இல்லைக்கிடைக்குறை இலையாகுமெனில்
முல்லைக்கிடைக்குறை முலையாகும்மே
- விக்ரமாதித்யன் -
- விக்ரமாதித்யன் -
இன்றைக்குச் சனிக் கிழமை. நீங்கள் மதுவருந்தும் நாள்.
இது உங்களுக்கு நடந்த விஷயம் என்பதால் உங்கள் பார்வையிலேயே எழுதுகிறேன். வசதிக்கென ஒரு விஷயத்தை முதலிலேயே சொல்லிவிடுகிறேன் : இந்தக் கதையில் அடைப்புக் குறிக்குள் () வருவது உங்கள் மனம் நினைப்பது.
கதையைத் துவங்குமுன், உங்களைப் பற்றிய சில குறிப்புகள் :
வயது 26. பெயர் அவ்வளவு முக்கியமில்லை; உயரம் 5'8”. சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்கிறீர்கள். இரண்டு முறை காதலித்து, தோற்றிருக்கிறீர்கள். தற்சமயம் காதலி இல்லை; அது பற்றி சிறு வருத்தமுண்டு. நிற்க. இந்தக் கதை உங்கள் காதலைப் பற்றியதல்ல.
வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் அருகிலுள்ள sea farers club பாருக்குச் சென்று தனியாக அமர்ந்து யோசித்தபடி மதுவைப் பருகுவது உங்களுக்குப் பிடித்தமானது. நான்கு அல்லது ஐந்து பெக்குகள் ஓல்ட் மாங்க் ரம், கலந்து கொள்ள பெப்ஸி அல்லது கோகோ கோலா. தொட்டுக் கொள்ள அவர்கள் இலவசமாகக் கொடுக்கும் மிக்சர், சுண்டல், வெள்ளரிப் பிஞ்சு வகையறா.
இன்றைக்கு அலுவலகத்தில் அதிக வேலை; உடனடியாய் அனுப்பியாக வேண்டிய manifest, மற்றும், தலைமயக மாத இறுதி ரிப்போர்ட்களால் தாமதமாகிறது. முடித்து விட்டுக் கிளம்பும் போது மணி மதியம் 3.
20 நிமிடங்கள் நடக்க சோம்பேறித்தனப் பட்டுக் கொண்டு, ஆட்டோ பிடிக்கிறீர்கள் (20 ரூபாய் தண்டம்). மொத்தமே நான்கு பேர்களே இருந்தார்கள் பாரில். வெற்றி சப்ளை செய்யும் மேசை காலியாக இருக்க அங்கு அமர்கிறீர்கள். அலைபேசி, சிகரெட் பாக்கெட் மற்றும் தீப்பெட்டியை மேசை மேல் வைத்து, கால் நீட்டி அமர்ந்து மூச்சை இழுத்து விடுகிறீர்கள். ரம்மிற்கு உங்கள் தொண்டை பரபரக்கிறது.
வெற்றி சிரித்தபடி வழமையாக நீங்கள் சாப்பிடுபவற்றை உங்கள் மேசையில் வைக்கிறான். கலந்து ஒரு மிடறு விழுங்குகிறீர்கள். தொண்டையில் இறங்குகையில் ஏற்படும் லேசான எரிச்சலில் கண்களை மூடிக் கொள்கிறீர்கள். வெள்ளரிப் பிஞ்சொன்றை எடுத்துக் கடிக்கிறீர்கள்.
நீங்கள் இரண்டாவது ரவுண்டில் இருக்கும் போது பாருக்குள் ஒரு 45 வயது மதிக்கத்தக்க கனவான் ஒருவர் நுழைகிறார். வரும் போதே போதையில் தள்ளாடியபடி வருகிறார். (கடவுளே என் மேசையில் அமர்ந்து விடக் கூடாதே). உயர்தர வெள்ளை வேட்டி, சட்டையில் கையில் தங்க வாட்ச், கழுத்தில் செயின் சகிதம் உங்கள் எதிரில் அமர்கிறார். அமரும் போது, மேசை ஆடுகிறது. நீங்கள் நிமிர்ந்து அவரை அசூயையுடன் பார்க்கிறீர்கள். முணகலாக மன்னிப்பு கேட்கிறார்.
(எழுந்து வேறு மேஜைக்குப் போயிடலாமா... முகத்துல அடிச்சது போல இருக்குமோ... சரி, பாப்போம்.)
வெற்றியிடம் இரண்டு லார்ஜ் சிக்னேச்சர் விஸ்கி கொண்டு வரச் சொல்கிறார். இரண்டையும் ஒரே தம்ளரில் விட்டு மேலாகக் கொஞ்சம் தண்ணிரை ஊற்றி, ஒரே மடக்கில் குடிக்கிறார். தண்ணீர் அவர் சட்டையில் வழிகிறது. துடைத்தபடி ‘பொறுமையில்லை, பொறுமையில்லை' எனச் சொல்லிக் கொள்கிறார்.
