கவித்துவ உரைநடை எழுதியிருக்கிறீர்களா? அதற்கும், கவிதையில் வரும் உரைநடைக்கும் என்ன வித்தியாசம்?
சில கதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். பிரசுரமான ஓரிரு கதைகளுக்குக் கிடைத்திருக்கும் எதிர்வினை, என் இரண்டு கவிதைத் தொகுதிகளுக்கும் கிடைத்த எதிர்வினையைவிட அபாரமானது. இது எனக்குள் நுட்பமான ஆதங்கமொன்றை உருவாக்குகிறது. கவிதை பற்றி, தமிழ் நவீன இலக்கியச்சூழலில் உருவாகியிருக்கும் அக்கறையின்மையின் சான்றாக இதைப் பார்க்கிறேன்.
கவித்துவ உரைநடை என்பதை, ‘கழுதைப்புலி’ போன்ற ஒரு சொல்லாட்சியாகப் பார்க்கிறேன். உச்சாடன நடையில் தாளக்கட்டுடன் எழுதப்பட்டாலும் உரைநடை உரைநடைதான். தட்டையாக நேரடி வார்த்தைகளில் சொல்லப்பட்டாலும் கவிதை தனக்குரிய முடிவின்மை மற்றும் மர்மத்துடன் இருக்கும். லா.ச.ரா. சிறுகதைகளையும் நகுலனின் கவிதைகளையும் உதாரணங்களாகச் சுட்டலாம்.
புனைகதை ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி அதில் தர்க்கத்துக்கு உட்பட்ட / அப்பாற்பட்ட ஆழ்நிலைகளை உருவாக்கிக் காட்டுவது. கவிதையோ தன்னளவிலேயே பூரணமான சந்தர்ப்பமாக அமைவது. கவிதை தொடங்க ஓரிரு வார்த்தை போதும். புனைகதையில் இப்போது, இங்கு என்ன நிகழ்கிறது அல்லது நிகழவில்லை என்ற குறிப்பு, பூரித்தியான பிறகே அது தன் ஓட்டத்தை ஆரம்பிக்க முடியும். “மண்ணில் தெரியுது வானம்” என்பது தரிசனம் சார்ந்த ஒரு வரி. அதற்கு முன்னால் பாரதி சேர்க்கும் “அட!” என்ற பதத்தின் வழியாக அது விந்தையுணர்ச்சியாக, நேரடி அனுபவமாகப் பரிணமித்து விடுகிறது.
கவிதையின் காலக்கட்டமைப்பு வேறு. புனைகதையினுடையது வேறு. இரண்டையும் சொல்லலில் இருவேறுபட்ட ஒழுங்குகளாகப் பார்க்கிறேன். மோசமாகச் சொல்லப்பட்ட ஒரு நல்ல கவிதையை நீங்கள் எனக்கு காட்டமுடியாது. ஆனால், புனைகதையில் இது சாத்தியமே. நவீன சிறுகதை கையாளக்கூடிய தர்மசங்கட நிலைகளை வெகுஜன எழுத்துகளிலும் சர்வ சாதாரணமாகக் காண முடியும். தீவிரத்தன்மையும் விசாரணை மனப்பான்மையும் குன்றியிருக்கும்; அவ்வளவுதான்.
கவிதையில் உள்ள தருக்கம், அர்த்தம், தரிசனங்கள் என்பவை எல்லாமே கவிதையை நிகழ்த்துவதன் பொருட்டு அது மேற்கொள்ளும் பாவனைகள் - தோரணைகள் மட்டுமே என்று கருதுகிறேன். கவிதையின் அனுபவம் சார்ந்து மட்டுமே அவற்றுக்கு மதிப்பு. வெளியே அவை வெறும் வரிகள்தான். உங்கள் கருத்து என்ன?
