'சிதைவுகளில்' வர வேண்டியது சில காரணங்களால் 'மொழி விளையாட்டில்' வருகிறது. சிரமத்துக்கு பதிவுலக நண்பர்கள் பொறுத்தருள வேண்டும். இந்த தொடர் விளையாட்டை ஆரம்பித்த நண்பர் மாதவராஜுக்கும், என்னை தொடரச் சொன்னதுடன், தன் வலைப்பக்கத்திலேயே இதை வெளியிடவும் இசைந்த அன்பு சுந்தருக்கும் ஸ்பெஷல் உம்மா. லக்கி, இப்போது திருப்திதானே? சுந்தருக்கு முத்தம் கொடுத்துவிட்டேன் :-). உங்களால் பாவம் மாதவராஜும் என் உம்மாவை சகித்துக் கொள்கிறார் :--&( இனி -&
அன்பின் முத்தையா,
இது சாலமன். நலமா? நானும்.
ஒரு நூற்றாண்டு தனிமைக்கு பின், கொல்லனின் ஆறு பெண் மக்களுடன் மதுரைக்கு வந்த ஒப்பனைக்காரன், மதினிமார்களின் கதைகளை சொல்ல ஆரம்பித்த இருபது ஆண்டுகளுக்குப் பின், பைத்தியக்காரனை சந்தித்தேன். ஆமாம், பதிவுலகில் எழுதிவரும் அதே பைத்தியக்காரன்தான். அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருந்தான். ஒரு கோப்பை தேனீருக்குப் பின், ஏன் இப்போது பதிவுகளில் எழுதுவதில்லை என்று கேட்டேன். 'அலுவலகத்தில் ப்ளாக்கரை மூடிவிட்டார்கள். பின்னூட்டங்கள் மட்டுமே அதிரி புதிரியாக எழுத முடிகிறது' என்றான். ஆனால், குரலில் வேறு ஏதோவொன்று மறைந்திருந்தது. மெல்ல பேச்சுக் கொடுத்ததில் கொட்ட ஆரம்பித்தான். சிதறிய வார்த்தைகளில் காந்தி தாத்தாவின் புன்னகை சுத்தமாக துடைக்கப்பட்டிருந்தது.
''பயமா இருக்குடா. சாட்ல யார் வந்தாலும் சரி, இல்ல புதுசா ஏதாவது பதிவுலக நண்பர் அறிமுகமானாலும் சரி, சட்டுனு கடனா பணம் கிடைக்குமான்னு கேட்க ஆரம்பிச்சிடறேன். சுந்தர், ஜமாலன், நர்சிம்... இப்படி யாரையுமே விடலை. எல்லார்கிட்டேந்தும் பணத்த வாங்கிட்டேன். ஆனா, இதுவரைக்கும் திருப்பித் தரலை. இப்பக் கூட பாரு, உன்கிட்ட ஏதாவது பணம் கிடைக்குமானுதான் உள்ளுக்குள்ள கணக்கு போட்டுட்டு இருக்கேன். என்னையே எனக்கு பிடிக்கலைடா. ஆனா, விடிஞ்சா 20 ஆயிரம் ரூபா வட்டி கட்டணுமே. நான் என்ன செய்யட்டும்? யோசிச்சேன். நண்பர்களை இழக்க விரும்பலை. அதான் மவுனமாகிட்டேன்...''
எனக்கு பாதசாரியின் 'காசி' நினைவுக்கு வந்தான்.
நேற்று குரோம்பேட்டையிலுள்ள சிவராமனின் வீட்டுக்கு சேஷையா ரவியுடன் சென்றிருந்தேன். நெடுநெடுவென்று வளர்ந்திருந்த ஒரு பெண் கதவைத் திறந்தாள். 14 வயதுதானிருக்கும். எட்டிப் பார்த்த சிவராமன், வரவேற்றான். அந்தப் பெண்ணையும் அறிமுகப்படுத்தினான். நிரஞ்சனா. அவனது அக்கா மகள். சுருள் சுருளான முடியுடன், நோஞ்சானாக பிறந்த குழந்தையை மொட்டை மாடியில் தூக்கி வைத்துக் கொண்டு பாட்டி வடை சுட்ட கதையை நீயும் நானும் மாறி மாறி சொன்னோமே, அதே குழந்தைதான். அதே சுருள்முடிதான். அதே அரிசிப் பற்கள்தான். ஆனால், இப்போது பூசினாற்போல் இருக்கிறாள். 'இழுத்துக் கட்டிய உடல்' என தி. ஜானகிராமன் என் செவியில் முணுமுணுத்தார். ஆச்சர்யத்தில் வாய் பிளந்துவிட்டேன். நம்மிடமிருந்து விலகிய வயதை எல்லாம், அந்தப் பெண்தான் மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கிறாள். வாய் நிறைய அங்கிள், அங்கிள் என்று அவள் அழைத்தபோதும், சுடச்சுட காபி கலந்து கொடுத்தபோதும்... சொல்லத் தெரியவில்லை. மனதில் அப்படியொரு சந்தோஷம் ஊற்றெடுத்தது. நம் கண்முன்னால் ஒரு குழந்தை, குமரியாகியிருக்கிறாள். பரிணாம வளர்ச்சியின் அழகு, சொரூப நிலை.
வெளியில் வந்தோம். வெய்யில் தகித்தது. 'Rain Rain go away, Come again another day... என பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து நாம் மனப்பாடம் செய்ய ஆரம்பித்ததன் விளைவு இது', கர்சீப்பால் முகத்தை துடைத்தபடியே சேஷையா ரவி முணுமுணுத்தான். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
காரணம் கேட்காதே. இரண்டு நாட்களுக்கு முன் 'பணமா பாசமா' படத்தை திரும்பவும் பார்த்தேன். 'மும்பை'யில் அரவிந்த்சாமி, 'நீங்க சாகற வரைக்கும் என்னால காத்திருக்க முடியாது...' என்பாரே, அதுமாதிரியான ஒரு வசனத்தை இந்தப் படத்தில் நடிகை சரோஜாதேவி, டி. கே. பகவதியிடம் சொல்கிறாள். போலவே 'சூர்யவம்சம்' படத்தில் வரும் பல காட்சிகள், இதிலும் இடம்பெற்றிருந்தன. ரமணிச்சந்திரனின் ஏதோவொரு நாவல். வளையோசையோ, எதுவோ பெயர் நினைவில் இல்லை. பெயரா முக்கியம்? ஒரே கதையைத்தானே தொடர்ந்து நாவலாக ரமணிச்சந்திரன் உற்பத்தி செய்துக் கொண்டிருக்கிறார்?
