடிவு செய்தாக வேண்டும். முதலாளித்துவ அரசு வேண்டாம் என கூறும் போதே மாற்றாக சோசலிச அரசு வேண்டும் என கூறுவது தான் பொறுத்தமானது. அது போல நீங்கள் இந்த சட்டம் எதேச்சிகாரமானது என கூறும் போதே இந்த சட்டம் விளைவிக்க நினைப்பதை சாத்தியமாக்க வேறு என்ன வழிமுறையை பின்பற்றலாம் என கூறுங்களேன்.

நீங்கள் புகைக்க கூடாது என நான் கூற எனக்கு உரிமையில்லைதான் அதே வேளையில் புகைக்காமல் நான் இருக்கும் இடத்தில் நீங்கள் புகைத்தால், அந்த புகையை நான் நுகறும் படி செய்தால், நீங்கள் அனைக்காமல் என்னை அவ்விடத்தை விட்டு ஓடச்செய்தால் இவையெல்லாம் ( தர்க்கத்திற்காக) எதேச்சதிகாரம் / உரிமை மீரல் இல்லையா? எதையும் எப்படியும் வாதம் செய்யலாம், நமக்கு தேவை சரியான, நியாயமான விளைவு.

தலைக்வசம் அணியும் சட்டம் கூட நீங்கள் கூறியுள்ள எதேச்சதிகாரம் விளக்கத்தில் வரும்.போலீசுக்கு மாமூல் சுரங்கம். சட்டத்தை பின்பற்றாமல் தினமும் இறக்கும் இளம் உயிர்களை பற்றி நீங்கள் படிப்பதில்லையா, தலைக்கவசம் அணியாமல் பைக்கில் அலப்பறை செய்யும் இளைஞர்களை பார்க்கும் பொழுது எனக்கு அரைய வேண்டும் போல் உள்ளது. அது எனது ஆணவமா, எவன் எக்கேடுகெட்டால் எனக்கென்ன என இருந்து விடலாமா? இதுதான் நம் சமூக பொறுப்பா?

அன்புமணி சட்டத்தை மதித்து நீங்கள் எதுவும் செய்ய வேண்டியது இல்லை ஆனால் உங்கள் பக்கத்து வீட்டு சிறுமியின் நுறையீரலை உங்கள் புகை பாதிக்கிறது என்றால் கொஞ்சம் விலகிப் போவதில் என்ன தவறு? இது மனிதாபிமானம் இல்லையா. இதில் வர்க்க அரசியல் எங்கே இருக்கிறது?

நம் நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான கொடுமைகள் தினந்தோரும் அரங்கேருகின்றன. உங்களுடைய ஆற்றலை அந்த அநீதிகளுக்கெதிறாக எழுதுவதன் மூலமும் நடைமுறை அரசியலில் செயல்படுவதன் மூலமும்
வளர்த்துக்கொள்ளுங்கள்.

இந்தப் பிரச்சனையை விட்டுவிடுங்கள்.

உங்களுக்கு தேவையாயின் நான் இறைஞ்சி கேட்டுக் கொள்கிறேன்

ஐயா இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் தயவு செய்து பொது இடங்களில் புகைக்காதீர்கள. நீங்கள் புகைப்பதினால் புகைகாத நாங்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறோம்.......

இப்படிக்கு வாழ்நாளில் பாதிக்கு மேல் புகைத்து, புகையை நிறுத்தி, இன்று மற்ற புகைப்பவர்களால் துன்ப்ப்படும் போது மற்றவர்களுக்கு நான் இழைத்த அநீதியை நினைத்து வெட்கித் தலைகுனியும் உங்கள் நலம் விரும்பி.