அவரை ஓரக் கண்களால் பார்க்கிறீர்கள். அழகான ஓவல் வடிவ முகத்தில், தங்க ஃபிரேம் போட்ட கண்ணாடி காதுகளில் சேருமிடங்களில் நரை. அவர் தலையைக் கோதியபடி இன்னும் இரண்டு என்கிறார். நீங்கள் தலை கவிழ்ந்து உங்கள் தம்ளரில் கவனத்தைக் குவிக்கிறீர்கள். ஒரு லார்ஜை தம்ளரில் ஊற்றிய வெற்றி, மற்றொன்றை அதன் அருகில் வைத்து அகல்கிறான்.
சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்தியபடி, ‘ஐயா, கொஞ்சம் தீப்பெட்டி தர முடியுமா' என ஆங்கிலத்தில் வினவுகிறார். நீங்கள் லேசாக அவர் பால் நகர்த்துகிறீர்கள்.
(போச்சு, முதல்ல இப்படித்தான் ஆரம்பிப்பானுங்க; அப்புறம் போட்டு அறுத்துத் தள்ளிடுவானுங்க).
வலக்கையில் கோப்பையை எடுத்தபடி, உங்களிடம், “உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா.?” என்கிறார். நீங்கள் ‘இது என்ன கேள்வி' என்ற பாவனையில் அவர் முகத்தைப் பார்க்கிறீர்கள்.
“ஆகவில்லையெனில், தயவு செய்து, செய்து கொள்ளாதீர்கள்... “ வாயில் கவிழ்த்துக் கொள்கிறார். மறுபடியும் சட்டையை மது நனைக்கிறது. காகித நேப்கினால் துடைத்துக் கொள்கிறார்.
பாக்கெட்டைத் தடவி தன்னுடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதிவியிலிருந்ததைப் பறை சாற்றியது அது. (பெரிய புண்ணாக்கு). அவர் அறியாமல் அதைக் கசக்கி எறிகிறீர்கள். நேரம் கிடைக்கையில் உங்களை வீட்டிற்கு அழைக்கிறார். அவர் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்க நினைக்கிறீர்கள்.
“பெண்கள் எல்லாரும் ஏமாற்றுப் பேர்வழிகள்..”
(போச்சு, மற கழண்ட கேஸ் கிட்ட மாட்டிக்கிட்டேன்)
‘அனுபவத்தில் சொல்கிறேன் நண்பரே... All women are bitches, fuckin' bitches"
(என்ன வுட்டுடேன்).
சிறிது நேரம் மௌனமாய்க் கழிகிறது. சிகரெட்டை ஆழ்ந்து புகைக்கிறார். முகம் லேசாகக் கோணுகிறது. தனக்குள் சொல்லிக் கொள்பவரைப் போல் “வேசி, அவள் ஒரு வேசி” என்கிறார்.
இடைவெளி விட்டு, “ஆம், அவள் வேசி தான்”
(யாரைச் சொல்றான் லூசு)
“எனக்குத் தெரியாதெனெ நினைத்தாளா அவள். எல்லாரும் என் முதுகுக்குப் பின் பேசுவது என் காதில் விழுகிறதே... என் கேட்கும் திறனை நிறுத்த வழி தெரியவில்லையே... ”
உங்களுக்கு எப்படி எதிர் வினை ஆற்றுவது எனத் தெரியாமல் அவர் முகத்தையே பார்த்தபடி இருக்கிறீர்கள்.
“எனதருமை மனைவி” மனைவியில் அழுத்தம் கொடுக்கிறார். உங்களுக்கு விளங்குவது போல் இருக்கிறது.
(பெண்டாட்டி காரி சரியில்ல; புருஷன் குடிகாரன்)
“அவளால் தான் நான் இவ்வாறு குடிகாரனானேன்...” நீண்ட இடைவெளியில் நீங்கள் உங்கள் கோப்பையை நிரப்பிக் கொள்கிறீர்கள்.
“இப்படிப் பட்ட ஒரு மனைவி இருந்தால் புருஷன் என்னாவது... குறைந்தது ஐந்து பேருடனாவது அவளுக்குக் கள்ள உறவிருக்கும்.. இவள் தொல்லை தாளாமலேயே கோயமத்தூரிலிருந்துச் சென்னைக்கு வந்தேன். இங்கேயும் இதே பிரச்சனை தான்”
“பிரச்சனை இடத்திலல்ல; அவளிடம் தான்..”