இரு இரு, மெளனி மட்டும் யோக்கியமா? அவரது 24 சிறுகதைகளும் ஒரே சிறுகதைதானே என நீ சொல்வது என் செவியில் ஒலிக்கிறது. மறுக்கவில்லை. உலகிலுள்ள மனிதர்களை எல்லாம் பலமற்ற, கனவு காணும் பதினெட்டுப் பிராயத்து காதலர்களாக... அப்படிப்பட்ட காதலர்களின் பலத்துடனும் பலஹீனத்துடனும் கற்பனை செய்து காட்டுவதே மெளனிக்கு வாடிக்கை. அதுவே வேடிக்கை. ஒப்புக்கொள்கிறேன்.
என்றாலும் 'படிகளில்' ஏறி, 'மீட்சி'யின் வழியே 'நிறப்பிரிகை'யை பிடித்து அவருக்கு சமாதி கட்டிவிட்டாலும் 'எவற்றின் நடமாடும் சாயலாகவோ' அவர் உலவிக் கொண்டுதானே இருக்கிறார்? அதனால்தான் சிலநேரங்களில் அவர் அழியாச்சுடர். புதுமைப்பித்தன் குறிப்பிட்டதுபோல் மெளனி, எழுத்தாளர்களின் திருமூலர்.
இடைச்செறுகலாக ஒரு விஷயம் முத்தையா. 'THOUGHT' ஆங்கில இதழில் 'Introducing Mouni' என ஒரு கட்டுரையை நகுலன் முன்பு எழுதியிருக்கிறார். எவ்வளவோ தேடிப் பார்த்துவிட்டேன். அந்தக் கட்டுரையும் சரி, அந்த இதழும் சரி கிடைக்கவில்லை. நகுலனின் 'மொத்த' தொகுப்பிலும் அது இடம்பெறவும் இல்லை. உன்னால் முடிந்தால் அந்தப் பிரதியை கண்டுப் பிடித்து ஜெராக்ஸ் எடுத்துக் கொடு. ஈரேழு ஜென்மத்திலும் உனக்கு புண்ணியம் கிடைக்க நான் வழிகாட்டுகிறேன். ஜெராக்ஸ் என்றதும் ஜ்யோராம் சுந்தரின் ஞாபகம் வருகிறது. ஒரே இதழுடன் நின்றுவிட்ட 'மழை' சிற்றிதழில் யூமா வாசுகி எடுத்த கோபிகிருஷ்ணனின் ஒரே முழுமையான நேர்காணல் வந்திருக்கிறது. அந்தப் பத்து பக்கங்களையும் பிரதி எடுத்து தருமாறு சுந்தர் நச்சரித்துக் கொண்டிருக்கிறார். தர வேண்டும்.
அதெல்லாம் கிடக்கட்டும். மெளனியும், ரமணிச்சந்திரனும் ஒன்றா என யாராவது முஷ்டியை மடக்கலாம். பூஞ்சை உடம்பு. பதிலுக்கு தொடை தட்டினால், என் கால் எலும்பு உடைந்துவிடும். எனவே ஒரே வாக்கியம்தான். சுந்தரராமசாமியின் எழுத்துக்களும், சாணித்தாளில் பிரசுரமாகும் சரோஜாதேவியின் ஃபோர்னோ எழுத்துக்களும் கூட ஒன்றுதான் என்பதில் தீர்மானமாகவே நானிருக்கிறேன்.
சரி, இப்போது ரமணிச்சந்திரனின் நாவலுக்கு வருவோம். அதில், நாத்தனாரின் வளைகாப்புக்கு, தன்னை காதலிக்காத கணவனுடன் நாயகி செல்வாள். முத்து வளையலை போடுவாள். சீமந்தத்துக்கு இந்தமாதிரியான முத்து வளையல் சீராக வேண்டும் என நாத்தனாரின் மாமியார் கட்டளையிட்டிருப்பாள். எனவே பரிசு போலவும், சீதனம் போலவும் அது அமையும். நாயகன் நெகிழ்வான். இதற்கு சமமான காட்சியும் 'பணமா பாசமா'வில் இருக்கிறது.
இவையெல்லாம், காபியா, இன்ஸ்பிரேஷனா? இதற்கு பதில் சொல்வதைவிட, பதில் அவசியம் தேவையா என்ற கேள்வியே முன்னிலை வகிக்கிறது. தொடர்ச்சியும், சங்கிலி போன்ற ஒருவகையான கோர்வையுமே அனைத்தின் அடிநாதமாக இருக்கிறது. நீ என்ன நினைக்கிறாய்?
தமிழ் எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன், ஓலைச்சுவடிகளில் கவிதையை எழுதுவதற்கு முன், பாணர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்திருக்க வேண்டும். முகம் தெரியாத மூதாதையர்கள் உச்சரித்த வாய்மொழி பாடல்களே காற்றில் உலவியிருக்க வேண்டும். அதனால்தான் சங்கக்கால புலவர்களால் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் எழுத முடிந்திருக்கிறது. இன்ஸ்பிரேஷன் இன்றி இது சாத்தியமில்லை.
இப்படிப்பார். 'பொன்முடி' திரைப்படத்தில் பாரதிதாசன் வசனம் எழுதியிருக்காவிட்டால், 'பராசக்தி' படத்தில் கருணாநிதியால் அந்த நீதிமன்ற வசனங்களை எழுதியிருக்க முடியுமா? சிரமம்தான். காரணம், வரிக்கு வரி கருணாநிதி எழுதியது பாரதிதாசனின் வரிகளுடைய எக்ஸ்டென்ஷன்தான்.
