மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஈழப்பிரச்சனையை தேர்தல் அரசியலாக்கலாமா எனச் சிலர் வினவக்கூடும். ஆனால், தேர்தல் - அரசியலில் ஈடுபடும் கட்சிகள் இதைத் தேர்தல் பிரச்சனையாக்குவதே சரியானது.
தமிழகத்தில் இப்போதிருக்கும் அரசியல் அணிகளே நீடித்தால் அது நகைப்புக்குரியதாகிவிடும். யோசித்துப் பாருங்கள்; வைகோ ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணியில் இருந்து கொண்டு ஈழப்பிரச்சனையில் எங்கள் நிலைபாடுகளுக்கு வாக்களியுங்கள் என்றால் மக்கள் எதால் சிரிப்பார்கள்? இதேதான் வலது கம்யூனிஸ்டிற்கும். ராமதாசின் பாமக (காங்கிரஸ் கூட்டணியிலிருக்கும்) திமுகவுடன் இருந்தாலும் சரி, அதிமுகவிற்கு வந்தாலும் சரி, அவர்களாலும் இதைத் தேர்தல் பிரச்சனையாக்க முடியாது. திருமாவளவனுக்கும் இதே நிலைதான். விஜயகாந்தின் தேமுதிக ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைகளைப் பற்றி வாயே திறப்பதில்லை. சரத்குமாரின் கட்சி வாயைத் திறந்தாலும் மூடிக் கொண்டிருந்தாலும் யாரும் பொருட்படுத்தப் போவதில்லை!
ஆனால் குமுதம் மாதிரியான சில பத்திரிகைகளின் கருத்துக் கணிப்பில் ஈழம் என்பது முக்கியப் பிரச்சனையாக மக்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு வைகோ, ராமதாஸ், தா பாண்டியன், திருமாவளவன் ஓரணியாகத் திரண்டால் அவர்கள் ஈழப் பிரச்சனையை வாக்கு அரசியலாக முன்னெடுக்கலாம். அதற்கு தனி நபர் ஈகோ, தொகுதிப் பங்கீடு போன்ற பிரச்சனைகள் வராதிருக்க வேண்டும். இதைத் தங்கள் முன்னுள்ள ஒரு வரலாற்றுக் கடமையாக அவர்கள் பார்க்க வேண்டும்.
வெகுஜனத் தொலைக்காட்சி ஊடகங்கள் அழவைக்கும் தொடர்களிலும் ஆட்டங்களிலும் மக்களை மூழ்கடித்தாலும் பலரிடம் பேசுகையில் இலங்கையில் கொல்லப்படும் தமிழ் இனத்திற்கான அவர்களது கவலை புரிகிறது (1980களில் இருந்த மாதிரியான பெரிய எழுச்சி வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளே கனன்று கொண்டிருப்பதாகவே உணர்கிறேன்).
மத்தியில் காங்கிரசோ அல்லது அது ஆதரிக்கும் ஓர் அணியோ ஆட்சிக்கு வராத பட்சத்தில் இங்கிருந்து செல்லும் எம்பிக்கள், கறவை மாடுகளான அமைச்சரவைகளைக் கேட்காமல் (ஒரு மாறுதலுக்குத்தான்!) இலங்கையில் போர் நிறுத்தத்தை தங்கள் ஆதரவிற்கு முன் நிபந்தனையாக வைக்கலாம். போர் நிறுத்தம் நடைபெற்ற பிறகே தங்களின் கட்சிகள் அரசில் சேரும் என நிபந்தனை விதித்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கோ அல்லது மூன்றாவதோ அல்லது முப்பதாவது அணிக்கோ இருக்கும்.
இப்படி ஓர் அணி உருவாகாவிட்டால், திருமங்கலம் இடைத்தேர்தல் போலவே மக்களவைத் தேர்தலிலும் ஈழப் பிரச்சனை பேசப்படாமலேயே போகலாம். அது சோகமானது.
குறிப்பு : (http://www.kalugu.com/ தளத்திற்காக எழுதப்பட்டது. இதன் ஆங்கில வடிவத்தை இங்கே வாசிக்கலாம் : http://kalugu.com/2009/03/04/elections-and-the-sri-lanka-crisis/. மொழிபெயர்த்து வெளியிட்ட கழுகு.காமிற்கு நன்றி.
கார்காலக் குறிப்புகள் - 66
4 days ago
19 comments:
அருமையான கட்டுரை
நன்றி
தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்திருபது உண்மைதான்.