எந்தக் கலைமுயற்சி பற்றியும் இப்படிக் கூறமுடியுமே! ‘இசை’ மிகச் சிறந்த உதாரணம். மாறுபட்ட அதீத சப்த ஒழுங்கு இசைஞனின் அனுபவ தளத்துக்குள் என்னை இழுத்துச்செல்ல முயல்கிறது. அத்தளத்திற்குள் நுழைய எனக்கு வேட்கை இருக்குமானால், நுழைந்து விடும் தீரமும் சுதந்திரமும் இருக்குமானால், அனுபவம் மட்டுமே மிஞ்சும். இசைப்பவன், ஒலி, கேட்பவன் என்பதெல்லாம் இல்லாமலாகும்.
கவிதையிலிருந்து எதையும் ‘வெளியே’ எடுக்க முடியாது. எடுத்தால் ஒன்றுமே மிஞ்சாது.
கவிதையை, இக்கணத்துடன் வேறுவழியின்றி பிணைக்கப்பட்டுள்ள போதத்துக்கு எதிரான ‘கலகம்’ என்று கூறலாமா? அது காலமின்மையில் இருக்கும் அப்போதம் வெளிப்பாடு கொள்ளும் கணம்தானே?
நேர்மாறாக தற்கணத்துடன் மட்டுமே போதம் பிணைக்கப்படமுடியும் என்பதற்கான பருண்மையான அத்தாட்சியே கவிதை. பின்புலத்தில் உள்ள காலக்கூறுகள் ஒவ்வொன்றாக உருவப்பட்டு நிகழ்வு தனது தன்னியல்பான வெளியில் நிகழ்த்திக் காடப்படும் தருணம். அது, கவிதைக்கு வெளியில் செயல்படும் முக்கால உருவகத்திற்கு நேர் எதிரானது.
மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை
உடுத்தியிருக்கிறது
என்று தொடங்குகிறது ந.பிச்சமூர்த்தி கவிதை. அந்த மாந்தோப்பு எந்தக் காலம் சார்ந்தது? கடிகாரம், காலண்டர் அமைப்பு தீண்டமுடியாத ஆழ்தளங்களில், கவிதை தன்னை நிகழ்த்திக் கொள்கிறது.
மரவுரி என்றும்
டெரிகாட் என்றும்...
என்ற தேவதச்சனின் வரியில், வரலாறு தாண்டி வந்த தூரம் முழுக்க ஒரு பெருமூச்சாகக் கரைந்துவிடுகிறது.
யுவன், உங்கள் கவிதை விவாதங்களில் கவிதையிலிருந்து நீக்கப்பட சாத்தியமான எல்லாச் சொற்களையும் நீக்கிவிட்டு வாசிக்க முற்படுவதைக் கண்டிருக்கிறேன். ஏன் அது ஒரு நிபந்தணையாக, இலக்கணமாக இருக்க வேண்டும்?
அது கவிதையின் நிபந்தனையல்ல மோகன், மொழியின் நிபந்தணை. ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனியான கால - வெளிச் சுமை இருக்கிறது. அதன் நேரடி அர்த்தம் சார்ந்த தளத்துக்கு மேலாக அகராதியின் தரவுகளுக்கு வெளியே பெரிய அர்த்தப்புலம் உள்ளது. உதாரணமாக, ‘கூந்தல்’ என்ற சொல்லை ஓர் ஆண் பற்றிப் பேசும்போது கூறுவதில்லை.
ஆமாம். பெண் பற்றி பேசும்போதுகூட, நீளமான அழகான ஈலமையான தலைமயிர் என்ற பொருள் அதற்கு வந்துவிடுகிறது.
ஆகவே, ஒரு சொல் ‘சும்மா’ இருந்து கொண்டிருக்க முடியாது.
ஒரு மனநிலைத் தயக்கத்தைக் காட்ட, ஒருவிதமான இடைவெளியை நிரப்ப, ஏன் ஒரு சொல் கவிதையில் இருந்து கொண்டிருக்கக்கூடாது?