அவ்வளவு ஏன், போர்ஹேஸ் எழுத்துக்களின் தாக்கம் உம்பர்ட்டோ ஈகோவிடம் அதிகமாக காணப்படுவதை தேர்ந்த வாசகனால் உணரமுடியுமல்லவா? இதையே இப்படியும் சொல்லலாம். போர்ஹேஸ் சிறுகதைகள் முடிந்த இடத்திலிருந்து உம்பர்ட்டோவின் எழுத்துக்கள் சீறிப்பாய்கின்றன. உம்பர்ட்டோ ஈகோவின் Foucault's pendulam வாசிப்பதற்கு முன்னால் போர்ஹேஸ் எழுதிய Tlon, Uqbar, Orbis Tertius சிறுகதையை வாசிப்பது நல்லதல்லவா? (இந்த சிறுகதையை ‘லோன், உக்பார், ஒர்பிஸ் தெர்துய்ஸ்’ என்ற பெயரில் எளிமையாக, தெளிவாக, முழுமையாக நண்பர் பிரேம் (ரமேஷ்) தமிழ்படுத்தியிருக்கிறார். சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மணல் பிரதி’ தொகுப்பில் இதனை காணலாம். நேரில் சந்திக்கும்போது இந்தப் பிரதியை உன்னிடம் தருகிறேன்.)
அதேபோல், கொரிய இயக்குநரான கிம் கி டுக்கின் 'The Bow' திரைப்படத்தை பார்க்கும்போதெல்லாம் ஜப்பானிய எழுத்தாளரான யசுனாரி கவபட்டா எழுதிய 'House of Sleeping Beauties' புதினம் ஏனோ கண்முன்னால் வந்து வந்து போகிறது. இரண்டுக்கும் தொடர்பில்லைதான். ஆனால், பிணைப்பு இருப்பதுபோலவே தோன்றுகிறது.
வேண்டுமானால் நீயே கவபட்டாவின் இந்த நாவலை வாசித்துப்பார். ஆங்கிலத்தில் கூட வேண்டாம். தமிழில் லதாராமகிருஷ்ணன், 'தூங்கும் அழகிகள் இல்லம்' என்ற பெயரில் இதை மொழிபெயர்த்திருக்கிறார். 'உன்னதம்' கெளதமசித்தார்த்தன் அதை வெளியிட்டிருக்கிறார்.
சித்தார்த்தன் என்றதும் இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. இனி மாதாமாதம் 'உன்னதம்' இதழ் வெளிவருமாம். சித்தார்த்தனை சந்தித்தபோது சொன்னார். அவரது நிலத்தை அடமானமாக வைத்து வங்கியிலிருந்து கடன் வாங்கியிருக்கிறாராம். அந்தத் தொகை தீரும் வரை இதழ் தவறாமல் வருமாம். சிறுபத்திரிகை வியாதி. செல்லப்பா, ஆத்மாநாம், 'இலக்கியவெளிவட்டம்' நடராசன் என தொடரும் பட்டியலில் கெளதம சித்தார்த்தனும் இடம்பெற நினைக்கிறார்.
ஷிட். எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்துவிட்டோம். இன்ஸ்பிரேஷன். ஆமாம், நாம் பேசி வந்தது இதைப்பற்றிதான். என்ன சொல்ல வருகிறேன் என்றால், வேர்களை அறிவது விழுதுகளை புரிந்து கொள்ள உதவும். அவ்வளவுதான். ஆனால், இப்போது விழுதுகளை மட்டுமே தொழுவுவது அதிகமாகிவிட்டது. தத்துவப் போக்கில் மட்டுமல்ல, இலக்கியப் போக்கிலும் இந்த நிலை நீடிக்கிறது. புதுமைப்பித்தன், மெளனி, கு.பா.ரா... என தொடரும் ஸ்கூல் ஆஃப் தாட், இன்றைய ஜே.பி. சாணக்யா வரை கிளை பரப்பி நிற்கிறது. பிரமிள், நகுலன்... என தொடரும் பட்டியல் இப்போதைய பின்னை நவீனத்துவ பிரதிகளில் மூச்சு வாங்க ஓய்வெடுக்கிறது. தமிழின் முதல் ஹோமோ செக்சுவல் நாவலான கரிச்சான் குஞ்சு எழுதிய 'பசித்த மானுடம்' ஒருவகையில் இன்றைய 'ஜீரோ டிகிரி'க்கு முன்னோடி. டிக் ஷ்னரி ஆஃப் கஸார்ஸ் வாசித்தால் கோணங்கியின் புதினங்கள் ஓரளவு புரியும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் வாழ்க்கையையும், தேவதாசிகளின் ரணங்களையும் அறிந்திருந்தால் முழுமையாகவே 'பாழி', 'பிதுரா'வுடன் உரையாட முடியும்.
அதாவது முத்தையா. பயிற்சியாக வாசிக்க ஆரம்பித்தால், எல்லாம் இன்பமயம். என்றாலும் புதுமைப்பித்தனின் 'சிற்பியின் நகரம்', கு. அழகிரிசாமியின் 'ராஜா வந்திருக்கிறார்', கு.பா. ராஜகோபாலனின் 'விடியுமா' போன்றவை என்றுமே மாஸ்டர் பீஸ்தான் என்பதை உரத்து சொல்வதில் வெட்கமேதும் இல்லை. இரு இரு. கோபித்துக் கொள்ளாதே. உட்கார். கடிதம் படிக்காமல் எங்கு கிளம்பிவிட்டாய்? சிகரெட் பிடிக்கவா? அட, மன்னித்து விடப்பா. ஆர்வக் கோளாறு. ஏதேதோ உளறிவிட்டேன். இப்போது அறுப்பதை நிறுத்திவிட்டு நேராக ரோஷினிக்கு வருகிறேன்.
