1899ல் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்தவர் நபக்கவ். 1919 போல்ஷ்விக் புரட்சிக் காலத்தில் அவரது குடும்பம் ஜெர்மனிக்குத் தப்பித்து சென்றது. டிரினிட்டி கல்லூரியில் பிரஞ்சு, ருஷ்ய இலக்கியம் கற்ற நபக்கவ், பெர்லினிலும் பாரிசிலும் வசித்தார். பாரிசிலிருந்தபோது Sirin என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். 1940ல் அமெரிக்காவுக்கு வந்தார். கல்லூரிகளில் இலக்கியம் போதித்தார். 'லோலீதா' (1955) நாவலின் மகத்தான வெற்றிக்குப் பின் முழுநேர எழுத்தாளரானார். ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்து 1977ல் அங்கேயே மறைந்தார்.
அவரது முக்கியமான சிறுகதை Signs and Symbols. இதை நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இந்தக் கதையை கால சுப்ரமணியம் தன்னுடைய லயம் இதழில் 1995ல் மொழியாக்கம் செய்திருந்தார். பின்னர் அது புத்தகமாகவும் வெளிவந்தது. நான் அவருடைய மொழிபெயர்ப்பையே guideஆகக் கொண்டு இம்மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறேன். சந்தேகம் ஏற்படும் இடங்களில் அவருடைய மொழிபெயர்ப்பையே refer செய்தேன். இதுதான் நான் முதல்முறையாகச் செய்யும் மொழிபெயர்ப்பு முயற்சி. எப்படி இருக்கிறது என நீங்கள்தான் சொல்ல வேண்டும்!
சங்கேதங்களும் குறியீடுகளும் - விளாடிமிர் நபக்கவ்
I
மனநிலை குன்றிய இளைஞனுக்கு பிறந்த நாள் பரிசாக என்ன தருவது என்ற பிரச்சனை இந்த நான்கு வருடங்களில் நான்காவது முறையாக அவர்களுக்கு வந்திருக்கிறது. அவனுக்குத் தனிப்பட்ட விருப்பங்கள் எதுவும் கிடையாது. மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் அவனால் மட்டுமே உணரக்கூடிய தீமையாகவோ அல்லது அவனது சூட்சும உலகத்தில் எந்த அர்த்தமுமற்ற சொகுசகளாகவோ தோன்றின. அவனைப் பயமுறுத்தக்கூடிய அல்லது அவனைக் காயப்படுத்தக்கூடிய பொருட்களை நீக்கிவிட்டு (உதாரணத்திற்கு கூர்மையான எல்லாப் பொருட்களும் விலக்கப்பட்டவை), அவன் பெற்றோர்கள் சுவையானதும் எளிமையானதுமான ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்கள் : பத்து சிறிய ஜாடிகளில் பத்து பழப்பாகுகள் கொண்ட கூடை.
அவன் பிறக்கும்போது அவர்களுக்குத் திருமணமாகிப் பல வருடங்கள் ஆகியிருந்தன. அதற்குப் பிறகும் பல வருடங்கள் கடந்து போனதில் அவர்களுக்கு மிகுந்த வயதாகிவிட்டது. அவளது நரைத்த கூந்தல் கலைந்துகிடக்கிறது. மலிவான கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தாள். அவள் வயதையொத்த மற்ற பெண்களை (உதாரணத்திற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் - முகம் முழுக்க பிங்க் சாயம் பூசிக் கொண்டும், தொப்பியில் ஓடைப் பூங்கொத்துகளைச் சூடிக் கொண்டிருக்கும் திருமதி ஸோல்) போலில்லாமல் வசந்த காலத்தின் குறைந்த வெளிச்சத்திற்கு தன்னுடைய பூச்சுகளற்ற வெளுத்த முகத்தை அளித்தாள். அவளுடைய கணவர் - பழைய கிராமத்தில் ஓரளவு வெற்றிகரமான வியாபாரி - இப்போது பச்சை அமெரிக்கனான 40 வயதுடைய தன்னுடைய சகோதரன் ஐஸக்கைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அவர்கள் அவனை அரிதாகவே பார்க்க முடிந்தது. அவனுக்கு ‘இளவரசன்’ என்ற பட்டப்பெயரை வைத்திருந்தார்கள்.