//ஈழம் என்பது முக்கியப் பிரச்சனையாக மக்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு வைகோ, ராமதாஸ், தா பாண்டியன், திருமாவளவன் ஓரணியாகத் திரண்டால் //
டால்..ஆனால் திரளமாட்டார்கள்..
நல்ல பதிவு..
இது தான் இன்றைய தமிழர்களின் தேவை. நீங்கள் சரியாக குறிப்பிட்டதுபோல் இது ஒரு வரலாற்றுக்கடமை. இந்தக் கூட்டணி உருவாகி வெற்றிபெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.
வரும் நாட்களை எதிர்பார்த்து....
குரு
//இப்படி ஓர் அணி உருவாகாவிட்டால், திருமங்கலம் இடைத்தேர்தல் போலவே மக்களவைத் தேர்தலிலும் ஈழப் பிரச்சனை பேசப்படாமலேயே போகலாம். அது சோகமானது.//
முற்றிலும் உண்மை!
இப்பொதைக்கு எனது(நம்து!?) சின்னம் 49 ஓ!
ஐயா நீங்க சொன்னது எல்லாம் சரி, இப்போ யாருக்காவது ஒட்டு போட்டாக வேண்டிய கடமை இருக்கு. அதிமுக ஈழ எதிர்ப்பு ஒட்டு விழும் னு நம்பிக்கைல இருக்கு. திமுக வேறு வளர்ச்சிகளை காட்டி, கலைஞர் உடல் நலம் குறைவு கண்பித்து அனுதாப ஒட்டு வாங்க நினைகிறது. வை கோ கூ ட்டனி இல்லாமல் இருந்த பரவாயில்லை. இப்போ மக்கள் என்ன செய்ய வேண்டும் அதை சொல்லுங்க ......
வால்பையன், நர்சிம், குரு, நாமக்கல் சிபி, அனானி... நன்றி.
எங்கள் ஊரில் ஏழ பிரச்சனை ஒரு அரசியல் காரண்மாக இல்லை என்பதும் , மக்கள் அதை பொர்ட்படுத்தவில்லை என்பது உண்மை ( அந்திராவை ஒட்டி). இப்பொழுது உள்ள நிலையில் ஈழ பிரச்சனை முன் வைத்து நீங்கள் ஓட்டு போட்டால் , நீங்கள் 49ஓ தான் போட வேண்டும் . எத்த்னை ஓக்கள் விழுகின்றன என்பதை பார்க்க வேண்டும்.
மத்தியில் காங்கிரஸ் அல்லாது பாஜாக கூட்டனி தான் வரும் , அப்ப்டி பார்த்தாலும் அவர்களுக்கு ஈழ பிரச்சனை தூரம்.
எந்த மத்திய அரசும் அமெரிக்கவிற்க்கு ஜல்ரா போடும் என்பதால், அமஎரிகா நிலைபாடையே வரும் மத்திய அர்சும் கடைபிடிக்கும் .
ஈழ பிரச்சனை தடம் மாறி போய்க்கொண்டிருக்கிறது ..அல்லது போய்விட்டது.
//இப்படி ஓர் அணி உருவாகாவிட்டால், திருமங்கலம் இடைத்தேர்தல் போலவே மக்களவைத் தேர்தலிலும் ஈழப் பிரச்சனை பேசப்படாமலேயே போகலாம். அது சோகமானது.//
உங்கள் கவலை உண்மையானது. இது நிஜமாக மாறிவிடக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.
எங்களுக்கு குடும்ப சொத்தை பாதுகாக்கவும், அடுத்தவர் மீது பழி சுமத்தி, அரையணா பெறாத விஷயங்களையும் அரசியலாக்கவும், மனிதச் சங்கிலி என்னும் நாடகம் ஆடவும், தந்தி அனுப்பவும், இன்னும் எத்தனையோ வேலைகள் இருக்குது தல,
ஈழமா அது எங்க இருக்குது
வருகிற தேர்தலை ஈழப் பிரச்சினை பற்றிய ஒரு சர்வசன வாக்கெடுப்பு மாதிரி நடத்த வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.
,தமிழ்நாட்டு மக்களுக்கு என்று பல பிரச்சினைகள் இருக்கும்போது இந்த பிரச்சினையை மட்டும் முன்னிருத்தலாமா என்று சிலர் நினைக்க கூடும்.
