பிறகு அவளுக்கும் எனக்கும் பிரச்சினைகள். ஒருமுறை ராமநாதபுரம் சென்று அவள் வீட்டிலேயே 17 மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். அதீத எரிச்சலினாலும், மாத்திரை சாப்பிடுவது தொடர்பான கேள்விகள் பெரிதும் இரிட்டேட் செய்ததாலும் அப்படிச் செய்தேன். நான் மாத்திரைகள் விழுங்கியிருப்பது தெரியாமல், சினிமாவுக்குப் போகலாம் என்றாள் அவள். மாலை நேரம். சரி என்று கிளம்பிவிட்டேன். அவள் தோழி ஒருத்தி எங்களுடன் வந்தாள்.
மாத்திரை சாப்பிட்டதனால் என்னால் நேராக நடக்கமுடியவில்லை. பக்கவாட்டில் சாய்ந்து தட்டுத்தடுமாறி நடந்தேன். ஏதோ சிக்கல் என்று அவளுக்குப் புரிந்து விட்டது போலிருக்கிறது. உடனே ராமநாதபுரம் ஹெட்குவார்ட்டர்ஸ் ஆஸ்பத்திரியில் என்னைச் சேர்த்து சிகிச்சையளித்தாள். குணமாக மூன்று நாட்களானது. நீங்கள் மாத்திரைகள் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்தினால்தான் நாம் சேர்ந்து இருக்க முடியும் என்றாள் நான்ஸி. சரி என்று ஒத்துக் கொண்டேன்.
உண்மையில் மாத்திரை சாப்பிடுவதை நான் விடவில்லை. விடக்கூடாது. அவளுக்குத் தெரியாமல் சாப்பிட்டு வந்தேன். மூன்று நாட்களுக்கு ஒன்று எனும்படி எங்களிடையே கடிதப் போக்குவரத்து நடந்தது. அவள் சென்னை வந்து என்னுடன் தங்குவதற்காக அவளது டிரான்ஸ்ஃபருக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அவள் சென்னை வருவதில் அக்கறையில்லாமலிருந்தாள். அது எனக்கு உடனே புரிந்தது. ராமநாதபுரத்தில் அவள் பணியிடத்தில் அவளுக்கு ஆண் நண்பர்கள் அதிகம். குறிப்பாக ஒரு டாக்டருடன் அவளுக்கு மிக நெருங்கிய தொடர்பு இருந்தது. சந்தேகத்திற்குரிய தொடர்பு அது.
இந்த விவகாரத்திற்கு என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தேன். வெறுமையும் குழப்பமும் வெறுப்புமான அலைக்கழிப்பு. அல்லாட்டம். இனி வாழமுடியாது என்று தோன்றிவிட்டது. திருமணமாகி ஒரு வருடம் முடிந்திருந்தது. ‘நீ சென்னைக்கு வா. நம் முதலாமாண்டு திருமணநாளைக் கொண்டாடுவோம்' என்று அவளை அழைத்தேன். அவள் வந்தாள். நான் ஏற்பாடு செய்திருந்த வீட்டில் தங்கினோம். அந்த வீட்டு எண் 13. நான்கு நாட்கள் கழிந்தபிறகு நான் சொன்னேன் ‘நீ யாருடன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பழகிக் கொள். அதைப் பற்றி எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் அவர்களைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லாதே' என்றேன்.
என் வேண்டுகோளைப் பொருட்படுத்தவில்லை அவள். அடிக்கடி அவள் அந்த டாக்டரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததும் மற்ற ஆண் பணியாளர்களைப் பற்றி மிகவும் நெருக்கமாகப் பேசியதும் என் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. இதை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. நிலைமை பொறுக்க முடியாமல் போனது.
திருமண முதல் ஆண்டு நிறைந்த நான்கு நாட்களுக்குப் பிறகு துக்கம் தாளாமல், அவள் தூங்கிக் கொண்டிருந்தபோது டாக்ஸி பிடித்து வெளியே சென்று நாற்பது மனநல மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வந்தேன். வீட்டினுள் தண்ணீர் குடித்தால் அந்த ஓசையில் அவள் விழித்து சந்தேகிக்கலாம் என்ற யோசனையில் மாத்திரைகளைக் கக்கூஸ் குழாயில் வரும் தண்ணீரைக் கொண்டு விழுங்கினேன்.
