திருமணம் முடிந்து வந்த முதல் சிக்கல் - ஏன் மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்று என் மனைவி தொடர்ந்து கேட்ட கேள்விகள். எனக்குத் தலைவலி, தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும் என்று ஒருவாறு சமாளித்தேன். வாழ்க்கை தன்போக்கில் நடந்து கொண்டிருந்தது. நீங்கள் அலைந்து திரிய வேண்டாம் க்ரியாவுக்கே வந்துவிடுங்கள் என்று சொன்னார் ராமகிருஷ்ணன். அதை ஏற்று க்ரியாவுக்கே வேலைக்குப் போக ஆரம்பித்தேன். க்ரியா அப்போது ராயப்பேட்டையிலிருந்தது.
பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்க்கும் போது ‘ராணி' எனும் பெயர் பொருத்தமாகத் தெரிந்தது. 'ராணிஸ்ரீ'ன்னு வச்சிட்டேன். 1983 முடிவில் குழந்தை பிறந்த பிறகுதான் எழுத ஆரம்பித்தேன். இதற்கு முன்பு ஒரு முயற்சியாக 73ல் தூயோன் எனும் சிறுகதை எழுதியதைச் சொல்ல வேண்டும். அதை ஞானக்கூத்தனிடம் காட்டினேன். நன்றாக வந்திருப்பதாகச் சொன்னார் அவர். அந்தக் கதையை பிரசுரிக்கத் தோன்றவில்லை. அதை 86ல் திரும்பவும் எழுதினேன். அது விருட்சம் இதழில் பிரசுரம் ஆனது. 78ல் ராமராவ் பாலிகிளினிக்கில் வேலை செய்தபோது கிடைத்த தோழியைப் பற்றி (அவள் என்னை டாடி என்று அழைப்பாள்) ஒரு கதை எழுதினேன். அது ‘மையம்' பத்திரிகையில் 84 ஜனவரி - மார்ச் இதழில் வெளியானது. இதுதான் முதல் வெளியீடு. மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தொடர்ந்து எழுதினேன். நிறைய கதைகள் சேர்ந்தன. கதைகள் நன்றாயிருக்கின்றன என்றார் ஆனந்த். நகுலனிடம் கதைகளைக் காட்டச் சொன்னார். இரு தினங்கள் கழித்து க.நா.சு தங்கியிருந்த அறைக்கு நகுலன் வந்திருந்தார். ஆனந்தும் நானும் சேர்ந்து என் ஏழு கதைகளை நகுலனிடம் கொடுத்தோம்.
அடுத்தநாள் கடற்கரையில் நகுலனை ஞானக்கூத்தனோடு பார்த்தோம். ‘இந்தக் கதைகளை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னிடம் பணம் இருந்தால் புத்தகமாகப் போடுவேன்' என்றார் நகுலன். நகுலன் சொன்னதை ஜெயதேவன் (வி.ராஜகோபால்) மனதில் வாங்கி அவரே பதிப்பித்தார். "ஒவ்வாத உணர்வுகள்" மார்ச் 86ல் வெளியானது.
தொகுப்பு அச்சில் இருந்த நிலையில் மிகத் துக்ககரமான சம்பவங்கள் நிகழ்ந்தன. என் மனைவி, வீட்டில் இருக்கப் பிடிக்காமல் ஏதேனும் வேலைக்குப் போகிறேன் என்றாள். நான் இந்த விஷயத்தை திலீப்குமாரிடம் சொன்னேன். ராயப்பேட்டை முத்தமிழ் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை இருப்பதாகப் பரிந்துரைத்தார் திலீப். என் மனைவியின் கல்வித் தகுதி 7ம் வகுப்பு. ஒரே மாதத்தில் கம்பாசிடர் வேலையைக் கற்றுக் கொண்டாள். அவளிடமுள்ள வினோத வழக்கம் என்னவென்றால் கையில் காசில்லை என்றால் முழுக்கவும் அப்செட் ஆகிவிடுவாள்.