அதற்கு வார்த்தை தேவையில்லையே. நவீனக் கவிதை கண்டுபிடித்த புதிய இலக்கணங்களுள் முக்கியமானது, மௌனத்தைக் கவிதைக்குள் செருகும் உத்தி. மிஞ்சி மிஞ்சிப் போனால் முற்றாக முடிக்கப்பட்ட மூன்று அல்லது நான்கு வாக்கியங்களை உரிய இடங்களில் உடைத்து, இருபது அல்லது இருபத்தைந்து வரிகளில் எழுதப்படுகிறது நவீனக்கவிதை. சில சமயம் முற்றுப்பெற்ற ஒரே ஒரு வாக்கியம் ஆறேழு இடங்களில் உடைபட்டு ஒரு கவிதை உருவாகிவிடுகிறது. இந்த உடைப்புகள் மானசீக இடைவெளிகளையும் மேலதிக அழுத்தங்களையும் உருவாக்குவதற்கான முயற்சிகள்.
உன் உலகத்தில் இருப்பது
தான் குதூகலமாக
இருக்கிறது.
என்று நகுலன் எழுதினார். ‘இருப்பதுதான்’ என்று எழுதியிருந்தால் வராத பல சாத்தியங்கள் இந்த உடைப்பு மூலம் வந்துவிடுகின்றன.
கறாரான சொல்லாட்சியுடன் கவிதை ஏன் இருந்தாக வேண்டும்? நெகிழ்வான சகஜமான ஒரு சொல்லோட்டம் மூலம் அது பலவிதமான அகச்சாத்தியங்களை அடைய முடியுமல்லவா? சமீபகாலமாக, கவிதையில் அதற்கு ஏராளமான உதாரணங்களும் உள்ளன.
கவிதை ஒரு தீவிரமான அகநிலையைக் கிளர்த்துவது. மிதப்பான, உதிரியான, தளர்வான வரிகளைக் கவிதைக்குள் கொண்டுவர வேண்டுமானால் கவிதையின் உத்தேசத்தில் அதற்கான காரணம் இருக்க வேண்டும். பீம்சேன் ஜோஷி பாடிய, ‘ஜனகணமன’வைக் கேட்டால் நான் கூறுயது புரியும். சிறுவயது முதல் கேட்டுப் பழகிய பாடலும் மெட்டும்தான். ஜோஷி பாடும்போது அந்தப் பாடலில், அதன் மெட்டமைப்பில் அபூர்வமான குழைவும், வாஞ்சையும் இயைந்திருப்பது தெரியவந்தது. அதைக் கேட்ட பிறகுதான், அம்மெட்டை போட்டவரின் நோக்கத்துக்குப் பக்கமாக வந்து சேர்ந்திருப்பது புரிந்தது.
ஒரு கவிதையில் தேவையற்றதாகத் தெரியும் சில சொற்கள் ஓர் ஆழ்ந்த வாசிப்பில் ஒருவேளை அவனுடைய கலாசாரத்துடனோ, அக்கவிஞனின் ஆளுமையுடனோ ஆழமான, மௌனமான தொடர்பைக் கொண்டிருக்கும் வாய்ப்பு உள்ளது அல்லவா?
அதற்கான வாய்ப்பு உண்டுதான். ஆனால், அச்சொற்கள் ஒரு கவிதையில் பதிவு கொள்ளும்போது, அப்பதிவு பெறும் இடமாக அக்கவிஞன் ஒரு கவிதையைத் தேர்வு செய்யும்போது, கவிதையின் அந்தரங்கத்துடன் அச்சொற்களுக்குச் சம்பந்தமுண்டா என்பதும் முக்கியமானது. அந்தரங்கக் கவிதைகளில் இதுபோல ஒரு வார்த்தை அசந்தர்ப்பமாக இருக்குமானால் அந்தக் கவிதையே வெளிறிவிட வாய்ப்பு உண்டு. விமானத்தின் தன்மையும் திறனுமே ஓடுபாதையைத் தீர்மானிக்க வேண்டும். அதுபோன்று அசந்தர்ப்பமாகக் கவிதைக்குள் வந்துவிழும் சொற்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கவிஞனுக்குள் செயல்பட வேண்டிய தொகுப்பாளனின் கவனக்குறைவு, உருவப் பிரக்ஞை இல்லாமை போன்றவற்றுக்கான சாத்தியங்களாகவே உள்ளன.