‘என்னைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது. வாழ விருப்பமில்லாததால் நான் சாகிறேன். தயவுசெய்து என்னைக் காப்பாற்ற முயற்சிக்காதே. இனி உனக்கு முழு சுதந்திரமுண்டு. நீ எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். உன்னை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்' என்று கடிதம் எழுதி அவள் தலையணைக்குக் கீழ் வைத்துவிட்டு படுத்துவிட்டேன். அவள் என்னை எழுப்பிப் பார்த்திருக்கிறாள். நான் எழுந்திருக்கவில்லை. நான்ஸி என்னைக் கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்தாள். அங்கே என்னைப் பரிசோதித்த டாக்டர் எனக்கு கிட்னி செயலிழந்து விட்டதாகவும் உடனடி மரணம் தவிர்க்க முடியாதது என்றும் அறிவித்துவிட்டார். தலையிலிருந்து கால் வரை துணியால் மூடிவிட்டார்கள். முற்றும் பிரக்ஞை கெட்டுப் படுத்திருக்கிறேன் நான். அங்குள்ள வேறு டாக்டர் எனக்கு ஏற்கனவே நண்பராயிருந்தவர். லேசாக அவருக்குச் சந்தேகம் தட்டியிருக்கிறது. மூடிய துணியை விலக்கி என்னைத் தொட்டுப் பார்த்திருக்கிறார். சன்னமாக உயிர் இருப்பது தெரிந்தது அவருக்கு. அந்த நண்பர் LASIX இன்ஜக்ஷன் கொடுத்து காப்பாற்றினார். அதன் பிறகு தேறினேன்.
மருத்துவமனையில் கிடந்தபோது என்னைப் பார்க்க வந்தாள் என் மாமியார். ‘உன்னைச் சுட்டுக் கொல்ல வேண்டும். வெளியே விட்டு வைக்கக் கூடாது. எங்களை மிகவும் அவமானப் படுத்திவிட்டாய். பெருங் கேவலத்தைச் சம்பாதித்துக் கொடுத்து விட்டாய். உன் முகத்தில் விழிக்கவே வெட்கமாக இருக்கிறது' என்று வசவுக் கூச்சல் போட்டு கலங்கடித்தாள் அவள்.
என் மனைவி பார்ப்பதற்கு வருவாள். நன்றாக அலங்கரித்துக் கொண்டு சிறப்பாக வருவாள். என்னை உதாசீனம் செய்து மற்ற நோயாளிகளுடன் அரட்டையடிப்பாள். அவளும் அவளது பழைய சினேகிதனும் நான் படுக்கையில் கிடந்து போராடிக் கொண்டிருக்கையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு சந்தோஷமாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதையெல்லாம் என் நண்பர்கள் அவ்வப்போது என்னிடம் தெரிவிப்பார்கள். அவளிடம் ‘இனிமேல் என்னைப் பார்க்க வரவேண்டாம்' என்று முடிவாகச் சொல்லி விட்டேன். அத்துடன் அந்தச் சாப்டர் முடிந்தது. இந்த தற்கொலை முயற்சிக்குப் பிறகு LARGACTYL மாத்திரைகளை உட்கொள்ளுவதை சுத்தமாக நிறுத்தி விட்டேன்.
என் மனைவி என்னை விட்டுப் போன நான்கே மாதங்களில் சென்னைக்கு மாற்றலாகி வந்தாள். ஓர் ஆடவரைத் திருமணம் செய்து கொண்டாள். இவை இரண்டும் அவள்மீதான என் சந்தேகத்தை மேலும் ஊர்ஜிதப்படுத்தின. ஆனால் மனநல மருத்துவர்கள் இது கற்பனைச் சந்தேகம் என்று schizophrenia paranoid என்ற மனப்பிணிக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அரசு மருத்துவமனையில் வேலை செய்கிறபோது மாலை நேர வகுப்பில் சேர்ந்து போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமா இன் கிரிமினாலஜியும் ஃபேரன்ஸிக் சயின்ஸும் ஒரு வருட கோர்ஸில் படித்திருந்தேன். 1974ல் எங்கள் ப்ராஜக்ட் முடிந்துவிட்டது. அது அமெரிக்க நிதியுதவியுடன் நடந்த ப்ராஜக்ட். நிதியுதவி நின்றவுடன் எல்லோருக்கும் வேலை போய்விட்டது. பி.எல்.480 நிதி என்று பெயர். அமெரிக்காவிலிருந்து வரும். எங்கள் சீஃப் தவிர எல்லோரும் எங்கெங்கோ சிதறிப் போனோம்.