ஆ... ஹை. புன்னகையை பார். எவ்வளவு தொலைவில் இருந்தாலும் ரோஷினி குறித்து பேச ஆரம்பித்ததுமே நீ உதடு கிழிய சிரிப்பாய் என்று தெரியும். முதலில் உன் வாயை துடைத்துக் கொள். வழிகிறது. நீ, நான், ராமச்சந்திரன் மூவரும் போட்டி போட்டுக் கொண்டு காதலித்த அதே ரோஷினியை ஏவிஎம் ஸ்டூடியோவில் சந்தித்தேன். சென்ற கடிதத்தில் அந்த நடிகை வரும் விளம்பரத்தை புகழ்ந்திருந்தாய் அல்லவா? அதை எடுத்தது அவள்தானாம். சொன்னாள். அந்த விளம்பரத்துக்கு காமிரா பிடித்தவர் அவளது கணவனாம். வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டேன். இருவரும் ராஜிவ்மேனனிடம் பயிற்சி பெற்றபோது காதல் அரும்பியதாம். நான்கு வயதில் பையன் இருக்கிறானாம்.
சட்டென ஏவிஎம் ஸ்டூடியோ மறைந்துவிட்டது. நாம் அலைந்து திரிந்த பள்ளிக்கூடமும், வயல்வெளிகளும், தோப்புகளும் அப்படியே சிஜியில் முளைத்தது. அரைக்கால் டிரவுசரில் நானும், பாவாடை சட்டையில் அவளுமாக நின்றுக் கொண்டிருந்தோம். மாங்காய் அடித்து நான் கொடுக்க, புளியம் பழத்தை அவள் பதிலுக்கு கொடுத்தாள். அதை சாப்பிடுவதற்காக என் வாயருகில் கொண்டு சென்றேன். யாரோ தோளைத் தொட்டார்கள். புளியம் பழம் நழுவி விழுந்தது.
'ஹி இஸ் மை ஹஸ்பண்ட்' என்றாள். கை குலுக்கினோம். இருவருமாக இணைந்து அடுத்தமாதம் படத்துக்கு பூஜை போடப் போகிறார்களாம். 'நீயும் முத்தையாவும் என்னை டாவடிச்சீங்களே... அதுதான் கதை' என்று சிரித்தாள். சிரித்தான். சிரித்தேன். கணவரிடம் அனைத்தையும் சொல்லி இருக்கிறாள். அவர்கள் நெருக்கமாகவும், சிநேகமாகவும், சந்தோஷமாகவும் வாழ்வதற்காகவே அவளை நாம் சிறுவயதில் காதலித்திருக்கிறோம் போல.
''ஹீரோ கேரக்டர் பேரு என்ன தெரியுமா? ராமச்சந்திரன்!'' என அட்டகாசமாக ரோஷினியின் கணவன் சொன்னான். எந்த ராமச்சந்திரன் என்று நானும் கேட்கவில்லை. அவளும்/னும் சொல்லவில்லை.
சென்ற முறை நீ எனக்கு கடிதம் எழுதியபோது டாக்டர் ருத்ரன் உன்னிடம் கேட்ட கேள்வியை எனக்கு ஃபார்வேர்ட் பண்ணி இருந்தாய். i really would like to meet someone who had read the interpretation of dreams ( or being and nothingness)! இதில் interpretation of dreams குறித்து எனக்கு எதுவும் தெரியாது. செல்வேந்திரன் கேட்டதற்கு பதில் சொன்னது பைத்தியக்காரன். எனவே அவன்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அல்லது டாக்டரை போய் சந்திக்க வேண்டும்.
ஆனால், being and nothingness பற்றி ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். காரணம் அது சார்த்தர் எழுதிய புத்தகம். சிமோன் தி புவாவுடன் 20 ஆண்டுகளுக்கும் மேல் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து, காதலுடன் வாழ்ந்தவரில்லையா? எந்தவொரு தத்துவ மாணவனையும் ஈர்க்கும் விஷயமல்லவா இது? தனக்கான சிமோன் தி புவாவை தேடுவது வரமா சாபமா? இதை The Nature of Second sex என்று சொல்வதைவிட, The Nature of First sex என்று சொல்லலாமா?
சார்த்தர் எழுதிய அந்த நூலை முழுமையாக வாசிக்கவில்லை. தமிழ்ச் சூழலில் சார்த்தரை முழுமையாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர்கள் எஸ்.வி. ராஜதுரை அல்லது அந்தக் கால சாருநிவேதிதா. இருவரும் சார்த்தரின் படைப்புகளை தெரிந்த அளவுக்கு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். சார்த்தரை ஒன்றுமில்லாமல் தெரிதா, ஆக்கியதும், சார்த்தரை படிப்பதை நிறுத்திவிட்டேன். அது தவறு என்று இப்போது புரிகிறது. அவரது காதல் வாழ்க்கையை மட்டுமல்ல, இருத்தலியல் கோட்பாடுகளையும் முழுமையாக கற்க வேண்டும். என்ன செய்ய, வேர்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஞானோதயம் இப்போதுதானே உதித்திருக்கிறது?
எப்படியோ டாக்டர் எனது நினைவுகளை கிளறிவிட்டுவிட்டார். யோசித்தபோது ஞாபக அடுக்கிலிருந்து being and nothingness குறித்து ஒரேயொரு பீஸ்தான் வந்துவிழுந்தது. அதுகூட முழுமையாக இல்லை. சாராம்சம் மட்டும் கொஞ்சம். கொஞ்சம்...
'ஒரு ஆணும் பெண்ணும் ஏன் பழகுகிறார்கள் என்று அந்த ஆணுக்கும் தெரியும், பெண்ணுக்கும் தெரியும். ஆனாலும் தெரியாதது போல் நடிக்கிறார்கள். ஆண் தன் விருப்பத்தை தெரியப்படுத்தியதும், அந்தப் பெண் திடுக்கிடுவது போல் நடிக்கிறாள்....'