சரி, இதெல்லாம் பொதுவான அபிப்ராயங்கள். விதிவிலக்குகள் இருக்கலாம். கவிதைகளைச் சொல்வீர்கள் என்றால், அச்சொற்கள் தேவையா இல்லையா என்று நாமிருவரும் சேர்ந்தே யோசிக்கலாம்.
கவிதை பற்றிப் பேசும்போது எப்படியோ மீண்டும் மீண்டும் அக்கவிஞனின் ஒட்டுமொத்த வாழ்க்கைப் பார்வை - இதை நான் தரிசனம் என்பேன் - பற்றிப் பேசுகிறோம். இதைக் கவிஞனின் தகுதியை அளக்கும் அளவுகோலாகப் பயன்படுத்த முடியுமா? கவிதையில் இதன் இடம் என்ன?
கவிஞன் என்று இல்லை. எந்த ஒரு கலைவடிவத்துடனும் உறவுகொள்ளும் படைப்பாளியும் இரண்டுவிதமாகச் செயல்படுகிறான் என்று தோன்றுகிறது. தான் அறியக்கிடைத்த ஒன்றைப் பதிவுசெய்யும் களமாக, தன் கலைமுயற்சிகளைப் பயன்படுத்துகிறான். அல்லது சதா தன்னைத் துரத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கான பதிலைத் தேடுவதற்கான உபாயமாக, கலையைப் பயன்படுத்துகிறான். வாசகன், துய்ப்பவன் தனக்கான அசல் கேள்விகளைக் கைவசம் வைத்திருந்தால், அவற்றைப் படைப்பின் மீது பிரயோகித்துப் பார்த்துக் கொள்ளலாம். இத்தகைய செயல்பாடு குன்றியிருக்கும் சந்திப்புகளில், மேலோட்டமான துயரமோ பரவசமோ ஏற்பட வாய்ப்புகள் உண்டு. படைப்பிற்கான அளவுகோலாக இதைக் குறிக்கமுடியும் என்று தோன்றவில்லை. சமகாலத்தில் கவனம்பெறாத படைப்புகள் பின்வரும் காலங்களில் அமோக வரவேற்பைப் பெற்றுவிடுவதையும் காணலாம். மௌனி, ஜி. நாகராஜன் இருவரது எழுத்துகளை உதாரணமாகச் சொல்லலாம்.
கவித்துவ தரிசனம் என்பது ஒரு மின்னல் போலத்தான். தத்துவத்தில் உள்ளதுபோல அது நிலையானது அல்ல, நீடிப்பதும் அல்ல என்று ஒரு தரப்பு உண்டு.
ஆமாம். அதனால்தான், தத்துவ தரிசனங்கள் நகர்வதும் இல்லை. கால ஓட்டத்தில் எல்லாமே தற்காலிகமானவைதானே, மின்னலாக இருந்தால் என்ன? மலையாக இருந்தால் என்ன? காலம் முன்னகர்ந்த பிறகும், தத்துவதரிசனங்கள் கனமாகப் பின்தங்கியிருக்கும் என்பதைப் பார்க்கிறோமே.
இதையொட்டி இன்னொரு கேள்வி. கவிஞன் கவிதை எழுதும்போது தன் ஆளுமையின் உச்ச நிலையில் இருக்கிறான். அப்போதைய அவனது தரிசனங்களுக்கும் அவனது இயல்பான தத்துவ அற நிலைப்பாடுகளுக்கும் நேரடி உறவு இல்லை என்று கூறப்படுவதுண்டே...