அந்த வெள்ளிக் கிழமை எல்லாமே தவறாய்ப் போயிற்று. மின்சாரம் தடைப்பட்டு பாதாள ரயில் இரண்டு நிலையங்களுக்கிடையில் நிற்கவேண்டியதாகிவிட்டது. கால் மணிநேரத்திற்கு இதயத் துடிப்புகளையும் தினசரிகளின் சடசடப்பையும் தவிர வேறொன்றும் கேட்கவில்லை. அவர்கள் அடுத்து ஏறிச் செல்ல வேண்டிய பேருந்து வெகுநேரம் காத்திருக்கச் செய்தது. அது வந்த போது தொண தொணவென்று பேசிக் கொண்டிருக்கும் உயர் நிலைப் பள்ளிச் சிறுவர்கள் பேருந்தை அடைத்திருந்தனர். சானிடோரியத்திற்குச் செல்லும் பழுப்பு நிறப்பாதையில் அவர்கள் நடந்து கொண்டிருந்தபோது கடுமையான மழை பெய்தது. அங்கே அவர்கள் மறுபடியும் காத்திருந்தனர். வழக்கமாக இருக்கும் அறையில் அவன் இல்லை (அவனுடைய சோகமான முகம் சவரம் செய்யப்படாமல், பருக்களுடன், ஊதிப்போய், குழப்பங்களுடன் இருக்கும்). அவர்களுக்குத் தெரிந்த ஆனால் பொருட்படுத்தாத தாதி ஒருத்தி ஒருவழியாகக் கடைசியில் வந்தாள். அவன் மறுபடியும் தற்கொலைக்கு முயன்றதை பிரகாசமாக விவரித்தாள். இப்போது அவன் நன்றாக இருந்தாலும் அவனைப் பார்ப்பது இடைஞ்சலாக இருக்கலாம் என்றாள். அந்த அலுவலகம் கடுமையான ஆள் பற்றாக்குறையுடன் இருந்தது. அங்கே பொருட்கள் தவறிவிட வாய்ப்பிருப்பதால், தாங்கள் கொண்டுவந்த பரிசை அங்கே அலுவலகத்தில் வைக்காமல் அடுத்த முறை வரும்போது மறுபடி எடுத்து வர முடிவு செய்தனர்.
அவள் தன் கணவர் குடையை விரிக்கக் காத்திருந்து, பிறகு அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள். மனது சரியில்லாதபோது ஒருவிதமாக தன் தொண்டையை செருமும் பழக்கமுடைய அவர் இப்போதும் அப்படியே செருமிக் கொண்டிருந்தார். தெருவின் எதிர் சாரியிலுள்ள பஸ் நிறுத்தத்தை அடைந்ததும் தன் குடையை மூடினார். சில அடிக்களுக்கு அப்பால், ஆடி அசைந்து கொட்டிக் கொண்டிருந்த மரத்தின் அடியில், சேற்றில், சிறகற்ற சிறிய பறவையொன்று, பாதி உயிர் போய், பரிதாபமாக துடித்துக் கொண்டிருந்தது.
பாதாள ரயில் நிலையத்திற்கான நீண்ட பயணத்தில் அவர்கள் பேசிக் கொள்ளவேயில்லை. குடையைப் பிடித்திருந்த - வீங்கிய நரம்புகளும் பழுப்பு நிறப் புள்ளிகளும் உடைய - அவரது வயதான கரத்தைப் பார்க்குப்போதெல்லாம் அவளுக்கு அழுகை முட்டியது. மனதை மாற்ற சுற்று முற்றும் பார்த்தபோது லேசான அதிர்ச்சி அடைந்தாள். கருத்த கூந்தலோடும் அழுக்கான சிகப்பு கால் நகப் பூச்சுகளுடன் ஒருத்தி வயதான பெண்மணியின் மீது சாய்ந்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்து இவளுக்கு பரிதாபமும் ஆச்சரியமும் ஏற்பட்டது. அவள் யாரைப் போலிருந்தாள்? அவள் ரெபக்கா போரிஸோவானை நினைவூட்டினாள். அவளுடைய மகள் மின்ஸ்கில் சோலோவிசிக் ஒருவனை பல வருடங்களுக்கு முன் மணந்திருந்தாள்.
சென்ற முறை அவன் தற்கொலைக்கு முயற்சித்த போது - டாக்டரின் வார்த்தைகளில் சொன்னால் - அவனது உத்தி ஆகப் பெரிய கண்டுபிடிப்பாக இருந்தது. அவன் பறக்க முயற்சிக்கிறான் என்று பொறாமை கொண்டு பக்கத்து நோயாளி தடுக்காமலிருந்திருந்தால் அவன் முயற்சியில் ஜெயித்திருக்கக்கூடும். உண்மையில் தன்னுடைய உலகத்திலிருந்து ஒரு ஓட்டையைப் போட்டு அதன்மூலம் தப்பிவிட அவன் நினைத்திருந்தான்.
