ஆழி சூழ் உலகு

ஆழி என்பது கடலில் அலைகள் பொங்குமிடம் என்ற குறிப்புடன் ஆரம்பிக்கிறேன்.

நூறாண்டுகளுக்கு மேலாக எழுதப்பட்டும் எண்ணிக்கையில் தமிழில் நாவல்கள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. என்ன அதிகபட்சம் ஒரு 100, 150 குறிப்பிடத்தக்க நாவல்கள் இருக்குமா?

இந்தத் தலையணை சைஸ் புத்தகங்கள் என்றால் (ஜெமோ புண்ணியத்தில்) எனக்கு அலர்ஜி. பின் தொடரும் நிழலின் குரலைப் படித்தவன் இன்னும் விஷ்ணுபுரத்தைப் படிக்கவில்லை. கொற்றவை பக்கமே போகக்கூடாதென்று முடிவு செய்துவிட்டேன்.

கென், தமிழில் வந்த முக்கியமான நாவல்களுள் ஒன்று, படித்துப் பாருங்கள் என்று போன வருடம் சொன்னார். இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது.

எட்டு மாதங்கள் கழித்து படிக்க ஆரம்பித்தேன். படித்து முடிக்க கிட்டத்தட்ட 10 நாட்கள் அகிவிட்டன. காரணம் என்னுடைய சோம்பேறித்தனமும் வேலைகளும்தானே தவிர, நாவல் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவுமே சென்றது.

மீனவர்களைக் களமாகக் கொண்டது இந்நாவல். பெரிய நாவலுக்கே உரிய குணமான பலதரப்பட்ட மனிதர்கள், சிக்கல்கள், வாழ்க்கைப் பாடுகளைப் பற்றி பக்கம் பக்கமாகப் பேசுகிறது. இந்த நாவலில் முக்கியமான அம்சமாகத் தெரிவது மரணம் - கிட்டத்தட்ட இரண்டு பக்கங்களுக்கு ஒரு மரணம். மனிதர்கள் கூட்டம் கூட்டமாகவும் தனித் தனியாகவும் செத்துக் கொண்டே இருக்கின்றனர். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை முன்னிறுத்தும் நாவலோ என்றுகூடத் தோன்றுகிறது. மரணத்திலிருந்து தப்பிக்க தியாகத்தை முன்வைக்கிறார் ஆசிரியர் (’நண்பர்களுக்காக உயிர் விடுவது ஆகப் பெரிய தியாகம்’). பங்குத் தந்தை காகு சாமியாரைப் பற்றி விரிவாகவும் உருக்கமாகவும் எழுதியிருக்கிறார் ஜோ டி குரூஸ்.

ஆழியில் சிக்கி மரணத்திற்கெதிரான மூவரின் போராட்டத்துடன் நாவல் துவங்கி, அதில் ஒருவன் ஜெயிப்பதுடன் முடிகிறது. நடுவில் முன்பின்னாக காலத்தில் நகர்ந்து விரிவாகவும் ஆற அமரவும் ஆமந்துறை மீனவர்களின் கதையைச் சொல்கிறது. கூடவே நாடார்களின் கதைகளையும், பங்குத் தந்தைகளின் கதைகளையும்.

இதைத் தவிர ஜோ டி குரூஸ் வேறு ஏதாவது எழுதியிருக்கிறாரா தெரியவில்லை. ஆனால் இந்த நாவலில் அமெச்சூர்த்தனம் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது. நல்ல எடிட்டர் கிடைத்திருக்கலாம்! அடிபட்டிருக்கும் ஜஸ்டினை வசந்தா தைலம் தேய்த்து மயக்குவது, குளிக்கும்போது உடல் அழகைக் காட்டி சுந்தரி டீச்சர் சூசையை மயக்குவது என மலையாள பிட் பட ரேஞ்சிற்கு மேல் யோசிக்க மறுக்கிறார் ஆசிரியர்!