தினசரியின் தளங்களுக்கும், கவிதையின் தளங்களுக்கும் இடையே ஓர் இடைவெளி இருப்பதான கற்பிதத்தை இதன் பின்னணியில் பார்க்கிறேன். பௌதீக வாழ்வின் மறைபுலங்களைப் பார்வை கொள்ள, பௌதீக வாழ்வின் இருப்பு எத்தனை அத்தியாவசியமாகிறது! காணப்படும் பிரபஞ்சம் எனும் திரையில் போடப்பட்ட பொத்தல்களின் வழியாக, காணா பிரபஞ்சங்கள் காட்சி தருகின்றன. ஒரு விஞ்ஞானி, தத்துவவாதி, கணிதவியலாளன் இவர்களுக்கும், இவர்களது தினசரியின் தளங்களுக்கும் இடையில் உள்ள உறவைவிட இம்மியும் வேறுபட்டதில்லை கவிஞனின் தினசரித்தளங்களும் அவற்றுடன் அவன் கொள்ளும் உறவும். ஸ்ரீஹரிக்கோட்டாவில் நல்லபடியாக ராக்கெட்டை அனுப்பிய பிறகு, நேரே திருப்பதி சென்று, மொட்டைப் பிரார்த்தனையை நிறைவேற்றும் நவீன விஞ்ஞானிகளும் இருப்பார்கள் என்று நம்புகிறேன். அன்பின் சாராம்சம் சொட்டும் ஓரிரு கவிதை வரிகளை மனதில் கருத்தரித்த மறுகணமே, மின்சார ரயிலின் நெரிசலில் அருகில் நிற்பவருடன் வாய்ச்சண்டை தொடங்கிவிடும் கணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. கவிதையை நிறைவேறாத கனவுகளின் மேடை என்று சொல்லலாமா?
அப்படியானால் சகஜநிலையில் ஒரு கவிதை எழுதப்பட வாய்ப்பு உண்டா?
கவிதை என்ற தேளின் விஷம், சரீரத்தில் ஏறத் தொடங்கிவிட்ட பிறகு, கவிதையின் கணங்களும், அன்றாடத்தின் கணங்களும் வேறுவேறாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை. ஒவ்வொரு சொல்லும் காட்சியும் ஒரு நிரந்தரப் பரபரப்பைத் தந்தவண்ணமே இருக்கும். ஒரு கட்டத்தில் இந்தப் பரபரப்பு நிலையே சகஜம் என்று ஆகிவிடும். சகஜநிலையில் எழுதப்பட்டது போல சமநிலை காட்டும் கவிதைகளின் பின்னாலும் இந்தப் பரபரப்பே செயல்பட்டிருக்க முடியும். நகுலனின் பெரும்பாலான கவிதைகளில், தனிமையின் உக்கிரம் பதிவாகியிருப்பதையும் அவற்றின் வார்த்தைகள், வார்த்தைக்கோவைகளில் பதற்றமற்ற சமனநிலை இருப்பதுபோன்ற தோற்றத்தையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லலாம்.
வெளி வாசல் திண்ணையில்
அவன்
ஒரு சூரல் நாற்காலி
அருகில்
இதில், ‘அந்நாற்காலி காலியாக இருக்கிறது’ என்ற தகவல்கூடச் சொல்லப்படவில்லை.
கவிதையைக் கருத்தியல் ரீதியாக அடையாளப்படுத்த முடியுமா? அதற்கான தேவை உண்டா?