இடைவெட்டு : இது உங்களுக்கு நடந்த விஷயம் தான் என்றாலும், எழுதுவது நானல்லவா. அதனால் சிலவற்றைச் சேர்த்து, சிலவற்றை விலக்கியிருப்பேன். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் தயங்காமல் நிறுத்தி என்னைக் கேட்கலாம்.
“இதோ வெளியில் இருக்கிறானே டிரைவர்; அவனுடன் கூட அவளுக்கு உறவிருக்கிறது...”
(என்ன மனுஷன் இவன் பிரதம மந்திரிலேர்ந்து வீட்டு வேலைக்காரன் வரைக்கும் தொடுப்பு இருக்குன்னு சொல்வான் போல).
“உங்களை வீட்டிற்கு அழைத்திருந்தேன் அல்லவா.. ” நீங்கள் தலையாட்ட, தொடர்கிறார் “வேண்டாம்; வர வேண்டாம். வந்தால் நீங்களும் அவளுடன் படுப்பீர்கள்...”
(எழுந்து ஓடிடலாமா).
சிறிது இடைவெளி விட்டு, “உங்களுக்கு எது சொந்த ஊர்.?” என வினவுகிறார். அப்பாடா வேறு விஷயத்திற்கு வருகிறாரே என்ற நிம்மதியுடன் நீங்கள் “தஞ்சாவூர்” என்கிறீர்கள்.
“தஞ்சாவூர்... தஞ்சாவூர்... அங்கு கூட அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான்”
(வேதாளம் முருங்க மரம் ஏறி விட்டது).
அவளுடைய காதல் கதைகளை முழுமையாய் விவரிக்கிறார். Graphical Descriptionsஐத் தவிர்க்கும் பொருட்டு அவற்றை நீக்கிவிட்டேன். அவர் விவரித்ததின் சாராம்சம் : அவர் மனைவி வேசை. உங்களுக்குச் சங்கடமாயிருக்கிறது. அவர் குரல் குழற ஆரம்பிக்கிறது. அவர் முகத்தையும் உங்கள் கோப்பையையும் மாறி, மாறிப் பார்த்தபடி இருக்கிறீர்கள். அவர் உச்ச போதைக்குச் சென்று கொண்டிருக்கிறார். வெற்றியை அழைத்து பணம் கொடுக்கிறார்.
“சரி, நான் கிளம்புகிறேன்” என்றவாறு எழுந்திருக்கிறார். உடல் ஆடுகிறது. இரண்டடி சென்றவர் சாயப் போகிறார். வெற்றி அவரைத் தாங்கிப் பிடிக்கிறான். முடியாமல் தடுமாறுகிறான். நீங்கள் எழுந்து ஒரு பக்கம் அவரைத் தாங்குகிறீர்கள்.
“கொண்டு போய் கார்ல விட்டுறலாம் சார்” என்கிறான் வெற்றி. அவனுக்குப் பழக்கம் போல.
நீங்கள் அவரை அழைத்து வருவதைப் பார்த்ததும் டிரைவர் சிகரெட்டை அணைத்து, வண்டியில் அமர்ந்து ஸ்டார்ட் செய்கிறார். அவரைப் பின் இருக்கையில் அமர வைத்ததும், வெற்றி அகல்கிறான்.
இடைவெட்டு : இன்னும் இரண்டு பத்திகளில் கதை முடியப் போகிறது. நீங்கள் எனக்குச் சொல்லிய படி தான் கதையின் முடிவை எழுதியிருக்கிறேன். ஆனால் அடிப்படையில் இது உங்களுக்கு நடந்த கதை; எனவே உண்மையில் என்ன நடந்ததோ அதைப் போலவோ அல்லது வேறு விதமாக மாற்றியோ நீங்கள் இந்தக் கதையை எழுதிக் கொள்ளலாம்.
முகம் கோணி, உங்களைப் பார்த்து இளிக்கிறார். உங்களை அருகில் அழைக்கிறார். உங்கள் காதருகில் “I am an impotent, yes, I am an impotent" என்கிறார் உணர்ச்சியற்ற குரலில். நீங்கள் மின்சாரம் தாக்கியதைப் போல் நிற்கிறீர்கள். கண்ணாடி ஏற, கார் நகர்கிறது.
திரும்பவும் பாருக்குள் நுழைகையில் நீங்கள் அவரிடம் ஒரே ஒரு வார்த்தை தான் பேசினீர்கள் என்பது ஞாபகம் வருகிறது. தொண்டையில் பாறாங்கல்லை அடைத்ததைப் போல் உணர்கிறீர்கள்.
16 comments:
எனது காதலியின் கணவனை குறித்து நீங்கள் எப்படி கதை எழுதலாம் சுந்தர்?!!!
நல்ல பரிசோதனை முயற்சி... தொடருங்கள்.
நான் குடிப்பதில்லை..
ஆனால், குடிக்குமிடத்திற்கு நன்பர்களுடன் செல்லவதுண்டு.
