Signs and Symbols - நபக்கவ் (3)

III

புழங்கும் அறையிலிருந்து அவள் கணவர் முனகுவதைக் கேட்டபோது நடுநிசிக்கு மேலாகியிருந்தது. அவர் தடுமாறியிடபடி உள்ளே நுழைந்தார். தன்னுடைய இரவு உடைக்குமேலே பழைய அஷ்ட்ரகன் காலரோடுகூடிய ஓவர்கோட் அணிந்திருந்தார் - இதைத்தான் அவர் தன்னுடைய அழகான நீலநிற குளியலறை ஆடையைவிட விரும்பி அணிவார்.

”என்னால் தூங்கமுடியவில்லை” என்று அவர் கதறினார்.

”ஏன், எதனால் தூங்க முடியவில்லை... நீங்கள் களைத்துப் போயிருக்கிறீர்களே...”

“நான் செத்துக் கொண்டிருப்பதால், என்னால் தூங்க முடியவில்லை...” என்று சொன்னவாறு இருக்கையில் படுத்தார்.

“வயிறு பிரச்சனை செய்கிறதா? டாக்டர் ஸோலாவை அழைக்கட்டுமா..?”

”டாக்டர்கள் வேண்டாம்...” என்று முனகியவர், “நாசாமாய்ப் போன டாக்டர்கள். நாம் உடனே அங்கிருந்து அவனைக் கொண்டுவந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் நாம்தாம் பொறுப்பாளிகள். பொறுப்பாளிகள்!” திரும்பத் திரும்பச் சொல்லியபடி, தரையில் சுருண்டு அமர்ந்து கொண்டார். முஷ்டியால் தன் நெற்றியில் அடித்துக் கொண்டார்.

“சரி, நாளைக் காலை அவனைக் கொண்டு வந்துவிடுவோம்...” என்றாள் மெதுவாக.

”எனக்குக் கொஞ்சம் டீ கொடேன்..:” என்றபடி பாத்ரூமிற்குச் சென்றார்.

இருக்கையிலிருந்து கீழே விழுந்திருந்த சில சீட்டுக்கட்டுகளையும், ஒன்றிரண்டு படங்களையும் அவள் கீழே கஷ்டப்பட்டு குனிந்து எடுதாள் - நேவ் ஆஃப் ஹார்ட்ஸ், ஸ்பேட் ஒன்பது, ஸ்பேட் எஸ் மற்றும் எல்ஸாவும் அவளது அருவருப்பான சொகுசுக்காரனும். அவர் உற்சாகமாகத் திரும்பி, உரக்கச் சொன்னார் :

”நான் எல்லாவற்றையும் தீர்மானித்து விட்டேன். படுக்கையறையை அவனுக்குக் கொடுத்துவிடுவோம். நாம் இருவரும் மாறி மாறி இரவை அவனருகிலும் இந்த இருக்கையிலுமாகக் கழிப்போம். வாரத்தில் இரண்டு தடவை மருத்துவரை வந்து அவனைப் பார்க்கச் செய்யலாம். இளவரசன் என்ன சொல்வான் என்பது பிரச்சனையில்லை - அப்படி அவன் எதுவும் சொல்ல வாய்ப்பில்லை, இந்த ஏற்பாடு சிக்கனமாகவும் இருக்கிமில்லையா...”

தொலைபேசி ஒலித்தது - அவர்களுக்கு அது வேளையற்ற வேளை. அவரது இடது கால் செருப்பு கழன்றுபோயிருந்தது. குதிகால்கள் மற்றும் விரல்களால் அதைத் துழாவியவாறு நடுஅறையில் அவர் நின்று கொண்டு, குழந்தைத்தனமாக, பொக்கை வாயைக் காட்டியபடி மனைவியைப் பார்த்தார். அவரைவிட ஆங்கிலம் அதிகம் தெரியுமென்பதால், அவள்தான் தொலைபேசி அழைப்புகளை எடுப்பது.