கண்டிப்பாக அடையாளப்படுத்த முடியும். ஆனால், அவ்வடையாளங்களின் வழியாகக் கவிதையை அளக்கக்கூடாது என்பேன். மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவனின் பல கவிதைகளில் அரசியல் உட்சரடு ஓடுகிறது. ஆனால்கூட, கவிதை என்ற பொதுத்தளத்தில் நிற்பதற்கான அக, புற அம்சங்கள் அவருடைய கவிதையில் இருக்கின்றன. ஞானக்கூத்தனின் பல கவிதைகளைக் கூறலாம். உதாரணமாக, கணையாழியில் வெளிவந்த அவருடைய ‘வெங்காயம்’ கவிதை. அதன் கூறல், அடங்கிய கோபம் ஆகியவை சார்ந்து அதை மிக முக்கியமான கவிதையாகக் கூறுவேன். இந்தப் பொதுத்தளதுக்கு வந்துசேராத கவிதைகளில், கருத்தியல் அடையாளம் துல்லியமாக இருக்கலாம். அந்தக் கருத்தியல் அளவுகோலின்படி அவை வெற்றியாகவும் கருதப்படலாம். கவிதை என்ற கலைவடிவத்தின் புலத்தில் இவ்வெற்றிகளைக் கணக்கிலெடுக்க முடியாது.
இங்கு பிரபலமான ஒரு குரல் வருகிறது. இந்தப் பொதுத்தளத்தைத் தீர்மானிப்பது யார், எவருடைய அளவுகோல்கள்? இதில்தான் அரசியல் உள்ளது என்கிறார்கள்.
கவிதையின் உருவம் சார்ந்துகூட அரசியல் கோணங்கள் பெறப்பட முடியும். அரசியலற்ற நிலைப்பாடு என்று ஏதும் இல்லை. கவிதையில் மௌனம் இருக்க வேண்டும், வாசகனின் தன்னிச்சையான அலைந்து திரிதலுக்கு இடம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகள்கூட மறுமுனையில் elitist கோரிக்கைகளாக, மேட்டிமைத்தனமாக பார்க்கப்படலாம். அறிவார்த்தத்தின் தீவிரம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை வெகுஜன விரோதமாகவும் பார்க்கப்படலாம். பெரும்பாலான ஈழத்துக் கவிதைகளின் பாடுபொருள், அங்கு நிலவும் அரசியல் சூழலுக்கு எதிரான எதிர்வினைகளாக மட்டும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. மொத்தத்தில், ‘அரசியல்’ என்ற பார்வை, பிற கலைவடிவங்களின் நுண்தளங்களில் என்னவாக இருக்கிறதோ அதுவாகவே கவிதையிலும் காணப்படுகிறது.
ஒரு குறிப்பிடத்தக்க கருத்து உண்டு. தத்துவம்தான் ஒரு காலகட்டத்தின் அல்லது சமூகத்தின் ஒட்டுமொத்தப் பார்வையை உருவாக்குகிறது. அதுதான் outline. அதை அன்றாட வாழ்வின் தளங்களில் பிரயோகித்து நிரப்புபவையே பிற கலைகளும் இலக்கியமும். இதை விஞ்ஞானம்தான் ஒட்டுமொத்தப் பார்வையை உருவாக்குகிறது என்று மாற்றிச் சொல்பவர்களும் உண்டு. அதாவது, இலக்கியம் மற்றும் கலைகளின் பணி நுண்ணலகுகளில், மைக்ரோ தளத்தில்தான் என்று... நீங்கள் என்ன சொல்வீர்கள்?
இது பற்றி உடனடியாகச் சொல்லத் தெரியவில்லை. நான் யோசித்திருக்கவில்லை. ஆனால், இதை நிறுவுவதற்குத் தரப்படும் தரவுகளையெல்லாம் நம்பமாட்டேன். அப்படி எதை வேண்டுமானாலும் நிறுவிவிடலாம்.
தத்துவம், பொதுமைப்படுத்தப்பட்ட, விலக்கித் தொகுக்கப்பட்ட ஒரு தளத்தில் செயல்படுகிறது. Abstractionதான் அதன் பாணி. கவிதையே அந்தத் தளத்தை மானுட அனுபவத்துடன் இணைக்கிறது. கவிதை நிரப்புகிறது. சரி. எதன்மூலம்? மானுட அனுபவத்தின்மூலம். அது முக்கியமில்லையா?
