ஆழி சூழ் உலகு

ஆழி என்பது கடலில் அலைகள் பொங்குமிடம் என்ற குறிப்புடன் ஆரம்பிக்கிறேன்.

நூறாண்டுகளுக்கு மேலாக எழுதப்பட்டும் எண்ணிக்கையில் தமிழில் நாவல்கள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. என்ன அதிகபட்சம் ஒரு 100, 150 குறிப்பிடத்தக்க நாவல்கள் இருக்குமா?

இந்தத் தலையணை சைஸ் புத்தகங்கள் என்றால் (ஜெமோ புண்ணியத்தில்) எனக்கு அலர்ஜி. பின் தொடரும் நிழலின் குரலைப் படித்தவன் இன்னும் விஷ்ணுபுரத்தைப் படிக்கவில்லை. கொற்றவை பக்கமே போகக்கூடாதென்று முடிவு செய்துவிட்டேன்.

கென், தமிழில் வந்த முக்கியமான நாவல்களுள் ஒன்று, படித்துப் பாருங்கள் என்று போன வருடம் சொன்னார். இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது.

எட்டு மாதங்கள் கழித்து படிக்க ஆரம்பித்தேன். படித்து முடிக்க கிட்டத்தட்ட 10 நாட்கள் அகிவிட்டன. காரணம் என்னுடைய சோம்பேறித்தனமும் வேலைகளும்தானே தவிர, நாவல் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவுமே சென்றது.

மீனவர்களைக் களமாகக் கொண்டது இந்நாவல். பெரிய நாவலுக்கே உரிய குணமான பலதரப்பட்ட மனிதர்கள், சிக்கல்கள், வாழ்க்கைப் பாடுகளைப் பற்றி பக்கம் பக்கமாகப் பேசுகிறது. இந்த நாவலில் முக்கியமான அம்சமாகத் தெரிவது மரணம் - கிட்டத்தட்ட இரண்டு பக்கங்களுக்கு ஒரு மரணம். மனிதர்கள் கூட்டம் கூட்டமாகவும் தனித் தனியாகவும் செத்துக் கொண்டே இருக்கின்றனர். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை முன்னிறுத்தும் நாவலோ என்றுகூடத் தோன்றுகிறது. மரணத்திலிருந்து தப்பிக்க தியாகத்தை முன்வைக்கிறார் ஆசிரியர் (’நண்பர்களுக்காக உயிர் விடுவது ஆகப் பெரிய தியாகம்’). பங்குத் தந்தை காகு சாமியாரைப் பற்றி விரிவாகவும் உருக்கமாகவும் எழுதியிருக்கிறார் ஜோ டி குரூஸ்.

ஆழியில் சிக்கி மரணத்திற்கெதிரான மூவரின் போராட்டத்துடன் நாவல் துவங்கி, அதில் ஒருவன் ஜெயிப்பதுடன் முடிகிறது. நடுவில் முன்பின்னாக காலத்தில் நகர்ந்து விரிவாகவும் ஆற அமரவும் ஆமந்துறை மீனவர்களின் கதையைச் சொல்கிறது. கூடவே நாடார்களின் கதைகளையும், பங்குத் தந்தைகளின் கதைகளையும்.

இதைத் தவிர ஜோ டி குரூஸ் வேறு ஏதாவது எழுதியிருக்கிறாரா தெரியவில்லை. ஆனால் இந்த நாவலில் அமெச்சூர்த்தனம் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது. நல்ல எடிட்டர் கிடைத்திருக்கலாம்! அடிபட்டிருக்கும் ஜஸ்டினை வசந்தா தைலம் தேய்த்து மயக்குவது, குளிக்கும்போது உடல் அழகைக் காட்டி சுந்தரி டீச்சர் சூசையை மயக்குவது என மலையாள பிட் பட ரேஞ்சிற்கு மேல் யோசிக்க மறுக்கிறார் ஆசிரியர்!