இந்த பீஸ் சரியா என்பதை டாக்டரை கேட்டுச் சொல். இந்த இடத்தில் காரல் மார்க்ஸ் எழுதிய விஷயமும் தொடர்ச்சியாக வந்து விழுகிறது.
The Immediate, natural and necessary relation of human being to human being is the relation of man to woman. The relation of man to woman is the most natural relation of human being to human being... - KARL MARX, EPM
ஸ்ஸ்ஸ்... அப்பா... ரொம்ப எழுதிவிட்டேன். கை வலிக்கிறது. போதும் முடித்துவிடுகிறேன்.
தோழமையுடன்
சாலமன்.
இந்த தொடர் விளையாட்டில் அடுத்ததாக கடிதம் எழுத (அதாவது முத்தையா, சாலமனுக்கு எழுதும் மடல்) நண்பர் நர்சிம்மை அழைக்கிறேன்.
- பைத்தியக்காரன்
கார்காலக் குறிப்புகள் - 60
1 day ago
33 comments:
பதிவை பதித்ததற்கு நன்றி சுந்தர்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
பைத்தியக்காரன் வெட்கப்படாமல் உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள். ரொம்ப நாளாய் பதிவுலகில் எழுத வில்லையே என உங்களது ஆவேசங்கள் அத்தனையையும் இங்கே கொட்டினீர்களா?
தன்னுடைய முழு வன்மையை காட்ட வேண்டும் என்று கமல் தனது படங்களில் முயற்சி செய்வாரே அது மாதிரி.
இனி அடுத்த பதிவு எப்போதோ? என்று ஒவ்வொரு வரிகளையும் கோர்த்தீர்களோ. எனது யூகம் சரியென்றால் இந்தக் கடித்ததை முடிக்கவே நீங்கள் விரும்பி இருக்க மாட்டீர்கள். அப்படியே எழுதிக் கொண்டு நீண்டுக் கொண்டே போனால் எவ்வளாவு நன்றாய் இருக்கும் என்று ஒரு கணமாவது யோசித்திருப்பீர்கள்.
நான் நினைத்தது சரியோ தவறோ. ரொம்ப நாள் கழித்து சிவராமனின் எழுத்துக்கள் மகிழ்ச்சியைத் தருகிறது.
ரமணி சந்திரன் குறித்தான உங்களது கோபத்தை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. அப்பப்போ தலையைக் காட்டுங்க பாஸூ.
பைத்தியக்காரன்
உங்கள் பதிவை ஒரு வரியும் கடக்காமல் படித்து முடித்தேன். ‘அருமையாக இருக்கிறது’ என்ற தேய்ந்த வார்த்தைகளால்தான் புகழவேண்டியிருக்கிறது. உங்கள் வாசிப்பின் ஆழம் புரிந்தது. பல புத்தகங்களை ஆரம்பித்து ஆரம்பித்து முடிக்காமல் விட்டுவிட்ட மாதிரியிருந்தது. ரமணி சந்திரனின் எழுத்தைப் பற்றி ‘ஒரே கதையை மாற்றி மாற்றி எழுதுகிறார்’என்று நான் குறைந்தது ஐம்பது பேரிடமாவது சொல்லியிருப்பேன். ஆனால் ஒன்று தெரியுமா.. நமது பெண்களில் அதிகம் பேர் விரும்பிப் படிப்பது ரமணிச்சந்திரனைத்தான். இலகுவான, தொல்லைப்படுத்தாத கனவுகளில் தொலைந்துபோக அது பாதை அமைத்துக் கொடுக்கிறது. நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. நிறைய எழுதுங்கள்.
நந்தா,
நீண்ட நாட்களாக பதிவு எதையும் எழுதவில்லை. எனவே ஆவேசங்கள் அத்தனையும் கொட்டியிருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். யோசித்துப் பார்த்தேன். அப்படி எதுவும் எனக்கு தோணவில்லை நண்பா. ஆனால், கடிதம் முடியக் கூடாது என்று நினைத்தது மட்டும் உண்மை.
பொதுவாக நேர்பேச்சில் நான் அதிகம் பேச மாட்டேன், ரொம்ப பழக்கமானால் தவிர. ஆனால், எழுத ஆரம்பித்தால் நிறுத்த மாட்டேன். சீரியல்களில் வசனம் எழுதும்போது கூட இதே பிரச்னை வந்தது. வருகிறது. அதை சரி செய்ய வேண்டும்.
பதிவை வாசித்ததற்கும், பின்னூட்டம் இட்டதற்கும் நன்றி நண்பா.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
தமிழ்நதி,
வரிகளை கடக்காமல் படித்ததற்கும், பாராட்டியதற்கும் நன்றி.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
sorry no tamil fond.
it is very useful for me.
வரிகளின் மேல் கண்கள் நிலைகுத்தி இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி படிப்பதற்குள் கணம் இறங்கிவிட்டது மனதிற்குள்.. உங்கள் வாசிப்பின் அடர்த்தி கடிதம் முழுக்கவே..
இதில் என்னைக் கோர்த்திருப்பது தான் கொடுமை.
நன்றி முரளி
ஒரு கொடுமையும் இல்ல நர்சிம். சிக்சர் அடிச்சு ஆடுங்க...
தோழமையுடன்
பைத்தியக்காரன்
என்னய்யா இது எல்லாரும் சாலமனோட வாசிப்புத் திறத்தைப் பாராட்டறீங்க... அவரு வாசிச்ச எல்லாரையும் நானும்தான் வாசிச்சிருக்கேன்... இப்படியா ஃபிலிம் காட்டினேன் நானு.
கௌதம சித்தார்த்தன் சிறுபத்திரிகை பத்திச் சொல்லியிருக்காரு. ஏன்யா ஆத்மாநாம் சிறுபத்திரிகை நடத்தியா நாசமாப் போனாரு... இதக் கூட யாரும் கேக்கலையே... பேசாம நானே இன்னொரு கதை எழுதிட வேண்டியதுதான்.
