சில கேள்விகள், சில பதில்கள்

முதலில் : சினிமா பற்றிய கள ஆய்விற்காக சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இணையத்தைப் பாவிப்பவர்கள், அதிலும் தமிழில் எழுதுபவர்கள் மிகக்குறைவே - மிகச் சிறிய segment. சரியாய் வருமா என யோசித்துப் பார்க்கலாம். மற்றபடி இக்கேள்விகளை எழுப்பி விடைதேடுவது சுவாரசியமான விளையாட்டுதான்.

நான் நிறைய சினிமா பார்ப்பவன் இல்லை. தொலைக்காட்சி சினிமாக்களைக் கூட எப்போதாவதுதான் பார்ப்பேன் (25 வயதுவரை வாரம் ஒரு சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன், பிறகு என்ன காரணத்தினாலோ குறைந்துவிட்டது). அதனாலேயே நர்சிம் கூப்பிட்டபோது வேறு ஒருவரைக் கூப்பிடச் சொல்லியிருந்தேன். குறைவாகப் பார்த்தாலும் சினிமா பார்க்கும் வகைக்குள்தான் நானும் வருவேன் என்பதால் இப்போது இப்பதிவு. கூப்பிட்ட நர்சிம் & வால்பையனுக்கு நன்றி.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ஐந்து அல்லது ஆறு வயதிலிருந்து. அம்பத்தூரில் இருக்கும் ரங்கா டூரிங் கொட்டாயில் ஒரு எம்ஜிஆர் படம். முன்-வரிசையில் மண் தரையும் பின்னால் கையில்லா மடக்கு நாற்காலிகளும் கொண்ட கீத்துக் கொட்டாய் திரையரங்கம். ஒரே சத்தமாக இருந்த நினைவு. நடுநடுவில் விற்றுக் கொண்டிருந்த திண்பண்டங்களைக் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்த ஞாபகம்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சிவாஜி. அதற்குமுன் பாபா. சாதாரணமாக ரஜினி படங்களைத் திரையரங்கிலோ அல்லது வேறு மார்க்கத்திலோ பார்த்துவிடுவேன். இன்னும் குசேலன் பார்க்கவில்லை.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சுப்ரமணியபுரம், டீவீடி, வீட்டில். குடும்பம் / காதலி / நண்பனின் துரோகம்தான் பிரதானமாய்த் தெரிந்தது. சிறுபொன்மணி அசையும் பாடல் பழைய ஞாபகங்களைக் கிளறியது.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

ரத்தக் கண்ணீர்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ரஜினியின் அ-அரசியல் பிரவேசம் 1995ல். லும்பன்களின் அரசியல் பற்றி ஜெயமோகன் தினமணியில் எழுதியிருந்தது ஞாபகம் இருக்கிறது. லும்பன்கள்தான் வந்துட்டுப் போகட்டுமே என்றுகூடத் தோன்றியது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

எதுவும் தாக்கியதில்லை.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எப்போதாவது. நிழல் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தேன். கனவு இதழ்களில் வரும் கட்டுரைகளையும். மற்றபடி அங்கொன்றும் இங்கொன்றுமாக சாரு, யமுனா எழுதும் கட்டுரைகளே அதிகம் வாசிப்பவை.

சினிமா பற்றிய புனைவெழுத்துகளை நிறைய வாசித்திருக்கிறேன். சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, அசோகமித்திரனின் நாவலொன்று, பல சிறுகதைகள்.

7. தமிழ்ச்சினிமா இசை?

தினமும் தொலைக்காட்சியில் காலையில் சிறிது நேரம் பார்த்துக் கேட்பதுதான் (காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு. அப்ப படிப்பா? டாய்லட்டில் செய்தித்தாள்கள்தான்!). இளையராஜா, ஏ ஆர் ரகுமான் பாடல்கள் பிடிக்கும். 18 - 20 வயதில் சினிமா மெட்டுகளுக்குப் பாட்டெழுதிப் பார்த்திருக்கிறேன். அதற்கும் முன்னர், பள்ளிப் படிப்பின்போது சினிமா பாடல் வார்த்தைகளைப் பாலுறுப்பு வார்த்தைகள், ‘கெட்ட' வார்த்தைகள் கொண்டு பதிலீடு செய்து பாடுவது ஒரு fun.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

சத்யஜித்ரேயின் சில படங்கள் தொலைக்காட்சியில் இரவுநேரத்தில் தொடர்ந்து காட்டியபோது பார்த்திருக்கிறேன். உலக சினிமா என்றால் புரூஸ் லீ, ஜாக்கி சான், ஜெட் லீ, குங்ஃபூ ஆஃப் செவன் ஸ்டெப்ஸ், 36th சேம்பர் ஆஃப் ஷாவலின் மாதிரியான படங்களே அதிகம் பார்த்தது. கோடார்டின் here and elsewhere அப்புறம் அகிரா குரசாவாவின் சில படங்களும் - அவரின் பல படங்களை ஒரு வார காலத்திற்கு chennai film society மூலமாக Russian Cultural Centre-ல் திரையிட்டபோது - ஆண்டு 1994).