அவள் வசதியான வீட்டில் நல்லபடியாக வளர்ந்தவள். என் கையில் காசு தீர்ந்து போனால் நண்பர்களிடம் கடன் வாங்கியாவது வைத்துக் கொள்வேன். ஒருதடவை சுத்தமாகக் காசில்லாமல் போய்விட்டது. நான் இரண்டு பித்தளைப் பாத்திரங்களை எடுத்து அடகு வைக்கப் போனேன். அன்றைக்குப் பார்த்து அடகுக்கடை லீவு. எனக்குத் தெரியாமல் போய்விட்டது. நான் திரும்பவும் பாத்திரங்களை வீட்டில் வைத்துவிட்டு க்ரியாவுக்குப் போய்விட்டேன். நண்பர்கள் சினிமாவுக்குப் போகிற மனநிலையில் இருந்தார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நானும் சேர்ந்து கொண்டேன்.
நாங்கள் அலங்கார் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தோம்.என்ன படமென்று இப்போது நினைவில்லை. திடீரென்று படத்தை நிறுத்திவிட்டு ‘க்ரியா கோபிகிருஷ்ணன் வான்டட் இம்மீடியட்லி. ஃபிரெண்ட்ஸ் ஆர் வெயிட்டிங்' என்று சிலைடு போட்டார்கள். கீழே போனேன். ‘உன் மனைவி தற்கொலைக்கு முயற்சி செய்து ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள்' என்று தகவல் கிடைத்தது.
உடனடியாக அவளைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு ஓடினேன். என் மாத்திரைகளை எடுத்துச் சாப்பிடிருப்பாளோ என்று எனக்குச் சந்தேகம். வீட்டில் பரிசோதிக்கையில் அதுதான் நடந்திருந்தது. முதலில் மின்விசிறியில் தூக்கு போட்டுக் கொள்ள முயன்றிருக்கிறாள். குழந்தை கிரஷ்ஷில் இருந்தது. குழந்தையைப் பக்கத்து வீட்டுப் பாட்டி அழைத்துக் கொண்டு வந்து வைத்திருந்தார்கள்.
இந்த மாத்திரைதான் சாப்பிட்டிருக்கிறாள்; இதற்கு சரியான மாற்று கொடுத்து சரி செய்து விடுங்கள் என்று நான் டாக்டரிடம் சொன்னேன். போலீஸ் கேஸாகிவிட்டது. என்னை உள்ளே வைத்து விட்டார்கள். லாக்கப்பில் அல்லாமல் போலீஸ் ஸ்டேஷனுக்குள். அந்த வளாகத்திற்குள்தான் நான் இருக்க வேண்டும். கேஸ் புக் செய்யப்பட்டது. அங்கிருந்த இன்ஸ்பெக்டர், ‘நான் சபரி மலைக்கு மாலை போட்டிருப்பதால் அடிக்க மாட்டேன். அடிப்பதற்கு ரொம்ப நேரம் ஆகாது. உண்மையைச் சொல்லிவிடு' என்றார்.
நான் எல்லாவற்றையும் அவரிடம் விளக்கிச் சொன்னேன். என் மனைவியின் இயல்பை தெளிவாக எடுத்துக் கூறினேன். போலீஸ்காரர்கள் நம்பவில்லை. அநாகரிகமான அசிங்கமான பல கேள்விகளைக் கேட்டார்கள். ‘உன் நண்பர்கள் எவரிடமாவது உன் மனைவிக்குத் தொடர்பு உண்டா?' என்றெல்லாம் கேட்டர்கள். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் 1986 புத்தாண்டு அன்று அந்த இன்ஸ்பெக்டர் ‘ஹேப்பி நியூ இயர்' என்று எனக்குப் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னார்.
நான் பித்தளைக் குடங்களை எடுத்துக் கொண்டு அடகுக் கடைக்குப் போனதை பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்து என் மனைவியிடம் சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. என் மனைவியின் உறவினர்கள் வந்தார்கள். என்னைக் கண்டித்துப் பேசி அவளை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அவள்மீது கேஸ் ஆகிவிட்டது. சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு நானும் அவளும் சென்றோம். தற்கொலைக்கான முதல் முயற்சி என்று தண்டனையில்லாமல் விட்டு விட்டார்கள். கடைசியாக போலீஸ் ஸ்டேஷனை விட்டு வரும்போது அந்த இன்ஸ்பெக்டரிடம் நன்றி சொன்னேன். ‘நீ நன்றியெல்லாம் சொல்ல வேண்டாம். உன் மனைவியை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். அது போதும்' என்றார் அவர். எனக்கு மனது கேட்கவில்லை. அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. க்ரியா ராமகிருஷ்ணனிடம் இதைப் பற்றிப் பேசினேன். ‘டாக்டர் இல்லாத இடத்தில்' எனும் புத்தகத்தைக் கொடுக்கச் சொன்னார். நான் கொடுத்த புத்தகத்தை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.
மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன் முதலான எல்லா செலவுகளையும் க்ரியா ராமகிருஷ்ணன்தான் பார்த்துக் கொண்டார். நான் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த நான்கு நாட்களும் க்ரியா ஸ்தம்பித்து விட்டது. அதன் பிறகு தனி ரூம் எடுத்துத் தங்கினேன். கொருக்குப்பேட்டையில் இருந்த என் மாமியாரிடம் குழந்தையின் படிப்பு தடைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். 3.30 மணிக்குக் குழந்தையைப் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டுபோய் மாமியார் வீட்டில் விடுவேன். குழந்தை ராணிஸ்ரீ எல்.கே.ஜி. படித்துக் கொண்டிருந்தாள். ஒரு மாதம் கழித்து என் வீட்டிலிருந்து சாமான்களை மாமியார் வீட்டிற்கு எடுத்துச் சென்றேன்.
மார்ச் 86ல் ஒவ்வாத உணர்வுகளுக்கும், க.நா.சு.வின் கவிதைப் புத்தகத்திற்கும் வெளியீட்டு விழா. சிட்டாடல் பதிப்பகம் - மையம் வெளியிட்டிருந்தது.
க்ரியா டிக்ஷனரி ப்ராஜக்ட் 2.6.86ல் தொடங்கியது. நானும் முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்களும் ஆரம்ப கட்ட வேலைகளுக்காகச் சிதம்பரத்தில் மறைமலை நகரில் இருந்தோம். அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் முனைவர் என்.குமாரசாமி ராஜா அவர்களின் உதவி டிக்ஷனரிக்குத் தேவைப்பட்டதால்தான் சிதம்பரத்தில் இருக்க வேண்டி வந்தது என்று நினைக்கிறேன். ஆனால் நான் இதை நிச்சயமாகக் கூற முடியாது. Policy decisions பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
முனைவர் பா.ரா.சுப்பிரமணியனின் வீடு தஞ்சாவூரில் இருந்தது. வெள்ளிக்கிழமை மதியம் சிதம்பரத்திலிருந்து அவர் தஞ்சாவூர் புறப்படுவார். நான் சென்னை வருவேன். திங்கட்கிழமை சிதம்பரத்தில் சேர்ந்து கொள்வோம். 87ல் வேலையைச் சென்னையில் செய்ய இங்கு வந்தேன். சென்னையில் ப்ராஜக்ட் ஆபிஸ் அண்ணாநகர் (வெஸ்ட் எக்ஸ்டென்ஷன்)லிருந்தது. நான் கொருக்குப் பேட்டையிலிருந்து வருவது சிரமம். எனவே பாடியில் வீடு எடுத்தேன். 86லிருந்து மனைவி ஜனசக்தியில் கம்பாசிடராகப் பணியில் சேர்ந்தாள். சிறிய கருத்துவேற்றுமை காரணமாக 29-7-89ல் நான் க்ரியாவிலிருந்து வெளியேறினேன்.
1992ல் டிக்ஷனரி வெளியான பிறகு நான் மீண்டும் க்ரியாவின் நண்பனானேன். ஒன்றே ஒன்று இங்கு சொல்லத் தோன்றுகிறது. ஒரு சூழல் உறவுக்கு ஏதுவாக இல்லாவிட்டால் அந்தச் சூழலைவிட்டு பிரச்சினைக்குரிய நபர் விலக வேண்டும்; அது எவ்வளவு பெரிய ஊதியத்தை ஈட்டித்தரும் சூழலாக இருந்தாலும் சரி. இதை நான் ஒரு தார்மீகமான செயல் என்றே கருதுகிறேன். அப்பொழுதுதான் சூழலுக்கு வெளியேயாவது நட்பு நிலைக்கும். எனக்கு நட்பு மிக மிக முக்கியம்.