“சார்லியிடம் நான் பேச முடியுமா” ஒரு பெண் சோம்பலாக, மெல்லிய குரலில் கேட்டாள்.

”என்ன நம்பர் உங்களுக்கு வேண்டும்.. மன்னிக்கவும், இது ராங் நம்பர்”

ரிஸீவரை மெதுவாக வைத்த அவள் கரம் தனது முதுமையான இதயத்தைத் தொட்டது.

அவர் சட்டென்று புன்னகைத்துவிட்டு, தனது கிளர்ச்சியான தனிமொழியைத் தொடர்ந்தார். விடிந்ததும் அவனைக் கூட்டி வருவார்கள். கத்திகள் பூட்டிய இழுப்பறைக்குள் வைக்கப்பட வேண்டும். அவன் தன் மோசமான நிலையிலும்கூட யாருக்கும் பயத்தைக் கொடுத்ததில்லை.

தொலைபேசி மணி இரண்டாம் முறையாக அடித்தது. அதே தொனியற்ற ஆர்வமான குரல் சார்லியைக் கேட்டது.

”நீங்கள் தவறான எண்ணை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்கிறேன் : பூஜ்ஜியத்திற்குப் பதிலாக O என்ற எழுத்தை அழுத்துகிறீர்கள்...”

அவர்கள் முன் தீர்மானிக்கப்படாத நள்ளிரவு டீ பார்டியில் அமர்ந்தனர். பிறந்தநாள் பரிசு மேஜை மேல் இருந்தது. அவர் சத்தமாக உறிஞ்சினார்; முகம் சிவந்துவிட்டது; சர்க்கரை நன்றாகக் கரைய அவ்வப்போது கோப்பையை மேலுயர்த்தி சுழற்றினார். அவரது வழுக்கைத் தலையின் பக்கவாட்டிலிருந்த அந்த மச்சமிருக்கும் இடத்தின் எலும்பு எடுப்பாகத் தெரிந்தது. அன்று காலையில்தான் மழித்திருந்தார் என்றாலும், வெள்ளி ரேகைகள் அவரது முகவாயில் தெரிந்தன. அவள் இன்னொரு கோப்பை தேனீரை ஊற்றியபோது, அவர் தனது கண்ணாடிகளை அணிந்து கொண்டு, மஞ்சள், பச்சை, சிகப்பில் பிரகாசமாகத் தெரிந்த சிறு ஜாடிகளைப் பரிசீலிக்கத் தொடங்கினார்.அவரது தடுமாறும் ஈர உதடுகள் அவற்றின் பிரதானமான லேபிள்களை உச்சரித்துப் பார்த்தன : ஆப்ரிகாட், கிரேப், பீச் பிளம், க்வின்ஸ். அவர் ஆப்பிளைக் கையிலெடுக்க முயன்றபோது, தொலைபேசி மணி மறுபடியும் அடித்தது.

(முற்றும்)

முதல் இரண்டு பாகங்களை இங்கு வாசிக்கலாம் :

http://jyovramsundar.blogspot.com/2009/07/signs-and-symbols.html
http://jyovramsundar.blogspot.com/2009/07/signs-and-symbols-2.html

இதன் ஆங்கிலப் பிரதியை இங்கு வாசிக்கலாம் :

http://www.angelynngrant.com/nabokov.html

Signs and Symbols - நபக்கவ் (2)

II

இரைச்சலும் நாற்றமுமாய் இருந்த பாதாள ரயில் நிலையத்தைவிட்டு அவர்கள் வெளியே வந்த போது, பகலின் மிச்ச வெளிச்சம் தெரு விளக்குகளுடன் கலந்துவிட்டிருந்தது. இரவு உணவுக்கு மீன் வாங்க வேண்டியிருந்ததால் அவள் தன் கையிலிருந்த பழப்பாகு கூடையை அவரிடம் கொடுத்து வீட்டிற்குப் போகச் சொன்னாள். மூன்றாவது தளம் வரை நடந்தபின் தான் அவருக்கு, தான் காலையிலேயே அவளிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்திருந்தது ஞாபகம் வந்தது.

