ஆடிச்சாமிகள் அல்லது கொடைகாலம்

வாடிக்கிடந்த சாமிகளுக்கு
ஆடிக்காலம் கொண்டாட்டம்
சுடலை மாடன் இசக்கி பேச்சி
பிரம்ம சக்தி முண்டன் முனியன்
உச்சி மாகாளி மாரியம்மன்
வடக்கு வாசிசெல்வி பத்ரகாளி
முத்தாரம்மன் பூதத்தான் சங்கிலி
இன்னபிற பெயரில்லாப்
பூடங்களும் பூஜைக்குத் தயாராவர்
கூரையில்லாக் கூத்தனுக்கும்
குறைவில்லாப் படையலுண்டு
கொட்டு மேளம் குறவை
நையாண்டி கணியன் வில்லுப்பாட்டு
கும்பம் குமரி குட்டைப் பாவாடை
செவியடைக்கும் டென்ஷனில்
செல்லப்ப வாத்தியார் இடுப்புக் கச்சுடன்
வாங்கிய காசுக்கு
வராத சாமிக்காக
வயிறு எக்கி வாசிப்பான்
வட்டக் கோட்டை நாதஸ்வரம்
சுடலையை கடைசிவரை
தாமிரபரணி தாண்டாமல்
பார்த்துக் கொள்வாள்
சுசீந்திரம் வில்லுக்காரி
காது பொத்திப் பாடும்
கணியான் பாட்டு காற்றில்
வார்த்தைகளற்று கரையும்
கடன்காரன் எதிர் வரா
தைரியத்தில்
மயான வேட்டைக்குச் செல்லும்
மாசானத்திற்கு
மத்திய அமைச்சரின் மிடுக்கு
அறுப்பவன் கத்தியையே
பார்த்துக் கொண்டு ஓசைக்கு
அஞ்சிக்கிடக்கும்
உருண்டு திரண்ட கிடாக்கள்
இறுதியில் கிடைக்கும் கிடாக்கறி
ஊர்ப் பெரிய கிடாக்களுக்கு மட்டும்
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு
எப்போ அடுத்த ஆடி
என்றிருப்பான்
எல்லைச் சாமி

குமார்ஜி எழுதியது

26 comments:

டக்ளஸ்... said...

\\சுதீந்திரம் வில்லுக்காரி\

சுசீந்திரமா..? சுதீந்திரமா..?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி டக்ளஸ். மாற்றிவிட்டேன்.

Anonymous said...

http://dystocia.weblogs.us/

கவிக்கிழவன் said...

காது பொத்திப் பாடும்
கணியான் பாட்டு காற்றில்
வார்த்தைகளற்று கரையும்
நன்றாக உள்ளது

ஆடுமாடு said...

அண்ணே. நம்ம ஏரியாவே இருக்கேன்னு நினைச்சேன். அதானே குமார்ஜி நல்லா எழுதியிருக்கார்னு சொல்லுங்கோ.


வாழ்த்துக்கள்.

தராசு said...

//எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு
எப்போ அடுத்த ஆடி
என்றிருப்பான்
எல்லைச் சாமி//

இதுதான் உண்மை குருஜி.

பா.ராஜாராம் said...

அருமையான கவிதைடா மக்கா...ராஸ்கல்...எங்கடா இருந்தான் இவன் இவ்வளவு நாளா.நன்றி சுந்தரா...

துபாய் ராஜா said...

எங்கள் நெல்லையின் கொடை கால கொண்டாட்டங்களை கண்முன் கொண்டு வந்த குமார்ஜியின் அனைத்து வரிகளும் அருமை.

பதிவிலேற்றிய தங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

மண்குதிரை said...

யார் இந்த குமார்ஜி ?
நல்லா இருக்கு.

குப்பன்_யாஹூ said...

wow, super Thanks to Kumarji, Thanks to Sundar

நேசமித்ரன் said...

அடி வயிற்றில் அதிர்கிறது ஜி கொட்டுச் சத்தம்

மஞ்சூர் ராசா said...

என்ன செய்ய கிராமத்து சாமிகளுக்கு தினம் தினமா பூசை போட முடியும்?

அடுத்த வருசம் வரை காத்திருக்க வேண்டியது தான்.

குமார்ஜியின் கவிதையில் கிராமிய மணம் கமழ்கிறது.
நன்றி சுந்தர்.

கிர்பால் said...

மண்வாசனையை நுகரச் செய்த குமார்ஜிக்கு, கவிதை அருமை.

D.R.Ashok said...

:)

அத்திரி said...

கவிதை முழுக்க எங்க ஊர் நெல்லை மணம் வீசுகிறது....அருமை ஐயா

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்valaiyam@gmail.com

யாத்ரா said...

குமார்ஜி அவர்களின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பகிர்விற்கு மிக்க நன்றி.

பிரவின்ஸ்கா said...

கவிதை நல்லாருக்கு
குமார்ஜி ?

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

என்.விநாயகமுருகன் said...

ஒரு திருவிழா பார்த்த எபக்ட்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கவிக்கிழவன், ஆடுமாடு, தராசு, பா ராஜாராம், துபாய் ராஜா, மண்குதிரை, குப்பன் யாஹூ, நேசமித்ரன், மஞ்சூர் ராசா, கிர்பால், அஷோக், அத்திரி, யாத்ரா, பிரவின்ஸ்கா, வினாயகமுருகன், அனானி, செய்திவளையம்... நன்றி.

கார்க்கி said...

அருமை தல.. யார் இந்த குமார்ஜி?

கிருத்திகா said...

அய்யோ இப்பத்தான் கொஞ்ச நாள் முன்னாடி (ஜெமோ) மாடன் மோட்சம் படிச்சேன்..குறைந்த பட்சம் நாலுதடவை படிச்சிருப்பேன்.. அத்தனை ரசம்... இந்தக்கவிதையும் கூட.. சில நல்ல கவிதைகளை அடையாளம் காட்டுகிறீர்கள்.. சி.மணி கவிதைகளை வாசிக்கும் போதெல்லாம தங்கள் நினைவு வருகிறது.. நன்றி சுந்தர்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி கார்க்கி & கிருத்திகா.

Nundhaa said...

நல்லாயிருக்கு குமார்ஜி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, நந்தா.

" உழவன் " " Uzhavan " said...

//வராத சாமிக்காக
வயிறு எக்கி வாசிப்பான்
மயான வேட்டைக்குச் செல்லும்
மாசானத்திற்கு
மத்திய அமைச்சரின் மிடுக்கு
அறுப்பவன் கத்தியையே
பார்த்துக் கொண்டு ஓசைக்கு
அஞ்சிக்கிடக்கும்
உருண்டு திரண்ட கிடாக்கள்//

நல்லாருக்கு. அருமை..