இப்படிக்கு,
போன பதிவில் வந்த
முத்தையா
***
நானும், பாவாடை சட்டையில் அவளுமாக நின்றுக் கொண்டிருந்தோம். மாங்காய் அடித்து நான் கொடுக்க, புளியம் பழத்தை அவள் பதிலுக்கு கொடுத்தாள். அதை சாப்பிடுவதற்காக என் வாயருகில் கொண்டு சென்றேன். யாரோ தோளைத் தொட்டார்கள். புளியம் பழம் நழுவி விழுந்தது.
'ஹி இஸ் மை ஹஸ்பண்ட்' என்றாள். கை குலுக்கினோம்.
***
பாஸ்ட் டு ப்ரெசென்ட் - Amazing style of writing. Great பைத்தியக்காரன். Shook me awake !
இந்த மாதிரி லெட்டர் எல்லாம் ஒரு இடைவெளி விட்டு போடுங்க. உடனே உடனே போடாதீங்க. முந்தைய கடிதத்த அசை போட்டு முடிக்கவே இல்ல. அதுக்குள்ளார !
எதிர்பார்த்த வீரியம்; ஆனாலும் வியக்க வைக்கும் வாசிப்பு. என்ன சால்ஜாப்பு சொன்னாலும் நீங்க அவ்வப்போதாவது பதிவில் எழுதுங்கள். சுந்தர் இடம் தர மறுத்தால், எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். என் பதிவில் போட்டு நானும் இலக்கியவாதிதான் என்று மெடல் குத்திக்கலாம் :)
நர்சிம், ஆல் த பெஸ்ட்
அனுஜன்யா
பைத்தியக்காரன்...
நல்ல பதிவு. கௌதம சித்தார்த்தன், பாதசாரி என்று பலரை போகிற போக்கில் புதியவர்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று நம்புகிறேன். கௌதம சித்தார்த்தனின் ‘வேனிற்கால வீடு பற்றிய குறிப்புகள்‘ பாதசாரியின் ‘மீனுக்குள் கடல்‘ இரண்டையும் இன்றும் என்னால் நினைவுக்கு கொண்டுவர முடிகிறது. வாழ்வை சுவாரசியப்படுத்திய காலம் அது. யூமாவாசுகியின் ‘மழை‘யும் இன்று மீள் வாசிப்பிற்கு எடுக்கிறேன். ஞாபகப்பதிவிற்கு நன்றி.
(நான் ஜீவராம் சுந்தரை படிக்க வந்த இடத்தில் உங்களை படித்தது இனிய சந்தோஷம்)
நர்சிம்முக்கும் எனது வாழ்த்துக்கள்.
- பொன். வாசுதேவன்
மிஸ்டர் பைத்தியக்காரன்..
ஐ ரியல்லி ப்ரௌட் டு சே.. ஐ லவ் யூ!
உங்கள் வாசிப்பில் பத்து சதம் அடைய நேர்ந்தாலே நானும் சொல்லிக் கொள்வேன் நானுமொரு படிப்பாளி என்று!
போன பதிவில் வந்த
முத்தையா - vukku ...
appadi podunga :)))
ellorukkum solren makka ... paithiyatha lesupattadha ninaikkaadheenga ... aama sollitten :))
கிறங்கிப் போயிருக்கிறேன்.
உங்கள் மொழியும், வாசிப்பும் தந்த பிரமிப்பு அடங்க கொஞ்ச நாள் ஆகும் எனத் தோன்றுகிறது.
//அவர்கள் நெருக்கமாகவும், சிநேகமாகவும், சந்தோஷமாகவும் வாழ்வதற்காகவே அவளை நாம் சிறுவயதில் காதலித்திருக்கிறோம் போல.//
தாகூரின் கீதாஞ்சலியில் ஒரு இடத்தில் படித்த ஞாபகம்.... குழந்தையின் சிரிப்பு எங்கிருந்து வருகிறது தெரியுமா என்று கேட்டு சந்திரன் என்று சொல்லி தொடர்ந்து சில கேள்விகள் கேட்டு பதில் சொல்வார்.இறுதியில் குழந்தையின் உடலில் இத்தனை மென்மை எங்கிருந்து வருகிறதா என்று கேட்டு, குழந்தையின் தாய் தன் இளம் வயதில் கொண்ட காதலில் இருந்து என்பார்.
மிக அடர்த்தியான வரிகள் கொண்ட அனுபவத்தை பகிர்ந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி.
இப்படியெல்லாம் எழுதினா என்னை மாதிரி ஆளுங்கெல்லாம் என்ன பின்னூட்டம் போடுறது..?!!!!!!
அண்ணன் பின்னூட்டம் எழுத வெக்கமா இருக்கு...
அதே சமயம் பெருமையாவும் இருக்கு கடந்த சில தனிமையான வருடங்கள் குடுத்த விசயங்களில் இவை முதல் நிலை விசயங்கள்...
ரமணி சந்திரன் ஈழத்தின் பெண்களுடைய ஆஸ்தான எழுத்தாளர்(கொடுமை) நானும் ஒரு காலத்தில் சில காரணங்களுக்காக ரமணி சந்திரனை வாசித்திருக்கிறேன் அல்லது கண்ணில் படும்படி வைத்துக்கொண்டு சுற்றியிருக்கிறேன்
மற்றும் படி நான் உங்களையெல்லாம் வாசித்திருக்கிறேன்.
ரமணி சந்திரன் நாவல்கள் பற்றி நந்தா ஒரு தனிப்பதிவே எழுதியிருக்கிறார். அதில் டோண்டுவும் அவரும் பேசியிருப்பார்கள்...
இதனை பதிவதற்கு தேர்ந்தெடுத்த இடமும் மிகப்பொருத்தமான இடம்!
நண்பர் பைத்தியக்காரன்,
'//இழுத்துக் கட்டிய உடல்' என தி. ஜானகிராமன் என் செவியில் முணுமுணுத்தார்.//
//புதுமைப்பித்தனின் 'சிற்பியின் நகரம்', கு. அழகிரிசாமியின் 'ராஜா வந்திருக்கிறார்', கு.பா. ராஜகோபாலனின் 'விடியுமா' போன்றவை என்றுமே மாஸ்டர் பீஸ்தான் என்பதை உரத்து சொல்வதில் வெட்கமேதும் இல்லை.//
ஒரு நெருக்கம் இருக்கிறது.