எனக்குக் கடன் தொல்லை அதிகமாகிவிட்டது. பல விதங்களிலும் கடன் வாங்கி நான்ஸிக்கு மிக அதிகம் செலவு செய்தது பெருந் தொல்லையாகி விட்டது கடைசியில். திருமண முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அந்தப் பெண் வந்து தங்கிய நான்கு நாட்களும் செலவு மிக அதிகம். என் நண்பர் சொன்னார். ‘இங்கே இருக்காதே. வேறு எங்காவது சென்றுவிடு. முக்கியமாகச் சென்னையில் இனிமேலும் நீ இருக்காதே.'
வேலை போன அடுத்த நாளே வடக்கே புறப்பட்டேன். சில புத்தகங்களும் சில சான்றிதழ்களும் எடுத்துக் கொண்டேன். இதற்கான முன்னேற்பாடுகளை ஏற்கனவே செய்திருந்தேன். மகாராஷ்டிராவில் உள்ள சேவாக்கிராம் காந்தி மெடிக்கல் காலேஜ்-ல் கிளாக்காகப் பணிபுரிந்தவர் என் உயர்நிலைப் பள்ளி நண்பர். அவரிடம் எழுதிக் கேட்டதற்கு ‘சரி! நீ வா' என்று பதிலளித்திருந்தார். வார்தாவில் இறங்கி சேவாக்கிராம் சென்று அங்கு ஒரு மாதம் இருந்தேன்.
அந்த நண்பர் போதிய பணவசதி இல்லாதவர். திரும்பத் திரும்ப என்னைச் சென்னைக்கே சென்றுவிடும்படி கூறிக்கொண்டிருந்தார். பி.ஜி.பிரகாசன் அவர் பெயர். நான் சென்னை செல்லாமல் மகாராஷ்டிரா மாநிலம் புசாவலுக்குச் சென்று அங்கிருந்து பாம்பே சென்றேன். எல்லாமே டிக்கெட் இல்லாத பயணம்தான்.
பாம்பே ரயிலில் செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் அகப்பட்டுக் கொள்ளும்படி ஆகிவிட்டது. என்னைப் பற்றி விசாரித்து ஐந்து ரூபாயைக் கேட்டு வாங்கிக் கொண்டு போனார். பாம்பேயில் இறங்கி டிக்கெட் கேட் கடக்கும்போது இன்னொரு பரிசோதகர் பிடித்துக் கொண்டார். ‘நான் இங்கே பிழைப்பதற்காக வந்திருக்கிறேன். எனவே என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்' என்று நான் அவரைக் கேட்டுக் கொண்டதன் பேரில் மனமிரங்கி விட்டுவிட்டார். ஏதாவது சாப்பிட்டாக வேண்டியிருந்தது. ஒரு ஹோட்டலுக்குச் சென்று வேலை வேண்டினேன். அந்த ஹோட்டலில் வேலை எதுவும் காலியாக இருக்கவில்லை.
இரவில் எங்கே தங்குவது என்று பிரச்சினையாகிவிட்டது. தாராவிக்குப் போய் அங்கு ஒருவரிடம் என் சிரமங்களையெல்லாம் எடுத்துச் சொன்னேன். அவர் வீட்டுப் பரணில் படுத்துக் கொள்ளும்படி அனுமதித்தார். தங்க மட்டுமே இடம். இதற்குப் பணம் கொடுக்க வேண்டியது இல்லை. கையில் சுத்தமாகப் பணம் கிடையாது. எடுத்து வந்திருந்த சில புத்தகங்களை எடைக்குப் போட்டு ஒரு பொட்டலம் வேர்க்கடலை வாங்கிச் சாப்பிட்டேன். மொத்தமாக மூன்று நாட்கள்தான் பாம்பேயில் இருந்திருப்பேன். சோர் பஜாரில் என் துணிகளை விற்றதன்மூலம் கொஞ்சம் சில்லறை தேறியது சாப்பிடுவதற்கு.