மீன்களைப் பற்றி, மீன் பிடிப் படகுகள் பற்றி, வலைகளைப் பற்றி, கடலைப் பற்றி, கடலில் புயலைப் பற்றி எனப் பல நுட்பமான தகவல்கள் நாவலின் கதைப் போக்கில் வருகின்றன. அவை வெற்றுத் தகவல்களாகத் துருத்திக் கொண்டிருக்காமல் கதையின் போக்கோடு இணைந்திருக்கின்றன.

1933ல் துவங்கி 1985 வரை மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை விரிவாகப் பேசியிருக்கிறது நாவல். முழுக்க வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலின் உட்புக கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். ஆனால் அது ஆரம்பத்தடைதான், சில பக்கங்களிலேயே பழகிவிடும்.

ஆகச் சிறந்த நாவலென்று சொல்ல முடியாவிட்டாலும் தமிழில் வந்த முக்கியமான நாவல்தான் என்று தோன்றுகிறது. படிக்காதவர்கள் படித்துப் பார்க்கலாம்.

கௌதம சித்தார்த்தனின் பார்வையில் தமிழ்ச் சிறுகதைகள்

கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக உன்னதம் பத்திரிகையைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார் கௌதம சித்தார்த்தன். சில வருடங்களுக்கு முன்பு காத்திரமான சிறுபத்திரிகையாக வெளி வந்த இதழ்தான் உன்னதம். இப்போது இடை நிலை இதழ்களின் கை ஓங்கிவிட்ட காலத்தில் சிறுபத்திரிகைகள் வருவது இன்னும் சிரமமாகிவிட்டது. இப்படிப்பட்ட காலகட்டத்திலும் தொடர்ந்து பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன். புதுவித எழுத்து முறையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர். சிறுகதைகள் குறித்து கறாரான பார்வைகள் உடையவர். ஆகஸ்ட் மாத உன்னதம் இதழில் அவர் தமிழ்ச் சிறுகதைகள் குறித்து எழுதிய குறிப்புகளிலிருந்து சில பகுதிகளைக் கீழே தருகிறேன் :

சிறுகதைகளின் நவீன காலகட்டம் 1

... தனித்துவமான பாணியை உருவாக்கியவர்களும் அந்தச் சூழலில் இயங்கியவர்களும்தான் சிறுகதைத் துறையில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக மாறமுடியும். மற்றவர்கள் அந்தக் கட்டத்தில் மட்டுமே பிரகாசித்து மங்கிப் போய்விடுகிறார்கள்.

அதாவது, புதுமைப் பித்தன் காலத்தை சிறுகதைத் துறையின் பொற்காலம் என்று கொள்ளலாம். அந்த அபரிதமான வளர்ச்சிக்குக் காரணம், அதுவரை உரைநடையிலும், வடிவ நேர்த்தியிலும் மரபார்ந்த பாணியில் இயங்கி வந்த கதையாடலை முற்றிலும் புதிய வடிவிலான நவீனதளத்திற்குத் தள்ளினார் பித்தன். அவர் ஒரு புதிய பாணியை (trend setting) உருவாக்கியவர். அவரது சுவடொற்றி வந்த மற்ற ஆளுமைகளும் தங்களது எழுத்து வன்மைகேற்ப இயங்கினர். இதை நவீன காலகட்டை 1 என்று குறிக்கலாம்.

இதற்குப் பின்னால் வந்த பி எஸ் ராமையா இந்த இலக்கிய மனப்பான்மையை (mood) கெடுத்துக் குட்டிச் சுவராக்குகிறார் (அவரது இலக்கிய லாபி கொஞ்ச காலம் மட்டுமே கை கொடுத்தது). அதன் பின்னால் வந்த ஒரு வரிசை (வ.ரா., சிட்டி, மீ.ப.சோமு, கி.ரா. சங்கு சுப்ரமணியன், றாலி, கரிச்சான் குஞ்சு...) கானல் நீராக மங்கிப் போய்விடுகிறது.