மீன்களைப் பற்றி, மீன் பிடிப் படகுகள் பற்றி, வலைகளைப் பற்றி, கடலைப் பற்றி, கடலில் புயலைப் பற்றி எனப் பல நுட்பமான தகவல்கள் நாவலின் கதைப் போக்கில் வருகின்றன. அவை வெற்றுத் தகவல்களாகத் துருத்திக் கொண்டிருக்காமல் கதையின் போக்கோடு இணைந்திருக்கின்றன.

1933ல் துவங்கி 1985 வரை மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை விரிவாகப் பேசியிருக்கிறது நாவல். முழுக்க வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலின் உட்புக கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். ஆனால் அது ஆரம்பத்தடைதான், சில பக்கங்களிலேயே பழகிவிடும்.

ஆகச் சிறந்த நாவலென்று சொல்ல முடியாவிட்டாலும் தமிழில் வந்த முக்கியமான நாவல்தான் என்று தோன்றுகிறது. படிக்காதவர்கள் படித்துப் பார்க்கலாம்.

23 comments:

இராகவன் நைஜிரியா said...

ஆழி சூழ் உலகு பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றேன் அண்ணே. இதுவரை படித்ததில்லை. உங்க விமர்சனம் படித்தப்பின் படிக்கும் ஆவலைத் தூண்டுகின்றது.

நன்றி.

நிலாரசிகன் said...

அதுக்குள்ள படிச்சு முடிச்சாச்சா ஜி? :)

கார்க்கிபவா said...

வேலன் அண்ணாச்சிதான் அறிமுகப்படுத்தினார்.. பாதி படித்துவிட்டு அபப்டியே இருக்கிறது. காரணம் , நேரம் தான். சொன்னது போல் நாவல் சுவாரஸ்யமாகவே எனக்கு பட்டது..

மண்குதிரை said...

அவர் இந்த ஒரு நூல் மட்டும்தான் எழுதியிருக்கிறார் என்று எங்கோ வாசித்த ஞாபகம்.

பொதுவாக காத்திரமான வட்டார வழக்கு தொனியை அனுபவிக்காதவர்கள் உள்வாங்குவது நீங்கள் சொல்வது ஆரம்ப நிலை தடைதான். நானும் உணர்ந்திருக்கிறேன்.

கடல் சார்ந்த வாழ்க்கையை பதிவு செய்ததில், ஒரு முக்கியமான படைப்புதான்.

நர்சிம் said...

பகிர்விற்கு நன்றி குருவே.

மணிவண்ணன் said...

//நூறாண்டுகளுக்கு மேலாக எழுதப்பட்டும் எண்ணிக்கையில் தமிழில் நாவல்கள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. என்ன அதிகபட்சம் ஒரு 100, 150 நாவல்கள் இருக்குமா?//

நீங்க என்ன இப்படி சொல்லிட்டீங்க? தமிழ் எழுத்தாளர் ஒருத்தர் மட்டுமே 1500 நாவல் எழுதியிருக்காரு. தெரியாதா? :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, இராகவன் நைஜீரியா.

நன்றி, நிலாரசிகன். போன வாரம்தான் படிச்சு முடிச்சேன்.

நன்றி, கார்க்கி.

நன்றி, மண்குதிரை. மீனவர்களின் வாழ்க்கையை வேறு சில நாவல்களும் பதிவுசெய்திருக்கின்றன (வ.நிலவனின் கடல்புரத்தில் சட்டென்று நினைவுக்கு வருகிறது). ஆனால் இவ்வளவு விரிவாக இல்லை என்று நினைக்கிறேன்.

நன்றி, நர்சிம்.

நன்றி, மணிவண்ணன். அதெல்லாம் கணக்கில் சேர்த்தி இல்லை :)

Kumky said...

என்ன தல போகிற போக்கில் பிடிப்பே இல்லாமல் விமர்சனம் செய்துட்டிங்க..?