அடுத்த நாள் வேறு ஒரு ஹோட்டலில் வேலை கேட்டேன். விண்ணப்பம் எழுதிக் தரும்படி சொன்னார், அங்கு பொறுப்பிலிருந்தவர். நான் எழுத முயற்சித்தேன். கை நடுங்கியது. எழுத்து சரியாக வரவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர் வேலை தர இயலாது என்றும் சாப்பிட்டுவிட்டுச் செல்லும்படியும் கூறினார். ‘வேலை தந்தால்தான் சாப்பிடுவேன்' என்றேன் நான். ‘இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் வேண்டாம். சும்மா சாப்பிடுங்கள்' என்று அவர் கேட்டுக் கொண்டபிறகு மூன்று சப்பாத்திகள் சாப்பிட்டேன்.
அப்படியே நடந்து கொண்டிருந்தபோது சென்னை திருவல்லிக்கேணி ஜிம்கானா கிளப்பில் டேபிள் டென்னிஸ் விளையாடும் நண்பர் ஒருவரைப் பார்த்தேன். இரண்டு இட்டிலி வாங்கிக் கொடுத்து கையில் கொஞ்சம் காசு கொடுத்து சென்னைக்குப் போய்விடும்படி சொன்னார் அவர்.
பாம்பேயிலிருந்து டிக்கெட் இல்லாமல் ஹைதராபாத் போனேன். அப்போது என்னிடம் ஒரு சட்டையும் பேண்டும் மட்டுமே இருந்தது. ஹைதராபாத்தில் எனக்கு நண்பரான ஒரு சைக்காலஜிஸ்ட் இருந்தார். அவரிடம் ஊர் திரும்புவதற்கு உதவும்படி கேட்டேன். 'நீ இங்கிருந்து கடிதம்போட்டு உன் அப்பா அம்மாவிடமிருந்து பணம் வாங்கிப் புறப்பட்டு போ. நான் பணம் தரமாட்டேன்' எனக் கறாராகக் கூறினார் அவர். இது சிக்கலான ஏற்பாடாகத் தெரிந்தது. ரயில் ஏறிவிட்டேன். இப்போதும் டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கித் தப்பினேன். ஓங்கோல் வந்து அங்கிருந்து சென்னைக்கு ரயில் பிடிக்க வேண்டும். கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ஏறியபோது எதிர்பட்டார் டிக்கட் பரிசோதகர். நான் என்ன செய்வதென்று நிதானிப்பதற்குள் ரயில் வேகமெடுத்துவிட்டது. வேறு வழியின்றி குதித்துவிட்டேன். முழங்காலில் பலமாக அடிபட்டு விட்டது. வலியினால் நகர முடியாமல் விழுந்த இடத்திலேயே வெகுநேரம் கிடந்தேன். பிறகு மெதுவாக நடந்து சென்று ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் அமர்ந்தேன். யாரோ ஒருவர் பேச்சுக் கொடுத்தார். தெலுங்குக்காரர். தமிழை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு டீ வாங்கிக் கொடுத்தார். அங்கிருந்த ஒரு லாரி டிரைவரிடம் என்னை சென்னைக்குக் கொண்டுபோய் சேர்த்து விடும்படி சொன்னார். லாரி இரவில்தான் கிளம்பும். என்னிடம் பணமில்லாததால் என் சட்டையையும் கைலியையும் வாங்கிக் கொண்டார் டிரைவர். அடுத்த நாள் காலை லாரி போரூர் வந்து சேர்ந்தது. ‘இதுதான் சென்னை. நீ இங்கேயே இறங்கு' என்றார் டிரைவர். நான் அவர் சொன்னபடி செய்தேன். கையில் கொஞ்சம் சில்லறையும் கொடுத்து இறக்கிவிட்டார் அவர். நான் கொசப்பேட்டையிலிருந்த என் வீட்டிற்குச் சென்றேன். வீட்டில் யாருமே என்னை எதிர்கொள்ளவில்லை.