சிறுகதைகளின் நவீன காலகட்டம் 2

அடுத்து வந்த வரிசை பித்தன் காலத்து நவீனத்துவப் போக்கை அப்படியே பின்பற்றாது வாழ்வியலின் அகம் சார்ந்த தரிசனத்தோடு முற்றிலும் நவீனத்துவமாகிறது. மௌனி சார்ந்து பிரமிளிடமிருந்து கவித்துவமாகத் துவங்கும் இவ்வரிசை கசடதபற நா கிருஷ்ணமூர்த்தி, க்ரியா ராமகிருஷ்ணன், ம ராஜாராம் போன்றவர்களின் தீவிரத்தில் ஆரம்பித்து சா கந்தசாமி, ந முத்துசாமி, அம்பை.. என ஒரு புதிய பாணி உருவாகிறது. இந்த வரிசை தமிழ்ச்சூழலில் நிராகரிக்க முடியாத கதைகாரர்களாகப் பதிவாகியிருக்கிறார்கள்.

இங்கும் இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன் போன்ற பி எஸ் ராமையாக்கள் இருந்தார்கள். இதை நவீன காலகட்டம் 2 என்று குறிக்கலாம்.

சிறுகதைகளின் யதார்த்தவாதக் காலகட்டம்

... யதார்த்தவாதம் என்னும் அழகியலை தமிழின் மண்ணோடு இணைத்து அதன் செழுமை மிக்க கதையாடலை உருவாக்கத் தொடங்கியவர்களில், கி. ரா சார்ந்து பா செ., பூமணி, வண்ணநிலவன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர்களுக்கு நவீன தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

இதற்கடுத்த வரிசை (பொன்னீலன், மேலாண்மை பொன்னுசாமி, தனுஷ்கோடி வகையறாக்கள்) இந்தப் பிரபலமான யதார்த்தப் பாணியை அப்படியே பின்பற்றி தாங்களும் நீர்த்துப் போய் சிறுகதைத் துறையையும் நீர்த்துப் போக வைத்தது...

சிறுகதைகளின் பின்நவீனத்துவ காலகட்டம்

ஆக, புதிதாக ஒரு பாணியை உருவாக்காமல் லாபியை வைத்தே குதிரை ஏறிக் கொண்டிருந்தால், காணாமல் போய்விடுவார்கள் என்பதை உணர்ந்து கொண்டதால்தானோ என்னவோ, அடுத்த வந்த வரிசை (கௌதம சித்தார்த்தன், கோணங்கி, எம் டி முத்துக்குமாரசாமி, சாரு நிவேதிதா, ரமேஷ் பிரேம், எஸ் ராமகிருஷ்ணன்...) அப்பொழுது உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த பின்நவீனத்துவம் என்னும் பாணியை உருவாக்கியது...

... இந்தக் கட்டத்தில் உருவான பி எஸ் ராமையாக்களாக பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், கார்த்திகா ராஜ்குமார் போன்றவர்களைச் சொல்லலாம். இவர்களிடமிருந்து மேலெழுந்து வந்தவர்தான் ஜெயமோகன்.

ஜெயமோகனின் வருகைக்குப் பிறகு இந்தக் கதையாடலின் தீவிரம் சரிய ஆரம்பித்திருக்கிறது. புதுமைப் பித்தன் காலத்துக் கதையாடல்களின் தீவிரத்தன்மையை கல்கி மடை மாற்றி விட்டாற் போன்றதொரு சூழல் உருவானது. பத்திரிகைகளில் காலச்சுவடு கண்ணனின் பிரவேசம், சிறுபத்திரிகைகளின் தீவிரத்தன்மை மங்கி இடைநிலைப் பத்திரிகைகளின் தோற்றம், ஜெயமோகனின் கத்தடாய்கள் (ஜெயமோகனின் கதைகளைப் பற்றிய பிரமிளின் விமர்சனச் சொற்றொடர்) பற்றிப் பாராட்டும் வாசகர் கடிதங்கள்.

இந்தச் சரிவு இத்தோடு நிற்காமல், ஜெயமோகனின் கத்தடாய்களில் ராமகிருஷ்ணனும் சேர்ந்து கொள்ள, ரமேஷ் பிரேம் மெதுவாக அவர்களை நோக்கிப் பின் நகர...

எனச் செல்கிறது கட்டுரை. சிறுகதைகளின் தலித் இலக்கியக் காலகட்டம், நவீன இலக்கியக் காலகட்டம் என அலசுகிறார். இறுதில் தன்னுடைய பார்வையாக தமிழ்ச் சிறுகதைகளின் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது அரசியல் மொழியாகத்தானிருக்கும் என்கிறார்.