அப்புறம், கவிதை அப்படியே ஏற்றுக்கொண்டு, அனுபவம் மூலம் நிரப்புகிறது என்று யாராவது கூறமுடியுமா? ஒரு abstraction, பொதுக்கருத்து, அனுபவமாகும்போது அது எத்தனை மாற்றங்களை அடைகிறது. எந்தெந்த வகையிலெல்லாம் வளர்ச்சி பெறுகிறது.
இதைவைத்து நான் ஏன் இப்படிச் சொல்லக்கூடாது? கலைகளும் இலக்கியமும் உருவாக்கும் மானுட அனுபவத்தளங்களில் இருந்துதான் விஞ்ஞானமும் தத்துவமும் தங்கள் அடிப்படைத் தரவுகளைப் பெற்றுக் கொள்கின்றன. ஒரு தத்துவமேதைக்கும் இன்னொரு தத்துவ மேதைக்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது. அதெல்லாம் வாழ்வனுபவத்தின் தூரம்தானே? அங்கே கலையிலக்கியம்தானே உள்ளது?
பாதை மாறலாமா யுவன்? நேற்றைய கவிதையில் அணிகள் அலங்காரங்கள் இருந்தன. பிறகு உருவகங்கள் (மெட்டஃபர்கள்) வந்தன. நவீனக் கவிதையின் பிரதான உபகரணம் படிமம்தான். ஏன் படிமம் இந்த முக்கியத்துவத்தை அடைந்தது?
செய்யுள் மரபின் அலைகள் அடிப்படையில் த்வனி சார்ந்தவை. அணிகளின் அடிப்படையில் இன்றைய நவீனக் கவிதைகளையும் பகுக்க முடியும் என்று தோன்றுகிறது. இல்பொருள் உவமை அணி இன்றைய பெரும்பாலான கவிதைகளின் அடிப்படை. பாரதியின் கவிதைகளிலேயே அணிகளை உதறும் முயற்சி உள்ளது. பாரதியின் வசன கவிதைகளில் ‘போல’ என்ற சொல்லோ, அலங்கார சொல்லாட்சிகளோ இல்லை.
உருவகங்களின் ஆட்சி வெகுகாலம் தொடர்ந்திருக்கிறது. இன்று எழுத வரும் புதிய கவிஞனிடமும் உருவகங்கள் இருக்கத்தானே செய்கின்றன. ஆனால், உருவகங்களை இறுக்கப்பட்ட உவமைகள் என்றே சொல்ல வேண்டும். சுட்டப்படும் பொருளுக்கும் சுட்டுதல் என்ற வினைக்கும் உள்ள இடைவெளி உருவகங்களில் மறைக்கப்படுகிறது. இன்று வெகுஜன கவிதைகளில், திரைப்படப் பாடல்களில் சரளமாக உருவகங்கள் வருகின்றன.
ஒரேயொரு தீண்டல் செய்தாய்
உயிர்க்கொடி பூத்ததென்ன?
என்று ஒரு வரி வருகிறது சமீபத்திய திரைப்படப் பாடலொன்றில்.
ந.பிச்சமூர்த்தி நவீனக் கவிதைகளை எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்தில் பொது ஓட்டக் கவிதைகள் இலக்கணம், சந்தம், இவற்றுக்குக் கட்டுப்பட்டவையாக இருந்தன. இன்றைய பொது ஓட்டக் கவிதைகள் இலக்கணம் துறந்து நவீனக் கவிதைகளின் போலிகளாக இருப்பதைக் காணலாம். இன்றைய பொது ஓட்டக் கவிஞர்கள் யாரும் வெண்பா எழுதுவதாகத் தெரியவில்லை. இந்தப் பின்னணியில் தீவிரமான நவீனக் கவிஞன் வேறுபாதைகளைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளில் ஈடுபட்டே தீரவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. இதற்குக் கவிதை அனுபவம் பற்றிய சுயமான தெளிவு ஒன்றை அவன் உருவாக்கிக் கொண்டாக வேண்டிய அவசியம் உள்ளது.