வங்கியில் ரெக்கரிங் டெபாசிட்டாக இருந்த 3000 ரூபாயில் செலவுகளைப் பார்த்துக் கொண்டேன். இரண்டு மாதங்கள் கழித்து வேலை கிடைத்தது. டாக்டர் சாரதா மேனனிடம் வேலை. இவர் மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவன இயக்குனராக இருந்தார். சைக்யாட்ரிக் சோஷியல் ஒர்க்கர் பணி எனக்கு. அவருடைய மாலை நேரத் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளை நேர்கண்டு கேஸ் ஹிஸ்டரி எழுத வேண்டும். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அறிவுரை வழங்குதலும், குழு சிகிச்சையும் செய்ய வேண்டும். அது பகுதி நேரப் பணி.
அங்கு சேர்ந்த ஒரு வாரத்திலேயே Guild of Service-ல் நண்பர் ஒருவரின் சிபாரிசினால் உதவு சமூகப் பணியாளர் வேலை கிடைத்தது. இந்த வேலையில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் போகலாம் வரலாம். அங்கு முக்கியமான நெருக்கமான ஒரு தோழி இருந்தாள். ‘ஓட்டம்' கதையில் வருபவள். என்னுடன் எட்டு மாதங்கள் வேலை செய்துவிட்டு ஹாங்காங் போய்விட்டாள். அவளிடமிருந்து கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. அங்கேயே அவளுக்குத் திருமணம் முடிந்தது. ஒரு வருடம் கழித்து வந்தாள். வருடத்தில் மூன்று முறை அவளைப் பார்க்கப் போவேன். எனக்கு மனநலப் பிரச்சினைகள் அவ்வளவாக இல்லை. எழுதிக் கொண்டிருந்தேன்.
ஆனந்த், நகுலன், க.நா.சு., ஜெயதேவன், சுந்தர ராமசாமி முதலானோர் நண்பர்களானார்கள். வெங்கட் சாமிநாதன் இண்டியன் எக்ஸ்பிரஸில் என் கதைகளைப் பற்றி Curving Downwards என்று மதிப்புரை எழுதினார். பிறகு Economic Timesஸிலும் குறிப்பிட்டிருந்தார். ஞானக்குத்தன், ஆர். ராஜகோபால், ரா. ஸ்ரீனிவாசன், அழகிய சிங்கர் ஆகியோருடனும் நெருக்கமான தொடர்பிருந்தது.
நான் பார்த்ததிலேயே மிகவும் நல்ல வேலை இது (Guild). ஒரு சொர்க்கம் போல. சகல சுதந்திரங்களும் உண்டு. 2500 ரூபாய் மாதச் சம்பளம். பதவி உயர்வு கிடையாது. நான் M.A. படிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். எம்.ஏ. படித்தால்தான் பிரமோஷன் எனும் நிலையில் தபால் வழியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. சோஷியாலஜி சேர்ந்து அதை முடித்தேன். சான்றிதழ் வந்த உடனே பணி உயர்வு கேட்டதற்கு முடியாது என்று மறுத்துவிட்டார்கள். அலுவலக சூழ்நிலை அடியோடு மாறியது.
படிப்பிற்காக 5000 ரூபாயாவது செலவழித்திருப்பேன். 60 நாட்களாவது இதற்காக விடுப்பு எடுத்திருப்பேன். நான் இழப்பீடு கேட்டேன். யாரும் உதவி செய்யவில்லை. அந்தச் சமயம் பார்த்து எனக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டது. என் உடல்நிலை பெரிதும் மோசமடைந்தது. மூச்சுவிட இயலவில்லை. மருத்துவச் செலவு பூதாகரமாய் நின்று அச்சுறுத்தியது. வேறு வழியின்றி வேலையை ராஜினாமா செய்தேன். இதன்மூலம் கிடைத்த 28,000 ரூபாயில் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டேன். ‘கில்டி'ல் ஏழரை வருட காலம் வேலை பார்த்திருந்தேன்.
