நகுலன் கவிதைகள்

http://jyovramsundar.blogspot.com/2009/06/blog-post_26.html பதிவில் சொல்லியதைப் போல இந்த இடுகையில் சில நகுலன் கவிதைகள் :

எல்லைகள்

அவன் எல்லைகளைக் கடந்து கொண்டி
ருந்தான். ஒரு காலைப் பின் வைத்து
ஒரு காலை முன் வைத்து நகர்வதில்
தான் நடை சாத்தியமாகிறது. இரு
காலையும் ஒரு சேர வைத்து நடந்தால்
தடாலென்று விழத்தான் வேண்டும்.
எல்லை தாண்டாமல் நின்றால் ”அவன்
அதுவாகும் விந்தை.” நெளிந்து
நெளிந்து தன் வளையமாகத் தன்
னையே சுற்றிக் கொண்டு கடைசியில்
தலையும் வாலும் ஒன்று சேர
வெறும் சுன்னமாகச் சுருண்டு
கிடக்கும் நிலை

அவன் எல்லைகளைக் கடந்து
கொண்டிருந்தான். ஒன்றிலும்
நிச்சயமில்லாத மனிதர்கள், அல்குலின்
அசைவுகள், “சுபாவஹத்தியை”
விழையும் மனதின் பரபரப்பைத்
தூண்டிவிடும் ஸ்தாபனங்கள்
சில்லறை சில்லறையாகத் தன்
னை இழப்பதால் வந்து சேரும்
காப்புகள். காலக்கறையான்
தின்று கொண்டிருக்கும் மேதை
களின் சிற்ப - சிதிலங்கள், இறந்த
வர்களின் சாந்நித்தியம் இருப்ப
வர்களின் மிரட்டல் - இவை
யெல்லாம் பின்தங்க அவன்
எல்லைகளைக் கடந்து கொண்
டிருந்தான்

அவன் பயணம் இன்னும்
தொடர்ந்து கொண்டுதான்
இருந்தது. நடுவில் யாரோ
ஒருவன் அவனை நோக்கி
“நீங்கள்?” என்று உசாவ
அவனுக்கு அவன் பெயர்
கூட மறந்துவிட்டது.

அலைகள்

நேற்று ஒரு கனவு
முதல் பேற்றில்
சுசீலாவின்
கர்ப்பம் அலசிவிட்டதாக.
இந்த மனதை
வைத்துக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது.

ஸ்டேஷன்

ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது


வண்ணாத்திப் பூச்சிகள்

உண்ணூனிப் பிள்ளைக்குக் கண்வலி.
கேசவ மாதவன் ஊரில் இல்லை. சிவனைப்
பற்றித் தகவல் கிடைக்கவில்லை. நவீனன்
விருப்பப்படி அவன் இறந்த பிறகு அவன்
பிரேதத்தை அவன் உற்ற நண்பர்கள்
நீளமாக ஒரு குழி வெட்டி அவனை
அதில் தலைகீழாக நிறுத்தி வைத்து
அடக்கம் செய்துவிட்டார்கள். எங்கும்
அமைதி சூழ்ந்திருக்கிறது. வெயிலில்
வண்ணாத்திப் பூச்சிகள் பறந்து
கொண்டிருக்கின்றன.


சுருதி

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி / ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு


சந்தை

செத்த வீட்டில்
துக்கம் விசாரிக்கச்
சென்று திரும்பியவர்
சொன்னார்
“செத்த வீடாகத்
தெரியவில்லை
ஒரே சந்தை இரைச்சல்”


வரையறை

தலையும் வாலும்
இல்லாத பிழைப்பு
என்று
சொல்லிச் சிரித்தார்
சச்சிதானந்தம் பிள்ளை
கேட்டு நின்றவனுக்கு
ஒன்றும் புரியவில்லை


இவைகள் (2)

இந்திர கோபம்
இது ஒரு பூச்சியின் பெயர்
உக்கிரப் பெருவழுதி
இது ஒரு அரசன் பெயர்
யோக நித்திரை
இது ஒரு தத்துவச் சரடு


கனல் (2)

ஒரு
வரிப்புலி
கனல்
உமிழும்
அதன் கண்கள்
என்
உன்மத்த வேகம்


வேறு

உலகச் சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன்னொருவன்
உனக்கென்று
ஒரு லாப நஷ்டக்
கணக்கிருந்தால்
விஷயம் வேறு


நான் (2)

நேற்றுப்
பிற்பகல்
4.30
சுசீலா
வந்திருந்தாள்
கறுப்புப்
புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதே
விந்தை புன்முறுவல்
உன் கண் காண
வந்திருக்கிறேன்
போதுமா
என்று சொல்லி
விட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன

இரண்டு மூன்று வரிக் கவிதைகள் :

உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு?
அதுவும் உன் கைப்பாவை

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்

கோட் ஸ்டாண்ட் கவிதைகள் என்ற தலைப்பில் இருக்கும் 10 கவிதைகளும் எனக்குப் பிடித்தமானவை. இடமின்மை காரணமாக இங்கு பதியவில்லை.