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

1995ல் ஒரு படத்திற்கு வசனம் எழுத உதவினேன்; பெரிதாக இல்லை. கொஞ்சம் தான். அதன் வசன கர்த்தா - தயாரிப்பாளர் நண்பர் என்பதால் இதைச் செய்தேன். பிடித்திருந்ததாகத்தான் நினைவு. படம் வெளியாகி தோல்வியடைந்தது. பிறகு வேறெதுவும் இல்லை. மீண்டும் செய்யும் எண்ணமில்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தெரியலீங்களே :)

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்குப் பெரிதாக பாதிப்பிருக்காது.

சிலர் புணர்ச்சிக்கு புதிது புதிதான மன பிம்பங்கள் கிடைக்காமல் திண்டாடலாம். ஊடகங்கள் பரபரப்பிற்கு வேறு ஏதாவது தேட வேண்டியிருக்கும். சினிமாவை நம்பி இயங்குபவர்கள் திண்டாடிப்போவர். இந்தி சினிமா தமிழகத்தை ஆட்கொள்ளும் அபாயம் ஏற்படலாம்.

ஐந்து பேரைக் கூப்பிடணுமா.. சரி...

1. டிபிசிடி
2. கென்
3. டி ஜே தமிழன்
4. சுகுணா திவாகர்
5. மோகன் கந்தசாமி

11 comments:

LOSHAN said...

சுருக்கமாக சுவையாக இருக்கிறது.. கடைசிக் கேள்விக்கான பதில் சிந்திக்கவைக்கிறது.. ;)
உங்கள் சினிமா பார்க்கும் ஆர்வம் என் குறைந்தது என்று கொஞ்சம் சிந்தித்து ஒரு பதிவு தந்தால் என்ன?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, லோஷன். பெரிய காரணங்கள் ஒன்றுமில்லை :)

கென்., said...

1995ல் ஒரு படத்திற்கு வசனம் எழுத உதவினேன்; பெரிதாக இல்லை. கொஞ்சம் தான். அதன் வசன கர்த்தா - தயாரிப்பாளர் நண்பர் என்பதால் இதைச் செய்தேன். பிடித்திருந்ததாகத்தான் நினைவு. படம் வெளியாகி தோல்வியடைந்தது. பிறகு வேறெதுவும் இல்லை. மீண்டும் செய்யும் எண்ணமில்லை.


இப்போது நீங்கள் முழு கதை வசனகர்த்தவாகி விடலாம் என்பதை உங்கள் கதைகளை வாசிப்பதால் சொல்கிறேன்

:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கென்.

Anonymous said...

இன்னும் குசேலன் பார்க்கவில்லை.

?!?

Sorry to hear that you haven't watched the Oscar winning movie of 2008! hehe ;-)

அனுஜன்யா said...

//பள்ளிப் படிப்பின்போது சினிமா பாடல் வார்த்தைகளைப் பாலுறுப்பு வார்த்தைகள், ‘கெட்ட' வார்த்தைகள் கொண்டு பதிலீடு செய்து பாடுவது ஒரு fun.//

அப்பவே துவங்கி விட்டதா *** க(வி)தைகளும் 'மொழி' விளையாட்டும்!

ஒரு இலக்கியவாதி அல்லது நல்ல வாசகன், உலகத்தர திரைப்படங்களின் தீராத ரசிகனாகவும் இருப்பது அவசியம் என்று நினைக்கிறேன். நீங்கள்?

பெரிய தலைகளைத் தான் கூப்பிட்டு இருக்கிறீர்கள். பார்ப்போம்.

அனுஜன்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அனானி & அனுஜன்யா.

வால்பையன் said...

நன்றி

பொதுவான பதிவிலும் உங்கள் டச் தெரிய விரும்பி தான் உங்களை அழைத்தேன்

பொடியன்-|-SanJai said...

இந்த தலைப்பில் வந்து “மிகச் சிரிய” ரசனையான பதிவு.. :))

//இன்னும் குசேலன் பார்க்கவில்லை.//

பாக்கியசாலி :))

Ramesh said...

Nice details.

//1995ல் ஒரு படத்திற்கு வசனம் எழுத உதவினேன்//

Name?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வால்பையன், பொடியன், ரமேஷ்... நன்றி.