‘கில்ட்'ல் இருக்கும்போது 93ல் நானும் சஃபி மற்றும் லதா ராமகிருஷ்ணனும் ‘ஆத்மன் ஆலோசனை மையம்' என்ற அமைப்பைத் தொடங்கினோம். இதன் முக்கியமான செயல்பாடு மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு அலோசனை வழங்குவது. மையம் மூன்றரை வருடங்கள் இயங்கியது. ஆரம்பக் கட்டத்தில் நிறைய கிளையன்ட்ஸ் வந்தார்கள். என்னுடைய மனநல பாதிப்பினாலும், பிரமோஷனுக்காக எம்.ஏ. படித்துக் கொண்டிருந்ததாலும் தொடர்ந்து அதில் செயல்பட முடியவில்லை.
கில்ட் ஆஃப் சர்வீஸில் ஒரு ஃபால்ஸ் ரிப்போர்ட் எழுதப் பணித்தார்கள். ஒவ்வொரு சோஷியல் ஒர்க்கருக்கும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள குடும்பங்கள் ஆய்வுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அந்தக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி வசதி, மருத்துவ வசதி, வீட்டின் - வீட்டுக் கூரையின் நிலை என்ன என்பது பற்றியெல்லாம் கண்காணிக்க வேண்டும். வீட்டுக் கூரை பிரிந்தோ சேதமுற்றோ இருந்தால் அதைச் சரி செய்ய உதவ வேண்டும். லண்டன் ப்ராஜக்ட் இது. நாங்கள் டெல்லி கில்ட் ஆஃப் சர்வீஸ் அலுவலகத்திற்கு ரிப்போர்ட் அனுப்ப வேண்டும்.
ஒரு சமூகப் பணியாளர் சுமார் 250 குடும்பங்களைப் பார்க்க வேண்டியிருந்தது. இது அவ்வளவு சுலபமில்ல. ஆகவே பணியாளர்கள் ஆய்வு செய்யாமலேயே அலுவலகத்தில் இருந்தபடி அறிக்கைகளைத் தயார் செய்தார்கள். நானும் அவ்வாறு செய்யும்படி கட்டாயப் படுத்தப்பட்டேன். பார்க்காமல் ஆராயாமல் பொய்யாக என்னால் அறிக்கை எழுத முடியவில்லை. ஆனால் இதை நான் செய்தே தீர வேண்டியிருந்தது. அப்படிச் செய்யாமல் பணியில் நீடிக்க இயலாது. உடனடியாக வேறு வேலையும் கிடைக்காது.
இந்தப் பீதியினால் 3250 மில்லிகிராம் வீரியம் கொண்ட மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டுப் படுக்கையில் சாய்ந்தேன். தடயங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. கதவைத் தாழ் போடாததால் திறந்து பார்த்த என் மனைவி உடனடியாக ஒரு ஆட்டோ பிடித்து கே.எம்.சி.க்குக் கொண்டு சென்றாள். அங்கே என்னைச் சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ள மறுத்தார்கள். ஆட்டோ டிரைவரும் என் மனைவியும் வற்புறுத்திக் கெஞ்சியதன் பேரில் சேர்த்துக் கொண்டார்கள். ஏழு நாட்கள் சுத்த மயக்க நிலையில் கிடந்தேன். இதனாலும் என்னால் ஆத்மனைக் கவனிக்க இயலவில்லை. முழுதுமாக சஃபிதான் பார்த்துக் கொண்டிருந்தார். சில குறிப்பிட்ட கேஸ்களை லதா ராமகிருஷ்ணன் எடுத்துக் கொண்டார். இதனால் கில்ட் ஆஃப் சர்வீஸ் வேலைக்குப் பாதகம் ஏற்படவில்லை. டாக்டர் சாரதா மேனன்தான் சிகிச்சை கொடுத்தது. போலீஸ் கேஸ் ஆகாமல் பார்த்துக் கொண்டார்கள். டிஸ்சார்ஜ் ஆன நாளன்று மாலையில் டாக்டர் சாரதா மேனனைப் பார்த்தேன். மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார்கள். இந்த விஷயம் நிறைய நண்பர்களுக்குத் தெரிந்து ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.