தனக்குத்தானே பேசிக் கொள்ளும் பழக்கம் தொற்றிக் கொண்டது. இரவுகளில் தூக்கமில்லை. ஓயாத மன உளைச்சல். எதை எதையெல்லாமோ நினைத்து அடிக்கடி அழுது கொண்டிருந்தேன். ஒரு நிலைக்குப் பிறகு சிகிச்சை எடுத்தே தீரவேண்டுமென்று தோன்றிவிட்டது. நண்பர் பாலகிருஷ்ணன் மூலமாக (கிளினிகல் சைகாலஜிஸ்ட்) அரசு மனநலக் காப்பகத்தில் சேர்ந்தேன்.
1974ல் 45 நாட்கள் அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அந்த நேரத்தில் அங்கே சூப்பிரிண்டெண்டெண்ட் ஆக இருந்தவர் டாக்டர் சாரதா மேனன். எந்த இடையூறும் இல்லாதபடி சீராகவும் சரியாகவுமிருந்தது மருத்துவமனைச் சூழல். சிகிச்சையும் சிறப்பான வகையில் இருந்தது.
போக்கிடமென்று எதுவும் இல்லாமலாகிவிட்டது. பாட்டிக்குக் கடிதம் எழுதினேன். பாட்டி கடிதமும் பணமும் அனுப்பியிருந்தாள். டிஸ்சார்ஜ் ஆகி மதுரைக்கு என் பாட்டியிடம் புறப்பட்டுப் போனேன். வேலை தேடியபடி 9 மாதங்கள் அங்கேயே இருந்தேன்.
அந்தச் சமயத்தில் மதுரை அதீனத்தின்மூலம் மறுபடி இந்து மதத்திற்கு மாறி என் இயற்பெயரைப் பெற்றேன்.
மேற்கொண்டு மருத்துவச் செலவு செய்ய பாட்டி விரும்பவில்லை. ‘நீ சென்னைக்கு போ'வென்று பாட்டி சொன்னதால் திரும்பவும் சென்னை வந்தேன்.
ஒரு நண்பரின் வீட்டுத் திண்ணையில் இரவில் படுக்கை. தெருக்குழாயில் காலைக் குளியல். சமயங்களில் கட்டணக் கழிப்பறையில். வேலை தேடுவதைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தேன்.
நண்பர் ஒருவர் மூலமாக ராமாராவ் பாலிகிளினிக்கில் 1975ல் வேலைக்குச் சேர்ந்தேன். மாத ஊதியம் ரூ 200. அங்கு வேலை பார்த்த காலம் இரண்டரை வருடங்கள். பாலிகிளினிக்கில் ஒரு தோழி கிடைத்ததுதான் சந்தோஷம். அவளோடு தந்தை மகள் மாதிரியான உறவு. அவளுக்கும் தலைமை மருத்துவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு அவள் காஞ்சிபுரத்திற்குப் போனாள். நான் பாலிகிளினிக்கிலேயே தொடர்ந்தேன். நான் தொடர்ந்து மனநல மாத்திரைகள் சாப்பிட்டு வந்தேன். பெரிய ஜாப் எதுவும் என்னால் செய்ய இயலாதபடி மனநிலை பாதிப்படைந்திருந்தது. சில காலத்திற்குப் பிறகு பெரிய வேலை செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தபோது க்ரியா ராமகிருஷ்ணனைச் சந்தித்து நிலைமையைச் சொன்னேன். எனக்கு வேலை தரும்படி வேண்டினேன்.
ராமகிருஷ்ணன் IMRB (இண்டியன் மார்க்கெட் ரிஸர்ச் பீரோ) வில் வேலை வாங்கித் தந்தார். அவர் என் நண்பரின் கல்லூரித் தோழர். இங்கே ஐந்து வருடங்கள் வேலை பார்த்தேன். வீடு வீடாகப் போய் சிகரெட் - பேட்டரி - கார்பெட் இவை பற்றி விவரங்கள் சேகரிக்க வேண்டும்.
மே 1980ல் திரும்பவும் பெரிய மனபாதிப்பு ஏற்பட்டது. மறுபடியும் மாய ஒலிகள் காதில் கொடூரமாக ஒலிக்க ஆரம்பித்தன. ‘நீ எதற்கும் தகுதியில்லாதவன்... நீ வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விட்டாய்... இனிமேலும் நீ உயிருடன் இருக்க முடியாது...' இப்படி. அலுவலகம் மூலமாகவே அரசு மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டேன்.