படிகளில் மௌனமாக அமர்ந்தவர், பத்து நிமிடங்கள் கழித்து அவள் வந்தபோதும் மௌனமாகவே எழுந்தார். அவள் தன் முட்டாள்தனத்தை நினைத்து தலையை உதறியபடி அசட்டுச் சிரிப்புடன் வந்தாள். மிகுந்த பிரயாசையுடன் மாடிக்குச் சென்றனர். இரண்டு அறை கொண்ட அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் கண்ணாடி எதிரில் சென்றார். கட்டைவிரல்களால் வாயின் இருபுறமும் இழுத்து மோசமான இளிப்புடன் அசௌகரியமான பல் தகட்டை நீக்கினார். தகட்டோடு சேர்ந்து வந்த எச்சிலைத் துடைத்தார். அவள் உணவு மேசையை தயார் செய்து கொண்டிருக்கையில், தன்னுடைய ருஷ்ய மொழி செய்தித்தாளை வாசிக்க ஆரம்பித்தார். படித்துக் கொண்டே, பல் தேவைப்படாத நொய்மையான உணவைச் சாப்பிட்டார். அவருடைய மனோநிலையை அவள் அறிந்தவள் என்பதால், அவளும் ஒன்றும் பேசவில்லை.

அவர் படுக்கச் சென்ற பின்பும் தன்னுடைய அழுக்கான சீட்டுக் கட்டுகளோடும் பழைய ஆல்பங்களோடும் அதே அறையில் அவள் இருந்தாள். குறுகலான வழிக்கு அப்பால் இருளோடு கலந்து பெய்த மழை சாம்பல் கேன்களில் பட்டு எதிரொலித்தது. மங்கலாகத் தெரிந்த ஜன்னல் ஒன்றின் வழியாக கருமையான பேண்ட் அணிந்த ஒருவன், மேலாடையற்ற தோள்களை உயர்த்தியபடி, சீரற்ற படுக்கையின் மேல் சுருண்டு படுத்திருப்பது தெரிந்தது. கர்ட்டனை மூடிவிட்டு புகைப்படங்களை ஆராய்ந்தாள். ஒரு குழந்தை என்ற வகையில் மற்ற குழந்தைகளைவிட ஆச்சரியப்படுபவனாக அவன் இருந்தான். ஆல்பத்தின் மடிப்பிலிருந்து அவர்கள் Leipzigல் வைத்திருந்த ஜெர்மன் தாதியும் அவளுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த குண்டு முகமுடையவனும் விழுந்தனர். மின்ஸிக், புரட்சி, லிப்ஸிக், பெர்லின், லிப்ஸிக், அவுட் ஆஃப் ஃபோகஸில் சரிவான வீடு. நான்கு வயதான அவன் பூங்காவில் : இறுக்கமும் கூச்சமுமாய், சுழிந்த முன்நெற்றியுடன், மற்ற அந்நியர்களிடம் நடந்து கொள்வதைப் போல் தன்னிடம் ஆசையாக வரும் அணிலிடமிருந்து பார்வையைத் திருப்பிக் கொண்டு. Aunt ரோசா தடபுடலான, அகன்ற கண்களை உடையவள். அவளுடைய உலகம் மோசமான செய்திகள், மஞ்சள் கடுதாசிகள், ரயில் விபத்துகள், நோய்க்கூறான வளர்ச்சிகளால் நிறைந்தது - ஜெர்மானியர்கள், அவள் கவலைப்பட்ட மற்றவர்களைப் போல் அவளையும் கொல்லும்வரை திகிலான வாழ்க்கை வாழ்ந்தவள். ஆறு வயது : மனிதர்களைப் போல் கால்களும் கைகளும் கொண்ட அழகான பறவைகளை அவன் வரைந்ததும், வளர்ந்த மனிதர்களைப் போல் தூக்கமின்மை வியாதியால் அவதிப்பட்டதும் அப்போதுதான். அவனது அத்தை மகன் இப்போது பிரபலமான சதுரங்க விளையாட்டுக்காரன். எட்டு வயது : அவன் புரிந்து கொள்ள சிரமமானவனாய் இருந்தான். சுவர்க் காகிதங்களைக் கண்டாலும் பயப்பட்டான். புத்தகத்தில் உள்ள ஒரு படம் - நிலப்பகுதி, பாறை தொங்கும் மலைகள், இலைகளற்ற மொட்டையான மரத்தின் கிளையில் தொங்கும் வண்டிச் சக்கரத்தைக் காட்டும் படம் - அதற்குக்கூட பயப்படுபவனாய் இருந்தான். பத்து வயதில் அவன் : அது ஐரோப்பாவை விட்டு அவர்கள் வெளியேறிய வருடம். அவமானம், பரிதாபம், வெட்கமூட்டும் துன்பங்கள், அழுக்கு, விஷமம், பின் தங்கிய சிறுவர்களுடன் அவன் படித்த சிறப்புப் பள்ளி. அதற்குப் பின்புதான் அந்தக் காலம் வந்தது - நிமோனியாவிலிருந்து மீண்டு வந்த காலத்துடன் இணைந்தது அது. அவனது சின்ன ஃபோபியாக்களை, தங்களுடைய மகனின் மேதைமையினால் விளைந்தது என்று அவர்கள் திடமாக நம்பியது அவனை இன்னும் சிக்கலுக்குள்ளாக்கியது. சராசரி மனங்களுடன் இணைய முடியாததாகிவிட்டது.