அவனது மனக் கற்பித முறைமைகள் ஒரு அறிவியல் மாத இதழில் விரிவான கட்டுரைக்கான விஷயமாகியிருந்தது. ஆனால் அதற்கு வெகு காலம் முன்பே அவளும் அவள் கணவரும் அந்தப் புதிருக்கு விடை கண்டுபிடித்திருந்தனர். ஹெர்மன் பிரிங்க் அதை Referential Mania என்றார். இம்மாதிரி அரிதான கேஸ்களில் நோயாளி தன்னைச் சுற்றி நிகழும் அனைத்தும் தன்னுடைய ஆளுமையும் இருப்பையும் மறைமுகமாகக் குறிப்பதாக நினைத்துக் கொள்கிறான். தன்னை மற்றவர்களை விட புத்திசாலியாகக் கருதிக் கொள்வதால் மற்ற நிஜ மனிதர்களை இந்தச் சதியிலிருந்து விலக்கிவிடுவான். அவன் எங்கு சென்றாலும் அதீதமான இயற்கை அவனை நிழல்போல் பின் தொடருகிறது. வெறித்த வானில் மேகங்கள், சிறிய சங்கேதங்களால், அவனைப் பற்றிய மிக விரிவான தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. அவனுடைய மனதின் அடியாழத்தில் இருக்கும் நினைவுகள், அகர வரிசைக்கிரமமாக, இரவு நேரத்தில் சைகை செய்யும் மரங்களால் விவாதிக்கப்படுகின்றன. குமிழ்களும், கறைகளும், ஒளிப்புள்ளிகளும் அவன் இடைமறித்தாக வேண்டிய பயங்கரச் செய்திகளை, வடிவ மாதிரிகளைக் கொண்டிருக்கின்றன. எல்லாமே சங்கேத மொழி. எல்லாவற்றிலும் அவனே மையம். கண்ணாடி தளங்கள், அசைவற்ற குளங்கள் போன்ற ஒற்றர்கள் பற்றற்ற பார்வையாளர்களாக இருக்கின்றன. மற்றவை - கடை ஜன்னலில் இருக்கும் கோட்டுகள் போன்றவை - பாரபட்சமான சாட்சிகள், மனதளவில் இரக்கமற்று கொலைசெய்யத் துடிப்பவை. மறுபடியும் மற்றவை (ஓடும் நீர், புயல் போன்றவை) பைத்தியங்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வெறிகொண்டவை. அவனைப் பற்றித் தவறான எண்ணம் கொண்டவை, அவனது செயல்களுக்கு புனைவான அதீத அர்த்தம் சொல்பவை. அவன் எப்போதும் கவனமாக இருந்தாக வேண்டும். அவனது வாழ்வில் ஒவ்வொரு கணமும் சங்கேதங்களை விடுவித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அவன் சுவாசிக்கும் இந்தக் காற்றும் அட்டவணைப்படுத்தப்பட்டு கோப்பிடப்பட்டது. அவனது தூண்டக்கூடிய ஆர்வம் அவனைச் சுற்றியிருப்பவைமீது மட்டுமே இருக்குமானால் - உண்மையில் அப்படியில்லை! - தூரம் அதிகரிக்க அவனைப் பற்றிய மோசமான அவதூறுகளும் எண்ணிகையிலும் சத்தத்திலும் அதிகரிக்கின்றன. அவனது ரத்த அணுக்களின் நிழலுருவங்கள், பல லட்சம் முறை பெரிதாக்கப்பட்டு, பரந்த வெளியெங்கும் இடம்மாறியபடி பறந்து கொண்டிருக்கின்றன. இன்னும் தொலைவில், நெடிதுயர்ந்த மலைகள் கிரானைட் கற்களாக இறுகியிருக்க, அவனது இருப்பின் மாற்ற முடியாத உண்மையைப் ஃபிர் மரங்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றன.
(தொடரும்)
இதன் ஆங்கிலப் பிரதியை இங்கே வாசிக்கலாம் :
http://www.angelynngrant.com/nabokov.html
பனிக்காலத் தனிமை - 02
5 days ago
9 comments:
iஇத்தகைய அற்புதமான படைப்புகளை பகிரும் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தீராது
அற்புதம்..நன்றி..மிக்க நன்றி..