படிமங்களைப் பொருத்தவரை, பாரதியிலும் அதற்கு முந்தைய காலகட்டக் கவிஞர்களிலும் படிமப் பிரயோகங்களைக் காணமுடியும். பாரதியின் அக்னிக்குஞ்சு கவிதையின்,
அக்னிக் குஞ்சொன்று கண்டேன் அதை
ஆங்கோர் காட்டிடை பொந்தினில் வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
என்ற வரிகளில் முழுமையான படிமம் காணக்கிடைக்கிறது. இன்றைய கவிஞன் தரிசனம்தான் முதல் மூன்று வரிகளிலேயே வந்து விட்டதே என்ற நம்பிக்கையில்,
தழல் வீரத்தில் குஞ்சென்றும்
மூப்பென்றும் உண்டோ
என்ற வரிகளை எழுதமாட்டான், ஒருவேளை.
படிமத்துக்கான தேவை, நவீனக்கவிதையின் பிறப்பிலேயே உள்ளது. நவீனக் கவிதையின் விழைவு கவிஞன் பார்த்ததை அல்ல, காட்சியையே முன்வைப்பது. காட்சியை முன்னிட்டு, கவிஞன் தான் கண்டதைக் கூறுவதாக அல்லாது காட்சியை அதன் விளைவுகளுடன் தன்னியல்பிலேயே கவிதைக்குள் இறக்கிவிடுவது படிமத்தின் தன்மை. அதாவது, பார்வைக்கோணத்தை மீறிய சுதந்திரத்துடன் காட்சி, கவிதைக்குள் வாசம் புரிகிறது. இதனால், பூரணமான ஒரு படிமம் எந்த முனையிலிருந்தும் அணுகக்கூடிய ஸ்படிகத் தன்மையுடன் வீற்றிருக்கிறது. நான் மொழிபெயர்த்த ஜப்பானியக் கவிதை ஒன்று,
நங்கூரத்தின் காதில்
கிசுகிசுக்கிறது கடல்பறவை
சட்டென்று
சொல்லாமல் கொள்ளாமல்
சரிந்திறங்குகிறது நங்கூரம்
பறவை விதிர்விதிர்த்து
பறக்கிறது
ஒரு கணத்தில்
முகம் வெளுத்த நங்கூரம்
அமிழ்கிறது நீரில்
பறவையின் துக்கம்
வலுத்த சோகக் கதறலாய்
காற்றில் தொலைகிறது
இப்படிமத்தை நான், பிறிது (The Other) என்ற இரட்டை நிலையின் பல்வேறு தளங்களை நோக்கி விரித்துப் பொருள் கொள்ள முடியும். இக்காரணத்தால்தான் ஒரு படிமம் எந்தக் கவிதையிலும் முழுமையாகத் தீர்க்கப்படுவது இல்லை. பறவை, கடல், மலை, காற்று போன்ற படிமங்கள் எத்தனை தலைமுறை உபயோகத்திற்குப் பிறகும் பழசாகாமல் இருக்கின்றன.
(மேலும்...)
நன்றி : எனி இந்தியன் பதிப்பகம் & சொல் புதிது
கார்காலக் குறிப்புகள் - 61
22 hours ago
5 comments:
வெகு நல்ல பதிவு சுந்தர்.
நிறைய பகிருங்கள் இதுபோல்.
Many thanks sundhar,
We owe a lot to you for your contributions
கவிதையை இன்னும் ஆழமாய் உணர வைக்கும் இடுகை
வாழ்த்துகள்
செல்வராஜ் ஜெகதீசன், ராம்ஜி யாஹு, திகழ்... நன்றி.
உன் உலகத்தில் இருப்பது
தான் குதூகலமாக
இருக்கிறது.
என்று நகுலன் எழுதினார். ‘இருப்பதுதான்’ என்று எழுதியிருந்தால் வராத பல சாத்தியங்கள் இந்த உடைப்பு மூலம் வந்துவிடுகின்றன.
மன்னிக்கவும். எனக்கு புரியல :(
Post a Comment