ஜே.டி.க்ரூஸின் முதல் நாவல் இது.அதுவே மிக ஆச்சர்யம்.

மூன்று தலைமுறை மீனவர்களின் வாழ்வு முழுதும் நம் கண்முன்னே நடக்கும்.அற்புதமான நாவல்.அருமையான கதைக்களம்.

சரி...மலையாள பிட்டுக்களில் வருவதெல்லாம் உண்மையில்லையா?

எங்கேனும் ஒரு மறைவிடங்களில் நிதமும் நடந்து வருவதுதானே....

உண்மையில் ஆபிசுக்கும் வீட்டுக்குமாக கூடவே பயணம் செய்தது படித்து முடிக்கும் வரை அந்த புத்தகம்.

கதையும் கதா பாத்திரங்களும் ரொம்பவும் உயிர்ப்புடன் இருக்கும் நாவலல்லவா....

யாத்ரா said...

நண்பர்கள் பரிந்துரைத்து எனக்கும் இந்த நாவல் வாசிக்க வேண்டிய பட்டியலில் இருக்கிறது. நண்பர் கும்க்கியும் மதுரை சந்திப்பின் போது இந்த நாவல் பற்றி நிறைய பேசியிருந்தார்.தமிழினி பதிப்பகம் என்று நினைக்கிறேன்.கூடிய சீக்கிரத்தில் வாசிக்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

Thamira said...

ஏற்கனவே இன்னும் படிக்காமல் அலமாரியில் இருக்குற புத்தகங்களையே என்ன பண்றதுன்னு தெரியல.. எப்பதான் இதையெல்லாம் படிக்கப்போறேனோ தெரியல..

அது சரி(18185106603874041862) said...

மீனவர்களின், குறிப்பாக தென் பகுதி மீனவர்களின் வாழ்க்கையை இது வரை யாரேனும் பதிவு செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை....

இதில் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது...

Sridhar V said...

நாவலின் அறிமுகத்திற்கு நன்றி. சந்தர்ப்பம் அமைந்தால் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

தோப்பில் கூட மீனவர்களின் வாழ்வைப் பற்றி ஒரு நாவல் எழுதியிருந்தார். பெயர் மறந்துவிட்டது.

முன்னர் தமிழில் சில நல்ல நாவல்களை பத்திரிகையில் தொடர்கதை என்றப் பெயரில் துண்டு துண்டாக்கி கொலை செய்து கொண்டிருந்தார்கள்.

//கொற்றவை பக்கமே போகக்கூடாதென்று //

சரி விடுங்கள். அதனால் கொற்றவைக்கு எந்த பாதிப்பும் இருக்காதில்லையா? :))

பா.ராஜாராம் said...

பகிர்வுக்கு நன்றி சுந்தரா.வாசிக்கணும்.

மாதவராஜ் said...

முதலில் பகிர்வுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இந்தக் கதையை இரண்டு வருடங்களுக்கு முன்பே படித்திருக்கிறேன். மொழியும், காட்சிகளும் புதியதாய் விரியும். தமிழில் குறிப்பிடத்தக்க நாவல்.

விநாயக முருகன் said...

பகிர்வுக்கு நன்றி.

வண்ணநிலவன் கடல்புரம் படித்துள்ளேன். அது போல இருக்கிறதா?

குப்பன்.யாஹூ said...

பகிர்தலுக்கு மிகுந்த நன்றி.

நானும் ஆதி மூலம் கட்சி, படிக்க வேண்டிய நாவல், சிறுகதை பல உள்ளன இன்னும் வாசிக்க மனம் ஆசை வர வில்லை.

இப்போதெல்லாம் கட்டுரைகளே அதிகம் ஈர்க்கின்றன. நாவல் சிறுகதை அந்த அளவு ஈடுபாடு வருவதில்லை. என்ன காரணம் என்று தெரிய வில்லை

ஜோ said...