ஆனால் இது முத்தையாவுக்கு எழுதியது போல் அல்லாமல் பெரிய இலக்கிய சர்ச்சை போல் இருக்கிறது.
இன்னும் சொன்னால் மழை பெய்ந்து ஓய்ந்தது போல் இருக்கிறது.
அடுத்தது நண்பர் நர்சிம்............. ம்ம் ஆரம்பமாகட்டும்............
//சிதைவுகளில்' வர வேண்டியது சில காரணங்களால் 'மொழி விளையாட்டில்' வருகிறது. //
சிதையாமல் வருவதே மகிழ்ச்சி தானே!
//சிதறிய வார்த்தைகளில் காந்தி தாத்தாவின் புன்னகை சுத்தமாக துடைக்கப்பட்டிருந்தது.//
பல உண்மைகள் ஒளிந்திருக்கும் வாக்கியம். உலகமே இப்போ இதில் தள்ளாடுதாம்.
//அதேபோல், கொரிய இயக்குநரான கிம் கி டுக்கின் 'The Bow' திரைப்படத்தை பார்க்கும்போதெல்லாம்//
நேற்று தான் பார்த்தேன், மனுசன் அநியாயத்துக்கு அமானுஷ்ய பிரியராய் இருக்கிறார், அது தான் உதைக்குது.
சரி புனைவுன்னு எடுத்துகிட்டு ரசிக்கவேண்டியது தான்!
//
ரமணிச்சந்திரனின் ஏதோவொரு நாவல். வளையோசையோ, எதுவோ பெயர் நினைவில் இல்லை. பெயரா முக்கியம்? ஒரே கதையைத்தானே தொடர்ந்து நாவலாக ரமணிச்சந்திரன் உற்பத்தி செய்துக் கொண்டிருக்கிறார்?
//
தெரிதா, போர்ஹேஸ் போன்ற பெயர்கள் மட்டுமே எனக்கு தெரியும்..(உதவி: சாரு நிவேதிதா)..
ஆனால் ரமணிச்சந்திரனின் சில கதைகளை படித்திருக்கிறேன்...பெயர் முக்கியமில்லை...அவர் பெரும்பாலும் ராணிமுத்து என்று ஒரு மாத இதழில் எழுதுவார்...அந்த காகிதம் கொஞ்சம் மஞ்சளாக இருக்கும்...ஒரு முறை சாரு சொல்லியிருந்தார்....ரமணிச்சந்திரனின் எழுத்துக்கள் மலம்...எனக்கு சாருவுடன் கருத்து வேறுபாடு இல்லை!
பைத்தியக்காரன், நீங்கள் ஏன் தொடர்ந்து எழுதக்கூடாது?? அத்துமீறல் இல்லை, என் சுயநலமும் ஆர்வமும்...
@ மணிகண்டன் - நன்றி நண்பா
@ அனுஜன்யா - இந்த நண்பனுக்கு உங்கள் தளத்தை தர முன்வந்ததற்கு நன்றி
@ அகநாழிகை - உங்கள் பின்னூட்டம் பல கொசுவர்த்தியை சுழலவிட்டது. நன்றி நண்பா
@ பரிசல் - ஐ டூ லவ் யூ
@ வளர்மதி - அன்பின் வளர், உன்னுடன் உரையாடிவிட்டு ஒவ்வொருமுறை விடைபெறும்போதும் உனது முத்தங்களை சுமந்துக் கொண்டே சென்றிருக்கிறேன். உனது இந்தப் பின்னூட்டமும் எனது கன்னத்தை எச்சில் படுத்தியே இருக்கிறது. நன்றி மாப்ள
@ மாதவராஜ் - தாகூரை நினைவு கூர்ந்ததற்கும், என்னை அரவணைத்ததற்கும் நன்றி நண்பா
@ உண்மைத்தமிழன் - என்ன மாதிரியான பின்னூட்டம் போட்டாலும் உங்கள் பிரியத்துக்கு என்றுமே நான் சொந்தக்காரந்தான் இல்லையா நண்பா?
@ தமிழன் கறுப்பி - நன்றி, நன்றி, நன்றி நண்பா
@ மண்குதிரை - இலக்கிய சர்ச்சை ஏதுமில்லை நண்பா. நெருக்கத்தை உணர்ந்ததற்கு நன்றி
@ வால் பையன் - நன்றி, நன்றி, நன்றி நண்பா
@ தனது தளத்தை என் பதிவுக்காக விட்டுத்தந்த சுந்தருக்கு ஸ்பெஷல் நன்றி.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
பதிவுலகை சேர்ந்த எனது சிநேகிதி, இந்தப் பதிவு வெளியானதுமே தொலைபேசியில் தொடர்பு கொண்டார். திட்டித் தீர்த்தார்.
தனது கருத்துக்களை பின்னூட்டமாக இடுவார் என்று எதிர்பார்த்தேன். நட்புக்காக அதை அவர் பதிவு செய்யவில்லை போலிருக்கிறது. என்றாலும் அவரது நேர்மையான விமர்சனத்தை பதிவு செய்ய வேண்டியது எனது கடமை.
அவர் சொன்னதன் சாராம்சம் இதுதான்:
'பைத்தியக்காரனுக்குனு இருக்கறதா நீ நினைக்கற இமேஜை காப்பாத்திக்க வலுகட்டாயமா எழுதினா மாதிரி இருக்கு. இதுல சுத்தமா உண்மையோ, நேர்மையோ இல்ல. மத்தவங்களுக்கு பிரமிப்பையும், மிரட்சியையும் தரணும்னு நினைக்கறதை விட்டுட்டு இனிமேலாவது இயல்பா எழுது...'