நன்றி.. அருமையான சிறுகதையை அறிமுகப்படுத்தியதற்கு.
மிக அருமையான தமிழாக்கம்..
நன்றிகள், கடுமையான&நுட்பமான உங்கள் உழைப்புக்கு.
Waiting for translation of 2 & 3rd part.
nice, thanks for sharing. You have done the translation with great interest and devotion.
பகிர்வுக்கு நன்றி ... நபகோவின் இன்னோரு அருமையான சிறுகதை எப்போதோ படித்தது ... தலைப்பு நினைவில்லை ஆனால் தொலைபேசி அதில் முக்கிய character ... மறுபடி சொல்கிறேன் நீங்களும் சிவராமனும் செய்து கொண்டிருப்பது மிக அருமையான காரியம் ... தொடருங்கள்
மொழிபெயர்ப்பதற்குக் கடினமான பிரதி இக்கதை. நல்ல முயற்சி! ஆனாலும் தமிழில் பல வாக்கியங்கள் புரியக் கடினமாக உள்ளன! சற்றே எளிமைப்படுத்தலாமோ?
நான் கவனித்த சிறு பிழைகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
Referential mania – தமிழ்ப்படுத்துங்கள்!
sun flecks - ஒளிப்புள்ளிகள். மர நிழலில் தரையில் ஏற்படுமே, அதுதான்! கரும்புள்ளிகள் அல்ல.
Pebbles என்ற வார்த்தையை விட்டுவிட்டீர்கள்...
ஒற்றர்கள் – ஒற்றங்கள் என அச்சேறியுள்ளது (வேறு எழுத்துப்பிழைகளும் உள்ளன)
Staring sky – வெறித்துப்பார்க்கும் வானம். நட்சத்திர வானம் அல்ல.
Prejudiced – பாரபட்சமான. பாரபட்சமற்ற என்று அச்சேறியுள்ளதே! hysterical – வெறிகொண்ட? ஹிஸ்டீரியாக்கள் என்று adjective ஐ பெயர்ச்சொல்லாக்கியிருப்பது சரியல்ல.
Filed – கோப்பிடப்பட்டது. Filled எனத் தவறாகப் படித்துள்ளீர்கள். vast plains – பரந்த வெளி. பெருவெளி என்பது பொதுவாக universe என்பதைக்குறிக்கும் வார்த்தை.
Sum up... the ultimate truth of – கடைசி வாக்கியத்தை மாற்றி எழுதுங்கள்! ஃபிர் மரங்களையும் சேர்த்துக்கொள்ளலாமே. Sum up என்பதைப் புலம்புவதாகச் சொல்லியிருப்பது சரியல்ல. Groaning என்பதை ஃபிர் மரங்களுக்கான adjective ஆகக் கையாளவும்.
அடுத்த பகுதி பற்றி, முடிந்தால் எழுதுகிறேன். (இதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதையும் பொருத்து!)
சரவணன், உங்கள் உதவி மகத்தானது. தயவுசெய்து மற்ற இரு பகுதிகளையும் படித்து விட்டுச் சொல்லுங்கள்.
இதுதான் முதல் முறையாக நான் செய்யும் மொழிபெயர்ப்பு முயற்சி. எனக்கும் பல இடங்களில் சந்தேகமாகவே இருந்தது.
பாரபட்சமான (மட்டும்) இன்னொருவர் நேற்று இரவு சொன்னார். மிச்சமனைத்தும் நீங்கள் சொல்லியிருப்பதுதான். பிழைகளைத் திருத்தி விட்டேன். கடைசி வரியை மட்டும் மீண்டும் இருமுறை வாசித்துவிட்டு மாற்றுகிறேன்.
நேசமித்ரன், நர்சிம், கார்த்திகேயன், குப்பன் யாஹூ, நந்தா, சரவணன்... நன்றி.
இன்னொன்று - சாதாரணமாக indexed and filed என்றுதான் வரும். இங்கே மூச்சுக் காற்று என்பதால் குழப்பம் வந்து, கால சுப்ரமணியத்தின் மொழிபெயர்ப்பைப் பார்த்தேன். அங்கே நிரப்பப்பட்டு என்பது போன்ற வார்த்தை இருந்தது. ஒரு வேளை ஆங்கிலப் பிரதியில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கலாமோ என்று நினைத்தேன் (இதே பத்தில் torrents என்பதை to rents என்று இருந்தது). அதனாலேயே filled என்று புரிந்து கொண்டு மொழிபெயர்த்திருந்தேன் :)
Post a Comment