ஆனாலும் இந்தக் கால கட்டத்தில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் உள்ள பிரச்சினைதான்.
தமிழ்நாட்டு உள்ளூர் நிலைமைகள் மிகவும் முக்கியம் ஆனவைதான் , என்றாலும் அவை மாநில அரசுக்கான தேர்தலில் முன்வைக்கப்படலாம் ,
ஈழப்பிரச்சினை இப்போது வாழ்வா சாவா என்ற நிலையில் ஒரு இனத்தின் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் ஒரு சிக்கலாக உருவெடுத்துள்ளது ,அத்துடன் இது மத்திய அரசோடு தொடர்புள்ள ஒரு வெளிவிவகார கொள்கை பற்றிய பிரச்சினையும் ஆகும் .
இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் தமிழ்நாட்டு மக்களுக்கு தங்கள் நிலைப்பாட்டை ஜனநாயக ரீதியில் சொல்ல இன்னொரு சந்தர்ப்பம் உடனே கிடைக்காது.
சிலவேளைகளில் தேர்தல் முடிவுகள் மிகவும் இறுக்கமாக இருக்கும் என்று சொல்கிறார்கள் ,இந்த நேரத்தில் ஈழதமிழ் ஆதரவான அரசியல்வாதிகள் வென்றால் அதன் மூலம் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய முயற்சிக்கலாம்.
இந்த நேரத்தில் சமயோசிதமாக மக்கள் வாக்குப் போடவேண்டும்.
உதாரணமாக,
காங்கிரசும் மதிமகவும் போட்டியிட்டால் --வாக்கு மதிமக வுக்கு.
அதிமுகவும் தேதிமுகவும் போட்டியிட்டால் -வாக்கு தேதிமுகவுக்கு.
கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவும் போட்டியிட்டால் --வாக்கு கம்யூனிஸ்ட் க்கு
திமுகவும் அதிமுகவும் போட்டியிட்டால் -வாக்கு இரண்டுக்கும் இல்லை -வேறு ஏதாவது சிறிய கட்சிக்கு.
அதிமுகவும் விடுதலைச்சிறுத்தைகளும் போட்டியிட்டால் -வாக்கு சிறுத்தைகளுக்கு.
கம்யூனிஸ்ட் உம் பாமகவும் போட்டியிட்டால் உங்களுக்கு யாரைப்பிடிக்குமோ அவருக்கு.வாக்கு போடுங்கள்.
மொத்தத்தில் யார் எந்தக் கூட்டணியில் இருந்தாலும்
அதிமுக ,காங்கிரஸ் ,திமுகவுக்கு வாக்குப் போடா வேண்டாம்.
தேதிமுக ஈழத்தமிழர் விஷயத்தில் ஆரம்பத்தில் மௌனம் சாதித்து இருந்தாலும் இதுவரை ஜெயலலிதா மாதிரி தமிழ் எதிர்ப்போ ,அல்லது காங்கிரஸ் மாதிரி முழுத்துரோகமோ அல்லது திமுக மாதிரி பச்சைத் துரோகமோ செய்யாத படியால் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம்.
அவர்களும் குட்டையில் ஊறிய மட்டைகள் மாதிரி நடந்தால் அடுத்த தேர்தலில் வாக்குப் போடாமல் தண்டிக்கல்லாம்.
In lot of countries, people vote tactically to put their point across and to get the desired outcome.
I think tamilnadu peeople should do the same.
vote tactically and punish the Tamil traitors.
சுந்தர்!
வை.கோ, ராமதாஸ், திருமா சேர்ந்து கூட்டணி அமைத்துவிட்டால்?
என்ன ஆகும் என்று எனக்குப் புரியவில்லை. இவர்கள் ஈழத்தமிழர்களுக்க்காக உண்மையாகவே குரல் கொடுப்பவர்கள் என்பதை என்னால் கடந்தகால அனுபவங்களிலிருந்து ஒப்புக்கொள்ள முடியவில்லை. மீசைக்கும் ஆசை, கூழுக்கும் ஆசை என்றிருக்கும் இவர்கள்தாம் மிக மோசமான சந்தர்ப்பவாதிகள்.கொண்ட கொள்கைக்காக(சரியோ, தவறோ) எதையும் இழக்கத் துணிபவர்களை நம்பலாம்.அதைச் செய்வதற்கான எல்லா வாய்ப்புகளிலும் போக்குக் காட்டியவர்கள்தாம் இவர்கள்.