விமர்சனங்களால் என்னை பக்குவப்படுத்த முயன்ற அந்தத் தோழிக்கு நன்றி
தோழமையுடன்
பைத்தியக்காரன்
@ அது சரி - நன்றி நண்பா
முதலில் ஒரு நல்ல புத்தக அலமாரி வாங்க வேண்டும். இந்த புத்தகங்களை வாங்கி நிரப்பி, தினம் ஒரு அரை மணி நேரமாவது படிக்கவேண்டும். பிடிவாதமாய் பிரசுரிக்கும் சிறுபத்திரிக்கைகளுக்கு சப்ஸ்க்ரைப் பண்ண வேண்டும்....
ரொம்பா ரசித்துப் படிதேன்... தொடருங்கள் விளையாட்டை...
//ஒரு முறை சாரு சொல்லியிருந்தார்....ரமணிச்சந்திரனின் எழுத்துக்கள் மலம்...எனக்கு சாருவுடன் கருத்து வேறுபாடு இல்லை!//
இது மட்டும் தானா!
இல்லை சாரு எது சொன்னாலும் ஆமான்னு மண்டை ஆட்டுவிங்களா?.
படிச்ச உங்களுக்கு தெரியாதா!
இதுல சாரு சொல்லனுமா!
சாரு என்ன கடவுளா?
அருமை.
வாழ்த்துகள்.
பிலிம் காட்டுதல் (அ) பின்னூட்டமிடுதல்
அருமையா இருக்குங்க பைத்தியக்காரன்.
//எல்லார்கிட்டேந்தும் பணத்த வாங்கிட்டேன். ஆனா, இதுவரைக்கும் திருப்பித் தரலை//
ஜி நாகராஜன், ஜான் ஆப்ரகாம், பிரமிள், பலர் நினைவுக்கு வருகிறார்கள், கலைஞனுக்கு ஏன் விளிம்பு நிலை மேல ஒரு ஈர்ப்பு.
தி ஜா, புதுமைப்பித்தன், மௌனி, குபரா, கு அழகிரிசாமி இந்த மாதிரி பெயர்களை கேட்கிற போது எழும் நாஸ்டால்ஜியா இருக்கே,,,,,,
நிரஞ்சனா போல் குழந்தையில் பார்த்து வளர்ந்த பிறகு பார்க்கையில் நேரும் அனுபவங்கள்,,,,,,
//ஒரே இதழுடன் நின்றுவிட்ட 'மழை' சிற்றிதழில் யூமா வாசுகி எடுத்த கோபிகிருஷ்ணனின் ஒரே முழுமையான நேர்காணல் வந்திருக்கிறது//
சீக்கிரமா தேடி வெளியிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். கோபிகிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு பதிவு துவங்கி உள்ளேயிருந்து சில குரல்கள், டேபிள் டென்னிஸ் ,,,,,நாவல்களை ஒவ்வொரு அத்தியாயமாக வெளியிடலாம்.
எழுத்து ழ போன்ற இதழ்களின் பககங்கள் சிலவற்றை ( யாரிடமும் இருந்தால்) யாரேனும் pdf வடிவில் வெளியிட்டால் மகிழ்வேன்.
பசித்த மானுடம் அந்த போலிஸ்காரர் கேரக்டர்,,,,
கோணங்கிய எப்படி வாசிக்கனும் கொஞ்சம் சொல்லிக்குடுங்களேன். பனிமூட்டத்துல நடந்து போகிற மாதிரி முன்னயும் பின்னயும் ஒன்னுமே தெரியல, ஆனா போதையா இருக்கு. ஒரு எழுத்தாளனுக்கு எவ்ளோ தைரியம் வேணும், அப்படி ஒரு எழுத்து முறையை தேர்ந்து கொள்வதற்கு, சிறுகதைன்னா பரவாயில்ல, நாவல்கள் கூட, ஆச்சர்யமாவும் பிரமிப்பாவும் இருக்கு.
ஆமாம் அது எந்த ராமச்சந்திரன்
ரோஷினியின் கணவர்க்கு எப்படி ராமச்சந்திரனை தெரியும். ரோஷிணி இருக்கும் போது இவர் ஏங்க நகுலனையெல்லாம் படிக்கறார்.
சாணக்யாவோட கனவுப்புத்தகம் வாசிச்சு இருக்கேன்.
//'பைத்தியக்காரனுக்குனு இருக்கறதா நீ நினைக்கற இமேஜை காப்பாத்திக்க வலுகட்டாயமா எழுதினா மாதிரி இருக்கு. இதுல சுத்தமா உண்மையோ, நேர்மையோ இல்ல. மத்தவங்களுக்கு பிரமிப்பையும், மிரட்சியையும் தரணும்னு நினைக்கறதை விட்டுட்டு இனிமேலாவது இயல்பா எழுது...'
விமர்சனங்களால் என்னை பக்குவப்படுத்த முயன்ற அந்தத் தோழிக்கு நன்றி//
இந்தத் தோழி காலை தொட்டு வணங்கிவிட்டு ஒரு வேண்டுகோளும் வைக்கிறேன், அவரை எழுத விடுங்க ப்ளீஸ். இல்லன்னா காலத்துக்கும் ரமணிச்சந்திரனை தான் படிச்சிகிட்டு இருக்கணும், பிரமிப்பு மிரட்சில்லாம் இல்லங்க, கற்றதை கற்கத்தூண்டுதல். ரெண்டு புஸ்தகமாச்சும் கூட விக்கட்டுங்க
பைத்தியக்காரன், சுந்தர்ஜி ரெண்டு பேரும் ஒருத்தரேவா, வேற வேறவா
@ சுகுமார் - பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி நண்பா
@ வண்ணத்துப்பூச்சியார் - பின்னூட்டத்துக்கு நன்றி நண்பா
@ யாத்ரா - பின்னூட்டத்துக்கு நன்றி நண்பா. சுந்தரும், பைத்தியக்க்காரனும் ஒருவரும் அல்ல. இருவரும் அல்ல. பலர்.
கோபிகிருஷ்ணனின் நேர்காணலை சுந்தர் வெளியிடுவார்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
Post a Comment