இதையும் இன்னும் பலவற்றையும் அவள் ஏற்றுக் கொண்டாள் - ஒவ்வொரு மகிழ்ச்சியாய் இழந்து வருவதுதான் வாழ்க்கை என ஒப்புக் கொள்ளப்பட்டபின் வேறு வழி? - அதுவும் அவளுடைய விஷயத்தில் மகிழ்ச்சிகள்கூட இல்லை - முன்னேற்றத்திற்கான சாத்தியங்கள் மட்டுமே. அவள் மனம் யோசனைகளில் ஆழ்ந்தது : ஏதேதோ காரணங்களுக்காய் அலையலையாய் அடித்த துன்பங்களை அவளும் அவள் கணவரும் அனுபவித்தது; கண்களுக்குப் புலப்படாத சாத்தான்களால் கற்பனைக்கப்பாற்பட்டு தன் மகன் துன்புறுத்தப்படுவது; கணக்கிட முடியாத அளவிற்கு இந்த உலகம் கொண்டுள்ள அன்பு - ஆனால் அது நசுக்கப்பட்டோ அல்லது வீணடிக்கப்பட்டோ அல்லது பைத்தியமாகவோ மாறியிருப்பது; உதாசீனப்படுத்தப்பட்டு மூலையில் தங்களுக்குள் பாடியபடி இருக்கும் சிறுவர்கள்; விவசாயிகளிடமிருந்து ஒளிந்து கொள்ள முடியாத விதைகள், பூதாகரமான இருட்டு சமீபிக்க, அவனது கூன்விழுந்த நிழல் கசங்கிய மலர்களை விட்டுச் செல்வதைப் கையறு நிலையில் பார்க்க வேண்டிய கட்டாயம்.