//ஈழம் என்பது முக்கியப் பிரச்சனையாக மக்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு வைகோ, ராமதாஸ், தா பாண்டியன், திருமாவளவன் ஓரணியாகத் திரண்டால் // இது நடந்தால் நல்லது தான். எந்த அணியும் மத்தியில் வாக்கு-அரசியல் நடத்தும் நோக்கோடு திரள வேண்டும். அதுவும் ஈழம் முக்கியப் பிரச்சனை என்பது தமிழக மக்களுக்கு மட்டுமே!
To be fair, காஷ்மீர / அசாமியப் பிரச்சனைகளுக்கு (வலி/நிஜம் மிகுந்தாலும்) தமிழக மக்கள் ஒன்றையும் பெரிசாகச் செய்வதில்லை. It is Politics, not one-way traffic.
தமிழகத்தில் மட்டும் சில நூறு 49ஓக்கள் ஈழத்துக்கான இந்திய (மத்திய) அரசியலில் மாறுதலை ஏற்படுத்தப் போவதில்லை - என்பது எ.தா.க.! யாரு மாறுதல் தரப்போகிறாங்களோ, கட்டாயம் அவங்களுக்கு ஓட்டுப் போடுங்க. 49ஓ பற்றி என் கருத்து இங்கே: ஓட்டு போடுங்க, 49ஓ போடாதீங்க!.
நல்ல கட்டுரை
ஆனால் ஓரணியாகத் திரளமாட்டார்கள்
//
மத்தியில் காங்கிரசோ அல்லது அது ஆதரிக்கும் ஓர் அணியோ ஆட்சிக்கு வராத பட்சத்தில் இங்கிருந்து செல்லும் எம்பிக்கள், கறவை மாடுகளான அமைச்சரவைகளைக் கேட்காமல் (ஒரு மாறுதலுக்குத்தான்!) இலங்கையில் போர் நிறுத்தத்தை தங்கள் ஆதரவிற்கு முன் நிபந்தனையாக வைக்கலாம்.
//
இவர்கள் டெல்லி செல்வதே கறப்பதற்கு எனும் போது எப்படி இப்படி ஒரு கோரிக்கை வைப்பார்கள்?? வேண்டுமானால், பார்லிமெண்டில் இது குறித்து கேள்வி கேட்க லஞ்சம் கொடுத்து பார்க்கலாம்!
எனது வாக்கு இப்படி அமையும்.
எனது தொகுதியில்
பாமக/ விடுதலைச் சிறுத்தைகள் -அதிமுக/மார்க்சிட் கம்னியூஸ்ட் போட்டியிட்டால் எனது வாக்கு பாமக /விடுதலைச் சிறுத்தை
மதிமுக/இந்தியக் கம்னியூஸ்ட் -திமுக/காங்கிரஸ் போட்டியிட்டால் எனது வாக்கு மதிமுக/இந்தியக் கம்னியூஸ்ட்
மதிமுக/இந்தியக்கம்னியூஸ்ட் - பாமக/விடுதலைச்சிறுத்தைகள் போட்டியிட்டால் எனது வாக்குகள் வேட்பாளர்களில் யார் தமிழ் உணர்வு கூடியவர் என்று பார்த்துப் போடுவேன்
அதிமுக/மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் - காங்கிரஸ் போட்டியிட்டால் எனது வாக்கு சுயேட்சை வேட்பாளர் ஒருவர் அல்லது பிஜேபி( வேட்பாளரைப் பொறுத்து)
திமுக -அதிமுக/மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் போட்டியிட்டால் எனது வாக்கு சிலவேளைகளில் திமுகவுக்கு போடுவேன் (வேட்பாளரைப் பொறுத்து) அல்லது சுயேட்சைக்கு வழங்குவேன்
இதே கருத்தை இராசேந்திரசோழன் சற்று விளக்கமாகவே எழுதியிருக்கிறார். நண்பர்கள் அதையும் கீழ் கண்ட தொடுப்பில் படித்திருக்கலாம். இல்லாவிட்டால் படித்துவிடவும்.
http://www.keetru.com/literature/essays/Rajendra_Chozhan_7.php
//இந்த நேரத்தில் சமயோசிதமாக மக்கள் வாக்குப் போடவேண்டும்.
உதாரணமாக,
காங்கிரசும் மதிமகவும் போட்டியிட்டால் --வாக்கு மதிமக வுக்கு.