உன்னதம் இதழைப் படிக்க விரும்புபவர்களுக்காக :

உன்னதம் - தனி இதழ் ரூ 20, ஆண்டுச் சந்தா ரூ 200. தொடர்புக்கு :
உன்னதம், ஆலந்தூர் அஞ்சல், கவுந்தப்பாடி 638 455, ஈரோடு மாவட்டம். அலைபேசி : 99407 86278

தெரியாதது

யாரும் சொல்லித்தரவில்லை
தூத்துக்குடி துர்க்காவின்
துரோகம் இப்படித்தான்
இருக்குமென்று
இறந்து போன மாமாவின்
இரண்டாவது அத்தை
கட்டித் தொங்கவிடப்பட்டது
இன்றுவரை யாரும்
வாய்திறக்கவில்லை
பெரிய தம்பியின் சின்ன வீட்டு
விஷயம் பெற்றோருக்கே தெரியாது
வழக்கின் தீர்ப்பு
வாய்க்கரிசிக்கும் மிஞ்சாது என
வக்கீலுக்கு முன்னரே
எனக்குத் தெரிந்தது
கங்கை கொண்டான் பேருந்தின்
கடைசி இருக்கையில்
வாந்தி எடுக்கப்பட்டுள்ளதை
எச்சரித்தார் எவருமில்லை
நான் உட்காரும்வரை
எவரும் குறிப்பிடவில்லை
இசக்கியம்மன் சாமியாடி
வேண்டியவருக்கு மட்டும்தான்
குறிசொல்வாள் என்பதை
சபை நடுவே சப்தமில்லாக்
குசு போடும் நாசூக்கு
நவின்றார் எவர்
எனினும்
அசைபோட பசுவய்யா கவிதை
என்றிருந்தவனை
எல்லோரும் சொன்னார்கள்
இவன் எங்கே
உருப்படப் போறான் என்று

குமார்ஜி எழுதியது

குடிகாரர்கள் நிரம்பிய ஊர்

மாலைநேரத் தார்ச்சாலையில்
கட்டிடங்களின் நிழலில்
போதையில் கிடக்கிறது வண்ணத்துப் பூச்சி
பறக்க எத்தனிக்கிறதா
புரண்டு படுக்கிறதா
சரியாகத் தெரியவில்லை
சிக்னலை நோக்கி விரையும் வாகனங்களின்
ராட்சசச் சக்கரங்களிடமிருந்து
எப்படித் தப்பிக்குமோ
மனசு கிடந்து அடித்துக் கொள்ள
அதன் மஞ்சள் நிறத்தைக் கையிலேந்தி
பொத்திப் பாதுகாத்துப்
பறக்க விடுகிறான்
தடுமாறியபடி
முகம் மழிக்காத குடிகாரனொருவன்
தன் சின்னஞ்சிறு ரெக்கைகளின் வனப்பை
ஊருக்குக் காட்டியபடி
பறந்து கொண்டிருக்கிறது
வண்ணத்துப் பூச்சி
போதையில்

(ரமேஷ் வைத்யாவிற்கு)

வழமையாக

முன் அறிவிக்கப்படாத
கணமொன்றில் நிகழ்ந்தது அது

அழகற்றது
உணர்ச்சிக் குவியல்
ஏற்கனவே சொல்லப்பட்டதன்
சரியாய்த் தெரியாத நகல்
உயிரற்றது பாசாங்கானது
தோலால் மூடப்பட்ட எழும்பாத குறி
ஆபாசச் சிரிப்பு
பொருளற்ற வார்த்தை ஜாலம்

அற்புதமானது அழகானது உண்மையானது

முன் அறிவிக்கப்படாத கணங்களில்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது அது

(மீள் பதிவு. பழைய பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிக்க : http://jyovramsundar.blogspot.com/2008/08/blog-post.html)

பைத்தியக்காரன் பதிவிற்கு ஒரு விளம்பரம்

பைத்தியக்காரன் ஒரு இடுகை எழுதியிருக்கிறார் உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு சார்ப்பாக நடந்த சிறுகதைப் போட்டியைப் பற்றி. என்ன காரணத்தினாலோ அது தமிழ்மணத்தில் தெரியவில்லை. அதனால் இந்த விளம்பரப் பதிவு.