(தொடரும்)

இதன் ஆங்கிலப் பிரதியை இங்கு வாசிக்கலாம் :

http://www.angelynngrant.com/nabokov.html

Signs and Symbols - நபக்கவ்

1899ல் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்தவர் நபக்கவ். 1919 போல்ஷ்விக் புரட்சிக் காலத்தில் அவரது குடும்பம் ஜெர்மனிக்குத் தப்பித்து சென்றது. டிரினிட்டி கல்லூரியில் பிரஞ்சு, ருஷ்ய இலக்கியம் கற்ற நபக்கவ், பெர்லினிலும் பாரிசிலும் வசித்தார். பாரிசிலிருந்தபோது Sirin என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். 1940ல் அமெரிக்காவுக்கு வந்தார். கல்லூரிகளில் இலக்கியம் போதித்தார். 'லோலீதா' (1955) நாவலின் மகத்தான வெற்றிக்குப் பின் முழுநேர எழுத்தாளரானார். ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்து 1977ல் அங்கேயே மறைந்தார்.

அவரது முக்கியமான சிறுகதை Signs and Symbols. இதை நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இந்தக் கதையை கால சுப்ரமணியம் தன்னுடைய லயம் இதழில் 1995ல் மொழியாக்கம் செய்திருந்தார். பின்னர் அது புத்தகமாகவும் வெளிவந்தது. நான் அவருடைய மொழிபெயர்ப்பையே guideஆகக் கொண்டு இம்மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறேன். சந்தேகம் ஏற்படும் இடங்களில் அவருடைய மொழிபெயர்ப்பையே refer செய்தேன். இதுதான் நான் முதல்முறையாகச் செய்யும் மொழிபெயர்ப்பு முயற்சி. எப்படி இருக்கிறது என நீங்கள்தான் சொல்ல வேண்டும்!

சங்கேதங்களும் குறியீடுகளும் - விளாடிமிர் நபக்கவ்

I

மனநிலை குன்றிய இளைஞனுக்கு பிறந்த நாள் பரிசாக என்ன தருவது என்ற பிரச்சனை இந்த நான்கு வருடங்களில் நான்காவது முறையாக அவர்களுக்கு வந்திருக்கிறது. அவனுக்குத் தனிப்பட்ட விருப்பங்கள் எதுவும் கிடையாது. மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் அவனால் மட்டுமே உணரக்கூடிய தீமையாகவோ அல்லது அவனது சூட்சும உலகத்தில் எந்த அர்த்தமுமற்ற சொகுசகளாகவோ தோன்றின. அவனைப் பயமுறுத்தக்கூடிய அல்லது அவனைக் காயப்படுத்தக்கூடிய பொருட்களை நீக்கிவிட்டு (உதாரணத்திற்கு கூர்மையான எல்லாப் பொருட்களும் விலக்கப்பட்டவை), அவன் பெற்றோர்கள் சுவையானதும் எளிமையானதுமான ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்கள் : பத்து சிறிய ஜாடிகளில் பத்து பழப்பாகுகள் கொண்ட கூடை.

அவன் பிறக்கும்போது அவர்களுக்குத் திருமணமாகிப் பல வருடங்கள் ஆகியிருந்தன. அதற்குப் பிறகும் பல வருடங்கள் கடந்து போனதில் அவர்களுக்கு மிகுந்த வயதாகிவிட்டது. அவளது நரைத்த கூந்தல் கலைந்துகிடக்கிறது. மலிவான கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தாள். அவள் வயதையொத்த மற்ற பெண்களை (உதாரணத்திற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் - முகம் முழுக்க பிங்க் சாயம் பூசிக் கொண்டும், தொப்பியில் ஓடைப் பூங்கொத்துகளைச் சூடிக் கொண்டிருக்கும் திருமதி ஸோல்) போலில்லாமல் வசந்த காலத்தின் குறைந்த வெளிச்சத்திற்கு தன்னுடைய பூச்சுகளற்ற வெளுத்த முகத்தை அளித்தாள். அவளுடைய கணவர் - பழைய கிராமத்தில் ஓரளவு வெற்றிகரமான வியாபாரி - இப்போது பச்சை அமெரிக்கனான 40 வயதுடைய தன்னுடைய சகோதரன் ஐஸக்கைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அவர்கள் அவனை அரிதாகவே பார்க்க முடிந்தது. அவனுக்கு ‘இளவரசன்’ என்ற பட்டப்பெயரை வைத்திருந்தார்கள்.