அதிமுகவும் தேதிமுகவும் போட்டியிட்டால் -வாக்கு தேதிமுகவுக்கு.
கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவும் போட்டியிட்டால் --வாக்கு கம்யூனிஸ்ட் க்கு
திமுகவும் அதிமுகவும் போட்டியிட்டால் -வாக்கு இரண்டுக்கும் இல்லை -வேறு ஏதாவது சிறிய கட்சிக்கு.
அதிமுகவும் விடுதலைச்சிறுத்தைகளும் போட்டியிட்டால் -வாக்கு சிறுத்தைகளுக்கு.
கம்யூனிஸ்ட் உம் பாமகவும் போட்டியிட்டால் உங்களுக்கு யாரைப்பிடிக்குமோ அவருக்கு.வாக்கு போடுங்கள். //
மேற்கண்டதில் கம்யூனிஸ்ட்டுகள் என்று பொதுவாக குறிப்பிட்டிருப்பது, கவனக்குறைவானது. கம்யூனிஸ்ட்டுகளில் CPM வெளிப்படையாகவே தம் தமிழின-தமிழீழ வெறுப்பை கொட்டியிருக்கிறது, உ.ரா.வரதராசனிலிருந்து படைப்பாளி மாதவராஜ் வரை. ஆகவே நமது புறக்கணிப்பு திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் CPM எனபதாகவே இருக்க வேண்டும்.
நல்ல விவாதம்
என்ன செய்வது. கூட்டணி அமைத்து ஈழம் அமையலாம் என்ற கனவில் அந்த கூட்டணி நாளை வென்ற பிறகு ஈழத்திற்கு எதிராக மாறாது என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உள்ளதா ? அல்லது நம்புவதற்குரிய யோக்கியர்களாக அவர்கள் இருப்பினும் சட்டத்தை அவர்களால் இயற்ற மட்டும்தானே முடியும். செயல்படுத்த போவது ரா, ஐபி, ராணுவம், ஐஎப்எஸ் வகையறாக்கள்தானே... பிறகு எதற்கு ஈழ விடுதலையை இந்த கோமாளிக்கூத்தான தேர்தலுடன் நீங்களும் தொடர்பு படுத்துகின்றீர்கள். சாலையை கடக்கும் முன் அந்த பச்சை கலர் லாரி பாலத்திலிருந்து இறங்கி விட்டால் இன்றைக்கு நடக்கும் கணக்கு பரீட்சையில் பாஸ் ஆகி விடுவேன் என கணக்கே வராத சிறுவர்கள் நினைப்பது போல உள்ளது உங்களது எதிர்பார்ப்பு...
அதுதான் சொல்கிறேன்.. தேர்தலை புறக்கணிப்போம்...49ஓ என்ற போலிப் புறக்கணிப்பு கூட இங்கு ஜனநாயகம் நிலவுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும். ஈழத்திற்கும் தேர்தலுக்கும் உறவு இல்லை என்பதைப் புரிந்து கொண்டு எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் ஈழத்தை ஆதரித்து போர்நிறுத்தம் செய்யச் சொல்லி வலியுறுத்த கூட மாட்டார்கள். ஏனெனில் நமது ராணுவமே அங்கு இலங்கை ராணுவத்துடன் இணைந்து போரில் ஈடுபட்டுள்ளது.
சண்டாளச்சாமி நீங்கள் சொன்னது சரிதான்.
நான் கம்யூனிஸ்ட் கட்சி என்று சொன்னது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அல்ல.
காங்கிரஸ் ,அதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,திமுக இந்த நான்கு கட்சிகளையும் வருகிற நாடளுமன்றத் தேர்தலில் பகிஷ்கரியுங்கள்
இந்த நான்கு கட்சிகளுக்கும் வாக்குப் போடாதீர்கள்.
ஆக மொத்தத்தில் இவர்கள் (தமிழக, இந்திய, அகில உலக கட்சிகள்) மீண்டும் ஈழ பிரச்சினையை வைத்து ஆதாயம் தேடுவார்களே தவிர, அதற்கு தீர்வு காணும் எண்ணமோ, ஆர்வமோ எள்ளளவும் கிடையாது.
அக்னி பார்வை, தராசு, மாதவராஜ், கெக்கேபிக்குணி, அது சரி, சண்டாளச்சாமி, ஜோ, அனானிகள்... நன்றி.
Post a Comment