கடைசியாக....

மூலஸ்தானத்தின் அருகில் சந்தித்தவரை
மூலவராக நினைத்து
எவ்வளவு ஏமாற்றங்கள்

17 comments:

குப்பன்_யாஹூ said...

எங்களின் வேண்டுகோள் ஏற்று பகிர்ந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்.

எத்தனை முறை திருப்பி திருப்பி படித்தாலும் அலுக்காத சுவையான வரிகள். அதுவும் சுருதி, சந்தை, வேறு... அற்புதம்

குப்பன்_யாஹூ

my previous comment spelling mistake

கென்., said...

இந்த நல்ல காரியத்திற்கு என்னோட நன்றிகள் :)

நேசமித்ரன் said...

மிக்க நன்றி
வலைஞர்களின்
வேண்டுகோள் ஏற்றமைக்கு நன்றி

மணிகண்டன் said...

Thanks sundar.

Karthikeyan G said...

//மூலஸ்தானத்தின் அருகில் சந்தித்தவரை
மூலவராக நினைத்து
எவ்வளவு ஏமாற்றங்கள்//

இது எனக்கு மிகவும் பிடித்தவரிகள்.. நன்றி..
இந்த முழுக் கவிதையும் போடுங்களேன் pls..

Nundhaa said...

மிக அற்புதமான கவிதைகள் ... I love Nakulan ... பகிர்வுக்கு நன்றி ஜ்யோவ் ... கோட் ஸ்டாண்ட் கவிதைகளையும் வெளியிடவும்

D.R.Ashok said...

நகுலனோடு சிறிது நேரம்
என்னுள் ஏதோ கறைந்துக்கொண்டே

யாத்ரா said...

நகுலன் பற்றிய தங்களின் முந்தைய பதிவுகளைப் படித்திருந்தாலும், மீண்டும் நினைவூட்டியதற்கு மிக்க நன்றி, நானும் நகுலன் பைத்தியங்களில் ஒருவன், எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காதவை, நகுலன் கவிதைகள், பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

பிரவின்ஸ்கா said...

மிக்க நன்றி.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

குப்பன் யாஹூ, கென், நேசமித்ரன், மணிகண்டன், கார்த்திகேயன், நந்தா, அஷோக், யாத்ரா, பிரவின்ஸ்கா... நன்றி.

@ கார்த்திகேயன், அந்தக் கடைசி வரிகளை ஞாபகத்திலிருந்து எழுதினேன். முழுக் கவிதைக்குப் புத்தகத்தைப் பார்க்க வேண்டும்.

துபாய் ராஜா said...

நல்லதொரு பதிவு.

கவிதைப்பகிர்வுகள் தொடரட்டும்.

பாஸ்கர் said...

நகுலன் கவிதைகள் படிப்பதில் ஒரு தனி சுகம் இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி .

குப்பன்_யாஹூ said...

மகுடேஸ்வரன் புடிக்குமா உங்களுக்கு, அவர் கவிதைகளும் இருந்தால் நேரம் கிடைக்கும் பொழுது பகிரவும். நேயர் விருப்பம்.

குப்பன்_யாஹூ

Deepa said...

அலாதியானதொரு அனுபவமாக இருந்தது இக்கவிதைகளின் வாசிப்பு.
பகிர்வுக்கு நன்றி.

அனுஜன்யா said...

நகுலன் .......

எல்லைகள் பல முறை படித்து விட்டேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புரிதல் - இன்னமும் திருப்தி தராமல்.

அலைகள் - ஆஹா

ஸ்டேஷன் - ம்ம், தல சுத்துது

வண்ணாத்திப் பூச்சிகள் - என்ன ஒரு காட்சி.

சுருதி - எளிதில் புரிந்தாலும், அழகு. அருமை.

சந்தை - :)

வரையறை - நிறைய யோசிக்கவைக்கும் ஏழு வரிகள். அபாரம்.

இவைகள் - இப்படியெல்லாம் எப்படி!

கனல் - Can relate to it.

வேறு - ம்ம்

நான் - நல்லா இருக்கு.

கடைசி மூன்று வரிகள் - வாவ்.

நன்றி ஜ்யோவ். மேலும் கொடுங்கள்.

அனுஜன்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

துபாய் ராஜா, பாஸ்கர், குப்பன் யாஹூ, தீபா, அனுஜன்யா... நன்றி.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

நன்றிங்க.. பகிர்விற்கு. படித்தேன், ரசித்தேன், உள் வாங்கினேன்