அந்த வெள்ளிக் கிழமை எல்லாமே தவறாய்ப் போயிற்று. மின்சாரம் தடைப்பட்டு பாதாள ரயில் இரண்டு நிலையங்களுக்கிடையில் நிற்கவேண்டியதாகிவிட்டது. கால் மணிநேரத்திற்கு இதயத் துடிப்புகளையும் தினசரிகளின் சடசடப்பையும் தவிர வேறொன்றும் கேட்கவில்லை. அவர்கள் அடுத்து ஏறிச் செல்ல வேண்டிய பேருந்து வெகுநேரம் காத்திருக்கச் செய்தது. அது வந்த போது தொண தொணவென்று பேசிக் கொண்டிருக்கும் உயர் நிலைப் பள்ளிச் சிறுவர்கள் பேருந்தை அடைத்திருந்தனர். சானிடோரியத்திற்குச் செல்லும் பழுப்பு நிறப்பாதையில் அவர்கள் நடந்து கொண்டிருந்தபோது கடுமையான மழை பெய்தது. அங்கே அவர்கள் மறுபடியும் காத்திருந்தனர். வழக்கமாக இருக்கும் அறையில் அவன் இல்லை (அவனுடைய சோகமான முகம் சவரம் செய்யப்படாமல், பருக்களுடன், ஊதிப்போய், குழப்பங்களுடன் இருக்கும்). அவர்களுக்குத் தெரிந்த ஆனால் பொருட்படுத்தாத தாதி ஒருத்தி ஒருவழியாகக் கடைசியில் வந்தாள். அவன் மறுபடியும் தற்கொலைக்கு முயன்றதை பிரகாசமாக விவரித்தாள். இப்போது அவன் நன்றாக இருந்தாலும் அவனைப் பார்ப்பது இடைஞ்சலாக இருக்கலாம் என்றாள். அந்த அலுவலகம் கடுமையான ஆள் பற்றாக்குறையுடன் இருந்தது. அங்கே பொருட்கள் தவறிவிட வாய்ப்பிருப்பதால், தாங்கள் கொண்டுவந்த பரிசை அங்கே அலுவலகத்தில் வைக்காமல் அடுத்த முறை வரும்போது மறுபடி எடுத்து வர முடிவு செய்தனர்.

அவள் தன் கணவர் குடையை விரிக்கக் காத்திருந்து, பிறகு அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள். மனது சரியில்லாதபோது ஒருவிதமாக தன் தொண்டையை செருமும் பழக்கமுடைய அவர் இப்போதும் அப்படியே செருமிக் கொண்டிருந்தார். தெருவின் எதிர் சாரியிலுள்ள பஸ் நிறுத்தத்தை அடைந்ததும் தன் குடையை மூடினார். சில அடிக்களுக்கு அப்பால், ஆடி அசைந்து கொட்டிக் கொண்டிருந்த மரத்தின் அடியில், சேற்றில், சிறகற்ற சிறிய பறவையொன்று, பாதி உயிர் போய், பரிதாபமாக துடித்துக் கொண்டிருந்தது.

பாதாள ரயில் நிலையத்திற்கான நீண்ட பயணத்தில் அவர்கள் பேசிக் கொள்ளவேயில்லை. குடையைப் பிடித்திருந்த - வீங்கிய நரம்புகளும் பழுப்பு நிறப் புள்ளிகளும் உடைய - அவரது வயதான கரத்தைப் பார்க்குப்போதெல்லாம் அவளுக்கு அழுகை முட்டியது. மனதை மாற்ற சுற்று முற்றும் பார்த்தபோது லேசான அதிர்ச்சி அடைந்தாள். கருத்த கூந்தலோடும் அழுக்கான சிகப்பு கால் நகப் பூச்சுகளுடன் ஒருத்தி வயதான பெண்மணியின் மீது சாய்ந்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்து இவளுக்கு பரிதாபமும் ஆச்சரியமும் ஏற்பட்டது. அவள் யாரைப் போலிருந்தாள்? அவள் ரெபக்கா போரிஸோவானை நினைவூட்டினாள். அவளுடைய மகள் மின்ஸ்கில் சோலோவிசிக் ஒருவனை பல வருடங்களுக்கு முன் மணந்திருந்தாள்.