எழுத்து தொடர்புடையது, அல்லாதது என்று பல இடங்களில் சிறிய சிறிய ஃப்ரீலான்ஸ் வேலைகள் பார்த்தேன். மனநிலை குன்றிய பையனை அழைத்துச் சென்று கம்ப்யூட்டர் செண்டரில் விட்டு வருதலும் அவற்றில் ஒன்று.
ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் இண்டெக்ஸர் வேலை க்ரியா ராமகிருஷ்ணன் மூலமாகக் கிடைத்தது. 4320 ரூபாய் சம்பளம். இதுவரை வாங்கியதிலேயே அதிக சம்பளம் இதுதான். இங்கு வேலை பார்த்த காலம் ஒரு வருடம் மூன்று மாதங்கள். என்னுடைய உற்ற சக-ஊழியர் ஒருவரை உதவி இயக்குனர் ஒருவர் அவமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நான் அந்த நல்ல வேலையைத் துறந்தேன். பொருளாதார பலகீனம் தற்போதும் நீடிக்கிறது. அடிக்கடி நண்பர்களின் உதவி தேவைப்படுகிற நிலை. இரண்டு மனநோய்க் குறிகள் இன்னும் இருக்கின்றன.
1. Obsessive ruminations 2. Obsessive Depression போன்ற பிரச்சினைகள் எனக்கிருந்தன.
முதலாவது தாறுமாறான எண்ணங்கள். நான் நினைக்காமலேயே தானாகவே எண்ணங்கள் வருகின்றன. மோசமான எண்ணங்கள் அதிகம் வரும். இது மனதை மிகவும் பாதிக்கிறது. இந்த மோசமான எண்ணங்கள் என்னுள் அதிகமான அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
இரண்டாவது, ஆட்டிப்படைக்கும் மனச்சோர்வு. இதற்கான சிகிச்சையை டாக்டர் சாரதா மேனனிடம் சமீபகாலம் வரை பெற்றுக் கொண்டிருந்தேன். இப்பொழுது ESI ல் சிகிச்சை எடுத்து வருகிறேன். மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நான் எழுதுவதில்லை. என் இதுவரையிலான ஒட்டுமொத்த வாழ்க்கையில் மிக மகிழ்ச்சிகரமான நிலையிலிருந்தது என் மகளின் திருமணத்தின் போதுதான்.
கார்காலக் குறிப்புகள் - 60
1 day ago
8 comments:
//ஒரு சூழல் உறவுக்கு ஏதுவாக இல்லாவிட்டால் அந்தச் சூழலைவிட்டு பிரச்சினைக்குரிய நபர் விலக வேண்டும்; அது எவ்வளவு பெரிய ஊதியத்தை ஈட்டித்தரும் சூழலாக இருந்தாலும் சரி.//
பகிர்வுக்கு நன்றிங்க.
இந்த பெரிய பேட்டியை பதிவேற்ற மிகுந்த உழைப்பு தேவைப் பட்டிருக்கும்.
சிரமம் எடுத்து பதிவேற்றிய உங்களுக்கு நன்றிகள் பல.
கோபியின் எழுத்துக்களை படிக்கும் பொழுது தோன்றும் ஒன்று நாம் எந்த அளவு பொதுவிலும்,அலுவலகத்திலும் சமரசம் செய்து கொண்டு வாழ்கின்றோம் என்று.இவரின் நேர்மையான எழுத்துக்கள் சில சமயம் நம்மை வெட்கி தலை குனிய செய்பவை.
பைத்தியக்காரன் ஒரு பின்னூட்டத்தில் இப்பேட்டியைக் குறிப்பிட்டபோதே கேட்கலாமென்றிருந்தேன் நீங்கள் பதிந்தமைக்கு மிக்க நன்றி சுந்தர்..
சென்னையில் கதிர் என்கிற நல்லவர் இருக்கிறார்.அவரிடம் சொன்னால் இப்பேட்டியை மின்னூலாக்கி தந்துவிடுவார்.அவர் மின்னூலாக்கினால் எல்லாருக்கும் மிக்க உதவியாய் இருக்கும்
Thanks Jyovram..