பல்வேறு விதமான மனிதர்களை நாம் அங்கே காணலாம்..
அதேப் போல், பாலுறவுக் காட்சிகள் கொண்ட திரையரங்குகளிலும் காணலாம்... :)
அடடா இது என்ன பின் நவீனத்துவ கதையா? நல்ல வந்துருக்கு தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்
நீங்களுமா, பைத்தியக்காரன்.? எழுதப் படாத பாத்திரமாகி விட்டீர்கள் :)
tbcd, நானும் உங்களைப் போலத்தான். பிராந்தி, வைன், ஜின் எதுவும் குடிப்பதில்லை (ஸ்மைலி போடலைங்க).
/அதேப் போல், பாலுறவுக் காட்சிகள் கொண்ட திரையரங்குகளிலும் காணலாம்/
எனக்குப் புரியல; தயவு செய்து விளக்க வேண்டாம் :)
முழுசா படிச்சிட்டேன்... நல்லா இருக்கு...
அந்த ஆசாமியோட அட்ரஸ் இருந்தா.....
உடனே தொலைச்சிடுங்க......:-)
வாழ்துக்ளுக்கு நன்றி, கிருத்திகா.
நன்றி, ச்சின்னப் பையன். நீங்க தான் அவர் கொடுத்த விசிட்டிங் கார்டை கிழித்துப் போட்டு விட்டீர்களே...
பூனை கதை அளவிற்கு இல்லை என்றாலும் சிறப்பாக வந்துள்ளது. கதையில் வரும் பாத்திரங்கள் நிஜ மனிதர்கள் இல்லை. அவர்கள் எழுத்துருதான் (word being). குறிப்பான் அல்லது ஒரு சொல். அதனால் அதற்குள் யார் வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம். இது ஒரு டெம்பிளேட் போன்றது. இந்தப் பொருத்திக் கொள்ளலில் ஒரு அரசியல் உள்ளது. யாரும் குடிக்க வந்த நபராக தன்னை பொறுத்திக் கொள்ளவோ அடையாளப் படுத்திக் கொள்ள மாட்டார்கள் என்பதுதான் அது.
அவரவர் குறியை அவரவர் பாதுகாத்துக் கொண்டால் ஊரார் குறியை யார்தான் பாதுகாப்பது? :))
ஆமாம், ஜமாலன். நீங்கள் சொல்லியபிறகு எனக்கும் தெரிகிறது; இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாமோ என்று.
வெவ்வேறு பார்வைகளில் எழுதிப் பார்த்து, கடைசியில் மேலும் இந்தக் கதையில் உழைக்க அலுப்பு பட்டுக் கொண்டு, வெளியிட்டு விட்டேனோ எனத் தோன்றுகிறது.
சுந்தர்ஜி, வித்தியாசமான நடை.
டென்ஷனை போக்க பாருக்கு போனா, இந்த மாதிரி கதைகளே நமக்கு புது கவலை வந்துவிடுவது சகஜம்தான்.
firstperson'ன் நோக்கில் நீங்கள் கொண்டு சென்றிருக்கும் நடை நன்றாகயிருக்கிறது.
வாழ்த்துகள் சுந்தர்.
சுந்தர்,
இந்த கதைசொல்லும் உத்தி பிடித்திருந்தது. இப்படி ஒன்றை முதலில் இப்போதுதான் வாசிக்கிறேன். இடைவெட்டுதான் உறுத்தியது.
நன்றி தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி, ஆடுமாடு.
நன்றி, முபாரக். உணர்ச்சிகரமான கதையில் வாசகனை ஒன்ற விடாமல் செய்வதற்காக இடைவெட்டை உபயோகித்திருந்தேன் - படிப்பது கதைதான் என்ற பிரக்ஞையுடன் படிப்பதற்காக.
வாசிப்பவருடன் உரையாடும் தன்மையுடைய கதைகள் எனக்கு அறிமுகமானது யூமா வாசுகியிடமிருந்து. மிகுந்த கழிவிரக்கத்தை தரும் அவரின் எழுத்து. நீங்கள் விலக்க முடியாத அளவுக்கு உங்களிடன் இறைஞ்சும் அவ்வெழுத்துக்கள். அந்தளவிற்கு இல்லாவிட்டாலும் நல்ல முயற்சி. குறிப்பாக இடைவெட்டு போல அமைந்த வாக்கியங்கள் அதிகமாக காணலாம். பேசிக்கொண்டிருக்கும் விஷயத்தை நிறுத்தி பாத்திரங்களின் உணர்வுத்தன்மையை உரசும் இடைவெட்டுகள் அவை. பூனை கதையை விட இது நன்றாகவே வந்திருக்கிறது.
நன்றி, தம்பி.
Post a Comment