சென்ற முறை அவன் தற்கொலைக்கு முயற்சித்த போது - டாக்டரின் வார்த்தைகளில் சொன்னால் - அவனது உத்தி ஆகப் பெரிய கண்டுபிடிப்பாக இருந்தது. அவன் பறக்க முயற்சிக்கிறான் என்று பொறாமை கொண்டு பக்கத்து நோயாளி தடுக்காமலிருந்திருந்தால் அவன் முயற்சியில் ஜெயித்திருக்கக்கூடும். உண்மையில் தன்னுடைய உலகத்திலிருந்து ஒரு ஓட்டையைப் போட்டு அதன்மூலம் தப்பிவிட அவன் நினைத்திருந்தான்.

அவனது மனக் கற்பித முறைமைகள் ஒரு அறிவியல் மாத இதழில் விரிவான கட்டுரைக்கான விஷயமாகியிருந்தது. ஆனால் அதற்கு வெகு காலம் முன்பே அவளும் அவள் கணவரும் அந்தப் புதிருக்கு விடை கண்டுபிடித்திருந்தனர். ஹெர்மன் பிரிங்க் அதை Referential Mania என்றார். இம்மாதிரி அரிதான கேஸ்களில் நோயாளி தன்னைச் சுற்றி நிகழும் அனைத்தும் தன்னுடைய ஆளுமையும் இருப்பையும் மறைமுகமாகக் குறிப்பதாக நினைத்துக் கொள்கிறான். தன்னை மற்றவர்களை விட புத்திசாலியாகக் கருதிக் கொள்வதால் மற்ற நிஜ மனிதர்களை இந்தச் சதியிலிருந்து விலக்கிவிடுவான். அவன் எங்கு சென்றாலும் அதீதமான இயற்கை அவனை நிழல்போல் பின் தொடருகிறது. வெறித்த வானில் மேகங்கள், சிறிய சங்கேதங்களால், அவனைப் பற்றிய மிக விரிவான தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. அவனுடைய மனதின் அடியாழத்தில் இருக்கும் நினைவுகள், அகர வரிசைக்கிரமமாக, இரவு நேரத்தில் சைகை செய்யும் மரங்களால் விவாதிக்கப்படுகின்றன. குமிழ்களும், கறைகளும், ஒளிப்புள்ளிகளும் அவன் இடைமறித்தாக வேண்டிய பயங்கரச் செய்திகளை, வடிவ மாதிரிகளைக் கொண்டிருக்கின்றன. எல்லாமே சங்கேத மொழி. எல்லாவற்றிலும் அவனே மையம். கண்ணாடி தளங்கள், அசைவற்ற குளங்கள் போன்ற ஒற்றர்கள் பற்றற்ற பார்வையாளர்களாக இருக்கின்றன. மற்றவை - கடை ஜன்னலில் இருக்கும் கோட்டுகள் போன்றவை - பாரபட்சமான சாட்சிகள், மனதளவில் இரக்கமற்று கொலைசெய்யத் துடிப்பவை. மறுபடியும் மற்றவை (ஓடும் நீர், புயல் போன்றவை) பைத்தியங்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வெறிகொண்டவை. அவனைப் பற்றித் தவறான எண்ணம் கொண்டவை, அவனது செயல்களுக்கு புனைவான அதீத அர்த்தம் சொல்பவை. அவன் எப்போதும் கவனமாக இருந்தாக வேண்டும். அவனது வாழ்வில் ஒவ்வொரு கணமும் சங்கேதங்களை விடுவித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அவன் சுவாசிக்கும் இந்தக் காற்றும் அட்டவணைப்படுத்தப்பட்டு கோப்பிடப்பட்டது. அவனது தூண்டக்கூடிய ஆர்வம் அவனைச் சுற்றியிருப்பவைமீது மட்டுமே இருக்குமானால் - உண்மையில் அப்படியில்லை! - தூரம் அதிகரிக்க அவனைப் பற்றிய மோசமான அவதூறுகளும் எண்ணிகையிலும் சத்தத்திலும் அதிகரிக்கின்றன. அவனது ரத்த அணுக்களின் நிழலுருவங்கள், பல லட்சம் முறை பெரிதாக்கப்பட்டு, பரந்த வெளியெங்கும் இடம்மாறியபடி பறந்து கொண்டிருக்கின்றன. இன்னும் தொலைவில், நெடிதுயர்ந்த மலைகள் கிரானைட் கற்களாக இறுகியிருக்க, அவனது இருப்பின் மாற்ற முடியாத உண்மையைப் ஃபிர் மரங்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றன.