அவரோட குறிப்பிட்ட இடுகையைப் படிக்க :

http://naayakan.blogspot.com/2009/08/blog-post.html

மயிரின் மாண்பு

மயிரு போற்றுதும் மயிரு போற்றுதும்
என்னைத் திட்டும் சாக்கில்
ஏன் மயிரை இழிவு படுத்தினீர்
பயிர் வளர்ப்பதைவிடவும்
அதிக அக்கறையுடன்தானே
மயிர் வளர்க்கிறீர்
ஏழுவித எண்ணை
எட்டுவித ஜெல்
பதிமூன்று வித ஷாம்பு
இருபது வகை சீப்புகள்
என மயிர் வளர்த்துவிட்டு
ஏன் மண்டை காய்கிறீர்
மொட்டை தலையிலும்
முடி பயிரிடும்
சிகிச்சை முறை தேடித்தானே
சிண்டைப் பிய்த்துக் கொள்கிறீர்
என் கவிதையைத் திட்டுங்கள்
காரி உமிழுங்கள்
இயன்றால்
எதிர்கவிதை எழுதுங்கள்
இல்லையேல்
வலையை மூடிவிட்டு
கொசுவலை போர்த்திப் படுங்கள்
ஏழு மலையான் வருமானத்தில்
ஏழு சதவீதம்
மயிரென்று அறிவீரோ
மயிரு போற்றுதும் மயிரு போற்றுதும்

‘தலைஇப்பு நீண்ட’ என்ற கவிதையை அனானி நண்பரொருவர் ’மயிரு’ என்று திட்டியதற்கு குமார்ஜியின் எதிர்வினை :)

ஆடிச்சாமிகள் அல்லது கொடைகாலம்

வாடிக்கிடந்த சாமிகளுக்கு
ஆடிக்காலம் கொண்டாட்டம்
சுடலை மாடன் இசக்கி பேச்சி
பிரம்ம சக்தி முண்டன் முனியன்
உச்சி மாகாளி மாரியம்மன்
வடக்கு வாசிசெல்வி பத்ரகாளி
முத்தாரம்மன் பூதத்தான் சங்கிலி
இன்னபிற பெயரில்லாப்
பூடங்களும் பூஜைக்குத் தயாராவர்
கூரையில்லாக் கூத்தனுக்கும்
குறைவில்லாப் படையலுண்டு
கொட்டு மேளம் குறவை
நையாண்டி கணியன் வில்லுப்பாட்டு
கும்பம் குமரி குட்டைப் பாவாடை
செவியடைக்கும் டென்ஷனில்
செல்லப்ப வாத்தியார் இடுப்புக் கச்சுடன்
வாங்கிய காசுக்கு
வராத சாமிக்காக
வயிறு எக்கி வாசிப்பான்
வட்டக் கோட்டை நாதஸ்வரம்
சுடலையை கடைசிவரை
தாமிரபரணி தாண்டாமல்
பார்த்துக் கொள்வாள்
சுசீந்திரம் வில்லுக்காரி
காது பொத்திப் பாடும்
கணியான் பாட்டு காற்றில்
வார்த்தைகளற்று கரையும்
கடன்காரன் எதிர் வரா
தைரியத்தில்
மயான வேட்டைக்குச் செல்லும்
மாசானத்திற்கு
மத்திய அமைச்சரின் மிடுக்கு
அறுப்பவன் கத்தியையே
பார்த்துக் கொண்டு ஓசைக்கு
அஞ்சிக்கிடக்கும்
உருண்டு திரண்ட கிடாக்கள்
இறுதியில் கிடைக்கும் கிடாக்கறி
ஊர்ப் பெரிய கிடாக்களுக்கு மட்டும்
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு
எப்போ அடுத்த ஆடி
என்றிருப்பான்
எல்லைச் சாமி

குமார்ஜி எழுதியது