தென் தமிழக மீனவ பின்புலம் என்பதால் மட்டுமே படித்த நாவல் ..என் பார்வை இங்கே..
http://cdjm.blogspot.com/2006/02/blog-post_22.html

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஸ்ரீதர் நாராயணன், அது கடலோர கிராமத்தின் கதை. தோப்பிலின் முதல் நாவல் என்று நினைவு.

வினாயக முருகன், கடல்புரத்தில் அடிப்படையில் ஒரு காதல் கதை. இந்நாவலைப் போன்ற விரிவும் ஆழமும் அற்றது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கும்க்கி. தமிழில் வந்த நாவல்களும் முக்கியமான ஒன்று என்பதுதான் என் அவதானமும்.

நன்றி, யாத்ரா.

நன்றி, ஆதிமூலகிருஷ்ணன் :)

நன்றி, அது சரி. மீனவர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்த நாவல்களாக உடனடி நினைவுக்கு வருவது வண்ண நிலவனின் கடல்புரத்தில் மற்றும் தோப்பில் முகம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்து கதை. கடற்கரையைப் பற்றியே அவை பிரதானமாகப் பேச, இந்த நாவலில் கடலைப் பற்றியும் பேசுகிறது. நிச்சயம் படித்துப் பாருங்கள்.

நன்றி, ஸ்ரீதர் நாராயணன். கொற்றவைக்கு ஒன்றும் பாதிப்பில்லை - என்ன நிறைய பேர் படிக்கவில்லை போல் தெரிகிறது :)

நன்றி, ராஜாராம்.

நன்றி, மாதவராஜ்.

நன்றி, விநாயக முருகன்.

நன்றி, ராம்ஜி யாஹூ. பரவாயில்லை, விடுங்கள். சில சமயம் அப்படித்தான் இருக்கும் :)

நன்றி, ஜோ. உங்கள் விமர்சனத்தை ஏற்கனவே படித்துவிட்டேன்.

RV said...

ஜ்யோவ்ராம்,

ஆழி சூழ் உலகு ஆரம்பித்தவுடன் பிடிக்கும் என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் தொடர முடியாமல் பாதியிலேயே நிற்கிறது.

அப்புறம் விஷ்ணுபுரம்,பி.தொ.நி. குரல் பற்றி எழுதி இருந்தீர்கள். விஷ்ணுபுரம் தலையணை சைசில் இருப்பது உண்மைதான் - எனக்கும் படிக்க மனத்தடை இருந்தது. ஆனால் ஒரு நூறு பக்கம் தாண்டிய பின் கீழே வைக்க முடியவில்லை. முயற்சி செய்து பாருங்கள்! (ஜெயமோகன் அவரது அடுத்த நாவல் கிட்டத்தட்ட 3000 பக்கத்தில் வெளியிட திட்டம் இட்டிருப்பதாக சொன்னார். ;-))

RAGUNATHAN said...

ஆழி சூழ் உலகு நாவலில் சுந்தரி டீச்சர் சூசையை மயக்கும் காட்சியை புத்தக கண்காட்சியில் எடுத்து படித்திருக்கிறேன். உங்கள் விமர்சனம் முழுவதையும் படிக்கத் தூண்டுகிறது. பகிர்வுக்கு நன்றி சுந்தர் அவர்களே :)

RAGUNATHAN said...

//(ஜெயமோகன் அவரது அடுத்த நாவல் கிட்டத்தட்ட 3000 பக்கத்தில் வெளியிட திட்டம் இட்டிருப்பதாக சொன்னார்.//

RV அவர்களே அது 5000 பக்கங்கள் என்றும் 5 தொகுதிகள் என்றும் தமிழினி வெளியீடாக வருகிறது என்றும் சொல்கிறார்கள். பார்ப்போம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, RV. தெரியவில்லை - என்றாவது ஒரு நாள் படிக்க முயற்சிக்கலாம் :)

நன்றி, ரகுநாதன்.