(தொடரும்)

இதன் ஆங்கிலப் பிரதியை இங்கே வாசிக்கலாம் :

http://www.angelynngrant.com/nabokov.html

தலைஇப்பு நீண்ட...

அம்மா அப்பா ஆட்டு உரல்
ஆரம்பக் கல்வி இடைநிலைக் கல்வி
தொலைதூரக் கல்வி
நிற்றல் நகர்தல் நகர்த்துதல்
வாசிப்பு கருத்தரங்கம்
கருத்தில்லா அரங்கம்
இட்லி சாம்பார் நாண்
சரவணபவன் சாலையோரக்கடை
சுந்தர் சுந்தர ராமசாமி
பிரபாகர் கல்யாண சுந்தரம்
பட்டுக்கோட்டை
வேலை வேலை இல்லாமை
இல்லாமை
பணம் பதவி தேர்தல்
இடை இடைத் தேர்தல்
கலவி கல்யாணம்
குமுதம் குழந்தை குற்றம்
பீர் பிராந்தி விஸ்கி
காக்டெயில் கூட்டணி
தனிமை தவம் தவிப்பு
தற்பெருமை நொடி நோய்
மாத்திரை லவங்கம் கற்பூரம்
தாமிரபரணி காவேரி காவிரி
தலைவிரிந்து நடந்தாய்
வாழவில்லை சக்தி
வைத்தியம் ஜானகி ராமன்
நகுலன் மௌனி அபி
தர்மு சிவராமு லாசரா
அம்மா அப்பா நான்
நீ பைத்தியம்
தவிர்க்க முடியவில்லை
அச்சமும் கவிதையும்
மிச்சம் ஒன்றுமில்லை
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
எப்படியும் இரு சாமி
சாமிகள் சாத்தான்கள்
ஒன்றுமே இல்லாதவன்
எங்கேயும் இல்லை

நண்பர் குமார்ஜி சமீபத்தில் எழுதியது. இத்தனைகாலம் எழுதாமல் இருந்தது குறித்து :

பொழுது போகாமல்
எழுதத் துவங்கினேன்
இப்
பொழுது போதாமல்
எழுதாமலிருக்கிறேன்
இடைப்பட்ட காலத்தில்
அவிந்து
போகாமலிருக்கிறது
ஆரம்ப காலத்தின்
அடி ஊற்று

இன்னொரு தலைப்பில்லாத கவிதை :

இடக்கையில் தூக்கு
வலக்கையில் வாளி
வரப்புச் சேற்றில்
கால்கள் புதைய
அப்பாவுக்குச் சோறு
வார் அறுந்த
நிக்கரின் சொறுகல்
அவிழ்ந்து கொண்டிருக்கும்
அடிக்கு அடி