JK said Living itself is a meditation..I admire his struggles against his health and his efforts to contribute..
I feel many of his problems are not his doing but his bodies doing..it is unfair for a man to struggle for no mistake of his..
I've heard a saying "If life were fair, it would be called that"..
The story opened a few windows..
\\ஒரு சூழல் உறவுக்கு ஏதுவாக இல்லாவிட்டால் அந்தச் சூழலைவிட்டு பிரச்சினைக்குரிய நபர் விலக வேண்டும்; அது எவ்வளவு பெரிய ஊதியத்தை ஈட்டித்தரும் சூழலாக இருந்தாலும் சரி. இதை நான் ஒரு தார்மீகமான செயல் என்றே கருதுகிறேன். அப்பொழுதுதான் சூழலுக்கு வெளியேயாவது நட்பு நிலைக்கும். எனக்கு நட்பு மிக மிக முக்கியம்.\\
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.
எவ்வளவு இன்னல்கள், தற்கொலை கூட இரக்கம் காட்டாது முயற்சிகள் கைகூடாமல் தோல்வியில் முடிந்த துயரங்கள், இதில் என்ன கொடுமை என்றால், தனக்கு என்ன மனச்சிக்கல், நோய் இருக்கிறது என்பதறிந்தும் ஒன்றும் செய்யவியலாது மீட்சியின்றி தவித்த ஆத்மா,
இந்தப் பதிவின் பல சம்பவங்களை இவரது கதைகளிலும், கில்ட் வாழ்க்கையை இடாகினிப் பேய்களிலும் படித்திருந்ததாக நினைவு.
ஒவ்வாத உணர்வுகள் தொகுப்பு தற்போது கிடைக்கிறதா, க்ரியா வம்சி தமிழினி என தேடிப் பார்த்துவிட்டேன்.
இவ்வளவு மனச்சிக்கல்களில் உழன்றவர் இது மாதிரியான சூழல்களிலிருந்து விலகியிருந்திருந்தால் ஓரளவிற்காவது மீட்சியாக இருந்திருக்குமோ. ஆனால் இவரோ உள்ளேயிருந்து சில குரல்களை எழுதியிருக்கிறார், ஆத்மனில் கவுன்சலிங் செய்திருக்கிறார். என்ன முரண் பாருங்கள், பிறருக்காக செய்யப்படும் கவுன்சிலிங்கில் இருக்கும் ஆறுதல் வார்த்தைகள், தனக்கான மனச்சிக்கல்களுக்கு மருந்தாகாது பலமுறை தற்கொலை முயற்சியில் முடிந்திருக்கிறது முடிந்தது. முதல் மனைவி பிரிவு, அடுத்து தான் தான் தற்கொலைக்கு முயன்று தோற்று தோற்று போகிறோம் என்றிருக்கும் தருணத்தில் மனைவியின் தற்கொலை முயற்சி.
இவரது தற்கொலை என்னை மிகவும் கலங்கச் செய்திருக்கிறது, ஆனால் இவருக்கு மரணம் மட்டுமே சகல வாதைகளிலிருந்தான மீட்சியாக இருந்திருக்க முடியும். தற்கொலையெல்லாம் தற்கொலையேயல்ல தானே செய்து கொள்ளும் கருணைக்கொலை என்றே தோன்றுகிறது.
//என் இதுவரையிலான ஒட்டுமொத்த வாழ்க்கையில் மிக மகிழ்ச்சிகரமான நிலையிலிருந்தது என் மகளின் திருமணத்தின் போதுதான்//
இந்த வார்த்தைகளுக்குப் பின்னாலிருக்கும் வலியும் வலி நிறைந்த நிறைவும்,,,,,,,,,
desk topல் பாதுகாக்கப் படவேண்டிய வார்த்தைகள்..
நன்றி சுந்தர்ஜி.
கார்திக், காத்திகேயன், லேகா, அய்யனார், ரானின், யாத்ரா, நர்சிம்... நன்றி.
பகுதி பகுதியாகப் படிக்கச் சிரமப்படுவோர், jyovramsundar@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால், இந்தப் பேட்டியின் wordpad file அனுப்பி வைக்கிறேன்.
Post a Comment