சேர்ந்து ஐந்தாம் நாளிலேயே சரியாகிவிட்டது. ஆனால் அவர்கள் டிஸ்சார்ஜ் கொடுக்காமல் பத்து நாட்கள் வைத்திருந்தார்கள். வேலைக்குப் போனேன். என்னை உடனே வேலையில் சேர்க்காமல் ஒரு மாதம் ஓய்வு எடுக்கச் சொல்லி ஒரு மாதச் சம்பளமும் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு ஐம்ஆர்பி யில் முழுநேரமாகவும், க்ரியாவில் பகுதிநேரமாகவும் வேலை செய்தேன்.
இந்தக் காலத்தில் ந. முத்துசாமி எழுதிய ‘நாற்காலிக்காரர்கள்' புத்தகத்தையும், ‘சூரியனின் கடைசி கிரணத்திலிருந்து முதல் கிரணம் வரை' (ஹிந்தியிலிருந்து சரோஜா மொழிபெயர்ப்பு செய்தது) எனும் புத்தகத்தையும் கிரியா ராமகிருஷ்ணன் கொடுத்தார். இதற்கு முன்னால் மு. வரதராசன், ஹேமா ஆனந்ததீர்த்தன், சா. கந்தசாமி இவர்களை மட்டும் படித்திருந்தேன்.
மீண்டும் எனக்குப் பெண் துணை அவசியப்பட்டது. அம்மாவிடம் சொன்னேன். அம்மா புரோக்கர் மூலம் இப்போதிருக்கிற என் மனைவியைப் பெண் பார்த்தார். திருவொற்றியூர் திருமண மண்டபத்தில் 20-10-80ல் திருமணம் நடந்தது. ஐ எம் ஆர் பி நண்பர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். திருமணத்திற்கு முன் லாட்ஜில் தங்கியிருந்தேன். பிறகு மைலாப்பூரில் தனிக்குடித்தனம்.
கார்காலக் குறிப்புகள் - 60
1 day ago
7 comments:
.. பகுதி 3 எப்போ?
இவர் வாழ்ந்த காலத்துல யாருமே இவர நெனச்சுக்கூட பாக்கல.
இவ்ரோட புத்தகங்கள் எதுவுமே கிடைக்கமாட்டிங்குது.உள்ளே இருந்து சில குறள்கள் மட்டும் தான் படிச்சிருக்கேன்.வேற எதுவும் இதுவரைக்கும் படிக்க கிடைக்கலை.
பகிந்தமைக்கு நன்றி.
இவர் மணவாழ்வில் நிகழ்ந்தவைகளை இப்போது தான் அறிகிறேன், இவர் எழுத்துக்களின் மூலமான பரிச்சயமும், இவரது தற்கொலையும், இவர் வாழ்வு பற்றிய இந்த பதிவுகளும் என எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து மனதை மென்மேலும் அலைக்கழியச் செய்கிறது. இந்த வாழ்வு தான் எவ்வளவு கொடூரமானது, எனக்கு மனசு தாங்கவில்லை, இந்த பாழாய்ப் போன மனசு தான் எல்லாத்துக்கும் காரணம், ஏன் மேலோட்டமாய் வாழ்ந்து விடுவதென்பது இயலாமல் போய் விடுகிறது, அடிப்படையில் எங்கு தான் பிரச்சனை.
கோபி ரயிலில் இருந்து, வேறு வழி தோன்றாமல், கீழே விழுவதைப் படித்த போது ரொம்ப நாட்களுக்குப் பின் கண்களில் நீர். என் போன்ற மென் நெஞ்சுக்காரர்கள் இந்தப் பதிவுகளைத் தவிர்ப்பது நலம் என்று டிஸ்கி போட்டிருக்கலாம் :(
அப்புறம் விரிவாக எழுதுகிறேன் சுந்தர்.
அனுஜன்யா
கோபியை படிக்க படிக்க மேலும் மேலும் நெருக்கமாய் உணர செய்வார்.
வாழ்க்கையில் வலிகளை மட்டுமே சுமந்தி திரிந்த இந்த எழுத்தாளனை நினைக்க நினைக்க மனம் கனக்கின்றது.
தொகுப்பிற்கு நன்றி சுந்தர்.
நர்சிம், கார்த்திக், யாத்ரா, அனுஜன்யா & லேகா... நன்றி.
இனம் புரியாத பயமும் வெறுமையும் எனை சுழகின்றன.
Post a Comment