II
இரைச்சலும் நாற்றமுமாய் இருந்த பாதாள ரயில் நிலையத்தைவிட்டு அவர்கள் வெளியே வந்த போது, பகலின் மிச்ச வெளிச்சம் தெரு விளக்குகளுடன் கலந்துவிட்டிருந்தது. இரவு உணவுக்கு மீன் வாங்க வேண்டியிருந்ததால் அவள் தன் கையிலிருந்த பழப்பாகு கூடையை அவரிடம் கொடுத்து வீட்டிற்குப் போகச் சொன்னாள். மூன்றாவது தளம் வரை நடந்தபின் தான் அவருக்கு, தான் காலையிலேயே அவளிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்திருந்தது ஞாபகம் வந்தது.
படிகளில் மௌனமாக அமர்ந்தவர், பத்து நிமிடங்கள் கழித்து அவள் வந்தபோதும் மௌனமாகவே எழுந்தார். அவள் தன் முட்டாள்தனத்தை நினைத்து தலையை உதறியபடி அசட்டுச் சிரிப்புடன் வந்தாள். மிகுந்த பிரயாசையுடன் மாடிக்குச் சென்றனர். இரண்டு அறை கொண்ட அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் கண்ணாடி எதிரில் சென்றார். கட்டைவிரல்களால் வாயின் இருபுறமும் இழுத்து மோசமான இளிப்புடன் அசௌகரியமான பல் தகட்டை நீக்கினார். தகட்டோடு சேர்ந்து வந்த எச்சிலைத் துடைத்தார். அவள் உணவு மேசையை தயார் செய்து கொண்டிருக்கையில், தன்னுடைய ருஷ்ய மொழி செய்தித்தாளை வாசிக்க ஆரம்பித்தார். படித்துக் கொண்டே, பல் தேவைப்படாத நொய்மையான உணவைச் சாப்பிட்டார். அவருடைய மனோநிலையை அவள் அறிந்தவள் என்பதால், அவளும் ஒன்றும் பேசவில்லை.
அவர் படுக்கச் சென்ற பின்பும் தன்னுடைய அழுக்கான சீட்டுக் கட்டுகளோடும் பழைய ஆல்பங்களோடும் அதே அறையில் அவள் இருந்தாள். குறுகலான வழிக்கு அப்பால் இருளோடு கலந்து பெய்த மழை சாம்பல் கேன்களில் பட்டு எதிரொலித்தது. மங்கலாகத் தெரிந்த ஜன்னல் ஒன்றின் வழியாக கருமையான பேண்ட் அணிந்த ஒருவன், மேலாடையற்ற தோள்களை உயர்த்தியபடி, சீரற்ற படுக்கையின் மேல் சுருண்டு படுத்திருப்பது தெரிந்தது. கர்ட்டனை மூடிவிட்டு புகைப்படங்களை ஆராய்ந்தாள். ஒரு குழந்தை என்ற வகையில் மற்ற குழந்தைகளைவிட ஆச்சரியப்படுபவனாக அவன் இருந்தான். ஆல்பத்தின் மடிப்பிலிருந்து அவர்கள் Leipzigல் வைத்திருந்த ஜெர்மன் தாதியும் அவளுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த குண்டு முகமுடையவனும் விழுந்தனர். மின்ஸிக், புரட்சி, லிப்ஸிக், பெர்லின், லிப்ஸிக், அவுட் ஆஃப் ஃபோகஸில் சரிவான வீடு. நான்கு வயதான அவன் பூங்காவில் : இறுக்கமும் கூச்சமுமாய், சுழிந்த முன்நெற்றியுடன், மற்ற அந்நியர்களிடம் நடந்து கொள்வதைப் போல் தன்னிடம் ஆசையாக வரும் அணிலிடமிருந்து பார்வையைத் திருப்பிக் கொண்டு. Aunt ரோசா தடபுடலான, அகன்ற கண்களை உடையவள். அவளுடைய உலகம் மோசமான செய்திகள், மஞ்சள் கடுதாசிகள், ரயில் விபத்துகள், நோய்க்கூறான வளர்ச்சிகளால் நிறைந்தது - ஜெர்மானியர்கள், அவள் கவலைப்பட்ட மற்றவர்களைப் போல் அவளையும் கொல்லும்வரை திகிலான வாழ்க்கை வாழ்ந்தவள். ஆறு வயது : மனிதர்களைப் போல் கால்களும் கைகளும் கொண்ட அழகான பறவைகளை அவன் வரைந்ததும், வளர்ந்த மனிதர்களைப் போல் தூக்கமின்மை வியாதியால் அவதிப்பட்டதும் அப்போதுதான். அவனது அத்தை மகன் இப்போது பிரபலமான சதுரங்க விளையாட்டுக்காரன். எட்டு வயது : அவன் புரிந்து கொள்ள சிரமமானவனாய் இருந்தான். சுவர்க் காகிதங்களைக் கண்டாலும் பயப்பட்டான். புத்தகத்தில் உள்ள ஒரு படம் - நிலப்பகுதி, பாறை தொங்கும் மலைகள், இலைகளற்ற மொட்டையான மரத்தின் கிளையில் தொங்கும் வண்டிச் சக்கரத்தைக் காட்டும் படம் - அதற்குக்கூட பயப்படுபவனாய் இருந்தான். பத்து வயதில் அவன் : அது ஐரோப்பாவை விட்டு அவர்கள் வெளியேறிய வருடம். அவமானம், பரிதாபம், வெட்கமூட்டும் துன்பங்கள், அழுக்கு, விஷமம், பின் தங்கிய சிறுவர்களுடன் அவன் படித்த சிறப்புப் பள்ளி. அதற்குப் பின்புதான் அந்தக் காலம் வந்தது - நிமோனியாவிலிருந்து மீண்டு வந்த காலத்துடன் இணைந்தது அது. அவனது சின்ன ஃபோபியாக்களை, தங்களுடைய மகனின் மேதைமையினால் விளைந்தது என்று அவர்கள் திடமாக நம்பியது அவனை இன்னும் சிக்கலுக்குள்ளாக்கியது. சராசரி மனங்களுடன் இணைய முடியாததாகிவிட்டது.
இதையும் இன்னும் பலவற்றையும் அவள் ஏற்றுக் கொண்டாள் - ஒவ்வொரு மகிழ்ச்சியாய் இழந்து வருவதுதான் வாழ்க்கை என ஒப்புக் கொள்ளப்பட்டபின் வேறு வழி? - அதுவும் அவளுடைய விஷயத்தில் மகிழ்ச்சிகள்கூட இல்லை - முன்னேற்றத்திற்கான சாத்தியங்கள் மட்டுமே. அவள் மனம் யோசனைகளில் ஆழ்ந்தது : ஏதேதோ காரணங்களுக்காய் அலையலையாய் அடித்த துன்பங்களை அவளும் அவள் கணவரும் அனுபவித்தது; கண்களுக்குப் புலப்படாத சாத்தான்களால் கற்பனைக்கப்பாற்பட்டு தன் மகன் துன்புறுத்தப்படுவது; கணக்கிட முடியாத அளவிற்கு இந்த உலகம் கொண்டுள்ள அன்பு - ஆனால் அது நசுக்கப்பட்டோ அல்லது வீணடிக்கப்பட்டோ அல்லது பைத்தியமாகவோ மாறியிருப்பது; உதாசீனப்படுத்தப்பட்டு மூலையில் தங்களுக்குள் பாடியபடி இருக்கும் சிறுவர்கள்; விவசாயிகளிடமிருந்து ஒளிந்து கொள்ள முடியாத விதைகள், பூதாகரமான இருட்டு சமீபிக்க, அவனது கூன்விழுந்த நிழல் கசங்கிய மலர்களை விட்டுச் செல்வதைப் கையறு நிலையில் பார்க்க வேண்டிய கட்டாயம்.
(தொடரும்)
இதன் ஆங்கிலப் பிரதியை இங்கு வாசிக்கலாம் :
http://www.angelynngrant.com/nabokov.html
கார்காலக் குறிப்புகள் - 60
2 hours ago
2 comments:
சார், ரொம்ப நல்லா இருக்கு..
//he removed
his new hopelessly uncomfortable dental plate and severed the long tusks
of saliva connecting him to it.//
இந்த பகுதியின் மொழிபெயர்ப்பை ரெம்பவும் எதிர்பார்த்தேன். :-)
நன்றி, கார்த்திகேயன்.
Post a Comment